வெள்ளி, மே 24, 2024

நாய்க்கடிக்கும் அஞ்சோம்


நாய்க்கடிக்கும் அஞ்சோம்

(மரபுவழி மருத்துவ சிகிச்சை)

ஆசிரியர்: போப்பு

வெளியீடு பதிகம், சென்னை 600075.


நாய்க்கடியால் உலகம் முழுதும் ஓர் ஆண்டுக்கு 60000 பேர் இறக்கின்றனர். இந்தியாவில் இது 20000. இதிலும் 10000 பேர் 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள்.


ஆசிரியர் போப்பு வசிக்கும் புதுச்சேரியில் 2021ஆம் ஆண்டில் 24282 பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டதாக medium.com என்ற இணையதளம் RTI ஆதாரத்தை காட்டி சொல்கிறது. அதுவே 2015இல் 3635ஆக இருந்துள்ளது. ஏறத்தாழ 12 லட்சம் மக்கள் வாழும் புதுச்சேரியில்  24 ஆயிரம் என்பது ஒரு லட்சம் பேரில் 2000 பேர் நாய்க்கடிக்கு ஆளாகிறார்கள் என்று கணக்கு.


ஐந்து அத்தியாயங்கள் கொண்ட இந்த நூலின் முதல் அத்தியாயத்தின் தலைப்பு நஞ்சினை வடிகட்டுதல் என்பதாகும். ஆசிரியர் போப்புவை நாய் கடித்து விடுகிறது. ஆகவேதான் இந்த புள்ளிவிபரம். சரி, அதன் பின் நடப்பதுதான் என்ன?

...


நாயை தெருவில் தன்னுடன் அழைத்து  வந்த பெண்மணி "என்னவோ தெரியல, இரண்டு மூணு நாளாதான் பார்க்கிற எல்லாரையும் கடிக்குது" என்று சொல்லும்போதுதான் அதற்கு வெறி பிடித்துள்ளது என்ற உண்மை உரைக்கிறது.


வீட்டில் வளர்க்கப்படும் நாய், தெரு நாய் என எது கடித்தாலும் அதன் பற்கள் நம் உடம்பில் கீறலை ஏற்படுத்த அதன் வழியே நாயின் வாயில் இருந்து சுரக்கும் உமிழ்நீரில் இருக்கும் ரேபிஸ் எனப்படும் வெறிநோய் கிருமிகளை Lyssa virus கடிப்பட்டவரின் உடலுக்குள் செலுத்துகிறது. அவை தோல், தசை திசுக்களில் பெருகி மூளையை அடைந்து இறப்பை ஏற்படுத்துகின்றன. இதுதான் நாய்க்கடி அல்லது வெறிநாய்க்கடியின் விளைவுகள். 


கடிப்பட்டவர் தண்ணீரை கண்டால் பயந்து அலறுவார். நோயின் முக்கிய அறிகுறி இதுதான். தொண்டை சதைகள் சுருங்கி உணவு தண்ணீர் உட்கொள்ள முடியாது. தண்ணீரை பார்த்தாலே தொண்டைசதைகள் இறுகி சுவாசத்தை நிறுத்தி விடும். எனவே உயிர் போவது போல பயம் வந்துவிடும். இதற்கு பயந்துதான் தண்ணீர் குடிக்க மாட்டார்கள். Hydrophobia. சுவாசிக்க சிரமம், வலிப்பு, தொடர்ந்து உயிருக்கு ஆபத்து வரும்.

எனவேதான் அரசு சொல்கிறது, கடித்தது வெறிநாயாக இருந்தாலும் சாதாரண நாயாக இருந்தாலும் தடுப்பு ஊசி போட்டுக்கொள்ள வேண்டும். 

... ...

ஓசூரில் உணவகம் நடத்திக்கொண்டு இருந்த நூலாசிரியர் பால் வாங்கும் பொருட்டு காலையில் வெளியே சென்றபோதுதான் நாய் கடிக்கிறது. சதையில் அரை அங்குலம் பல் உள்ளே போய்விட்டது.

அதன் பிறகு உடலில் நடந்த மாற்றங்களை சொல்கிறார். தலை, காது பகுதிகளில் சூடேறுகின்றது. வயிற்றில் எறும்பு மொய்ப்பது போல ஊர்வது போல உணர்வு. முதுகு தண்டிலும் தொப்புளுக்கு நேர் பின்புறத்திலும் அதேபோல உணர்வு.

மருதமலை மருத்துவர் சுப்பிரமணியத்துக்கு தொலைபேசியில் சொல்ல அவர் சொல்கிறார், "நஞ்சை கல்லீரல் உடனடியாக உள்வாங்கி கொள்ளும்.ஆனால் ரத்தம் உற்பத்தி ஆகும் மண்ணீரலிலும் அதன் தாக்கம் இருக்கும். நரம்பு மண்டலத்திலும் தாக்கம் இருக்கிறதால உங்களுக்கு அந்த உணர்வு தெரியுது". உபவாசம் இருப்பது வழக்கம் ஆனாலும் ஐந்தாறு மாதங்கள் இடைவெளி விழுந்துவிட்டது. நாய்க்கடி அவரை உபவாசம் வைக்க வலியுறுத்த வந்த நிகழ்வாக சொல்லால் உணர்த்துகிறார் மருத்துவர்.

 ராமு டீ கொண்டு வருகிறான். டீயை மறுக்கிறார். பழ வகைகளை உட்கொள்வது என முடிவு செய்கிறார். தனக்குள் நடக்கும் மாற்றங்கள் நல்லவையாக இல்லை என்று பதிவு செய்கிறார். முகம் தடிச்ச மாதிரி இருக்கு என்று ராமு சொல்கிறான். முக்கியமானது, நாய் கடித்ததை தனது குடும்பத்தினரிடமோ பணியாளர்களிடமோ அவர் சொல்லவில்லை.

வெந்நீர் குடித்துவிட்டு உறங்குகிறார். வெந்நீர் குடித்தால் ரத்த ஓட்டம் விரைவடையும். விசமும் விரைவடையும். ஆபத்தான விளையாட்டு விளையாடுவதாக சற்றே பயமும் வருகிறது. "மருத்துவமனை சென்று ஊசி போட்டுவிடலாமா" என்ற எண்ணம் தோன்றுகிறது. 

சிறுநீர் இலகுவாக பிரிகிறது. தலை, உடல் பாரம் குறைகிறது. நல்ல ஆசுவாசம். கண்களில் துலக்கம்.

காலையில் ஐந்து மணிக்கு எழும் அவர் ஏழரை மணிக்கு விழிக்கிறார். அதாவது 'நாய்க்கடி நஞ்சு உடம்பில் தாக்கியதாக அர்த்தம்' என்று சொல்கிறார்.

இது குறித்து செய்தி அறிந்த டாக்டர் விமலா கோபம் அடைந்து சத்தம் போடுகிறார். ஊசி போடுங்கள் என்று வற்புறுத்துகிறார். இப்போது பயம் தீவிரமாகிறது. பாகலூர் அரசு மருத்துவமனைக்கு போக சொல்கிறார். கடி உணர்வு அறவே இல்லை என்றாலும் விசம் உடலில் இருந்து முற்றாக வடிந்து விட்டதாக சொல்ல முடியாது. பாகலூர் ஓசூரில் இருந்து 15 கி.மீ. தூரம். அங்கே போனால் மருந்து இல்லை என்று சிக்கதிருப்பதி மருத்துவமனைக்கு போக சொல்கிறார்கள். இன்னும் ஒரு 15 கி.மீ.

இப்போதுதான் அவருக்கும் மனதுக்கும் ஆன உரையாடல் தொடங்குகிறது. பிறந்தநாள் தொடங்கி ரத்தப்புற்று நோயால் அவதிப்பட்டு ஒட்டுமொத்த குடும்பத்தின் பொருளாதாரத்தையும் நிம்மதியையும் தன் பக்கம் திருப்பி சொல்லொணா துயரத்தின் இறுதியில் உயிரை நீத்த மூன்று வயது மகள் தண்யா நினைவில் வந்து மனசாட்சியை உலுக்குகிறாள். உடலையும் உயிரையும் அணு அணுவாக சிதைத்து உருக்கிய அலோபதி எனும் ஆங்கில மருத்துவமுறையில் இருந்து அவளை விடுவித்து இயற்கை முறை சிகிச்சையை மேற்கொண்ட சிறிய கால கட்டத்தில் தண்யா சற்றே நிம்மதி பெறுகிறாள். குடும்பமும் சற்றே அமைதி பெறுகிறது. இப்படியான ஒன்றரை வருட சிகிச்சைக்கு பின் தண்யா நிரந்தர விடுதலை பெறுகிறாள். இறந்து போகிறாள்.

இந்த நினைவு மேலோங்க இப்போது இவருக்கு சுயபச்சாதாபம் மேலோங்குகிறது. ஊசி இருந்து இருந்தால் செலுத்திக்கொண்டு இருப்பேனா? உன் மகளுக்கு இயற்கை மருத்துவம், உனக்கு ஆங்கில மருத்துவம் பரிந்துரைத்த ரேபிஸ் ஊசியா? சுயநலம்தானே? இயற்கை மருத்துவத்தை ஊரெல்லாம் வலியுறுத்தும் நீ உன் உயிர் என்றதும் ரேபிஸ் ஊசி போட ஓடுகிறாயே? ஊருக்கு ஒரு தத்துவம், உனக்கென ஒரு தத்துவமா? 

நாய் போலவே கத்தி கல்லடி பட்டுசெத்தாலும் சாகலாம். ஊசி வேண்டாம். அப்படியே ஊர் திரும்புகிறார். வெறும் பன்னீர் திராட்சை ரசம் அருந்துகிறார். அதுவே சிகிச்சை. அது நோய் நீக்கி, உடலாற்றால் தரும் ஊக்கி என இரண்டுமாக செயல்படுகிறது. ரத்தத்தை சுத்தப்படுத்தும். கெடுரசாயனத்தின் ஈர்ப்புக்கலன் ஆன கல்லீரலை சுத்தப்படுத்தும். கண்களை கட்டுப்படுத்தும் கல்லீரலை திராட்சை சாறு சுத்தப்படுத்தும். எனவே கண்களுக்கும் முழுமையான ஆற்றலை வழங்கும். போப்பு இன்று வரையிலும் கண்ணாடி அணியவில்லை. இயற்கை மருத்துவ முறையை பின் பற்றிய, பின்பற்றும் போப்பு இப்போதும் வாழ்ந்துகொண்டிருக்கும் உதாரணர்.

 ... ....  ....

மகள் தண்யா கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் வாழ்ந்து பெற்றவர்களுக்கு இன்பத்தையும் எஞ்சிய வாழ்நாளுக்கான துன்பத்தையும் கொடுத்துவிட்டு சென்றாள். மட்டுமின்றி வாழ்க்கைக்கான வேறு சில வழிகளையும் காட்டி விட்டுத்தான் சென்றாள். தண்யா இப்போதும் வழிகாட்டிக்கொண்டு இருக்கிறாள். 

... ...

இயற்கையின் ஓர் அங்கமே மனித உடல். இயற்கையின் இயல்பு மாற்றங்களுக்கு இசையவே உடலின் இயக்கமும் அமைகிறது. இந்த புரிதலுக்கு வர அவருக்கு ஆதாரமாக இருந்தது மகள் தண்யாவின் புற்றுநோய். 

"நவீன மருத்துவம் பல ஒவ்வாமைகளை 'எனக்கு' அளித்துள்ளது. அந்த பின்னணியில்தான் மகள் தண்யாவுக்கான சிகிச்சை முறையை தேர்ந்தெடுத்தேன். தொடர்ந்து அக்குபஞ்சர் பயின்றேன். இந்த இரண்டும்தான் எனது வாழ்க்கைப்போக்கையும் எழுத்து முறையையும் மாற்றியது" என்கிறார் போப்பு. செம்மலர் இலக்கிய இதழ் மதுரையில் இருந்து வெளிவந்த காலத்தில் அதில் போப்பு எழுதிய சிறுகதைகளை வாசித்தவன் நான். வித்தியாசமான பெயர் அது. 1982இல் சென்னைக்கு வேலை நிமித்தம் நான் இடம்பெயர்ந்த பின் போப்பு அவர்களின் கதைகளை செம்மலர் உள்ளிட்ட இலக்கிய இதழ்களில் ஏன் பார்க்க முடியாது போனது என்பதற்கான பதில் இங்கே உள்ளது. முகநூலில்தான் போப்பு என்ற புருஷோத்தமன் உள்ளிட்ட எனது மரியாதைக்குரிய பல எழுத்தாளர், கலைஞர்களின் அறிமுகம் வாய்த்தது. தொடர்ந்து அவருடன் உரையாடினேன். அவர் முனைந்து நடத்தும் உயிர்மெய் முகாம்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பை பெற்றேன். 

... ...

வடு இல்லாமல், அதிர்வு தாங்கி ஆகிய இரண்டு அத்தியாயங்களில் மருமகன் சிவா, மகன் சேட்டு, பேரன் தர்ஷன் ஆகியோரை கடுமையாக பாதித்த மோட்டார் பைக் விபத்துக்கள் பற்றியும் பரவலான அலோபதி மருத்துவ முறையை மறுத்து இயற்கை வழி சிகிச்சை மூலம் அனைவருமே பலன் பெற்று குணம் அடைந்த நிகழ்வுகளை பதிவு செய்துள்ளார்.

நூல் ஆசிரியரே இரண்டு முறை பைக் விபத்தில் சிக்கி அதே போல இயற்கை மருத்துவம் மூலமே மீண்டு குணம் பெற்ற நிகழ்வுகளை படிப்படியாய், அந்தரத்தில் பறத்தல் ஆகிய இரண்டு பதிவுகளில் விரிவாக சொல்கிறார்.

இயற்கை சிகிச்சை முறை, அலோபதி அல்லாத மற்ற மருத்துவ முறைகளை மற்றவர்க்கு பரிந்துரை செய்துவிட்டு ஒதுங்காமல் தனது உடலையே அதற்கான சோதனைக்களமாக ஒப்புக்கொடுக்கும் நேர்மையாளராக போப்பு விளங்குகிறார்.

 உடலை வெறும் சட்டகமாக தட்டையாக பார்க்கும் எந்த மருத்துவமுறையும் நோயர்க்கு பலனை விடவும் தீமைகளையே அதிகம் கொண்டுவந்து சேர்க்கும். உடலும் மனமும் இணைந்ததே உயிர். ஒருவர் உடல் போல் இன்னொருவர் உடல் இருப்பதில்லை. உடல் இயக்கமும் அவ்வாறே. எனில் ஒரே விதமான நோய்க்கு ஒரே விதமான மருந்தை அல்லது சிகிச்சையை பரிந்துரைப்பதும் மேற்கொள்வதும் எந்த அளவுக்கு நியாயமானது? நூலில் எந்த மருத்துவ முறை மீதும் நேரடியாக அல்லது வலிந்து திணிக்கப்பட்ட குற்றச்சாட்டு எதையும் ஆசிரியர் வைக்கவில்லை.

அவர் ஒரு முக்கியமான பிரகடனம் ஒன்றை நூலில் பதிவு செய்துள்ளார்: இந்நூலில் கூறியுள்ள சிகிச்சை முறை என் அனுபவம். எல்லோருக்கும் இதுவே விதி என்று நான் பரிந்துரைக்க மாட்டேன். ஏனென்றால் இயற்கையும் சரி உடலியலும் சரி, விதிகளுக்கு உட்பட்டு இயங்குவது இல்லை. எண்ணங்கள், நம்பிக்கைகள், வாழ்க்கை சூழல் போன்றவையும் நோயை எதிர்கொள்வதில் முதன்மை பங்கு வகிக்கின்றன. ஒவ்வொரு உயிரும் நுட்பமான வேறுபாடுகளுடன் தனித்தன்மையுடன் இயங்குகிறது. இதனை பொத்தாம்பொது ஆக்குவதும் சராசரி அளவீடுகளினுள் சட்டக படுத்துவதுமே உடல் அறிவியலுக்கு எதிரானது. எனில் உயிரியக்கத்துக்கு மாற்றாக நவீன எதிர்த்து அடக்கும் முறையே முற்றிலும் சரியானது, அறிவியல் பூர்வமானது என்ற வன்மையான வாதத்தை மறுக்கிறேன்".

.... ....

மருத்துவ ஜனநாயகம், சிகிச்சையில் ஜனநாயகம் என்பது இங்கே அறவே இல்லை. அலோபதி மருத்துவ முறையும் அது சார்ந்த மருந்துகள், சிகிச்சைகளுக்கான மிகப்பரந்த சந்தையாக உலகம், குறிப்பாக மூன்றாம் உலக நாடுகள் மாற்றப்பட்ட்டுள்ளன என்பதே வெளிச்சமான யதார்த்தம். மிக சாதாரணமாக இந்திய மருந்து கடைகளில் விற்கப்படும் பாராசிடமால் 600 வளர்ச்சி அடைந்த ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் தடை செய்யப்பட்டது என்பது சாதாரண விசயம் அல்ல. 2019இல் உலக மக்களை பீதியில் ஆழ்த்திய கொரொனா என்ற நோய்க்கு மின்னல் வேகத்தில் கண்டுபிடிக்க பட்ட தடுப்பூசி மருந்துகளை பல கோடி மக்களுக்கு செலுத்திய பின் இப்போது அவற்றின் கொடிய பின்விளைவுகளை அம்பல படுத்திய பின் அவற்றை உற்பத்தி செய்வது நிறுத்தப்பட்டது என்று சொல்வது சாமானிய மக்கள் மீதான அலோபதி மருந்து உற்பத்தி முதலாளிகள், உலக அரசுகளின் கூட்டணி ஏவிய கொடுமையான தாக்குதல் என்று சொன்னால் அதில் தவறு என்ன? இந்த கேள்விக்கான நியாயமான பதிலை தருவதற்கோ அல்லது அதற்கான ஆரோக்கியமான விவாதத்தை எதிர்கொள்ளவும் ஆயத்தம் இல்லாத ஒரு கூட்டம் கேள்வியை எழுப்பும் எவரையும் அறிவிலிகள், அறிவியலுக்கு எதிரானவர்கள் என்று தூற்றுவது எப்படி நியாயம் ஆகும்?

முதலாம், இரண்டாம் உலகப்போருக்கு பின் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் போர் தளவாட, ஆயுத உற்பத்தி ஆலைகளில் மிஞ்சி நின்ற பல கோடி டன் கணக்கான வேதியியல் கச்சா பொருட்களை குப்பையில் வீசினால் பல கோடி டாலர்கள் நஷ்டம் ஆகும் என்று கருதி அவற்றை விவசாயத்துக்கு 'பயன்படும்' உரமாக, பூச்சி கொல்லி மருந்துகளாக வடிவம் மாற்றி விற்ற கொடும் வரலாறு அமெரிக்க ஐரோப்பிய நாடுகளுக்கு சொந்தமானது என்பதை மறந்துவிட முடியாது.

நூலில் ஆசிரியர் தென் பெண்ணை ஆறு, கெலவரப்பள்ளி, கரையில் நிறுவப்பட்ட ஆலைகள், அதனால் உண்டான மீள வாய்ப்பு இல்லாத அழிவுகள் ஆகியவை பற்றி போகிற போக்கில் குறிப்பிடும் விவரங்கள் மேலே சொன்ன வரலாற்றுடன் தொடர்பு உடையவைதான்.

உடனடி ஆபத்து, விபத்து, உயிருக்கு ஆபத்து என்று வரும் சூழலில் நவீன மருத்துவத்தை நாடுவதே சரி என்ற பொதுப்புத்தியில் ஒரு உடைப்பை இந்த நூல் மூலம் போப்பு ஏற்படுத்தி உள்ளார்.

இந்த நூல் தமிழகத்தில், தமிழ் அறிந்த ஊர்களில், நாடுகளில் ஒரு சீரிய விவாதத்தை தொடங்கி வைக்கும் என்பதில் ஐயமில்லை. அவ்வாறே போப்பு முன்வைக்கும் கருத்துக்களை மறுக்க முற்படுவோர் நாகரிகமான ஆரோக்கியமான வாதங்களை தம் தரப்பில் இருந்து முன்வைக்க வேண்டுகிறேன். நவீன மருத்துவ முறைகளுக்கு முன் காலம் தொட்டே தமிழகத்திலும் இந்தியாவுக்கு வெளியேயும் அந்தந்த காலத்தின் அறிவுத்திறனுக்கும் கண்டறிதலுக்கும் ஏற்ப பலவேறு மருத்துவ முறைகள் இருந்துள்ளன என்ற உண்மையில் இருந்து இந்த கருத்துக்களை விவாதிப்பதே சிறந்தது.

நூலை சிறந்த முறையில் அச்சில் கொண்டு வந்த பதிகம் பதிப்பாளர் கடற்கரய் மத்தவிலாச அங்கதம், ஆழமான முன்னுரை வழங்கியுள்ள பி என் எஸ் பாண்டியன் ஆகியோருக்கு வாழ்த்துக்கள். போப்பு அவர்கள் சிறுகதை எழுத்தாளர். அந்த அனுபவம் நூலின் நடையில் தெரிகிறது. நடந்த நிகழ்வுகளை ஒரு கதை போலவே எழுதி வாசிக்கும் அனுபவத்தை மேம்படுத்துகிறார்.

நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு நூல் குறித்து உரையாற்ற என்னை அழைத்து சிறப்பித்த போப்பு அவர்களுக்கு எனது நன்றி.

- மு இக்பால் அகமது

24.05.2024


கருத்துகள் இல்லை: