அஞ்சுவிரல் பூ
கோல் ஊன்றாமலேயே
குஷியாய் நடக்கிறார் தாத்தா
பேத்தி பிறந்து விட்டாளாம்!
கடிகார முட்கள்
இரண்டு விதமாய்ச் சுழலுகின்றன
குழந்தைகள் வீட்டில் இருக்கும் போது வேகமாகவும்
இல்லாதபோது மெதுவாகவும்
அவர்கள் வெளியூருக்குப் போய்விட்டால்
நின்றே போய்விடுகிறது.
கவிதை எழுதி
கர்வம் பொங்க
பேத்தியிடம் நீட்டினார் தாத்தா
அவள் அலட்சியமாகச் சொன்னாள்:
"முதல்ல குழந்தையா மாறுங்க தாத்தா"
பேத்தி மாயா, தாத்தா நா.வே. அருள்.
கவிஞனாக இருப்பதல்ல, குழந்தையாக இருப்பதே மேல் என்று தாத்தா உணர்ந்த தருணம் தொடங்கி உதித்தவைதான் இந்தக் கவிதைகள்.
பேத்தி மாயா உடன் 100 நாட்கள் தங்கி இருந்த காலத்தில் அவரை அறியாமலேயே அவளுடைய விளையாட்டுத்தோழனாக அவர் மாறி இருக்கிறார் அல்லது மாற முயற்சி செய்து இருக்கிறார்.
"நான் ஒரு கவிஞனா என்று எனக்குத் தெரியாது, ஆனால் ஒரு கவிஞனாய் இருப்பதற்கு தகுதி அவன் குழந்தைக்கு எழுதுபவனாக இருக்கிறானா என்பதுதான்" என்று அருள் வாக்குமூலம் கொடுக்கிறார். அது அருள் வாக்கு.
அதைத்தான் மாயா வெகு இலகுவாக சொல்லிவிட்டு விளையாட போய்விட்டாள்.
பேத்தி மாயா காலச்சக்கரத்தை கணினியில் சுழற்றுகிறாள்.
கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் விரல் நுனியில் வைத்திருக்கிறாள்.
நாளை பிறக்கும் உலகையும் இன்றே அறிந்து வைத்திருக்கிறாள்.
இருக்கும் உலகத்தை தன் அறிவால் மாற்றுவேன் என்கிறாள் தன் தாத்தாவிடம்.
எப்படி என்று கேட்டால் தான் வரைந்த ஓவியங்களை விரித்துக் காட்டுகிறாள். அங்கே நிலவு செவ்வகமாக இருக்கிறது, நேர்கோடு வளைந்து செல்கிறது,
மாயாவின் உலகில் சட்டங்கள் இல்லை, எல்லைகளும் இல்லை.
அங்கே நீல நிறத்தில் சூரியன் உதிக்கிறான், பச்சை நிறத்தில் வானம் தெரிகிறது, சிவப்பு நிறத்தில் இலைகள் துளிர்க்கிறது, மஞ்சள் நிறத்தில் நதி நீர் கொப்பளித்து ஓடுகிறது, ரோஜா நிறத்தில் புறாக்கள் பறக்கின்றன, நீலப்போர்வையென பனி படர்ந்த மலைகள் உயரமாய் ஒய்யாரமாய் நிற்கின்றன.
தாத்தாவுடன் சேர்ந்து நாமும் உணர்ந்து கொள்கிறோம், பெரியவர்கள் உலகத்து போலிக் கலைகளை விட மழலையின் ஒற்றைக்கோடு உன்னதமானது என்று.
வண்ணங்களால் தன் எண்ணங்களை வரைந்து காட்டியவள் பேத்தி எனில் பேத்தியுடன் ஆன உலகில் தான் உணர்ந்து உய்த்தவற்றை கவிதைகளாய் வடித்து அஞ்சு விரல் பூ என்கிறார் அருள்.
வசந்த காலத்தில்
பூங்காக்களில் தெருக்களில்
பூத்துக் குலுங்கும் பூக்கள் அவ்வளவு அழகு ஏதோ ஒன்று குறைவதாய் இருந்தது முழுசாய் உள்ளம் கவர முடியவில்லை!
மாயா உள்ளங்கையைத் திறந்த போது எதேச்சையாகப் பார்த்தேன்
அத்துணை அம்சமாய் இருந்தது
"அஞ்சு விரல் பூ"
என்கிறார் அருள்.
அரசியல் கவிதைகளிலும் அழகின் பரிமாணங்களை அடுக்கடுக்காக வைக்கும் வித்தை தெரிந்த தோழர் அருள். தன் பேத்திகளுடன் தான் உணர்ந்தவற்றை எழுத முனைந்தவருக்கு சொல்லியா தர வேண்டும்?! விதவிதமான வண்ணங்களுடன், வடிவங்களுடன் பூங்கா நெடுகிலும் கொட்டிக் கிடக்கும் மலர்களின் இதழ்களாய் பக்கம் பக்கமாக விரிந்து மணந்து கிடக்கிறது அஞ்சு விரல் பூ என்ற குழந்தை உலகக் கவிதைகள்.
பாதம் படாமல் விலகிச் செல்லவும் முடியவில்லை, உள்ளங்கையால் அள்ளி முகர்ந்து பார்க்காமல் தள்ளி நிற்கவும் முடியவில்லை.
...
கடந்த ஆகஸ்ட் 15 அன்று சென்னை கவிக்கோ மன்றத்தில் குழந்தைகள் ஓவியம் வரையும் இனிய நிகழ்வுடன் தொடங்கியது அஞ்சுவிரல் பூ நூல் வெளியீட்டு விழா. இருபது குழந்தைகள் தமது ஓவியங்களை வரைந்து அரங்கத்தை வண்ணமயம் ஆக்கினார்கள்.
நூலில் இடம்பெற்ற ஓவியங்களை வரைந்த குழந்தைகள் ஜனஸ்ரீ, பிரசன்னஸ்ரீ, மாயா பாரதி, ஹன்சிகா
மரியாதைக்குரிய இந்திரன், கதை சொல்லி கல்யாண், சந்தியா நடராஜன், த நா சிறார் எழுத்தாளர்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் கா உதயசங்கர்,
ஓவியர் கார்த்திகேயன், ஓவியர் சரவணன், மு. முருகேஷ், கவிஞர் கோ. வசந்தகுமாரன், விஷ்ணுபுரம் சரவணன், பேராசிரியர் சுலோச்சனா, க. நாகராஜன், அ. குமரேசன், அகிலன், சித்து ஜெயராமன், பாலு சத்யா, கி. ரமேஷ் ஆகிய அறிஞர்
பெருமக்களுடன் மரியாதைக்குரிய ஹேமாவதி, அருள் பாரதி உள்ளிட்ட குடும்பத்தினரும் பங்கு பெற்ற, குழந்தைகளின் குடும்பத்தினரும் கலந்து கொண்ட ஒரு இனிய குடும்ப விழாவாகவே அரங்கம் இன்பத்தாலும் மகிழ்ச்சியாலும் நிரம்பி வழிந்தது.
நிகழ்வினை மு. இக்பால் அகமது, கவின்மலர், தமிழ்ச்செல்வி ஆகியோர் ஒருங்கிணைத்து சிறப்பாக நடத்தினர்.
நம் குழந்தைகளுக்கான கவிதைகள் என்றில்லாமல் பெரியவர்களும் வாசித்து இன்புறத்தக்கன என்பதில் ஐயமில்லை.
அஞ்சுவிரல் பூ,
நா.வே. அருள்,
Books for children
பாரதி புத்தகாலயம் வெளியீடு.
தொலைபேசி 9444567935, 9003276252
- மு. இக்பால் அகமது
24.8.2026

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக