செவ்வாய், மார்ச் 26, 2024

இசையால் வசமாகா இதயம் எது? (1)


இசையால் வசமாகா இதயம் எது? (1)

1

மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்குள் மூத்த நண்பர் கிருஷ்ணனுடன் ஒருநாள் நுழைந்தேன். எப்போதும் போவதுதான். சாரம் எனப்படும் லுங்கி கட்டித்தான் போவேன். தடை இருந்தது இல்லை. 


அன்று இசைக்கச்சேரி சீசனில் ஒருநாள். கோவிலின் வடக்கு பிரகாரத்தில் நுழைந்தால் '... திரு ஆவி குடியிருக்கும் ஆவினன் குடி...அங்கு கொலுவிருக்கும் அழகு திருவடி... என் ஆவி குடியிருக்கும் ஆவினன் குடி...' என்ற பாடலை சீர்காழி கோவிந்தராஜன் பாடிக்கொண்டு இருந்தார். ஆஹா! எதிர்பாராத வாய்ப்பு அல்லவா! வெண்கலகுரலோன் எனில் அது அவர் மட்டுமே. காதுகளில் ஹெட்போன் பொருத்தி அவர் பாடலை கேளுங்கள், ஒவ்வொரு எழுத்தும் சொல்லும் மீண்டும் கேட்க வேண்டிய அவசியம் இல்லாத அளவுக்கு அத்தனை தெளிவாக நயத்துடன் பாடுவார். 


தமிழ் கற்றுக்கொள்ள வேண்டுமா? டி எம் சவுந்தரராஜன், சீர்காழி, நாகூர் ஹனிபா பாடல்களை கேளுங்கள். தமிழை எப்படி பேச வேண்டும் என்று தெரிந்து கொள்ள வேண்டுமா? சிவாஜி கணேசன் நடித்த புராண கதை படங்களை பாருங்கள். உண்மையில் இலங்கை வானொலியும் மதுரையின் பல சவுண்ட் சர்வீஸ்காரர்களும் எனக்கு தமிழை கற்றுக்கொடுத்தார்கள்.


அசைச்சொல்லின் தொடராலே ஆனதே ராகம்

பாடல் அளவை முறைப்படுத்த அமைந்ததே தாளம்

இசையின் பொருள் விளங்க பாடுதல் பாவம்

எனக்கூறும் இம்மூன்றும் இணைந்து இன்பம் தரும்

இசையால் வசம் ஆகா இதயம் எது?

இசைப்பற்றி 'மலைத்தேனுண்ட சுவை கூட்டும் தன்மை அது' என்று அவர் பாடும் பாடலை பக்திப்பாடல் வரிசையில் எப்படி வைப்பது?

2

எனக்கு முதலில் பாட்டு என்று அறிமுகம் ஆனது நாகூர் அனிபாவும் நெசவுத்தொழிலாளியான என் வாப்பாவும் பாடிய பாடல்கள்தான். பெண் பாடகர்கள் எனில் அவர்கள் சரளாவும் கே ராணியும் ஆகத்தான் இருந்திருக்க வேண்டும். பிள்ளைப்பிராயம் என்பதால் பெயர் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

தக்பீர் முழக்கம் கேட்டால் உள்ளம், வாழ வாழ நல்ல வழிகள் உண்டு, நெஞ்சிலே வாழ்கின்றவர், உலக மக்கள் யாவருக்கும் உரிமையானவர், எங்கே எங்கே எங்கே சாஹுல் மீரானே, அருள்மேவும் ஆண்டவனே... இவை எல்லாமே அந்தக்காலத்து அரக்கு ரிக்கார்டுகளில் ஒலித்தவை. 

கே சரளாவின் கணவர் அம்பி என்ற சுவாமிநாதன். அவர்தான் ஹனீபா அவர்களின் தபேலா கலைஞர். "சுவாமி இல்லை என்றால் ஹனீபா அவர்கள் ஒலிப்பதிவுக்கு செல்ல மாட்டார். சுவாமி வெளியூர் சென்று இருந்தால் அவர் திரும்பி வந்த பின்தான் ரிகார்டிங் வைத்துக்கொள்ளலாம் என்பார் ஹனீபா" என்று சொன்னார் கே சரளா. 

ஹனீபா அவர்களின் பல புகழ்பெற்ற பாடல்கள் எல்லாம் முதலில் அவர் மக்கள் மத்தியில் மேடைகளில் பாடியவை என்பது பலருக்கு புதிய செய்தியாக இருக்கும். ஒரு சில வருடங்கள் ஆன பின்பே இவ்வாறு இசைத்தட்டாக வந்த பாடல்கள் மிக அதிகம்.

தோளோடு தோள் நின்று தொழ வாருங்கள் என்று டி எம் சவுந்தரராஜன் ஓர் இசுலாமிய பாடல் பாடி இருக்கிறார். 

ஹீரா குகையிலே என்ற பாடலை எஸ் பி பாலசுப்பிரமணியம் பாடியிருக்கிறார். அழகுத்திருமுகம் ஆயிரம் நிலவு அங்கம் முழுவதும் கஸ்தூரிக்கனவு என்ற பாடலில் அவரே அல்லாஹு அக்பர் என்று பாங்கு சொல்வார், கேட்டுப்பாருங்கள். அல்லா..யா அல்லா அற்புதக்கொடையாளா, யா ஹபீப் இறுதிநாளில் எங்கள் பிழை பொறுத்தருள, நினைவெல்லாம் மக்கத்து நபி மீது ஆகிய பாடல்களையும் பாடியுள்ளார்.

 கன்னியரே என்று வாணி ஜெயராம் ஒரு பாடல் பாடியுள்ளார். அவரே ஹாத்தம் நபி தோட்டத்திலே என்ற பாடலை உஸ்மானுடன் இணைந்து பாடியுள்ளார். 

எம் எஸ் விஸ்வநாதன் அவர்கள் இசையில் கலிமா என்ற கேசட் வெளியானது. 

 ஏ ர் ரஹ்மான் அப்போது திலீப் ஆக இருந்த காலத்தில் அவர் தந்தை ஆர் கே சேகர் இசையில் பல இஸ்லாமிய பாடல்கள் வெளிவந்தன. இன்ஷா அல்லா அல்லா இன்ஷா அல்லா, அருளாளன் அன்பான அல்லாஹுவே, தென்னகத்தின் திருவிளக்கு, எத்தனை ஆயிரம் நபிகள் வந்தனர்... உள்ளிட்ட பல பாடல்கள் சேகர் இசை அமைத்தவை!

22.3.2024

தொடர்வேன்

கருத்துகள் இல்லை: