அறுபதுகளில் புகழ்பெற்று விளங்கிய இரண்டு தமிழ் கதாநாயகர்களில் ஒருவரது திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து, ரி-ரிகார்டிங் எனப்படும் பின்னணி இசை சேர்ப்பும் முடிந்து தீபாவளிக்கு திரையிடப்பட தயாராக இருந்தது. அந்த நாட்களில் திரைப்பட இசை அமைப்பாளர்களுக்கும் திரைப்படத்தில் பாடியவர்களுக்கும் இசைக்கருவி இசைத்தவர்களுக்கும் ஊதியம் வழங்கப்படுவது என்பது உறுதியான ஒன்றல்ல. படத்தின் தயாரிப்பாளர் மனது வைத்தால் சில நேரங்களில் வழங்கப்படும், பல நேரங்களில் ஏதேனும் கொஞ்சம் வழங்கப்படும், மிகப் பல நேரங்களில் ஒன்றுமே வழங்கப்படாது. அதுதான் அன்றைய எதார்த்த நிலை. இந்த குறிப்பிட்ட திரைப்படத்தில் கோரஸ் பாடிய பின்னணிப்பாடகர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை. தீபாவளி நாள் நெருங்குகிறது. இந்த இசைக்கலைஞர்கள் படத்தின் இசையமைப்பாளர் வீட்டுக்கு நேரடியாக சென்று ஊதியத்தைப் பெற்றுத் தருமாறு வேண்டுகிறார்கள். அந்த இசையமைப்பாளரின் பதில் இதுதான்: “உங்கள் வேதனை புரிகிறது. உங்கள் கோரிக்கை நியாயமானது. ஆனால் நான் உங்கள் கோரிக்கையை படத்தயாரிப்பாளரிடம் எடுத்துச் சென்றால் எனக்கு அடுத்த படத்துக்கு வாய்ப்பு கிடைக்காமல் போய்விடும். புரிந்து கொண்டு செல்லுங்கள், என்னை தர்மசங்கடத்தில் ஆழ்த்த வேண்டாம்.” வேதனையுற்ற அந்த இசைக்கலைஞர்கள் அதே திரைப்படத்துறையில் இயங்கிவந்த ஓர் இசையமைப்பாளரைச் சந்தித்து தாங்கள் ஏமாற்றப்பட்டதைத் தெரிவிக்கிறார்கள். வேதனையும் கோபமும் அடைந்த அந்த இசையமைப்பாளர், குறிப்பிட்ட படத்தின் தயாரிப்பாளரை நேரடியாகச் சந்தித்து, “இந்த இசைக்கலைஞர்களின் குடும்பங்கள் தீபாவளியை கொண்டாட முடியாமல் வேதனையில் ஆழ்ந்தால் அதற்கு நீங்கள்தான் காரணமாவீர்கள்” என்று கடுமையாகவும் உறுதியாகவும் வாதிடுகின்றார். வேறு வழியின்றி படத்தயாரிப்பாளர் இசைக்கலைஞர்களுக்கு ஊதியத்தை வழங்கினார். அந்த இசையமைப்பாளர் தகுந்த நேரத்தில் எடுத்த உறுதியான நடவடிக்கையால் அக்கலைஞர்களின் குடும்பங்களில் அந்தப் பண்டிகை நாளில் அடுப்பு எரிந்தது. அந்த இசையமைப்பாளரின் பெயர் எம்.பி. சீனிவாசன். விரிவாக மானாமதுரை பாலகிருஷ்ணன் சீனிவாசன். சுருக்கமாக எம்.பி.எஸ். அவர் பிறந்த நாள் செப்டம்பர் 19, 1925.
ஏழைப்பங்காளனாக, வாடியபயிரைக் கண்டபோதெல்லாம் தானும் வாடுகின்ற வெள்ளித்திரை நாயகர்கள், வைரமென ஜொலிக்கும் நாயகிகள், லட்சக்கணக்கான செலவில் ரசிகர்களை மயக்கும் வண்ணமயக் கனவுக்காட்சிகள் ஆகியவற்றால் தகதகவென மின்னும் வெள்ளித்திரைக்குப் பின்னால் ஒரு நாளில் 15 மணி நேரத்திற்கும் அதிகமாக உழைக்கின்ற பல ஆயிரம் தொழிலாளர்களின் நிலைமை அப்படித்தான் இருந்தது. ஒரு படம் முடிக்கப்பட்டு திரைக்கு வந்தபின்னாலும் பட முதலாளி நினைத்தால் மட்டுமே உழைத்ததற்கு ஊதியம் கிடைக்கும், அது கிடைக்க பல மாதங்கள் ஆகலாம், பல நேரங்களில் எதுவும் கிடைக்காமலே போகலாம். ஆனால் அந்தத் தொழிலாளி அடுத்த படத்திற்கான வாய்ப்பை எதிர்பார்த்து அலைவானே தவிர வேறு வேலைகளைத் தேடிப் போக மாட்டான். பட முதலாளிகளின் இந்த ஆணவத்துக்கும் உழைப்புச் சுரண்டலுக்கும் முற்றுப்புள்ளி வைத்தவர் அதேதிரைப்படத்துறையைச் சார்ந்த எம்.பி.எஸ் என்பதுதான் திரைப்படத்தொழில் வரலாற்றில் மிக முக்கியமான திருப்பம் ஆகும்.
தென்னிந்தியத் திரைப்படத் தொழிலாளர் சம்மேளனம், சுருக்கமாக ஃபெஃப்சி என்று அழைக்கப்படுகின்ற மாபெரும் தொழிலாளர் கட்டமைப்பை 1967ஆம் ஆண்டு அவர்தான் நிறுவினார். இப்போது இந்த சம்மேளனத்தில் சுமார் 25க்கும் மேற்பட்ட துறைவாரி சங்கங்களும் 30000க்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். மட்டுமின்றி தென்னிந்தியத் திரைப்படத்தொழில் வரலாற்றில் ஒரு தொழிற்சங்கத்தை இந்திய தொழிற்சங்க சட்டம், 1926இன் கீழ் முதல்முதலாக பதிவு செய்தவரும் அவரே. அச்சங்கத்தின் முதல் தலைவரும் அவரே.
மத்திய சென்னை மாவட்ட தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் 2025 அக்டோபர் மாதம் அவரது நூற்றாண்டை வெகுசிறப்பாகக் கொண்டாடியது. அவ்விழாவில் உரையாற்றிய இசையமைப்பாளர் தீனா அவர்கள்தான் மேலே சொல்லப்பட்ட சம்பவத்தை வெளிப்படையாகப் பேசினார். தீனாவின் தந்தை எம்.பி.எஸ்ஸுடன் சமகாலத்தில் பணியாற்றிய இசைக்கலைஞர் என்பது குறிப்பிடத்தக்கது. “எம்.பி. சீனிவாசன் அவர்கள் மட்டும் இல்லை என்று இருந்தால் திரைப்படத்தொழிலாளர்கள் ஆகிய நாங்கள் அனாதையாக இருந்திருப்போம், கைப்பிடித்து மேலே தூக்கி விட யாரும் இல்லாமல் இருந்திருப்போம். இன்றைக்கு இருக்கிற திரைப்படத்தொழிலாளி ஒவ்வொருவருடைய வீட்டிலும் அடுப்பை பற்ற வைக்கும் போது அந்த ஒளியில் தெரிவது எம்.பி.சீனிவாசனின் முகம்தான்” என மனம் உருகப்பேசினார் தீனா.
முதல் தொழிற்சங்கம்
1964-65இல் நடந்த இசையமைப்பாளர் சங்க நிர்வாகிகள் தேர்தலில் எம்.பி.எஸ்., ஜி. கோவிந்தராஜுலு நாயுடு இருவரும் முறையே செயலாளர், தலைவர் பொறுப்புகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின், தென்னிந்திய திரைப்படத்தயாரிப்பாளர் சங்கம், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை ஆகிய அமைப்புக்களுடன் நேரடியாகப் பேசியதன் பயனாக 15.8.1967 முதல் ‘ஸ்பாட் பேமென்ட்’ (spot payment) முறை கறாராக நடைமுறைக்கு வந்தது. ஒரு பாடல் பதிவு முடிந்தபின் பாடகரும் இசையமைப்பாளரும் இசைக்கருவிக்கலைஞர்களும் ஸ்டுடியோவில் இருந்து வெளியே வரும்போது அவர்களுக்கான அன்றைய ஊதியம் உறையில் வைத்து கையில் வழங்கப்பட்டது. ஜெயா டிவியில் ‘என்னோடு பாட்டு பாடுங்கள்’ என்ற பாடல் போட்டி நிகழ்ச்சி ஒளிபரப்பான போது அதில் நடுவராக அமர்ந்திருந்த எஸ்.பி.பாலசுப்ரமணியம் மனம் திறந்து ஒரு உண்மையை சொன்னார்: “நாங்கள், அதாவது திரைப்படத் தொழிலாளர்கள், மறுநாள் காலையில் நமக்கான உணவு உத்தரவாதமாக கிடைக்கும் என்று ஒவ்வொரு நாள் இரவும் நிம்மதியாக தூங்கச் செல்கிறோம் என்றால் அதற்கு காரணம் எம்.பி.சீனிவாசன் மட்டுமே.”
பிறப்பும் வளர்ப்பும்
பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் சென்னை சைதாப்பேட்டையில் நிறுவப்பட்ட அரசு வேளாண்மைக் கல்லூரி பிற்காலத்தில் கோயம்புத்தூருக்கு மாற்றப்பட்டபோது அதன் முதல் இந்திய முதல்வராக இருந்தவர் ராமசாமி சிவன். அதற்கு முன்பு நான்கு முதல்வராக இருந்தவர்களும் ஆங்கிலேயர்கள். ராமசாமி சிவனின் இயற்பெயர் வரதராஜர் சர்மா என்பதாகும். அவரது மனைவி லட்சுமி. இவர்களது மூத்த மகன்தான் பாலகிருஷ்ணன் என்பவர். பாலகிருஷ்ணனின் முதல் மகன் சீனிவாசன். ராமசாமி சிவனின் இரண்டாவது மகன் எம்.ஆர்.வெங்கட்ராமன். மிகத்திறமை வாய்ந்த வழக்கறிஞரான இவர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராகவும் 1964 க்குப் பிறகு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராகவும் இருந்துள்ளார்.
எம்.பி.எஸ் சென்னையில் பிரசிடென்சி கல்லூரியில் பயின்ற போது அனைத்திந்திய மாணவர் சம்மேளனம், மெட்ராஸ் மாணவர் அமைப்பு ஆகிய இயக்கங்களில் தீவிரமாக இயங்கியதுடன் சென்னையில் நடந்த விடுதலைப் போராட்ட இயக்கங்களிலும் தீவிரமாகப் பங்கு பெற்றுள்ளார்.
டெல்லியில் கட்சி வாழ்க்கையும் இப்டா அறிமுகமும்
1951 ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் நாடாளுமன்ற தேர்தலுக்குப்பின் அமைந்த முதல் நாடாளுமன்றத்தில் அன்றைய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 16 இடங்களில் வென்றது. இந்தியாவின் முதல் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் என்று பெருமையை ஏ.கே. கோபாலன் பெற்றார். அவரது தனிச்செயலாளராகப் பணியாற்ற கட்சி உறுப்பினர் ஆன எம்.பி.எஸ்ஸை கட்சி டெல்லிக்கு அனுப்பியது.
இந்த நேரத்தில்தான் கம்யூனிஸ்ட் கட்சியின் அன்றைய செயலாளராக இருந்த பூர்ண சந்திர ஜோசி “தத்துவார்த்த அடிப்படையில் ஒத்த சிந்தனை உடைய கலைக்குழுக்களை ஒன்று படுத்தி ஒரே அமைப்பாக நிறுவ வேண்டிய கால அவசியம் உள்ளது” என்று முதல் முதலில் சிந்தித்தார். இதன் விளைவாக இந்திய மக்கள் நாடகம் என்ற இப்டா 1943 மே 25ஆம் தேதி நிறுவப்பட்டது. இவ்வாறு நிறுவப்பட்ட இந்த அமைப்பில் நாடெங்கிலும் இருந்த பல்வேறு கலாச்சார குழுக்களின் பிரதிநிதிகள் பங்கு எடுத்துக் கொண்டார்கள். 1940களில் மேலும் விரிவடைந்த இந்த அமைப்பின் தாக்கமும் செயல்பாடும் 1950 வரை வீரியமாக இருந்துள்ளது. தமிழகத்தில் திரைப்பட இயக்குனர் கே.சுப்பிரமணியன், எம்.பி.எஸ்., நிமாய் கோஷ், கே.சி.எஸ். அருணாசலம் ஆகியோர் இப்டாவில் பங்கெடுத்து உள்ளார்கள்.
டெல்லியில் கட்சிப் பணியில் இருந்த எம்.பி.எஸ்ஸுக்கு இப்டாவுடனும், பல்வேறு மொழிகள் பேசக்கூடிய எழுத்தாளர்கள், கலைஞர்கள், பரந்துபட்ட கலாச்சாரங்களுடனும் ஆன அறிமுகம் கிடைத்தது. இளம்பிராயத்தில் இருந்தே இசை குறித்த அறிமுகம் பெற்றிருந்த எம்.பி.எஸ்ஸுக்கு இப்டாவின் அறிமுகம் அவரது இசையறிவை, இசை குறித்த புரிதலை வேறொரு புதிய தளத்துக்கு இட்டுச் சென்றது.
எம்.பி.எஸ். கூறுகிறார்: “சுற்றுச் சார்புதான் ஒரு மனிதனை உருவாக்குகிறது என்ற உண்மைக்கு கலைஞன் என்ற முறையில் நான் சரியான எடுத்துக்காட்டு. எனது இளமைப்பிராயத்தில் இருந்து கம்யூனிஸ்ட் இயக்கத்தில் பங்கு கொண்டிருந்த காரணத்தால் அந்த இயக்கத்தில் ஏற்பட்ட அனுபவங்களும் தெளிவும் திறனாய்வும்தான் இன்று என்னை ஒரு கலைஞராக உருவாக்கி உள்ளன. என்னுடைய கலைப்பணிக்கு ஒரு தனித்துவத்தை அளித்திருக்கின்றன என்று கூறிக் கொள்வதில் நான் பெருமை கொள்கின்றேன். கம்யூனிஸ்ட் இயக்கத்தில் எனக்கு சில சிறப்பான வாய்ப்புகள் கிடைத்தன. மட்டுமல்லாமல் இந்தியா எங்கிலும் குறிப்பாக ஆந்திராவிலும் வங்காளத்திலும் மகாராஷ்ட்ரத்திலும் பஞ்சாபிலும் கேரளத்திலும் பணியாற்றி வந்த பல கலைஞர்கள், எழுத்தாளர்களுடன் எனக்கு தொடர்பு கிடைத்தது. அவர்களது கலைப்படைப்புகளில் நான் நேரிடையாக பங்கேற்கும் சந்தர்ப்பங்கள் ஏற்பட்டன.”
கோவை ராமதாஸ், சாத்தூர் பிச்சைக்குட்டி, மணவாளன், ராகி, அவரது சகோதரி கமலாட்சி, சங்கர்ராஜு, பாவலர் வரதராஜன், வில்லிசைக்கலைஞர் எஸ்.எம்.கார்க்கி உள்ளிட்ட பலரும் எம்.பி.எஸ்ஸின் தோழர்களாக இருந்தார்கள். மதுரையில் மணவாளனுடன் இணைந்து ‘புதுமை கலாமண்டலம்’ என்றதொரு கலைக்குழுவை எம்.பி.எஸ் தொடங்கினார். மணவாளனும் அவரும் இணைந்து எழுதி இசை வடிவத்தில் உருவாக்கிய பாடல்தான் பொதுவுடைமை இயக்கங்களின் மேடைகளில் இப்பொழுதும் உணர்ச்சிகரமாகப் பாடப்படுகின்ற ‘விடுதலைப் போரினில் வீழ்ந்த மலரே தோழா தோழா, வீரர் உமக்கே வணக்கம் தோழா தோழா!’ என்ற பாடல் ஆகும்.
தமிழ்சினிமாவில் இடதுசாரிகளின் முயற்சி
டெல்லியில் இருந்து திரும்பிய எம்.பி.எஸ். கர்நாடக இசை, ஹிந்துஸ்தானி, மேற்கத்திய இசை ஆகியவற்றை முழு ஈடுபாட்டுடன் கற்றுத் தேர்ந்தார். தமிழகத்தில் திரைப்பட உலகில் இடதுசாரி பொதுவுடமை கருத்துக்களை கொண்டு செல்ல வேண்டும், ஒரு திருப்புமுனை ஏற்படுத்த வேண்டும் என்று கொள்கை முடிவோடு தமிழகத்தின் கம்யூனிஸ்டுகள் ஒன்றிணைந்து ‘குமரி பிலிம்ஸ்’ என்ற ஒரு திரைப்பட கம்பெனியை தொடங்கி, அதிகபட்சம் தலைக்கு 5,000 ரூபாய் வரை பங்குகளை சேர்க்கிறார்கள். இந்தக் கம்பெனியின் தயாரிப்பில் ஆர்.கே.கண்ணன் கதை வசனம் எழுதி எம்.பி.எஸ் இசையமைத்து நிமாய் கோஷ் ஒளிப்பதிவு செய்து இயக்கிய ‘பாதை தெரியுது பார்’ என்ற படம் 1960 இல் வெளிவருகிறது. படத்தின் பாடல்களை பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், ஜெயகாந்தன், கே.சி.எஸ். அருணாசலம் ஆகியோர் எழுதியிருக்கிறார்கள். படத்தின் விநியோக உரிமையை ஏ.வி. மெய்யப்ப செட்டியார் பெற்று சென்னையின் புறநகர் தியேட்டர் ஒன்றிலும் கோவை நகரத்திலும் ஓரிரண்டு நாட்கள் படத்தை திரையிட்டு அதன்பின் படத்தின் பிரதி, நெகட்டிவ் இரண்டையும் ஒழித்து விட்டார் என்ற குற்றச்சாட்டு இன்றளவும் உள்ளது. படத்தின் பாடல்கள் இப்போது கிடைக்கின்றன. அன்றைய நாட்களில் இலங்கை வானொலியில் தினசரி ஒலித்த ‘சின்ன சின்ன மூக்குத்தியாம் செகப்பு கல்லு மூக்குத்தியாம்’, ‘தென்னங்கீற்று ஊஞ்சலிலே தென்றலில் நீந்திடும் சோலையிலே’ ஆகிய புகழ்பெற்ற பாடல்கள் இந்தப் படத்தில் இடம் பெற்றவையே.
இதன் பிறகு எம்.பி.எஸ்ஸுக்கும் நிமாய் கோஷுக்கும் தமிழில் வாய்ப்புகள் இல்லாமல் போனதற்கு முக்கியமான காரணம், அவர்கள் திரைப்படத் தொழிலாளர்களின் சட்டபூர்வமான உரிமைகளை பெறவும் அவர்களின் மரியாதையை மீட்டெடுக்கவும் தொழிற்சங்கத்தை தொடங்கியதுதான். இதனால் தமிழ் திரைப்பட முதலாளிகள் திட்டமிட்ட வகையில் இருவரையும் புறக்கணித்தார்கள். ஆனால் இருவரும் தமது திரைப்பட வாய்ப்புகள் பற்றியோ தமது குடும்பத்தின் பொருளாதார நிலைமை பற்றியோ கவலைப்படாமல் எந்த நேரத்திலும் திரைப்படத் தொழிலாளர்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் உழைத்திருக்கிறார்கள்.
அதுமட்டுமின்றி இந்திய நிகழ்த்து கலைகளுக்கான உரிமைக் கழகம் (ஐ.பி.ஆர்.எஸ்.) என்ற நிறுவனத்தையும் எம்.பி.எஸ். நிறுவினார். ஒரு திரைப்படத்தில் ஒரு பாடல் பதிவு செய்யப்பட்டு வானொலியில் அல்லது பொது இடத்தில் அல்லது தொலைக்காட்சியில் ஒளி, ஒலி பரப்பப்படும் ஆயின் அந்த பாடலுக்கான ராயல் தொகை பாடலை எழுதியவர், இசையமைப்பாளர், ஒலி வடிவத்தை வெளியிட்டவர் ஆகிய மூவருக்கும் சரிசமமாக பிரித்து அளிக்கப்படுகின்ற அந்த பொருளாதாரப் பாதுகாப்பை உத்தரவாதம் செய்தவர் எம்.பி.எஸ். ஐரோப்பாவில் மட்டுமே நடைமுறையில் இருந்த ராயல்டி முறையை இந்தியாவில் முதல் முறையாக அவர் நடைமுறைப்படுத்தியது இன்றளவும் செயல்பாட்டில் உள்ளது. இந்த உரிமையால், வாழ்கின்ற இசையமைப்பாளர்கள், கவிஞர்கள் மட்டுமின்றி காலமான பல நூறு கலைஞர்களின் குடும்பங்களின் பொருளாதார நிலையும் உத்தரவாதப்படுத்தப்பட்டுள்ளது.
மலையாளத் திரையில் ஓங்கி ஒலித்த இசை
தமிழில் வாய்ப்பில்லாமல் போனாலும் இலக்கிய வளமும் சமூக அக்கறையும் பொருந்திய கதைகளை அடிப்படையாகக் கொண்ட மலையாளத் திரைப்பட உலகம் அவரை வரவேற்று தழுவிக்கொண்டது. 1957ஆம் ஆண்டிலேயே மலையாளத்தில் ‘மின்னுனதெல்லாம் பொன்னல்ல’ என்ற படத்தில் இரண்டு பாடல்களை எம்.பி.எஸ் பாடியிருக்கிறார். இணையத்தில் அந்தப் பாடல்கள் கிடைக்கின்றன. 1962இல் ஸ்வர்க்க ராஜ்ஜியம், கால்பாடுகள், கண்ணும் கரலும், ஸ்னேக தீபம் ஆகிய திரைப்படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். காவாலம் நாராயண பணிக்கர், பி.பாஸ்கரன், ஸ்ரீகுமாரன் தம்பி, வயலார் ராமவர்மா, மகாகவி வள்ளத்தோள் உள்ளிட்ட மிகப் புகழ்பெற்ற பாடலாசிரியர்களுடன் அவர் பணியாற்றி இருக்கிறார். புகழ்பெற்றுத் திகழும் கட்டசேரி ஜோசப் யேசுதாஸ் என்ற கே.ஜே.யேசுதாஸை திரைப்பட உலகில் அறிமுகம் செய்தவர் அவர்தான். அடூர் கோபாலகிருஷ்ணனின் இரண்டு படங்கள் தவிர்த்த மற்ற அனைத்துப் படங்களுக்கும் அவர்தான் இசையமைத்திருக்கிறார். இவ்வாறு மலையாளத்தில் சுமார் 60 திரைப்படங்களுக்கு அவர் இசை அமைத்திருக்கிறார். பிற திரைப்பட இசையமைப்பாளர்கள் இசை அமைத்த 30 திரைப்படங்களுக்கு ரி-ரெகார்டிங் எனப்படும் பின்னணி இசைக்கோர்வையை உருவாக்கி இருக்கிறார்.
சேர்ந்திசை என்னும் மக்களிசை
வழக்கமான இசைக்கலைஞர்கள் அல்லது திரைப்பட இசையமைப்பாளர்களிடமிருந்து எம்.பி.எஸ் வேறுபடும் புள்ளியானது எங்கிருந்து தொடங்குகிறது? இசை குறித்த அவரது விஞ்ஞானப்பூர்வமான அணுகு முறையில் இருந்து அது தொடங்குகிறது. அவர் இசையின் அரசியலை பொருள் முதல்வாத, மார்க்சிய அணுகு முறையில் பார்க்கிறார். வேளாண்மைத் தொழிலுக்கு முன்பு இருந்த வேட்டை சமூகத்தின் வாழ்க்கைப் போக்கின் ஒரு பகுதியாகவே அவனுடன் வளர்ந்ததுதான் இசை, அதாவது கூட்டிசை. இதுதான் சமுதாய இசையின் அதாவது சேர்ந்திசையின் தொடக்கப்புள்ளி. இப்போதும் நமது சமூகம் சேர்ந்திசையைத்தான் பாடுகிறது, தனி இசையை அல்ல. இந்தக் கூட்டிசை என்பது தனி மனிதன் தன் உணர்வுகளை பிற சக மனிதர்களுடன் பகிர்ந்து கொள்வது மட்டுமின்றி தனது மகிழ்ச்சியையும் சக மனிதர்களுடன் பகிர்ந்து கொள்வதன் மூலம் ஒரு ஆன்ம பலத்தை பெறுகின்றான்.
1970களில் தொடக்கத்தில் சென்னை வானொலியில் ‘இளைய பாரதம்’ நிகழ்ச்சிக்காக எம்.பி.எஸ்ஸும் அண்மையில் மறைந்த வசந்தி தேவி அவர்களும் இணைந்து கல்லூரி மாணவர்களைப் பாட வைத்து ஒலிபரப்பியதுதான் வானொலியில் முதல் சேர்ந்திசை நிகழ்ச்சியாகும். இந்தக் குழுவை அப்படியே விட்டு விடாமல் நிரந்தரமாக்கி சேர்ந்திசையை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல முயன்று அவ்வாறு நிறுவப்பட்டதுதான் சென்னை இளைஞர் இசைக்குழு என்ற மெட்ராஸ் யூத் கோயர் ஆகும். இந்த முயற்சியில் வசந்தி தேவியின் கணவர் டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியன், எம்.பி.எஸ்ஸின் மனைவி ஜஹிதா ஆகியோரும் பேருதவியாக இருந்தார்கள். விடுதலைப் போராட்ட காலத்தில் நேரு, காந்தி ஆகியோருக்கு இணையாக நன்கு அறியப்பட்ட சைபுதீன் கிச்லூ அவர்களின் மகள்தான் ஜஹிதா என்பது குறிப்பிடப்பட வேண்டியது. இந்தக்குழு இப்போது சென்னை எம்.பி.எஸ் இசைக்குழு என்று அழைக்கப்படுகிறது.
இவ்வாறு சென்னை வானொலியில் சேர்ந்திசைக்குழு ஒன்று தொடங்கப்பட்ட பின்னர் டெல்லி, பம்பாய், கல்கத்தா ஆகிய நான்கு நகரங்களின் வானொலியிலும் சேர்ந்திசை குழுக்கள் தொடங்கப்பட்டன.
சேர்ந்திசை வடிவம் ஆனது சகோதரத்துவம், மனிதநேயம், மத நல்லிணக்கம், தேச ஒற்றுமை, சமூக விழிப்புணர்வு, குழந்தைகளின் கல்வி, எல்லை கடந்த சகோதரத்துவம் ஆகிய உயரிய விழுமியங்களை மையமாகக் கொண்டது. 1000, 5,000, 6,000 என்று பள்ளிக்கூட மாணவர்களை ஓரிடத்தில் நிறுத்தி சேர்ந்திசை பாடச் செய்து சாதனை செய்தவர் எம்.பி.எஸ். நேரு உள்விளையாட்டு அரங்கம் கட்டப்படாமல் இருந்த அந்தத் திடலில் பத்தாயிரம் பள்ளிக்குழந்தைகளை ஒன்றிணைத்து ஒரு சுதந்திர நாள் அன்று பாரதியாரின் ஆறு பாடல்களை பாட வைத்த அதிசயம் இன்று வரை நிலைத்து நிற்கின்ற ஒரு சாதனையாகும்.
தமிழில் எட்டு திரைப்படங்களுக்குத்தான் எம்.பி.எஸ் இசையமைத்தார். இவற்றுள் ஜான் ஆபிரகாம் இயக்கிய ‘அக்ரஹாரத்தில் கழுதை’ என்ற திரைப்படத்தில் அவர் பேராசிரியர் நாராயணசாமி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கவும் செய்தார். 1978 ஆம் ஆண்டில் தேசிய திரைப்பட விருதுகள் வரிசையில் இந்த படத்துக்கு மிகச்சிறந்த தமிழ் திரைப்படம் என்ற விருதுடன் வெள்ளித்தாமரை வழங்கப்பட்டது. நிர்மால்யம், பந்தனம், இடைவழியிலே பூச்ச மிண்டப்பூச்ச ஆகிய படங்களுக்கு சிறந்த திரைப்பட இசையமைப்பாளருக்கான கேரளா அரசின் விருதுகளை எம்.பி.எஸ் வென்றார். 1987ஆம் ஆண்டு, சிறப்பான சேவைக்கான கேரள அரசின் திரைப்பட விருதை வென்றார்.
நீலகிரியில் வாழும் படுகர் இன மக்களின் மொழியிலான ‘கால தப்பித பயிலு’ என்ற முதல் முழு நீள திரைப்படத்திற்கு இசையமைத்தவர் எம்.பி.எஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய நிகழ்த்து கலைகளுக்கான உரிமைக் கழகத்தின் நிறுவனரான அவர் தனது மரணம் வரை அதன் தலைவராக இருந்தார். இசைத்துறையில் அவரது சாதனைகளை பாராட்டி 1986 ஆம் ஆண்டுக்கான சங்கீத நாடக அகாடமி விருது அவருக்கு வழங்கப்பட்டது. திரைப்படத் தொழிலாளர் சங்கங்களின் அகில இந்திய சம்மேளனக் குழுவில் அவர் உறுப்பினராக இருந்திருக்கிறார்.
த.மு.எ.ச கோயம்புத்தூரில் 1988ஆம் ஆண்டு நடத்திய பாடல்பயிற்சி முகாமில் அவர் நேரடியாக பங்கேற்று இசைக்கலைஞர்களுக்கும் பாடகர்களுக்கும் பயிற்சி அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எம்.பி.எஸ் என்ற அந்த மகத்தான மக்கள் இசை மேதையின் நூற்றாண்டில் உழைக்கும் மக்களுக்காக கலை இலக்கிய பண்பாட்டு தளத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற அமைப்புகளும் இயக்கங்களும் செய்ய வேண்டியது என்னவெனில் அவர் கண்டறிந்து சமூகத்திற்குக் கொடுத்த சேர்ந்திசை வடிவத்தை முனைந்து கையில் எடுத்து சேர்ந்திசைக்குழுக்களை உருவாக்கி முன்னெடுத்துச் செல்வது என்பதே ஆகும்.
“தமிழில் முதல் பேசும்படம் காளிதாஸ் தொடங்கி அன்றைய படங்களில் பாடல்கள் மிக அதிகம், அதுவே ஒரு ஃபார்முலாவாக இருந்தது. அது ஒரு வசதியான வட்டமாகவும் இருந்தது. இந்த வட்டத்தை உடைத்தவர் எம்.பி.எஸ். தென்னங்கீற்று ஊஞ்சலிலே பாடலில் அது தெளிவாகத் தெரிகிறது. ‘ஒட்டுமொத்த சமூக மனதின் ஒரு விள்ளல்’ என்றுதான் இசையை அவர் கருதினார். எல்லா இசை வடிவங்களிலும் தேர்ச்சி பெற்ற அவரை தமிழ்ச்சினிமா உலகம் பயன்படுத்திக்கொள்ளவில்லை. இது துயர் என்பதை விட அவமானமே. தனது வருத்தங்கள், இழப்புகள் பற்றி ஒருபோதும் கவலைப்படாத ஒரு துறவு மனநிலையில் வாழந்தவர் அவர். இந்திய இசை உலகில் புதிய மரபை நிறுவியவர். அவர் ஒரு சகாப்தம்” என்று எழுத்தாளர் நா.சுகுமாரன் (காலச்சுவடு) சொல்கிறார்.
...
(தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் 16ஆவது மாநில மாநாட்டை (தஞ்சாவூர், டிசம்பர் 2025) ஒட்டி வெளியிடப்பட்ட சிறப்புமலரில் இடம்பெற்ற எனது கட்டுரை)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக