சனி, டிசம்பர் 13, 2025

வனப்பேச்சி என்ற பேரண்டச்சி (பேசும் புதிய சக்தி, டிசம்பர் 2025)

சென்னைக்கலைக்குழுவின் தயாரிப்பில் பிரளயன் நெறியாளுகையில் வனப்பேச்சிஎன்ற நாடகம் நவம்பர் 2ஆம் நாள் மாலை 5.30 மணிக்கு சென்னை மியுசிக் அகாடெமியில் அரங்கேற்றம் செய்யப்பட்டது.

இராட்சசகுலப் பெண் ஆன தாடகையின் கணவன் சுந்தன் என்பவன் மிகப்பெரிய வலிமை பெற்றவன். அகத்திய முனிவனின் ஆசிரமத்தை அடைந்த அவன் அவருக்கு தொந்தரவு செய்ததால் தனது விழிகளின் வெப்பத்தால் அவனை சுட்டெரித்து விடுகிறான் அகத்தியன். இதனைத் தட்டிக்கேட்கச் சென்ற தாடகையை நோக்கி நீ அரக்கி ஆகுகஎன்று சாபம் இட்டதால் அழகிய தாடகை அவலட்சணம் பொருந்திய அரக்கி ஆனாள்.

அங்க நாட்டிலுள்ள காமன் ஆசிரமத்தின் சிறப்பை வனவாசமேகிய இராம லட்சுமணன் இருவருக்கும் எடுத்துச் சொல்கிறார் விசுவாமித்திர முனிவர். குளிர்ச்சி பொருந்திய  வனத்தில் பிராமணர்கள் யாக குண்டங்களை வளர்த்து ஏராளமான வனவிலங்குகளைக் கொன்று தீயில் வீசுகின்றார்கள். மட்டுமின்றி வனமகளாகிய தாடகை வனத்தில் இருந்து வெளியேற வேண்டும் என்று உத்தரவு இடுகின்றார். இந்தத்தகராறு முற்ற, தாடகை மீது அம்பெய்து கொல்ல ராமலட்சுமணர் இருவருக்கும் கட்டளை இடுகின்றான் விசுவாமித்திரன்.

அவள் நமது யாகங்களுக்கு இடையூறு செய்பவள், கொடியவள், பெண் என்று பாராதே ராமா! அவளைக் கொன்று விடு! இருட்டியபின் அரக்கர்களை வீழ்த்த முடியாது, இருட்டுவதற்கு முன் அவளைக் கொன்று விடு!” என்று கட்டளை இட, ராமனும் அவ்வாறே அம்பெய்து அவளைக் கொன்று விடுகிறான். இந்திரன் உள்ளிட்ட வானுகிலனர் ராமனைப் பாராட்டுகின்றனர்.  கம்ப ராமாயணம், வால்மீகி ராமாயணம் ஆகியவை பன்னெடுங்காலமாக நமக்கு உபதேசிப்பது இதுதான்.

தனியார் உயர்நிலைப்பள்ளி ஒன்றின் மாணவர்கள் பாதுகாக்கப்பட்ட வனம் ஒன்றிற்கு சுற்றுலா செல்வதுடன் தொடங்குகிறது. வன உயிரினங்கள் பற்றி அறிந்து செயல்திட்ட அறிக்கை எழுதுவதுதான் அவர்களது நோக்கம். வனத்தில் புலிக்குட்டிகளைக் கண்ட மாணவன் சதீஷ், புலிக்குட்டிகளை அருகில் பார்க்கும் ஆவலில் புலிகள் பதுங்கி இருக்கும் பாறை மீது கல் எறிகிறான். வனச்சட்டப்படி இது குற்றம் என்பதால் அவன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறை அதிகாரி உறுதியாக சொல்லி சுற்றுலாக்குழுவை அங்கிருந்து வெளியேற்றுகிறார். ஆனால் சதீஷும் அவனது தோழி கௌரியும் வனத்தில் தொலைந்து போகிறார்கள். இருள் சூழும் நேரம் என்பதால் ஆசிரியர்களும் வன ஊழியர்களும் சக மாணவர்களும் பதட்டம் அடைகின்றார்கள். ஆசிரியர்களும் வன ஊழியர்களும் இருவரையும் தேடி வனத்துக்குள் செல்கின்றார்கள். பள்ளி நிர்வாகத்துக்கு இந்தத் தகவல் தெரிவிக்கப்படுகின்றது.  இருவரும் உயிர் பிழைக்க வாய்ப்பு இல்லைஎன்பதை உணர்ந்த பள்ளி நிர்வாகம், இந்த செய்தி வெளியே தெரிந்தால் தமது பள்ளியின் பெயருக்கு களங்கம் ஏற்பட்டு விடும் என்று பதட்டம் அடைந்து இருவரது உடலில் இருந்தும் பள்ளிச் சீருடையை களைந்துவிட்டு சாதாரண உடையை அணிவித்து விடுமாறுஆசிரியர்களுக்கு உத்தரவு இடுகின்றது. இந்தப் பொறுப்பற்ற அணுகுமுறையை சக ஆசிரியை ஒருவர் அங்கேயே கண்டிக்கிறார்.

 

இருளில் வழி தவறிய இருவரும், வனத்தினுள் தன்னை இலைதழைகளால் அல்லது தோலால் ஆன போர்வையைப் போர்த்திக் கொண்டு இருக்கும் ஒரு பெண்மணியை சந்தித்து வியப்புற்று, ‘தனியாக இந்த அடர்வனத்தில் இருக்கும் நீங்கள் யார்?’ என்று கேட்க, ‘என்னைப்பற்றி உங்களுக்கு சொல்ல வேண்டிய அவசியம் ஏதும் இல்லை; இந்த வனத்துக்கும் உங்களுக்கும் யாதொரு உறவும் இல்லை, நீங்கள் வெளியேறுங்கள்என்று பெண்மணி அவர்களுக்கு உத்தரவு இடுகின்றார். போர்த்தியுள்ள ஆடையை விலக்கும்போது அப்பெண்ணின் முதுகிலும் மார்பிலும் அம்புகள் துளைத்தவாறு நீட்டிக்கொண்டு இருப்பதைப் பார்க்கிறார்கள். மாணவர்களின் வற்புறுத்தலுக்கு இணங்க அவள் தன் கதையை சொல்கிறாள்.

 

இராட்சசமும் இரட்சகமும்

என் பெயர் தாடகை. என்னை இராட்சசி என்று சொல்கிறார்கள். உண்மையில் இரட்சகம், அதாவது இரக்கம், தன்னை நாடி வந்தவர்களுக்கு கருணை காட்டுவது என்ற பொருள் தரும் அந்தச் சொல்லை இழிவான பொருள்படும் அரக்கி என்று வலிந்து திணிக்க முற்படுவது வேறு யாரும் அல்லர், உங்களைப்போன்ற நாட்டுவாசிகள்தான்; இந்த வனம் எங்களது வாழிடம். இந்த வனத்தில் வாழும் விலங்குகள், பறவைகள், மரங்கள், தாவரங்கள், வனத்தின் கல் மண் என அனைத்தும் எங்களுக்குச் சொந்தம், அதே போல நாங்களும் இவை அனைத்துடைய சொந்தங்கள். எங்களை இந்த வனத்தில் இருந்து வெளியேற்றி வனத்தின் இயற்கை செல்வங்களை கொள்ளையடிக்கும் நோக்கத்தில் நாகரிகம் அடைந்த நாட்டு மனிதர்கள் என்று சொல்லிக்கொள்ளும் நீங்கள் அதற்கு ஆயிரம் பொய்யான காரணங்களைக் கற்பிக்கின்றீர்கள்;  காடுகளிலும் மலைகளிலும் பல லட்சம் ஆண்டுகளாக குவிந்து கிடக்கும் இயற்கை வளங்களைச் சூறையாடிக் கொள்ளையடிப்பதை மறைப்பதன் பொருட்டு தொழில் வளர்ச்சி, தாதுப்பொருள் எடுப்பது, அணை கட்டுவது, மின்சாரத் திட்டங்களை நிறுவுவது போன்ற மினுக்கும் பெயர்களை சூட்டுகிறீர்கள், இந்த சதித்திட்டங்களுக்கு நாங்கள் இடையூறாக இருப்பதால் மறுவாழ்வு, முன்னேற்றம் என்ற பெயரில் எங்களை பலவந்தமாக அப்புறப்படுத்துகிறீர்கள்.  இது நேற்று இன்று தொடங்கி வைக்கப்பட்ட சதி அல்ல, கேளுங்கள்என்று வரலாற்றின் பின்னோக்கிச் செல்லும் அவர்களது உரையாடலில், ராமாயணம், மகாபாரதம் போன்ற புராணக்கதைகளின் பிரதிகள் மறுவாசிப்பு செய்யப்படுகின்றன.

 

மந்திரமும் சூழ்ச்சியும் 

அகத்திய முனிவர், தனது சிஷ்யரான விஸ்வாமித்திரனிடம் சொல்கின்றார்: “நமது மந்திரங்களால் ஒரு புல்லைக்கூடப் பிடுங்க முடியாது.” “எனில் மக்கள் நம்புவதும் நமது மந்திரங்களுக்கு அஞ்சுவதும் எவ்வாறு?” என்று விஸ்வாமித்ரன் வினவ, “அவ்வாறு நாம் அவர்களை நம்ப வைத்து இருக்கின்றோம்; மந்திரம் கால் மதி முக்கால்என்று அகத்தியர் உண்மையை உடைக்கிறார்.

தாடகையை அழித்துக் குளிர்ச்சி தரும் வனத்தைக் கைப்பற்றும் முயற்சியில் நேரடியாக ஈடுபடாத விஸ்வாமித்திரன், ஷத்திரியர்கள் ஆன தசரதனின் மைந்தர்களான இராமன், இலட்சுமணன் இருவரையும் தூண்டி விடுகிறான். வனத்தின் உள்ளே தாடகை இருக்கும்வரை அவளை வெல்ல முடியாது என்று நன்றாக உணர்ந்த அவன், தாடகையை வனத்தில் இருந்து வெளியே வரவழைத்து சமவெளியில் போர் புரியத்தூண்டினால் அவளைக் கொன்று விட முடியும் என்று திட்டம் தீட்டுகிறான். அதுவும் நிறைவேறாதபோது அவளது அழகிய முகத்தை சிதைத்து விடலாம், அவ்வாறு செய்தால் அவலட்சணம் பொருந்திய அவளது சொல்லுக்கு வனவாழ்மக்கள் கட்டுப்பட மாட்டார்கள் என்றும் அடுத்த திட்டத்தை தீட்டுகிறான்.

ராமனையும் இலட்சுமணையும் பார்த்த தாடகை, “உங்களைப் பார்த்தால் எனது பிள்ளைகள் போல இருக்கிறீர்கள், இந்த முனிவனின் பேச்சைக்கேட்டு என் மீது தாக்குதல் நடத்த முற்பட்டால் நீங்கள் அழிவது உறுதி, எனது ஓர் அறையைக் கூடத் தாங்க மாட்டீர்கள், பிழைத்துப்போய் விடுங்கள்என்று தனது உறைவாளை உறையில் இட்டுத் திரும்புகிறாள். பார்ப்பனீயம் பல நூறு வருடங்களாக லோககுரு என்று தூக்கிப்பிடிக்கும் விஸ்வாமித்ரனை நோக்கி, “பிராமணர்கள் ஆகிய நீங்கள் எந்தக் காலத்தில் நேரடியாக வந்தீர்கள்?” என்று கேள்வியை வீசுகிறாள் தாடகை. உழைக்கும் மக்களுடன் என்றைக்கும் நேருக்கு நேர் மோத முன்வராத, சாதீய அடுக்கின் உச்சியில் கோலோச்சும் பிராமணீயம், சாதீய அடுக்கில் தனக்குக் கீழ் உள்ள அதே உழைக்கும் மக்களின் ஒரு பிரிவினரை தன் கைக்குள் வைத்துக்கொள்வதற்கான அனைத்துப் பிரித்தாளும் சூழ்ச்சிகளையும், தந்திரோபாயங்களையும் பல நூறு வருடங்களாகத் திட்டமிட்டுச் செய்து வருவதை இங்கே காட்சிப்படுத்துகிறார் நெறியாளுநர் பிரளயன். வரலாற்று நோக்கில் இந்தக் கேள்வி மிகச்சரியானது என்பதை பார்வையாளர்களின் நீண்ட கரவொலி உறுதிபடச் சொன்னது.

வால்மீகியின், கம்பனின் ராமாயணத்தில் ராமனும் இலட்சுமணனும் குருவின் சொல் மந்திரம் என்று பணிந்து தாடகையைக் கொன்று விடுவார்கள். ஆனால் அந்த இராமாயணங்களில் இலட்சுமணன் பேசாத ஒரு வசனம் இந்தக் காட்சியில் இடம்பெறுகிறது.  தாடகையைக் குறி பார்த்த அம்பைக் கீழே தாழ்த்தி, “இந்த முனிவர் சொல்வதில் எனக்குச் சந்தேகம் வருகிறது, நம்மை ஏதோ ஒரு பெரிய சதியில் சிக்க வைக்க இவர் திட்டமிடுகின்றார்என்று அண்ணன் இராமனிடம் உரையாடுகிறான் இலட்சுமணன்.  இதனை செவிமடுக்காத இராமன், குரு சொல்லுக்குக் கட்டுப்படுகின்றான். வழக்கத்துக்கு மாறான உலோகமுனையுடன் கூடிய கொடிய விசம் தோய்ந்த அம்பை இராம இலட்சுமணர்களின் வில்லில் இருந்து பிரித்து விஸ்வாமித்திரன் தனது கைகளால் ஏந்தி தாடகையின் முதுகில் செலுத்துகிறான்.

வலதுசாரி இந்துத்துவா அடிப்படைவாத சக்திகளின் தத்துவார்த்த தலைமைப்பீடம் பிராமணர்கள், பனீயாக்களால் நிரம்பி இருக்க, அவர்களது செயல் திட்டங்களைக் களத்தில் செயல்படுத்தும் செயல்பாட்டாளர்களாக சாதீய அடுக்கில் கீழே உள்ள பிற சாதி மக்கள் இருப்பதை இக்காட்சி தோலுரிக்கிறது. மட்டுமின்றி இந்தச் சதிக்குப் பலியாகும் உழைக்கும் மக்கள் எழுப்ப வேண்டிய குரலாகவே இலட்சுமணனின் குரல் இருக்கிறது.  

யாருக்கான வளர்ச்சி?

அம்பானி, அதானி, வேதாந்தா உள்ளிட்ட கார்பொரேட்டுக்களின் நலன் பொருட்டு அவர்களின் சேவகன் ஆன ஒன்றிய ஆட்சியாளர்கள் இந்த மக்களை அவர்களின் பல நூற்றாண்டு கால வாழிடங்களில் இருந்து வெளியேற்ற தொழில் வளர்ச்சி என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார்கள். “வேள்வி என்ற பெயரில் வன விலங்குகளை ஆயிரக்கணக்கில் கொன்று தீயில் இட்டு அழிப்பது நீங்கள் அல்லவா? எமது வயிற்றுப் பசியின் தேவைக்காக அன்றி நாங்கள் ஒருபோதும் ஒரு விலங்கையோ பறவையையோ கொல்வது இல்லை. எமது தேவைக்காக அன்றி ஒரு மரத்தின் கிளையைக் கூட நாங்கள் ஒடிப்பது இல்லை. இந்தக் காடு எனது காடு, வெளியேற வேண்டியது நீங்கள்தான்என்று விஸ்வாமித்ரனுக்கு கட்டளை இடுவது தாடகையின் குரல் அல்ல, அந்தக்குரல் சத்தீஸ்கர், ஜார்கண்ட், மஹாராஷ்ட்ரா, கர்னாடகா, நிக்கோபார் தீவு உள்ளிட்ட பல மாநிலங்களின் வனவாசிகளின், பழங்குடி மக்களின் குரலாகும்.

தாழ்கையள் என்ற தாடகை

தெளிந்த சிந்தனையும் அறிவும் படைத்த சுகேது மன்னனுக்குக் குழந்தைப்பேறு வாய்க்கப் பெறாததால் பிரம்மனை நோக்கிச் செய்த தவத்தின் பயனால் பிறந்த தாடகை, மயில் போன்ற பேரழகும் ஆயிரம் யானையின் வலிமையும் பெற்றவள். இயக்கர் குல மங்கை அவள். தாடகை என்ற சொல்லுக்கு தடாகம், நீர் நிலையின் கரை ஆகிய பொருள் உண்டு. தென்னை அல்லது பனை போன்ற நீண்ட கரங்களைக் கொண்டவள் தாழ்கையள்அதாவது தாடகை என்று அவளது தோற்றப் பொலிவுக்கு ஏற்பவும் அழைக்கப்பட்டாள் எனலாம். மலையில் சஞ்சரிப்பவள், மந்திர மலையைப் போன்ற கைகளை உடையவள் என்றும் பொருளுண்டு. தாடகை நமது ஆதித்தாயின் வடிவம், குறியீடு. தாடகை என்பவள் ராவணனின் பாட்டி, ராவணனின் அம்மாவைப் பெற்றவள்! திருப்பனந்தாள் கோவில் என்ற தாடகையீச்வரத்தில், தாடகைக்காக சிவலிங்கமே தலைதாழ்த்தி அவளிட்ட மாலையை வாங்கிக்கொண்டதாக கதை உள்ளது.

வால்மீகி சொல்கின்ற தாடகையிடம் மாய சக்திகள் உள்ளன. ராமன் அவளது இரு கைகளையும் அம்பெய்து கொய்கிறான் எனில் இலட்சுமணனோ அவளது காதுகளையும் மூக்கையும் அறுக்கிறான். எனில் இலட்சுமணனால் முக அழகு சிதைக்கப்பட்ட சூர்ப்பனகையையும், இந்திரனால் கொல்லப்பட்ட மந்தரையையும், விஷ்ணுவால் கொல்லப்பட்ட பிருகு முனிவரின் மனைவி கியாதியையும் நாம் மறுவாசிப்பு செய்ய வேண்டிய அவசியம் உள்ளது.

வரலாறு என்பது இன்று வரையிலும் வெற்றி பெற்றவன் எழுதுகிற கதைதான்; தோல்வி அடைந்தவன்(ள்) அல்லது நயவஞ்சகத்தால் வீழ்த்தப்பட்டவன்(ள்) சொல் இன்றுவரை வீதிக்கு வரவில்லை, எனில் அம்பலம் ஏறுவது எப்போது? இந்த வரலாற்றுக் கடமையைத்தான் வனப்பேச்சி என்ற பேரண்டச்சி நாடகத்தை எழுதி நெறியாளுகை செய்துள்ள பிரளயன் நேர்மையாகவும் தீர்மானமாகவும் செய்துள்ளார். இயற்கை, வனம், மனிதன், விலங்கு, தாவரம், சமூகம் ஆகிய சொல்லாடல்களுக்கு இதுவரை கற்பிக்கப்பட்டு வந்துள்ள வரையறைகளை மறுபரிசீலனைக்கு உட்படுத்த வேண்டிய அவசியத்தை சொல்கிறார்.

தாடகை என்ற வனப்பேச்சியின் பாத்திரத்தை ஏற்று நடித்துள்ள திரைப்படக்கலைஞர் ரோஹிணி, கவின்மலர், அமலா மோகன், வெண்மணி உட்பட அனைத்துக் கலைஞர்களும் முதல் முறையாக அரங்கேற்றப்பட்ட நாடகம் என்று உணரமுடியாத அளவுக்கு மிகச்சிறப்பாக நடித்துள்ளார்கள். உரையிடையிட்ட பாடல்களும் மிகுந்த பொருட்செறிவுடன் அமைந்துள்ளன. பாடகர்கள் மகிழினி மணிமாறன், மணிமாறன், கவின்மலர், இசைக்கலைஞர்கள் மணிமாறன், நிஷோக், ஷாஜஹான், பயிற்சியாளர்களும் தொழினுட்பக் கலைஞர்களும் ஆன விதுர் ராஜன், மெலோடி டோர்கஸ், ரேணுகா சித்தி, கிருஷ்ணா தேவானந்தன், சிவா, சாய், அறிவழகன், ஆலம் ஷா ஆகியோரின் கூட்டுழைப்பு நாடகத்தின் மேடை ஆற்றுகையை கூர்மையாக ஒருமுகப்படுத்தியுள்ளது. பிரதியின் மையக்கருத்தையும் காட்சிகளின் ஆழத்தையும் சைமோன் செலாத்தின் ஒளியமைப்பு ஆளுகை மேலும் வலிமையாக்கி உள்ளது, அவரது ஒளியமைப்பு தனியே ஒரு பாத்திரமாக மிளிர்கின்றது என்றால் மிகையில்லை.  தமிழ் நாடக வரலாற்றின் போக்கை பிரளயனின் வனப்பேச்சி புதிய திசைக்கு மாற்றுகிறாள், புராண இதிகாசங்களை அல்லது பாரம்பரியக் கற்பிதங்களையும் இயற்கை குறித்த வரையறைகளையும் காலச்சூழலுக்கு ஏற்ப மறுவாசிப்பு செய்ய நம்மை அழைக்கிறாள். 

(பேசும் புதியசக்தி டிசம்பர் 2025 இதழில் வெளியான எனது கட்டுரை)

 

 

 

கருத்துகள் இல்லை: