சனி, ஆகஸ்ட் 01, 2026

வளர்ச்சியின் பேரால் முன்மொழியப்படும் அழிவு


இந்தியாவில் சுற்றுலா என்பது சுற்றுப்புற சூழலையும் காடு மலைகளையும் சீரழித்து வருமானம் பார்க்கும் ஒரு தொழில் அன்றி வேறில்லை.


காடு, மலை, ஆறுகள், கடல் என எதுவும் இந்த வணிகத்தில் இருந்து தப்பாது.

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை புரிய தனித்த உடல் தகுதியும் மன உறுதியும் வேண்டும் என்பார்கள். சரி. அவர்களிடம் சுற்று சூழல் குறித்த விழிப்புணர்வு வேண்டும் என்பதில் அரசு நிர்வாகங்கள் உறுதியாக உள்ளனவா? இல்லை என்று சொல்லலாம். 

எவரெஸ்ட் சிகரத்தின் வழியில் கொட்டி கிடக்கும் பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பைக்கழிவுகளின் புகைப்படங்கள் இதை உறுதி செய்கின்றன. மலையை நாசம் செய்து விட்டு சிகரத்தில் கொடி கட்டி போஸ் கொடுத்து முகநூலில் பதிவு போடுவது கேவலம் இல்லையா? மலைச்சிகரம் யாரையும் வா வா என்று அழைத்ததா என்ன?
...

நதிகளை பெண், தெய்வம் என்று சொல்லிக்கொண்டு மத நம்பிக்கையின் பெயரால் மிகப்பெரிய பாலியல் பலாத்காரம் செய்யும் தேசம் இது. கங்கையை போல் மிக மிக மோசமான சாக்கடையை உலகில் வேறெங்கும் காணமுடியாது. பிறகென்ன புனிதம் வாழுகிறது? 

சடங்குகளின் பெயரால் நதிகளில் நீராடி பல நூறு டன் கணக்கில் அழுக்கு துணிகளை அள்ளுவதில் இருப்பது பக்தியா சீரழிவா?
...

நண்பர்களுடன் ஹரித்வார் சென்றிருந்தேன். கங்கோதிரியில் புறப்பட்டு கங்கை முதலில் பாயும் தீரம் ஹரித்வார்தான். சிவன் தன் தலையில் இருந்து கங்கையை விடுவிக்கும் பிறப்பிடம்தான் கங்கோத்ரி. 257 கிமீ பயணித்து கங்கை ஹரித்வார் வந்து சேர்கிறாள். 

பத்ரிநாத், கேதார்நாத் புனித யாத்திரையை ஹரித்வாரில் இருந்தே தொடங்குகிறார்கள்.

காசி என்ற கங்கை சாக்கடை எனில் ஹரித்வார் தூய்மையாக இருக்கும். நானும் நண்பர்களும் கங்கையில் குளித்தோம். சொர்க்கம் உறுதி. நீரை குடிக்கவும் செய்தேன். எல்லாம் நல்ல படியாக போய்கொண்டு இருந்த நேரத்தில் என் அருகில் ஒருவர் மிகப்பெரிய மூட்டை ஒன்றை வைத்து அவிழ்த்தார். பார்த்தால் அது முழுக்க சாம்பல். அதாவது அவரது முன்னோர் தொடங்கி மொத்த குடும்ப உறுப்பினர்களின் சாம்பலும் அது என்று புரிந்துகொண்டு அலறி அடித்து கரை ஏறினேன். ஹரித்வாரும் காலி. இதுவே இப்படி எனில் 12 வருடத்துக்கு ஒரு முறை பல லட்சம் பேர் கூடும் கும்பமேளா...?
...

காடுகளில், மலைகளில், கடற்கரைகளில், இமயமலை தொடர் அமைந்த ஊர்களில் சுற்றுலா என்ற பெயரில் இயற்கையை அழித்து கட்டிடங்கள், விடுதிகள் அமைத்து பணம் சம்பாதிப்பதில் அரசு, பெருமுதலாளிகள் கூட்டணி எப்போதும் குறியாக இருக்கிறது. 

குறிப்பாக வட கிழக்கு மாநிலங்களில் சமீப காலங்களில் ஏற்படும் நிலச்சரிவு, நீர்வெடிப்பு cloud burst, நிலநடுக்கம் ஆகியவற்றுக்கான காரணம் பல நூறு வருடங்களாக அங்கே வாழ்ந்து வரும் மக்கள் இல்லை. சுரங்கம் கட்டுவது, மலைகளை உடைத்து கனிம வளங்களை சுரண்ட பெருமுதலாளிகளை அனுமதித்தது போன்ற அரசின் நடவடிக்கைகள் என்பது தொடர்ந்து அம்பலம் ஆகி வருகிறது. 


உத்தர்காண்டின்  ஜோஷிமத் என்ற ஊர் மக்கள் வாழ தகுதி இல்லாத ஊர் என்று 1976இலேயே மிஷ்ரா கமிட்டி அறிக்கை அளித்தது. 2023இல் அங்கிருந்த 145 குடும்பங்கள், சுற்றுலா பயணிகள் என மக்கள் அனைவரும் வெளியேற்றப் பட்டனர். காரணம் மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்படும் என்ற எச்சரிக்கை விடப்பட்டதுதான். 2022இல் மட்டும் ஜோஷ்மத் - ரிஷிகேஷ் இடையே ஆன 247 கிமீ நீள்கோட்டில் 309 நிலச்சரிவுகள் ஏற்பட்டன.

2023 ஜனவரியில் மக்கள் வெளியேற்றப் பட்டபோது இந்திய விண்வெளி ஆராய்ச்சித்துறை I S R O தனது இணையதளத்தில், ஜோஷிமத் நகரம் 12 நாட்களில் 5.4 செ.மீ நகர்ந்து விட்டது என்று விண்ணில் இருந்து எடுக்கப்பட்ட படத்தை வெளியிட்டு சொன்னது. ஒன்றிய அரசு ஒரே நாளில் அந்த படத்தை நீக்கியது, இனிமேல் ISRO அது போன்ற செய்திகளையோ படங்களையோ வெளியிடக்கூடாது என்று தடை விதித்தது.

காரணம் இதுதான்: இமயமலை அடிவாரத்தில் உள்ள வடகிழக்கு மாநிலங்களில் கனிம வள சுரங்கம், அணைகள், புனல் மின்சாரம், போக்குவரத்து சுரங்கப்பாதை அமைப்பதில் ஒன்றிய, மாநில அரசுகளுக்கு ஆகப்பெரிய ஆர்வம் உள்ளது. காரணம் வேறென்ன? பெருமுதலாளிகளின் கூட்டணிதான் காரணம். இந்த பணிகளில் மலைகள் தோண்டப்படும், வெட்டப்படும், குடையப்படும், கீறப்படும், வெடி வைத்து தகர்க்கபடும். விளைவாக நில நடுக்கம், நில சரிவு, நீர் வெடிப்பு, மலை ஆறுகளை திசை திருப்பி விடுவதால் ஏற்படும் திடீர் வெள்ளம், பேரழிவு, ஊர்கள் அழிவது என அனைத்தும் நடக்கும்.

2010இல் புவியியல் வல்லுனர்கள் அளித்த அறிக்கையில், தபோவன் - விஷ்ணுகாட் கட்டுமான திட்டத்தின் விளைவாக ஒரு நாளைக்கு 60 முதல் 70 மில்லியன் நிலத்தடி நீர் வெளியேற்றப்படுவதாக சொன்னது. அதாவது நிலத்தடி நீரை இப்படி உறிஞ்சி வெளியே தள்ளினால் நிலமும் மலையும் தன்னை தகவமைத்து கொள்ள அசையும், சரியும், நடுங்கும். அதுதான் கொடுமையான சேதங்களை உருவாக்கும். 

2010-20 இடைப்பட்ட காலத்தில் மட்டும் இந்த பகுதிகளில் ஏற்பட்ட இயற்கை சீற்றங்களால் 1000 பேர்களுக்கு மேல் உயிரை இழந்துள்ளார்கள்.
...

2015ஆம் ஆண்டு அந்தமான் சென்று இருந்தேன். ஜாரவா ஆதிவாசிகள் வாசிக்கும் காட்டின் ஊடாக போடப்பட்ட ட்ரங்க் ரோட்டை மூட வேண்டும் என 2002இல் கல்கத்தா உயர்நீதிமன்றம் தீர்ப்பு சொல்லி இருந்தது. ஜார்வா ஆதிவாசிகளின் தனிப்பட்ட பாரம்பரிய உரிமையை , வாழ்க்கையை இந்த போக்குவரத்தும் பிற பகுதி மக்களும் தொந்தரவு செய்வதாகவும் அந்த மக்களை சுற்றுலா என்ற பெயரில் காட்சி பொருள் ஆக மாற்றுவதை ஏற்க முடியாது எனவும் அத்தீர்ப்பு சொன்னது. 

ஆனால் 2013இல் நடந்த மறு விசாரணையில் இந்த தீர்ப்பு செல்லாமல் போய் விட்டது. பாராடங், டிக்லிபூர் ஆகிய ஊர்களுக்கு இந்த பாதை அவசியம் என்று சொல்லி போக்குவரத்தை அனுமதித்தது. சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதாவது அந்த ஊரில் வாழும் மக்கள் தக்க அடையாள அட்டையுடன் பயணம் செய்யலாம். அந்த ஊரில் உள்ள உறவினர்கள், நண்பர்களை காண செல்வோர் அதே போல தக்க அடையாள அட்டையுடன் பயணம் செய்யலாம். போலீஸ் செக் போஸ்ட் இரண்டு முனைகளிலும் உள்ளன, ஆவணங்களை சோதனை செய்கிறார்கள்.  அதாவது இந்தக் காட்டின் ஊடாக பயணம் செய்யும் சுற்றுலா பயணிகள் அந்த ஊர் மக்களின் உறவினர்கள் அல்லது நண்பர்கள் என்று ஆவணங்களில் காட்டப் படுகிறதா?

நிகோபார் தீவுக்கு அங்கே வாழும் உள்ளூர் மக்களைத் தவிர வேறு யாரும் போக முடியாது. 2023 முதல் கேம்பெல் வளைகுடா பகுதிக்கு மட்டும் சுற்றுலா பயணிகளை அரசு அனுமதிக்கிறது. ஆனால் இந்த பாதுகாப்பிலும் மோடி அரசு மண்ணை அள்ளி போட்டு விட்டது. நிகோபார் தீவில் மிக மிகப் பெரிய சர்வதேச துறைமுகத்தையும், நகரத்தையும், அவற்றை பயன்படுத்த தேவையான அடிப்படை கட்டமைப்புக்களையும் கட்டத் திட்டம் போட்டுள்ளார்கள். அனைத்து விதமான சட்ட விரோத நடவடிக்கைகளும் அங்கே மேற்கொள்ளப்படும் என்பது உறுதி. அதானிக்கு சொந்தமான துறைமுகத்தில் தொடர்ந்து டன் கணக்கில் போதைப் பொருட்கள் இறக்குமதி ஆவது உங்கள் நினைவுக்கு வர வேண்டும். அன்றி பல நூற்றாண்டுகள் பாதுகாக்கப்பட்ட கடல்சார் உயிரியல் வளங்கள் அனைத்தும் நாசம் ஆகும். கரையில் உள்ள பல லட்சம் ஹெக்டேர் பரப்பில் பல நூறாண்டுகளாக வளர்ந்துள்ள காடுகளையும் அழிக்க உள்ளார்கள். இதனால் வன உயிரினங்கள் அழிவது மட்டும் இன்றி பின்விளைவாக அத்தீவின் வளங்களை சார்ந்து இன்று வரையிலும் வாழ்க்கை நடத்தும் பழங்குடி மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக அழியும் நிலை ஏற்பட்டுள்ளது. 

ஒட்டுமொத்த அந்தமான்-நிகோபார் தீவின் 2 விழுக்காடு அதாவது 166 சதுர கி.மீ. பரப்பளவு மட்டுமே இந்த வளர்ச்சிப்பணிக்காக கையகப்படுத்தப்படும்; இந்த சர்வதேச துறைமுக திட்டத்துக்காக கையகப்படுத்தப்படவுள்ள 131 சதுர கி.மீ. வனப்பகுதி என்பது தீவின் ஒட்டுமொத்த வனப்பகுதியில்சுமார் 1.82 விழுக்காடு மட்டுமே; இந்த வனப்பகுதியில் இப்போது 18.65 லட்சம் மரங்கள் உள்ளன, அவற்றுள் சுமார் 50 சதுர கி.மீ. வனப்பகுதியில் வளர்ந்துள்ள 7.11 லட்சம் மரங்கள் வெட்டப்படும் என்றும் திட்டம் சொல்கிறது. வேடிக்கை என்னவெனில், இங்கே அழிக்கப்படும் காடுகளுக்கு ஈடாக பல்லாயிரம் கி.மீ. தொலைவில் இருக்கும் ஹரியானாவிலும் மத்திய பிரதேச மாநிலத்திலும் சுமார் 23,320 ஹெக்டேர் பரப்பளவுக்கு புதிதாக ஒரு காட்டை உருவாக்குவோம் என்று மோடி அரசு சொல்கின்றது!
 
இன்றைய நிலையில் நிகோபார் தீவின் 751 சதுர கி.மீ. பரப்பளவானது பழங்குடி மக்கள் வாழ்வதற்காக அரசால் அறிவிக்கப்பட்ட பகுதியாகும்.  அரசால் இப்போது அறிவிக்கப்பட்டுள்ள வளர்ச்சித் திட்டத்துக்கு தேவையான 166.10 சதுர கி.மீ. பரப்பளவு நிலத்துக்கு பழங்குடி மக்கள் வாழும் 84.10 சதுர கி.மீ. பரப்பளவு நிலம் கையகப்படுத்தப்படும். அதாவது 84.10 சதுர கி.மீ. பரப்பளவில் இப்போது வாழும் பழங்குடி மக்கள் தம் வாழிடத்தில் இருந்து வெளியேற்றப்படுவார்கள். ஏற்கனவே 11 சதுரகி.மீ. பரப்பளவு நிலம் அரசின் பயன்பாட்டுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு விட்டது என்றும் இப்போது தேவைப்படும் 73.07 சதுர கி.மீ. பரப்பளவு பழங்குடி மக்களின் வாழிடம் விரைவில் துறைமுகத்தேவைக்கான நிலம் என்று அறிவிக்கப்படும் என்றும் திட்டம் சொல்கிறது. இதற்கான இழப்பீடாக 76.98 சதுர கி.மீ. பரப்பளவு நிலத்தை பழங்குடி மக்களின் வாழிடம் என்று வகை பிரித்து அரசு அறிவிக்கும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

...

அந்தமான் தீவில் வாழும் ஜாரவா ஆதிவாசி மக்கள் அறுபதாயிரம் வருடங்கள்முன் ஆப்பிரிக்காவில் இருந்து கடல் வழியாக அந்தமான் தீவை வந்தடந்தவர்கள் என்று மானுடவியல் விஞ்ஞானம் சொல்கிறது. போர்ட் பிளேயரில் இருக்கிற அரசு மானுடவியல் அருங்காட்சியகத்தில் இருக்கிற ஆவணங்களில் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஜாரவா ஆதிவாசி மக்களுக்கு போதை மருந்து, மது ஆகியவற்றை கொடுத்து, குறிப்பாக அந்த இனப் பெண்களை சீரழித்து, பால்வினை நோய்களை கொடுத்த பெருமை நாகரிகம் அடைந்த நாட்டுவாசிகளையே சேரும்.
...

ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற ஊர்களை சுற்றுலா தலங்கள் என்ற நிலையில் இருந்து மாற்றி வணிக பயன்பாட்டில் இருந்து விலக்க வேண்டும். மலைகளை அதன் போக்கில் விட வேண்டும். உள்ளூர் மக்களுக்கு தேவையான கட்டுமானங்களை தவிர வேறு எதையும் அனுமதிக்க கூடாது.
கோடை காலங்களில் மதுரை வரை அணிவகுத்து நிற்கும் கார்களை பார்க்கும்போது உண்மையில் அருவருப்பாக உள்ளது. எதை நோக்கி எதை அனுபவிக்க இந்த பயணங்கள் மேற்கொள்ள படுகின்றன? வருடம் முழுக்க பணம் சம்பாதித்து அந்த மூன்று நாட்களில் இதர பகுதி மக்கள் செய்யும் சீரழிவு சொல்ல முடியாத ஒன்று. 

இதன் இன்னொரு பக்கம்தான் யானை உள்ளிட்ட வன விலங்குகள் ' ஊருக்குள் ' வருவது. அதாவது விலங்குகளின் வாழிடத்தில் அதாவது காட்டில் மனிதர்கள் கட்டிடங்களை கட்டுவது, யானை போன்ற விலங்குகள் அவற்றை அப்புறப் படுத்துவதை அட்டகாசம், ஊருக்குள் வருவது என்று நம் வசதிக்காக நாம் புதிய பெயர்களை சூட்டிக் கொள்கிறோம்.
...

இயற்கையை அதன் போக்கில் விட வேண்டும். மனிதன் இயற்கையின் பகுதியான ஒரு சிறு துகள்தான் என்பதை உணர வேண்டும். இல்லையேல் இயற்கை தன்னை தகவமைத்து கொள்ளும்போது அதனை நிலச்சரிவு, பூகம்பம், பெருவெள்ளம் என்று விதவிதமான பெயர்களால் பழி சொல்லிக் கொண்டே இருக்கலாம்.

பதிவை எழுதும் இந்த நேரத்தில் சிம்லா, குளு, மாண்டி பகுதியில் நீர் வெடிப்பு ஏற்பட்டு ஐம்பதுக்கும் மேற்பட்டவர்களை காணவில்லை, மூன்று பேர் மரணம் என்று செய்தி வருகிறது.

01.8.2024

கருத்துகள் இல்லை: