1
உண்மையில் உன்னிப்பாக கவனிக்க வேண்டியது எது? - தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதா அல்லது தொகுதிகளின் எல்லையை மறுவரையறை செய்வதா?
Delimitation எனப்படும் தொகுதிகள் மறு வரையறை செயல்பாட்டில் மூன்று வெவ்வேறு அம்சங்கள் உள்ளடங்கியுள்ளன. 1. நாடாளுமன்றத்தில் மாநிலங்களின் உறுப்பினர் எண்ணிக்கையை திருத்தி அமைப்பது; அந்தந்த மாநில சட்டமன்றங்களின் உறுப்பினர் எண்ணிக்கையை திருத்தி அமைப்பது. 2. தொகுதிகளின் எல்லையை மீண்டும் திருத்தி அமைப்பது. 3. எந்தெந்த தொகுதிகளை பட்டியலின, பழங்குடியினத்தை சேர்ந்தவர்களுக்கு ஆன ரிசர்வ் தொகுதிகளாக அறிவிப்பது.
2
1971 மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பின் நாடாளுமன்றம் ஒரு அரசியலமைப்பு சட்ட திருத்தத்தை நிறைவேற்றியது. அதாவது குடும்பக் கட்டுப்பாடு திட்டம் என்ற ஒரு திட்டம் தீவிரமான முறையில் நடைமுறைப்படுத்தப்பட்ட அந்த நிலையில் தொகுதி மறுவரையறை என்ற செயல் திட்டத்தை 25 வருடங்களுக்கு நிறுத்தி வைப்பது என்ற திருத்தம் அது. 1976 ஆம் ஆண்டு இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சி அரசு எமர்ஜென்சியை நடைமுறைப்படுத்தியிருந்த காலம் அது. எனவே தொகுதி மறு வரையறை என்ற செயல்திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்த நிறுத்தி வைப்பு என்பது 2001 ஆம் ஆண்டு வரை செல்லுபடி ஆகும். எனவே 1999 முதல் 2004 வரை இருந்த வாஜ்பாய் அரசு, இப்போது தொகுதி மறு வரையறை என்ற செயல்திட்டத்தை கையில் எடுத்தது. ஆனால் முதலாம் அம்சமான தொகுதிகளின் எண்ணிக்கையை மறு பரிசீலனை செய்வது என்பதை மட்டும் நிறுத்தி வைத்துவிட்டு மீதி இரண்டு அம்சங்களை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளலாம், அதற்கான வேலைகளை தொடங்கலாம் என்று முடிவு செய்தது. சரியாக சொன்னால் முதலாம் அம்சத்தை 25 வருடங்களுக்கு நிறுத்தி வைக்க பரிந்துரைத்தது.
ஆனால் 2001 ஆம் ஆண்டுக்குப் பிறகு 2006, 2007 ஆம் ஆண்டுகளில் இரண்டாவது, மூன்றாவது அம்சங்களை அடங்கிய தொகுதி மறு வரையறை செயல்பாடு தொடங்கியது. அதன்படி மாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கை மறுபரிசீலனைக்கு உள்ளானது. மட்டுமின்றி இரண்டாவது அம்சத்தின் படி தொகுதிகளின் எல்லையும் வடிவமும் கூட மாற்றி அமைக்கப்பட்டது. டெல்லி மாநிலம் ஏழு நாடாளுமன்ற தொகுதிகளை தக்க வைத்துக் கொண்டாலும் இரண்டு தொகுதிகளின் எல்லைகள் சுருக்கியும் வெட்டியும் விரித்தும் ஆட்சி அமைக்கப்பட்டன.
எனவே இப்போது 25 வருடங்கள் முடிந்து விட்ட நிலையில் மீண்டும் தொகுதி மறுவரையறையை செய்து முடித்தே ஆக வேண்டும் என்று 2014ஆம் ஆண்டு பதவி ஏற்ற பிஜேபி அரசு உறுதியாக நிற்கிறது.
3
இந்த வருடம் ஏப்ரல் மாதம் பிஜேபி அரசு நாடாளுமன்ற மக்களவையில் 3 மசோதாக்களை தாக்கல் செய்தது. அது 131ஆவது அரசியல் சட்ட திருத்த மசோதா என்று அறியப்பட்டது. அதன்படி நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆக உயர்த்துவதற்கு வழி செய்தது. 2011 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் இது செய்யப்படும் என்று முன் வைத்தது. ஆனால் மசோதா சட்டமாவதற்கு தேவையான 352 உறுப்பினர்களுடைய ஆதரவை பெறவில்லை. ஆதரவாக 298 வாக்குகளும் அதற்கு எதிராக 230 வாக்குகளும் மட்டுமே அந்த மசோதாவுக்கு கிடைத்தது. இதே மசோதாவில் மகளிர்க்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டை உள்ளே நுழைத்து பிஜேபி மோடி அரசு இது மகளிர் உரிமைக்கான மசோதா என்று பிரச்சாரம் செய்து திசை திருப்ப பார்த்தது. ஆனால் அவரது பிரச்சாரம் முறியடிக்கப்பட்டது.
சட்டம் என்ன சொல்கிறது? மகளிர்ககான இட ஒதுக்கீடு ஆனாலும் பட்டியலின பழங்குடி மக்களுக்கான இட ஒதுக்கீடு ஆனாலும் தொகுதிகள் மறுவரை செய்யப்பட்ட பிறகே அந்த இட ஒதுக்கீட்டை செய்ய முடியும்.
4
தொகுதி மறு வரையறை என்ற விஷயத்தில் இரண்டாவதான தொகுதிகளின் எல்லையை சுருக்குவது வெட்டுவது அல்லது விரிவாக்குவது என்பதுதான் இங்கே கவனிக்கப்பட வேண்டியது.
நடந்து முடிந்த ஜம்மு காஷ்மீர், அசாம் மாநில சட்டமன்றத் தேர்தல்கள் தொகுதி எண்ணிக்கையை மறுபரிசீலனை செய்த பின்பும் தொகுதிகளின் எல்லையை மறுபரிசீலனை செய்த பின்பும் நடந்தவை. அந்தத் தேர்தல்களின் முடிவுகள் பிஜேபிக்கு சாதகமாக அமைந்தன என்பது தெள்ளத் தெளிவான ஒன்று. இது எதிர்க்கட்சிகளின் கடும் விமர்சனத்திற்கு மட்டுமல்ல ஜனநாயகத்தை நம்புவோர் அனைவருடைய கடுமையான விமர்சனத்திற்கும் ஆளானது.
இந்த இரண்டாவது அம்சமான தொகுதிகளின் எல்லையை சுருக்குவது அல்லது விஸ்தரிப்பது அல்லது சிதைப்பது என்பது முதலாவது அம்சத்தை பெருமளவில் பாதிக்கின்ற ஒன்று.
சமூக சிந்தனையாளரும் செயற்பாட்டாளருமான யோகேந்திர யாதவ் அவர்கள் 2.6.2026 தேதியிட்ட பிரண்ட்லைன் இதழுக்கு அளித்துள்ள நேர்காணலில் சில அம்சங்கள் குறிப்பிடத்தக்கவை. அவர் கூறுகிறார்: நமது நாடு பொதுவாக மூன்று வெவ்வேறு பிரிவினை அம்சங்களை கொண்டவை, ஆனால் மூன்றும் ஒன்றோடு ஒன்று பிணைந்தும் கவிந்தும் இருப்பவை. 1. புவியியல் ரீதியான பிரிவினை: அதாவது வடக்குக்கும் தெற்குக்கும் இடையேயான பிரிவினை.
2. மொழி அடிப்படையிலான பிரிவினை: ஹிந்தி பேசும் மாநிலங்கள், ஹிந்தி அல்லாத பிறமொழி பேசும் மாநிலங்கள் இவற்றுக்கு இடையிலான பிரிவினை. கூர்மையாக சொன்னால் பெரும்பான்மையான தென்னிந்திய மாநிலங்கள் ஒருபுறமும், வட இந்திய மாநிலங்கள் மறுபுறமும் இந்த அடிப்படை பிரிவினையை சேர்வன. பஞ்சாப் போன்ற சில மாநிலங்கள் இதில் விதிவிலக்கு.
3. பொருளாதார வளர்ச்சி அடிப்படையிலான பிரிவினை. இது கடந்த 20 வருடங்களில் உதித்த ஒன்று. உதாரணமாக நீங்கள் குஜராத்தின் அகமதாபாத்துக்கும் தெற்கே ஹைதராபாத்துக்கும் இடையிலான ஒரு கோட்டை வரைந்து இருப்பீர்கள் என்றால் கோர்ட்டுக்கு ஒருபுறம் இருக்கின்ற மாநிலங்கள் இரண்டாம் உலகத்திலும் கோர்ட்டுக்கு மறுபுறம் இருக்கின்ற மாநிலங்கள் மூன்றாம் உலகத்திலும் இருப்பதை பார்ப்பீர்கள். அதாவது பொருளாதாரத்தில் வளர்ச்சி அடைந்த மாநிலங்கள் ஒருபுறமும் இன்னமும் ஏழ்மை நிலையிலேயே இருக்கக்கூடிய மாநிலங்கள் மறுபுறமும் இருப்பதை காண்பீர்கள். வேண்டுமானால் சில விதிவிலக்குகள் இருக்கலாம்.
இந்த மூன்று பிரிவினையின் அடிப்படையில் மட்டுமின்றி நான்காவதாக ஒரு பிரிவினையும் சேர்க்க வேண்டி இருக்கிறது. அதாவது தொகுதிகள் மறுவறைக்கு பின்பாக அதனால் பலன் அடையக்கூடிய மாநிலங்கள் ஒருபுறமும் நஷ்டம் அடையக்கூடிய மாநிலங்கள் ஒரு புறமும் என புதிய பிரிவினை ஒன்று உருவாகும். இந்த நான்காவது பிரிவினை தான் தேச ஒற்றுமை என்ற உயரிய விழுமியத்தை பாதிக்க இருக்கிறது. மொத்தத்தில் எந்த ஒரு குறிப்பிட்ட பகுதியை எடுத்துக் கொண்டாலும் இந்த நான்கு பிரிவினைகளும் ஒன்றின் மேல் ஒன்று கவிந்து கிடப்பது என்பது உறுதி.
இந்த நான்காவது பிரிவினையின் அடிப்படையில் கணக்கிட்டால் நஷ்டம் அடையும் மாநிலங்கள் என்று தமிழ்நாடு கேரளா ஆந்திர பிரதேசம் தெலுங்கானா கர்நாடகா ஒரிசா மேற்கு வங்காளம் பஞ்சாப் ஆகியவற்ற சொல்லலாம். இந்த வரிசையில் ஒரு ஒற்றுமை இருப்பதை பார்ப்பீர்கள். அதாவது முதலில் சொன்ன மூன்று பிரிவினைகளும் இந்த மாநிலங்களில் ஒன்றுக்கொன்று பிணைந்து கவிழ்ந்து இருப்பதை பார்க்க முடியும்.
ஆக இறுதியாக, தென் இந்திய மாநிலங்கள் அனைத்தும் ஒரு பக்கமும் இந்தி மொழி பேசக்கூடிய வட இந்திய மாநிலங்கள் மறுபக்கமும் இருப்பதை பார்ப்பீர்கள். தொகுதி மறு வரையறைக்கு பின்பு மேற்கூறிய நான்கு பிரிவினைகளும் இந்த கட்டமைப்பை வடிவமைப்பதை பார்ப்பீர்கள்.
5
தொகுதி மறுவரையறை என்ற திட்டத்தில் இரண்டாவது அம்சமான தொகுதிகளின் எல்லைகளை சுருக்குவது வெட்டுவது அல்லது சிதைப்பது என்பது பிஜேபிக்கு எவ்வாறு சாதகமாக அமைந்தது என்று சொன்னேன். அதை இங்கே பார்ப்போம்.
2006, 2007ஆம் ஆண்டுகளில் அசாம், ஜம்மு காஷ்மீர், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் மறுவரையறை நடக்கவில்லை, ஆனால் 2020, 2023 ஆகிய இரு வருடங்களில் நடந்தது.
அசாமின் லாஹரிகட் Laharighat தொகுதியை பார்ப்போம். இந்த தொகுதியின் எல்லைகளை மறு வரையறை செய்தபோது இஸ்லாமிய மக்கள் பெரும்பான்மையாக வாழக்கூடிய பகுதிகளை இணைத்து உள்ளடக்கி ஒரு நாடாளுமன்ற தொகுதியை உருவாக்கினார்கள். அதாவது அங்கே 60% இருந்த இஸ்லாமியர்களுடைய எண்ணிக்கை ஒரு தொகுதியில் 95 சதவீதமாக உயர்ந்தது. மற்றொரு புதிய தொகுதியில் 40% ஆக இருந்த இஸ்லாமியர்களுடைய எண்ணிக்கை 20% ஆக குறைந்தது. இதன் பொருள் சுவாரஸ்யமானது, மோசடியானது. இந்த எல்லை மறுவரையறைக்கு முன் இந்த இரண்டு தொகுதிகளும் பிஜேபி வேட்பாளர்களுக்கு எப்போதுமே சாதகமாக இருந்தது இல்லை. ஆனால் இப்போது இரண்டாவதான தொகுதியில் பிஜேபி உறுதியாக வெல்லும் என்ற நிலை உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாது என்ற நிலை மாறி ஒரு தொகுதியிலாவது வெற்றி பெற முடியும் என்ற தந்திரமான ஏற்பாடு செய்யப்பட்டது.
இவ்வாறு அஸ்ஸாமில் தேர்தலுக்கு முன்பாகவே பிஜேபி 20 தொகுதிகளில் தேர்தல் கமிஷனுடைய தொகுதி மறுவரையறை மூலம் வெற்றி பெற்றுவிட்டது! அசாமில் தேர்தலுக்கு முன்பாகவே அந்த மாநிலத்தின் முதல்வர் இப்படி பகிரங்கமாக பேசினார்: " மியான்களின் செல்வாக்கால் வெற்றி தோல்வி முடிவு செய்யப்படும் எனில் அது 20 தொகுதிகளுக்கு மேல் இருக்கக் கூடாது." மியான்கள் என்றால் இஸ்லாமியரை குறிப்பிடுகிறார். 36 தொகுதிகளில் இருந்து 22 ஆக குறைக்கப்பட்டதற்கு அவர் தேர்தல் கமிஷனுக்கு நன்றி தெரிவித்தார்!
இன்னும் கூட கூர்மையாக கவனித்தால் அவரது கட்சியான பிஜேபி வெற்றி பெற்ற இடங்களில் சட்டமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை மறுவரையறையில் அதிகரிக்கப்பட்டு இருந்தது. அதாவது ஒரு நாடாளுமன்ற தொகுதியில் 12 சட்டமன்ற தொகுதிகளும் மற்றொரு நாடாளுமன்ற தொகுதியில் வெறும் ஆறு சட்டமன்ற தொகுதிகளும் இருந்தன. இஸ்லாமியர் ஒருவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டால் உறுதியாக வெற்றி பெறுவார் என்று தெளிவாகத் தெரிந்த தொகுதிகள் கூட பட்டியல் இன மக்களுக்கான ரிசர்வ் தொகுதி என்று தேர்தல் ஆணையத்தால் (மோடி அரசால் என்பது சரி) முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது. இது அடிப்படை தார்மீக நெறிகளுக்கு, ஜனநாயக விழுமியங்களுக்கு எதிரானது இல்லையா?
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஒரு நாடாளுமன்ற தொகுதியில் இமயமலையின் 2 பகுதிகள் அடங்குகின்றன. புவியியல் ரீதியாக இதை எப்படி நியாயப்படுத்த முடியும்?
2020 ஆம் ஆண்டு அங்கே மேற்கொள்ளப்பட்ட தொகுதி மறுவரையறைக்கு பின்பாக உருவாக்கப்பட்ட ஆறு புதிய சட்டமன்ற தொகுதிகளில் ஐந்து தொகுதிகள் இந்து மத வாக்காளர்கள் அதிகமாக இருக்கும் வகையில் உறுதி செய்யப்பட்டன. எதிர்பார்க்கப்பட்டது போலவே 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஐந்து தொகுதிகளிலும் பிஜேபி வெற்றி பெற்றது. (Peoples democracy, 12.7.2026)
6
ஆங்கிலத்தில் ஜெரிமான்ரிங் Gerrymandering என்று சொல்லக்கூடிய இந்த தந்திரமானது அமெரிக்காவில் உதித்தது. அதாவது வாக்காளர்களின் வாக்குகளை ஒரே இடத்தில் ஒன்றாக திரட்டி அடைத்து வைப்பது ஒன்று. வாக்காளரின் வாக்குகளை பிரித்து கூறுகளாக்கி சிதறடிப்பது மற்றது. முன்னது பேக்கிங் packing இரண்டாவது கிராக்கிங் cracking.
எதிரியின் வாக்குகளை ஒருங்கிணைத்து ஒரே தொகுதியில் குவிப்பது ஒரு தந்திரம் ஒரு குறிப்பிட்ட இனக்குழு அல்லது மத குழுவின் வாக்குகளை பல துண்டுகளாக பிரித்து சிதறடித்து வெவ்வேறு தொகுதிகளில் பிரித்து பலவீனப்படுத்தி அவர்களது வாக்குகளின் மதிப்பை ஒன்றுமில்லாமல் செய்வது மற்றது. எனவே இந்த இரண்டாவது தந்திரத்தில் இவர்களின் வாக்குகள் ஒரு வேட்பாளரின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்க முடியாமல் அளவுக்கு நீர்த்துப்போகும்.
7
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிறந்த தேதிகள் குழு ஒன்று 2023 ஆம் ஆண்டு மார்ச் 27 அன்று இந்திய தேர்தல் ஆணையத்துக்கு சமர்ப்பித்த மனு ஒன்றில் இவ்வாறு கூறியிருக்கிறது: 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் அசாம் மாநிலத்தில் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தொகுதிகளுக்கான மறு வரையறை என்ற செயற்பாட்டை தேர்தல் ஆணையம் தொடங்கி இருக்கிறது. அசாமில் இதற்கு முன்பு சில மாவட்டங்களில் இருந்து புதிதாக நான்கு மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. ஆனால் அந்த நான்கு மாவட்டங்களை மீண்டும் பழைய மாவட்டங்களுடன் அவற்றை இணைப்பது என்ற திட்டத்தை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது என்பது மோசமான உள்நோக்கங்களை கொண்டதாகும். தேர்தல் ஆணையமானது 2023 ஜனவரி ஒன்றாம் தேதி முதல் புதிய மாவட்ட நிர்வாகங்களை உருவாக்குவதற்கான தடை உத்தரவை பிறப்பிப்பதற்கு சில மணி நேரங்கள் முன்பு ஹோஜாய், பிஸ்வநாத் சாரியாலி, பாஜாலி, டாமுள்பூர் ஆகிய நான்கு மாவட்டங்களும் இவ்வாறு கலைக்கப்பட்டது உள்நோக்கம் உடையது. ( People's Democracy, 2.4.2023).
8
தமிழ்நாடு முதல்வராக இருந்த திரு மு க ஸ்டாலின் அவர்களால் தொகுதி மறு வரையறை குறித்த ஒரு மாநாடு 2025 ஆம் ஆண்டு மார்ச் 22ஆம் தேதி நடத்தப்பட்டது. அதில் உரையாற்றிய அன்றைய கேரள முதல்வர் திரு. பினராயி விஜயன் இவ்வாறு கூறியிருக்கிறார்: தொகுதி மறு வரையறை செய்யப்படும்போது தொகுதிகளின் மொத்த எண்ணிக்கை உயர்த்தப்படும் எனில் அது இப்போது இருக்கின்ற நாடாளுமன்ற தொகுதிகளின் மொத்த எண்ணிக்கை விகிதாச்சார அடிப்படையில் மட்டுமே இருக்க வேண்டும்.
அதேபோல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு வெளியிடும் peoples democracy 23.3.2025 இதழில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது: இன்றைய சூழ்நிலையில் எடுக்கப்பட வேண்டிய பொருத்தமான நடவடிக்கை எதுவெனில் இப்போது இருக்கின்ற நாடாளுமன்ற சட்டமன்ற இடங்களில் எண்ணிக்கை குறைக்கப்படாமல் உத்தேசிக்கப்பட்டுள்ள மொத்த நாடாளுமன்ற அல்லது சட்டமன்ற இடங்களின் எண்ணிக்கை விகிதாசார அடிப்படையில் மட்டுமே புதிய தொகுதி மறுவரையறையானது செய்யப்பட வேண்டும். மக்கள் தொகை அடிப்படையில் அல்ல.
9
இந்த பின்னணியில் தமிழக அரசு கூட்டியுள்ள தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் தொகுதி மறு வரையறை மசோதாவை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் என்று தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தின் முக்கியமான கட்சிகளான திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்பதை விட புறக்கணித்தார்கள் என்பது தான் உண்மை.
தமிழக அரசு ஆனது உண்மையில் தமிழகத்தின் அரசியல் கட்சிகளை அழைத்து கூட்டம் நடத்தி இருக்க வேண்டும் என்பதுதான் சரியான அணுகுமுறையாக இருந்திருக்கும். அதை செய்யவில்லை. காவிரி நதிநீர் பிரச்சனையிலிருந்து திசை திருப்ப இப்படி ஒரு கூட்டத்தை நடத்தி இருப்பதாக தமிழக அரசு மீது குற்றச்சாட்டு இருக்கிறது.
ஒருபுறம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் தொகுதி மறு வரையறை மசோதாவை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அப்போது சேலத்தில் செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய கட்சியின் மாநில செயலாளர் தோழர் சண்முகம் தொகுதி மறுசீரமைப்பில் தமிழகத்தின் பிரதிநிதித்துவம் குறைந்து விடக்கூடாது, அதற்காக அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.
கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொகுதி மறு வரையறையை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் என்று கூறி இருக்க கட்சியின் செயலாளர் மறுசீரமைப்பில் தமிழகத்தின் பிரதிநிதித்துவம் குறைந்துவிடக்கூடாது என்று சொல்கிறார். இரண்டுக்கும் முரண்பாடு உள்ளது.
10
இந்த பதிவில் தொடக்கத்தில் சொன்னது போல முதலாவது அம்சமான நாடாளுமன்ற தொகுதிகள் அல்லது சட்டமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்துவது என்பதை விடவும் இரண்டாவது அம்சமான தொகுதிகளின் எல்லையை மத அடிப்படையில் இன அடிப்படையில் அல்லது சாதிகள் அடிப்படையில் வெட்டி சுருக்குவது சிதைப்பது அல்லது விரிவு படுத்துவது என்பதுதான் தேர்தல் ஆணையத்தின் துணையோடு பிஜேபி மோடி அரசு செய்து வருகின்ற, இனிமேலும் செய்யப் போகின்ற ஆகப் பெரிய ஜனநாயக விரோத நடவடிக்கையாகும்.
உண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர்களுடைய எண்ணிக்கை 850 ஆக இருந்தாலும் அல்லது ஆயிரமாக இருந்தாலும் இந்த இரண்டாவது அம்சம்தான் அவர்கள் மெஜாரிட்டியை தாண்டியும் மிகப்பெரிய மிருக பலத்துடன் எதிர்காலத்தில் தொடர்ந்து ஆட்சியை தக்க வைக்கும் ஒரு சர்வாதிகார சக்தியாக இருப்பார்கள் என்பதை உறுதிப்படுத்துகிறது.
ஒரு கட்டத்தில் தொகுதிகளின் எண்ணிக்கை குறித்தான முதலாவது அம்சம் குறித்து பிஜேபி அல்லாத கட்சிகள் முன்வைக்கின்ற கோரிக்கைகளையும் வலியுறுத்தல்களையும் மோடி அரசும் தேர்தல் ஆணையமும் மிகத் தந்திரமாக ஒத்துக் கொண்டு விடுவார்கள். அதன் பிறகு இரண்டாவது அம்சத்தை திட்டமிடவும் செயல்படுத்தவும் ஆன அனைத்து அதிகாரமும் மோடி அரசுக்கும் தேர்தல் ஆணையத்துக்கும் மட்டுமே இருக்கும். அப்போது எதிர்க்கட்சிகளால் ஒன்றும் செய்ய முடியாது, வேடிக்கை பார்க்க மட்டுமே முடியும்.
எனவே இடதுசாரிகளும் ஜனநாயக சக்திகளும் இந்த இரண்டாவது அம்சம் குறித்துத்தான் மிகுந்த கவலைப்பட வேண்டிய நிலையில் இருக்கிறோம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். வெறும் தொகுதி எண்ணிக்கையை மட்டும் பேசிக் கொண்டிருப்பது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதாகும்.
11.8.2026

1 கருத்து:
ஆழமான ஆய்வு
தங்கள் ஆதங்கம் யார் செவிகளிலும் விழுவதாக தெரியவில்லை
காங்கிரஸ் திமுக இரண்டும் தான் கவனிக்க வேண்டும்
கருத்துரையிடுக