குயிலன்
கலாமங்கையோ
கலாமங்கையோ
கோதை உன் மேனி ஒளியா?
குளிர் நீரின் மீன்கள் விழியா?
பூவில் அமர்ந்த வாணி
ஆடல் தெரிந்த ராணி...
நீ
கலாமங்கையோ..?
பாடல் மாயமணி என்ற படத்தில் இடம்பெற்றது, 1963, அதாவது 58 வருடங்களுக்கு முன்!
பி. பி. ஸ்ரீனிவாஸ் அவர்கள் பாடிய மிக அற்புதமான பாடல்களில் இதுவும் ஒன்று. பாடலை எழுதியவர் குயிலன். இசை? லக்ஸ்மிகாந்த் பியாரேலால் இரட்டையர்.
பாடலைக்கேட்டு பல நாட்கள் ஆயிற்று, கேட்க விரும்பினேன். கூடவே இந்த வித்தியாசமான பாடல் பற்றி தெரிந்து கொள்ளவும் விரும்பினேன். அது பல திசைகளிலும் இழுத்துக்கொண்டு சென்றது!
1963இல் இந்தியில் பரஸ்மணி என்ற படம் வெளியானது. மஹிபால் என்பவர் ஹீரோ. கீதாஞ்சலி என்பவர் நாயகி. அவர் உண்மையான பெயர் மணி. படத்தின் தலைப்பில் மணி இருந்ததால் படத்தின் தயாரிப்பாளர்களான லக்ஸ்மிகாந்த் பியாரேலால் ஆகியோர் அவருக்கு கீதாஞ்சலி என்று பெயர் வைத்தார்கள். அவர் ஆந்திர மாநிலத்தில் காக்கினாடவில் பிறந்தவர், 1947இல். பிறரிடம் உதவியாளர்களாக இருந்த லக்ஸ்மிகாந்த் பியாரேலால், இந்தப் படத்திற்கு தனியாக இசை அமைத்து அறிமுகம் ஆகின்றனர். இண்டீவர் எழுதிய பாடல் ஒன்றை முகமத் ரபி பாடினார். ரோஷன் தும் ஹி சே துனியா... என்று தொடங்கும் பாடல்.
தமிழில் இப்படி சொல்லலாம்:
உலகம் ஒளிமயமானது, உன்னால்தான்
உலகின் ஒட்டுமொத்த மகிழ்ச்சியும் நீயே
பூந்தோட்டத்தில் பிறந்தவள் நீ
ரோஜாத்தோட்டத்தின் ராணியும் நீ...
கவனமாக இரு கண்ணே
படம் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டது. மாயமணி ஆனது. பாடல்கள் மெட்டு மாறவில்லை. குயிலன் பாடல்களை எழுதினார். மேலே சொன்ன இண்டீவரின் பாட்டுக்கு தமிழில் பதில் சொன்னவர்தான் கவிஞர் குயிலன். கலா மங்கையோ... என்று எழுதினார். சரணம் இப்படி போகின்றது:
தேனுக்கு உன் தீஞ்சொல் இனிமை
தெம்மாங்குக்கின்பப்பாடல்
குமுதத்தின் இதழ் உன் இதழோ
அன்பே கலைக்குமாரி
கண்ணம்பு ஒன்றினாலே
மண்ணுலகை வெல்ல நின்றாய்
நீ கலா மங்கையோ...
கலை ஞான ஜோதியாக
மனதில் நிறைந்ததெதுவோ
அதையே என்னோடு நீயும்
பாடிப்பதம் பணிந்தாய்
கலையில் ஒன்றாக மாறி
கண்முன்னே தோன்றி நின்றாய்
நீ கலா மங்கையோ..
பாடலின் தொடக்கத்தில் பி பி எஸ் 20 வினாடிகள் பேசுகின்றார்.
... ....
குருமூர்த்தி பிள்ளை, வெயில் உவந்தம்மாள் ஆகியோருடைய மகன் இராமலிங்கம். 14.9.1922 அன்று இராமநாதபுரம் மாவட்டம் பூசேரி கிராமத்தில் பிறந்தார். 6ஆம் வகுப்புக்கு மேல் படிக்க வசதி இன்றி பர்மாவுக்கு பிழைக்க சென்றுள்ளார். அரசியல் அறிந்துள்ளார். மீண்டும் இந்தியா திரும்பியபோது காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். பின்னர் பொதுவுடைமை இயக்கவாதி ஆகி கட்சியில் இணைந்துள்ளார். கட்சிக்காக 1948இல் தென்றல் என்னும் இதழைத் தொடங்கி நடத்தி இருக்கின்றார். "மஞ்சள் பெட்டியில் மண்ணை போடுங்கள்" என்று தலையங்கம் எழுத, பிரச்சினை ஆனது. போலீஸ் அவரைக் கைது செய்ய தேடியது, தலைமறைவு ஆனார். பிடிப்பட்டபின் மூன்று மாதங்கள் விசாரணை கைதியாக சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் அவருடன் இருந்த தோழர்கள் கே. பாலதண்டாயுதம், எம். கல்யாண சுந்தரம், ஐ. மாயாண்டி பாரதி ஆகியோர். அவருக்காக வாதிட்ட வழக்கறிஞர் தோழர் கிருஷ்ணமூர்த்தி, பிற்காலத்தில் சென்னை மேயர் ஆக இருந்தார்.
1961இல் குயிலன் பதிப்பகம் தொடங்கினார். கவிஞர், கட்டுரையாளர், மொழிபெயர்ப்பாளர். ஆங்கிலம், மலையாள ம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, சம்ஸ்கிருதம் ஆகிய மொழிகளில் திறன் பெற்றவர் என பன்முகத்திறன் படைத்தவர். ஹிந்தியில் எழுதப்பட்ட ஒரு நூலை விவேக சூடாமணி என்று தமிழில் கவிதை நடையில் மொழி பெயர்த்தார். முகவை ராஜமாணிக்கம், தமிழ்ஒளி ஆகியோர் அவரது நண்பர்கள்.
17 திரைப்படங்களில் பங்களித்துள்ளார், 52 பாடல்கள் எழுதியுள்ளார். உரைநடை, புதினம், கவிதை, நாடகம், சிறுகதை, மொழிபெயர்ப்பு என பல தளங்களில் 116 நூல்கள் எழுதினார் என்பதை எண்ணி வியப்புறுகின்றேன். இவர் கவிதைகளை தொகுத்து "கவிஞர் குயிலன் திரை இசைப்பாடல்கள்" என்று மணிவாசகர் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. திருப்பூர் அகிலா விஜயகுமார், புதுவை அபுபக்கர் இருவரும் தொகுது அளித்துள்ளனர்.
8.13.2002 அன்று மறைந்தார். புகழின் வெளிச்சம் படாத மிகப்பல பொதுவுடைமை இயக்கவாதிகள், காங்கிரஸ் ஆதரவாளர்கள் குயிலன் போல் திரையுலகில் இயங்கியுள்ளார்கள். நாடறிந்த புகழ்பெற்ற பாடகர் கண்டசாலா அவர்கள், விடுதலைப்போராட்டத்தில் ஈடுபட்டு 18 மாதங்கள் சிறையில் இருந்தார் என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டியுள்ளது. IPTA வை தாண்டியும் மிகப்பல கலைஞர்கள் தேசிய இயக்கத்தில், விடுதலைப் போராட்ட களத்தில் இயங்கியதை நாம் தெரிந்துகொள்ள வேண்டியுள்ளது.
புகைப்படத்தில் குயிலன்.
20.7.21

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக