சரியாக எனது 10 வயதில் என் அப்பா ஒரு ஃபிலிப்ஸ் பிலெட்டினா ட்ரான்சிஸ்டர் வாங்கினார்; அதன் ப்ரவுன் கலர் தோல் கவசத்தின் வாசம் இப்போதும் நுரையீரலில் பரவியுள்ளது; அப்பாவும் அண்ணனும் இல்லாத போது கவசத்தை கழற்றி வெள்ளியின் பளபளப்போடு மின்னும் அந்த வானொலிப்பெட்டியை மடியில் போட்டு ஆசை தீரப்பார்த்துக்கொண்டே இருப்பேன்; ஒரு வானொலிப்பெட்டியை காதலிபோல் நேசித்ததற்கு ஒரு காரணம் ஒரே காரணம் மட்டுமே இருந்தது – அது இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் தமிழ் ஒலிபரப்பை கடல்கடந்து வந்து என் இதயத்தோடு கரைத்தது.
அந்த வயதில் நான் அதிகாலை ஐந்தரை மணிக்கு எழுந்தது படிப்பதற்கு அல்ல, அய்யய்யா நான் வந்தேன் தேவ ஆட்டுக்குட்டி வந்தேன், தேவ ஆட்டுக்குட்டி வந்தேன்.. என்று என்னை பி.சுசீலா தாலாட்ட வேண்டும்; தொடர்ந்து நாஹூர் அனிபா, சீர்காழி, டி.எம்.எஸ் எனக்காக என் தலைமாட்டில் உட்கார்ந்து பாடுவார்கள். அந்த மயக்கத்தில் இருந்து மீள்வதற்குள் ‘நெஞ்சில் நிறைந்தவை’யாக தியாகராஜ பாகவதர், பி.யு.சின்னப்பா, கிட்டப்பா, தண்டபாணிதேசிகர், எம்.எஸ்.சுப்புலட்சுமி, சி.எஸ்.ஜெயராமன், திருச்சி லோகநாதன், கே.பி.சுந்தராம்பாள், ஏ.எம்.ராஜா, ஜிக்கி, பெரியநாயகி (கனவிலும் நினைவிலும் இணை பிரியாத தெய்வீகக்காதலுக் கிணையேது...),கோமளா, எம்.எல்.வசந்தகுமாரி...என 10 வயசுப்பையனுக்காக ஒரு பெரியவர் கூட்டம் இலங்கையில் இருந்து வந்து வரிசையில் நிற்கும் (அருள்தாரும் தேவ மாதாவே! ஆதியே எங்கள் ஜோதியே!...) அள்ளித்தெளித்த இசைக்கோலம், அடடா! மீளவும் வருமோ அது ஒரு இசைக்காலம்!
பிறந்தநாள்...இன்று பிறந்தநாள்...நாம் பிள்ளைகள் போலே தொல்லைகள் எல்லாம் மறந்த நாள்...என டி.எம்.எஸ்.சின் ‘நான்குசுவர்கள்’ (பாலச்சந்தர்) படத்தின் பாடலின் முதல்வரிகளோடு பிறந்தநாள் வாழ்த்துக்கள்...அம்மா அப்பா அம்மம்மா அப்பப்பா மாமா மாமி சித்தப்பா பெரியப்பா பெரியமாமா...இப்படி மூச்சுவிடாமல் சுற்றங்கள் சூழ...பிறகு வருவதோ பொங்கும் பூம்புனல்...அந்த சிக்னேச்சர் ம்யூசிக்..அடடா! முழுதாக நான் அதைக்கேட்டிருக்கின்றேன், அது பெண்களின் குரலில் ஒலிக்கும் ஒரு கோரஸ் ஒலிக்கோர்வை! மெதுவாக தொடங்கி அப்படியே வேகம் பிடித்து...ஒரு அடர்காட்டின் எல்லையில் தயக்கத்துடன் காலடி எடுத்து வைக்கும் ஒருவனை அப்படியே தனக்குள்ளே இழுத்துப்போட்டுக்கொள்ளும் காடாக அந்த சிக்னேச்சர் ம்யூசிக்!
வானவில், இருவர்குரல், ஒன்றோடொன்று, இந்திப்பாடல்கள் (பாபி அல்ல, ‘பபி’ படத்தில் இருந்து ஷைலேந்திரசிங் பாடியது...மே ஷாயர்...), பொப் இசைப்பாடல்கள், ஈழத்துப்பாடல்கள் (இந்த ஊருக்கு ஒரு நாள் திரும்பி வருவேன், ஆடாதே ஆடாதே சூதாட்டம் ஆடாதே.,கள்ளுக்கடைப்பக்கம் போகாதே .), மரணச்செய்திகள் (அன்னாரின் ஜனாசா....), சரி...இப்படி காலநேரம் பார்க்காமல் வானொலியே கதி என்று கிடந்தால் தூங்கப்போக மாட்டாயா? தொடர்வது ‘இரவின் மடியில்’...அதன் பின்புதான் தூக்கம். மயில்வாகனம் சர்வானந்தா, சில்வஸ்டர் பாலசுப்ரமண்யம், ராஜேஸ்வரி சண்முகம், கே.எஸ்.ராஜா, அப்துல் ஹமீது,jஜோசப் ராஜேந்திரன்...எல்லோரும் என் சொந்தக்காரர்கள்! ஒரேஒருநாள் இக்குரல்களைக் கேட்காவிட்டாலும் வாழ்க்கையை முற்றாக இழந்த்துபோல்தான்! என்னவொரு காலம் அது! மீண்டும் வருமோ?
வானொலிக்குறுக்கெழுத்துப்போட்டி..என் முதல் குறுக்கெழுத்து அனுபவம் பத்திரிக்கைகளில் அல்ல, இலங்கையில் இருந்து கடல் கடந்து ராஜேஸ்வரி சண்முகம் கேள்விகளைக் கேட்க, தொடரும் பாடல் வரிகளை கவனமாக ‘அவதானித்து’ சரியான விடைச்சொல்லை தேர்வு செய்து (மதுரையில் இருக்கும் நான் தயாராய் கட்டம் போட்டு வைத்திருக்கும் தாளில் இடமிருந்து வலம் மேலிருந்து கீழ் என crossword puzzle ஐயா!) விடைகளை முழுமையாகப் பூர்த்தி செய்ய நான் என்றும் தவறியதே இல்லை! ’நீங்கள் அனுப்பவேண்டிய முகவரி...’ எங்கே அனுப்புவது? கையில் காசு இல்லாத சிறுவன் நான்! எனக்கு நானே சந்தோசம் அல்ல, பெருமைப்பட்டுக்கொள்வேன்! ஞாயிறு பிறந்ததா? ‘அம்பிகா ஜூவல்லர்சின் பாட்டுக்குப்பாட்டு’...’தொடர்ந்து 100 வாரங்களாக முதல் இட்த்தில் ‘என்னடி மீனாட்சி...நீ சொன்னது என்னாச்சு?’ தொடர்ந்து இரண்டாவது இடத்தில் ‘மீன் கொடித்தேரில் மன்மதராஜன்...’ நான் இப்போதும் எப்போதும் சொல்வது இதுதான்: என் முதல் தமிழ் ஆசிரியனும் முதல் நண்பனும் இலங்கை வானொலிதான்; இரண்டாவது மூன்றாவது இடங்களில் சிவாஜி கணேசன், டி.எம்.எஸ், சீர்காழி...இவர்கள் இருந்தார்கள்.
.
முகநூல் பதிவு 21.12.2015

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக