வெள்ளி, மே 24, 2024

நாய்க்கடிக்கும் அஞ்சோம்


நாய்க்கடிக்கும் அஞ்சோம்

(மரபுவழி மருத்துவ சிகிச்சை)

ஆசிரியர்: போப்பு

வெளியீடு பதிகம், சென்னை 600075.


நாய்க்கடியால் உலகம் முழுதும் ஓர் ஆண்டுக்கு 60000 பேர் இறக்கின்றனர். இந்தியாவில் இது 20000. இதிலும் 10000 பேர் 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள்.


ஆசிரியர் போப்பு வசிக்கும் புதுச்சேரியில் 2021ஆம் ஆண்டில் 24282 பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டதாக medium.com என்ற இணையதளம் RTI ஆதாரத்தை காட்டி சொல்கிறது. அதுவே 2015இல் 3635ஆக இருந்துள்ளது. ஏறத்தாழ 12 லட்சம் மக்கள் வாழும் புதுச்சேரியில்  24 ஆயிரம் என்பது ஒரு லட்சம் பேரில் 2000 பேர் நாய்க்கடிக்கு ஆளாகிறார்கள் என்று கணக்கு.


ஐந்து அத்தியாயங்கள் கொண்ட இந்த நூலின் முதல் அத்தியாயத்தின் தலைப்பு நஞ்சினை வடிகட்டுதல் என்பதாகும். ஆசிரியர் போப்புவை நாய் கடித்து விடுகிறது. ஆகவேதான் இந்த புள்ளிவிபரம். சரி, அதன் பின் நடப்பதுதான் என்ன?

...


நாயை தெருவில் தன்னுடன் அழைத்து  வந்த பெண்மணி "என்னவோ தெரியல, இரண்டு மூணு நாளாதான் பார்க்கிற எல்லாரையும் கடிக்குது" என்று சொல்லும்போதுதான் அதற்கு வெறி பிடித்துள்ளது என்ற உண்மை உரைக்கிறது.


வீட்டில் வளர்க்கப்படும் நாய், தெரு நாய் என எது கடித்தாலும் அதன் பற்கள் நம் உடம்பில் கீறலை ஏற்படுத்த அதன் வழியே நாயின் வாயில் இருந்து சுரக்கும் உமிழ்நீரில் இருக்கும் ரேபிஸ் எனப்படும் வெறிநோய் கிருமிகளை Lyssa virus கடிப்பட்டவரின் உடலுக்குள் செலுத்துகிறது. அவை தோல், தசை திசுக்களில் பெருகி மூளையை அடைந்து இறப்பை ஏற்படுத்துகின்றன. இதுதான் நாய்க்கடி அல்லது வெறிநாய்க்கடியின் விளைவுகள். 


கடிப்பட்டவர் தண்ணீரை கண்டால் பயந்து அலறுவார். நோயின் முக்கிய அறிகுறி இதுதான். தொண்டை சதைகள் சுருங்கி உணவு தண்ணீர் உட்கொள்ள முடியாது. தண்ணீரை பார்த்தாலே தொண்டைசதைகள் இறுகி சுவாசத்தை நிறுத்தி விடும். எனவே உயிர் போவது போல பயம் வந்துவிடும். இதற்கு பயந்துதான் தண்ணீர் குடிக்க மாட்டார்கள். Hydrophobia. சுவாசிக்க சிரமம், வலிப்பு, தொடர்ந்து உயிருக்கு ஆபத்து வரும்.

எனவேதான் அரசு சொல்கிறது, கடித்தது வெறிநாயாக இருந்தாலும் சாதாரண நாயாக இருந்தாலும் தடுப்பு ஊசி போட்டுக்கொள்ள வேண்டும். 

... ...

ஓசூரில் உணவகம் நடத்திக்கொண்டு இருந்த நூலாசிரியர் பால் வாங்கும் பொருட்டு காலையில் வெளியே சென்றபோதுதான் நாய் கடிக்கிறது. சதையில் அரை அங்குலம் பல் உள்ளே போய்விட்டது.

அதன் பிறகு உடலில் நடந்த மாற்றங்களை சொல்கிறார். தலை, காது பகுதிகளில் சூடேறுகின்றது. வயிற்றில் எறும்பு மொய்ப்பது போல ஊர்வது போல உணர்வு. முதுகு தண்டிலும் தொப்புளுக்கு நேர் பின்புறத்திலும் அதேபோல உணர்வு.

மருதமலை மருத்துவர் சுப்பிரமணியத்துக்கு தொலைபேசியில் சொல்ல அவர் சொல்கிறார், "நஞ்சை கல்லீரல் உடனடியாக உள்வாங்கி கொள்ளும்.ஆனால் ரத்தம் உற்பத்தி ஆகும் மண்ணீரலிலும் அதன் தாக்கம் இருக்கும். நரம்பு மண்டலத்திலும் தாக்கம் இருக்கிறதால உங்களுக்கு அந்த உணர்வு தெரியுது". உபவாசம் இருப்பது வழக்கம் ஆனாலும் ஐந்தாறு மாதங்கள் இடைவெளி விழுந்துவிட்டது. நாய்க்கடி அவரை உபவாசம் வைக்க வலியுறுத்த வந்த நிகழ்வாக சொல்லால் உணர்த்துகிறார் மருத்துவர்.

 ராமு டீ கொண்டு வருகிறான். டீயை மறுக்கிறார். பழ வகைகளை உட்கொள்வது என முடிவு செய்கிறார். தனக்குள் நடக்கும் மாற்றங்கள் நல்லவையாக இல்லை என்று பதிவு செய்கிறார். முகம் தடிச்ச மாதிரி இருக்கு என்று ராமு சொல்கிறான். முக்கியமானது, நாய் கடித்ததை தனது குடும்பத்தினரிடமோ பணியாளர்களிடமோ அவர் சொல்லவில்லை.

வெந்நீர் குடித்துவிட்டு உறங்குகிறார். வெந்நீர் குடித்தால் ரத்த ஓட்டம் விரைவடையும். விசமும் விரைவடையும். ஆபத்தான விளையாட்டு விளையாடுவதாக சற்றே பயமும் வருகிறது. "மருத்துவமனை சென்று ஊசி போட்டுவிடலாமா" என்ற எண்ணம் தோன்றுகிறது. 

சிறுநீர் இலகுவாக பிரிகிறது. தலை, உடல் பாரம் குறைகிறது. நல்ல ஆசுவாசம். கண்களில் துலக்கம்.

காலையில் ஐந்து மணிக்கு எழும் அவர் ஏழரை மணிக்கு விழிக்கிறார். அதாவது 'நாய்க்கடி நஞ்சு உடம்பில் தாக்கியதாக அர்த்தம்' என்று சொல்கிறார்.

இது குறித்து செய்தி அறிந்த டாக்டர் விமலா கோபம் அடைந்து சத்தம் போடுகிறார். ஊசி போடுங்கள் என்று வற்புறுத்துகிறார். இப்போது பயம் தீவிரமாகிறது. பாகலூர் அரசு மருத்துவமனைக்கு போக சொல்கிறார். கடி உணர்வு அறவே இல்லை என்றாலும் விசம் உடலில் இருந்து முற்றாக வடிந்து விட்டதாக சொல்ல முடியாது. பாகலூர் ஓசூரில் இருந்து 15 கி.மீ. தூரம். அங்கே போனால் மருந்து இல்லை என்று சிக்கதிருப்பதி மருத்துவமனைக்கு போக சொல்கிறார்கள். இன்னும் ஒரு 15 கி.மீ.

இப்போதுதான் அவருக்கும் மனதுக்கும் ஆன உரையாடல் தொடங்குகிறது. பிறந்தநாள் தொடங்கி ரத்தப்புற்று நோயால் அவதிப்பட்டு ஒட்டுமொத்த குடும்பத்தின் பொருளாதாரத்தையும் நிம்மதியையும் தன் பக்கம் திருப்பி சொல்லொணா துயரத்தின் இறுதியில் உயிரை நீத்த மூன்று வயது மகள் தண்யா நினைவில் வந்து மனசாட்சியை உலுக்குகிறாள். உடலையும் உயிரையும் அணு அணுவாக சிதைத்து உருக்கிய அலோபதி எனும் ஆங்கில மருத்துவமுறையில் இருந்து அவளை விடுவித்து இயற்கை முறை சிகிச்சையை மேற்கொண்ட சிறிய கால கட்டத்தில் தண்யா சற்றே நிம்மதி பெறுகிறாள். குடும்பமும் சற்றே அமைதி பெறுகிறது. இப்படியான ஒன்றரை வருட சிகிச்சைக்கு பின் தண்யா நிரந்தர விடுதலை பெறுகிறாள். இறந்து போகிறாள்.

இந்த நினைவு மேலோங்க இப்போது இவருக்கு சுயபச்சாதாபம் மேலோங்குகிறது. ஊசி இருந்து இருந்தால் செலுத்திக்கொண்டு இருப்பேனா? உன் மகளுக்கு இயற்கை மருத்துவம், உனக்கு ஆங்கில மருத்துவம் பரிந்துரைத்த ரேபிஸ் ஊசியா? சுயநலம்தானே? இயற்கை மருத்துவத்தை ஊரெல்லாம் வலியுறுத்தும் நீ உன் உயிர் என்றதும் ரேபிஸ் ஊசி போட ஓடுகிறாயே? ஊருக்கு ஒரு தத்துவம், உனக்கென ஒரு தத்துவமா? 

நாய் போலவே கத்தி கல்லடி பட்டுசெத்தாலும் சாகலாம். ஊசி வேண்டாம். அப்படியே ஊர் திரும்புகிறார். வெறும் பன்னீர் திராட்சை ரசம் அருந்துகிறார். அதுவே சிகிச்சை. அது நோய் நீக்கி, உடலாற்றால் தரும் ஊக்கி என இரண்டுமாக செயல்படுகிறது. ரத்தத்தை சுத்தப்படுத்தும். கெடுரசாயனத்தின் ஈர்ப்புக்கலன் ஆன கல்லீரலை சுத்தப்படுத்தும். கண்களை கட்டுப்படுத்தும் கல்லீரலை திராட்சை சாறு சுத்தப்படுத்தும். எனவே கண்களுக்கும் முழுமையான ஆற்றலை வழங்கும். போப்பு இன்று வரையிலும் கண்ணாடி அணியவில்லை. இயற்கை மருத்துவ முறையை பின் பற்றிய, பின்பற்றும் போப்பு இப்போதும் வாழ்ந்துகொண்டிருக்கும் உதாரணர்.

 ... ....  ....

மகள் தண்யா கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் வாழ்ந்து பெற்றவர்களுக்கு இன்பத்தையும் எஞ்சிய வாழ்நாளுக்கான துன்பத்தையும் கொடுத்துவிட்டு சென்றாள். மட்டுமின்றி வாழ்க்கைக்கான வேறு சில வழிகளையும் காட்டி விட்டுத்தான் சென்றாள். தண்யா இப்போதும் வழிகாட்டிக்கொண்டு இருக்கிறாள். 

... ...

இயற்கையின் ஓர் அங்கமே மனித உடல். இயற்கையின் இயல்பு மாற்றங்களுக்கு இசையவே உடலின் இயக்கமும் அமைகிறது. இந்த புரிதலுக்கு வர அவருக்கு ஆதாரமாக இருந்தது மகள் தண்யாவின் புற்றுநோய். 

"நவீன மருத்துவம் பல ஒவ்வாமைகளை 'எனக்கு' அளித்துள்ளது. அந்த பின்னணியில்தான் மகள் தண்யாவுக்கான சிகிச்சை முறையை தேர்ந்தெடுத்தேன். தொடர்ந்து அக்குபஞ்சர் பயின்றேன். இந்த இரண்டும்தான் எனது வாழ்க்கைப்போக்கையும் எழுத்து முறையையும் மாற்றியது" என்கிறார் போப்பு. செம்மலர் இலக்கிய இதழ் மதுரையில் இருந்து வெளிவந்த காலத்தில் அதில் போப்பு எழுதிய சிறுகதைகளை வாசித்தவன் நான். வித்தியாசமான பெயர் அது. 1982இல் சென்னைக்கு வேலை நிமித்தம் நான் இடம்பெயர்ந்த பின் போப்பு அவர்களின் கதைகளை செம்மலர் உள்ளிட்ட இலக்கிய இதழ்களில் ஏன் பார்க்க முடியாது போனது என்பதற்கான பதில் இங்கே உள்ளது. முகநூலில்தான் போப்பு என்ற புருஷோத்தமன் உள்ளிட்ட எனது மரியாதைக்குரிய பல எழுத்தாளர், கலைஞர்களின் அறிமுகம் வாய்த்தது. தொடர்ந்து அவருடன் உரையாடினேன். அவர் முனைந்து நடத்தும் உயிர்மெய் முகாம்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பை பெற்றேன். 

... ...

வடு இல்லாமல், அதிர்வு தாங்கி ஆகிய இரண்டு அத்தியாயங்களில் மருமகன் சிவா, மகன் சேட்டு, பேரன் தர்ஷன் ஆகியோரை கடுமையாக பாதித்த மோட்டார் பைக் விபத்துக்கள் பற்றியும் பரவலான அலோபதி மருத்துவ முறையை மறுத்து இயற்கை வழி சிகிச்சை மூலம் அனைவருமே பலன் பெற்று குணம் அடைந்த நிகழ்வுகளை பதிவு செய்துள்ளார்.

நூல் ஆசிரியரே இரண்டு முறை பைக் விபத்தில் சிக்கி அதே போல இயற்கை மருத்துவம் மூலமே மீண்டு குணம் பெற்ற நிகழ்வுகளை படிப்படியாய், அந்தரத்தில் பறத்தல் ஆகிய இரண்டு பதிவுகளில் விரிவாக சொல்கிறார்.

இயற்கை சிகிச்சை முறை, அலோபதி அல்லாத மற்ற மருத்துவ முறைகளை மற்றவர்க்கு பரிந்துரை செய்துவிட்டு ஒதுங்காமல் தனது உடலையே அதற்கான சோதனைக்களமாக ஒப்புக்கொடுக்கும் நேர்மையாளராக போப்பு விளங்குகிறார்.

 உடலை வெறும் சட்டகமாக தட்டையாக பார்க்கும் எந்த மருத்துவமுறையும் நோயர்க்கு பலனை விடவும் தீமைகளையே அதிகம் கொண்டுவந்து சேர்க்கும். உடலும் மனமும் இணைந்ததே உயிர். ஒருவர் உடல் போல் இன்னொருவர் உடல் இருப்பதில்லை. உடல் இயக்கமும் அவ்வாறே. எனில் ஒரே விதமான நோய்க்கு ஒரே விதமான மருந்தை அல்லது சிகிச்சையை பரிந்துரைப்பதும் மேற்கொள்வதும் எந்த அளவுக்கு நியாயமானது? நூலில் எந்த மருத்துவ முறை மீதும் நேரடியாக அல்லது வலிந்து திணிக்கப்பட்ட குற்றச்சாட்டு எதையும் ஆசிரியர் வைக்கவில்லை.

அவர் ஒரு முக்கியமான பிரகடனம் ஒன்றை நூலில் பதிவு செய்துள்ளார்: இந்நூலில் கூறியுள்ள சிகிச்சை முறை என் அனுபவம். எல்லோருக்கும் இதுவே விதி என்று நான் பரிந்துரைக்க மாட்டேன். ஏனென்றால் இயற்கையும் சரி உடலியலும் சரி, விதிகளுக்கு உட்பட்டு இயங்குவது இல்லை. எண்ணங்கள், நம்பிக்கைகள், வாழ்க்கை சூழல் போன்றவையும் நோயை எதிர்கொள்வதில் முதன்மை பங்கு வகிக்கின்றன. ஒவ்வொரு உயிரும் நுட்பமான வேறுபாடுகளுடன் தனித்தன்மையுடன் இயங்குகிறது. இதனை பொத்தாம்பொது ஆக்குவதும் சராசரி அளவீடுகளினுள் சட்டக படுத்துவதுமே உடல் அறிவியலுக்கு எதிரானது. எனில் உயிரியக்கத்துக்கு மாற்றாக நவீன எதிர்த்து அடக்கும் முறையே முற்றிலும் சரியானது, அறிவியல் பூர்வமானது என்ற வன்மையான வாதத்தை மறுக்கிறேன்".

.... ....

மருத்துவ ஜனநாயகம், சிகிச்சையில் ஜனநாயகம் என்பது இங்கே அறவே இல்லை. அலோபதி மருத்துவ முறையும் அது சார்ந்த மருந்துகள், சிகிச்சைகளுக்கான மிகப்பரந்த சந்தையாக உலகம், குறிப்பாக மூன்றாம் உலக நாடுகள் மாற்றப்பட்ட்டுள்ளன என்பதே வெளிச்சமான யதார்த்தம். மிக சாதாரணமாக இந்திய மருந்து கடைகளில் விற்கப்படும் பாராசிடமால் 600 வளர்ச்சி அடைந்த ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் தடை செய்யப்பட்டது என்பது சாதாரண விசயம் அல்ல. 2019இல் உலக மக்களை பீதியில் ஆழ்த்திய கொரொனா என்ற நோய்க்கு மின்னல் வேகத்தில் கண்டுபிடிக்க பட்ட தடுப்பூசி மருந்துகளை பல கோடி மக்களுக்கு செலுத்திய பின் இப்போது அவற்றின் கொடிய பின்விளைவுகளை அம்பல படுத்திய பின் அவற்றை உற்பத்தி செய்வது நிறுத்தப்பட்டது என்று சொல்வது சாமானிய மக்கள் மீதான அலோபதி மருந்து உற்பத்தி முதலாளிகள், உலக அரசுகளின் கூட்டணி ஏவிய கொடுமையான தாக்குதல் என்று சொன்னால் அதில் தவறு என்ன? இந்த கேள்விக்கான நியாயமான பதிலை தருவதற்கோ அல்லது அதற்கான ஆரோக்கியமான விவாதத்தை எதிர்கொள்ளவும் ஆயத்தம் இல்லாத ஒரு கூட்டம் கேள்வியை எழுப்பும் எவரையும் அறிவிலிகள், அறிவியலுக்கு எதிரானவர்கள் என்று தூற்றுவது எப்படி நியாயம் ஆகும்?

முதலாம், இரண்டாம் உலகப்போருக்கு பின் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் போர் தளவாட, ஆயுத உற்பத்தி ஆலைகளில் மிஞ்சி நின்ற பல கோடி டன் கணக்கான வேதியியல் கச்சா பொருட்களை குப்பையில் வீசினால் பல கோடி டாலர்கள் நஷ்டம் ஆகும் என்று கருதி அவற்றை விவசாயத்துக்கு 'பயன்படும்' உரமாக, பூச்சி கொல்லி மருந்துகளாக வடிவம் மாற்றி விற்ற கொடும் வரலாறு அமெரிக்க ஐரோப்பிய நாடுகளுக்கு சொந்தமானது என்பதை மறந்துவிட முடியாது.

நூலில் ஆசிரியர் தென் பெண்ணை ஆறு, கெலவரப்பள்ளி, கரையில் நிறுவப்பட்ட ஆலைகள், அதனால் உண்டான மீள வாய்ப்பு இல்லாத அழிவுகள் ஆகியவை பற்றி போகிற போக்கில் குறிப்பிடும் விவரங்கள் மேலே சொன்ன வரலாற்றுடன் தொடர்பு உடையவைதான்.

உடனடி ஆபத்து, விபத்து, உயிருக்கு ஆபத்து என்று வரும் சூழலில் நவீன மருத்துவத்தை நாடுவதே சரி என்ற பொதுப்புத்தியில் ஒரு உடைப்பை இந்த நூல் மூலம் போப்பு ஏற்படுத்தி உள்ளார்.

இந்த நூல் தமிழகத்தில், தமிழ் அறிந்த ஊர்களில், நாடுகளில் ஒரு சீரிய விவாதத்தை தொடங்கி வைக்கும் என்பதில் ஐயமில்லை. அவ்வாறே போப்பு முன்வைக்கும் கருத்துக்களை மறுக்க முற்படுவோர் நாகரிகமான ஆரோக்கியமான வாதங்களை தம் தரப்பில் இருந்து முன்வைக்க வேண்டுகிறேன். நவீன மருத்துவ முறைகளுக்கு முன் காலம் தொட்டே தமிழகத்திலும் இந்தியாவுக்கு வெளியேயும் அந்தந்த காலத்தின் அறிவுத்திறனுக்கும் கண்டறிதலுக்கும் ஏற்ப பலவேறு மருத்துவ முறைகள் இருந்துள்ளன என்ற உண்மையில் இருந்து இந்த கருத்துக்களை விவாதிப்பதே சிறந்தது.

நூலை சிறந்த முறையில் அச்சில் கொண்டு வந்த பதிகம் பதிப்பாளர் கடற்கரய் மத்தவிலாச அங்கதம், ஆழமான முன்னுரை வழங்கியுள்ள பி என் எஸ் பாண்டியன் ஆகியோருக்கு வாழ்த்துக்கள். போப்பு அவர்கள் சிறுகதை எழுத்தாளர். அந்த அனுபவம் நூலின் நடையில் தெரிகிறது. நடந்த நிகழ்வுகளை ஒரு கதை போலவே எழுதி வாசிக்கும் அனுபவத்தை மேம்படுத்துகிறார்.

நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு நூல் குறித்து உரையாற்ற என்னை அழைத்து சிறப்பித்த போப்பு அவர்களுக்கு எனது நன்றி.

- மு இக்பால் அகமது

24.05.2024


செவ்வாய், மார்ச் 26, 2024

இசையால் வசமாகா இதயம் எது? (2)

இசையால் வசமாகா இதயம் எது? (2)

எனது பள்ளிப்பருவத்தில் திமுக, திக மேடைகளில் தவறாமல் ஒலித்த பாடல் அவர்தான் பெரியார் பார் அவர்தாம் பெரியார்

அன்பு மக்கள் களின் மீதில்

அறிவுத்தேக்கம் தங்கத்தேரில்

அவர்தான் பெரியார்!

அந்த வயதில் கடவுள் இல்லை இல்லவே இல்லை! கடவுளை கற்பித்தவன் முட்டாள்! போன்ற வாசகங்கள் மதுரையின் சுவர்களில் எங்கும் காணப்படும். எனக்கு மட்டுமல்ல நம் மக்களுக்கு பெரியார் என்பவர் கடவுள் மறுப்பாளர் என்ற பிம்பம் மட்டுமே மிகப்பெரியதாக மீண்டும் மீண்டும் மனதில் இறுத்தப்பட்டுள்ளது. கடவுளை மற மனிதனை நினை என்ற உயர்ந்த சிந்தனையை திட்டமிட்டு பின்னால் தள்ளினார்கள்.

அந்தப்பாடல் சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் பாடிய பாடல். பாடலின் ஆசிரியர் பாரதிதாசன். இந்த கட்டுரையை எழுத தொடங்கும் முன் இரண்டு முறை அந்த பாடலை கேட்டு பரவசம் அடைந்தேன். ஒவ்வொரு எழுத்தும் சொல்லும் சீர்காழி அவர்களின் தெளிவான உணர்ச்சி மிகுந்து ஓங்கும் குரலால் உயிர் பெற்று பெரியார் குறித்த முழுமையான உணர்ச்சிமிக்க ஓர் உருவத்தை நமக்கு வரைந்துகாட்டி விடுகின்றன.

அவரது திரைப்படப்பாடல்கள் குறித்து தனியே எழுத வேண்டும். நிறைய நண்பர்கள் எழுதியும் இருக்கிறார்கள். நேற்று அவர் நினைவு தினம். 55 வயதில் அவர் இறந்திருக்க வேண்டாம்.

.....

முதலாவது பகுதியை அவர் மீனாட்சியம்மன் கோவிலில் ஆவி குடியிருக்கும் ஆவினன் குடி பாடலை பாடிக்கொண்டு இருந்ததில் தொடங்கினேன்.

அவர் மகன் டாக்டர் சீர்காழி சிவ சிதம்பரம் "டி ஆர் பாப்பா (என்கிற சிவசங்கரன்) சீர்காழி அவர்களுக்கு மட்டுமே ஆயிரம் பாடல்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். அவருடைய பக்தி பாடல்களில் ஆகப்பெரும்பான்மை உளுந்தூர்பேட்டை சண்முகம் எழுதியவை. இந்த மூவர் கூட்டணி வெற்றிக்கூட்டணி" என்று சொல்லியிருக்கிறார்.

சிதம்பரம் கோவிலுக்கு பல வருடங்கள் முன் சென்று இருந்தேன். அங்கே டிக்கெட், சிதம்பர ரகசியம் விஷயத்தில் தீட்சிதர்களுடன் வாக்குவாதம் ஆகி முற்றிய நிலையில் உடன் வந்த நண்பர்கள் என்னை வெளியே அனுப்பிவிட்டார்கள். நானும் பிரச்சனை வேறு வடிவம் எடுத்து விடும் என்று உணர்ந்து வெளியே வந்துவிட்டேன்.

அதே சிதம்பரத்தில் பத்து முக்கிய தீர்த்தங்கள் இருப்பதாகவும் மூன்றாவது வெளிப்பிரகாரத்தில் இருக்கும் சிவகங்கைக்குளத்தின் கரையில் அன்னை சிவகாமி குடியிருப்பதாகவும் அறிந்தேன். 

யூடியூப்பில் அந்த பாடல் உள்ளது. தமிழ் இலக்கியத்தில் பிள்ளைத்தமிழ் என்பது ஒருவகை. ஆண், பெண் இருபாலருக்கும் 21ஆவது மாதம் வரை பருவம் பிரித்து பாடப்படுவதாகும். சீர்காழி அவர்கள் அந்த சிவகாமியை பாடுகிறார்.

 சின்னஞ்சிறு பெண் போலே

சிற்றாடை உடை உடுத்தி 

சிவகங்கை குளத்தருகே

ஸ்ரீதுர்கை அமர்ந்திருப்பாள்

பெண்ணவளின் கண்ணழகை

பேசி முடியாது

பேரழகுக்கீடாக வேறொன்றும் கிடையாது...

பின்னல் ஜடை போட்டு 

பிச்சிப்பூ சூடிடுவாள்

பித்தனுக்கு இணையாக

நர்த்தனம் ஆடிடுவாள்!

பாடலின் ஒவ்வொரு சொல்லையும் மீண்டும் மீண்டும் கேளுங்கள்! பெண்ணவளின் என்ற சொல்லை மீண்டும் மீண்டும் கேளுங்கள்! ....ஆடிடுவாள் என்ற சொல்லில் அவள் ஆடுவதை பாருங்கள்! பித்தன் சிவன். 

பிள்ளைத்தமிழ் இல்லை இப்பாடல். சின்னஞ்சிறு பெண் போலே.... ஆம். பின்னல் ஜடை போட்டு பிச்சிப்பூ சூடிய வாலிப யுவதியாக சிவகாமி. மின்னலைப்போல் மேனி அன்னை சிவகாமி. ஒரு யுவதியின் அழகை வியந்து பாடும் பக்தன் நிலையில் எழுதியவரும் பாடியவரும். சென்னை தொலைக்காட்சிக்காக இந்த பாடலை அவர் பாடிய கருப்பு வெள்ளை பதிவு இருக்கிறது. கமென்டில் தொடுப்பு தருகிறேன் பாருங்கள். 2011 நவம்பர் முதல் 41.37 லட்சம் நண்பர்கள் பார்த்துள்ளனர்!

.... ..... .....

இப்படி அவர் பாடல்களை சொல்லிக்கொண்டே போகலாம். 

கண்டவர்தம் மனமுருக்கும்

திருக்கண்ணப்புரம் வாழ்ந்திருக்கும்

கண்ணனவன் வண்ணமதே

எண்ணமதில் சூழ்ந்திருக்கும்....


காலத்தை உருவாக்கும் காரணமே

அந்தக் காலனையும் உதைக்கும் பூரணமே

பரிபூரணமே


தேனினும் இனியவள்

சிந்தையில் உறைபவள்

செந்தாமரை மலராள்


பன்னிரு விழிகளிலே

பரிவுடன் ஒரு விழியால்

என்னை நீ பார்த்தாலும் போதும்


நீயே என் வாழ்வுக்கு கெதியானவன் முருகா

நிலையாக எனைக்காக்கும் துணையானவன்.


பழம்நீ மலை முருகா

பழம் நீ திருக்குமரா

பழம் ஒன்று எந்தனுக்குத்தா...


தென்பழனி மலையோரம்

தெள்ளுதமிழ் இசைபாடும்

செந்தூரின் கடலோரம்

வேலோடு மயிலாடும் என்ற பாடலை இப்போது வேண்டாம், இரவில் கேளுங்கள், தாலாட்டி தூங்க வைப்பார் சீர்காழி.

...


1979இல் சாரா நவரோஜி என்ற பெண்மணி எழுதி சக்தி விக்டர் இசையில் சீர்காழி கிறித்துவ வழிபாட்டுப்பாடல் ஒன்றை பாடியுள்ளார்.

இரவும் கடந்தது 

பகல் ஒளி உதித்தது

இரக்கமும் கிடைத்தது

இயேசுவிடம்... இயேசுவிடம்

சிலுவையிலே...

..... கல்வாரி மேட்டினிலே 

உயிர்கொடுத்தவரின் 

குருதியும் வடிந்ததே

உனக்காக மைந்தா...

யூடியூப்பில் இந்த பாடலை ஏற்றம் செய்த நண்பருக்கு நன்றி. கேளுங்கள்.


கிறித்துவ வழிபாட்டு பாடல்கள் பற்றி தனியே எழுதுவேன்.

.... ...


19.1.1933 அன்று பிறந்தவர் கோவிந்தராஜன். 

தெலுங்கு கீர்த்தனைகள், பஜனைகள் மட்டுமே சங்கீதம், சம்ஸ்கிருதம் மட்டுமே தேவபாஷை என்று மேல்சாதி சுத்தசங்கீத காண்ட்ராக்ட்டர்கள் ஆட்டம் போட்டுக்கொண்டு இருந்த காலத்தில் திரையிசை மக்களின் தேவையை நிரப்ப வேண்டிய அவசியத்தை உணர்ந்தது. விளைவு தேர்ந்த இசைக்கலைஞர்கள் பலர் திரையில் தோன்றி தமிழில் பாடி நடித்தார்கள். 30, 40 பாடல்கள் இடம்பெற்ற படங்கள் சர்வசாதாரணம். ஆனாலும் அந்த பாடல்கள் முழுமையாக தமிழிலும் இல்லை, பாடியவர்களால் வடமொழி உச்சரிப்பை தவிர்க்கவும் முடியவில்லை. 

அன்றைய திராவிட அரசியல் எழுச்சியும் எழுத்தாளர்களும் திரையுலகில் புகுந்த பின்னர்தான் இதில் மாற்றம் வந்தது. தியாகராஜ பாகவதர், பி யு சின்னப்பா ஆகியோரைத் தொடர்ந்து கே ஆர் ராமசாமி, திருச்சி லோகநாதன், சிதம்பரம் ஜெயராமன் ஆகியோர்தான் முழுக்கவும் தமிழில் பாடி வேறு தளத்துக்கு கொண்டுவந்தார்கள். தஞ்சை ராமையாதாஸ், உடுமலை நாராயணகவி, குயிலன், விந்தன், பாரதிதாசன், கம்பதாசன், கா மு ஷெரீப், கு மா பா, சுரதா என ஒரு பெரிய கவிஞர் படை புறப்பட்டு வந்தது.

ஆனால் கச்சேரி இசை திருவிழா எனில் அது மேல்சாதி சங்கீத காண்ட்ராக்ட்டர்கள் வசம்தான் அப்போதும் சிக்கிக்கொண்டு இருந்தது. இவர்களின் பீடமாக திருவையாறு இருந்தது. தமிழுக்கு அங்கே எப்போதும் இடம் இருந்தது இல்லை. தமிழில் பாடக்கூடாது என்று சீர்காழி கோவிந்தராஜன்அவர்களை தடுத்து நிறுத்தினார்கள். அவரும் திருவையாறு கும்பலை ஒதுக்கி வைத்தார். இறைபக்தி வேறு மொழிப்பற்று வேறு என்பதை தெளிவாக உணர்ந்து இருந்த அவரை கை கூப்பி தொழலாம்.

இதை அறிந்த தந்தை பெரியார் சீர்காழியை அழைத்து தி க மேடைகளில் பாட வருமாறு அழைக்கிறார். 'ஐயா! நான் நெற்றி நிறைய நீறு அணிந்து இறைவனை பாடுபவன். இறைவனை மறுக்கும் உங்கள் மேடைகளில் எனக்கு ஏது இடம்?' என்று இவர் கேட்க நீங்கள் எதை வேண்டுமானாலும் பாடுங்கள், தமிழில் பாடுங்கள் என்று அவரை வரவேற்று மரியாதை கொடுத்தார் தந்தை பெரியார். அவ்வாறே தி க மேடைகளில் சீர்காழி பக்தி பாடல்களை பாடியிருக்கிறார்! அங்கே பெரியாருக்கும் சீர்காழிக்கும் பொதுவாக இருந்தது தமிழ்மொழிபால் இருந்த பற்று. கூடவே திருவையாறு கும்பலுக்கு புகட்டப்பட்ட சரியான பாடம். டி எம் கிருஷ்ணா வரை இது தொடர்கிறது.

மக்கள் நெஞ்சில் மலிவுப்பதிப்பு

வஞ்சகர்க்கோ கொடிய நெருப்பு

மிக்க பண்பின் குடியிருப்பு

விடுதலைப்பெரும் படையின் தொடுப்பு

தொண்டு செய்து பழுத்த பழம்

தூய தாடி மார்பில் விழும்

மண்டைச்சுரப்பை உலகு தொழும்

மனக்குகையில் சிறுத்தை எழும்

என்று அவரே பாரதிதாசன் எழுதிய பாடலை பாடவும் செய்தார். மனக்குகையில் சிறுத்தை எழும் என்ற வரியை மீண்டும் மீண்டும் கேளுங்கள். சிறுத்தை சிலிர்த்து எழும்.

.... ....

சிறு வயது முதல் கேட்டுக்கொண்டு இருக்கும் தமிழ் பக்தி பாடல்களும் திரைப்பட பாடல்களும் அப்படியே மனதில் பதிந்து விடுகின்றன. இது மரபும் மொழியும் சார்ந்த ஒன்று என்பதை மறுக்க முடியாது. எளிமையான சொற்களும் இனிமையான இசையும் நம் மனதை ஆட்கொண்டு விடுகின்றன. பாடல்கள் வெவ்வேறு சமயங்களின் வழிபாட்டு பாடல்களாக இருக்கட்டும், காதல் பாடல்களாக, தத்துவ பாடல்களாக அல்லது கட்சிகளின் பிரச்சார பாடல்களாக இருக்கட்டும். எளிய தமிழில் இருந்தன, நமது மொழி அறிவை வளர்த்தன. பக்தி பாடல்களோ அவற்றின் ஆன்மிக கருத்துக்களோ அல்ல நம் மனதை கவர்ந்ததன் காரணம், தமிழும் இசையும் மட்டுமே. நமது அரசியல் சார்புக்கோ பற்றிக்கொண்ட அரசியல் கொள்கைக்கோ இவை என்றும் குறுக்கே நின்றதில்லை. அன்று கேட்பவன் அரசன் மறந்தால் என்ற பாடலை மீண்டும் மீண்டும் கரோகியில் பாடிக்கொண்டே இருக்கிறேன்.

தொடர்வேன்.

- மு இக்பால் அகமது

இசையால் வசமாகா இதயம் எது? (1)


இசையால் வசமாகா இதயம் எது? (1)

1

மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்குள் மூத்த நண்பர் கிருஷ்ணனுடன் ஒருநாள் நுழைந்தேன். எப்போதும் போவதுதான். சாரம் எனப்படும் லுங்கி கட்டித்தான் போவேன். தடை இருந்தது இல்லை. 


அன்று இசைக்கச்சேரி சீசனில் ஒருநாள். கோவிலின் வடக்கு பிரகாரத்தில் நுழைந்தால் '... திரு ஆவி குடியிருக்கும் ஆவினன் குடி...அங்கு கொலுவிருக்கும் அழகு திருவடி... என் ஆவி குடியிருக்கும் ஆவினன் குடி...' என்ற பாடலை சீர்காழி கோவிந்தராஜன் பாடிக்கொண்டு இருந்தார். ஆஹா! எதிர்பாராத வாய்ப்பு அல்லவா! வெண்கலகுரலோன் எனில் அது அவர் மட்டுமே. காதுகளில் ஹெட்போன் பொருத்தி அவர் பாடலை கேளுங்கள், ஒவ்வொரு எழுத்தும் சொல்லும் மீண்டும் கேட்க வேண்டிய அவசியம் இல்லாத அளவுக்கு அத்தனை தெளிவாக நயத்துடன் பாடுவார். 


தமிழ் கற்றுக்கொள்ள வேண்டுமா? டி எம் சவுந்தரராஜன், சீர்காழி, நாகூர் ஹனிபா பாடல்களை கேளுங்கள். தமிழை எப்படி பேச வேண்டும் என்று தெரிந்து கொள்ள வேண்டுமா? சிவாஜி கணேசன் நடித்த புராண கதை படங்களை பாருங்கள். உண்மையில் இலங்கை வானொலியும் மதுரையின் பல சவுண்ட் சர்வீஸ்காரர்களும் எனக்கு தமிழை கற்றுக்கொடுத்தார்கள்.


அசைச்சொல்லின் தொடராலே ஆனதே ராகம்

பாடல் அளவை முறைப்படுத்த அமைந்ததே தாளம்

இசையின் பொருள் விளங்க பாடுதல் பாவம்

எனக்கூறும் இம்மூன்றும் இணைந்து இன்பம் தரும்

இசையால் வசம் ஆகா இதயம் எது?

இசைப்பற்றி 'மலைத்தேனுண்ட சுவை கூட்டும் தன்மை அது' என்று அவர் பாடும் பாடலை பக்திப்பாடல் வரிசையில் எப்படி வைப்பது?

2

எனக்கு முதலில் பாட்டு என்று அறிமுகம் ஆனது நாகூர் அனிபாவும் நெசவுத்தொழிலாளியான என் வாப்பாவும் பாடிய பாடல்கள்தான். பெண் பாடகர்கள் எனில் அவர்கள் சரளாவும் கே ராணியும் ஆகத்தான் இருந்திருக்க வேண்டும். பிள்ளைப்பிராயம் என்பதால் பெயர் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

தக்பீர் முழக்கம் கேட்டால் உள்ளம், வாழ வாழ நல்ல வழிகள் உண்டு, நெஞ்சிலே வாழ்கின்றவர், உலக மக்கள் யாவருக்கும் உரிமையானவர், எங்கே எங்கே எங்கே சாஹுல் மீரானே, அருள்மேவும் ஆண்டவனே... இவை எல்லாமே அந்தக்காலத்து அரக்கு ரிக்கார்டுகளில் ஒலித்தவை. 

கே சரளாவின் கணவர் அம்பி என்ற சுவாமிநாதன். அவர்தான் ஹனீபா அவர்களின் தபேலா கலைஞர். "சுவாமி இல்லை என்றால் ஹனீபா அவர்கள் ஒலிப்பதிவுக்கு செல்ல மாட்டார். சுவாமி வெளியூர் சென்று இருந்தால் அவர் திரும்பி வந்த பின்தான் ரிகார்டிங் வைத்துக்கொள்ளலாம் என்பார் ஹனீபா" என்று சொன்னார் கே சரளா. 

ஹனீபா அவர்களின் பல புகழ்பெற்ற பாடல்கள் எல்லாம் முதலில் அவர் மக்கள் மத்தியில் மேடைகளில் பாடியவை என்பது பலருக்கு புதிய செய்தியாக இருக்கும். ஒரு சில வருடங்கள் ஆன பின்பே இவ்வாறு இசைத்தட்டாக வந்த பாடல்கள் மிக அதிகம்.

தோளோடு தோள் நின்று தொழ வாருங்கள் என்று டி எம் சவுந்தரராஜன் ஓர் இசுலாமிய பாடல் பாடி இருக்கிறார். 

ஹீரா குகையிலே என்ற பாடலை எஸ் பி பாலசுப்பிரமணியம் பாடியிருக்கிறார். அழகுத்திருமுகம் ஆயிரம் நிலவு அங்கம் முழுவதும் கஸ்தூரிக்கனவு என்ற பாடலில் அவரே அல்லாஹு அக்பர் என்று பாங்கு சொல்வார், கேட்டுப்பாருங்கள். அல்லா..யா அல்லா அற்புதக்கொடையாளா, யா ஹபீப் இறுதிநாளில் எங்கள் பிழை பொறுத்தருள, நினைவெல்லாம் மக்கத்து நபி மீது ஆகிய பாடல்களையும் பாடியுள்ளார்.

 கன்னியரே என்று வாணி ஜெயராம் ஒரு பாடல் பாடியுள்ளார். அவரே ஹாத்தம் நபி தோட்டத்திலே என்ற பாடலை உஸ்மானுடன் இணைந்து பாடியுள்ளார். 

எம் எஸ் விஸ்வநாதன் அவர்கள் இசையில் கலிமா என்ற கேசட் வெளியானது. 

 ஏ ர் ரஹ்மான் அப்போது திலீப் ஆக இருந்த காலத்தில் அவர் தந்தை ஆர் கே சேகர் இசையில் பல இஸ்லாமிய பாடல்கள் வெளிவந்தன. இன்ஷா அல்லா அல்லா இன்ஷா அல்லா, அருளாளன் அன்பான அல்லாஹுவே, தென்னகத்தின் திருவிளக்கு, எத்தனை ஆயிரம் நபிகள் வந்தனர்... உள்ளிட்ட பல பாடல்கள் சேகர் இசை அமைத்தவை!

22.3.2024

தொடர்வேன்

புதன், பிப்ரவரி 14, 2024

2024 தேர்தலும் ஸ்ரீராமன் அருளும்


1

1948 ஜனவரி 30 அன்று டெல்லியில் மகாத்மா காந்தியை கொன்ற ஹிந்து மகாசபை கும்பல்தான் 1949 டிசம்பர் 22 நள்ளிரவு பாபர் மசூதிக்குள் நுழைந்து ஒரு சிலையை வைத்தது. அதன் வழி வந்த இயக்கம்தான் அதே பாதையில் சென்று 1992 டிசம்பர் 6 அன்று பாபர் மசூதியை இடித்து தள்ளியது. இந்த மூன்று நிகழ்வுகளிலும் ஓர் ஒற்றுமை உள்ளது. மூன்று நிகழ்வுகளும் அழிவில் முடிந்தன. எனவே பொதுச்சமூகத்தின் மூளையில் இந்த நிகழ்வுகளை புனிதப்படுத்த எவ்வளவு முயன்றாலும் தோல்வியில்தான் முடியும்.

2024 ஜனவரி 22 அன்று ஒரு நிகழ்வு அயோத்தியில் நடந்தது. இந்த தேசத்தின் ஆட்சியில் இருக்கும் பிரதமர் ஒருவர் கோவில் திறப்புவிழா ஒன்றை முன்னின்று நடத்தினார். மேலே சொல்லப்பட்ட மூன்று நிகழ்வுகளிலும் தொடர்புடைய ஒரு அமைப்பின், காந்தி கொலைக்கு பிறகு தடை செய்யப்பட்ட அந்த அமைப்பின் தலைவர் ஒருவருக்கு தேச பிரதமர் சமமான இடத்தை கொடுத்து அந்த விழாவில் கலந்துகொள்கிறார். நடைமுறையில் அரசியல் சட்டத்தின் பாதுகாவலராக இருக்கும் பிரதமர் ஆகப்பெரிய சமூக விரோத கொலைபாதக செயல்களில் ஈடுபடும் ஓர் அமைப்பின் தலைவருக்கு அப்படியான மரியாதையை தருவதன் மூலம் இரண்டு செய்திகளை நாட்டு மக்களுக்கு உணர்த்துகிறார்.

ஆர் எஸ் எஸ் அமைப்பு இதுவரையில் செய்துவந்த அனைத்து சட்ட விரோத செயல்பாடுகளும் மன்னிக்கப்படுகின்றன அல்லது அங்கீகரிக்கப்படுகின்றன என்பது ஒன்று. இடிப்பது அழிப்பது ஆகிய எதிர்மறை வேலைகளின்போது தான் ஒதுங்கி நின்றுவிட்டு கட்டுவது திறப்பது ஆகிய மங்களகரமான வேளைகளில் தன்னை தந்திரமாக முன்னிறுத்துவதன் மூலம் தன்னை விகாஷ் புருஷ் அதாவது வளர்ச்சி நாயகனாக பொது சமூகத்தின் முன் நிறுத்துவது.

2

இடிப்பு, இப்போது கட்டுதல், திறப்புவிழா என்பதை தாண்டி வேறு பல விசயங்கள் நம்மால் பேசப்படவும் விவாதிக்கப்படவும் செயல்படுத்தப்படவும் இருக்கின்றன.

2024 நாடாளுமன்றத்திற்கான பொதுத்தேர்தல் நடக்கவுள்ள நிலையில் பெரும்பான்மை இந்து சமூக மக்களின் ஒட்டுமொத்த வாக்குகளும், அதாவது இதுவரை இல்லாத அளவுக்கு அவர்களின் வாக்கு ஒருமுகப்படுத்தப்பட்டு பி ஜெ பிக்கு சென்றுவிடும் வாய்ப்பு இந்த கோவில் திறப்பு மூலம் சாத்தியம் ஆகும் அல்லது பி ஜே பியின் இலக்கு அதுதான் என்பதாக மிகப்பரவலான ஒரு ஒற்றைக் கருத்து வலிமையாக பிரச்சாரம் செய்யப்படுகிறது. இது ஒரு விதமான திட்டமிடப்பட்ட சிந்தனை கட்டமைப்பு முயற்சி அல்லது மூளைச்சலவை என்றுதான் சொல்ல வேண்டும். இது உண்மையா? 

3

1951இல் நிறுவப்பட்ட பாரதீய ஜனசங்கம்தான் 1980இல் பாரதீய ஜனதா கட்சியாக பெயர் மாறுகிறது. உண்மையில் 1977இல் ஜனதா கட்சியுடன் பா ஜ சங்கம் இணைந்துவிட்டது. 1967, 71 பொதுத்தேர்தல்களில் முறையே 9.3%, 7.4% வாக்குகளை பா ஜ சங்கம் பெற்றது.

1984 தேர்தலில் பி ஜே பிக்கு கிடைத்ததும் அதே 7.4%தான். 1989இல் 11.4%, 1991இல் 20.10 % வாக்குகளை பெற்றது. 2009 தேர்தலை தவிர 1991 தொடங்கி 2004 வரை அக்கட்சி 20% வாக்குக்கு குறையாமல் பெற்று வந்தது. 2014இல் 30%க்கு மேலும் 2019இல் 37.4% வாக்குகளையும் பெற்றது. 2019இல் காங்கிரஸ் கட்சி தன் வரலாற்றில் மிக குறைந்த வாக்குகளை, 19.5% மட்டுமே பெற்றது.

அநேகமாக நூறு வருடங்களுக்கு மேல் தொடர்ந்து சர்ச்சைக்குரிய ஒன்றாக ராமர் பூமி அல்லது பாபர் மசூதி இருந்து வந்த நிலையில் அது மட்டுமே இந்திய சமூகத்தின் பெரும்பான்மை மக்களாகிய இந்து மத மக்களின் பிரச்னை ஆக இருந்திருக்கும் எனில் முதல் பொதுத்தேர்தல் தொடங்கி இன்று வரை பாரதீய ஜன சங்கம் அல்லது பிஜேபி மட்டுமே வெற்றி பெற்று தொடர்ந்து ஆட்சியில் இருந்திருக்கும். யதார்த்தம் அது இல்லை.

1984 தேர்தலில் பிஜேபி தன் தேர்தல் அறிக்கையில் ராமஜென்மபூமி அல்லது அயோத்தி பற்றி எதுவும் சொல்லவில்லை. 1989 அறிக்கையில் இப்படி சொன்னது: "1948இல் சோம்நாத் கோவிலை இந்திய அரசு கட்ட அனுமதித்தது போல் அயோத்தியில் ராமஜென்மகோவிலை கட்ட அனுமதிக்காமல் இருப்பது அரசாங்கமே சமூகத்தில் பதற்றத்தை மேலும் தூண்டி சமூக அமைதியை கெடுப்பதாகும்".

1991 தேர்தலில் (ராஜீவ் காந்தியின் படுகொலைக்கு முன்னும் பின்னும் நடத்தப்பட்ட தேர்தல் அது) பி ஜே பியின் தேர்தல் அறிக்கையில் அயோத்தி குறித்த குரல் இன்னும் வலுவானது: "வரலாற்றில் நிகழ்ந்த தவறுகளை எப்படி சரி செய்ய முடியும்? அயோத்தியில் ராமஜென்மபூமியை மீண்டும் கட்டுவதன் மூலம்தான்".

1996 தேர்தல் அறிக்கை இப்படி சொன்னது: "பி ஜெ பி ஆட்சிக்கு வந்த உடன் அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் மிக பிரமாண்டமான ஸ்ரீராம் மந்திரை கட்ட தேவையானவற்றை செய்வோம். அதுதான் பாரத்மாதாவுக்கு செய்யப்படும் சிறந்த கவுரவமாக இருக்கும்".

ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணி அமைத்து 1998 தேர்தலை சந்தித்த பி ஜே பியின் அறிக்கையில் அயோத்தி பற்றி ஒரே ஒரு சொல்லைக்கூடப் பார்க்க முடியாது. கூட்டணிக்கட்சிகள் இடையே ராமர் கோவில், அயோத்தி பற்றி கடுமையான கருத்து வேறுபாடுகள் இருந்ததுதான் காரணம் எனில் ஆட்சிக்கு வரும்பொருட்டு ராமர் கோவில் பற்றி பேசுவதும் பேசாமல் இருப்பதும் சந்தர்ப்பவாதத்தின் அடையாளம் அன்றி வேறில்லை.

ஆனால் 2004 தேர்தலில் அயோத்தி குறித்த தனது கடுமையான குரலை பி ஜே பி மாற்றிக்கொள்ள வேண்டியிருந்தது. "நீதிமன்றத்தீர்ப்புக்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும் என்பதில் பி ஜே பி உறுதியாக இருக்கிறது. ஆனால் இரண்டு மதங்கள், சமூகத்தலைவர்கள் இடையே பரஸ்பர நம்பிக்கை, நல்லெண்ணம் அடிப்படையில் ஆன பேச்சுவார்த்தைகள் மூலம் இப்பிரச்சினைக்கு விரைவான தீர்வுகாண வேண்டுகோள் விடுக்கிறோம்".

2004, 2009 இரண்டு தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சிதான் மையத்தில் ஆட்சி அமைத்தது.

4

1992 மசூதி இடிப்பு இந்திய அரசியல் சூழலையும் பொது சமூகத்தின் சிந்தனையையும் முற்றாக மாற்றி புரட்டிப்போட்டது எனில் அது பி ஜே பி என்ற ஒற்றை கட்சிக்குத்தான் சாதகமாக இருந்திருக்கும். எனில் 1992க்கு பிறகான தேர்தல்கள் அனைத்திலும் பி ஜே பி வென்று மையத்தில் தொடர்ந்து ஆட்சியில் இருந்திருக்க வேண்டும். யதார்த்தம் என்ன?

1992க்கு பிறகான 1996, 98, 99, 2010 என நான்கு பொதுத்தேர்தல்கள், அதாவது 2014இல் மோடி தலைமையில் ஆட்சியில் அமரும்வரை 18 வருட காலம் (1996இல் 16 நாட்கள், 1998, 99இல் ஆறு வருடங்கள் தவிர) காத்திருக்க வேண்டி இருந்தது ஏன்? இன்னும் கூர்மையாக குறிப்பிட வேண்டும் எனில் பாபர் மசூதி இடிப்புக்கு பின்னர் (முதலில்)  நடந்த 1996 தேர்தலில் கூட வாஜ்பேயால் 16 நாட்கள் மட்டுமே அரசு அமைக்க முடிந்தது. எனில் 2014 தொடங்கி மையத்திலும் மாநிலங்களிலும் எதன் அடிப்படையில் பி ஜே பியால் பெரும்பான்மை வாக்குகளை திரட்ட முடிந்தது அல்லது ஆட்சிகளை அமைக்க முடிந்தது? ராமர் கோவில் தாவாவை வைத்து மட்டுமே 2014இல் மாற்றத்தை கொண்டு வர முடிந்ததா?

5

1989 டிசம்பரில் காங்கிரஸ் அல்லாத ஓர் அமைச்சரவைக்கு விஸ்வநாத் பிரதாப் சிங் தலைமை தாங்கினார். அந்த ஆட்சிக்கு பி ஜே பியின் ஆதரவும் இருந்தது. மண்டல் கமிசன் பரிந்துரை ஆன இதரபிற்படுத்தப்பட்ட வகுப்பினர்க்கான  27% இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்திட வி பி சிங் அரசு ஆணை பிறப்பித்தது. பார்ப்பனீய நலன் மட்டுமே குறிக்கோளாக கொண்ட சங் பரிவாரத்துக்கு இது கடும் எரிச்சலை தந்தது. கூட்டணி ஆட்சிக்கு ஆதரவாக இருந்தாலும் நாடெங்கும் இதை எதிர்த்து திட்டமிட்டு வன்முறையை கிளப்பி விட்டது சங் பரிவாரம். குறிப்பாக வட இந்தியாவில் பெரும் கலவரங்கள் நடந்தன.

இந்து பெரும்பான்மைவாதத்தை அசுர வேகத்தில் முன்னெடுத்து செல்ல கிடைத்த கருவிதான் ராமர் கோவில் அல்லது ஜென்மபூமி இயக்கம். லால் கிருஷ்ண அத்வானி தலைமையில் ஆர் எஸ் எஸ், விஸ்வ இந்து பரிஷத், பஜ்ரங் தள் இயக்கங்கள் திட்டமிட்டுத்தான் ராம் ரத யாத்திரை நடந்தது. இந்திய பொதுச்சமூகம் அதுவரை கேள்விப்பட்டு இராத போலி மதச்சார்பின்மை, சிறுபான்மை மக்களை தாஜா செய்வது போன்ற புதிய சொல்லாடல்களை சங் பரிவாரம் கண்டுபிடித்தது. பிஹாரில் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் ரத யாத்திரையை தடை செய்து அத்வானியை கைது செய்ய அதை காரணமாக வைத்து வி பி சிங் அரசுக்கு கொடுத்துவந்த ஆதரவை பி ஜே பி விலக்கிக்கொண்டது.

1991 தேர்தலில் பி வி நரசிம்மராவ் பிரதமராக இருக்க, உத்தரப்பிரதேசத்தில் பி ஜே பி முதல்வர் கல்யாண் சிங் ஆட்சியில் பாபர் மசூதியை சங் பரிவாரம் பல ஆயிரம் சங்கிகளை திரட்டி சில மணி நேரத்தில் இடித்து தரை மட்டம் ஆக்கியது.

காங்கிரஸ் கட்சி மையத்தில் 2004 முதல் 2014 வரை ஆட்சியில் இருந்த காலத்தில் பி ஜே பியால் பெரிய சாகசங்கள் எதையும் செய்ய முடியவில்லை என்பதற்கு பாபர் மசூதி இடிப்பு வழக்கு நீதிமன்றத்தில் இருந்ததும் ஒரு காரணமாகும். ஆனால் 2002இல் குஜராத்தில் முதல்வராக நரேந்திரமோடி இருந்தபோது கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை காரணமாக வைத்து இசுலாமிய மக்களுக்கு எதிராக திட்டமிடப்பட்ட வன்முறையை மாநில அரசின் முழு ஆதரவுடன் சங் பரிவார் சமூக விரோதிகள் நடத்தினார்கள். 2000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர், அவர்களில் பெரும்பான்மையினர் இசுலாமிய மக்கள். 1,50,000 மக்களை  வீடுகளில் இருந்து துரத்தினர். 

அத்வானி மூலம் ஆர் எஸ் எஸ் தூண்டிவிட்ட இந்து பெரும்பான்மைவாதத்தை முரட்டுத்தனமான அடுத்த கட்டத்துக்கு எடுத்துச்செல்ல இசுலாமியரை தேச விரோதிகள் என்றும் இந்த நாடு அவர்களுக்கு இல்லை என்றும் பெரும்பான்மை இந்து மத மக்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்தும் இசுலாமியர்களால்தான் தட்டிப்பறிக்கப்படுவதாகவும் சங் பரிவாரம் தன் கொலைகளுக்கான நியாயங்களாக பிரச்சாரம் செய்தது. மோடி இந்த பிரச்சாரத்தை முன்னின்று செய்தார்.

2002 செப்டம்பரில் பேச்சாரஜி என்ற ஊரில் பேசிய மாநில முதல்வர் மோடி "நான் ஒருவன், நான்கு மனைவிகள், இருபத்தைந்து பிள்ளைகள்" என்று இஸ்லாமிய மக்களை இழிவுபடுத்தி பேசினார். கலவரத்தில் உறவுகளையும் வீடுகளையும் இழந்து முகாம்களில் தங்கி இருந்த இஸ்லாமியர்களையும் அவர் விட்டுவைக்கவில்லை. "நிவாரண முகாம்களை நடத்த வேண்டுமா பிள்ளை பெறும் மையங்களை நடத்த வேண்டுமா?" என்று மிக தரம் தாழ்ந்து பேசினார்.

6

2014 நாடாளுமன்றத் தேர்தலில் இந்துத்துவாவின் அதிதீவிரவாத முகமாக அங்கீகாரம் பெற்ற மோடியை பிரதமர் வேட்பாளராக பி ஜே பி அறிவித்தது. 'குஜராத் மாடலில்' இந்திய நாட்டை கொண்டுசெல்ல போவதாக பி ஜே பி அறிவித்தது. மோடி இஸ்லாமிய வெறுப்பு பிரச்சாரம் செய்ய, குஜராத் உள்துறை அமைச்சர் ஆக இருந்த அமித் ஷா களத்தில் இறங்கி இசுலாமிய மக்களுக்கு எதிரான கலவரங்களை தூண்டி நடத்தினார். குஜராத்துக்கு முன்பாகவே தமிழகத்தின் கோவையில் 1997, 1998இல் பிஜேபி, ஆர் எஸ் எஸ், இந்து முன்னணி அமைப்புகள் காவல்துறையின் துணையுடன் இசுலாமிய மக்களை கொன்று குவித்தாலும் ஆட்சி அதிகாரத்தில் இருந்து அத்தகைய கலவரங்களை நடத்த குஜராத் மாடல் முன்னுதாரணமாக விளங்கியது.

2014 தேர்தலில் பி ஜே பி தனிப்பெரும் கட்சியாக ஆட்சி அமைக்க மோடி பிரதமர் ஆக்கப்பட்டார். தனது பார்ப்பனீய கார்போரேட் நலன்களை முன்னெடுத்து செல்ல பார்ப்பனர் அல்லாத ஒருவரை தந்திரமாக பிரதமர் ஆக்கியது ஆர் எஸ் எஸ். 

அடுத்த கட்டமாக மிகப்பெரிய உத்தர பிரதேச மாநிலத்தில் பி ஜே பியின் யோகி ஆதித்யநாத் முதலமைச்சர் ஆகிறார். ஹிந்து யுவ வாஹினி என்ற அதிதீவரவாத அமைப்பை நிறுவியவர் அவர்.

மோடி மாடலில் ஆட்சியதிகாரத்தை பயன்படுத்தி அங்கும் இஸ்லாமிய மக்கள் மீது வன்முறை, கொலைகள், வீடு இடிப்பு, பெண்கள் மீதான பாலியல் வல்லுறவு, பசு பாதுகாப்பு, மாட்டு இறைச்சி என அனைத்து வடிவங்களிலும் தாக்குதல் தொடர்கிறது.

7

இந்து வாக்குவங்கியை ஒருமுகப்படுத்துவதை விடவும் இந்து முஸ்லிம் மக்கள் இடையே கலவரத்தை தூண்டினால் வெற்றிபெறுவது எளிது என்பதை 2014 தேர்தலுக்கு பிறகு பி ஜே பி உணர்ந்து அவ்வாறே செய்தது. உதாரணமாக மேற்கு வங்கம், டெல்லி ஆகிய மாநிலங்களில் நடந்த உள்ளாட்சி தேர்தல்களில் இந்த கலவர உத்தி மூலம் பி ஜே பி வெற்றி பெற்றது.

கலவரங்களுக்கு பின் நடந்த மாநில சட்டமன்ற தேர்தல்களில் பிஜேபியின் பங்கு 2.9%இல் இருந்து 4.4% ஆக உயர்ந்தது.

மோடி பிரதமர் ஆன பின்னர்தான் பீஜேபியால் 30% வாக்குகளை பெற முடிந்தது. வெறும் ராமர் கோவில் அல்லது ராமஜென்மபூமி பிரச்சாரம் மட்டுமே உதவவில்லை என்பது தெளிவு. அதிதீவிரவாத முகம் கொண்ட மோடி, அமித் ஷா, ஆதித்யநாத் போன்றவர்கள் மூலம் செய்யப்படும் இஸ்லாமிய, கிறித்துவ மக்கள் மீதான வெறுப்பு உமிழும் பிரச்சாரம் பார்ப்பனீயர் அல்லாத சாதி இந்துக்களின் வாக்குகளை பிஜேபிக்கு ஆதரவாக திருப்பும் என நம்புகிறார்கள்.

இந்தியாவை ஆறு பகுதிகளாக பிரித்தால் 1990க்கு பிறகான எட்டு பொதுத்தேர்தல்களில் பி ஜே பி பெற்ற வாக்கு சதவீதத்தை புரிந்துகொள்ள முடியும். இன்னும் சரியாக சொல்ல வேண்டும் எனில் ராமஜென்மபூமி அல்லது கோவில் பிரச்சாரம் 2014 வரை ஏற்படுத்திய தாக்கத்தின் வீச்சு, 2014க்கு பிறகான மோடி- அமித்ஷா-யோகி ஆதித்யநாத் கூட்டணியின் திட்டமிட்ட வகுப்புவாத கலவரங்கள் ஏற்படுத்திய வீச்சு , இவை எவ்வாறு வாக்குகள் வடிவில் மாற்றப்பட்டன என்பதை இந்த ஆய்வு அறுதியிட்டு கூறுகிறது.

ஆறு பகுதிகள் ஆவன:

1. வடக்கு (ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், சண்டிகர்)

2. ஹிந்தி பிரதேசம் ( ஹிமாசல் பிரதேசம், ஹரியானா, உத்தரப்பிரதேசம், பிஹார், மத்திய பிரதேசம், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், , உத்தரகாண்ட், ராஜஸ்தான்)

3. கிழக்கு (மேற்கு வங்கம், ஒரியா)

4. வடகிழக்கு (அசாம், பிற ஏழு மாநிலங்கள்)

5. மேற்கு ( குஜராத், மஹாராஷ்டிரா, கோவா, தாத்ரா நகர் ஹாவேலி, டாமன் டியூ)

6. தெற்கு (ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அந்தமான் நிக்கோபார், லட்சத்தீவுகள்).

மூன்று பொதுத்தேர்தல்களில் பி ஜெ பி பெற்ற வாக்கு சதவீதம் இதுதான்:

                                                                           2009               2014              2019

வடக்கு                                                       12-13%                  15%              18%

ஹிந்தி பிரதேசம்                                     30%க்கு கீழ்.       45%              49.1%

கிழக்கு                                                        10%                       18%              39.7%

வட கிழக்கு                                                14%                       30%              32.2%

மேற்கு                                                          30%க்கு கீழ்.       38%              39.8%

தெற்கு                                                         12-13%                   16%              17.6%

2014க்கு பிறகு மோடியை முன்னிறுத்திய பின் பி ஜே பி பெற்ற வாக்குகளில் உள்ள ஏறுமுகத்தை உணரலாம்.

2023இல் நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டமன்ற தேர்தலில் மொத்தமாக பிஜேபிக்கு கிடைத்த வாக்குகள் 4.81 கோடி, காங்கிரசுக்கு 4.94 கோடி. காங்கிரஸ் கட்சிக்கு தெலிங்கானா வாக்குகள்தான் இந்த வித்தியாசத்துக்கு உதவின என்பதிலும் ஐயமில்லை.

மிஜோரம் மாநிலத்தில் அமைந்துள்ள ஜோரம் மக்கள் இயக்கம் 40இல் 27 இடங்களை பெற்று ஆட்சி அமைத்துள்ளது. 

8

2004, 2019 ஆகிய பொதுத்தேர்தல்களுக்கு முன் நடந்த சட்டமன்ற தேர்தல் முடிவுகள் பொதுத்தேர்தல் முடிவுகளை பாதிக்கவில்லை, பொதுத்தேர்தலில் எதிரொலிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

2023 கர்நாடக சட்டமன்ற தேர்தலில் 224 இடங்களில் பி ஜெ பி 66 இடங்களில்தான் வென்றது. 135 இடங்களை வென்ற காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. உடுப்பியில் இசுலாமிய மக்களுக்கு எதிராக தொடர்ந்து கலகங்களை நடத்தியதால் பி ஜெ பி அங்கே ஐந்து தொகுதிகளிலும் வெல்ல முடிந்தது. அதற்கு முன் 2019இல் 17 எம் எல் ஏக்களை விலைக்கு வாங்கி அவர்களை பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வைத்து கர்நாடகா காங்கிரஸ் ஆட்சியை பிஜேபி கவிழ்த்தது வரலாறு.

எதிர்க்கட்சி ஆட்சிகளை கவிழ்த்து எம் எல் ஏக்களை விலைக்கு வாங்குவதற்கு மட்டுமே ஆபரேஷன் லோட்டஸ் என்ற திட்டத்தை பி ஜெ பி செயல்படுத்தி வருவது ஊரறிந்த கேவலமான ரகசியம்.  நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தபோது அப்போது முதல்வராக இருந்தவரும் முன்னாள் எதிர்க்கட்சி தலைவரும் ஆன எடியூரப்பா மீது பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கையை நிறுத்திவைக்கவோ நீக்கவோ மறுத்துவிட்டார். அது ஆபரேஷன் கமலா வழக்கில்தான். எதிர்க்கட்சி எம் எல் ஏக்களுக்கு பணமும் பிறவற்றையும் கொடுத்து விலைக்கு வாங்கும் ஆபரேஷன் அது.

மஹாராஷ்டிராவில் பணபலத்தால் அங்கே சிவசேனா ஆட்சியை பி ஜெ பி கவிழ்த்தது.

ஹரியானாவில் யாருக்கும் அறுதிப்பெரும்பான்மை இல்லாத நிலையில் ஜனநாயக் ஜனதா கட்சி ஆதரவுடன் பிஜே பி ஆட்சியை பிடித்தது.  ஆதரவை எப்படி வாங்கி இருப்பார்கள் என்று சொல்ல வேண்டிய அவசியமில்லை.

2020இல் டெல்லியில் ஆட்சியில் அமர்ந்தது ஆம் ஆத்மி கட்சிதான்.

பிஹாரில் ராஷ்ட்ரீய ஜனதா தல், காங்கிரஸ், இடதுசாரிகள் மகத்தான கூட்டணி அமைத்து பி ஜே பி, ஐக்கிய ஜனதா தல் கூட்டணிக்கு பெரிய அடியை கொடுத்தார்கள்.

2021இல் தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் திமுகவும் கம்யூனிஸ்டுகளும் ஆட்சி அமைத்தார்கள். அப்போது கேரள பி ஜே பி கட்சியின் தலைவர் கே சுரேந்திரன் வெளிப்படையாக சொன்னார், "பி ஜே பிக்கு 40, 50 எம் எல் ஏ கிடைத்தாலும் நாங்கள் ஆட்சி அமைப்போம்". மக்கள் பி ஜே பிக்கு ஒரு இடம் கூட கொடுக்கவில்லை.

பாண்டிச்சேரியில் காங்கிரஸ் எம் எல் ஏக்களை விலைக்கு வாங்கி ரங்கசாமியின் கையை முறுக்கி பி ஜெ பி ஆட்சி அமைத்தது.

மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் எம் எல் ஏக்களை பி ஜெ பி கட்சி விலை கொடுத்து வாங்கியது.

2016இல் உத்தரகாண்ட், அருணாசலபிரதேசத்தில் பி ஜெ பி அல்லாத அரசுகளை பி ஜெ பி கவிழ்த்தது.

2020இல் மத்திய பிரதேச காங்கிரஸ் அரசை பீஜே பி கவிழ்த்தது. ம பியில் காங்கிரஸ் அரசை கவிழ்த்துவிட்டு பிஜேபி முதலமைச்சர் ஒருவரை பதவியில் வைத்த இரவில்தான் மைய அரசு அதாவது மோடி அரசு கொரோனா ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது என்பதும் கொரோனா காலத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் ஒருவர் இல்லாத ஒரே மாநிலமாக ம பி இருந்ததும் கேவலமான உண்மைகள்.

ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சியின் சச்சின் பைலட்டை வைத்து ஆட்சியை கவிழ்க்க பி ஜே பி முயன்ற கதை கேவலமான ஒன்று.

ஜார்க்கண்ட்டில் காங்கிரஸ் கட்சியும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவும் கூட்டணி ஆட்சி அமைத்தன.

2021 அசாம் தேர்தலில் பிஜேபிக்கு கிடைத்த வாக்குகள் 44.51%, காங்கிரசுக்கு கிடைத்த வாக்குகள் 43.68%.

மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் 2017, 2022 தேர்தல்களில் பி ஜே பியால் அத்தனை எளிதாக வெற்றி பெற்று விட முடியவில்லை.

பஞ்சாபில் 2017இல் பி ஜே பி சிரோமணி அகாலிதள கூட்டணியை காங்கிரஸ் வென்றது. 2022இல் பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை பிடித்தது.

கோவா, மணிப்பூர் ஆகிய சிறிய மாநிலங்களில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காதபோது பணபலம், படை பலத்தால் பிற கட்சி எம் எல் ஏக்களை விலைக்கு வாங்கித்தான் பிஜேபி ஆட்சி அமைத்தது, நியாயமான வழியில் அல்ல.

பிஹாரில் அமைத்தது போல் எதிர்க்கட்சிகள் ஒத்த கருத்துடன் குறைந்தபட்ச பொது திட்டத்துடன் ஒரு கூட்டணியை அமைத்தால் 2024 தேர்தலில் பிஜேபியை தோல்வியுற செய்ய முடியும் என்பதை கடந்தகாலம் மெய்ப்பித்து உள்ளது. குறிப்பாக உ பியில் மாயாவதியின் பி எஸ் பி, சமாஜ்வாடி கட்சி, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஒன்றுபட வேண்டியது வரலாற்றுக்கடமை. பி ஜெ பி கூட்டணிக்கு எதிராக ஒரே ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவதை எதிர்க்கட்சிகள் உறுதி செய்தால் மக்கள் மனதில்அதுவே பெரிய நம்பிக்கையை தோற்றுவிக்கும்.

9

உண்மையில் பிஜேபியின் அரசியல் எதிர்காலம் இனிமேல்தான் மக்களால் தீர்மானிக்கப்படும். மந்திர் மசூதி நீண்டகால ஏமாற்று வித்தை ஒரு முடிவுக்கு வந்துவிட்டது. சாமான்ய உழைக்கும் இந்து மத மக்களை தொடர்ந்து ஏமாற்ற அயோத்தியில் ஒரு இசுலாமிய வழிபாட்டுத்தலமோ அரைகுறையாய் கட்டப்பட்ட கோவிலோ இனிமேலும் இல்லை. எல்லா கோவில்களையும்போல் ராமர் கோவிலும் இனிமேல் அன்றாட சடங்குகள் பூஜைகளுடன் செயல்படும். அதானி, அம்பானி உள்ளிட்ட பெரும் கார்பொரேட் முதலைகள் அயோத்தியில் நேரடியாகவோ மறைமுகமாகவோ ரியல் எஸ்டேட் உள்ளிட்ட வளம்கொழிக்கும் தொழில்களில் ஈடுபடுவார்கள். ஸ்ரீராமரின் அருள் அவர்களுக்கு எப்போதும் இருக்கும்.

ஸ்ரீராமரின் அருள் எதிர்காலத்தில் பி ஜே பிக்கு இருக்குமா என்பதுதான் கேள்விக்குறி.

...

(சொர்க்கத்தோழி, பிப்ரவரி 2024 இதழில் வெளிவந்தது) 





வியாழன், டிசம்பர் 21, 2023

கடவுள் மதம் மனிதன்

சத்தியம், வாக்குறுதிகள், காதல், விசுவாசம்...

யாவும் வெற்று வார்த்தைகள், அவ்வளவே


ஒருவரும் இங்கே மற்றவரின் அன்புக்கு ஆட்பட்டவர் இல்லை

உறவுகள் அனைத்தும் போலித்தனமானவை


உன் கடவுள் உன்னெதிரே இருந்தாலும்

உன்னால் எதுவும் செய்ய முடியாது

வேறு யாருமில்லை, உன் உடலுக்கு தீ மூட்டப்போவது

உன் ரத்த பந்தங்கள்தான் 

ஆகாயத்தில் நீ எழும்பி பறக்க

உன் சாம்பலோ மண்ணோடு மண்ணாக கலந்துபோகும்


கொண்டாட்டமான நேரங்களில் உன்னை சுற்றிலும் மக்கள் கூட்டம்

நீ துயருற்ற நேரங்களிலோ உன்னருகில் எவருமிலர்

உலகமக்கள் உன்னுடையவர்கள் ஆவார்கள், எப்போது?

உன் இதயத்தை பிளக்கும்போது

அது சரி, கடவுளையே ஏமாற்றிவிடும் இவர்கள்

மனிதர்களை சும்மா விட்டுவிடுவார்களா என்ன?


இது ஒரு இந்து செய்த காரியம் எனில்

கோவிலை கொள்ளையடித்தது யார்?

இது ஒரு முஸ்லிம் செய்த காரியம் எனில்

கடவுள் வாழும் இல்லத்தை இடித்தது யார்?

இவர்கள் எந்த மதத்தை சேர்ந்தவர்களாகவும் இருக்கட்டும்,

அந்த மதம் போலித்தனமானது.

....

ஏனோ இந்தப்பாடல் நேற்றும் இன்றும் நினைவில் சுழன்றடிக்கிறது. கஸ்மெ வாதே... என்ற இந்தி மொழிப்பாடல்.

கவிஞர் இண்டீவர் எழுதிய இந்தி பாடல் இது. உப்கார் என்ற இந்திப்படத்தில் இடம்பெற்ற பாடலுக்கு கல்யாண்ஜி ஆனந்த்ஜி இசையமைத்தார்கள். பாடலுக்கு திரையில் நடித்தவர் பிரான். பாடலில் ஏன் இத்தனை வெறுமையும் விரக்தியும்? ஒரே தத்துவமழை? பாடலை திரையில் பாருங்கள். பாடல் வரிகளுக்கும் திரையில் விரியும் காட்சிகளுக்கும் வித்தியாசமான குரல் வளம் கொண்ட மன்னா டே நியாயம் செய்துள்ளார். இசையிலும் அந்த வெறுமையின் உயிரோட்டம், ஆம் வெறுமையின் உயிரோட்டம்!

பாலு மகேந்திராவின் நீங்கள் கேட்டவை படத்தில் இப்பாடல் மெட்டு அப்படியே எடுத்துக்கொள்ளப்பட்டது மட்டுமின்றி பாடலும் இதே சாயலில் எழுதப்பட்டது.

பாடலை ஆங்கிலம் வழியாக தமிழில் மொழியாக்கம் செய்தவன் நானே.

... ...

இருண்ட காலத்தில் பாடியவர்கள்


இருண்ட காலத்தில் எதை பாடுவது?

இருளைப்பற்றித்தான்...

- பெர்டோல்ட் பிரெக்ட்


இசையின் அல்லது படைப்பின் அரசியலை இப்படி இரண்டு வரிகளில் வேறு யாரும் வரையறுத்தது இல்லை. இருளைப்பற்றி அல்ல, வெளிச்சத்துக்கான போராட்டம் பற்றி பாட சொல்கிறான் கவிஞன்.

ஜான் லென்னான், பாப் மார்லி, மைக்கேல் ஜாக்சன், எல்விஸ் பிரெஸ்லி என நீளும் இசைஞர்கள் தம் மண்ணின் அரசியலை தம் பாடல்களில் இசையில் பாடினார்கள், எழுதினார்கள். அது நிறவெறியை கண்டனம் செய்யும், இனவெறியை கண்டனம் செய்யும் அரசியலாய் இருந்தது. காசியஸ் க்ளே எதிராளியின் முகத்தில் விசையோடு வீசிய ஒவ்வொரு பஞ்ச்சிலும் நிறவெறிக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கெடுபிடி அரசியலுக்கும் எதிரான ஆக்ரோஷமான இசை இருந்தது. முகமது அலியின் ஒவ்வொரு குத்திலும் செரினாவின் ஒவ்வொரு வாலியிலும் நிறவெறிக்கு எதிரான அரசியல் இருந்தது. கறுப்பின மக்களுக்கு எதிரான அரசியலின் குரல்வளையை நெறித்து குப்பையில் தள்ளும் அரசியல் இருந்தது.

இந்திய இசையில் பிராமணீயம் இருந்தது. அல்லது இந்திய இசை பிராமணீய அடையாளத்துடன் இருந்தது. பாடிய மொழியும் பாடியவர்களும் கேட்டவர்களும் அவ்வாறே. பிராமணர்கள் அல்லாத பிற சாதியினர், குறிப்பாக தலித் மக்களும் கிறித்துவர்களும் இஸ்லாமியர்களும் பிற்படுத்தப்பட்ட சாதியினரும் இந்திய அல்லது அவரவர் மண் சார்ந்த இசையை கையில் எடுத்தபோது அந்த இசையில் பிராமணீய எதிர்ப்பும் சாதீய எதிர்ப்புணர்வும் ஒடுக்குமுறைக்கு எதிரான அரசியலும் இருந்தது. தேவ பாஷையை புறம் தள்ளி அவரவர் மொழியில் பாட விரும்பிய அரசியல் இருந்தது. இது அவ்வளவு எளிதில் நடைபெற்றுவிடவில்லை. மேல்சாதி ஆதிக்கத்தில் சிக்குண்டு கிடந்த இந்திய இசையில் ஓர் உடைப்பை ஏற்படுத்துவது அத்தனை எளிதாக நடந்துவிடவில்லை.

... ...

தொலைக்காட்சி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகளில் பார்ப்பனர்கள் நடுவர் என்ற பெயரில் உட்கார்ந்து கொண்டு செய்யும் அட்டகாசங்கள் அருவருப்பானவை, அப்பட்டமான பிற சாதி + தலித் மக்களுக்கு எதிரான அரசியல் கொண்டவை. பல நேரங்களில் இது பற்றி பதிவுகள் எழுதி இருக்கிறேன். அந்த நிகழ்ச்சிகளை பார்ப்பதை தவிர்த்து வந்தேன்.

Zee டிவியில் இப்போது நடந்துகொண்டு இருக்கும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி இதில் பெரிய உடைப்பை ஏற்படுத்தி உள்ளதை பார்க்கிறேன். சாமானிய உழைக்கும் மக்கள் குடும்பங்களில் இருந்து ரயிலுக்கும் பேருந்துக்கும் கூட டிக்கெட் எடுத்துவிட இயலாத பொருளாதார பின்னணி உள்ள குடும்பங்களில் இருந்து பிள்ளைகள் பாடுகிறார்கள். பார்ப்பனர் அல்லாத பிள்ளைகளின் இசை அறிவை நடுவர்கள் கொண்டாடுகிறார்கள். கண்ணீர் வடிக்கிறார்கள். இது உண்மையில் தொடருமே ஆனால் கொண்டாட வேண்டிய ஒன்றுதான்.

லுங்கி என்பது இஸ்லாமிய அடையாளம் என வரையறுக்கப்பட்ட இங்கேதான் இசுலாமியர் அல்லாத ஒரு இளைஞன் லுங்கி கட்டி வந்து பாடினான் என்பது இந்த மேடைகளின் திட்டவட்டமான அடையாளத்தில் மிகப்பெரிய உடைப்பை ஏற்படுத்தி உள்ளது என்று உறுதியாக நம்புகிறேன். இன்னும் கூட லுங்கிகள் ஆடை என்பதை காட்டிலும் அதில் இஸ்லாமிய அடையாளம் இருப்பதாக கருதி அருவருப்புடன் பார்க்கும் சாதியினரை நான் அறிவேன். ஆடையில் சாதி அடையாளம் தேடும் அரசியல்.

லுங்கி கட்டிய அந்த இளைஞன் 10 வயதில் தன் தந்தையை இழந்தவனாம். மீனவர் ஆன அவர் ஒருநாள் தொழிலுக்கு சென்றவர் திரும்பி வரவே இல்லையாம்.

வாழ்க zee! தொடர்க!

....

மேலே உள்ள பதிவை எழுதிய பின்னர்தான் இறுதிப்போட்டி நடந்தது. இலங்கை யாழ்ப்பாணத்தில் இருந்து வந்த கில்மிஷா முதல் பரிசை வென்றாள். 2009, 10 காலத்தில் தன் தாய்மாமன் காணாமல்போனான் என்றாள். அவன் தாய், தகப்பன் இருவரும் அவன் வருவான் என்று கண்ணீர் விட்டு காத்திருக்கும் காணொலியை பார்த்தீர்களா?

நூலை வாசித்த பின்: கோவை கலவரத்தில் எனது சாட்சியம்


கோவை கலவரத்தில் எனது சாட்சியம்

ஏ. வி.அப்துல் நாசர், 

புவனகிரி தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்

எழுத்தாக்கம் பழனி ஷஹான்

பாரதி புத்தகாலயம் வெளியீடு.

1

"சங் பரிவாரின் சோதனைச்சாலை குஜராத்"  என்ற கூற்று உண்மையா?


1997, 98 கோவை கலவரங்களுக்கான விதைகள் அப்போதோ அல்லது அதற்கு 10 வருடங்கள் முன்போ விதைக்கப்பட்டவை அல்ல. 1980களிலேயே கோவையில் வணிகர்கள் ஆக இருந்த இசுலாமிய சமூகமக்கள் தம் வணிகத்திலும் பொருளாதார நிலையிலும் மேம்பட்டவர்களாக இருந்தார்கள் என்பது அன்றே இந்துத்துவா சக்திகளுக்கு எரிச்சலை தந்த ஒன்றாக இருந்தது. 

1980களின் முற்பாதியில் தென்கோடி கன்னியாகுமரியில் மண்டைக்காடு என்ற ஊரில் இந்து முன்னணி என்ற அமைப்பை ராம.கோபாலன், இல.கணேசன் ஆகியோர் முனைந்து தொடங்கினர். உண்மையில் ஆர் எஸ் எஸ்ஸின் பல கொடுக்குகளில் இது ஒரு கொடுக்கு.

ஒற்றுமையாக வாழ்ந்து வந்த இந்துமத, கிறித்துவ மத மீனவ சமுதாய மக்களிடையே பகைமை உணர்வை வளர்த்து பெரும் கலவரத்தை உருவாக்கி பலர் செத்துமடிய இந்து முன்னணி காரணமாக இருந்தது. தென்காசி மீனாட்சிபுரத்தில் சில நூறு குடும்பங்கள் இசுலாமிய மதத்தை தழுவிய போது வாஜ்பாய் முதல் மிகப்பல இந்துத்துவாவாதிகளும் பதட்டம் அடைந்து நேரடியாக மீனாட்சிபுரத்துக்கு வந்தார்கள் என்பதை இங்கே விரிவாக எழுத வேண்டாம்.

2

1988இல் கோவையில் தனிநபர்களுக்கு இடையே ஆன ஒரு பிரச்னையை மத சாயம் பூசி இந்து இஸ்லாமிய மக்கள் இடையே பகைமையை உருவாக்கியது அதே இந்து முன்னணிதான். இதில் கேரளா மாநிலத்தை சேர்ந்த 15 வயது அபூபக்கர், அப்துல் லத்தீப் ஆகிய இருவர் கொலை செய்யப்பட்டனர். உறவினர்கள் வீட்டுக்கு வந்த இடத்தில் இப்படி உயிரை இழந்தார்கள். 1989இல் அப்துல் ஹக்கீம் என்பவர் கொலை செய்யப்பட்டார். மூவர் கொலையிலும் தொடர்பு உடைய இந்து முன்னணியை சேர்ந்தவர்களை காவல்துறை கைது செய்தாலும் அதி வேகமாக விடுதலையும் ஆனார்கள். இவற்றை தொடர்ந்து இக்கொலைகளில் தொடர்பு உடைய கணேஷ் என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்து முன்னணியை சேர்ந்த அவரை வீர கணேஷ் என்று மாற்றி இந்து முன்னணி பெரிய அளவில் பிரச்சாரம் செய்தது. 

முதல் இரண்டு இஸ்லாமிய மக்களின் கொலையை கண்டுகொள்ளாமல் இருந்த பத்திரிகைகள் கணேஷின் கொலை பற்றி மிக பரபரப்பாக தொடர்ந்து எழுதி தள்ளின. கூடவே அரசு அதிகாரிகளின் அலட்சியம், கொலையானவர்கள் முஸ்லிம்கள் என்ற மத பாகுபாடு இரண்டும் ஒருசேர, அரசு நிர்வாகம் முதல் இரண்டு கொலைகளை கண்டுகொள்ளாமலும் சரியான நடவடிக்கை எடுக்காமலும் இருக்க அதன் எதிர்வினை ஆக கணேஷ் என்ற நபர் கொல்லப்பட்டார். கணேஷின் இறுதிச்சடங்கு நிகழ்வில் "ஒவ்வொரு வருடமும் ஒரு முஸ்லிமை வெட்டி உனக்கு குருதி அஞ்சலி செலுத்துவோம்" என்று இந்து முன்னணியினர் வெளிப்படையாக சபதம் செய்ததை கோவை காவல்துறை பார்த்துக்கொண்டுதான் இருந்தது. 

அவர்கள் சபதம் செய்தது போலவே பாஷா, அகமது கபீர், உள்ளிட்ட நான்கு இஸ்லாமிய மக்கள் மீது இந்துமுன்னணியினர் கொலைவெறி தாக்குதல் நடத்தினார்கள். கபீர் மீதான

தாக்குதலுக்கு பின் விகடன் குழுமத்தின் 13.9.1991 ஜூனியர் போஸ்டில் இப்படி செய்தி வந்தது: கபீர் கொலைக்கான பின்னணி வீர கணேஷிற்காக பழிவாங்கும் படலமே. கூடவே கணேஷின் சமாதி முன் இந்து முன்னணியினர் சபதம் செய்ததையும் குறிப்பிட்டது. தொடர்ந்து 5.9.91 அன்று சிவக்குமார் என்பவர் கொலை செய்யப்பட்டார்.

ஆக கொலை, பழிவாங்குதல் என்ற சங்கிலியின் கண்ணியாகவே 1997 நவம்பர், 1998 பிப்ரவரி கலவரங்கள். 1997 நவம்பர் கலவரம் அந்தோணி செல்வராஜ்  என்ற போலீஸ்காரர் கொலை செய்யப்பட்ட பின் திட்டமிட்ட வகையில் நடத்தப்பட்டது. நடத்தியது இந்து முன்னணியும் காவல்துறையும் இணைந்த கூட்டணி

1997 நவம்பர் கலவரத்தில் காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் (?) 18 பேர் கொல்லப்பட்டதாக காவல்துறை சொன்னாலும் இறந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகம். 24 பேர் என்று அரசு அல்லாத அமைப்புகள் சொல்கின்றன. அரசு அறிக்கையே கூட 10 பேர் காணாமல் போனதாக சொல்கிறது. 

உண்மை என்ன? 250 பேரை கைது செய்தது காவல்துறை என்றாலும் கலவரத்தில் நேரடியாக ஈடுபட்டவர்கள் காவல்துறைதான். அவர்கள்தான் உண்மையில் பலரை வெட்டி கொன்றார்கள். கலவரங்களில் காயம்பட்ட இசுலாமியர் பலர் Aமருத்துவமனைக்கு வந்தபோது காத்திருந்த காவலர்கள் அவர்களை கொன்றனர். இசுலாமிய மக்களின் வீடுகளில் நுழைந்து பெண்கள் மீது காவல்துறை நடத்திய பாலியல் வன்முறைகள் கொடூரமானவை. பல நிகழ்வுகள் வெளியே தெரியாமல் மறைக்கப்பட்டன.

PUCL, Peoples Watch, CHRO (Kerala) ஆகிய மனித உரிமைகள் அமைப்புகள் களத்தில் ஆய்வு செய்து அளித்த அறிக்கையில் அப்போதைய கோவை நகர் கமிஷனர் ஆன டி சி மாசான முத்து, இன்ஸ்பெக்டர் முரளி, அசிஸ்டண்ட் கமிஷனர் நடராஜன், சப் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் ஆகியோர் நவம்பர் கலவரத்தின் பின்னால் இருந்தவர்கள் என நேரடியாக குற்றம்சாட்டி இருந்தனர். 

திட்டமிட்ட வகையில் இசுலாமிய வணிகர்களின் கடைகள் ஏறத்தாழ 1000 இருக்கலாம், அழிக்கப்பட்டன. இசுலாமிய மக்களின் அழிக்கப்பட்ட சொத்துக்கள் மட்டும் சுமார் 800 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டது. 

ஷோபா ஜவுளிக்கடையின் பூட்டை உடைத்து இந்துத்துவா தீவிரவாதிகளை கொள்ளை அடிக்க அனுமதி தந்தவர்கள் காவல்துறையினர்தான்.  கடை உரிமையாளர் ஜாபர் தன் நிறுவனத்தை காக்க பெருமுயற்சி செய்துள்ளார். போலீஸ் கமிஷனர், உள்ளூர் அரசியல் பிரமுகர்கள், மத்திய அமைச்சர் என தொலைப்பேசியில் அழைத்து நிலைமையை சொல்லி உடனடி நடவடிக்கை வேண்டும் என கேட்டும் ஒரு சல்லி பலனும் இல்லாமல் போகவே தன் உயிரை காத்துக்கொள்ள வெளியேறி சொத்தை இழந்தார். குஜராத்தில் குல்பர்க் சொசைட்டியை தீவிரவாதிகள் சூழ்ந்துகொண்டபோது அன்று நாடாளுமன்ற உறுப்பினர் ஆக இருந்த இஷான் ஜாப்ரிக்கு ஏற்பட்ட நிலையும் அவர் கொல்லப்பட்டதும் நினைவுக்கு வருகிறது.கலவரத்தின்போது போலீசார் சீருடைகளை மாற்றி கைலிகளை கட்டிக்கொண்டு துப்பாக்கி ஏந்தி கண்ணில் கண்ட இசுலாமியர்களை சுட்டுத்தள்ளினார்கள்.

4

1997 படுகொலைகளை பொதுசமூகத்தின் சிந்தனையில் இருந்து அகற்றவும் திசை திருப்பவும் காவல்துறைக்கு ஒரு வாய்ப்பு தேவைப்பட்டது. அதன் விளைவுதான்1998 பிப்ரவரி வெடிகுண்டு வெடிப்புகள். ஒரு தவறும் செய்யாத 58 உயிர்கள் பலியாகின. பிப்ரவரி14 முதல் 17 வரை நிகழ்ந்த குண்டுவெடிப்புகளில் முஸ்லிம்களும் கொல்லப்பட்டனர். 

5

1997 கோவை கலவரத்தின்போது  அன்றைய புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் ஆக இருந்த இந்த நூலின் ஆசிரியர் அப்துல் நாசர் நேரில் சென்று கள ஆய்வில் ஈடுபட விழைகிறார். அன்றைய முதலமைச்சர் மு.கருணாநிதி அவர்களை சந்தித்து கோவை செல்ல அனுமதி கேட்கிறார். 'உங்க ஆளுங்கதான்யா இப்படி பண்றாங்க" என்று முதல்வர் சொல்ல இவர் மறுத்து பேசியிருக்கிறார். இறுதியில் முதல்வர் அனுமதி அளிக்கிறார். 1997 டிசம்பர் 1, 2 இரண்டு நாட்களும் கோவைக்கு சென்று தங்கி கள ஆய்வில் ஈடுபட்டுள்ளார். தான் கண்டவற்றை அப்படியே அறிக்கையாக அரசிடம் அளித்துள்ளார். ஒரு பயனும் இல்லை. தன்னையும் தீவிரவாதி என்று முத்திரை குத்தி விடும் அபாயம் உள்ளது என்று சட்டமன்றத்தில் அன்றைய முதல்வர் மு.க. முன்பாகவே மனம் வெறுத்து பேசியுள்ளார்.

இந்த  நிலையில்தான் இந்தியாவிலும் இந்தியாவுக்கு வெளியேயும் நன்கு அறியப்படும் மிக முக்கியமான ஒருவர் அவரை சந்திக்க விரும்புவதாக அப்துல் நாசரின் நண்பர் சொல்கிறார்.

6

மண்டைகாடு, மீனாட்சிபுரம் ஆகிய ஊர்களில் மத மோதல்களை முனைந்து உருவாக்கிய இந்து முன்னணி கோவையிலும் இசுலாமிய மக்கள் மீது குறிப்பாக அவர்களின் பொருளாதார வளர்ச்சி கண்டு எரிச்சல் அடைந்து மத மோதல்களை திட்டமிட்டு உருவாக்கியது. இங்கும் ராம கோபாலன், திருக்கோவிலூர் சுந்தரம் ஆகியோர் இதற்கு அடித்தளம் இட்டனர். சிறு தனிநபர் பிரச்னைகளை பூதாகரமாக ஆக்கி மதமோதலாக மாற்ற முயற்சி செய்தனர். ஒரு கட்டத்தில் 1982 இந்து எழுச்சி மாநாடு என்று நடத்தி முகமது நபிகளை அநாகரிகமாக பேசி இசுலாமிய இளைஞர்களை கோபப்படுத்தினார்கள்.

தொடர்ந்து 1983, 1986, 1987, 1988, 1989, 1990, 1991, 1992, 1993, 1994 என திட்டமிட்டு இந்து முன்னணி மதக்கலவரங்களை நடத்திக்கொண்டே இருந்தது. சில கொலைகளும் நடந்தன. அதன் தொடர்ச்சியாகவே 1997, 1998 கலவரங்களை பார்க்க வேண்டும், 1992 பாபர் மசூதி இடிப்புக்கு பின்னர்தான் கோவையில் மதகலவரம் நடந்தது என்பது இசுலாமிய சமூகம் வெறுப்புற்று கலவரங்களை நடத்தியது, வெடிகுண்டு வெடித்தது என்று முனைந்து சித்தரிக்கும் முயற்சியாகத்தான் இருக்கும். 1997, 98 கலவரங்கள் இந்துமுன்னணியால் திட்டமிட்டு நடத்தப்பட்டவை எனில் அரசின் நிர்வாகமும் உளவுத்துறையும் காவல்துறையும் 1980களின் தொடக்கத்தில் இருந்து பெற்ற அனுபவங்களின் அடிப்படையில் சரியான நேரத்தில் நியாயமான தடுப்பு, கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு இருந்தால் 97, 98 கலவரங்களையும் அதன் தொடர்ச்சியாக அல் உம்மா இயக்கத்தின் தவறான நடவடிக்கை ஆன வெடிகுண்டு தாக்குதல்களையும் தடுத்து நிறுத்தி இருக்க முடியும் என்பது உறுதி. 

உச்சகட்டமாக காவலர் செல்வராஜ் என்பவர் இந்து அல்ல, அவர் பெயர் அந்தோணி செல்வராஜ், அவர் ஒரு கிறித்துவர் என்ற உண்மையை காவல்துறையும் அன்றைய திமுக அரசும் வெளிப்படையாக அறிவித்து இருந்தால் அதை இந்து முஸ்லிம் கலவரமாக மாற்றிய இந்து முன்னணி, ஆர் எஸ் எஸ்சின் சதி அம்பலம் ஆகி இருக்கும், அதன் பின் ஏற்பட்ட படுகொலை, வெடிகுண்டு வெடிப்புகள் தடுக்கப்பட்டு இருக்கும். காவல்துறையில் இருந்த இந்துத்துவா சிந்தனை கொண்ட அதிகாரிகள் 97, 98 கலவரங்களை இந்து முன்னணி அமைப்புடன் சேர்ந்தே நடத்தினார்கள் என்பதுதான் அதன் பின் வெளிவந்த உண்மை. இதற்கு அன்றைய திமுக அரசும் முதல்வர் மு கருணாநிதி அவர்களும் பதில் சொல்ல கடமைப்பட்டவர்கள் என்பதில் ஐயமில்லை.

7

1997 நவம்பர் 29 அன்று காவலர் அந்தோணி செல்வராஜை இசுலாமிய இளைஞர்கள் சிலர் கொலை செய்து விடுகிறார்கள். சாலை போக்குவரத்து விதிகளை மீறியதாக எழுந்த வழக்கு ஒன்றை தொடர்ந்து ஏற்பட்ட வாக்குவாதம் பகைமை உணர்வை வளர்க்க அது கொலையில் முடிந்தது. இதில் இந்து முஸ்லிம் தகராறு எங்கே இருக்கிறது? உண்மை என்ன? கொலை செய்தவர்களை அல் உம்மா இயக்கம் காவல்துறையில் ஒப்படைத்தது. காவல்துறை வழக்கு பதிவு செய்யாமல் இந்து முன்னணியுடன் சேர்ந்து கோவையை திட்டமிட்டு கலவர பூமியாக மாற்றியது.

30ஆம் தேதி கமிஷனர் மாசானமுத்து தலைமை தாங்க 300க்கும் மேற்பட்ட காவல்துறையினர் கோவையில் ஊர்வலம் நடத்தினர். ஊர்வலத்தின் பின் பகுதியில் இந்து மக்கள் கட்சியினரும் அர்ஜுன் சம்பத்தும் அதிரடி ஆனந்தன் போன்ற இந்துத்துவா தீவிரவாதிகளும் சேர்ந்து சென்றனர் எனில் என்ன சொல்வது? காவல்துறை நடத்திய ஊர்வலத்தில் தமிழக அரசுக்கும் முதலமைச்சருக்கும் எதிராக திட்டவட்டமான கோஷங்கள் இடப்பட்டன என்பதை தற்செயலான ஒன்று என்று தள்ளிவிட முடியாது.

8

30ஆம் தேதி கமிஷனர் மாசானமுத்து ஆயுதப்படை ரிசர்வ் வளாகத்தில் 

நடத்திய கூட்டத்தில் இந்து முன்னணி தலைவர் ராம கோபாலன் இருந்துள்ளார். இஸ்லாமிய மதத்தை சேர்ந்த காவலர்களை வெளியேற்றிவிட்டு நடத்தப்பட்ட இந்த கூட்டத்தில்தான் இசுலாமிய மக்களையும் அவர்களின் வணிக தலங்களையும் வாழ்வாதாரங்களையும் குறிவைத்து அழிக்க திட்டம் இடப்பட்டது.

இதன் பின் நடந்த கலவரங்களையும் படுகொலைகள், வெடிகுண்டு வெடிப்புகளையும் மீண்டும் நான் இங்கே சொல்லப்போவது இல்லை.

9

1997 நவம்பர் கலவரத்தை ஒட்டி முதலமைச்சர் அனுமதியுடன் டிசம்பர் 1ஆம் நாள் நேரடியாக கோவை சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கிறார்  புவனகிரி எம் எல் ஏ ஏ வி அப்துல் நாசர். கலவரம் அப்போதும் தகித்துக்கொண்டு இருந்த பாதுகாப்பு அற்ற மிக மோசமான சூழலில்தான் சக நண்பர்கள் மூன்று பேருடன் கோவை செல்கிறார். பல இடங்களில் அப்போதும் தீ எரிந்துகொண்டே இருந்ததாகவும் காவல்துறையினரின் வெறுப்புக்கு ஆளான நிலையில் தமக்கே பாதுகாப்பு இல்லாத அச்சமிகு சூழல் நிலவியதாகவும் அப்துல் நாசர் பதிவு செய்கிறார். சந்தித்த மக்களும் சந்திக்க விரும்பிய நபர்களும் காவல்துறையினரின் அச்சுறுத்தலுக்கு அஞ்சி வாய் திறக்கவில்லை என்ற நிலையில் தன்னை சந்தித்து பேசிய நபர்களின் சுருக்கமான வாக்குமூலங்களே கொடூரமானவையாக இருந்தன எனில் உண்மையான நிலவரம் எத்தனை கொடுமையாக இருந்திருக்கும் என்று யூகித்து தெரிந்துகொள்ளலாம்.

தாங்கள் கண்டவற்றை அறிக்கையாக அரசுக்கு கொடுத்தது மட்டுமின்றி 1999 ஜனவரி மாதத்தில் சட்டமன்றத்திலும் நடந்த அனைத்தையும் சுட்டிக்காட்டி பேசியுள்ளார். பலன்? ஒன்றுமில்லை.

10

1999ஆம் ஆண்டு ஏதோ ஒரு மாதத்தில் காந்தியடிகளின் கொள்ளுப்பேரன் துஷார் காந்தியை நேரடியாக சந்திக்கும் ஒரு வாய்ப்பு உருவாகிறது. கலவர பூமியில் தான் சென்றபோது கண்டவற்றை அப்படியே துஷாரிடம் சொல்ல அவர் நாசர் எதிர்பாராத புதிய பணி ஒன்றை செய்ய தூண்டுகிறார். "குற்றவாளி என்று அரசு ஒருவரை கைது செய்வதாலேயே அவரை குற்றவாளி என்று சொல்லிவிட முடியாது. அவரை குற்றவாளி என்று சொல்ல அரசுக்கு எப்படி உரிமை உள்ளதோ அதேபோல் தான் குற்றமற்றவர் என்று நிரூபிக்கவும் அவருக்கு எல்லா உரிமைகளும் உண்டு. எனவே  கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தை நீங்கள் ஆராய வேண்டும்..." என்கிறார் துஷார்.

கைது ஆனோரின் நிலை சிறைகளில் எப்படி உள்ளது என்று பேசிய துஷார் குண்டு வெடிப்பில் பாதிப்புக்கு உள்ளானோர் குறித்த வருத்தங்களையும் பதிவு செய்தார். அவர்களுக்கான இழப்பீடுகள் குறித்தும் கேள்வி எழுப்பினார். "இவர்களுக்கு அரசின் ஆதரவு இருக்கிறது, ஆனால் கைதான முஸ்லிம்களின் மீதோ அரசின் வெறுப்பும் மக்களின் வெறுப்பும்தான் சூழ்ந்திருக்கிறது. இப்படியான தருணத்தில் சிறுபான்மை சமூகத்தில் இருந்து எவரேனும்தான் அவர்களுக்கு உதவ முடியும். சிறைவாசிகளின் மோசமான நிலையை சீரமைக்க வேண்டும். அவர்களுக்கு ஜாமீன் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்" என்கிறார் துஷார்.

இந்த சந்திப்புக்கு பிறகுதான் கோவை குண்டுவெடிப்பு வழக்கில் சிறையில் உள்ளவர்களை சந்தித்து நிலையை ஆராயவும் ஜாமீன் கிடைக்கவும் வழக்கு நடத்த வேண்டிய சட்ட உதவிகளை செய்யவும் சிறைகளில் விசாரணை என்ற பெயரில் அவர்கள் மீது ஏவப்படும் துன்புறுத்தல், அடக்குமுறைகளை தடுக்கவும் சிறை கைதிகளுக்கான சட்டப்பூர்வ உரிமைகளை உறுதி செய்யவும் அப்துல் நாசரை தலைவராக கொண்ட Panel for Legal and Educational Aid (PLEA) என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது.

11

நூலில் அப்துல் நாசர் அவர்கள் பதிவு செய்துள்ள அதிர்ச்சி தரும் ஓர் உண்மையை இங்கே பதிவு செய்து விட்டு PLEA என்ன செய்தது என்று சொல்கிறேன்.

நவம்பர் கொலைகளுக்கு பழி வாங்க இசுலாமிய இளைஞர்கள் சிலர் வெடிகுண்டு வெடிக்க திட்டமிட்டது தெரிந்து அன்றைய த மு மு க மாநில நிர்வாகிகள் எழுத்து வடிவிலேயே கோவை கமிஷனர், சென்னை டி ஜி பி ஆகியோரிடம் தெரிவித்து நடக்க இருக்கும் குண்டுவெடிப்பை தடுத்து தொடர்புடைய நபர்களை கைது செய்ய வேண்டும் என்று புகார் அளித்துள்ளார்கள். அவ்வாறு குண்டு செய்து கொண்டு இருந்த அல் உம்மா இயக்க நபர்களை நேரடியாகவே அறிந்த உளவுத்துறை, காவல்துறையினர் அவர்களை கண்டுகொள்ளாமல் இருந்ததுடன் "நீங்கள்லாம் கண்டிப்பா இதை செய்யணும்" என்று தூண்டி விடவும் செய்துள்ளனர். நவம்பர் கொலைகள் இசுலாமிய மக்கள் மீதான பொதுமக்கள் அனுதாபத்தை விளைவித்து இருந்தது என்பதை இந்து முன்னணி கும்பலோ காவல்துறையோ விரும்பவில்லை. எனவே 98 பிப்ரவரி குண்டுவெடிப்பை காவல்துறை வேண்டுமென்றே அனுமதித்தது. 

அதாவது நவம்பர் கலவரத்தில் காவல்துறை மீது விழுந்த கரும்புள்ளியை அதை விடவும் பெரிய ஒரு கலவரத்தின் மூலம் கழுவிவிட காவல்துறை திட்டமிட்டது மட்டும் இன்றி நவம்பரை விடவும் கொடூரமான ஒரு தாக்குதலை இஸ்லாமியர்கள் நடத்தினால் நல்லது என்றும் எதிர்பார்த்தனர்.

அதன் பின் இசுலாமிய மக்கள் மீது கற்பனைக்கு எட்டாத கொடூரங்களை இந்து முன்னணி+காவல்துறை கூட்டணி கட்டவிழ்த்துவிட்டது.

12

சிறைக்கைதிகளின் குடும்பத்தினருக்கு காவல்துறை கொடுக்கும் கெடுபிடி, அவமரியாதை பற்றி த நா சட்டமன்றத்தில் அப்துல் நாசர் பேசும்போது முதல்வர் "அப்படி ஒன்றும் இல்லை, தீவிரவாதிகளுக்கு ஆதரவாக பேசி அவர்களை ஊக்குவிக்காதீர்கள்" என்று சொல்கிறார்.

சட்டமன்றத்திற்கு வெளியே பத்திரிக்கையாளரிடம் பேசிய நாசர், சட்டமன்றத்தில் நடந்ததை கூறி, சிறையில் உள்ளவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை, குண்டுவெடிப்பை தூண்டியவர்கள் வெளியே உள்ளார்கள், சில முஸ்லிம் அமைப்புகள் இளைஞர்களை தவறாக வழி நடத்துகிறார்கள் என்று கூற முஸ்லீம் அமைப்புகளின் கண்டனத்துக்கு ஆளானார். அன்றைய த மு மு க இயக்கம் பி ஜெய்னுலாபுதீன் தலைமையில் இருந்தது, அந்த அமைப்பு மட்டும் நாசர் மீது 18 மாவட்டங்களில் வழக்கு போட 18 மாவடங்களுக்கும் நேரில் அலைந்துள்ளார்.

13

PLEA சார்பில் முதலமைச்சரை சந்தித்து கைதிகள் மேல் சிறையில் ஏவப்படும் வன்முறைகள் பற்றி சொல்ல, முதல்வர் அப்படியெல்லாம் இல்லை என்று மறுக்க, மீண்டும் மீண்டும் எடுத்துச்சொன்ன பிறகே "சரி நீங்களே சிறைகளுக்கு நேரில் சென்று பார்த்து அறிக்கை அளியுங்கள்" என்று அனுமதி வழங்குகிறார்.

வழக்கறிஞர்கள் துணையுடன் அப்துல் நாசரின் அமைப்பு கோவை, சென்னை சிறைகளுக்கு நேரில் சென்று பார்த்து பதிவு செய்துள்ள உண்மைகள் மிக அதிர்ச்சி அளிப்பவை. காவல்துறை இஸ்லாமியர் மீது எத்தனை வன்மம் கொண்டதாக உள்ளது என்பதை நாசர் ஆவணப்படுத்தி உள்ளார். அதை இங்கே விவரிக்க இடமில்லை. கோவை சிறை இந்து முன்னணியின் ராம கோபாலன் கட்டுப்பாட்டில் இருந்தது என்பதை மட்டும் பதிவு செய்கிறேன். என்ன நடந்திருக்கும் என்பதை வாசிப்போர் ஊகித்துக்கொள்க.

14

PLEA அமைப்பின் நோக்கம் சிறைவாசிகள் அனைவரும் குற்றமற்றவர்கள் என்றோ அனைவரையும் நிபந்தனை இன்றி விடுதலை செய்ய வேண்டும் என்பதோ அல்ல என்பதை நாசர் தெளிவாக சொல்லி விடுகிறார். குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும், நிரபராதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதுதான் அடிப்படையான நோக்கம். இந்த திசை நோக்கிய பயணத்தில்

சிறைவாசிகள் தரப்பில் வாதாட வழக்கறிஞர்களை ஏற்பாடு செய்வது, சிறையில் அவர்கள் மீது ஏவப்படும் அடக்குமுறைகளை நிறுத்துவது, சிறைக்கு வெளியே உள்ள அவர்களின் குடும்பங்களுக்கு உதவுவது ஆகிய திட்டவட்டமான செயல்களில் இறங்குகிறார்கள்.

சொல்வதற்கு மிக எளிதாக உள்ளது. அன்றைய நாளில் குண்டுவெடிப்புக்கு பின் பொதுவாக இசுலாமிய சமூகத்தின் மீது விழுந்த தீவிரவாதிகள் என்ற முத்திரையை சுமந்து கொண்டு ப்ளீ அமைப்புக்கு ஆதரவும் பொருளாதார உதவியும் வேண்டி போனபோது இசுலாமிய மக்களும் வணிகர்களும் கூட நாசரை கண்டுகொள்ளாமல் போனார்கள் என்பதுடன் அவருடன் பலர் தொடர்பை முறித்துக்கொண்டார்கள் என்பதையும் அவர் மிகுந்த வலியுடன் பதிவு செய்துள்ளார். அனுபவித்தால் மட்டுமே புரிந்துகொள்ள முடிகிற வலி அது. நூலை வாசியுங்கள்.

15

சிறைவாசிகள் உள்ளே இருக்க அவர்களின் குடும்பங்கள் சமூகத்தால் முற்றாக ஒதுக்கப்பட்டன. வேலைகளில் இருந்து நீக்கப்பட்டார்கள். கடைகளில் பொருட்கள் மறுக்கப்பட்டது. குழந்தைகள் பள்ளிகளில் இருந்து நீக்கப்பட்டனர். பொது சமூகம் இந்த குடும்பங்களுடன் பேசுவதை தவிர்த்தது. உச்சக்கட்டம் எதுவெனில் இந்த குடும்பங்கள், குடும்ப நடவடிக்கைகள் என அனைத்தும் 24 மணி நேரமும் காவல்துறையின் கண்காணிப்பில் இருந்துள்ளன. எனில் அப்துல் நாசர் இந்த குடும்பங்களை சந்திப்பதிலும் அவர்களை பேச வைப்பதிலும் எத்தனை சிரமங்களை சந்தித்து இருப்பார்? 5 பெண்கள், 1 ஆண் கொண்ட ஒரு சிறைவாசியின் குடும்பத்தில் ஒற்றை ரூபாய் வருமானதிற்கும் வழி இல்லாமல் போக 5 பெண்களும் விபச்சாரத்தில் ஈடுபட நிர்ப்பந்திக்கப் பட்டார்கள் என்பது ஓர் உதாரணம்.

16

அல் உம்மா தலைவர் பாஷா பாய்தான் வெடிகுண்டு திட்டத்துக்கு மூளையாக இருந்தவர். ஏதோ ஒரு கட்டத்தில் அப்துல் நாசரை உன்னையெல்லாம் கொலை செய்ய வேண்டும் என்று  ஆத்திரத்தில் திட்டி உள்ளார். கோவை சிறையில் அவரை நாசர் சந்திக்கிறார். ஒரு தவறும் செய்யாத 58 பேர் உயிர் போனதற்கு காரணமான அவரை முகத்துக்கு நேரே நாசர் கண்டனம் செய்கிறார். அந்த உரையாடல் முக்கியமான ஒன்று. "நீங்கள் செய்தது இசுலாமிய மார்க்க நெறிகளுக்கு முற்றிலும் புறம்பானது. பாதிக்கப்பட்ட மக்கள் உங்களை மன்னிக்காதவரை இறைவன் உங்களை மன்னிக்க மாட்டான்.... நீங்கள் செய்த செயலால் இப்போது ஒட்டுமொத்த இசுலாமிய மக்களையும் இசுலாமிய மார்க்கத்தையும் கூட இந்துத்துவா தீவிரவாதிகள் இழிவுபடுத்துகிறார்கள். உங்கள் நாசவேலையால் இந்துத்துவா தீவிரவாதிகளின் இந்த பிரச்சாரம் சாமானிய மக்களிடம் எடுபடுகிறது. இறந்துபோன 58 பேர் குடும்பங்களின் கண்ணீரை எதைக்கொண்டு உங்களால் ஈடுசெய்ய முடியும்?" என்று கண்டித்துள்ளார்.

வன்முறைக்கு வன்முறையோ கொலைக்கு கொலையோ எப்போதும் தீர்வு அல்ல, எல்லா மத மக்களுக்கும் இது பொருந்தும் பொது விதி என்பதை நூலில் தெளிவாக சொல்கிறார்.

17

குண்டுவெடிப்புக்கு பின் கோவையில் மீட்பு, கள உதவிகள் என மனிதாபிமான நடவடிக்கைகளில் ஈடுபட சென்ற அப்துல் நாசர் துஷார் காந்தியை சந்தித்த பின் முற்றிலும் வேறு ஒரு தளத்திற்கு நகர்கிறார். அது காலையில் தொடங்கி இரவில் முடிவதோ இன்று தொடங்கி நாளை முடிவதோ அல்ல. மிகுந்த உடல் உழைப்பை கோரிய ஒன்று. காவல்துறை உள்ளிட்ட பல திசைகளிலும் இருந்து தொடர்ந்து மிரட்டல்களும் முட்டுக்கட்டைகளும் இன்னல்களும் வந்துகொண்டே இருந்தாலும் நீதி எது அநீதி எது, தான் எதன் பக்கம் நிற்க வேண்டும் என்ற உயரிய ஒற்றை இலட்சிய இலக்கை நோக்கி மனம் தளராமல் பயணித்த அப்துல் நாசரும் அவரது PLEA அமைப்பும் எடுத்துக்கொண்ட பணி முன்னுதாரணம் இல்லாத ஒன்று. சிறைவாசிகளும் அவர்களின் குடும்பங்களும் 

அந்த அமைப்பால் பெற்ற பயன்கள் அளவிட முடியாதவை. அன்று கட்டமைக்கப்பட்டு இருந்த பொது சமூகத்தின் சிந்தனையை, அரசின் அதிகாரவர்க்கத்தின் சிந்தனையை செயல்பாட்டை புரிந்துகொண்டால் மட்டுமே இதை மதிப்பிட முடியும்.  

ஆர் எஸ் எஸ் என்ற அமைப்பு இந்திய சமூகத்தில் என்னென்ன வடிவங்களில் எப்படி எல்லாம் ஊடுருவி உள்ளது என்பதை இப்போதும் கூட யாராலும் திட்டவட்டமாக சொல்லிவிட முடியாது. உலகில் எங்கே ஒரு குண்டுவெடிப்பு நிகழ்ந்தாலும் ஒரு கலவரம் நிகழ்ந்தாலும் அமெரிக்காவை சந்தேகப்பட வேண்டும் என்பது சமூக பொருளாதார அரசியல் கற்றவர்கள் அறிந்த பாடம். இந்தியாவில் ஆர் எஸ் எஸ் அமைப்பை சந்தேகப்பட வேண்டும் என்பதும் அரசியல் பாடமே.

"சங் பரிவாரின் சோதனைச்சாலை குஜராத்"  என்ற கூற்று உண்மையில்லை.  கோவைதான் சோதனைச்சாலை, அந்த அனுபவத்தை செயல்படுத்திய தளம்தான் குஜராத், அதன் பின் பல மாநிலங்கள். இந்த நூல் அந்த முடிவுக்கு என்னை வர செய்தது.

2017, 2021 என இரண்டு பதிப்புகள் கண்ட நூல் இது. அ மார்க்ஸ், பாரதி கிருஷ்ணகுமார் ஆகியோர் வழங்கியுள்ள உரைகள் மிகுந்த கனமானவை, பல வரலாற்று குறிப்புகளை அடக்கியவை. பாதுகாக்கப்பட வேண்டியவை.

எழுத்து வடிவில் ஆவணமாக்கியவர் பழனி ஷஹான். யாரும் எளிதில் புரிந்துகொள்ளத்தக்க எழுத்தாக்கம் பாராட்டத்தக்கது.

வரலாற்றில் உண்மை நிலைத்து நிற்க வேண்டும் என்பது நம் விருப்பமாக இருக்கலாம், ஆனால் உண்மையை உரத்து சொல்லவும் எப்போதும் சொல்லிக்கொண்டே இருக்கவும் ஆன கடமையை நாம் தொய்வின்றி செய்ய வேண்டிய அவசியம் உள்ளது என்பதை எதிரி எப்போதும் நமக்கு உணர்த்திக்கொண்டே இருக்கிறான். அந்த பாதையில் நம் கையில் இந்த நூல் வலிமைமிக்க கூரான ஆயுதம்.


இரண்டாம் பதிப்பு வெளியீடு பாரதி புத்தகாலயம்

9443066449

- மு இக்பால் அகமது

21.12.2023

சனி, அக்டோபர் 21, 2023

ஆகாத தீதார்: சிறுகதைகள் நூல் மதிப்புரை

இறுதி மூச்சு அடங்கும் முன் கணவன் தனக்கு இன்னொருத்தியும் இருக்கிறாள் என்ற உண்மையை சொல்கிறான். மௌத்திற்கு பிறகு நியாயப்படி தனது சம்பாத்தியத்தின் பகுதியை அவளுக்கு கொடுத்து விடும்படி கூறிவிட்டு ஜனாஸா ஆகி விடுகிறார். அவர் இதுநாள் வரை மனதில் சுமந்த பாரத்தை சொகாராவின் இதயத்துக்கு மாற்றுகிறார். 

இரண்டாம் தாரம் ஆனவள் ஜமாஅத்தில் முறையிட்டு தனக்கான பொருளாதார உதவியை அல்லது உரிமையை கேட்க, தான் மட்டுமே அறிந்ததை சாதகமாக எடுத்துக்கொண்டு சொகாரா கொடும் சொற்களால் சொத்தை அபகரிக்க வேஷம் போடுவதாக அவளை கூட்டத்தின் நடுவே அவமானப்படுத்த அவள் கூசி ஒடுங்கி அங்கிருந்து சென்று விடுகிறாள். 

தன்னை வருடக்கணக்கில் ஏமாற்றிக்கொண்டு இருந்த கணவன் மீதான கோபமும் தன் கணவனை எவளோ ஒருத்தி பங்கு போட்டுக்கொண்ட கோபமும் ஒருசேர இந்த ஆத்திரத்துக்கு பலியானதோ அவளைப்போலவே ஒரு பெண்தான். இப்போது சொத்து முழுவதும் அவளுக்கே. 

இதே காட்சி மீண்டும் அரங்கேறுகிறது. பாத்திரங்கள் வேறு. அதே சொகாரா தன் இறுதி மூச்சு அடங்கும்முன் மகன் சமீரை அழைத்து ஏதோ சொன்னது சமீரோடு போகிறது. ம்மா சொன்னது அவனோடு புதைகிறது. 

இரண்டு பேர் அறிந்த செய்திதான் ரகசியம். உண்மை என்னவென்றால் ஏழு வயது சமீர் அன்றைக்கு இருட்டுக்கு பயந்து கதவு அருகே நின்றுகொண்டு இருக்க, அவன் இருப்பதை அறியாத அவனது அத்தா தனது இரண்டாம் தார உண்மையை உடைத்தபோது சமீரும் கேட்டுவிடுகிறான். மூன்றாம் நபர் அறிந்த பின் அது ரகசியம் இல்லையே! இப்போதும் சொகாரா சமீருக்கு சொன்னது என்னவென்று நமக்கு தெரியாது, மூன்றாம் நபர் யாரும் அங்கே இருந்தால் அன்றி நாம் அறிந்துகொள்ள வாய்ப்பு இல்லை. 

மனித மனங்களின் அழுக்குகளும் தர்ம நியாயங்களும் கேள்விக்கு உள்ளாகின்றன. மறுமையின் கூரான கத்தி போன்ற கேள்விகளும் விளைவாக விதிக்கப்பட உள்ள நரக வாழ்வும் இம்மையின் சுகபோகங்களுக்காக அறிந்தே ஒத்திவைக்கப்படுகின்றன.

(கைப்பற்றப்பட்ட வசியத்)

... ...

இறந்த கணவனின் முகத்தை அவனது ஜனாஸா அங்கிருந்து தூக்கிச்செல்லப்படும் வரையிலாவது பார்த்துக்கொண்டு இருக்கும் ஒரே ஒரு வாய்ப்பையும் மனைவிக்கு மறுத்து தனி ஒரு அறையில் அடைக்கப்படும் கொடும் வழக்கத்தை யார் புகுத்தி இருப்பார்கள்? இஸ்லாமியபெண்ணின்  இந்த உள்ளக்குமுறலை ஆமினா பேசுகிறார். மரண வீட்டில் மனைவியின் மீது நிகழ்த்தப்படும் மிகப்பெரிய வன்முறை என்கிறார். ஆண் எத்தனை அயோக்கியன் ஆனாலும் அவன் வாயை அடைக்க முடியாது. ஆனால் பெண்களின் ஒரே ஒரு தவறும் போதும், காலமெல்லாம் அவள் வாயை அடைக்க.

(ஆகாத தீதார்)

... ...

வெளிநாட்டில் இருந்து திரும்பி வருவோரிடம் இரண்டு பட்டியல் உள்ளது, கோடாலித்தைலம், கைலி, தாவணி அன்பளிப்பு க்கு ஒன்று; இடைப்பட்ட காலத்தில் மரணித்தவர்களின் வீடுகளுக்கு சென்று துக்கம் விசாரிப்பது இன்னொரு பட்டியல். (இருட்சிறை)

"காலைல எம்புள்ளைக அசந்து தூங்கிட்டு இருக்குங்க! எங்கத்தா வந்து பேன அமத்திட்டு போவாங்க... என் ஈரக்குலை..." என்று தன்னை பார்க்க வந்த பள்ளித்தோழி பௌசியாவிடம்  கரைந்து புலம்புகிறாள் பஷீரா. "அவன் இருந்தவரை அந்த வாழ்க்கை நரகம்னு நெனச்சிட்டு இருந்தேன். கூடாட்டம் இருந்தாலும் அந்த வீடு எனக்குன்னு இருந்துச்சு.இங்கின ஒருவா கஞ்சி தொண்டைல இறக்க கூட நெஞ்செல்லாம் எனக்கு அழுத்துது". 

நல்ல கணவன் கிடைப்பதுதான் வாழ்வின் ஒற்றை இலக்கு என்று பெண்களுக்கு விதிக்கப்பட்ட விதியை மாற்றி வாசிக்க சொல்கிறார் ஆமினா. கணவனை இழந்த பெண்ணுக்கு நல்ல தகப்பனும் தாயும் கூட வேண்டும்! இவை கிடைக்கப்பெறாத பெண்கள் வாழ தகுதியற்றவர்கள். உலகம் அவர்களுக்கு இல்லை.

தாய் தகப்பன் அண்ணன்மார், பின் கணவன் மாமனார் மாமியார், பின் மகன்கள் என்று யார் கையையாவது எதிர்பார்த்துக்கொண்டே நாளை, வாழ்க்கையை அல்ல, தள்ள பெண் ஜென்மத்துக்கு விதிக்கப்பட்டுள்ளது.

பள்ளிக்கூடத்தின் புதிய பரிமாணம் என்ற ஒன்றை இந்த கதையில் சொல்கிறார். ஆசுவாசப்படுத்தும் ஆறுதல் மையங்கள் என்றும் இயந்திரத்துக்கு பதிலாக பெண்களை பயன்படுத்தி கொண்ட காலகட்டங்களில் ஓய்வெடுக்கும் சொற்ப பருவத்தை பள்ளிக்கூடம் அன்பளித்துக்கொண்டு இருப்பதாகவும் சொல்வது முற்றிலும் உண்மை. படிப்பு, படிப்பு சார்ந்த எதிர்காலம் எல்லாம் கனவுகளுக்கு அப்பாற்பட்டவை, நிகழ்காலம் மட்டுமே நிதர்சனம்.

கற்ற கல்வியும் வெளிநாட்டு வாழ்க்கையும் பௌசியாவின் கண்களை அகலப்படுத்தி இருந்தன என்றும் அவர் சொல்வது எத்தனை இசுலாமிய பெண்களுக்கு அதை அவர்கள் குடும்பத்தினர் சாத்தியப்படுத்தி உள்ளனர் என்ற கேள்வியை முன்வைப்பதன்றி வேறில்லை.

(இருட்சிறை)

... ...

15, 16 வயது பள்ளிக்கூட பெண்ணுக்கு, ஹாஜிரா, அவசரத்திருமணம் செய்து வைக்கிறார்கள். மலேயாவில் அஹமது தன் குடும்பத்து ரொட்டிக்கடையில் கடுமையாக உழைக்கிறான். திருமணம் ஆன கையோடு மலேயா செல்ல மாமியார், மாமனார், நாத்தனார் கொடுமையில் இங்கே கிடந்து சிறுமி அல்லாடுகிறாள். பஞ்சாயத்து வைத்து அவளை தாய் தகப்பன் தம்முடன் அழைத்து செல்கிறார்கள். மாதாமாதம் அவன் செலவுக்கு பணம் அனுப்ப வேண்டும். கணவனுக்கும் அவளுக்கும் இடையே ஆன உரையாடல்கள் இதனை மையமாக வைத்தே  வளர கசந்து போகிறது உறவு.

விடுமுறையில் வந்த இடத்தில் அஹமது விபத்தில் செத்து போகிறான். அதற்கு முன் அவனுக்கும் அவளுக்கும் நடந்த உரையாடல் " உன்னை அத்து விட போறேன்" என்று அவன் சொல்வதுடன் முடிகிறது. 

அடக்கம் செய்யப்படும்வரை அவளுக்கும் இரண்டு பிள்ளைகளுக்கும் அங்கே ஒரு காப்பித்தண்ணி வச்சு தரக்கூட யாருமில்லை. அஹமதுவின் மரணம் மரத்துப்போய் வயிற்றுப்பசி அவளை ஆக்கிரமித்து கொள்கிறது. இறப்பு வீட்டின் கூட்டம் எப்போது கலையும், நிம்மதியாக மூச்சு விடலாம், ஒரு வாய் காப்பி குடிக்கலாம் என்று எதிர்பார்த்து கிடக்கிறாள். எப்போது கலையும்? அஹமதுவின் ஜனாஸா தூக்கப்பட்டால்தான் கலையும்! 

ஹாஜிராவுக்காக ஊர்ப்பஞ்சாயத்தை கூட்டிய அம்மாவும் அத்தாவும் இப்போது அவளை புருஷன் வீட்டிலேயே விட்டுவிட்டு அவசரமாக வெளியேறுகிறார்கள். பயனில்லாத பெண்ணாக திரிந்துபோனாள் ஹாஜிரா. கைகழுவுகிறார்கள்.

(பொம்மக்குட்டி)

... ...

அக்காலத்திய ஆண்கள் போல் கையில் எசவாக கிடைத்த, அடிப்பதற்கும் மிதிப்பத ற்கும் ஆன பிண்டம் என மனைவியை நினைக்கும் சராசரி ஆண்தான் அப்துல். மனைவிக்கு போக்கிடம் இல்லை என தெரிந்தால் இந்த ஆண்கள் தம் மொத்த அகோரத்தையும் இறக்கி வைத்து விடுகிறார்கள்.

... இணை வைத்து பேசாத ஆண்கள் அந்த ஊரில் இல்லை. பாரிஸாவுக்கு வாய்த்த கணவனும் அப்படியே. பிற ஆண்களுடன் மட்டுமின்றி பெற்ற தகப்பன், சகோதரனுடனும் சேர்த்து பேசி அசிங்கப்படுத்துகிறான். 

கணவன் இறந்து விடுகிறான். பாரிஸா அழவில்லை. அவள் கணவன் கபருக்கு போனபின்னும். கண்ணீர் வெறும் நீரில்லை, அது மன்னிப்புக்கான மொழி. பாரிஸா அழவில்லை.

(இன்ஸ்டன்ட் புனிதம்)

... ...

வெறும் புகைப்படத்தில் தொடங்கும் கதை இறுதியில் வாசிப்பவனுக்கு ஒரு கேள்வியை வைத்து விசாரணை செய்வதில் முடிகிறது. "தீங்கிழைத்த நிலையில் யாருடைய புகைப்பட ஆல்பத்திலாவது நீங்கள் இடம் பெற்று இருக்கிறீர்களா?". ஆண் சமூகத்தை நோக்கி வீசப்பட்ட மிக கூர்மையான கட்டாரி. வாசிப்பவனின் கழுத்து அறுபடுகிறது.

(புகைப்படம்)

... ...

தனது மரணமே இறுதி மரணமாக இருக்க வேண்டும் என்பது அதாவது மற்றவர்கள் அனைவரும் கபருக்கு போன பின், அச்சத்தினின்றும் எழுவது. எதன்பொருட்டு அச்சம்? மரணம் நேர்ந்தபின் என்ன நடக்கும் என்பது தெரிந்தால் என்ன தெரியாமலேயே போனால் என்ன? அப்படியல்ல, இன்னும் வாழ வேண்டும் என்ற பேராசையில் இருந்து எழுவது இது. கொரோனாவில் மரணமுற்ற மனிதனை அடக்கம் செய்யும் நிகழ்வை ஒட்டி மனிதர்கள் இடையே நிகழும் உரையாடல் சில அப்பட்டமான உண்மைகளை முகத்தில் அறைகிறது.

(ஊர்வாய்)

... ...

எக்குத்தப்பான சாபம். ஆபிதாவின் சாபத்துக்கு ஆளான நிஜாம்தான் ஆபிதா கிழவியை மருத்துவமனைக்கு தூக்கிக்கொண்டு ஓடினான். கணவன் சம்சுதீன் மிகுந்த மனஉறுதி கொண்டவர். உம்ரா செல்ல ஆயத்தமானபோதே ஒருவேளை  தான் உம்ராவில் இருக்கும்போது ஆபிதா மௌத் ஆனால் என்னென்ன செய்ய வேண்டும், எப்படி சமையல் செய்ய வேண்டும் என்ற அளவுக்கு திட்டம்போட்டு கொடுக்கும் அளவுக்கு மனஉறுதி கொண்டவர். ஊருக்குள் அவருக்கு அப்படி ஒரு மரியாதை. 

ஆபிதா அநேகமாக இறந்து விட்டாள் என்ற நிலையிலும் கூட டாக்டர் வந்து உறுதிசெய்யும் வரை காத்திருக்கிறார். இறப்பு உறுதியான பின் நிலைகுலைந்து பெருங்குரல் எடுத்து அழுகிறார். ஊரே அதிர்ச்சி அடைகிறது. அது சம்சுதீனின் அழுகை அல்ல. தனிமை வாழ்க்கைக்கு அடி எடுத்து வைக்கும் ஓர் ஆணின் அழுகை. காலம் நெடுகிலும் பெண்ணை அதிகாரம் செய்து ஆனால் அவள் உழைப்பில் அண்டி வாழ்ந்து வந்த ஆண் ஆதிக்க வர்க்கத்தின் இயலாமையின் குரல் அது. தானே போட்டுகொண்ட ஆண் என்னும் கண்ணாடி கவசம் பரிதாபமாக உடைப்படும் நேரம் இது. கணவனை, மகனை, தகப்பனை, மருமகனை இழந்துவிடும் பெண்கள் அழுது ஓய்ந்து அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து விடுகிறார்கள். சம்சுதீன்களுக்கு அந்த புள்ளியில் இருந்து அடுத்து தெரிவதோ வெற்றிடம்தான்.

(ரேகை போல் வாழ்க்கை).

.... ...

13 சிறுகதைகள் கொண்ட நூல் இது. இழவு வீடுகளில் இறந்தவர்களை மையமாக வைத்து நடக்கும் நிகழ்வுகள், உரையாடல்களை கொண்டு கதைகள் நகர்கின்றன. இஸ்லாமிய பெண்களின் இடத்தில் இருந்து சொல்லப்பட்ட கதைகள். எனவே இஸ்லாமிய குடும்ப கலாச்சாரம், உறவுகள், உரையாடல்கள் என வரையப்பட்டு இருந்தாலும் தமிழக மண்ணின் இஸ்லாமிய கலாச்சாரத்தையும் வாழ்க்கை முறையையும் காலங்காலமாக அருகில் இருந்தும் கலந்தும் வாழ்ந்தும் பார்த்தும் வாழும் பிற சமூக மக்கள் புரிந்துகொள்வதில் பெரிய சிக்கல் எதுவும் இல்லை.

இசுலாமிய சமூக பெண்கள் சந்திக்கும் குடும்ப அல்லது சமூக சிக்கல்கள், பிரச்னைகளை இக்கதைகள் பேசுவதாக குறுக்கியும் பார்க்க முடியாது. பல நூறு ஆண்டுகளாக ஆணாதிக்க சமூகத்தின் கீழ், ஆண்களின் பெருவிரல் நசிவின் கீழ் உழன்று கிடக்கும் பெண் சமூகத்தின் குரலை முன் வைக்கும் இக்கதைகள் ஆண்களை நோக்கி கேள்விகளை வீசுகின்றன. மட்டுமின்றி நான்கு சுவர்களுக்குள் அடைக்கப்பட்ட பெண்கள் தமக்குள் ஒருவர் மீது ஒருவர் ஆதிக்கம் செய்ய முற்படுவதன் நுட்பமான உளவியலையும் புரிந்துகொள்ள முயன்றால் அதன் தொடக்கப்புள்ளியும் ஆண்களிடத்தில் இருந்துதான் என்பதையும் இவை வெறும் தனிநபர் சார்ந்த பிரச்னைகள் அல்ல என்பதையும் உணர முடியும். இந்த புரிதலுக்கு நீண்ட பயிற்சியும் குடும்பம் சொத்து உறவுகள் குறித்த புரிதலும் வேண்டும்.

இஸ்லாமிய சமூகத்தில் ரொம்ப படிச்சவ, காலேஜ் படிச்சவள ஆம்பிளைகள் கட்டிக்க வருவதில்லை என்ற பெண்களின் உரையாடல் தொடர்ந்து வருகிறது. இது இன்றளவும் உண்மை. படித்த பெண் கேள்வி கேட்பாள், கேள்வி கேட்கும் பெண் தமக்கு தேவையில்லை என்ற ஆம்பிளை ஆதிக்க மனப்பான்மையின் வெளிப்பாடு இது. ஆனால் கதைகளில் வரும் பெண் மாந்தர்களின் பாடுகளை வாசிக்கும் எவரும் பெண் கல்வியின் அவசியத்தை மறுத்து விட முடியாதபடிக்கே அவர்களின் வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது.

மரண வீட்டின் துக்கம் மூன்று நாளைக்கே, அதன் பின் அன்றாட வாழ்க்கைக்கு திரும்ப வேண்டும் என்பது இசுலாமிய நெறி. மாண்டார் மீள்வதில்லை, இருப்போர் வாழ்வை தொடர்க, அதுவே இயற்கை என்ற யதார்த்த நியதியில் இருந்து சொல்லப்பட்ட நெறி இது. 

இந்த கதைகள் மாண்டோருக்கும் இருப்போருக்கும் ஆன இடைப்பட்ட முற்றுப்பெற்ற உறவுகளை சொல்லவில்லை, வாசிக்கும் ஒவ்வொருவரிடமும் வைக்கும் கேள்விகள் நீண்ட நாட்களுக்கு நம்மை தொந்தரவு செய்பவை. ஆமினா முஹம்மத் இங்கே வெற்றி பெறுகிறார். இன்னும் நிறைய எழுதுவார்.

21.10.2023

...

ஆகாத தீதார், ஆமினா முஹம்மத்

Galaxy Booksellers and Publishers, மேலூர், மதுரை


மத்திய கிழக்கு பாலஸ்தீன அமெரிக்க அரசியலும் இந்திய இஸ்லாமிய சமூகம் எடுக்க வேண்டிய நிலைப்பாடும்

இன்று நேற்றல்ல, கடந்த பல பத்து வருடங்களாகவே மத்திய கிழக்கு அரபு பிராந்திய அரசியல் ஆனது அமெரிக்க சார்பு அல்லது எதிர்ப்பு அரசியல் என்ற மையமான புள்ளியில் அங்குள்ள அரபு நாடுகளை இரண்டு முகாம்களாக பிரித்து வைத்துள்ளது. இஸ்லாம் என்ற ஒற்றை மார்க்கம் இந்த நாடுகளை இயற்கையாகவே இணைத்து ஒரு சரடாக  மாற்றி இருக்க வேண்டும். மாறாக அமெரிக்காவின் சுயநல கார்பொரெட் அரசியல், குறிப்பாக பெட்ரோலிய அரசியல் மிக தந்திரமாக இந்நாடுகளை பிரித்து வைத்துள்ளது. இதன்றி இசுலாமிய மதத்துக்கு உள்ளேயே இருக்கின்ற இன அல்லது குழு அரசியலும் இந்த நாடுகள் தங்களுக்குள் மோதிக்கொள்ளவும் வகை செய்தன.

அரபு பிராந்தியத்தில் பெட்ரோலிய வளம் மிக்க நாடுகளோ தத்தம் நாடுகளுக்கு பங்கம் வராமல் இருந்தால் போதும், ஈரான், ஈராக், லிபியா, பாலஸ்தீனம் அழிந்தால் நமக்கென்ன என்று சுயநல அரசியல் நடத்திக்கொண்டு இருக்கின்றன. மிக முக்கியமான காரணம், அங்கெல்லாம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக அரசுகள் இல்லை, பாரம்பரிய மன்னர் ஆட்சி அதாவது சர்வாதிகார ஆட்சிகள் நடக்கின்றன. தலைதூக்கிய ஓரிரண்டு ஜனநாயக, இடதுசாரி இயக்கங்கள் நசுக்கப்பட்டன. அவ்வாறான குரல்கள் உடனடியாக நசுக்கப்படும்.

வெட்கம்கெட்ட அரபு நாடுகள் இப்போதாவது தம் மவுனத்தை கலைக்க வேண்டும். இஸ்ரேலுக்கு எதிராக அணி திரள வேண்டும். அமெரிக்க அரசியலும் இஸ்ரேலும் சேர்ந்து ஒட்டுமொத்த அரபு பிராந்தியத்தையும் அபகரிக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை. மூன்றாவது உலகப்போர் உருவாகும் எனில் முழுமுதற்காரணம் இஸ்ரேலின் ரவுடித்தனமும் அமெரிக்காவின் ஆதரவும் மட்டுமே. பிரிந்து கிடந்ததன் பலன்தானே இராக்கும் லிபியாவும் அழிந்தது?

இங்கே இந்திய இஸ்லாமிய சமூகத்தின் மனநிலை அல்லது செயற்பாட்டை சுட்டிக்காட்டாமல் இருக்க முடியாது. இஸ் ரேலையும் அமெரிக்காவையும் கடுமையாக விமர்சனம் செய்யும் இந்திய இஸ்லாமிய சமூகம் வெட்கங்கெட்ட சக அரபு நாடுகளை கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன்? 

அடக்குமுறையின் எந்த ஒரு வடிவத்துக்கும், எந்த ஒரு சமூகம் நசுக்கப்பட்டாலும் வெறும் பிரார்த்தனைகள் பலன் தராது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். அது அரசு பயங்கரவாதமாக இருந்தாலும் திட்டமிட்ட இயக்கங்களின் தாக்குதலாக இருந்தாலும் அப்படித்தான். தம் மீதான தாக்குதலை எதிர்ப்பதாக கருதி வீட்டுக்குள்ளும் வழிபாட்டு தலங்களுக்குள்ளும் புலம்பி, ஆவேசப்படுவதும் மணிக்கணக்கில் உரை ஆற்றுவதும் ஒரு பலனையும் தராது. எதிரி மிக மோசமான ஆயுதங்களுடன் வீதியில் இறங்கி அழித்துக்கொண்டு இருக்கும்போது பிரார்த்தனைகளால் என்ன பயன்?

...

அமெரிக்காவின் சுயநல சர்வதேச கார்ப்பரேட் அரசியலும் மத்திய கிழக்கின் பெட்ரோலிய அரசியலும் பாலஸ்தீன காஸா அரசியலின் மையமாக இருப்பதை இந்திய இஸ்லாமிய சமூகம் புரிந்துகொள்ள வேண்டுகிறேன். 1908இல் ஈரானில் பெட்ரோல் வளம் கண்டறியப்படும் முன் மத்திய கிழக்கின் அரசியல் மதம், இனம் ஆகியவற்றை மையமாக கொண்டு இருந்தது உண்மைதான். 1908க்கு பின் மத்திய கிழக்கின் அரசியல் வெறும் மத இன அரசியல் மட்டுமே அல்ல. பெட்ரோலிய வளம் கண்டறியப்பட்ட பின் , 1908க்கு முன்பான தொழில் வளர்ச்சி, கல்வி வளர்ச்சி பெறாத கூட்டு சமூக வாழ்க்கை என்ற அரபு சமூகத்தின் முகம் 1908க்கு பின் முற்றாக மாறியது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். தன் மண்ணில் எடுக்கப்பட்ட பெட்ரோலுக்கு விலை நிர்ணயம் செய்த ஈரான் மன்னரை அமெரிக்கா படுகொலை செய்த நாளில் இருந்துதான் நவீன கால அரபு பிராந்திய அரசியலை பார்க்க வேண்டும். அதன் பிற்கால தொடர்ச்சிதான் மும்மர் கடாபியும் சதாம் உசேனும்.

ஆண்டான் அடிமை, நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பின் கண்டுபிடிப்பான மதம், பின்னர் அந்த அமைப்பை தக்க வைப்பதற்கு ஆன ஒரு கருவியாக இருந்தது மட்டுமின்றி அத்தகைய சமூக அமைப்போடு சேர்ந்து இணையாக வளர்ந்து தன்னை தக்க வைத்துக்கொண்டும் இருந்தது. இது அரபு நாடுகளுக்கும் பொருந்தும். 1908க்கு பின் ஆன அரபு சமூகத்தை பண்டைய நிலப்பிரபுத்துவம் சார்ந்த ஒட்டகம் மேய்க்கும் விவசாய சமூகம் என்று எளிதாக யாரும் கடந்து போக முடியாது என்பதற்கான ஒரே காரணம் பெட்ரோலிய வளம் கண்டறியப்பட்ட பின் எழுந்த பொருளாதார பேரெழுச்சியும் அதனை தொடர்ந்த சர்வதேச அரசியலும் சர்வதேச அரசியலில் பெட்ரோலியம் வகுத்த அதாவது அரபு நாடுகள் வகுத்த பங்கு பாத்திரமும் ஆகும். OPECக்கின் தோற்றம் சர்வதேச அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான திருப்பத்தை ஏற்படுத்தியதை யாரும் மறுக்க முடியாது.

இந்த அரசியலை புரிந்துகொள்ள மறுக்கும் அல்லது தவறும் அல்லது புரிந்தும் எடுத்து சொல்ல முன்வராத எந்த ஒரு இயக்கமும் தன் பின்னால் திரளும் மக்களை ஏமாற்றுவது அன்றி வேறில்லை. இந்த மையமான அரசியலை இந்திய இஸ்லாமிய சமூகத்துக்கு எடுத்துச்சொல்லாத எந்த ஒரு மத அடையாளம் சார்ந்த அமைப்பும் வெறும் அடையாள அரசியல் நடத்தும் அமைப்பாகவே இருக்க முடியும். அவர்கள் தம் பின்னால் திரளும் மக்களை ஏமாற்றி கொண்டு இருக்கிறார்கள். 

இந்திய பிரதமரும் இந்திய அரசும் அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஐரோப்பிய நாடுகளும் பகிரங்கமாக இஸ்ரேல் ஆதரவு நிலை எடுத்தபின் இந்திய இஸ்லாமிய சமூகம் வெளிப்படையாக வீதிக்கு வந்தே ஆக வேண்டும். பாலஸ்தீன, காஸா மக்களுக்கு ஆதரவாக வீதிகளில் இயக்கம் நடத்தும் இடதுசாரி ஜனநாயக இயக்கங்களுடன் இந்திய இஸ்லாமிய சமூகம் கைகோர்க்க வேண்டும். காலத்தின் கட்டாயம் இது.

19.10.2023

மேல்மருவத்தூர் மடம் செய்த ஆன்மிக 'புரட்சி'

பார்ப்பனீய மடங்கள் ஆனாலும் இடைசாதி மடங்கள் ஆனாலும் உழைக்கும் மக்களை யதார்த்தமான வாழ்க்கை பிரச்னைகளில் இருந்து திசைதிருப்பவும் போராடும் ஜனநாயக சக்திகளை நோக்கி அவர்கள் செல்லாமல் தடுக்கவும் ஏற்பாடு செய்யப்படும் நிறுவனங்களே. மக்களை ஏமாற்றி பணம் சுருட்டுவது பிரதான தொழில் என்றாலும்.

சங்கர மடங்கள் மேல்சாதி சிறுபான்மை பிராமணர்களுக்கு எனில் இடைசாதி மடங்கள் ஆகப்பெரும்பான்மை பிராமணர்கள் அல்லாத மக்கள் பிரிவினரை தம் பக்கம் இழுத்தன என்பதுதான் நுட்பமான அபாயம். 1980களுக்கு பிறகு குறிப்பிட்ட சாதியை சேர்ந்த ஆசிரியர் சிறிய அளவில் சாமியார் தொழிலை தொடங்குகிறார். பெரியார், அண்ணா பிறந்த மண்ணில்தான் மாறி மாறி ஆட்சி செய்த திராவிட கட்சிகளின் பேராதரவுடன் அவர் தம் தொழிலை விரிவாக்குகிறார். அமைச்சர் பெருமக்கள், டெல்லி அதிகார மட்டம், ஒரு கட்டத்தில் மோ டி என மேல்மருவத்தூரில் வந்து குவிய உள்ளூர் ஆட்சி நிர்வாகமும் போலீஸ் நிர்வாகமும் அடங்கி போவதுடன் மடத்துக்கு சேவகம் செய்யும் துறைகள் ஆகின. இயற்கையாகவே அவர் ஒரு அரசியல்வாதிகளின் கருப்புபண பினாமி ஆகிறார்.

பல சதுர கி மீ பரப்பளவு நிலங்கள் உள்ளூர் மக்களிடம் இருந்து அடித்து பிடுங்கப்பட்டன. அவர் அனுமதி இன்றி நிலம் விற்க வாங்க முடியாது என்ற நிலை புகுத்தப்பட்டது. எல்லாகார்ப்பரேட் மடங்களும் போலவே இங்கும் கல்வி மருத்துவம் என்ற சேவை முகமூடி தேவைப்பட ஏற்கனவே அரசு நிர்வாகத்தில் பலமாக செல்வாக்கை நிலைநிறுத்திய பங்காரு அதையும் செய்தார். தன் மனைவியை உள்ளூராட்சி தலைவர் ஆக கொண்டுவந்தார். அதாவது கணவர் சாமியார் மனைவி உள்ளூர் நிர்வாக தலைவர். ஆஹா! அவரது ஒரு மகனுக்கு த நா அரசின் மிக உயர்ந்த போலீஸ் அதிகாரியின் வீட்டில் பெண் எடுத்தார்கள்.

அவர் மீது கொலை குற்றச்சாட்டுகள் உள்ளன. மருத்துவ கல்லூரி விடுதியில் தண்ணீர் வராததால் குரல் கொடுத்த மாணவன் அடித்து நொறுக்கப்பட்ட நிகழ்வும் தொடர்ந்து நடந்த கலவரத்தில் மேல்மருவத்தூர் ரயில் நிலையம் சூறையாடப்பட்டதும் வரலாறு. நிர்வாக சீர்கேடுகளுக்கு எதிராக மாணவர்கள் அல்லது மாணவர்கள் அமைப்பு எதுவும் குரல் எழுப்பிட முடியாது, எழுப்பினால் நிர்வாகத்தின் ரவுடிகள் சிறப்பாக கவனிப்பார்கள்.

பல்மருத்துவகல்லூரி தொடங்கி அனுமதி பெற பல லட்சக்கணக்கான ரூபாய் லஞ்சம் கொடுத்தது அம்பலமாகி நிர்வாகத்தின் மூன்று பேருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

மேல்மருவத்தூர் மக்கள் சமூகத்திலும் உள்ளூர் அரசியலிலும் தேர்தல்களிலும் ஜனநாயக இடதுசாரி இயக்கங்களின் செல்வாக்கு எந்த அளவுக்கு உள்ளது, உள்ளூர் மக்கள் பிரச்னைகளுக்கு திராவிட கட்சிகளும் சரி இடதுசாரி இயக்கங்களும் சரி எந்த அளவுக்கு குரல் எழுப்ப முடிகிறது, கடந்த 30, 35 வருடங்களில் உள்ளூர் மக்களுக்காக நடத்தப்பட்ட போராட்ட இயக்கங்கள் என்னென்ன, என்னென்ன வடிவங்களில் நடத்தப்பட்டன என்ற வரலாற்றை பின்னோக்கி பார்த்தால் மட்டுமே மேல்மருவத்தூர் என்ற தமிழ்நாட்டின் பகுதியில் உள்ளூர் அரசியல் இயக்கங்களின் பங்கு வளர்ந்துள்ளதா தேய்ந்து உள்ளதா என்பதை புரிந்துகொள்ள முடியும். தேய்ந்து இருந்தால் அதற்கான காரணம் வெட்ட வெளிச்சம்தான். இந்த லட்சணத்தில் பெண் உரிமை கோவில் நுழைவு என்று ஒரே கூச்சலாக உள்ளது. என்ன கோவில்? என்ன நுழைவு? ஜனநாயக இடதுசாரி இயக்கங்களின்பால் திரள வேண்டிய ஆண்களையும்

பெண் சமூகத்தையும் ஒரு சேர பங்காரு அடிகளார் ஹைஜாக் செய்யவில்லையா? இதில் பெண் உரிமை எங்கே வந்தது?

... ...

பார்ப்பனீய மடங்களுக்குள் பெண்களுக்கு அனுமதி மறுப்பதும் இடைசாதி பினாமி மடங்களிலும் பீடங்களிலும் பெண்களுக்கு அனுமதி அளிப்பதும் இரண்டுமே ஜனநாயக விரோத சக்திகளுக்கு உவப்பானவைதான். ஒன்றில் மறுப்பதை இன்னொன்றில் balance செய்வது, இதில் நமக்கென்ன உள்ளது உவப்பு அடைய? இரண்டையும் தாண்டிய பங்காருவின் ஜுனியர் ஜக்கியின் வழிபாட்டில் ஜீன்ஸ், டிரம்ஸ், ட்ரம்பெட், கும்பல் கும்பலாக வெளிநாட்டு ஸ்டைல் டான்ஸ், வண்ண விளக்குகள் என்று வேறு ஒரு வடிவத்தில் உள்ளதே, மேல்மருவத்தூரை விடவும் அங்கே பெண்ணுரிமை ஜாஸ்தி என்று மார்க் போடலாமா? 

உண்மையில் ஜக்கி, நித்யானந்தா, பிரேமானந்தா எல்லோருக்கும் பங்காருதான் வழிகாட்டி. எல்லோரும் அவரை தொடர்ந்து வந்தவர்கள். கர்நாடகாவில் இருந்து ஜக்கி இங்கே யாரை முன்னுதாரணமாக கொண்டு வந்தான்? பல நூறு ஏக்கர் அரசு வனங்களை அவன் வளைத்துப்போட்டு டெல்லியின் அரசியலை நடத்துகிறான் எனில் பங்காருதான் முன்னோடி. பெண்கள், சொத்து என்று கொட்டம் அடித்து இப்போது நாட்டை விட்டு ஓட அனுமதிக்கப்பட்ட நித்யானந்தாவுக்கும் ஜக்கிக்கும் பங்காருவுக்கும் அரசு நிர்வாகத்தின் பரிபூரண ஆசீர்வாதம் உண்டு. 

வளர்ச்சியாக வார வழிபாட்டு மன்றம் என்ற ஒரு அமைப்பு. நூற்றுக்கணக்கான மக்கள் திரளை பார்க்க முடிகிறது. இது பார்ப்பனர் அல்லாத உழைக்கும் மக்கள் கூட்டம். இந்த கூட்டம் இயல்பாக யாரை நோக்கி வந்திருக்க வேண்டும்? பார்ப்பனீய இந்துத்துவா அமைப்பான ஆர் எஸ் எஸ் காலப்போக்கில் பார்ப்பனர் அல்லாத மக்களை திட்டமிட்டு தன் வட்டத்துக்குள் கொண்டு வந்தது எனில் பங்காரு, ஜக்கி போன்றோரின் வழிபாட்டு அல்லது அபிமானிகள் அமைப்புகளும் அதே வேலையைத்தான் செய்கின்றன. சுருக்கமாக இந்த அமைப்புக்கள் ஒன்றுக்கொன்று complementary ஆனவை. அதாவது எப்படி ஆனாலும் உழைக்கும் மக்கள் ஆண் பெண் வேறுபாடு இன்றி இடதுசாரி ஜனநாயக அமைப்புகளின் பின்னால் திரண்டு விட கூடாது என்பதில் கவனமாக உள்ளன. உழைக்கும் மக்களின் எதிரிகளான அரசு அமைப்புக்கும் அரசு எந்திரத்துக்கும் அதிகார வர்க்கத்துக்கும் இப்படியான ஆன்மீக முகமுடி பேர்வழிகளும் அமைப்புகளும் தேவைப்படுகிறார்கள், இந்த அமைப்புகள் சிதைந்து விடாமல் கவனமாக இருப்பார்கள். வனநிலத்தை ஜக்கி ஆக்கிரமிக்கவில்லை என்று அரசு தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வாக்குமூலம் தந்ததை மறந்து தள்ளிவிட்டு போக முடியாது.

வள்ளலார், வைகுண்டசாமி வரிசையில் திருடர்களை சேர்க்க முயற்சி செய்ய வேண்டுமா? அந்த வேலையை பார்ப்பனீய கும்பல் முயற்சி செய்து பார்க்கும், நம் வேலை அது அல்ல.

20.10.2023