தோழர் மறைந்து விட்டார்! எம் தோழர் சு. பால்சாமி அவர்கள் இன்று (6.6.2026) பிற்பகல் மரணம் அடைந்து விட்ட செய்தி வந்துள்ளது.
தன்னலம் அற்ற எம் தோழர் ஆவடி டேங்க் உற்பத்தி தொழிற்சாலையில் (HVF) 70களில் பணியில் சேர்ந்தார். எமர்ஜென்சி காலத்தில் அன்றைய கட்சியின் முக்கியமான தோழர்கள் ஆவடியில் தலைமறைவாக இருந்த காலத்தில் தோழர் பால்சாமி அவர்களுடன் இருந்திருக்கிறார்கள். இடதுசாரிகளின் தலைமையில் ஆன அகில இந்திய பாதுகாப்புத்துறை சம்மேளனம் AIDEF உடன் இணைந்த டேங்க் தொழிற்சாலை தொழிற்சங்கத்தில் மிகப்பல பொறுப்புக்களை வகித்த தோழர் அவர். கடும் அடக்குமுறைகளை சந்தித்த போர்க்குணம் மிக்க வீர வரலாற்றுக்கு சொந்தமான தொழிற்சங்கம் அது.
மூத்த தோழர் வி.பீ. சிந்தன் அவர்கள் உட்பட மிகப்பலரது வழி காட்டுதலில் பல போராட்டங்கள், அடக்குமுறை, போலீஸ் துப்பாக்கி சூடு, நிர்வாக அடக்குமுறை, பழி வாங்குதல், பணி நீக்கம், தற்காலிக பணி நீக்கம், increment வெட்டு, OT மறுப்பு உள்ளிட்ட பல வடிவ அடக்குமுறைகளை சந்தித்த தொழிற்சங்கத்தின் முன்னணி கள போராளியாகவும் நிர்வாகியாகவும் இருந்தவர் தோழர் பால்சாமி.
ஒன்றிய அரசுப் பணியில் பன்னிரெண்டு ஆண்டுகள் பணி இருந்த நிலையில் சுய விருப்ப ஓய்வில் வெளியில் வந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் முழு நேர ஊழியர் ஆனார். அவருக்கான இயங்குதளமானது CITU. அவரது குடும்ப பொருளாதார சூழலை அன்றைக்கு நேரில் அறிந்தவர்கள் மட்டுமே அறிவார்கள், நிரந்தர ஊதியம் பெற்று வந்த ஒன்றிய அரசு ஊழியர் ஆன அவர் எத்தகைய சவால் மிக்கதும் கடினமானதும் ஆன ஒரு முடிவை எடுத்தார் என்பதை. கம்யுனிஸ்டுக்களின் தியாகம் என்பது உயிர்த்தியாகம் மட்டுமே என்பதை சொல்லக் கேட்டு இருக்கிறோம், மற்ற எத்தகைய இழப்பும் தியாகம் ஆகாது என்றும் சொல்லலாம். சொல்வது மிக எளிதுதான்.
அவர் இருக்கின்ற பூம்பொழில் நகர் பகுதியில் மட்டுமின்றி சுற்றுவட்டாரங்களில் மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சியின் நாளேடான தீக்கதிர் விநியோகத்தை காலை நடைப்பயிற்சியில் செய்து முடித்த பெருமைக்கு உரியவர். மட்டுமின்றி சில கிலோமீட்டர் தூரத்தில் இருக்கின்ற ஆவடி காமராஜர் நகர் பகுதியில் தீக்கதிர் பிரதிகளை விநியோகம் செய்ய காலை நேரத்தில் பைக்கில் வந்து செல்வதையும் நான் அனுபவபூர்வமாக பார்த்திருக்கிறேன்.
வட சென்னை மாவட்டம் மட்டுமின்றி திருவள்ளூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு உள்ளிட்ட பல சுற்றுவட்டாரங்களிலும் இருக்கின்ற தொழிற்பேட்டைகளில் மிகப்பல தொழிற்சங்கங்களை முனைந்து நிறுவியவர். அரசு நிர்வாகம், தொழிற்சாலை நிர்வாகம், தொழிலாளர் நலத்துறை ஆகியவற்றுடன் எவ்வாறு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும், எந்தெந்த வழிகளில் எல்லாம் அவர்களை மடக்க முடியும் போன்ற நெளிவு சுழிவுகளை நன்கு அறிவார். இந்த மாவட்டங்களில் மிகப்பல தனியார் தொழிற்சாலைகளில்
பல ஊதிய ஒப்பந்தங்கள் உருவாக காரணமாக இருந்தவர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் பிறந்தவர். அவரது குடும்ப, சமூக பின்னணியை ஒப்பிட்டால் அவர் தனது பொது வாழ்க்கையை தொடங்கிய புள்ளி எத்தனை சிரமம் ஆனது என்பதை புரிந்து கொள்ள முடியும். அவரது முகநூல் பக்கத்தில் சில பதிவுகளை எழுதி இருக்கிறார்.
2000த்தின் தொடக்கத்தில் ஆவடி பூம்பொழில் நகரில் வீடு கட்டிக் கொண்டு இருந்தார். அவரை பார்க்க சென்றபோது கட்டியும் கட்டாமலும் இருந்த வீட்டில்தான் குடி இருந்தார்கள். கட்டப் படாமல் இருந்த ஜன்னலை பிளாஸ்டிக் சீட் போட்டு மூடி இருந்தார். என்னங்க தோழர் இது...? என்று இழுத்தேன். அவருக்கே உரிய பலத்த கடகட சிரிப்புடன் சொன்னார், " இங்கே எடுத்துட்டு போறதுக்கு புத்தகங்களை தவிர வேற ஒன்னும் இல்லை தோழர்!".
அதே பகுதியில் குடியிருப்போர் நலச்சங்கத்தை தொடங்கியதிலும் சங்கத்துக்கான நிலத்தை வாங்கியதிலும் அதை கட்டிடமாக எழுப்பியதிலும் அவரது பங்கு மிகப்பெரியது. அதே சங்கக் கட்டிடத்தில் மிகச்சிறந்த நூலகம் ஒன்று இப்போதும் இயங்கி வருகிறது. சங்கத்தின் சார்பாக கொண்டாடப்படும் பொது நிகழ்ச்சிகளில் நேரடியான அரசியல் அடையாளத்தை தவிர்த்தாலும் மதச்சார்பின்மை, மத நல்லிணக்கம், நாட்டுப்பற்று, சகோதரத்துவம் ஆகிய உயரிய விழுமியங்களை உயர்த்திப் பிடிக்கும் வகையில், அனைவரும் போற்றும் வகையில் நிகழ்ச்சிகளை வடிவமைப்பார். வட சென்னை மாவட்ட குடியிருப்போர் நலச்சங்கங்களின் சம்மேளனத்தை முயன்று உருவாக்கிய மிகப்பெரிய பணியையும் சமீப காலத்தில் வெற்றிகரமாக செய்தார் என்பதை குறிப்பிட்டு சொல்ல வேண்டும்.
"ஆவடி டேங்க் பேக்டரி தொழிற்சங்க வரலாற்றை நீங்கள் எழுத வேண்டும், உங்களால் அதை சிறப்பாக செய்ய முடியும், அதற்கான உதவிகளை நான் செய்கிறேன்" என்று அவரிடம் உரிமையுடன் பல முறை வலியுறுத்தி வந்தேன். எழுதவும் தொடங்கினார், குறிப்புக்களை எழுதினார் என்று அறிகிறேன். நல்ல வாசிப்பாளர். மூலதனம் உள்ளிட்ட கோட்பாட்டு அரசியல் நூல்களையும் சோவியத் இலக்கியங்களையும் தமிழில் வெளிவந்த புனைவுகள், அபுனைவுகளையும் வாசித்துள்ளார். தீக்கதிரில் வெளிவந்த எனது பதிவுகளை வாசித்து விட்டு தொலைபேசியில் உற்சாகமாகத் தொடர்பு கொண்டு மகிழ்ச்சியைத் தெரிவிப்பார்.
தனிப்பட்ட தனது உடல் நலனைப் பேணுவதில் அவர் மிகுந்த கவனமாக இருப்பார். இரவு ஒன்பது மணிக்கு மேல் விழித்து இருக்க மாட்டார், காலை நான்கு மணிக்கு எழுந்து ஒரு மணி நேரம் புத்தக வாசிப்புக்கு செலவிடுவார். அடுத்த ஒரு மணி நேரம் நடைப்பயிற்சிக்கும் உடற்பயிற்சிக்கும் செலவு செய்வார். இடைப்பட்ட நேரத்தை அன்றைய போராட்டங்கள், கூட்டங்கள், சந்திப்புக்களுக்கு தேவையான குறிப்புக்களை எழுதுவது, கோஷங்களை எழுதுவது என்று பயன்படுத்துவார். கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் எனில் கனமான, உணர்ச்சி மேலோங்கும் அவரது முழக்கமும் கோஷமும் கூடியிருக்கும் தோழர்களை முறுக்கேற்றும் வகையில் பொருள்பொதிந்த வகையிலும் கவித்துவமாகவும் இருக்கும். அவர் இருக்கிறார் என்பதே எவ்வளவு சிறிய அல்லது பெரிய கூட்டம் ஆனாலும் மிகப்பெரிய பலத்தை சேர்த்து கூடலின் பரிமாணத்தை அதிகப்படுத்தும். அவரது இந்த வாழ்க்கை முறை அனைவரும் பின் பற்ற வேண்டிய ஒன்று என்பதில் கருத்து வேறுபாடு இருக்க முடியாது.
தனக்குப் பிடித்த கவிதைகளை முகநூலில் தானே வாசித்து பதிவு செய்து வந்தார். நான் எழுதிய ' பற்றி எரியும் மணிப்பூர்...' நூல் வெளியீட்டு நிகழ்ச்சிக்கு (செப்டம்பர் 2023) வந்து மிகச்சிறந்த உரை நிகழ்த்தினார்.
அவரது இணையர் தோழர் பழனி அம்மா மார்க்சிஸ்ட் கட்சி ஊழியர். மகள் அஜிதா வழக்கறிஞர். மகன் அமுதன். அவர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இத்துயரில் இருந்து அவர்கள் எவ்வாறு மீண்டு வருவார்கள்?
சில மாதங்களுக்கு முன்னர்தான் சென்னையில் தோழர் சி. சுந்தரராஜன் அவர்கள் காலமானார்கள். இப்போது தோழர் பால்சாமி.
வட சென்னை மாவட்டம் ஆனாலும் சரி, ஆவடி, அம்பத்தூர் பகுதிகள் ஆனாலும் சரி, அம்பத்தூர் சுற்று வட்டார தொழிற்சாலைகள், அவற்றையும் தாண்டி திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய எல்லை மாவட்டங்கள் ஆனாலும் சரி, அவரது ஒப்பிட முடியாத தன்னலம் அற்ற ஓயாத கடும் உழைப்பானது இப்பகுதிகளின் இடதுசாரி இயக்க வளர்ச்சிக்கும் தொழிற்சங்க இயக்க வளர்ச்சிக்கும் மிக மிக உறுதியாக பெரும் பங்கு ஆற்றியது என்பதை இடதுசாரி இயக்கத்தவரும் இடதுசாரி இயக்கத்துடன் கருத்து வேறுபாடு கொண்டவர்களும் பிற கட்சிகள், தொழிற்சங்க இயக்கத்தை சேர்ந்தவர்களும் கூட தயக்கமின்றி ஒத்துக்கொண்டதை அவரது இறுதிப் பயணத்துக்கு முந்தைய இரங்கல் கூட்டத்தில் நேரடியாக பார்க்க முடிந்தது.
அவரது உடல் மருத்துவ மாணவர்களின் ஆய்வுக்காக தமிழக அரசு பொது மருத்துவமனைக்கு நேற்று வழங்கப்பட்டது. இறந்தும் மற்றவர்க்காக வாழ்கிறார் அவர்.
அவரைப் பற்றி சொல்வதற்கு இன்னும் நிறைய இருக்கிறது. அவரதுபதிவுகளில் இருந்து சிலவற்றை இங்கே பதிவு செய்வேன்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக