புல்டோசர், இஸ்லாமிய பெண்கள் மீது ஹோலி அன்று பாலியல் வன்முறை, இஸ்லாமிய ஆண்களை தெருக்களில், ரயில்களில் தாக்கி அழிப்பது, மசூதிகளை தார்ப்பாய் கொண்டு மூடுவது, இஸ்லாமிய பண்டிகைகளின் போது ஒலிபெருக்கிக்கு தடை, கூட்டாக வழிபாடு செய்வதற்கு தடை ஆகிய அனைத்தும் பெரும்பான்மை மத மக்களில் பெரும்பாலோரால் வரவேற்கப் படுகிறது. பெரும்பான்மை சமூக மக்களின் மூளையில் பாசிச சிந்தனை ஏற்றப்பட்டு விட்டது.
பாசிச அரசும் அதன் நாக்பூர் எஜமானர்களும் திட்டமிட்டு உழைத்து இதில் வெற்றி பெற்று விட்டார்கள்.
இஸ்லாமிய மக்கள் தங்களைத் தாங்களே காப்பாற்றிக்கொள்ள வேண்டிய கேவலமான நிலைமைக்கு, குறிப்பாக ஹிந்தி belt மாநிலங்களில், தள்ளப்பட்டு விட்டார்கள் என்பதுதான் கள யதார்த்தம்.
நான் இவ்வாறு சொல்வதால் இடதுசாரி இயக்கங்கள், ஜனநாயக சக்திகள் இஸ்லாமிய மக்களை கை விட்டு விட்டார்கள் என்று சொல்வதாக பொருள் இல்லை.
பெரும்பான்மை சமூக மக்களின் பெரும்பாலோர் சிந்தனை மட்டம் இஸ்லாமிய மக்களுக்கு எதிராக திருப்பப்பட்டு விட்டது. திராவிட மண், பெரியார் அண்ணா மண் என்று மார் தட்டிக் கொண்டு இருக்கிறோம். பகல்காம் தாக்குதலுக்கு பின் இஸ்லாமிய மக்களுக்கு ஆதரவாக எழுதப்பட்ட பதிவுகளில் இதே தமிழ்நாட்டு மக்கள்தான் மிக மோசமான வெறுப்பை கொட்டினார்கள். சுட்டுக் கொல்ல வேண்டும், நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று பல ஆயிரம் பதிவுகளை பார்க்க முடிகின்றது.
சரியாக கணித்தால் இந்துத்துவா கட்சி அல்லது இயக்கங்களை சாராத மக்கள்தான் இங்கே தமிழ்நாட்டில் அதிகம் எனில் அவர்கள் மூளையும் இஸ்லாமிய மக்களுக்கு எதிராக திருப்பப் பட்டு விட்டது என்பது உண்மை. இவர்கள் ஒரு விளிம்பில் நிற்கிறார்கள். பிஜேபி அல்லாத இதர ஜனநாயக கட்சிகள் அல்லது இயக்கங்களில் உறுப்பினராக அல்லது ஆதரவாளர்களாக இருக்கின்ற இந்த மக்கள் பிஜேபி போன்ற வலதுசாரி கட்சிகளுக்கு எந்த நேரத்திலும் தயக்கம் இன்றி சென்று விடுவார்கள். அதன் பொருள் இவர்கள் வலதுசாரி இந்துத்துவாவாதியாக மாறி விடுவார்கள் என்பது இல்லை. இஸ்லாமிய எதிர்ப்பு அல்லது இஸ்லாமிய மக்கள் மீதான வெறுப்பு இவர்களை அங்கே திருப்பி விட போதுமானது. ஆர் எஸ் எஸ், பிஜேபி வெற்றி பெறும் புள்ளி இதுதான். அந்த இயக்கங்களில் உறுப்பினர் ஆக வேண்டிய அவசியம் எதுவும் இல்லை. அந்த இயக்கங்களின் திட்டத்தை நிறைவேற்ற வெகு மக்களின் இந்த சிந்தனை மாற்றம் போதுமானது.
பஹல்காமில் குதிரை சவாரி நடத்தி பிழைப்பு நடத்திய சையத் அலி ஹுசைன் ஷா அந்த பகுதியில் வாழும் பெரும்பான்மை சமூகமான இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவர். தாக்குதலின்போது உடனடியாக ஓர் எதிர்வினை ஆற்ற அவருக்கு யாரும் சொல்லாமலேயே தோன்றியது. இதுதான் தேவையான எதிர்வினை. அண்டை வீட்டு நண்பன் மீது தாக்குதல் நடக்கும்போது உடனடியாக அவரை காப்பாற்ற ஒரு அரசியல் கட்சிக்காரர் அங்கு வந்து நிற்க வேண்டியது இல்லை, அதற்கு அவசியமும் இல்லை. எனது
அண்டை வீட்டு நண்பன் மீது தாக்குதல் நடக்கும் போது அவரை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு எனக்குத்தான் உள்ளது.
ஆனால் சிறுபான்மை மக்கள் மீது தாக்குதல் நடக்கும் போது அதாவது அண்டை வீட்டார் மீது தாக்குதல் நடக்கும் போது வேடிக்கை பார்க்கும் அல்லது கை கட்டி நிற்கும் மனநிலைக்கு அல்லது அத்தாக்குதலில் தனது பங்கை செலுத்தும் அளவுக்கு பெரும்பான்மை வட இந்திய அல்லது ஹிந்தி belt சமூகம் வந்து விட்டது.
வட இந்திய அல்லது ஹிந்தி பெல்ட் மாநிலங்களில் சிறுபான்மை இஸ்லாமிய மக்கள் மீது நடப்பதை போன்ற தாக்குதல்கள் தென் மாநிலங்களில் இப்போது நடக்கவில்லை என்பது உண்மைதான். ஆனால் அப்படி ஒரு தாக்குதல் நடக்கும் எனில் அது நியாயம் தான் என்று சொல்லக்கூடிய அளவுக்கு தென் மாநில பெரும்பான்மை மத மக்களின் சிந்தனை ஏறத்தாழ கட்டமைக்கப்பட்டு விட்டது என்பதுதான் உண்மை. முகநூலில் கேவலமான சொற்களில் வெறியுடன் உமிழப்படும் பதிவுகள் அதைத்தான் சொல்கின்றன.
30.4.25
.
எதிர்க்கட்சிகள் எடுத்துள்ள மோசமான அரசியல் நிலைப்பாடு:
2019 நாடாளுமன்ற தேர்தலில் ஒட்டி நேர்ந்த அல்லது நிகழ்த்தப்பட்ட
புல்வாமா தாக்குதலுக்கு பிறகான ஐயப்பாடுகள் இன்னும் பதிலளிக்கப்படாமலேயே உள்ள நிலையில்தான் பகல்காம் நிகழ்வு நடந்தது. புல்வாமா நிகழ்வை பிஜேபி தனது தேர்தல் ஆதாயத்துக்கு முற்றாக பயன்படுத்திக் கொண்டது என்பது வெளிப்படை.
பொறுப்புள்ள எதிர்க்கட்சிகள், புல்வாமா பகல்காம் இரண்டுமே பாதுகாப்பு குறைபாடுகள் அல்லது உளவுத்துறை குறைபாடுகளால் நிகழ்ந்தவை என்று அரசு சொல்வதை முற்றாக மறுத்து பாரபட்சம் அற்ற விசாரணையை வலியுறுத்துவதற்கு பதிலாக அரசு சொல்வதை அப்படியே ஒத்துக்கொண்டு ஒரு படி மேலே சறுக்கி பாகிஸ்தானை குற்றம் சாட்டி உலக நாடுகள் இடையே பிரச்சாரம் செய்வதற்கு இந்த அரசால் அனுப்பப்பட்டுள்ள குழுக்களில் தயக்கம் இன்றி இடம்பெற்றுள்ளன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தமிழகத்தில் திமுகவும் கூட இதில் அடக்கம்.
படுகொலைகளை நிகழ்த்திய கொலையாளிகளில் ஒருவரை கூட இன்னும் பிடிக்காத நிலையில் அல்லது அண்டை நாடு தான் இந்த தாக்குதலை நிகழ்த்தியது என்று நிரூபிக்கப்படாத நிலையில் இந்த பிரதிநிதி குழுக்கள் வெளிநாடுகளில் சென்று யாரை அல்லது எந்த நாட்டை குற்றம் சாட்டுவார்கள்?
மார்க்சிஸ்ட் கட்சியின் ஜான் பிரிட்டாஸ் ஜப்பான் சென்றுள்ளார். பாகிஸ்தானை குற்றம் சாட்டியுள்ளார். இந்திய எதிர்க்கட்சிகள் தமக்குள் ஆன கடுமையான வேற்றுமைகளை மறந்து பயங்கரவாதத்துக்கு எதிராக பிரச்சாரம் செய்ய ஒன்றுபட்டு வந்திருப்பதாக ஜப்பானில் ஜான் பிரிட்டாஸ் பேசியுள்ளார். தமிழ்நாட்டில் இருந்து கனிமொழியும் ரஷ்யா செல்கிறார்.
திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகளும் அடக்கம். இதன் மூலம் புல்வாமா, பகல்காம் உள்ளிட்ட எந்த ஒரு தாக்குதலின் பின்னணியையும் எதிர்காலத்தில் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பும் உரிமையையும் எதிர்க்கட்சிகள் இழந்தவர்கள் ஆகிறார்கள். அதாவது அரசு சொல்வதை ஜெராக்ஸ் எடுக்கும் நகலாளிகளாக ம.
பயங்கரவாதத்தை தூண்டிவிடும் அண்டை நாட்டை அம்பலப்படுத்தும் அரசியல் நகர்வாக அல்லது தந்திரமாக இந்த பிரதிநிதி குழுக்கள் சுற்றுப் பயணம் சென்றுள்ளார்கள் என்று எடுத்துக் கொண்டாலும் இதே குழுக்கள் அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் கூட செல்லலாம். சென்று பயங்கரவாதத்தை வேரறுக்கும் இந்தியாவின் அரசியல் நடவடிக்கைகளுக்கு அமெரிக்காவின் இஸ்ரேலின் ஆதரவை நாடலாம்.
25.5.25
.
ஆபரேசன் சிந்தூருக்கு பிறகு மோடி அரசு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய பல குழுக்களை பல்வேறு நாடுகளுக்கு அனுப்பியது. இவற்றில் பிஜேபி, காங்கிரஸ் இடதுசாரி கம்யூனிஸ்டுகள் திருநாமுல் காங்கிரஸ் திமுக என பல்வேறு கட்சிகளும் அடங்கிய எம்பிக்கள் இருந்தனர். அரசின் பிரதிநிதியாக சென்றதால் இவர்கள் ஒன்றிய வலதுசாரி இந்துத்துவா அரசின் நிலைப்பாட்டை மட்டுமே பல்வேறு நாடுகளில் வலியுறுத்திவிட்டு வந்தார்கள். பகல்காம் பிரச்சனையில் தத்தம் கட்சிகளின் நிலைப்பாட்டை பேசவும் முடியாது வலியுறுத்தவும் முடியாது.
அவ்வாறு சென்ற தூது குழுக்களில் இடம் பெற்றிருந்த காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சசிதருரும் ஒருவர். பயணத்தை முடித்துவிட்டு வந்த அவர் ஜூன் 23ஆம் தேதி ஆங்கில தி ஹிந்து பத்திரிகையில் எழுதிய கட்டுரை சர்ச்சையை உருவாக்கியது. காங்கிரஸ் கட்சிக்குள் சலசலப்பை உண்டு பண்ணியது. பிரதமர் நரேந்திர மோடியின் சக்தி துணிச்சல் மன உறுதிப்பாடு ஆகிய அனைத்தும் சர்வதேச அரங்கில் இந்தியாவின் சொத்தாக உள்ளன, ஆனால் அவரது இந்த தகுதிகளுக்கு ஆதரவு தேவைப்படுகிறது என்று சசிதரூர் எழுதினார். அதாவது மோடியின் இந்த சொத்து தொகுதிகளை காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் அணிதிரண்டு ஆதரிக்க வேண்டும் என்று மறைமுகமாக தரூர் கூறுகிறார்.
இக்கட்டுரை வந்த பிறகு அதை தனக்கு சாதகமாக்கிய பிஜேபி தரூரை ஆதரித்தும் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியை விமர்சித்தும் வெளிப்படையாக பேசியது.
அவரது இந்த கட்டுரைக்கு காங்கிரஸ் கட்சி எதிர்வினை ஆற்றியுள்ளது. தரூரின் இந்த கருத்துக்கும் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டுக்கும் எந்த தொடர்பும் இல்லை, இது அவரது சொந்த தனிப்பட்ட கருத்து என்று கட்சி முடித்து விட்டது.
...
தரூர் ஒரு காங்கிரஸ் முகமூடி பொருத்திய சங்கி என்பது உலகறிந்த ஒன்று. நான் ஏன் ஒரு இந்துவாக இருக்கிறேன் என்று ஆங்கில புத்தகம் எழுதி உள்ளார். அவர் காங்கிரஸ் கட்சிக்குள் இருக்கிற ஒரு சங்கி.
சொல்லப்பட வேண்டியது என்னவெனில் இதுபோன்று வெளிநாட்டுக்கு சென்ற தூது குழுக்களில் இடம்பெற்ற கட்சிகள் இந்த தூது குழுக்கள் இந்தியாவுக்கு திரும்பியபின் தத்தமது கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிநாட்டு அரசுகளிடம் எதை வலியுறுத்தி வந்தார்கள் எதை பேசி வந்தார்கள் என்று வெளிப்படையாக எதையும் சொல்லவில்லை. தரூர் அந்த வகையில் வெளிப்படையாக எழுதி விட்டார்.
ஒன்றிய அரசு நிலைப்பாட்டையே வெளிநாடுகளில் வலியுறுத்தி விட்டு வந்த பிறகு பகல் காம் பிரச்சனையை பற்றி நாடாளுமன்றத்தில் பேச வேண்டும் என்று இதே கட்சிகள் சத்தம் போடுகிறார்கள். பகல் காம் என்பது தனிப்பட்ட ஒன்று அல்ல. புல்வாமாவை பற்றி பேசாமல் சத்திய பால் மாலிக்கை பற்றி பேசாமல் பகல் காமை பேச முடியாது. ஆனால் ஒன்றிய அரசின் பிரதிநிதிகளாக வெளிநாட்டுக்கு சென்று ஒன்றிய அரசு நிலைப்பாட்டையே வெளிநாடுகளில் வலியுறுத்திவிட்டு வந்த பிறகு பகல் காமை மட்டுமல்ல புல்வாமாவை பற்றி பேசக்கூடிய உரிமையையும் எதிர்க்கட்சிகள் இழந்து விட்டார்கள் என்பதுதான் உண்மை.
தரூர் எழுதிய கட்டுரை காங்கிரஸ் கட்சிக்குள் மட்டுமின்றி இந்திய அரசியலிலும் எவ்வாறு சலசலப்பு ஏற்படுத்தி உள்ளதோ அதேபோல் பிற கட்சிகள் இப்போது கட்டுரைகளை எழுதினால் அந்தந்த கட்சிக்குள் பெரும் பிரச்சனைகளை உண்டு பண்ணும் என்பதால் தருரை தவிர மற்ற எம்பிக்கள், அதாவது பிஜேபி தவிர மற்ற கட்சிகள் அனைத்தும் மௌனமாக உள்ளன என்பதுதான் உண்மை.
30.6.25

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக