இரண்டாம் தாரம் ஆனவள் ஜமாஅத்தில் முறையிட்டு தனக்கான பொருளாதார உதவியை அல்லது உரிமையை கேட்க, தான் மட்டுமே அறிந்ததை சாதகமாக எடுத்துக்கொண்டு சொகாரா கொடும் சொற்களால் சொத்தை அபகரிக்க வேஷம் போடுவதாக அவளை கூட்டத்தின் நடுவே அவமானப்படுத்த அவள் கூசி ஒடுங்கி அங்கிருந்து சென்று விடுகிறாள்.
தன்னை வருடக்கணக்கில் ஏமாற்றிக்கொண்டு இருந்த கணவன் மீதான கோபமும் தன் கணவனை எவளோ ஒருத்தி பங்கு போட்டுக்கொண்ட கோபமும் ஒருசேர இந்த ஆத்திரத்துக்கு பலியானதோ அவளைப்போலவே ஒரு பெண்தான். இப்போது சொத்து முழுவதும் அவளுக்கே.
இதே காட்சி மீண்டும் அரங்கேறுகிறது. பாத்திரங்கள் வேறு. அதே சொகாரா தன் இறுதி மூச்சு அடங்கும்முன் மகன் சமீரை அழைத்து ஏதோ சொன்னது சமீரோடு போகிறது. ம்மா சொன்னது அவனோடு புதைகிறது.
இரண்டு பேர் அறிந்த செய்திதான் ரகசியம். உண்மை என்னவென்றால் ஏழு வயது சமீர் அன்றைக்கு இருட்டுக்கு பயந்து கதவு அருகே நின்றுகொண்டு இருக்க, அவன் இருப்பதை அறியாத அவனது அத்தா தனது இரண்டாம் தார உண்மையை உடைத்தபோது சமீரும் கேட்டுவிடுகிறான். மூன்றாம் நபர் அறிந்த பின் அது ரகசியம் இல்லையே! இப்போதும் சொகாரா சமீருக்கு சொன்னது என்னவென்று நமக்கு தெரியாது, மூன்றாம் நபர் யாரும் அங்கே இருந்தால் அன்றி நாம் அறிந்துகொள்ள வாய்ப்பு இல்லை.
மனித மனங்களின் அழுக்குகளும் தர்ம நியாயங்களும் கேள்விக்கு உள்ளாகின்றன. மறுமையின் கூரான கத்தி போன்ற கேள்விகளும் விளைவாக விதிக்கப்பட உள்ள நரக வாழ்வும் இம்மையின் சுகபோகங்களுக்காக அறிந்தே ஒத்திவைக்கப்படுகின்றன.
(கைப்பற்றப்பட்ட வசியத்)
... ...
இறந்த கணவனின் முகத்தை அவனது ஜனாஸா அங்கிருந்து தூக்கிச்செல்லப்படும் வரையிலாவது பார்த்துக்கொண்டு இருக்கும் ஒரே ஒரு வாய்ப்பையும் மனைவிக்கு மறுத்து தனி ஒரு அறையில் அடைக்கப்படும் கொடும் வழக்கத்தை யார் புகுத்தி இருப்பார்கள்? இஸ்லாமியபெண்ணின் இந்த உள்ளக்குமுறலை ஆமினா பேசுகிறார். மரண வீட்டில் மனைவியின் மீது நிகழ்த்தப்படும் மிகப்பெரிய வன்முறை என்கிறார். ஆண் எத்தனை அயோக்கியன் ஆனாலும் அவன் வாயை அடைக்க முடியாது. ஆனால் பெண்களின் ஒரே ஒரு தவறும் போதும், காலமெல்லாம் அவள் வாயை அடைக்க.
(ஆகாத தீதார்)
... ...
வெளிநாட்டில் இருந்து திரும்பி வருவோரிடம் இரண்டு பட்டியல் உள்ளது, கோடாலித்தைலம், கைலி, தாவணி அன்பளிப்பு க்கு ஒன்று; இடைப்பட்ட காலத்தில் மரணித்தவர்களின் வீடுகளுக்கு சென்று துக்கம் விசாரிப்பது இன்னொரு பட்டியல். (இருட்சிறை)
"காலைல எம்புள்ளைக அசந்து தூங்கிட்டு இருக்குங்க! எங்கத்தா வந்து பேன அமத்திட்டு போவாங்க... என் ஈரக்குலை..." என்று தன்னை பார்க்க வந்த பள்ளித்தோழி பௌசியாவிடம் கரைந்து புலம்புகிறாள் பஷீரா. "அவன் இருந்தவரை அந்த வாழ்க்கை நரகம்னு நெனச்சிட்டு இருந்தேன். கூடாட்டம் இருந்தாலும் அந்த வீடு எனக்குன்னு இருந்துச்சு.இங்கின ஒருவா கஞ்சி தொண்டைல இறக்க கூட நெஞ்செல்லாம் எனக்கு அழுத்துது".
நல்ல கணவன் கிடைப்பதுதான் வாழ்வின் ஒற்றை இலக்கு என்று பெண்களுக்கு விதிக்கப்பட்ட விதியை மாற்றி வாசிக்க சொல்கிறார் ஆமினா. கணவனை இழந்த பெண்ணுக்கு நல்ல தகப்பனும் தாயும் கூட வேண்டும்! இவை கிடைக்கப்பெறாத பெண்கள் வாழ தகுதியற்றவர்கள். உலகம் அவர்களுக்கு இல்லை.
தாய் தகப்பன் அண்ணன்மார், பின் கணவன் மாமனார் மாமியார், பின் மகன்கள் என்று யார் கையையாவது எதிர்பார்த்துக்கொண்டே நாளை, வாழ்க்கையை அல்ல, தள்ள பெண் ஜென்மத்துக்கு விதிக்கப்பட்டுள்ளது.
பள்ளிக்கூடத்தின் புதிய பரிமாணம் என்ற ஒன்றை இந்த கதையில் சொல்கிறார். ஆசுவாசப்படுத்தும் ஆறுதல் மையங்கள் என்றும் இயந்திரத்துக்கு பதிலாக பெண்களை பயன்படுத்தி கொண்ட காலகட்டங்களில் ஓய்வெடுக்கும் சொற்ப பருவத்தை பள்ளிக்கூடம் அன்பளித்துக்கொண்டு இருப்பதாகவும் சொல்வது முற்றிலும் உண்மை. படிப்பு, படிப்பு சார்ந்த எதிர்காலம் எல்லாம் கனவுகளுக்கு அப்பாற்பட்டவை, நிகழ்காலம் மட்டுமே நிதர்சனம்.
கற்ற கல்வியும் வெளிநாட்டு வாழ்க்கையும் பௌசியாவின் கண்களை அகலப்படுத்தி இருந்தன என்றும் அவர் சொல்வது எத்தனை இசுலாமிய பெண்களுக்கு அதை அவர்கள் குடும்பத்தினர் சாத்தியப்படுத்தி உள்ளனர் என்ற கேள்வியை முன்வைப்பதன்றி வேறில்லை.
(இருட்சிறை)
... ...
15, 16 வயது பள்ளிக்கூட பெண்ணுக்கு, ஹாஜிரா, அவசரத்திருமணம் செய்து வைக்கிறார்கள். மலேயாவில் அஹமது தன் குடும்பத்து ரொட்டிக்கடையில் கடுமையாக உழைக்கிறான். திருமணம் ஆன கையோடு மலேயா செல்ல மாமியார், மாமனார், நாத்தனார் கொடுமையில் இங்கே கிடந்து சிறுமி அல்லாடுகிறாள். பஞ்சாயத்து வைத்து அவளை தாய் தகப்பன் தம்முடன் அழைத்து செல்கிறார்கள். மாதாமாதம் அவன் செலவுக்கு பணம் அனுப்ப வேண்டும். கணவனுக்கும் அவளுக்கும் இடையே ஆன உரையாடல்கள் இதனை மையமாக வைத்தே வளர கசந்து போகிறது உறவு.
விடுமுறையில் வந்த இடத்தில் அஹமது விபத்தில் செத்து போகிறான். அதற்கு முன் அவனுக்கும் அவளுக்கும் நடந்த உரையாடல் " உன்னை அத்து விட போறேன்" என்று அவன் சொல்வதுடன் முடிகிறது.
அடக்கம் செய்யப்படும்வரை அவளுக்கும் இரண்டு பிள்ளைகளுக்கும் அங்கே ஒரு காப்பித்தண்ணி வச்சு தரக்கூட யாருமில்லை. அஹமதுவின் மரணம் மரத்துப்போய் வயிற்றுப்பசி அவளை ஆக்கிரமித்து கொள்கிறது. இறப்பு வீட்டின் கூட்டம் எப்போது கலையும், நிம்மதியாக மூச்சு விடலாம், ஒரு வாய் காப்பி குடிக்கலாம் என்று எதிர்பார்த்து கிடக்கிறாள். எப்போது கலையும்? அஹமதுவின் ஜனாஸா தூக்கப்பட்டால்தான் கலையும்!
ஹாஜிராவுக்காக ஊர்ப்பஞ்சாயத்தை கூட்டிய அம்மாவும் அத்தாவும் இப்போது அவளை புருஷன் வீட்டிலேயே விட்டுவிட்டு அவசரமாக வெளியேறுகிறார்கள். பயனில்லாத பெண்ணாக திரிந்துபோனாள் ஹாஜிரா. கைகழுவுகிறார்கள்.
(பொம்மக்குட்டி)
... ...
அக்காலத்திய ஆண்கள் போல் கையில் எசவாக கிடைத்த, அடிப்பதற்கும் மிதிப்பத ற்கும் ஆன பிண்டம் என மனைவியை நினைக்கும் சராசரி ஆண்தான் அப்துல். மனைவிக்கு போக்கிடம் இல்லை என தெரிந்தால் இந்த ஆண்கள் தம் மொத்த அகோரத்தையும் இறக்கி வைத்து விடுகிறார்கள்.
... இணை வைத்து பேசாத ஆண்கள் அந்த ஊரில் இல்லை. பாரிஸாவுக்கு வாய்த்த கணவனும் அப்படியே. பிற ஆண்களுடன் மட்டுமின்றி பெற்ற தகப்பன், சகோதரனுடனும் சேர்த்து பேசி அசிங்கப்படுத்துகிறான்.
கணவன் இறந்து விடுகிறான். பாரிஸா அழவில்லை. அவள் கணவன் கபருக்கு போனபின்னும். கண்ணீர் வெறும் நீரில்லை, அது மன்னிப்புக்கான மொழி. பாரிஸா அழவில்லை.
(இன்ஸ்டன்ட் புனிதம்)
... ...
வெறும் புகைப்படத்தில் தொடங்கும் கதை இறுதியில் வாசிப்பவனுக்கு ஒரு கேள்வியை வைத்து விசாரணை செய்வதில் முடிகிறது. "தீங்கிழைத்த நிலையில் யாருடைய புகைப்பட ஆல்பத்திலாவது நீங்கள் இடம் பெற்று இருக்கிறீர்களா?". ஆண் சமூகத்தை நோக்கி வீசப்பட்ட மிக கூர்மையான கட்டாரி. வாசிப்பவனின் கழுத்து அறுபடுகிறது.
(புகைப்படம்)
... ...
தனது மரணமே இறுதி மரணமாக இருக்க வேண்டும் என்பது அதாவது மற்றவர்கள் அனைவரும் கபருக்கு போன பின், அச்சத்தினின்றும் எழுவது. எதன்பொருட்டு அச்சம்? மரணம் நேர்ந்தபின் என்ன நடக்கும் என்பது தெரிந்தால் என்ன தெரியாமலேயே போனால் என்ன? அப்படியல்ல, இன்னும் வாழ வேண்டும் என்ற பேராசையில் இருந்து எழுவது இது. கொரோனாவில் மரணமுற்ற மனிதனை அடக்கம் செய்யும் நிகழ்வை ஒட்டி மனிதர்கள் இடையே நிகழும் உரையாடல் சில அப்பட்டமான உண்மைகளை முகத்தில் அறைகிறது.
(ஊர்வாய்)
... ...
எக்குத்தப்பான சாபம். ஆபிதாவின் சாபத்துக்கு ஆளான நிஜாம்தான் ஆபிதா கிழவியை மருத்துவமனைக்கு தூக்கிக்கொண்டு ஓடினான். கணவன் சம்சுதீன் மிகுந்த மனஉறுதி கொண்டவர். உம்ரா செல்ல ஆயத்தமானபோதே ஒருவேளை தான் உம்ராவில் இருக்கும்போது ஆபிதா மௌத் ஆனால் என்னென்ன செய்ய வேண்டும், எப்படி சமையல் செய்ய வேண்டும் என்ற அளவுக்கு திட்டம்போட்டு கொடுக்கும் அளவுக்கு மனஉறுதி கொண்டவர். ஊருக்குள் அவருக்கு அப்படி ஒரு மரியாதை.
ஆபிதா அநேகமாக இறந்து விட்டாள் என்ற நிலையிலும் கூட டாக்டர் வந்து உறுதிசெய்யும் வரை காத்திருக்கிறார். இறப்பு உறுதியான பின் நிலைகுலைந்து பெருங்குரல் எடுத்து அழுகிறார். ஊரே அதிர்ச்சி அடைகிறது. அது சம்சுதீனின் அழுகை அல்ல. தனிமை வாழ்க்கைக்கு அடி எடுத்து வைக்கும் ஓர் ஆணின் அழுகை. காலம் நெடுகிலும் பெண்ணை அதிகாரம் செய்து ஆனால் அவள் உழைப்பில் அண்டி வாழ்ந்து வந்த ஆண் ஆதிக்க வர்க்கத்தின் இயலாமையின் குரல் அது. தானே போட்டுகொண்ட ஆண் என்னும் கண்ணாடி கவசம் பரிதாபமாக உடைப்படும் நேரம் இது. கணவனை, மகனை, தகப்பனை, மருமகனை இழந்துவிடும் பெண்கள் அழுது ஓய்ந்து அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து விடுகிறார்கள். சம்சுதீன்களுக்கு அந்த புள்ளியில் இருந்து அடுத்து தெரிவதோ வெற்றிடம்தான்.
(ரேகை போல் வாழ்க்கை).
.... ...
13 சிறுகதைகள் கொண்ட நூல் இது. இழவு வீடுகளில் இறந்தவர்களை மையமாக வைத்து நடக்கும் நிகழ்வுகள், உரையாடல்களை கொண்டு கதைகள் நகர்கின்றன. இஸ்லாமிய பெண்களின் இடத்தில் இருந்து சொல்லப்பட்ட கதைகள். எனவே இஸ்லாமிய குடும்ப கலாச்சாரம், உறவுகள், உரையாடல்கள் என வரையப்பட்டு இருந்தாலும் தமிழக மண்ணின் இஸ்லாமிய கலாச்சாரத்தையும் வாழ்க்கை முறையையும் காலங்காலமாக அருகில் இருந்தும் கலந்தும் வாழ்ந்தும் பார்த்தும் வாழும் பிற சமூக மக்கள் புரிந்துகொள்வதில் பெரிய சிக்கல் எதுவும் இல்லை.
இசுலாமிய சமூக பெண்கள் சந்திக்கும் குடும்ப அல்லது சமூக சிக்கல்கள், பிரச்னைகளை இக்கதைகள் பேசுவதாக குறுக்கியும் பார்க்க முடியாது. பல நூறு ஆண்டுகளாக ஆணாதிக்க சமூகத்தின் கீழ், ஆண்களின் பெருவிரல் நசிவின் கீழ் உழன்று கிடக்கும் பெண் சமூகத்தின் குரலை முன் வைக்கும் இக்கதைகள் ஆண்களை நோக்கி கேள்விகளை வீசுகின்றன. மட்டுமின்றி நான்கு சுவர்களுக்குள் அடைக்கப்பட்ட பெண்கள் தமக்குள் ஒருவர் மீது ஒருவர் ஆதிக்கம் செய்ய முற்படுவதன் நுட்பமான உளவியலையும் புரிந்துகொள்ள முயன்றால் அதன் தொடக்கப்புள்ளியும் ஆண்களிடத்தில் இருந்துதான் என்பதையும் இவை வெறும் தனிநபர் சார்ந்த பிரச்னைகள் அல்ல என்பதையும் உணர முடியும். இந்த புரிதலுக்கு நீண்ட பயிற்சியும் குடும்பம் சொத்து உறவுகள் குறித்த புரிதலும் வேண்டும்.
இஸ்லாமிய சமூகத்தில் ரொம்ப படிச்சவ, காலேஜ் படிச்சவள ஆம்பிளைகள் கட்டிக்க வருவதில்லை என்ற பெண்களின் உரையாடல் தொடர்ந்து வருகிறது. இது இன்றளவும் உண்மை. படித்த பெண் கேள்வி கேட்பாள், கேள்வி கேட்கும் பெண் தமக்கு தேவையில்லை என்ற ஆம்பிளை ஆதிக்க மனப்பான்மையின் வெளிப்பாடு இது. ஆனால் கதைகளில் வரும் பெண் மாந்தர்களின் பாடுகளை வாசிக்கும் எவரும் பெண் கல்வியின் அவசியத்தை மறுத்து விட முடியாதபடிக்கே அவர்களின் வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது.
மரண வீட்டின் துக்கம் மூன்று நாளைக்கே, அதன் பின் அன்றாட வாழ்க்கைக்கு திரும்ப வேண்டும் என்பது இசுலாமிய நெறி. மாண்டார் மீள்வதில்லை, இருப்போர் வாழ்வை தொடர்க, அதுவே இயற்கை என்ற யதார்த்த நியதியில் இருந்து சொல்லப்பட்ட நெறி இது.
இந்த கதைகள் மாண்டோருக்கும் இருப்போருக்கும் ஆன இடைப்பட்ட முற்றுப்பெற்ற உறவுகளை சொல்லவில்லை, வாசிக்கும் ஒவ்வொருவரிடமும் வைக்கும் கேள்விகள் நீண்ட நாட்களுக்கு நம்மை தொந்தரவு செய்பவை. ஆமினா முஹம்மத் இங்கே வெற்றி பெறுகிறார். இன்னும் நிறைய எழுதுவார்.
21.10.2023
...
ஆகாத தீதார், ஆமினா முஹம்மத்
Galaxy Booksellers and Publishers, மேலூர், மதுரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக