கோவை கலவரத்தில் எனது சாட்சியம்
ஏ. வி.அப்துல் நாசர்,
புவனகிரி தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்
எழுத்தாக்கம் பழனி ஷஹான்
பாரதி புத்தகாலயம் வெளியீடு.
1
"சங் பரிவாரின் சோதனைச்சாலை குஜராத்" என்ற கூற்று உண்மையா?
1997, 98 கோவை கலவரங்களுக்கான விதைகள் அப்போதோ அல்லது அதற்கு 10 வருடங்கள் முன்போ விதைக்கப்பட்டவை அல்ல. 1980களிலேயே கோவையில் வணிகர்கள் ஆக இருந்த இசுலாமிய சமூகமக்கள் தம் வணிகத்திலும் பொருளாதார நிலையிலும் மேம்பட்டவர்களாக இருந்தார்கள் என்பது அன்றே இந்துத்துவா சக்திகளுக்கு எரிச்சலை தந்த ஒன்றாக இருந்தது.
1980களின் முற்பாதியில் தென்கோடி கன்னியாகுமரியில் மண்டைக்காடு என்ற ஊரில் இந்து முன்னணி என்ற அமைப்பை ராம.கோபாலன், இல.கணேசன் ஆகியோர் முனைந்து தொடங்கினர். உண்மையில் ஆர் எஸ் எஸ்ஸின் பல கொடுக்குகளில் இது ஒரு கொடுக்கு.
ஒற்றுமையாக வாழ்ந்து வந்த இந்துமத, கிறித்துவ மத மீனவ சமுதாய மக்களிடையே பகைமை உணர்வை வளர்த்து பெரும் கலவரத்தை உருவாக்கி பலர் செத்துமடிய இந்து முன்னணி காரணமாக இருந்தது. தென்காசி மீனாட்சிபுரத்தில் சில நூறு குடும்பங்கள் இசுலாமிய மதத்தை தழுவிய போது வாஜ்பாய் முதல் மிகப்பல இந்துத்துவாவாதிகளும் பதட்டம் அடைந்து நேரடியாக மீனாட்சிபுரத்துக்கு வந்தார்கள் என்பதை இங்கே விரிவாக எழுத வேண்டாம்.
2
1988இல் கோவையில் தனிநபர்களுக்கு இடையே ஆன ஒரு பிரச்னையை மத சாயம் பூசி இந்து இஸ்லாமிய மக்கள் இடையே பகைமையை உருவாக்கியது அதே இந்து முன்னணிதான். இதில் கேரளா மாநிலத்தை சேர்ந்த 15 வயது அபூபக்கர், அப்துல் லத்தீப் ஆகிய இருவர் கொலை செய்யப்பட்டனர். உறவினர்கள் வீட்டுக்கு வந்த இடத்தில் இப்படி உயிரை இழந்தார்கள். 1989இல் அப்துல் ஹக்கீம் என்பவர் கொலை செய்யப்பட்டார். மூவர் கொலையிலும் தொடர்பு உடைய இந்து முன்னணியை சேர்ந்தவர்களை காவல்துறை கைது செய்தாலும் அதி வேகமாக விடுதலையும் ஆனார்கள். இவற்றை தொடர்ந்து இக்கொலைகளில் தொடர்பு உடைய கணேஷ் என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்து முன்னணியை சேர்ந்த அவரை வீர கணேஷ் என்று மாற்றி இந்து முன்னணி பெரிய அளவில் பிரச்சாரம் செய்தது.
முதல் இரண்டு இஸ்லாமிய மக்களின் கொலையை கண்டுகொள்ளாமல் இருந்த பத்திரிகைகள் கணேஷின் கொலை பற்றி மிக பரபரப்பாக தொடர்ந்து எழுதி தள்ளின. கூடவே அரசு அதிகாரிகளின் அலட்சியம், கொலையானவர்கள் முஸ்லிம்கள் என்ற மத பாகுபாடு இரண்டும் ஒருசேர, அரசு நிர்வாகம் முதல் இரண்டு கொலைகளை கண்டுகொள்ளாமலும் சரியான நடவடிக்கை எடுக்காமலும் இருக்க அதன் எதிர்வினை ஆக கணேஷ் என்ற நபர் கொல்லப்பட்டார். கணேஷின் இறுதிச்சடங்கு நிகழ்வில் "ஒவ்வொரு வருடமும் ஒரு முஸ்லிமை வெட்டி உனக்கு குருதி அஞ்சலி செலுத்துவோம்" என்று இந்து முன்னணியினர் வெளிப்படையாக சபதம் செய்ததை கோவை காவல்துறை பார்த்துக்கொண்டுதான் இருந்தது.
அவர்கள் சபதம் செய்தது போலவே பாஷா, அகமது கபீர், உள்ளிட்ட நான்கு இஸ்லாமிய மக்கள் மீது இந்துமுன்னணியினர் கொலைவெறி தாக்குதல் நடத்தினார்கள். கபீர் மீதான
தாக்குதலுக்கு பின் விகடன் குழுமத்தின் 13.9.1991 ஜூனியர் போஸ்டில் இப்படி செய்தி வந்தது: கபீர் கொலைக்கான பின்னணி வீர கணேஷிற்காக பழிவாங்கும் படலமே. கூடவே கணேஷின் சமாதி முன் இந்து முன்னணியினர் சபதம் செய்ததையும் குறிப்பிட்டது. தொடர்ந்து 5.9.91 அன்று சிவக்குமார் என்பவர் கொலை செய்யப்பட்டார்.
ஆக கொலை, பழிவாங்குதல் என்ற சங்கிலியின் கண்ணியாகவே 1997 நவம்பர், 1998 பிப்ரவரி கலவரங்கள். 1997 நவம்பர் கலவரம் அந்தோணி செல்வராஜ் என்ற போலீஸ்காரர் கொலை செய்யப்பட்ட பின் திட்டமிட்ட வகையில் நடத்தப்பட்டது. நடத்தியது இந்து முன்னணியும் காவல்துறையும் இணைந்த கூட்டணி
3
1997 நவம்பர் கலவரத்தில் காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் (?) 18 பேர் கொல்லப்பட்டதாக காவல்துறை சொன்னாலும் இறந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகம். 24 பேர் என்று அரசு அல்லாத அமைப்புகள் சொல்கின்றன. அரசு அறிக்கையே கூட 10 பேர் காணாமல் போனதாக சொல்கிறது.
உண்மை என்ன? 250 பேரை கைது செய்தது காவல்துறை என்றாலும் கலவரத்தில் நேரடியாக ஈடுபட்டவர்கள் காவல்துறைதான். அவர்கள்தான் உண்மையில் பலரை வெட்டி கொன்றார்கள். கலவரங்களில் காயம்பட்ட இசுலாமியர் பலர் Aமருத்துவமனைக்கு வந்தபோது காத்திருந்த காவலர்கள் அவர்களை கொன்றனர். இசுலாமிய மக்களின் வீடுகளில் நுழைந்து பெண்கள் மீது காவல்துறை நடத்திய பாலியல் வன்முறைகள் கொடூரமானவை. பல நிகழ்வுகள் வெளியே தெரியாமல் மறைக்கப்பட்டன.
PUCL, Peoples Watch, CHRO (Kerala) ஆகிய மனித உரிமைகள் அமைப்புகள் களத்தில் ஆய்வு செய்து அளித்த அறிக்கையில் அப்போதைய கோவை நகர் கமிஷனர் ஆன டி சி மாசான முத்து, இன்ஸ்பெக்டர் முரளி, அசிஸ்டண்ட் கமிஷனர் நடராஜன், சப் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் ஆகியோர் நவம்பர் கலவரத்தின் பின்னால் இருந்தவர்கள் என நேரடியாக குற்றம்சாட்டி இருந்தனர்.
திட்டமிட்ட வகையில் இசுலாமிய வணிகர்களின் கடைகள் ஏறத்தாழ 1000 இருக்கலாம், அழிக்கப்பட்டன. இசுலாமிய மக்களின் அழிக்கப்பட்ட சொத்துக்கள் மட்டும் சுமார் 800 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டது.
ஷோபா ஜவுளிக்கடையின் பூட்டை உடைத்து இந்துத்துவா தீவிரவாதிகளை கொள்ளை அடிக்க அனுமதி தந்தவர்கள் காவல்துறையினர்தான். கடை உரிமையாளர் ஜாபர் தன் நிறுவனத்தை காக்க பெருமுயற்சி செய்துள்ளார். போலீஸ் கமிஷனர், உள்ளூர் அரசியல் பிரமுகர்கள், மத்திய அமைச்சர் என தொலைப்பேசியில் அழைத்து நிலைமையை சொல்லி உடனடி நடவடிக்கை வேண்டும் என கேட்டும் ஒரு சல்லி பலனும் இல்லாமல் போகவே தன் உயிரை காத்துக்கொள்ள வெளியேறி சொத்தை இழந்தார். குஜராத்தில் குல்பர்க் சொசைட்டியை தீவிரவாதிகள் சூழ்ந்துகொண்டபோது அன்று நாடாளுமன்ற உறுப்பினர் ஆக இருந்த இஷான் ஜாப்ரிக்கு ஏற்பட்ட நிலையும் அவர் கொல்லப்பட்டதும் நினைவுக்கு வருகிறது.கலவரத்தின்போது போலீசார் சீருடைகளை மாற்றி கைலிகளை கட்டிக்கொண்டு துப்பாக்கி ஏந்தி கண்ணில் கண்ட இசுலாமியர்களை சுட்டுத்தள்ளினார்கள்.
4
1997 படுகொலைகளை பொதுசமூகத்தின் சிந்தனையில் இருந்து அகற்றவும் திசை திருப்பவும் காவல்துறைக்கு ஒரு வாய்ப்பு தேவைப்பட்டது. அதன் விளைவுதான்1998 பிப்ரவரி வெடிகுண்டு வெடிப்புகள். ஒரு தவறும் செய்யாத 58 உயிர்கள் பலியாகின. பிப்ரவரி14 முதல் 17 வரை நிகழ்ந்த குண்டுவெடிப்புகளில் முஸ்லிம்களும் கொல்லப்பட்டனர்.
5
1997 கோவை கலவரத்தின்போது அன்றைய புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் ஆக இருந்த இந்த நூலின் ஆசிரியர் அப்துல் நாசர் நேரில் சென்று கள ஆய்வில் ஈடுபட விழைகிறார். அன்றைய முதலமைச்சர் மு.கருணாநிதி அவர்களை சந்தித்து கோவை செல்ல அனுமதி கேட்கிறார். 'உங்க ஆளுங்கதான்யா இப்படி பண்றாங்க" என்று முதல்வர் சொல்ல இவர் மறுத்து பேசியிருக்கிறார். இறுதியில் முதல்வர் அனுமதி அளிக்கிறார். 1997 டிசம்பர் 1, 2 இரண்டு நாட்களும் கோவைக்கு சென்று தங்கி கள ஆய்வில் ஈடுபட்டுள்ளார். தான் கண்டவற்றை அப்படியே அறிக்கையாக அரசிடம் அளித்துள்ளார். ஒரு பயனும் இல்லை. தன்னையும் தீவிரவாதி என்று முத்திரை குத்தி விடும் அபாயம் உள்ளது என்று சட்டமன்றத்தில் அன்றைய முதல்வர் மு.க. முன்பாகவே மனம் வெறுத்து பேசியுள்ளார்.
இந்த நிலையில்தான் இந்தியாவிலும் இந்தியாவுக்கு வெளியேயும் நன்கு அறியப்படும் மிக முக்கியமான ஒருவர் அவரை சந்திக்க விரும்புவதாக அப்துல் நாசரின் நண்பர் சொல்கிறார்.
6
மண்டைகாடு, மீனாட்சிபுரம் ஆகிய ஊர்களில் மத மோதல்களை முனைந்து உருவாக்கிய இந்து முன்னணி கோவையிலும் இசுலாமிய மக்கள் மீது குறிப்பாக அவர்களின் பொருளாதார வளர்ச்சி கண்டு எரிச்சல் அடைந்து மத மோதல்களை திட்டமிட்டு உருவாக்கியது. இங்கும் ராம கோபாலன், திருக்கோவிலூர் சுந்தரம் ஆகியோர் இதற்கு அடித்தளம் இட்டனர். சிறு தனிநபர் பிரச்னைகளை பூதாகரமாக ஆக்கி மதமோதலாக மாற்ற முயற்சி செய்தனர். ஒரு கட்டத்தில் 1982 இந்து எழுச்சி மாநாடு என்று நடத்தி முகமது நபிகளை அநாகரிகமாக பேசி இசுலாமிய இளைஞர்களை கோபப்படுத்தினார்கள்.
தொடர்ந்து 1983, 1986, 1987, 1988, 1989, 1990, 1991, 1992, 1993, 1994 என திட்டமிட்டு இந்து முன்னணி மதக்கலவரங்களை நடத்திக்கொண்டே இருந்தது. சில கொலைகளும் நடந்தன. அதன் தொடர்ச்சியாகவே 1997, 1998 கலவரங்களை பார்க்க வேண்டும், 1992 பாபர் மசூதி இடிப்புக்கு பின்னர்தான் கோவையில் மதகலவரம் நடந்தது என்பது இசுலாமிய சமூகம் வெறுப்புற்று கலவரங்களை நடத்தியது, வெடிகுண்டு வெடித்தது என்று முனைந்து சித்தரிக்கும் முயற்சியாகத்தான் இருக்கும். 1997, 98 கலவரங்கள் இந்துமுன்னணியால் திட்டமிட்டு நடத்தப்பட்டவை எனில் அரசின் நிர்வாகமும் உளவுத்துறையும் காவல்துறையும் 1980களின் தொடக்கத்தில் இருந்து பெற்ற அனுபவங்களின் அடிப்படையில் சரியான நேரத்தில் நியாயமான தடுப்பு, கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு இருந்தால் 97, 98 கலவரங்களையும் அதன் தொடர்ச்சியாக அல் உம்மா இயக்கத்தின் தவறான நடவடிக்கை ஆன வெடிகுண்டு தாக்குதல்களையும் தடுத்து நிறுத்தி இருக்க முடியும் என்பது உறுதி.
உச்சகட்டமாக காவலர் செல்வராஜ் என்பவர் இந்து அல்ல, அவர் பெயர் அந்தோணி செல்வராஜ், அவர் ஒரு கிறித்துவர் என்ற உண்மையை காவல்துறையும் அன்றைய திமுக அரசும் வெளிப்படையாக அறிவித்து இருந்தால் அதை இந்து முஸ்லிம் கலவரமாக மாற்றிய இந்து முன்னணி, ஆர் எஸ் எஸ்சின் சதி அம்பலம் ஆகி இருக்கும், அதன் பின் ஏற்பட்ட படுகொலை, வெடிகுண்டு வெடிப்புகள் தடுக்கப்பட்டு இருக்கும். காவல்துறையில் இருந்த இந்துத்துவா சிந்தனை கொண்ட அதிகாரிகள் 97, 98 கலவரங்களை இந்து முன்னணி அமைப்புடன் சேர்ந்தே நடத்தினார்கள் என்பதுதான் அதன் பின் வெளிவந்த உண்மை. இதற்கு அன்றைய திமுக அரசும் முதல்வர் மு கருணாநிதி அவர்களும் பதில் சொல்ல கடமைப்பட்டவர்கள் என்பதில் ஐயமில்லை.
7
1997 நவம்பர் 29 அன்று காவலர் அந்தோணி செல்வராஜை இசுலாமிய இளைஞர்கள் சிலர் கொலை செய்து விடுகிறார்கள். சாலை போக்குவரத்து விதிகளை மீறியதாக எழுந்த வழக்கு ஒன்றை தொடர்ந்து ஏற்பட்ட வாக்குவாதம் பகைமை உணர்வை வளர்க்க அது கொலையில் முடிந்தது. இதில் இந்து முஸ்லிம் தகராறு எங்கே இருக்கிறது? உண்மை என்ன? கொலை செய்தவர்களை அல் உம்மா இயக்கம் காவல்துறையில் ஒப்படைத்தது. காவல்துறை வழக்கு பதிவு செய்யாமல் இந்து முன்னணியுடன் சேர்ந்து கோவையை திட்டமிட்டு கலவர பூமியாக மாற்றியது.
30ஆம் தேதி கமிஷனர் மாசானமுத்து தலைமை தாங்க 300க்கும் மேற்பட்ட காவல்துறையினர் கோவையில் ஊர்வலம் நடத்தினர். ஊர்வலத்தின் பின் பகுதியில் இந்து மக்கள் கட்சியினரும் அர்ஜுன் சம்பத்தும் அதிரடி ஆனந்தன் போன்ற இந்துத்துவா தீவிரவாதிகளும் சேர்ந்து சென்றனர் எனில் என்ன சொல்வது? காவல்துறை நடத்திய ஊர்வலத்தில் தமிழக அரசுக்கும் முதலமைச்சருக்கும் எதிராக திட்டவட்டமான கோஷங்கள் இடப்பட்டன என்பதை தற்செயலான ஒன்று என்று தள்ளிவிட முடியாது.
8
30ஆம் தேதி கமிஷனர் மாசானமுத்து ஆயுதப்படை ரிசர்வ் வளாகத்தில்
நடத்திய கூட்டத்தில் இந்து முன்னணி தலைவர் ராம கோபாலன் இருந்துள்ளார். இஸ்லாமிய மதத்தை சேர்ந்த காவலர்களை வெளியேற்றிவிட்டு நடத்தப்பட்ட இந்த கூட்டத்தில்தான் இசுலாமிய மக்களையும் அவர்களின் வணிக தலங்களையும் வாழ்வாதாரங்களையும் குறிவைத்து அழிக்க திட்டம் இடப்பட்டது.
இதன் பின் நடந்த கலவரங்களையும் படுகொலைகள், வெடிகுண்டு வெடிப்புகளையும் மீண்டும் நான் இங்கே சொல்லப்போவது இல்லை.
9
1997 நவம்பர் கலவரத்தை ஒட்டி முதலமைச்சர் அனுமதியுடன் டிசம்பர் 1ஆம் நாள் நேரடியாக கோவை சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கிறார் புவனகிரி எம் எல் ஏ ஏ வி அப்துல் நாசர். கலவரம் அப்போதும் தகித்துக்கொண்டு இருந்த பாதுகாப்பு அற்ற மிக மோசமான சூழலில்தான் சக நண்பர்கள் மூன்று பேருடன் கோவை செல்கிறார். பல இடங்களில் அப்போதும் தீ எரிந்துகொண்டே இருந்ததாகவும் காவல்துறையினரின் வெறுப்புக்கு ஆளான நிலையில் தமக்கே பாதுகாப்பு இல்லாத அச்சமிகு சூழல் நிலவியதாகவும் அப்துல் நாசர் பதிவு செய்கிறார். சந்தித்த மக்களும் சந்திக்க விரும்பிய நபர்களும் காவல்துறையினரின் அச்சுறுத்தலுக்கு அஞ்சி வாய் திறக்கவில்லை என்ற நிலையில் தன்னை சந்தித்து பேசிய நபர்களின் சுருக்கமான வாக்குமூலங்களே கொடூரமானவையாக இருந்தன எனில் உண்மையான நிலவரம் எத்தனை கொடுமையாக இருந்திருக்கும் என்று யூகித்து தெரிந்துகொள்ளலாம்.
தாங்கள் கண்டவற்றை அறிக்கையாக அரசுக்கு கொடுத்தது மட்டுமின்றி 1999 ஜனவரி மாதத்தில் சட்டமன்றத்திலும் நடந்த அனைத்தையும் சுட்டிக்காட்டி பேசியுள்ளார். பலன்? ஒன்றுமில்லை.
10
1999ஆம் ஆண்டு ஏதோ ஒரு மாதத்தில் காந்தியடிகளின் கொள்ளுப்பேரன் துஷார் காந்தியை நேரடியாக சந்திக்கும் ஒரு வாய்ப்பு உருவாகிறது. கலவர பூமியில் தான் சென்றபோது கண்டவற்றை அப்படியே துஷாரிடம் சொல்ல அவர் நாசர் எதிர்பாராத புதிய பணி ஒன்றை செய்ய தூண்டுகிறார். "குற்றவாளி என்று அரசு ஒருவரை கைது செய்வதாலேயே அவரை குற்றவாளி என்று சொல்லிவிட முடியாது. அவரை குற்றவாளி என்று சொல்ல அரசுக்கு எப்படி உரிமை உள்ளதோ அதேபோல் தான் குற்றமற்றவர் என்று நிரூபிக்கவும் அவருக்கு எல்லா உரிமைகளும் உண்டு. எனவே கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தை நீங்கள் ஆராய வேண்டும்..." என்கிறார் துஷார்.
கைது ஆனோரின் நிலை சிறைகளில் எப்படி உள்ளது என்று பேசிய துஷார் குண்டு வெடிப்பில் பாதிப்புக்கு உள்ளானோர் குறித்த வருத்தங்களையும் பதிவு செய்தார். அவர்களுக்கான இழப்பீடுகள் குறித்தும் கேள்வி எழுப்பினார். "இவர்களுக்கு அரசின் ஆதரவு இருக்கிறது, ஆனால் கைதான முஸ்லிம்களின் மீதோ அரசின் வெறுப்பும் மக்களின் வெறுப்பும்தான் சூழ்ந்திருக்கிறது. இப்படியான தருணத்தில் சிறுபான்மை சமூகத்தில் இருந்து எவரேனும்தான் அவர்களுக்கு உதவ முடியும். சிறைவாசிகளின் மோசமான நிலையை சீரமைக்க வேண்டும். அவர்களுக்கு ஜாமீன் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்" என்கிறார் துஷார்.
இந்த சந்திப்புக்கு பிறகுதான் கோவை குண்டுவெடிப்பு வழக்கில் சிறையில் உள்ளவர்களை சந்தித்து நிலையை ஆராயவும் ஜாமீன் கிடைக்கவும் வழக்கு நடத்த வேண்டிய சட்ட உதவிகளை செய்யவும் சிறைகளில் விசாரணை என்ற பெயரில் அவர்கள் மீது ஏவப்படும் துன்புறுத்தல், அடக்குமுறைகளை தடுக்கவும் சிறை கைதிகளுக்கான சட்டப்பூர்வ உரிமைகளை உறுதி செய்யவும் அப்துல் நாசரை தலைவராக கொண்ட Panel for Legal and Educational Aid (PLEA) என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது.
11
நூலில் அப்துல் நாசர் அவர்கள் பதிவு செய்துள்ள அதிர்ச்சி தரும் ஓர் உண்மையை இங்கே பதிவு செய்து விட்டு PLEA என்ன செய்தது என்று சொல்கிறேன்.
நவம்பர் கொலைகளுக்கு பழி வாங்க இசுலாமிய இளைஞர்கள் சிலர் வெடிகுண்டு வெடிக்க திட்டமிட்டது தெரிந்து அன்றைய த மு மு க மாநில நிர்வாகிகள் எழுத்து வடிவிலேயே கோவை கமிஷனர், சென்னை டி ஜி பி ஆகியோரிடம் தெரிவித்து நடக்க இருக்கும் குண்டுவெடிப்பை தடுத்து தொடர்புடைய நபர்களை கைது செய்ய வேண்டும் என்று புகார் அளித்துள்ளார்கள். அவ்வாறு குண்டு செய்து கொண்டு இருந்த அல் உம்மா இயக்க நபர்களை நேரடியாகவே அறிந்த உளவுத்துறை, காவல்துறையினர் அவர்களை கண்டுகொள்ளாமல் இருந்ததுடன் "நீங்கள்லாம் கண்டிப்பா இதை செய்யணும்" என்று தூண்டி விடவும் செய்துள்ளனர். நவம்பர் கொலைகள் இசுலாமிய மக்கள் மீதான பொதுமக்கள் அனுதாபத்தை விளைவித்து இருந்தது என்பதை இந்து முன்னணி கும்பலோ காவல்துறையோ விரும்பவில்லை. எனவே 98 பிப்ரவரி குண்டுவெடிப்பை காவல்துறை வேண்டுமென்றே அனுமதித்தது.
அதாவது நவம்பர் கலவரத்தில் காவல்துறை மீது விழுந்த கரும்புள்ளியை அதை விடவும் பெரிய ஒரு கலவரத்தின் மூலம் கழுவிவிட காவல்துறை திட்டமிட்டது மட்டும் இன்றி நவம்பரை விடவும் கொடூரமான ஒரு தாக்குதலை இஸ்லாமியர்கள் நடத்தினால் நல்லது என்றும் எதிர்பார்த்தனர்.
அதன் பின் இசுலாமிய மக்கள் மீது கற்பனைக்கு எட்டாத கொடூரங்களை இந்து முன்னணி+காவல்துறை கூட்டணி கட்டவிழ்த்துவிட்டது.
12
சிறைக்கைதிகளின் குடும்பத்தினருக்கு காவல்துறை கொடுக்கும் கெடுபிடி, அவமரியாதை பற்றி த நா சட்டமன்றத்தில் அப்துல் நாசர் பேசும்போது முதல்வர் "அப்படி ஒன்றும் இல்லை, தீவிரவாதிகளுக்கு ஆதரவாக பேசி அவர்களை ஊக்குவிக்காதீர்கள்" என்று சொல்கிறார்.
சட்டமன்றத்திற்கு வெளியே பத்திரிக்கையாளரிடம் பேசிய நாசர், சட்டமன்றத்தில் நடந்ததை கூறி, சிறையில் உள்ளவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை, குண்டுவெடிப்பை தூண்டியவர்கள் வெளியே உள்ளார்கள், சில முஸ்லிம் அமைப்புகள் இளைஞர்களை தவறாக வழி நடத்துகிறார்கள் என்று கூற முஸ்லீம் அமைப்புகளின் கண்டனத்துக்கு ஆளானார். அன்றைய த மு மு க இயக்கம் பி ஜெய்னுலாபுதீன் தலைமையில் இருந்தது, அந்த அமைப்பு மட்டும் நாசர் மீது 18 மாவட்டங்களில் வழக்கு போட 18 மாவடங்களுக்கும் நேரில் அலைந்துள்ளார்.
13
PLEA சார்பில் முதலமைச்சரை சந்தித்து கைதிகள் மேல் சிறையில் ஏவப்படும் வன்முறைகள் பற்றி சொல்ல, முதல்வர் அப்படியெல்லாம் இல்லை என்று மறுக்க, மீண்டும் மீண்டும் எடுத்துச்சொன்ன பிறகே "சரி நீங்களே சிறைகளுக்கு நேரில் சென்று பார்த்து அறிக்கை அளியுங்கள்" என்று அனுமதி வழங்குகிறார்.
வழக்கறிஞர்கள் துணையுடன் அப்துல் நாசரின் அமைப்பு கோவை, சென்னை சிறைகளுக்கு நேரில் சென்று பார்த்து பதிவு செய்துள்ள உண்மைகள் மிக அதிர்ச்சி அளிப்பவை. காவல்துறை இஸ்லாமியர் மீது எத்தனை வன்மம் கொண்டதாக உள்ளது என்பதை நாசர் ஆவணப்படுத்தி உள்ளார். அதை இங்கே விவரிக்க இடமில்லை. கோவை சிறை இந்து முன்னணியின் ராம கோபாலன் கட்டுப்பாட்டில் இருந்தது என்பதை மட்டும் பதிவு செய்கிறேன். என்ன நடந்திருக்கும் என்பதை வாசிப்போர் ஊகித்துக்கொள்க.
14
PLEA அமைப்பின் நோக்கம் சிறைவாசிகள் அனைவரும் குற்றமற்றவர்கள் என்றோ அனைவரையும் நிபந்தனை இன்றி விடுதலை செய்ய வேண்டும் என்பதோ அல்ல என்பதை நாசர் தெளிவாக சொல்லி விடுகிறார். குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும், நிரபராதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதுதான் அடிப்படையான நோக்கம். இந்த திசை நோக்கிய பயணத்தில்
சிறைவாசிகள் தரப்பில் வாதாட வழக்கறிஞர்களை ஏற்பாடு செய்வது, சிறையில் அவர்கள் மீது ஏவப்படும் அடக்குமுறைகளை நிறுத்துவது, சிறைக்கு வெளியே உள்ள அவர்களின் குடும்பங்களுக்கு உதவுவது ஆகிய திட்டவட்டமான செயல்களில் இறங்குகிறார்கள்.
சொல்வதற்கு மிக எளிதாக உள்ளது. அன்றைய நாளில் குண்டுவெடிப்புக்கு பின் பொதுவாக இசுலாமிய சமூகத்தின் மீது விழுந்த தீவிரவாதிகள் என்ற முத்திரையை சுமந்து கொண்டு ப்ளீ அமைப்புக்கு ஆதரவும் பொருளாதார உதவியும் வேண்டி போனபோது இசுலாமிய மக்களும் வணிகர்களும் கூட நாசரை கண்டுகொள்ளாமல் போனார்கள் என்பதுடன் அவருடன் பலர் தொடர்பை முறித்துக்கொண்டார்கள் என்பதையும் அவர் மிகுந்த வலியுடன் பதிவு செய்துள்ளார். அனுபவித்தால் மட்டுமே புரிந்துகொள்ள முடிகிற வலி அது. நூலை வாசியுங்கள்.
15
சிறைவாசிகள் உள்ளே இருக்க அவர்களின் குடும்பங்கள் சமூகத்தால் முற்றாக ஒதுக்கப்பட்டன. வேலைகளில் இருந்து நீக்கப்பட்டார்கள். கடைகளில் பொருட்கள் மறுக்கப்பட்டது. குழந்தைகள் பள்ளிகளில் இருந்து நீக்கப்பட்டனர். பொது சமூகம் இந்த குடும்பங்களுடன் பேசுவதை தவிர்த்தது. உச்சக்கட்டம் எதுவெனில் இந்த குடும்பங்கள், குடும்ப நடவடிக்கைகள் என அனைத்தும் 24 மணி நேரமும் காவல்துறையின் கண்காணிப்பில் இருந்துள்ளன. எனில் அப்துல் நாசர் இந்த குடும்பங்களை சந்திப்பதிலும் அவர்களை பேச வைப்பதிலும் எத்தனை சிரமங்களை சந்தித்து இருப்பார்? 5 பெண்கள், 1 ஆண் கொண்ட ஒரு சிறைவாசியின் குடும்பத்தில் ஒற்றை ரூபாய் வருமானதிற்கும் வழி இல்லாமல் போக 5 பெண்களும் விபச்சாரத்தில் ஈடுபட நிர்ப்பந்திக்கப் பட்டார்கள் என்பது ஓர் உதாரணம்.
16
அல் உம்மா தலைவர் பாஷா பாய்தான் வெடிகுண்டு திட்டத்துக்கு மூளையாக இருந்தவர். ஏதோ ஒரு கட்டத்தில் அப்துல் நாசரை உன்னையெல்லாம் கொலை செய்ய வேண்டும் என்று ஆத்திரத்தில் திட்டி உள்ளார். கோவை சிறையில் அவரை நாசர் சந்திக்கிறார். ஒரு தவறும் செய்யாத 58 பேர் உயிர் போனதற்கு காரணமான அவரை முகத்துக்கு நேரே நாசர் கண்டனம் செய்கிறார். அந்த உரையாடல் முக்கியமான ஒன்று. "நீங்கள் செய்தது இசுலாமிய மார்க்க நெறிகளுக்கு முற்றிலும் புறம்பானது. பாதிக்கப்பட்ட மக்கள் உங்களை மன்னிக்காதவரை இறைவன் உங்களை மன்னிக்க மாட்டான்.... நீங்கள் செய்த செயலால் இப்போது ஒட்டுமொத்த இசுலாமிய மக்களையும் இசுலாமிய மார்க்கத்தையும் கூட இந்துத்துவா தீவிரவாதிகள் இழிவுபடுத்துகிறார்கள். உங்கள் நாசவேலையால் இந்துத்துவா தீவிரவாதிகளின் இந்த பிரச்சாரம் சாமானிய மக்களிடம் எடுபடுகிறது. இறந்துபோன 58 பேர் குடும்பங்களின் கண்ணீரை எதைக்கொண்டு உங்களால் ஈடுசெய்ய முடியும்?" என்று கண்டித்துள்ளார்.
வன்முறைக்கு வன்முறையோ கொலைக்கு கொலையோ எப்போதும் தீர்வு அல்ல, எல்லா மத மக்களுக்கும் இது பொருந்தும் பொது விதி என்பதை நூலில் தெளிவாக சொல்கிறார்.
17
குண்டுவெடிப்புக்கு பின் கோவையில் மீட்பு, கள உதவிகள் என மனிதாபிமான நடவடிக்கைகளில் ஈடுபட சென்ற அப்துல் நாசர் துஷார் காந்தியை சந்தித்த பின் முற்றிலும் வேறு ஒரு தளத்திற்கு நகர்கிறார். அது காலையில் தொடங்கி இரவில் முடிவதோ இன்று தொடங்கி நாளை முடிவதோ அல்ல. மிகுந்த உடல் உழைப்பை கோரிய ஒன்று. காவல்துறை உள்ளிட்ட பல திசைகளிலும் இருந்து தொடர்ந்து மிரட்டல்களும் முட்டுக்கட்டைகளும் இன்னல்களும் வந்துகொண்டே இருந்தாலும் நீதி எது அநீதி எது, தான் எதன் பக்கம் நிற்க வேண்டும் என்ற உயரிய ஒற்றை இலட்சிய இலக்கை நோக்கி மனம் தளராமல் பயணித்த அப்துல் நாசரும் அவரது PLEA அமைப்பும் எடுத்துக்கொண்ட பணி முன்னுதாரணம் இல்லாத ஒன்று. சிறைவாசிகளும் அவர்களின் குடும்பங்களும்
அந்த அமைப்பால் பெற்ற பயன்கள் அளவிட முடியாதவை. அன்று கட்டமைக்கப்பட்டு இருந்த பொது சமூகத்தின் சிந்தனையை, அரசின் அதிகாரவர்க்கத்தின் சிந்தனையை செயல்பாட்டை புரிந்துகொண்டால் மட்டுமே இதை மதிப்பிட முடியும்.
ஆர் எஸ் எஸ் என்ற அமைப்பு இந்திய சமூகத்தில் என்னென்ன வடிவங்களில் எப்படி எல்லாம் ஊடுருவி உள்ளது என்பதை இப்போதும் கூட யாராலும் திட்டவட்டமாக சொல்லிவிட முடியாது. உலகில் எங்கே ஒரு குண்டுவெடிப்பு நிகழ்ந்தாலும் ஒரு கலவரம் நிகழ்ந்தாலும் அமெரிக்காவை சந்தேகப்பட வேண்டும் என்பது சமூக பொருளாதார அரசியல் கற்றவர்கள் அறிந்த பாடம். இந்தியாவில் ஆர் எஸ் எஸ் அமைப்பை சந்தேகப்பட வேண்டும் என்பதும் அரசியல் பாடமே.
"சங் பரிவாரின் சோதனைச்சாலை குஜராத்" என்ற கூற்று உண்மையில்லை. கோவைதான் சோதனைச்சாலை, அந்த அனுபவத்தை செயல்படுத்திய தளம்தான் குஜராத், அதன் பின் பல மாநிலங்கள். இந்த நூல் அந்த முடிவுக்கு என்னை வர செய்தது.
2017, 2021 என இரண்டு பதிப்புகள் கண்ட நூல் இது. அ மார்க்ஸ், பாரதி கிருஷ்ணகுமார் ஆகியோர் வழங்கியுள்ள உரைகள் மிகுந்த கனமானவை, பல வரலாற்று குறிப்புகளை அடக்கியவை. பாதுகாக்கப்பட வேண்டியவை.
எழுத்து வடிவில் ஆவணமாக்கியவர் பழனி ஷஹான். யாரும் எளிதில் புரிந்துகொள்ளத்தக்க எழுத்தாக்கம் பாராட்டத்தக்கது.
வரலாற்றில் உண்மை நிலைத்து நிற்க வேண்டும் என்பது நம் விருப்பமாக இருக்கலாம், ஆனால் உண்மையை உரத்து சொல்லவும் எப்போதும் சொல்லிக்கொண்டே இருக்கவும் ஆன கடமையை நாம் தொய்வின்றி செய்ய வேண்டிய அவசியம் உள்ளது என்பதை எதிரி எப்போதும் நமக்கு உணர்த்திக்கொண்டே இருக்கிறான். அந்த பாதையில் நம் கையில் இந்த நூல் வலிமைமிக்க கூரான ஆயுதம்.
இரண்டாம் பதிப்பு வெளியீடு பாரதி புத்தகாலயம்
9443066449
- மு இக்பால் அகமது
21.12.2023
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக