அதற்குப் பல நூற்றாண்டுகள் முன்பிருந்தே ஈரான், மெசபடோமியா மக்கள், நிலத்தில் இருந்து வெளிப்படும் புதைபடிவ எண்ணெய்க் கசிவுகளை விளக்கு எரிக்கவும், மருந்துகள் செய்யவும், நீர்க்காப்புப் பொருளாகவும் பயன்படுத்தி வந்துள்ளார்கள். ஈரானில் காஜர் வம்ச ஆட்சியின் (1789-1925) கீழ் வில்லியம் நாக்ஸ் டார்சி (William Knox D'Arcy) என்ற பிரிட்டிஷ் தொழிலதிபர்தான் ஈரானில் முதல் முதலாக நவீன கால பெட்ரோலிய துரப்பணத் தொழிலை தொடங்கியவர்.
பிரிட்டிஷ் கம்பெனிகளின் ஆதிக்கம்
1908இல் ஈரானில் பெட்ரோலிய வளம் கண்டறியப்பட்ட பின் 1909இல் பர்மா ஆயில் கம்பெனியால் ஆங்கிலோ-பெர்சியன் ஆயில் கம்பெனி உருவாக்கப்பட்டது. டார்சி அதன் இயக்குநர் ஆனார். இதன் பின்னர் கச்சா எண்ணெய் வெளியே எடுக்கப்பட்டு விற்பனைக்கு வந்தது. சில காலத்துக்குப் பின் பிரிட்டிஷ் அரசு இந்தக் கம்பெனியின் 51 விழுக்காடு பங்குகளை விலைக்கு வாங்கியது. எனவே இயல்பாகவே இக்கம்பெனி பிரிட்டிஷ் அரசுக்கு சொந்தமாகி விட்டது. 1935இல் ஆங்கிலோ-ஈரான் ஆயில் கம்பெனி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 1954இல் பிரிட்டிஷ் பெட்ரோலியம் கம்பெனி என்று பெயர் மாறியது. நவீன காலத்தில் பிரிட்டிஷ் பெட்ரோலியம் என்று அறியப்படுகின்ற கம்பெனியின் மூல நிறுவனங்களில் அதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. கச்சா எண்ணெயை பூமிக்கு அடியிலிருந்து எடுப்பது, சுத்திகரிப்பது, பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பிற எரிபொருள் வடிவமாக மாற்றுவது, இருப்பு வைப்பது, விற்பனை செய்வது உள்ளிட்ட அனைத்து தொழினுட்ப வசதிகளையும் அடிப்படை கட்டமைப்பையும் இந்த கம்பெனிகள் தான் செய்தன. சரியாக சொன்னால் அரசின் கட்டுப்பாட்டில் இவை எதுவுமே இல்லாமல் ஐரோப்பிய பிரிட்டிஷ் கம்பெனிகளின் கட்டுப்பாட்டில் இருந்தன. அரசுக்கு செலுத்தப்பட வேண்டிய ராயல்டி எனப்படும் உரிமைத்தொகையைக் கூட இந்தக் கம்பெனிகள் செலுத்தவில்லை.
தேசிய சொத்தாக பிரகடனம்
1951இல் தேசிய முன்னணியின் தலைவர் ஆன முகம்மது மொசாதீக் நாட்டின் பிரதமர் ஆனார். ஈரானிய தேசிய விடுதலையும் ஈரானிய பெட்ரோலிய வளமும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்க முடியாதவை, பெட்ரோலிய வளமனைத்தையும் தேசிய சொத்தாக பிரகடனம் செய்வோம் என்று அறிவித்தார். 1952இல் ஈரானிய நாடாளுமன்றம் ஆன மஜ்லிஸ் ஈரானிய பெட்ரோலிய வளமனைத்தையும் தேசிய சொத்தாக அறிவிக்க ஒப்புதல் அளித்தது. பிரிட்டிஷ் பெட்ரோலியம் கம்பெனியை நேஷனல் ஈரானியன் ஆயில் கம்பெனி என்று பெயர் மாற்றம் செய்து கம்பெனியை தேசிய மயம் ஆக்கினார் மொசாதீக், அதாவது மக்கள் சொத்து என்று அறிவித்தார். இங்கே இருந்துதான் மத்திய கிழக்கின் முதல் பெரும் தலைவலி உருவாகிறது. அதாவது வலிமை மிக்க பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்துக்கு எதிரான ஒரு நடவடிக்கையை மொசாதீக் மிகத்துணிச்சலுடன் எடுத்தார். பிரிட்டிஷ் அரசு ஈரானுக்கு எதிரான பொருளாதார தடைகளை விதித்தது.
இதன் பின்னர் அமெரிக்க அரசின் சி.ஐ.ஏ. உளவு அமைப்பும் பிரிட்டிஷ் அரசின் எம்.ஐ.6உம் இணைந்து மொசாதீக்கை ஒழித்துக்கட்டத் திட்டம் தீட்டின. ஈரானின் அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள், ஊடகங்கள், உளவாளிகள் என்று அனைவரும் விலைக்கு வாங்கப்பட்டனர். மொசாதீக்குக்கு எதிரான பிரச்சாரம் வலுவாக செய்யப்பட்டது. 1953இல் மன்னர் ஷா மொசாதீக்கை பதவியில் இருந்து நீக்கி வீட்டுச்சிறையில் அடைத்தார். 1967இல் மொசாதீக் மரணம் அடைந்தார். இதன் பின்னர் அமெரிக்காவின் பொம்மை அரசாக ஈரான் அரசாட்சி இருந்தது என்பதை சொல்ல வேண்டியது இல்லை. ஆனால் 1979இல் ஈரான் மக்கள் எழுச்சியின் காரணமாக மன்னன் ஷா நாட்டை விட்டு ஓடி அமெரிக்காவில் தஞ்சம் புகுந்தான்.
இதனைத் தொடர்ந்து எல்லா அரபு நாடுகளும் தமது எண்ணெய் வளத்தை தேசிய சொத்தாக பிரகடனம் செய்தன. அமெரிக்க ஐரோப்பிய ஏகாதிபத்தியங்கள் அரபு நாடுகளின் எண்ணெய் வளத்தின் மீது கண்ணாக இருக்க அன்றைய சோவியத் யூனியன் மட்டுமே அரபு நாடுகளுக்குத் துணையாக நின்றது. ஒரு பேரல் கச்சா எண்ணெய் 30 டாலர்கள் என்ற விலையை அரபு நாடுகள் கூடிப் பேசி நிர்ணயம் செய்தார்கள். ஓ.பி.இ.சி. என்று சொல்லக்கூடிய எண்ணை பெட்ரோலியம் ஏற்றுமதி நாடுகளின் கவுன்சில் உருவானது. கச்சா எண்ணெய் விலையை நிர்ணயம் செய்யும் அதிகாரத்தை இந்த கவுன்சில் தனது கையில் வைத்துக் கொண்டது. ஆக இதன் பின்னர்தான் பாலைவனப் பிரதேசமாய் கிடந்த, நவீன காலத் தொழில் முன்னேற்றமோ எந்திரத்தொழில் வளமோ இல்லாமல் இருந்த ஒட்டுமொத்த அரபு பிராந்தியத்தின் அல்லது மேற்கு ஆசிய சமூகத்தின் முகம் பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் வேறு வடிவில் உருவாகத் தொடங்கியது. இதனை வெறும் பெட்ரோலியத் தொழில் நாட்டுடைமை ஆக்கப்பட்ட ஒரு நிகழ்வாக மட்டுமே சுருக்கிப்பார்க்க முடியாது. அமெரிக்க ஐரோப்பிய ஏகாதிபத்தியங்களின் பொருளாதார மேலாண்மை, காலனி ஆதிக்க அரசியல், மூன்றாம் உலக நாடுகளின் உழைக்கும் சமூகத்தின் மீது ஏவப்பட்ட உழைப்புச் சுரண்டல், அந்த நாடுகளின் இயற்கை வளங்களை கொள்ளை அடித்தல், சந்தைப்படுத்துதல் ஆகிய போக்குகளுக்கு எதிராக மேற்காசிய அரபு நாடுகள் விடுத்த சவாலாக, எதிர் அரசியலாக பார்ப்பதுதான் சரியாக இருக்கும்.
ஏகாதிபத்தியங்களின் தந்திரங்கள்
இதன் பின்னர் தான் ஏகாதிபத்தியங்கள் அரபு நாடுகளுக்குள் பிரிவினையை உருவாக்க எல்லா தந்திரங்களையும் செய்தார்கள். மிக முக்கியமாக அரபு நாடுகள் பல நூற்றாண்டுகளாக ஒரே மதமாயினும் ஷியா, சுன்னி என இரண்டாகப் பிரிந்து கிடந்ததை, அமெரிக்க ஏகாதிபத்தியம் தனது சுயநல நோக்கங்களுக்காக பயன்படுத்திக் கொள்வது இன்று வரை நடந்து கொண்டிருக்கிறது. சரியாகச் சொன்னால் உலகில் 80 சதவீத இஸ்லாமியர்கள் சுன்னி பிரிவையும், 12 முதல் 14 சதவீதத்தினர் ஷியா பிரிவினரையும் சேர்ந்தவர்கள். சவுதி அரேபியா, அரபு அமீரகம், குவைத், பஹ்ரெய்ன், ஈராக், துருக்கி, எகிப்து உள்ளிட்ட நாடுகள் சுன்னி பிரிவையும் ஈரான் ஷியா பிரிவையும் பின்பற்றும் நாடுகளாக உள்ளன. மதப் பிரிவினை அடிப்படையில் ஆன இந்த முரண்பாடுகள் பல்வேறு காலகட்டங்களில் அரசியல் முரண்பாடுகளாகவும் இந்த நாடுகளுக்குள் வளர்ந்தது. குறிப்பாக 1979 ஆம் ஆண்டு ஈரானில் அரசு அதிகாரத்தில் ஷியா பிரிவினர் அமர்ந்த பின்பு ஒட்டுமொத்த அரபுப் பிராந்தியமும் இந்தப் பிரிவினைக்குள் சிக்கத் தொடங்கியது.
நவீன கால பெட்ரோலிய அரசியல்
அரபுப் பிராந்தியத்தின் எண்ணெய் வளத்தைக் கபளீகரம் செய்வது, கைப்பற்றிய எண்ணெயை துர்க்மேனிஸ்தான் தொடங்கி மேற்கு ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் வழியாக இந்தியப்பெருங்கடலுக்கு கொண்டு வருவது, ஸ்டாக் செய்வது, அதனை விற்பது என அமெரிக்கா திட்டமிட்டு இருந்தது. இதற்காகவே ஆப்கானிஸ்தான் உள்ளே நுழைவதற்கான ஒரு சந்தர்ப்பத்தை அமெரிக்கா எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த சூழலில்தான் அல்கொய்தா அமைப்பின் பின்லேடன் 2001 செப்டம்பர் 11ஆம் தேதி அமெரிக்காவின் மீது தாக்குதலை நடத்தினான். இந்த தாக்குதல் நடத்தப்படப் போவது அமெரிக்காவுக்கு நன்கு தெரியும், ஆனால் தெரிந்தே அதை அனுமதித்தது என்ற வாதம் இன்றளவும் முற்றுப்பெறவில்லை. ஆனால் 2001 செப்டம்பர் 11 தாக்குதலை ஒரு காரணமாக வைத்து, தான் ஏற்கனவே திட்டமிட்டபடி அல்கொய்தா அமைப்பை முற்றாக ஒழிப்பதாக சொல்லி ஆப்கானிஸ்தான் நாட்டுக்குள் அமெரிக்கா நுழைந்தது. மட்டுமின்றி சதாம் உசேன் பேரழிவு ஆயுதங்களை வைத்திருக்கிறார் உலகத்துக்கு ஆபத்து என்று சொல்லி ஈராக்குக்குள் நுழைந்து இராக்கை அழித்து சதாமையும் கொன்றது. அதன் மூலம் தனது சார்பு அரசை ஒன்றை நிறுவி ஈராக்கின் எண்ணெயை எடுக்கத் தொடங்கியது. ஆக அமெரிக்காவின் நோக்கம் நிறைவேறியது. ஆனால் ஆப்கானிஸ்தானில் நுழைந்த அமெரிக்கா தான் எதிர்பார்த்ததற்கு நேர் எதிரான போர்க்களத்தை சந்திக்க வேண்டி இருந்தது, பெரும் சேதத்தை விலை கொடுத்து அங்கிருந்து வெளியேறியது.
அமெரிக்காவும் இஸ்ரேலும் அரபுப் பிராந்தியத்தின் எண்ணெய் வளத்தை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் ஒரே ஒரு உச்சநோக்கத்துக்காக அப்பகுதி இஸ்லாமிய நாடுகளுக்குள் தொடர்ந்து முரண்பாட்டை வளர்த்தும் கூர்மைப்படுத்தியும் வந்தன என்பதை கடந்த நூறு வருட வரலாறு சொல்கிறது. ஈரான்-ஈராக் மோதல், எகிப்து-சிரியா மோதல், சிரியா-லெபனான் மோதல், லெபனானில் கிறிஸ்துவர் முஸ்லிம் இடையே கலவரம், இஸ்ரேல்-பாலஸ்தீன போர், குவைத்-ஈராக் மோதல், இதர அரபு நாடுகளுக்கு இடையே தொடரும் பதற்றம் அல்லது போர் ஆகியவற்றின் வேராக இருப்பது அமெரிக்காவின் பிரித்தாளும் தந்திரமே.
இன்றைக்கு ஈரானைத் தவிர அரபு பிராந்தியத்தின் அனைத்து இஸ்லாமிய நாடுகளுமே அமெரிக்க சார்பு நாடுகளாகவும் இஸ்ரேலுடன் மோதலைக் கடைபிடிக்காமல், அதனை நோக்கி கேள்வி எழுப்பாமல் மௌனமாகக் கடந்து போகும் நாடுகள் ஆக இருக்கின்றன. மட்டுமின்றி இந்த நாடுகள் அனைத்துமே தம் நாடுகளுக்குள் அமெரிக்காவின் ராணுவ, விமான தளங்களையும் தமது கடற்பிரதேசத்தில் அமெரிக்காவின் கடற்படையையும் நிறுவுவதற்கு அனுமதி கொடுத்துள்ளன.
இந்த ஒட்டுமொத்த மேற்காசிய அரபுப் பிராந்திய நாடுகளும் ஒன்றிணைந்து இஸ்ரேலை எதிர்கொண்டு இருந்திருந்தால் பாலஸ்தீனமும் காசாவும் லெபனானும் இப்போது நாம் பார்க்கின்ற பூமியின் மிகப்பெரிய பேரழிவில் இருந்து பிழைத்து இருக்க முடியும். பாலஸ்தீன மக்கள் இஸ்லாமியர்களாக இருந்தாலும் தம்மைச் சுற்றியுள்ள பிற இஸ்லாமிய நாடுகளால் கைவிடப்பட்டவர்களாக இருக்கிறார்கள். ஈரான் மட்டுமே அவர்களுக்கு ஆதரவான நிலையை எடுத்துள்ளது.
ஜியோனிசமும் இஸ்ரேலும்
தியோடர் ஹெர்ஸ் என்பவர் கண்டுபிடித்த ஜியோனிச கொள்கையின் அடிப்படையில் யூதர்களுக்கு என ஒரு தனி நாடாக 1948 ஆம் ஆண்டு இஸ்ரேல் உருவாக்கப்பட்டது. இதனால் நேரடியாக பாதிக்கப்பட்ட பாலஸ்தீன மக்கள் ஜோர்டான், சிரியா, லெபனான், எகிப்து ஆகிய நாடுகளுக்குள் தஞ்சம் புகுந்தார்கள். 1948 தொடங்கி 1956, 1967, 1973, 1982 என்று தொடர்ந்து எகிப்து, சிரியா, ஜோர்டான், கோலன் குன்றுகள், பாலஸ்தீனத்தின் காசா, மேற்கு கரை என்று அரபுப் பிராந்தியத்தில் அமெரிக்காவின் வேட்டை நாயாக இஸ்ரேல் இன்றளவும் கொலை பாதகத்தை நடத்தி வருகிறது.
அமெரிக்காவின் தந்திரம்
இரண்டு உலக யுத்தங்களிலும் பல கோடி மக்கள் செத்து ஒழிந்தாலும் உண்மையில் உலக யுத்தத்தின் போர்க்களமாக ஐரோப்பாவும் (சோவியத்) ரஷ்யாவும் கிழக்கே ஜப்பான் போன்ற நாடுகளும்தான் இருந்தன, பல லட்சம் மக்களைப் பலி கொடுத்தன என்பதும் அமெரிக்கா தனது மண்ணில் பெரிய சேதங்கள் எதையும் சந்திக்கவில்லை என்பதும் அப்பட்டமான உண்மை. ஆனால் அதன் பின்னர் அமெரிக்காவினுடைய தலையீட்டின் காரணமாக டபிள்யு டி ஓ, ஐ எம் எஃப், உலக வங்கி போன்ற சர்வதேச நிதி நிறுவனங்கள் அமைக்கப்பட்டு போர் இல்லாத சூழலிலும் மூன்றாம் உலக நாடுகளையும் ஆப்பிரிக்கா போன்ற வளமை குன்றிய வறுமை மிகுந்த நாடுகளிலும் நுழைந்து பொருளாதார ஆக்கிரமிப்பு செய்து அவற்றின் செல்வங்களை அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் குவிப்பதற்கான அனைத்து வேலைகளும் நடந்தன, நடந்து கொண்டிருக்கின்றன.
இப்போதும் கூட மேற்காசிய பிராந்தியத்தில் ஈரான் மீதான தாக்குதலை இஸ்ரேலை வைத்து அமெரிக்கா நடத்திக் கொண்டிருக்கிறதே தவிர அதன் நேரடி பாதிப்பு அமெரிக்க மண்ணுக்கும் அமெரிக்க மக்களுக்கும் இல்லை என்பதையும் செத்து மடிந்து கொண்டிருப்பவர்கள் ஈரான், இஸ்ரேல் உள்ளிட்ட மேற்காசிய நாடுகளின் மக்கள் மட்டுமே என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.
அணு ஆயுத அரசியல்
இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்த பின்னர் அணு ஆயுதம் வைத்திருக்கக் கூடிய ஐந்து நாடுகளாக சோவியத் ரஷ்யா, அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன், சீனா ஆகிய நாடுகள் அறியப்பட்டன. அதன் பின்னர் இந்தியா, வடகொரியா, பாகிஸ்தான் உள்ளிட்ட சில நாடுகளும் அணுசக்தி வளர்ச்சி பெற்ற நாடுகளாக அல்லது அணு ஆயுதங்கள் வைத்திருக்கக்கூடிய நாடுகளாக வளர்ந்தன. ஆசியாவில் ஈரானிடமும் அத்தகைய ஒரு அணு ஆயுதம் இருப்பதாக அமெரிக்கா நம்புகிறது. அமெரிக்காவின் வேட்டை நாயான இஸ்ரேலும் நம்புகிறது.
2015இல் அன்றைய அமெரிக்க குடியரசுத் தலைவராக இருந்த பாரக் ஒபாமா ஈரானுடன் ஒரு அணுசக்தி ஒப்பந்தத்தை செய்து கொண்டார். அதன் அடிப்படை நோக்கம் என்னவென்றால் ‘அணுசக்தி வல்லமை இல்லாத ஈரான் என்பதுதான் மேற்காசிய பிரதேசத்திற்கு உகந்தது’ என்பதே. அணு ஆயுத வல்லமை இருக்கிறதோ இல்லையோ, ஈரானிடம் நெடுந்தொலைவு சென்று தாக்கக்கூடிய ஏவுகணைகள், ராடார் போன்ற தொலைத்தொடர்பு, உளவு சாதனங்கள் இருப்பதை இஸ்ரேல் முற்றாக விரும்பவில்லை. எனவே ஒபாமா- ஈரான் ஒப்பந்தத்தை இஸ்ரேல் எதிர்த்தது.
சமீப காலமாக நடைபெற்று வந்த அமெரிக்க ஈரான் பேச்சுவார்த்தைகளில் ஒரு முக்கியமான பேசுபொருளாக ஈரானின் ஏவுகணை திட்டத்தையும் அரசு சாராத ஆயுதக்குழுக்களுக்கான (ஹிஸ்புல்லா, ஹமாஸ், ஹௌத்தி போன்ற குழுக்கள்) ஆதரவையும் இணைக்க சொல்லி தொடர்ந்து வற்புறுத்தியது. இதன் பொருள் மிகத் துல்லியமானது: ஈரானை ஆயுதம் ஏதும் இல்லாத ஒரு தூய்மையான அஹிம்சாவாதியாக ஆக்கி விடுவது. மேலும் ஈரானின் இப்போதைய தலைமையை போர் மூலம் அப்புறப்படுத்திவிட்டு தாம் விரும்புகிற ஒரு ஆட்சியை அல்லது ஒரு தலைவரை ஈரான் நாட்டின் தலைவராக நியமிப்போம் என்றும் அமெரிக்கா பகிரங்கமாகவே சொல்கிறது.
பிற நாடுகளுடன் ஆன ஈரானின் உறவு
2021 ஆம் ஆண்டு சீனாவுக்கும் ஈரானுக்கும் இடையே 25 வருட காலத்திற்கான ஓர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. சுமார் 40,000 கோடி அமெரிக்க டாலர் அளவிலான மூலதனத்தை ஈரானில் இடுவது என்றும் சீனா உறுதி அளித்துள்ளது. குறிப்பாக அடிப்படைக் கட்டமைப்புகள், எரிசக்தி, மின்சாரம் வங்கித்துறை ஆகியவற்றில் பெரும்பான்மையாக முதலீடு செய்யப்படும். பல நூறு கோடி பணமதிப்புள்ள பெல்ட் அண்ட் ரோடு இனிசியேடிவ் அதாவது ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா ஆகிய மூன்று பெரும் கண்டங்களையும் தரை வழியாகவும் கடல் வழியாகவும் இணைக்கின்ற திட்டம் சீனாவிடம் உள்ளது. இந்த முதலீட்டின் முக்கியமான பகுதி இன்றளவில் எண்ணெய், எரிவாயு வாங்குவதில் மட்டும்தான் செலவாகிக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 2025 ஆம் ஆண்டில் மட்டும் ஈரான் ஏற்றுமதி செய்த கச்சா எண்ணெயில் 80% சீனாவுக்கு தான் விற்பனை செய்யப்பட்டது. மட்டுமின்றி சீனா 13.5% தள்ளுபடி விலையிலும் தனது சீன நாணயத்திலும் இந்த கச்சா எண்ணெயை வாங்கிக் கொண்டது.
பிரிக்ஸ் என்று சொல்லப்படுகின்ற கூட்டமைப்பில் பிரேசில், ரஷ்யா, ஈரான், சீனா, தென் ஆப்பிரிக்கா, இந்தியா, இந்தோனேசியா, எகிப்து, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகங்கள் ஆகிய நாடுகள் உறுப்பினராக உள்ளன. மற்றொரு அமைப்பான ஷாங்காய் ஒத்துழைப்புக் கூட்டமைப்பிலும் ஈரான் உறுப்பினராக உள்ளது. அணுசக்தியை ஆக்கப் பணிகளுக்காக ஈரான் உருவாக்கிக் கொள்வதை சீனா ஆதரிக்கிறது. காரணம் என். பி. டி என்று சொல்லக்கூடிய அணு ஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தத்தில் ஈரான் ஒரு உறுப்பினர்.
அமெரிக்காவின் முற்றுப்பெறாத காலனியாதிக்க அரசியல்
அமெரிக்கா ஏற்கனவே நேட்டோ விரிவாக்கம் என்ற பெயரில் ரஷ்யாவின் எல்லை நாடான உக்ரேய்னை தூண்டிவிட்டு பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. கனடாவையும் கிரீன்லாந்தையும் அமெரிக்காவின் பகுதிகள் என்று டிரம்ப் பகிரங்கமாக அறிவிக்கிறார். கிரீன்லாந்து இதற்கு உடன்பட்டு செல்ல வேண்டும் என்று மிரட்டுகிறார். ஜனவரி மாதம் வெனிசுவேலாவுக்குள் அதிரடியாக படைகளை அனுப்பி அந்த நாட்டின் குடியரசுத்தலைவரையும் மனைவியையும் விமானத்தில் கடத்திக் கொண்டு போய் அமெரிக்காவில் சிறை வைத்திருக்கிறார் ட்ரம்ப். அவர்கள் இப்போது உயிருடன் இருக்கிறார்களா என்பது சந்தேகத்திற்கு இடமான ஒன்று. இதன் மூலம் வெனிசுவேலாவில் தனக்கு விருப்பமான ஒரு அரசை நிறுவி அதன் பெட்ரோலியத்தை சுரண்டி எடுப்பதற்கான நோக்கத்தை நிறைவேற்றியுள்ளது. விக்டர் ஹ்யுகொ சாவேஸ் இருக்கும்வரை அமெரிக்காவால் அங்கே வாலாட்ட முடியவில்லை. இந்த ஆக்கிரமிப்பு அரசியலின் விரிவாக்கமாகவே ஈரானின் மீதான தாக்குதலைப் பார்க்க முடியும்.
ஈரானில் ஜனநாயக உரிமைகள் மறுக்கப்படுவதாகவும் அரசுக்கு எதிரான குரல்கள் ஒடுக்கப்படுவதாகவும் இதனை அமெரிக்கா சகித்துக் கொள்ளாது, எனவே மக்கள் விரும்புகின்ற ஒரு அரசை ஈரானில் நிறுவ வேண்டும் என்றும் அமெரிக்கா தொடர்ந்து சொல்லி வருகிறது. இதன் பொருள் மிகத் தெளிவானது. ஈரானின் அரசுக்கு எதிரான ஒரு குழப்பத்தை அல்லது ஒரு கிளர்ச்சியை தமக்கு விருப்பமான உள்ளூர் குழுக்களை கொண்டு நடத்துவது, அதன் மூலம் அதற்கு மக்களின் போராட்டம் என்று பெயரிட்டு பிரச்சாரம் செய்வது என்பதே அமெரிக்காவின் திட்டம்.
இப்போதும் கூட பிப்ரவரி மாத இறுதியில் ஓமன் நாட்டின் மத்தியஸ்தத்தில் அமெரிக்காவும் ஈரானும் பேச்சு வர்த்தை நடத்திக் கொண்டிருந்த சூழலில்தான் யாரும் எதிர்பாராத வகையில் அமெரிக்கா ஈரான் மீது பிப்ரவரி 28ஆம் தேதி தாக்குதல் நடத்தியது. ஈரான் அமெரிக்காவை தாக்க திட்டமிட்டிருந்தது என்ற ஒரே ஒரு காரணத்தை சொன்னார் ட்ரம்ப். இதற்கான ஆதாரத்தை இன்று வரை அவரால் காட்டமுடியவில்லை.
ஈரானின் உச்சபட்சத் தலைவர் அலி கொமெய்னி அவர்களை பிப்ரவரி 28ஆம் தேதி அமெரிக்கா கொன்றது. இதன் மூலம் இரண்டு உடனடியான விளைவுகளை அமெரிக்கா எதிர்பார்த்தது: ஒன்று, நாட்டின் தலைவரை இழந்ததால் அரசு கவிழ்ந்துவிடும்; இரண்டாவதாக, ஒரு உள்நாட்டுக்குழப்பம் அல்லது கிளர்ச்சி ஏற்படும். ஆனால் அமெரிக்காவுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக இரண்டுமே நடக்கவில்லை. மாறாக ஈரான் மக்கள் அரசுக்கு ஆதரவாக தெருக்களில் திரண்டார்கள், அமெரிக்காவுக்கு எதிரான முழக்கங்களுடன் ஆவேசமாக வெளியே வந்தார்கள். மட்டுமின்றி ஈரானை தாண்டியும் பல வெளிநாடுகளில் இன்னும் சொல்லப் போனால் அமெரிக்காவிலேயே அமெரிக்காவின் இந்த கொடூரத்தாக்குதலுக்கும் போருக்கும் எதிரான மக்களின் போராட்டங்கள் எழுந்தன. உலகெங்கும் அமெரிக்காவுக்கு வலுத்த கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன. இதை அமெரிக்கா எதிர்பார்க்கவில்லை. மட்டுமின்றி ஈரானிய அரசுத் தலைமையும் ராணுவக்கட்டமைப்பும் அதன் தலைமையும் முன்னைவிட உறுதியாக கட்டப்பட்டு விட்டது என்பது கடந்த பதினெட்டு நாட்கள் போரில் வெளிப்பட்டு விட்டது. மேலும் மேற்காசியப்பிராந்தியத்தில் மிகப்பெரிய ராணுவ வல்லமையும் உளவுத்திறன் வல்லமையும் கொண்ட தனது நாட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அதை தடுக்கும் வல்லமையும் எதிர்த்தாக்குதலும் பொருந்திய நாடு என்ற பிம்பத்தை இதுவரை உருவாக்கி வைத்திருந்த இஸ்ரேல், ஈரானின் தொடர் தாக்குதலால் உருக்குலைந்து போனது. இந்தக் கட்டுரை எழுதப்பட்டுக் கொண்டிருக்கின்ற நேரத்தில் கூட பெஞ்சமின் நெத்தன்யாஹு உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்ற சர்ச்சை நடந்து கொண்டே இருக்கிறது.
மட்டுமின்றி சுற்றி இருக்கின்ற அரபு நாடுகளில் இருக்கின்ற அமெரிக்க ராணுவ தளங்களையும் விமான தளங்களையும் கடலில் நிறுத்தப்பட்டு இருக்கின்ற அமெரிக்க ராணுவ கப்பல்களையும் ஈரான் வலிமையாகத் தாக்கி பெரிய சேதத்தை ஏற்படுத்தி வருகிறது.
ஈரானிடம் இருக்கக்கூடிய நெடுந்தொலை ஏவுகணைகள், உளவுக் கருவிகள், ராடார் போன்ற தகவல் தொழினுட்பக்கருவிகள் உள்ளிட்ட பல போர் சாதனங்கள் சீனாவாலும் ரஷ்யாவாலும் கொடுக்கப்பட்டவை என்பது வெளிப்படையான உண்மை. இப்போது நடந்து கொண்டிருக்கின்ற போரில் எதிரிகளின் இலக்குகள், எதிரிகளின் போர் விமானங்கள், ஏவுகணைகள் ஆகியவற்றின் நடப்புநேர நகர்வுகளை துல்லியமாக கணித்து வரும் தகவல்கள் யாவும் சீனா, ரஷ்யா நாடுகளில் இருந்தே பெறப்படுகின்றன என்பதும் வெளிப்படையான பேச்சாக இருக்கிறது.
ஈரானின் தாக்குதலை சமாளிக்க முடியாத அரபு நாடுகள் தமக்கு உதவியாக வருமாறும் வலிமை வாய்ந்த ஆயுதங்களை வழங்குமாறும் அமெரிக்காவை கேட்டுக் கொண்ட போது, இஸ்ரேலினுடைய பாதுகாப்பு முக்கியமானது என்று அமெரிக்கா மறுத்து விட்டதால் இந்த அரபு நாடுகள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளன. அமெரிக்காவுக்கு ஆதரவாகவும் அதனுடைய சொல்லைக் கேட்டு ஆடியதற்காகவும் ஆன பலனை இந்த நாடுகள் இப்போது அனுபவிக்கின்றன.
ஹோர்மஸ் நீரிணைப்பாதை
ஈரான் ஒழிக்கப்படுமானால் அது ஒரே ஒரு முடிவுக்குத்தான் இட்டுச்செல்லும்: அமெரிக்க ஒற்றைத்துருவ வல்லாண்மை அரசியல் தலை தூக்கி அமெரிக்க ஆதரவுடன் ஓர் ஈரான் அரசு நிறுவப்படும். இதன் மூலம் மேற்கு ஆசியா மட்டுமின்றி கிழக்கு ஆசியாவிலும் சீனாவின், ரஷ்யாவின் செல்வாக்குக்கு சவால் விடுவதும் உலகின் கச்சா எண்ணெய் போக்குவரத்துக்கான ஹோர்மஸ் நீரிணைப்பாதையை தனது முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் அமெரிக்காவும் இஸ்ரேலும் கொண்டு வருவதும் நடக்கும். முக்கியமாக உலகின் 20 சதவீத கச்சா எண்ணெய் வணிகத்தை தமது கட்டுப்பாட்டில் கொண்டு வருப்பார்கள். அதன் பொருள் சர்வதேசப் பொருளாதாரத்தின் அச்சை இயக்கி வழிநடத்துபவர்களாக அமெரிக்காவும் இஸ்ரேலும் இருப்பார்கள்.
ஹோர்மஸ் நீரிணைப்பாதையை ஈரான் இப்போது மூடி வைத்துள்ளது. இதன் வழியாகத்தான் உலகத்தின் 20 சதவீத பெட்ரோலியம் எண்ணெய் வர்த்தகம் அதாவது ஒரு நாளைக்கு இரண்டு கோடி கச்சா எண்ணெய் பீப்பாய் வர்த்தகப் போக்குவரத்து நடக்கிறது. இதில் பாதி அதாவது ஒரு கோடி பீப்பாய் சீனாவுக்கு மட்டுமே செல்கிறது. 2025ல் மட்டும் ஈரானிடம் இருந்து 52 கோடி பீப்பாய் கச்சா எண்ணெயை சீனா வாங்கி உள்ளது. சவுதி அரேபியாவும் அதே வருடம் இதைவிட அதிகமான எரிபொருளை சீனாவுக்கு கொடுத்துள்ளது. ஆக இன்று எழுந்துள்ள வளைகுடா போரானது இந்த எண்ணெய் வர்த்தகத்தை நேரடியாக பாதிக்கிறது, எனவே சீனாவை நேரடியாக பாதிக்கிறது எனில் இது வெறும் பெட்ரோலிய வர்த்தகம் சார்ந்த பிரச்னை மட்டுமேதானா?
ஆட்டம் கண்ட உலகப்பொருளாதாரம்
ஹோர்மஸ் நீரிணைப்பாதையை ஈரான் மூடியுள்ள நிலையில் உலக நாடுகளில் கச்சா எண்ணெய் வரத்து குறைந்து ஏற்கனவே கையிருப்பில் உள்ள பெட்ரோல், டீசல், எரிவாயு உட்பட அனைத்தும் கரைந்து வருகின்ற நிலையில் சர்வதேச அளவில் ஒரு பொருளாதார வீழ்ச்சியும் அதிர்ச்சியும் ஏற்பட்டுள்ளது. இதனை எதிர்பார்த்திடாத அமெரிக்கா, “ஹோர்மஸ் நீரிணைப்பாதையை மீட்க போர் தொடுப்போம் வாருங்கள்” என்று மிகப்பல ஐரோப்பிய நாடுகளையும் தென் கொரியாவையும் ஆஸ்திரேலியாவையும் நேட்டோ நாடுகளையும் அழைக்கின்றார், ஆனால் இதுவரை எந்த ஒரு நாடும் அவரது அழைப்புக்கு செவிசாய்க்கவில்லை என்பது ஈரான் விடயத்தில் ட்ரம்ப் எடுத்த முடிவு தவறு என்று சொல்கிறது.
சீன வெளியுறவு அமைச்சர், “அமெரிக்க இஸ்ரேல் தாக்குதல் ஆனது ஈரானின் இறையாண்மைக்கும் பாதுகாப்புக்கும் எதிரான அத்துமீறல், ஐக்கிய நாடுகள் சபையின் அடிப்படை நோக்கங்களுக்கும் சர்வதேச உறவுகளின் அடிப்படை கோட்பாடுகளுக்கும் எதிரானது இந்த போர்” என்று கூறியுள்ளார் (3.2.2026). சீன வெளியுறவு அதிகாரி மாவோ நிங், " வளைகுடாவில் இப்போது ஏவப்பட்டுள்ள ராணுவ நடவடிக்கைகளை உடனே நிறுத்த வேண்டும், அதைத் தடுத்து நிறுத்த வேண்டும். போரில் ஈடுபட்டுள்ள அனைவரும் பேச்சு வர்த்தை நடத்த வேண்டும்” என்று அறிக்கை விடுத்துள்ளார். மட்டுமின்றி சீனாவும் ரஷ்யாவும் ஐக்கிய நாடுகள் சபையின் அவசரக் கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளன. இந்தக் கட்டுரை எழுதப்படும்வரை அப்படியான கூட்டம் நடக்கவில்லை. மார்ச் மாதம் 31ஆம் தேதி அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சீனாவுக்கு செல்ல இருந்தார், அந்தப் பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று தெரிகிறது.
திசை மாறிய இந்திய வெளியுறவுக்கொள்கை
வெனிசுவேலா மீதான அமெரிக்காவின் தாக்குதலுக்குப் பின்னர் ரஷ்யாவிடம் இருந்து பெட்ரோல் வாங்கக் கூடாது என்று அமெரிக்கா இந்தியாவுக்கு உத்தரவு இட்டபின் இந்தியா அவ்வாறே நடந்து கொண்டது. ஆனால் ஹோர்மஸ் நீரிணைப்பாதை மூடப்பட்டது எதிர்பாராத அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்நாட்டில் பெட்ரோலிய பொருட்களின் கையிருப்பிலும் பயன்பாட்டு அளவிலும் சிக்கலை ஏற்படுத்தி உள்நாட்டுப் பொருளாதார உறுதித்தன்மையை கேள்விக்கு உள்ளாக்கியது. கச்சா எண்ணெய் தட்டுப்பாடு, பெட்ரோல், டீசல், எரிவாயு தட்டுப்பாட்டை சமாளிக்க இந்தியா இப்போது திணறும் நிலையில், அமெரிக்கா அதிபர் இரக்கப்பட்டு “30 நாட்களுக்கு மட்டும் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய், எரிவாயு வாங்கிக் கொள்ளுங்கள்” என்று இந்தியாவுக்கு ‘அனுமதி’ கொடுத்திருப்பது மிகப்பெரிய இழிவு, இந்தியாவுக்கு இதுவரை நேராத ஒரு அவமானம் என்று எதிர்க்கட்சிகளும் பொதுமக்களும் மிகக் கடுமையான விமர்சனத்தை வைத்திருக்கிறார்கள். “நாங்கள் எதைச் சொன்னாலும் அதை இந்தியா செவ்வனே கடைப்பிடிக்கிறது” என்று வெள்ளை மாளிகை ஊடக செயலாளர் கரோலின் லெவிட் கேலி செய்துள்ளார்.
அமெரிக்காவின் கோபத்துக்கு ஆளாக நேரிடும் என்பதாலேயே 2019ஆம் ஆண்டு முதல் ஈரானிடமிருந்து பெட்ரோலியம் வாங்குவதை இந்தியா நிறுத்தி விட்டது. தவிர அமெரிக்க அதிபரின் உத்தரவின் பேரில் ரஷ்யாவில் இருந்து பெட்ரோலிய பொருட்களை வாங்குவதை இப்போது இந்திய அரசு நிறுத்திய பின், முன்பு போல தள்ளுபடி விலையில் இந்தியாவுக்கு பெட்ரோலிய பொருட்களை விற்பனை செய்ய முடியாது, நாங்கள் நிர்ணயிக்கும் விலைக்குத்தான் வாங்க வேண்டும் என்று ரஷ்யா நிபந்தனை விதித்துள்ளதும் இந்தியாவுக்கு சர்வதேச அரங்கில் மிகப்பெரிய அவமானத்தைத் தேடி கொடுத்துள்ளது.
மார்ச் நான்காம் நாள் அன்று இந்தியப்பெருங்கடல் பிரதேசத்தில் ஐ.ஆர்.ஐ.எஸ்.டேனா என்ற ஈரானிய கடற்படைக்கப்பலை அமெரிக்காவின் நீர்மூழ்கிக்கப்பல் டார்ப்பிடோ ஏவி தாக்கியதில் 87 ஈரானிய படை வீரர்கள் உயிர் இழந்தார்கள்; கப்பல் மூழ்கி விட்டது. குறிப்பிடப்பட வேண்டியது என்னவெனில் இந்தியா விசாகப்பட்டினம் கடலில் நடத்திய சர்வதேச நட்புறவு அடிப்படையில் ஆன கடற்படைப் பயிற்சியில் ஈரான் உட்பட எழுபதுக்கும் மேற்பட்ட நாடுகள் கலந்து கொண்டன. பிப்ரவரி 26ஆம் நாள் இந்தப் பயிற்சி முடிந்த பின் ஈரான் திரும்பும் வழியில்தான் ஈரான் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. தன் விருந்தினராக வந்து திரும்பிய கப்பலில் இருந்து ஆபத்துக்கால உதவி வேண்டி வந்த வேண்டுகோளை இந்திய அரசு கண்டுகொள்ளவில்லை என்பதும் சம்பவம் நடந்த பின்னரும் தனது நிலைப்பாட்டை இந்திய அரசு வெளிப்படையாகத் தெரிவிக்காமல் மவுனம் காத்ததும் உள்நாட்டில் கடும் விமர்சனத்துக்கு ஆளானது மட்டுமின்றி சர்வதேச அளவிலும் இந்தியாவுக்கு அவப்பெயரைத் தேடித் தந்துள்ளது. ஆனால் இலங்கை அரசு உடனடியாக தனது கடற்படையை அனுப்பி ஆபத்தில் சிக்கி இருந்த ஈரானியர்களைக் காப்பாற்றி உள்ளது. தாக்குதலில் மாண்டவர்களின் உடல்களையும் மீட்டுள்ளது. மட்டுமின்றி மற்றொரு ஈரானிய கப்பலுக்கு திரிகோணமலை துறைமுகத்தில் அடைக்கலம் கொடுத்துள்ளது.
இந்தப்போரின் முதல் நாளிலேயே ஈரானின் உச்சபட்சத் தலைவரை அமெரிக்கா கொன்று விட்டதற்கு எந்த கண்டனத்தையும் தெரிவிக்காத இந்தியா, ஈரான் மீதான கண்டனத் தீர்மானத்தை ஐ.நா.சபை பாதுகாப்பு கவுன்சிலில் 134 நாடுகளுடன் இணைந்து முன்மொழிந்துள்ளது என்பதும் மிகுந்த கண்டனத்துக்கு உள்ளாகி இருக்கிறது.
கூட்டுச்சேரா நாடுகளின் தலைமைத்தகுதி படைத்திருந்த இந்தியாவின் இன்றைய வெளியுறவுக் கொள்கை மிக அப்பட்டமாக அமெரிக்க சார்பான ஒன்று என்று இப்போது அம்பலமாகியுள்ளது. பிப்ரவரி 28 ஈரான் தாக்குதலுக்கு இரண்டு நாள் முன்பாக இஸ்ரேலுக்கு சென்றிருந்த இந்திய பிரதமர், “இஸ்ரேல் தந்தை நாடு, இந்தியா தாய்நாடு” என்று பிரகடனம் செய்தது, இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் அந்த நாடு இந்திய பிரதமருக்கு கழுத்தில் அணிவித்த பதக்கத்தை ஏற்றுக் கொண்டது ஆகியவை இந்தியாவில் மிகப்பெரிய விமர்சனத்தைக் கிளப்பி உள்ளது. நாடாளுமன்றத்தில் இது பெரிய பிரச்சினை ஆகி உள்ளது. வலதுசாரி ஆர்.எஸ்.எஸ். இந்துத்துவா அரசின் கொள்கைகள் தியோடர் ஹெர்சின் ஜியோனிச கொள்கைகளுக்கு நெருக்கமானவை அல்லது அந்த கொள்கைகளின் அச்சு அசலான நகல் என்பது மோடி அரசின் இந்த அணுகுமுறையால் அம்பலமாகி உள்ளது.
எவ்வாறு முதலாவது உலகப்போரும் இரண்டாவது உலகப் பொரும் அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகளில் ஏற்பட்ட சமூக பொருளாதார சிக்கலின் விளைவாக விளைந்தனவோ, போரின் இறுதியில் எவ்வாறு ஐரோப்பிய நாடுகளையும் இன்ன பிற மூன்றாம் உலக நாடுகளையும் அமெரிக்காவும் பிரிட்டனும் பிரான்சும் தமக்கிடையே பங்கு வைத்துக் கொண்டனவோ அதேபோன்ற ஒரு நிலைமைக்கு இப்போது நடக்கின்ற இந்த மேற்காசிய யுத்தம் இட்டுச் செல்லாது என்பது மட்டும் உறுதி. சுமார் நூறு வருடங்களுக்கு முன்பு இருந்த நிலை இப்போது இல்லை. தான் நினைத்தபடி எல்லாம் ஆட முடியும் என்று அமெரிக்கா இப்போது செயல்பட முடியாது. போரின் போக்கை கவனித்தாலும் கூட, அமெரிக்காவின் கணிப்பு அத்தனையும் தவறாகி விட்டன என்பதும் இந்தப்போரில் இருந்து விரைவில் வெளியே வரவே அமெரிக்கா விரும்புகிறது என்பதும் ட்ரம்ப் விடுக்கும் முன்னுக்குப்பின் முரணான அறிக்கைகளால் புரிகின்றது. தனது ஐரோப்பிய கூட்டாளிகளாலும் பிற சகாக்களாலும் கைவிடப்பட்ட நிலையில் அமெரிக்கா தனியே சிக்கிக்கொண்டுள்ளது.
உண்மையில் இப்போது அமெரிக்கா சிக்கிக் கொண்டிருப்பது நிதி மூலதனத்தில் ஏற்பட்டிருக்கின்ற கடுமையான நெருக்கடியில்தான். மூலதனத்தையும் நவீன தொழில்நுட்பத்தையும் மூன்றாம் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதன் மூலமும் முதலீடு செய்வதன் மூலமும் அந்த நாடுகளின் வளங்களை கொள்ளை அடிக்கலாம், அந்த நாட்டு மக்களின் உழைப்பை குறைந்த ஊதியத்தில் சுரண்டலாம், அந்த நாடுகளை கடன் வலையில் சிக்க வைக்கலாம் என்று அமெரிக்க ஏகாதிபத்தியம் திட்டமிடுகிறது. நவீன பொருளாதாரத்தின் அச்சாக பெட்ரோலிய வளம் இருப்பதாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் கருதுவதால் அவர்களின் கவனம் முழுவதும் பெட்ரோலிய வளமிக்க மேற்காசிய நாடுகளின் மீதும், இயற்கையான கனிம வளம் மிக்க ஆப்பிரிக்க நாடுகளின் மீதும் தென் அமெரிக்க நாடுகளின் மீதும் குவிந்து இருக்கிறது. ஆனால் உழைப்பு இன்றி வெறும் மூலதனம், இயற்கை வளம் ஆகியவற்றை மட்டும் வைத்துக்கொண்டு ஒன்றும் செய்ய இயலாது என்பதை இந்த ஆதிக்க சக்திகள் உணர்ந்தே இருக்கின்றன. குறிப்பாக மக்கள் தொகை மிகுந்துள்ள இந்த நாடுகளின் உழைக்கும் மக்களின் உழைப்புச் சக்தியானது மிகப்பெரிய மூலதனமாகும்.
ஒருபுறம் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் வேலையின்மை, குடியிருக்க வீடுகளின்மை, அரசுகள் கைவிடப்பட்டதால் அதிகரிக்கும் மருத்துவ செலவு உள்ளிட்ட பிரச்னைகளால் உழைக்கும் மக்கள் போராடுகிறார்கள். அதே நேரத்தில் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் தொழிலாளர்களுக்கு தரப்பட வேண்டிய ஊதியத்தை விடவும் பல மடங்கு குறைவாக ஆசிய, ஆப்பிரிக்க மக்களுக்கு கொடுக்க முடியும். அதன் பொருட்டு இந்த நாடுகளின் அரசுகளை தொழிலாளர் நலச்சட்டங்களை திருத்துமாறு அல்லது ஒழித்துக்கட்டுமாறு கையை முறுக்குகிறது அமெரிக்கா. உலகெங்கும் நவீன காலனி ஆதிக்கத்தை நிலைநாட்டவும் அதன் தலைவனாக தன்னை நிலை நிறுத்தவும் அமெரிக்கா அல்லது அமெரிக்க நிதி மூலதனம் முயற்சி செய்கிறது.
ஆனால் இந்த முயற்சி தொடர்ந்து தோல்வி அடைந்து வருவதையே உலக அரசியல் போக்கு தொடர்ந்து நிரூபித்து வருகிறது. அமெரிக்காவின் உழைப்பாளி மக்களும் அமெரிக்காவின் சார்பு அல்லது கூட்டாளி நாடுகளில் உள்ள உழைப்பாளி மக்களும், இந்தியா போன்ற வளரும் நாடுகளின் உழைப்பாளி மக்களும் தத்தமது நாடுகளின் அரசுகள் கடைபிடிக்கின்ற தொழிலாளர் விரோத, விவசாயிகள் விரோத, சாமானிய மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிராக தொடர்ந்து போராடி வருவது அதைத்தான் காட்டுகிறது. பன்னாட்டு மூலதனத்தை உள்நாட்டில் குவிப்பதை தவிர்த்து தற்சார்பு நிலையையும் ஏகாதிபத்திய எதிர்ப்பு நிலையையும் எடுத்தால் மட்டுமே இந்தியா போன்ற வளரும் நாடுகள் தாக்குப்பிடித்து நிற்க முடியும் என்பதை கடந்தகால வரலாறு சொல்கிறது.
...
பேசும் புதிய சக்தி ஏப்ரல் 2026 இதழில் வெளிவந்த கட்டுரை. கட்டுரை எழுதப்பட்ட நாள் 17.3.2026.






