வியாழன், ஜூன் 13, 2024

கட சிங்காரி

மாட்டுகாரவேலா ஒம் மாட்டை கொஞ்சம் பாத்துக்கடா...

மச்சானை பாத்தீங்களா...

கேட்டேளே அங்கே அதை... 

பூங்காற்றிலே உன் சுவாசத்தை... 

என் வீட்டு தோட்டத்தில்... 

பம்பை உடுக்கை கட்டி பரிவட்டம்...

தாண்டியா ஆட்டமும் ஆட...

வீட்டுக்கு வீட்டுக்கு வாசப்படி...

ஒன்ன விட இந்த உலகத்தில்...

வெள்ளி சலங்கைகள்... 

நாதம் என் ஜீவனே...

காவியம் பாடவா தென்றலே...

என்ன? ஒண்ணுக்கொண்ணு சம்பந்தம் இல்லாமல் இருக்குதா? சம்பந்தம் இருக்குது.

கட சிங்காரி? ஜேச்சா? சரி. உடுக்கை, பம்பை, நாகரா, தப்பு, உருமி, முரகோஸ், ஜால்ரா, துடி, கின்னாரம், கடம், கொன்னக்கோல், மோர்சிங், கிலுகிலுப்பை, மகுடி, சங்கு, தாண்டியா... 

இப்போது பிரபலமாக ஒளிபரப்பாகும் zee சரிகம ஆகட்டும், இளையராஜா, ரஹ்மான் அல்லது எந்த ஒரு பிரபலமான கலைஞரின் கச்சேரி ஆகட்டும், இவரை நீங்கள் பார்க்காமல் கடந்து செல்லவே முடியாது. அவர் பெயர் ஜெயச்சந்திரன் என்ற ஜேச்சா. 

அவர் போன்ற கலைஞர்களை பொதுவாக ஆல் ரவுண்டர் என்று கச்சேரி அல்லது ஆர்கெஸ்ட்ரா வட்டாரங்களில் சொல்வார்கள். மேலே நான் சொன்ன தோல் இசை கருவிகள் இவர்களை சுற்றி இருக்கும். மட்டும் இன்றி மாட்டின் கழுத்து மணி ஒலி, 

சலங்கை, விசில், குருவி, கிளி போன்ற பறவைகளின் குரல் ஒலி ஆகிய

சத்தங்களை பாடல்களில் உருவாக்கி தரும் கலைஞர்கள் இவர்கள். காலமாகி விட்ட மீசை முருகேஷ் அப்படிப்பட்ட கலைஞர்தான். இவர்களை சுற்றி இருக்கும் வேறு பல பொருட்களை பார்த்தால் வேடிக்கையாகவும் இருக்கும். ஆனால் பாடல்களில், காட்சி பின்னணி இசை BG ஆகியவற்றில் இவர்களின் பங்கு மிக முக்கியமானது.

மேலே நான் குறிப்பிட்டுள்ள பாடல்களில் இந்த கலைஞர்களின் பங்கு மிக முக்கியமானது என்பது இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும். 

...

மாட்டுக்கார வேலா ஒம் மாட்டை கொஞ்சம் பாத்துக்கடா... என்ற பாடலில் மாட்டை பிடித்துக்கொண்டு உருமி இசைத்துக்கொண்டு வருபவர் எம் கே சோமசுந்தரம் என்ற சிங்காரம். மாடர்ன் தியேட்டர்ஸ் டி ஆர் சுந்தரம் அவர்களிடம் ஸ்டுடியோ நிர்வாகியாக பணி செய்தார். கூடவே பாடகர், நடிகர், உருமி இசைக்கலைஞர் ஆகிய பன்முகத்திறன் கொண்ட ஆளுமையாக சிங்காரம் இருந்துள்ளார். 

வீட்டில் தண்ணீர் ஊற்றி வைக்கும் மண்பானைதான் கச்சேரிகளில் கடம் ஆகிறது. அதே கடத்தின் வாயில் ஆட்டுத் தோலை இழுத்துக்கட்டி மூடி அதில் அடித்து இசைக்கும் புதிய இசைக்கருவி ஒன்றை சிங்காரம் கண்டுபிடித்துள்ளார். அதற்கு என்ன பெயர் வைப்பது என்று குழம்பியபோது கட சிங்காரி என்று பெயர் சூட்டியுள்ளார்கள். 

சிங்காரத்தின் மகன்தான் ஜெயச்சந்திரன் என்ற ஜேச்சா. தனது பன்னிரெண்டாம் வயதில் கே வி மகாதேவனுக்கு வாசித்துள்ளார். 1973இல் இருந்து இப்போது வரை இளையராஜாவுக்கு இசைத்து வருகிறார்.  மற்ற இசையமைப்பாளர்களிடமும் பணி செய்துள்ளார். 40 வருடங்களாக 10,000 பாடல்களுக்கும் மேல், 300 இசையைப்பாளர்களுடன் பணி ஆற்றிய நெடிய இசை அனுபவம் அவருடையது. அன்றி தனியாக இசை ஆல்பங்களும் கொடுத்துள்ளார். விளம்பர படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

அவர் குறித்தும் அவர் இசைக்கும் தோல் கருவிகள் குறித்தும் ஆன ஓர் ஆவணப்படம் யூடியூபில் உள்ளது. தொடுப்பு 

https://youtu.be/fddvSIRkw7s?si=fbLWNtBLzHwXyAIL&mibextid=NOb6eG

... ...

கருத்துகள் இல்லை: