திங்கள், ஆகஸ்ட் 24, 2026

அரசாங்க டெண்டர் முறை: விதிகள்

அரசுக்கான பொருள் அல்லது சேவை கொள்முதல், ஒரு சேவை அல்லது பொருளுக்கான டெண்டருக்கான உத்தேச தொகை மதிப்பீட்டை நிர்ணயம் செய்வது,  டெண்டர் வரைவது, வெளியிடுவது, கேட்பாணை, RFP, பல்வகை டெண்டர்கள், அவற்றுக்கான நிபந்தனைகள், தகுதியான ஒப்பந்த புள்ளிகளை எவ்வாறு மதிப்பீடு செய்வது, சந்தேகத்துக்கு உரிய ஒரு ஒப்பந்த புள்ளியை எவ்வாறு அணுக வேண்டும்? இவை குறித்த பொதுவான விதிகள் என்ன?

அரசு நிதி நிர்வாகத்தின் அடிப்படை நெறி என்னவெனில் அரசு நிதியை செலவு செய்யும் அதிகாரம் படைத்த எந்த ஒரு அதிகாரியும் தனது சொந்தப் பணத்தை செலவு செய்யும்போது எத்தனை கவனமாக, எச்சரிக்கையாக, சிக்கனமாக செலவு செய்வாரோ அத்தனை கவனமாக செயல்பட வேண்டும், ஏன் எனில் அரசு நிதி அல்லது பணம் என்பது மக்களின் பணம் என்பதுதான்.

பொதுவாக ஒன்றிய அரசாங்க நிதி அல்லது பண நிர்வாகத்தை எப்படி நடத்துவது, அதற்கான விதிகள், அதிகார மட்டம் ஆகியவை General Financial Rules எனப்படும் விதி தொகுப்பில் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளன. இந்த விதிகளின் வரம்பை மீறாமல், தார்மீக நெறிகளை மீறாமல் ஒவ்வொரு தனித்துறையும் தமக்கான நிதி நிர்வாக விதிகள், நெறிமுறைகளை அரசின் ஒப்புதலுடன் வகுத்துள்ளன. இந்த விதிகள்தான் ஒவ்வொரு துறையின் நிதி நிர்வாகத்தை வழி நடத்துகின்றன, கட்டுப்படுத்துகின்றன.

மறுபுறம் C&AG உள்ளிட்ட தணிக்கை கட்டுப்பாடு அமைப்புகள், ஒன்றிய கண்காணிப்பு கமிசன் எனப்படும் Central Vigilance Commission ஆகியவை அரசின் செலவுக்கணக்கை தணிக்கை செய்யவும் தொடர்ச்சியான அறிவுறுத்தல்கள், வழிகாட்டு நெறிகளை வகுக்கவும் ஆன சுதந்திரமான அமைப்புக்களாக செயல்படுகின்றன. 


பொதுவாக அரசு நிர்வாகத்தில் single tender, limited tender, open tender, global tender, PAC எனப்படும் proprietary article certificate அடிப்படையில் ஆன டெண்டர், வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படக்கூடிய ஓபன் ஜெனரல் லைசன்ஸ் அடிப்படையிலான டெண்டர் என பல வகைகள் உள்ளன. 

இவை யாவும் மிகுந்த கவனத்துடன் நீண்ட நாட்கள் திட்டமிடப்பட்டு முறையான அறிவிப்பு, அதைத் தொடர்ந்து நீண்ட கட்டாயம் ஆன பல நடைமுறைகள், இறுதியான கொள்முதல் ஆணை என பல படிகள் இருப்பதால் நீண்ட காலம் எடுக்க கூடியவை. எனவே அரசு நிர்வாகத்தில் அன்றாட நடவடிக்கைகள், தேவைகள் அடிப்படையில் ஓரிரண்டு நாட்களில் அல்லது எமர்ஜென்சி  அடிப்படையில் பொருட்களை அல்லது சேவையை வாங்குவதை அனுமதிக்க கூடிய வேறு சில கொள்முதல் வழிமுறைகளும் சட்டப்படி உள்ளன.

ஒரு கம்ப்யூட்டரை வாங்குவதற்கு ஒரு அரசுத்துறை விரும்புகிறது. எனில் தேவைப்படும் கம்ப்யூட்டர்க்கான வேலைத்திறன் உள்ளிட்ட தொழில்நுட்ப தேவைகளை, நிபந்தனைகளை வரையறுத்து அவற்றை மட்டுமே டெண்டரில் அறிவிக்க வேண்டும். இதற்கு டெக்னிகல் requirement அல்லது specification ஐ freeze செய்வது என்று பெயர். பொதுவாக இந்த requirement ஐ பிறகு திருத்தவோ வளைக்கவோ முடியாது. ஒருவேளை தேவை அடிப்படையில் டெண்டர் வெளியிட்ட பிறகும் கூட அவ்வாறு திருத்தம் செய்ய வேண்டும் எனில் அதுவும் கூட முறையாக பொதுவெளியில் வெளியிடப்பட வேண்டும், உத்தேசமான அனைத்து போட்டியாளர்களுக்கும் இது முறையாக தெரிவிக்கப்பட வேண்டும். ஒளிவு மறைவு கூடாது. 

முக்கியமாக ஒரு பொருளின் பிராண்ட் பெயர்களை குறிப்பிட்டு இதுதான் வேண்டும் என்று அறிவிக்க கூடாது. உதாரணமாக Hcl, சாம்சங், ஏசர், லெனோவா என்று இந்த பிராண்ட்தான் வேண்டும் என்று கோர முடியாது. பிராண்ட் பெயர்களை குறிப்பிட்டு அதுதான் வேண்டும் என்று டெண்டர் வரையக்கூடாது. 

இதற்கு மேலும் ஒரு குறிப்பிட்ட தகுதி உடைய கணினிதான் வேண்டும் எனில் அத்தகைய ஒரு குறிப்பிட்ட கணினியை ஒன்றுக்கு மேற்பட்ட நிறுவனங்கள் உற்பத்தி செய்திராத நிலையில் குறிப்பிட்ட தகுதியுடன் உற்பத்தி செய்யக்கூடிய ஒரே ஒரு கம்பெனிதான் இருக்கிறது எனில்
அந்த ஒரே ஒரு நிறுவனத்துக்கு அந்த டெண்டரை proprietary article certificate என்ற தகுதி அடிப்படையில் வழங்க முடியும். அதாவது இந்த குறிப்பிட்ட தகுதியுடைய கம்ப்யூட்டரை நாங்கள் மட்டுமே சந்தையில் உற்பத்தி செய்கிறோம் என்று அந்த நிறுவனம் ஒரு சான்று ஆவணத்தை சமர்ப்பிக்க வேண்டும். அதையும் அரசு ஆய்வு செய்து ஒத்துக்கொள்ள வேண்டும்.

ஆனால் இந்தத் தேவை ஆனது குறிப்பிட்ட கம்பெனிக்கு சாதகமாக, அதாவது நமது தேவையை மீறிய அல்லது தேவை இல்லாத ஒரு குறிப்பிட்ட டெக்னிகல் தகுதியை வேண்டுமென்றே நிபந்தனையில் புகுத்தி இருக்கக் கூடாது என்பதை கவனிக்க, கண்காணிக்க வேண்டிய பொறுப்பு பல்வேறு மட்டங்களில் இருக்கிறது, அது பற்றி நாம் இங்கே பேச வேண்டாம். இதன் பொருள் ஒரு குறிப்பிட்ட கம்பெனிக்கு சாதகமாக அதன் பொருளை வாங்கினால் மக்கள் பணம் வீணடிக்கப்படும் என்பதுதான். ஒவ்வொரு பைசாவும் மக்கள் பணம்தான் என்பது பொது விதி.

பொத்தாம் பொதுவான டெக்னிகல் தகுதியும் தேவையும் இருந்தால் அது அனைவரும் போட்டியிடக் கூடிய திறந்த போட்டிக்கான open tender முறையில் புள்ளிகள் கோரப்படும், பிற நிபந்தனைகளுடன்.

அடுத்தது மிக முக்கியமானது: ஒரு பொருளின் உத்தேச விலையை estimated cost நிர்ணயிப்பது. அதே உதாரணத்தை சொல்லுவோம். ஒரு குறிப்பிட்ட திறனுடைய ஒரே ஒரு கம்ப்யூட்டரின் உத்தேச விலை மூன்று லட்ச ரூபாய் என்று வைத்துக் கொள்வோம். இந்த உத்தேச விலையை நிர்ணயம் செய்வதற்கான ஒரு குழு பொதுவாக இது standing committee என்ற தகுதியில் இருக்கும். அதில் சிலர் நிரந்தர உறுப்பினர்களாகவும் வாங்கக்கூடிய பொருளின் அடிப்படையில் சிலர் தற்காலிக உறுப்பினராகவும் நியமிக்கப்படுவார்கள். இந்தக் குழு ஆனது கூடி குறிப்பிட்ட அந்த கம்ப்யூட்டரின் உத்தேச வேலையை நிர்ணயிக்கும். 

அவ்வாறு நிர்ணயிக்கப்பட்ட உத்தேச விலை மூன்று லட்ச ரூபாய் என்று வைத்துக் கொள்வோம். குறிப்பிட்ட திறனுடைய அந்த கம்ப்யூட்டரை உற்பத்தி செய்யக்கூடிய 10 கம்பெனிகள் புள்ளிகளை சமர்ப்பிக்கிறார்கள் என்று கொள்வோம். 

ஒரு கம்பெனி மூன்றரை லட்சம், இன்னொரு கம்பெனி மூணே கால் லட்சம், இன்னொரு கம்பெனி இரண்டே முக்கால் லட்சம், ஒரு கம்பெனி ஐந்து லட்சம், ஒரு கம்பெனி வெறும் 10000 ரூபாய், மீதி கம்பெனிகள் நான்கு லட்சம் என்று உத்தேச புள்ளிகளை tender ஆக சமர்ப்பிக்கிறார்கள் என்று கொள்வோம்.

உத்தேச விலை 3 லட்சம் ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்ட ஒரு கம்ப்யூட்டரை ஒரு கம்பெனி 10,000 ரூபாய்க்கு கொடுக்க தயாராக இருக்கிறது என்று முதல் பார்வையில் பார்க்கும்போது 'ஆஹா இதுதான் சரியான சந்தர்ப்பம், அந்த கம்பெனியிடமிருந்து வாங்கலாமே' என்று தோன்றும். ஆனால் டெண்டர் புள்ளிகளை பரிசீலனை செய்யும் குழு அந்த முடிவுக்கு வராது. ஏனெனில் பத்தாயிரம் ரூபாய் செலவில் குறிப்பிட்ட திறன் உடைய அந்த கம்ப்யூட்டரை உற்பத்தி செய்யவே முடியாது என்பது டெண்டர் கமிட்டியில் இருக்கின்ற அதிகாரிகள் நன்கு அறிவார்கள். எனவே இந்த 10,000 ரூபாய் புள்ளியை சமர்ப்பித்த கம்பெனியிடம் விரிவான விளக்கம் கேட்கப்படும். குறிப்பிட்ட கம்பெனியிடம் costing break up அதாவது குறிப்பிட்ட கம்ப்யூட்டரை பத்தாயிரம் ரூபாயில் எவ்வாறு செய்ய முடியும் என்பதை விளக்குமாறு வலியுறுத்த முடியும்.

பத்தாயிரம் ரூபாய் செலவில் எப்படி இந்த டெக்னிகல் தகுதி நிபந்தனைகளுடன் கூடிய கம்ப்யூட்டரை உங்களால் உற்பத்தி செய்து தர முடியும், எதிர்காலத்தில் இதேபோன்று அதிக அளவில் இதே கம்ப்யூட்டர்கள் தேவைப்பட்டால் இதே விலையில் உங்களால் சப்ளை செய்ய முடியுமா போன்ற பல கேள்விகள் அங்கே எழுப்பப்படும். இவ்வாறு டெக்னிகல் அடிப்படையில் ஆய்வு செய்யபட்ட பின், அந்த குறிப்பிட்ட கம்பெனியின் விளக்கம் சரியானது அல்ல, திருப்தியானது அல்ல என்று முடிவாகும் பட்சத்தில் அந்த கம்பெனியின் விலை புள்ளி தள்ளுபடி செய்யப்படும். அதாவது குறிப்பிட்ட கம்பெனி போட்டியில் இருந்து விலக்கப்படும்.

அதே நேரத்தில் நான்கு லட்சம் ரூபாய் புள்ளியை கொடுத்திருக்கின்ற கம்பெனியின் கம்ப்யூட்டர் தரத்தில் உயர்ந்தது என்ற முடிவுக்கும் வர முடியாது. எனவே technical அடிப்படையில் அனைத்து ஒப்பந்த புள்ளிகளையும் ஆய்வு செய்து அனைத்து கம்பெனிகளும் டெக்னிக்கல் அடிப்படையில் சம தகுதி உடையன என்று முடிவுக்கு வரும்போது lowest (L-1 என்று அழைப்பார்கள்) அதாவது மிகக் குறைவான விலையை முன் வைத்த கம்பெனியிடம் இருந்து வாங்கலாம் என்று முடிவு செய்யப்படும், அந்த கம்பெனிக்கு கொள்முதல் ஆணை supply order அல்லது purchase order வழங்கப்படும். இங்கே இரண்டே முக்கால் லட்சம் விலையை முன்வைத்த கம்பெனி வெற்றி பெறும். 

அடிப்படையான கோட்பாடு இதுதான்: நம்ப முடியாத அளவில் மிக குறைந்த விலையை முன் வைக்கும் ஒரு நிறுவனத்தின் நம்பகத்தன்மை கேள்விக்கு உரியது. அதன் கடந்த கால வரலாறு, பொருளாதார ஸ்திர தன்மை, நேர்மை, குறிப்பிட்ட பொருள் அல்லது சேவையை அந்த நிறுவனத்தால் எதிர்காலத்தில் சப்ளை செய்ய முடியுமா, இதே குறிப்பிட்ட பொருள் எதிர்காலத்தில் மிக அதிக எண்ணிக்கை அளவில் தேவைப்படும் போது அதே விலையில் அந்த நிறுவனத்தால் சப்ளை செய்ய முடியுமா என பல்வேறு கோணங்களில் அனைத்தும் பரிசீலனை செய்யப்படும். அதற்கான உரிமை அரசு நிர்வாகத்துக்கு இருக்கிறது.

இங்கே இன்னொன்றையும் குறிப்பிட வேண்டும். உத்தேச விலை மூன்று லட்சம் ரூபாய் என்று இருக்க ஏதாவது ஒரு கம்பெனி ஏழு லட்சம் ரூபாய் என்று புள்ளி நிர்ணயம் செய்து டெண்டர் சமர்ப்பித்தால் அந்த கம்பெனியினுடைய புள்ளியும் கேள்விக்கு உரியது. 

தவிர, உத்தேச விலை மூன்று லட்சம் என்று நிர்ணயம் செய்யப்பட்ட நிலையில், பல கம்பெனிகள் மிக அதிகமான, உதாரணமாக ஆறு லட்சம், ஏழு லட்சம் என்று தமது புள்ளிகளை சமர்ப்பித்து இருக்கும் பட்சத்தில் அவ்வாறான புள்ளிகள் அந்த கம்பெனிகளால் கூட்டாக திரை மறைவில் பேசப்பட்டு திட்டமிடப்பட்ட வகையில் கூட்டணி சேர்ந்து சமர்ப்பிக்கப்படவில்லை (ஆங்கிலத்தில் இதை cartel formation) என்று உறுதி செய்யப்பட்டால் அரசு நிர்வாகம் முடிவு செய்த மூன்று லட்ச ரூபாய் உத்தேச விலை என்பது சரியா, எந்த அடிப்படையில் அவ்வாறு முடிவு செய்யப்பட்டது என்ற கேள்வி எழுப்பப்படும். உத்தேச விலை நிர்ணயம் செய்ததில் பெரிய குறை அல்லது தவறு இருப்பது உறுதி செய்யப்பட்டால் தகுதி படைத்த அதிகாரி அந்த டெண்டரை முழுமையாக ரத்து செய்ய முடியும்.

பொதுவாக Central Vigilance Commission வழிகாட்டு நெறிகளை அரசு அதிகாரிகள் தொடர்ந்து வாசித்து உள்வாங்கி அதன் அடிப்படையில் செயல்படுவது பிரச்னைகளை தவிர்க்க உதவும்.

(வருகிற 2026 செப்டம்பர் 15-ஆம் தேதியிலிருந்து தமிழ்நாட்டில் ‘தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்’ அமலுக்கு வர இருக்கிறது. இந்தத் திட்டத்தில் கடந்த ஜூன் 22-ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பிறந்த அனைத்துக் குழந்தைகளும் பயன்பெறலாம். 

இந்தத் திட்டத்திற்கான டெண்டரை ஜாய் ஆலுக்காஸ் நகைக் கடையும், கல்யாண் ஜுவல்லர்ஸும் பெற்றுள்ளன. இதில் ஒரு கிராம் தங்கத்தின் விலையைத் தவிர்த்துச் செய்கூலி, காப்பீடு, போக்குவரத்து, BIS-தரமுத்திரை போன்ற அனைத்துக் கூடுதல் கட்டணங்களுக்கும் சேர்த்து ரூ.0.01 என ஜாய் ஆலுக்காஸ் என்ற நிறுவனம் குறைந்த விலைப்புள்ளியை அளித்திருந்தது.

அடுத்ததாக, ஒப்பந்தப்புள்ளியில் பங்கேற்ற 10 நிறுவனங்களிடம் குறைந்த விலைப்புள்ளி அளித்த நிறுவனத்தின் விலையை ஒப்பிட்டு இசைவு தெரிவிக்கக் கோரியதில் கல்யாண் ஜுவல்லர்ஸ் மட்டுமே இசைவு தெரிவித்திருந்தது. ஆகையால், இந்த இரு நிறுவனங்களுக்கும் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கான டெண்டர் சென்றுள்ளது. இது ஆனந்த விகடன் செய்தி. இந்த செய்திக்கும் இந்தக் கட்டுரைக்கும் ஒரு தொடர்பும் இல்லை.)

21/8/2026

கருத்துகள் இல்லை: