சனி, ஆகஸ்ட் 01, 2026

இந்தியா கூட்டணியை வலுப்படுத்த வேண்டும்

இன்றைய ஒன்றிய அரசை நவபாசிச அரசு என்றோ பாசிச அரசு என்றோ மார்க்சிஸ்ட் கட்சி மதிப்பிடுவது விவாதத்துக்கு உரியது. 

ஆர் எஸ் எஸ் ஒரு பாசிச சக்தி எனில் அதனால் வழி நடத்தப்படும் அரசு மூன்றாவது முறை தேர்வு செய்யப்பட்ட பிறகு இதற்கு முன் இரண்டு ஆட்சியிலும் காணப்படாத அடக்குமுறைகளை ஏவி ஒற்றை சர்வாதிகார ஆட்சி என்ற புள்ளியை இலக்கை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது என்பது உறுதி. நான் அதை விரிவாக இங்கே விவாதிக்க விரும்பவில்லை.

2. மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் சீதாராம் யெச்சூரி காலமான நிலையிலும் கட்சியின் அகில இந்திய மாநாட்டுக்கு சில தினங்களே உள்ள நிலையிலும் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப் பட்டுள்ள தோழர் பிரகாஷ் காரத் அவர்களின் இந்தியா கூட்டணி மீதான நிலைப்பாடு கேள்விக்கு உரியது. 2024 தேர்தல் வரை மட்டுமே இந்த கூட்டணியின் நோக்கம் என்று அவர் பேசி இருக்கிறார். அவரது நிலைப்பாடு பொதுவெளியில் இருப்பதால் நானும் பொதுவெளியில் அதன் மீதான கருத்தை சொல்வது சரிதான், தவறு இல்லை.

உண்மையில் இந்தியா கூட்டணி உருவாக்கத்தில் பெரும் பங்கு வகித்தவர்
அன்றைய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி. அதற்கான பலன் தேர்தல் முடிவில் தெளிவாக தெரிந்தது.  

இந்தியா கூட்டணியை உறுதியாக தொடர வேண்டிய நிலையில்தான் இன்றைய அரசியல் சூழல் உள்ளது. கட்சி சொல்வது போல பாசிசத்தின் முழு வடிவத்தை இந்த ஆட்சி எடுக்கவில்லை, எல்லைக்கு வெளியே நிற்கிறது என்றே வைத்துக் கொண்டால், வெகு விரைவில் அல்லது சில காலத்தில் அது முழுமையான பாசிச வடிவத்தை எடுக்கும் என்றே வைத்துக் கொண்டால், இந்தியா கூட்டணியை 2024 தேர்தலுக்கு பிறகு மேலும் வலுப்படுத்த வேண்டிய அவசியம்தான் உள்ளது. அதுவே இன்றைய தேவை.

கூட்டணியின் பிற கட்சிகளே கூட கூட்டணி தேர்தல் வரை மட்டுமே என்று இதுவரை சொல்லாத போது ஒற்றுமையை மேலும் வலுவாக கட்ட வேண்டிய பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டிய மார்க்சிஸ்ட் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்  பிரகாஷ் காரத் இப்படி ஒரு கருத்தை வெளியிட்டு இருப்பது தேவை இல்லாத ஒன்று மட்டும் அல்ல, ஆபத்தானது, ஆர் எஸ் எஸ் பிஜேபி நகர்வுகளை தடுத்து நிறுத்த உதவியுள்ள எதிர்கட்சிகளின் ஒற்றுமையை சிதைக்க கூடியது. 

சரியாக சொன்னால் அவரது கருத்து அதிர்ச்சி அளிக்கிற ஒன்று. கட்சியின் அகில இந்திய மாநாட்டுக்கு முன் இப்படி ஒரு கருத்தை அவர் வெளியிடுவது உள் நோக்கம் கொண்டதா என்ற கருத்து எனக்கு உள்ளது. அவரது இந்த நிலைபாடு உண்மையில் மதச்சார்பற்ற சக்திகளுக்கு கவலை தரக் கூடியது, வலதுசாரி இந்துத்துவா சக்திகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துவது. 

தேர்தல் மூலம் ஆட்சிக்கு வந்த வலதுசாரி இந்துத்துவா சக்திகளை தேர்தல் வழி மூலம்தான் ஆட்சி அதிகாரத்தில் இருந்து தூக்கி எறிய முடியும். எனில் காரத் அவர்களின் இந்த கருத்து அல்லது நிலைபாடு இந்த வழிக்கு, வியூகத்துக்கு எந்த வகையிலும் உதவாது, மாறாக எதிர்கட்சிகள், மத சார்பற்ற சக்திகளின் ஒற்றுமையை சீர் குலைக்க மட்டுமே உதவும்.

17.3.25
.

India அணியின் உறுப்பினர் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டிய அவசியம் உள்ளது. ஓவைசியின் ஏஐஎம் ஐ எம், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் பின்னால் திரண்டு உள்ள மக்கள் சக்தியை பாசிச சக்திக்கு எதிராக அணி திரட்ட வேண்டிய கட்டாயம் உள்ளது. மாயாவதியின், ஒவைசியின் ஊசலாட்டம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். இதன் காரணமாகவே அவர்களை தள்ளி வைப்பது என்பது அந்தக் கட்சிகளின் பின்னால் உள்ள மக்கள் திரளை தள்ளி வைப்பதாகும். 

அரவிந்த் கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு நிலை எடுக்கவில்லையா? காங்கிரஸ் கட்சி மீதான அவரது வெறுப்பு எல்லோரும் அறிந்த ஒன்றுதான். இதன் காரணமாகவே அவர் இந்தியா கூட்டணிக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ ஆதரவு தரும்போது அவற்றை புறந்தள்ளி விட முடியுமா?

இன்னும் கூர்மையாக சரியாகவே சொல்ல வேண்டுமென்றால் இடதுசாரிகளை தவிர அனேகமாக அனைத்து  கட்சிகளும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பிஜேபி அல்லது காங்கிரஸ் இருக்கின்ற அணிகளில் இடம்பெற்றன என்பதுதான் வரலாறு. தமிழ்நாட்டுக்கும் இது பொருந்தும். தமிழ்நாட்டுக்குள் பிஜேபியின் அடையாளத்தை கொண்டு வந்தவர்கள் திமுகவும் அதிமுகவும் என்பதுதான் வரலாறு. இன்றைய நிலையில் என்ன செய்ய வேண்டும் எது அவசியம் என்பதை மட்டும் தான் அளவுகோலாக எடுத்துக் கொண்டு அரசியலை முன்னெடுத்துச் செல்ல முடியும்.
தூய்மை வாதம் என்பது நடைமுறை  அரசியலுக்கு எப்போதும் பொருந்தாத, பொருந்த முடியாத ஒன்று என்பதுதான் நடைமுறை எதார்த்தம். வாதத்துக்காக ஒரு கேள்வியை வைக்க விரும்புகிறேன். இப்போதும் நிதீஷ் குமார் தனது நிலையை மாற்றிக் கொண்டு இந்தியா கூட்டணிக்கு ஆதரவு கொடுப்பாரே ஆனால் அதை ஏற்போமா மறுப்போமா?

அமித்ஷா பழனிசாமி சந்திப்புக்கு முதல் நாள் பாமக தலைவர் ராமதாஸ் எடுத்த ஒரு முடிவு தற்செயலானது என்று நான் நினைக்கவில்லை. எனது முகநூல் பதிவிலும் நான் அதை குறிப்பிட்டேன். நேற்று விசிக தலைவர் திருமாவளவன் அவர்களுக்கு பாமக கட்சியின் நிகழ்ச்சி அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது என்பது முக்கியத்துவம் வாய்ந்தது. இது ஒரு முக்கியமான அரசியல் நகர்வு என்பதில் ஐயமில்லை. இது தமிழகத்தில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியில் ஒரு மாற்றத்தை கொண்டு வரும் நகர்வு என்பதில் என்ன சந்தேகம் உள்ளது? 

இடதுசாரிகளை தவிர அநேகமாக மற்ற அனைவருமே நிலையான அடிப்படைக்  கொள்கைகள் இல்லாத கட்சிகள் என்பதை பார்க்கிறோம். நான் சொல்வது அடிப்படைக் கொள்கைகள் என்பது வேறு நடைமுறை அரசியல் அடிப்படையில் எடுக்கின்ற நடவடிக்கைகள் என்பது வேறு என்பதே. அடிப்படைக் கொள்கைகளை திட்டவட்டமாக நிலையாக வைத்துக் கொண்டு வெவ்வேறு அரசியல் சூழ்நிலைகளில் தேவையான நடைமுறை சாத்தியமான அரசியல் முடிவுகளை எடுப்பது என்பதுதான் நடைமுறை வியூகம். அதில் மிக முக்கியமானது பாசிச சக்திகளுக்கு எதிராக எப்போதும் போராடுவது என்ற அடிப்படை அரசியல் கொள்கை. இதில் இடதுசாரிகளுக்கு எப்போதும் தடுமாற்றம் ஏற்பட்டது இல்லை. 

காங்கிரசின் இரண்டு யுபிஏ அரசாங்கங்கள் இருந்த பத்தாண்டு காலம் போல 2014க்கு பிறகு வலதுசாரி இந்துத்துவா பாசிச சக்தி ஆட்சியில் இருந்த பத்தாண்டு காலம் இல்லை. மைனாரிட்டி அரசு தான் என்றாலும் 2024இல் ஆட்சியில் ஏறிய வலதுசாரி பாசிச சக்தி அரசின் நகர்வுகள் முன்னைவிட அதிக வெறியுடன் செல்வதை பார்க்க முடிகிறது.

800 க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற தொகுதிகளை உருவாக்குவது, வக்பு வாரிய திருத்த சட்டம், அடுத்து கத்தோலிக்க திருச்சபை வைத்துள்ள சொத்துக்களின் மீது நடவடிக்கை, ஒரே நாடு ஒரே தேர்தல், அடுத்தது one nation no election, உச்சநீதிமன்றத்தை கடுகளவு கூட மதிக்காத புல்டோசர் இடிப்பு கலாச்சாரம், ஏற்கனவே 2019 இல் அனைத்து மாநிலங்களுக்கும் ஒன்றிய பாசிச அரசு அனுப்பிய ( சிறுபான்மை மக்களை அடைத்து வைப்பதற்கான) ' தடுப்பு காவல் முகாம்களை கட்டுவதற்கான வழிகாட்டு நெறிகள் ', அத்தகையதொரு அசாம் தடுப்பு காவல் முகாமில் ஏறத்தாழ 30 பேர் மரணம் அடைந்தது, ஏறத்தாழ ஆயிரம் பேர் அடைத்து வைக்கப்பட்டது என்ற யதார்த்தம்,
சட்டத்துறை அமைச்சர், ராஜ்யசபா தலைவர் ஆகியோரின் மிரட்டல் தொனியில் ஆன உச்ச நீதிமன்றத்திற்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை, பொருளாதார முனையிலும் மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதிலும் ஏற்பட்டுள்ள தொடர் தோல்வி... இவை அனைத்தும், ஒன்றிய பாசிச அரசு தனது மக்கள் விரோத பாசிச நடவடிக்கைகளை மேலும் கூராக்கும் என்பதையே தெளிவாக சொல்கின்றன. தேவைப்படும் நேரத்தில் தனது கூட்டணி கட்சிகள் அனைத்தையும் விழுங்கவோ அழிக்கவோ கூட பாசிசம் தயங்காது. இந்தியாவில் இப்போதும் ஜனநாயகம் நீடித்துக் கொண்டிருப்பதாக ஒரு சில கட்சிகள் கருதலாம். அது உண்மை அல்ல என்பதை நடப்பு அரசியல் சூழலும் கள எதார்த்தமும் தொடர்ந்து காட்டிக் கொண்டிருக்கிறது. அத்தகைய கட்சிகள் நமது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டிய சூழ்நிலை வந்தே தீரும்.

இந்த சூழ்நிலையில்தான் இந்தியா கூட்டணியின் வலிமையை மேலும் உறுதிப்படுத்தவும் கூட்டணியின் உறுப்பினர் கட்சிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் ஆன நியாயமான தேவை உள்ளது.

19.4.25

கருத்துகள் இல்லை: