வியாழன், டிசம்பர் 25, 2025

நாயக்கர்பட்டி டங்க்ஸ்டென் சுரங்கம்

நாயக்கர்பட்டி டங்க்ஸ்டென் சுரங்கம்: 2003 வாஜ்பாய் அரசின் நிலையும் மோ டி அரசின் அறிக்கையும் த.நா.அரசின் நிலையும்

இன்றைய 25.12.24 தி ஹிந்து ஆங்கில நாழிதழில், ஒன்றிய அரசின் சுரங்க அமைச்சகம் ஒன்றிய நிலத்தியல் துறைக்கு (G S I) சொல்லியுள்ள அறிவுறுத்தல்கள் அரிட்டாப்பட்டி டங்க்ஸ்டென் சுரங்க விவகாரத்தில் மாநில அரசின் நிலைப்பாடு குறித்து பல்வேறு ஐயப்பாடுகளை எழுப்புகின்றன.

ஒன்றிய அரசின் சுரங்க அமைச்சகம் ஒன்றிய நிலத்தியல் துறைக்கு (GSI) சொல்லியுள்ள அறிவுறுத்தல்களில் முக்கியமானது, ஆறு கிராமங்கள் அடங்கிய நாயக்கர்பட்டி டங்க்ஸ்டென் சுரங்க திட்ட வேலைகளை மறு பரிசீலனை செய்ய சொல்லி இருப்பதாகும்.

இவற்றுள் அரிட்டாப்பட்டி கிராமம் அரசால் அறிவிக்கப்பட்ட பல்லுயிர்ப்பெருக்க பகுதி என்பதுடன், தொல்லியல் சின்னங்கள் நிரம்பிய பகுதியும் ஆகும்.

உத்தேசிக்கப்பட்டுள்ள சுரங்கத்தின் பரப்பளவு வரம்புக்குள்  இருந்து அரிட்டாப்பட்டி கிராமத்தை விலக்கி வைக்கும் சாத்தியத்தை கண்டறியுமாறு ஒன்றிய நிலத்தியல் துறைக்கு (GSI) அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.

அதுவரை சுரங்கப்பணி ஒப்பந்ததாரர் ஆன ஹிந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்துக்கு (முன்னாள் அரசுப்பொதுத்துறை நிறுவனம்) சுரங்கப்பணியை தொடங்க கொடுக்கப்படும் ஆணையை நிறுத்தி வைக்குமாறு தமிழக அரசுக்கு ஒன்றிய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. எனில் தமிழக அரசின் பங்குதான் இதில் முக்கியமாக உள்ளதா? இந்தக் கேள்வி வேறு பல தகவல்களுக்கு இட்டு செல்கிறது.

ஒன்றிய அமைச்சகம் தனது அறிக்கையில் சொல்வன இவை:

193.215 ஏக்கர் பரப்பளவில் பல்லுயிர்ப்பெருக்க பகுதி இருப்பதாக ஒன்றிய அரசுக்கு தமிழக அரசு தெரிவித்து இருந்தது. உத்தேசிக்கப்பட்டுள்ள சுரங்கப்பகுதியில் இது பத்து விழுக்காடு ஆகும். ஆனாலும் இந்த சுரங்கப்பகுதியை ஏலம் விடுவதை தமிழக அரசு எதிர்க்கவில்லை.

2024 பிப்ரவரி மாதம் இந்த ஏலம் விடும் நடவடிக்கை தொடங்கியது, நவம்பர் 7 அன்று ஏலம் யாருக்கு கொடுக்கப்பட்டது என்றும் அறிவிக்கப்பட்டது. இந்த இடைப்பட்ட காலம் முழுவதுமே தமிழக (தி மு க) அரசிடம் இருந்து எந்த ஆட்சேபனையும் வரவில்லை, கருத்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. ஏல நடவடிக்கை தொடங்கிய நாளில் இருந்து ஒன்றிய சுரங்க அமைச்சகம் கூட்டிய பல கூட்டங்களில் தமிழக அரசு கலந்து கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

2023க்கு முந்தைய காலத்தில் இதுபோன்ற தாதுப்பொருட்களை ஏலம் விடும் அதிகாரம் மாநில அரசுகளுக்கே இருந்தது என்பதால், GSI டங்க்ஸ்டன் சுரங்கம் குறித்த குறிப்பாணையை (Memorandum) செப்டம்பர் 2021 லேயே தமிழக திமுக அரசுக்கு கையளித்தது. 2023இல் 1957 சுரங்க-தாதுப்பொருள்  சட்டத்தில் ஒன்றிய மோடி அரசு ஒரு திருத்தம் செய்து இது போன்ற சுரங்கங்கள், தனிமங்களை ஏலம் விடும் அனைத்து அதிகாரங்களையும் ஒன்றிய அரசுக்கு மாற்றம் செய்து கொண்டது.

இந்த சட்ட திருத்தத்தின்படி, தமிழ்நாட்டில் நாயக்கர்பட்டி உள்ளிட்ட பல சுரங்கங்களை ஏலம் விடப்போவதை தமிழக அரசுக்கு ஒன்றிய அமைச்சகம் தெரிவித்தது. தமிழக அரசின் நீர் வளத்துறை அமைச்சர் ஒன்றிய அரசுக்கு உடனே எழுதிய கடிதத்தில் சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தத்தை பற்றி கேள்வி எழுப்பினார், மேலும் ஏலம் விடும் உரிமையை மாநில அரசுகளுக்கே கொடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.

2021-23 காலத்தில் ஏலம் விடும் அதிகாரம் மாநில அரசின் கையில் இருந்தபோது அப்படி எந்தவிதமான நடவடிக்கையையும் எடுக்கவில்லை. அதிகாரம் கையில் இருந்த ஒன்பது வருட காலத்தில் தமிழக அரசு எந்த ஒரு சுரங்கத்தையும் ஏலம் விடவில்லை.

ஒன்றிய அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை இதுதான்.

...

கீழ்க்கண்ட நியாயமான சந்தேகங்களை மாநில அரசு தீர்க்க வேண்டும்:

“2024 பிப்ரவரி மாதம் இந்த ஏலம் விடும் நடவடிக்கை தொடங்கியது, நவம்பர் 7 அன்று ஏலம் யாருக்கு கொடுக்கப்பட்டது என்றும் அறிவிக்கப்பட்டது. இந்த இடைப்பட்ட காலம் முழுவதுமே தமிழக (தி மு க) அரசிடம் இருந்து எந்த ஆட்சேபனையும் வரவில்லை, கருத்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. ஏல நடவடிக்கை தொடங்கிய நாளில் இருந்து ஒன்றிய சுரங்க அமைச்சகம் கூட்டிய பல கூட்டங்களில் தமிழக அரசு கலந்து கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.” ஒன்றிய அமைச்சகத்தின் இந்த விளக்கம் உண்மை எனில் மாநில அரசு ஏன் மௌனமாக இருந்தது?

“இந்த சட்ட திருத்தத்தின்படி, தமிழ்நாட்டில் நாயக்கர்பட்டி உள்ளிட்ட பல சுரங்கங்களை ஏலம் விடப்போவதை தமிழக அரசுக்கு ஒன்றிய அமைச்சகம் தெரிவித்தது.” ‘நாயக்கர்பட்டி உள்ளிட்ட பல சுரங்கங்கள்’ எனில் இன்னும் பல சுரங்கங்கள் தமிழகத்தில் தோண்டப்பட உத்தேசிக்கப்பட்டுள்ளதா? உண்மை எனில் மக்கள் மத்தியில் அவற்றை தமிழக அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.

...

ஹிந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் கம்பெனி பற்றி சிறிய விளக்கம்.

ஹிந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் கம்பெனி  உலகின் இரண்டாவது பெரிய துத்தநாக கம்பெனியாக இருந்த ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனம் ஆகும். 1966இல் மக்களின் சொத்தாக தொடங்கப்பட்ட இந்த கம்பெனியை 2003ஆம் ஆண்டு ஒன்றிய பி ஜே பி வாஜ்பாய் அரசுதான் மிட்டல் முதலாளியின் வேதாந்தா கம்பெனிக்கு விற்றது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் கம்பெனி இந்த வேதாந்தா நிறுவனத்தின் ஒரு கிளை நிறுவனம் என்பது வெளிச்சமான உண்மை. (கருணாநிதி அவர்கள் சொன்னதுபோல) வாஜ்பாய் ஏன் நல்லவர் என்பதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.

24.12.2024

கருத்துகள் இல்லை: