முதல் மரியாதை யாருக்கு?
- இன்குலாப்
"தமிழகத்தில் மிகச்சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் இருக்கிறார்கள். ஆனால் சிறந்த திரைப்படங்கள் எதுவும் வருவதில்லை" என்று ஒரு சமயம் மிருணாள் குறைப்பட்டு கொண்டார் என்று எங்கோ படித்த நினைவு.
தமிழ்த் திரைப்படங்கள் தொடக்கத்தில் இருந்தே கனவுகளாகத்தான் இருந்து வந்தன. முன்பெல்லாம் பெரும்பாலும் கருப்பு வெள்ளை கனவுகள். இப்பொழுது கலர் கனவுகள்.
கனவுகள் வாழ்க்கையின் பிரதிபலிப்புகள்தாம். கண்ணாடிப் பிரதிபலிப்புகள் அல்ல. சிதைந்து போன தண்ணீர் பிரதிபலிப்புகள். அத்துடன் அவை நிறைவேறாத விருப்பங்களின் போலியான நிறைவேற்றமும் ஆகும். ...
... மனிதன் படைத்த மிக மிகப் பழமையான கற்பனைகள் நமது புராணங்கள் ஆகும். புராணங்கள் இன்னொரு வகையில் கனவின் பணிகளை செய்து வந்தன. ... மனிதன் படைத்த மாபெரும் கற்பனைகளான புராணங்களை விழித்துக் கொண்டே காணும் கனவுகள் எனலாம்.
... நமது தமிழ்த் திரைப்படங்கள் கனவின் பணியை, புராணங்களின் பணியைச் செய்கின்றன. அதாவது வாழ்க்கையைச் சிதைத்துப் பிரதிபலிக்கின்றன. பொய்மைகளைத் தீர்வுகளாகப் புலப்படுத்துகின்றன. ... இத் திரைப்படங்கள் தமிழ் மக்கள் மீது ஏற்படுத்தும் பாதிப்பு மேலோட்டம் ஆனது அல்ல. ஆழமானது, உளவியல் ரீதியானது.
... ... தமிழ்ப் பண்பாட்டின் மேன்மை குறித்துக் கவலைப்பட்டோருக்கு பாரதிராஜாவின் பதினாறு வயதினிலே நம்பிக்கை ஊட்டியது. ஆனால்... அவரது 'முதல் மரியாதை' பார்த்தேன். அந்தப் படம் ஒரு பண்ணையாருடைய முதுமைக் காதலை நியாயப்படுத்துகிறது. அந்தப் பாத்திரத்தில் சிவாஜி கணேசனை நடிக்க வைக்க வேண்டும் என்பதற்காகக் கதையம்சத்தில் பல சமரசங்கள் செய்யப்பட்டுள்ளன. கதையின் பெயரே அவருக்குச் செலுத்தப்பட்ட மரியாதைதான். சிவாஜி கணேசனைப் போன்ற பிரபல்யமான நடிகர்களை நடிக்க வைக்க வேண்டும் என்று கருதும் பொழுதே கதையின் முற்போக்கான அம்சங்கள் விடை பெற்றுக் கொள்கின்றன. அவர் ஒரு சிறந்த நடிகர் என்பது உண்மைதான். ஆனாலும் இருக்கின்ற நிலைமையின் (status quo) காவலர். அதனால் அவர் போன்ற நடிகர்கள் இருக்கின்ற நிலைமைகளின் மீது கேள்வியோ ஐயமோ வந்து விடாதபடி பார்த்துக்கொள்கிறார்கள்.
பண்ணையின் (சிவாஜியின்) மனைவி (வடிவுக்கரசி) ஒரு குடும்பப் பெண்ணைப் போல அடக்க ஒடுக்கமாக ஏன் நடந்து கொள்ளவில்லை? ஓரு சமயம் அந்த மனைவி தனது மகளிடம் சொல்கிறாள்: " ஒரு நாள் கூட அவர் தன்னிடம் படுத்துக் கொண்டதில்லை."
இந்த வசனத்தைத் திறவுகோலாக கொண்டு அக்கதையை ஆராய்ந்தால் அவர் மனைவி எந்த வகையிலும் குற்றம் அற்றவள் ஆவாள் என்பது தெளிவாகும். வயதில் ஒருவனை விரும்பினாள். அவன் ஏமாற்றினான். அதைத் தந்தையிடமும் கணவனிடமும் அவள் மறைக்கவில்லை. இவற்றையெல்லாம் தெரிந்து கொண்ட பின்னர்தான் அவளை அவள் சொத்துக்களுடன் அந்த பெண்ணை மணந்து கொண்டார். இருந்தும் ஒரு நாள் கூட அவளுடன் தாம்பத்திய உறவு எதுவும் வைத்திருக்கவில்லை. மாறாக முதுமையை நெருங்கும் வயதில் ஒரு விடலைப் பெண் தன்னைக் காதலிக்கும் அளவுக்கு வித்தியாசமான உறவை வளர்த்துக் கொண்டுள்ளார்.
ஒப்பீட்டு அளவில் அவர் மனைவி அவருக்கு உண்மையாகவே நடந்து கொண்டுள்ளாள். தான் உதாசீனம் செய்யப்பட்டும் அவள் வேறொரு இளைஞனைத் தேடிச் செல்லவில்லை. அந்த மனைவி மீதே நமது பச்சாதாபம் வளர்க்கப்பட்டிருக்க வேண்டும். அந்த மூலக்கதை ஒருவேளை அப்படி இருந்திருக்கலாம். ஆனால் அதற்கு சிவாஜி கணேசன் கதாநாயகன். அதனால் பெண்மைக்கு முதல் மரியாதை போய்விட்டது.
அந்தப் பகுதி மண்ணில் புரண்டு விளையாடியவர் என்று தம்மை பாரதிராஜா அறிமுகம் செய்து கொள்கிறார். அந்தக் கதையில் வரும் எல்லாப் பெண்களும் ரவிக்கை போட்டுக் கொள்கிறார்கள்- கதாநாயகியையும் துணைக் கதாநாயகியையும் தவிர, அவர்கள் ரவிக்கை அணிந்து கொள்வதற்கு அந்த மண்ணில் எந்த நடைமுறையும் தடை செய்யவில்லை. பிறகு ஏன்?
அந்த நடிகைகள் இளமையானவர்கள். அவர்களின் திறந்த தோள்களுக்கும் இடுக்குகளுக்கும் கவர்ச்சி அதிகம். அவை நல்ல விலை போகும். பாரதிராஜா தனது மண்ணைப் பெருமைப்படுத்தும் இலட்சணம் இதுதானா?
தாழ்த்தப்பட்ட இளம் பெண்ணுக்கு அவரின் உறவுப் பையனை முடித்து வைத்தார் என்பதற்காக எத்தனை முறை பண்ணையின் காலில் அவரினும் வயது மூத்த அந்த செருப்பு தைக்கும் தொழிலாளி விழுந்து விழுந்து வணங்குவார்? சாதியை ஒழிக்கும் நடைமுறை இவ்வளவு கொடுமையானதா?
திரைப்படம், இருக்கிற அனைத்துக் கலைச் சாதனங்களிலும் வலிமையானது. எல்லாத் தரப்பு மக்களையும் சென்றடைய கூடியது. அனைவர் மீதும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது. ஆயினும் தமிழகத்து திரையுலகம் உடைமையாளர்களின் கையில் இருக்கிறது. அதனால் அபினி வணிகம் சிறப்பாக நடைபெறுகிறது.
சமூக மாற்றத்துக்காகப் போராடும் கலாச்சார சக்திகள் திரைப்படத் துறையை விட்டு ஒதுங்கி இருப்பதால் பயன் இல்லை. ஆபாசங்களை எதிர்த்துப் போராடும் அதே காலகட்டத்தில் அந்தத் துறையை கைப்பற்றவும் முயல வேண்டும். தமிழகத்தில் ஆபாசத்திற்கு எதிரான போராட்டமும் இல்லை. திரைப்படத்துறை புரட்சிகர சக்திகளின் கைகளிலும் இல்லை. இது துரதிஷ்டம் ஆனது அல்லவா?
('தராசு' இதழில் 'சமுதாயப்பார்வைகள்' என்ற தலைப்பில் இன்குலாப் அவர்கள் எழுதிய தொடரில் வெளியான கட்டுரை இது, இதழின் தேதி தெரியவில்லை. கட்டுரையில் இடம் பெற்ற, இந்தத் திரைப்படத்திற்கு நேரடியாக தொடர்பு இல்லாத சில கருத்துக்களை பதிவின் நீளம் கருதி நான் இங்கே பதிவு செய்யவில்லை).
(இயக்குநர் பாரதிராஜா மறைந்த நாள் 10.6.2026)


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக