திங்கள், டிசம்பர் 20, 2021

உன் மரணத்துக்கு நான் அழ வேண்டுமா?

மரணம் துயரமானது மட்டுமா?

உன் வாழ்வு கொண்டாடத்தக்கதாக இருந்திருப்பின்

உன் மரணமும் துயரப்பட வேண்டியதே


உன் மரணத்துக்குப்பின்

உன்னை கொண்டாடும்படியாக

நீ வாழும்போது என்னதான் செய்து இருந்தாய்?


எத்தனை பேர் வீடுகளில் நீ

கொண்டாட்டத்தின் ஒளியை ஏற்றி வைத்தாய்?


எத்தனை சாமானியன் தெருக்களில் நடமாட

நீ துணையாய் நின்றாய்?


எங்கள் வீட்டுப்பெண்கள் எத்தனை பேர்

உன்னை நம்பி வாசல்படி தாண்டி வெளியே வந்தார்கள்?


தெருக்களில் விளையாடும் எங்கள் குழந்தைகளின் குரலில்

என்றாவது நீ மகிழ்ச்சி அடைந்திருக்கின்றாயா?

உன் வாகனத்தை நிறுத்தி 

களங்கம் அற்ற குதூகலத்தின் காற்றை 

ஒரு நொடியாவது முகர்ந்திருப்பாயா?


சொல்,

எதன்பொருட்டு நான் போலிக்கண்ணீர் வடிக்க வேண்டும்?


தோட்டாக்களால் ஆன மாலைகளைவிடவும்

எங்கள் பிள்ளைகள் செய்யும் புளியங்கொட்டை மாலைகள்

மிக அழகானவை

வலிமை மிக்கவை

வீட்டுக்குள்ளும் வீதிகளிலும்  சந்தோசத்தின் ஒலியை சிதற விடுபவை


நினைவு படுத்திச்சொல்,

எதாவது ஒன்றாவது சொல்,

உன்னை கொண்டாடுகின்றேன்

உன் மரணத்துக்கு நான் அழுகின்றேன்

மஹாத்மா காந்தியை காப்பாற்றி இருக்க முடியாதா? (1)

"ஆகஸ்ட்15ஐ என்னால் கொண்டாட முடியாது. பொய் சொல்லி உங்களை ஏமாற்ற விரும்பவில்லை. ஆனால் அதே நேரத்தில் நீங்கள் கொண்டாட கூடாது என்று உங்களை கேட்டுக்கொள்ள மாட்டேன். கெடுவாய்ப்பாக இன்றைக்கு நமக்கு கிடைத்துள்ள இந்த விடுதலையில்தான் எதிர்காலத்தில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே எழவுள்ள அனைத்து பிரச்னைகளுக்கும் ஆன விதை பொதிந்துள்ளது. நாம் எவ்வாறு இன்று விளக்கேற்ற முடியும், சொல்லுங்கள்?"

- காந்தி

..... .... ....

1947 ஆகஸ்ட் 15 அன்று உலகமே உறங்கும் நடுநிசி நேரத்தில் இந்தியா விடுதலை பெற்ற நேரத்தில், டெல்லியில் பல லட்சம் மக்கள் திரண்டு விடுதலையை கொண்டாடிக்கொண்டு இருந்த நேரத்தில், இந்திய விடுதலை போராட்டத்தின் , காங்கிரஸ் பேரியக்கத்தின் முகமாக இருந்த காந்தி எங்கே இருந்தார்?

இந்தக் கேள்விக்குள் காந்தி அப்போது டெல்லியில் இல்லை என்ற பதில் அடங்கி உள்ளது. அப்படி எனில் அவர் அன்று எங்கே இருந்தார்?

... ... ....

காந்தியை சுட்டுக்கொன்ற ஆர் எஸ் எஸ் இந்துத்துவா அடிப்படைவாதிகள் காலம் நெடுகிலும் தம் கொடுஞ்செயலை நியாயப்படுத்துவதற்கான காரணங்களாக சொல்வது இவற்றையே:

1. தேசபிரிவினைக்கு அவரே காரணம்

2. அவர் முஸ்லிம்களை அரவணைத்தார்

3. அவர் உயிருடன் இருக்க அனுமதிக்கப்பட்டிருந்தால் ஹிந்து ராஷ்டிரம் அமைய தடங்கலாய் இருந்திருப்பார்

4. பாகிஸ்தானுக்கு 55 கோடி ரூபாய் கொடுக்குமாறு அவர் இந்திய அரசை வற்புறுத்தினார்

5. தேசபிரிவினையின்போது இந்து அகதிகளின் துயரங்களை பற்றி அவர் கண்டுகொள்ளாமல் இருந்தார். ஆனால் இந்தியாவிலேயே தங்கிவிட்ட இசுலாமியர்களை அவர் ஆதரித்தார்

6. பாரத்மாதாவை காப்பற்ற ஒரே வழி அவரை கொல்வதுதான்.

மேலும் பல காரணங்களையும் கட்டமைக்கின்றார்கள்.

இவற்றில் ஏதாவது உண்மை உள்ளதா? அவர் இப்போது உயிருடன் இல்லை என்ற யதார்த்தமான நிலையில், குறைந்தபட்சம், ஹிந்து ராஷ்டிரம் என்று அவர்கள் கனவு காணும் அகண்ட பாரதத்தை அவரை கொன்றபின் ஆன 73 வருடங்களுக்கு பின்னும் இவர்களால் ஏன் நிறுவ முடியவில்லை என்ற கேள்விக்கான பதிலை இவர்கள் மக்களிடம் சொல்லியாக வேண்டும்.

.... ... ....

காந்தி படுகொலையில் நேரடியாக தொடர்புடைய அனைவரும் மராட்டிய சித்பவன் பிராமணர்கள். 

1.அவர்களின் சித்தாந்த தந்தை விநாயக் தாமோதர் சாவர்க்கர், 1915இலேயே காங்கிரசுக்குள் இந்து மகா சபையை வளர்க்க முனைந்தார். அந்தமான் சிறையில் இருந்து இந்திய மண்ணில் உள்ள ரத்னகிரி சிறைக்கு மாற்றப்பட்டபோது 1922இல் இந்துத்துவா என்ற நூலை எழுதுகின்றார். பின்னாளில் சாவர்கரின் முயற்சியாலும் அவரது இந்த நூலை படித்து உற்சாகம் பெற்றிருந்த கேசவ பலிராம் ஹெட்கேவரின் முயற்சியாலும் 1925இல் ஆர் எஸ் எஸ் இயக்கம் தொடங்கப்பட்டது. இந்துமகாசபை நேரடியா அரசியல் பேசும், ஆர் எஸ் எஸ் ரகசிய வேலைகளை செய்யும்.

2. நாதுராம் கோட்ஸே: ஆர் எஸ் எஸ் உறுப்பினர், புனாவை சேர்ந்தவர்

3. நாராயண் ஆப்தே: பிரிட்டிஷ் ராணுவத்தில் சேவை செய்தவர், ஆசிரியர், புனாவை சேர்ந்தவர்

4. திகம்பர் பட்கே: ஆயுத வியாபாரி, ஊர் அஹமத் நகர்

5. தத்தாத்ரேய சதாசிங் பராச்சுரே: மருத்துவ துறையை சேர்ந்தவர், ஊர் க்வாலியர்

6. விஷ்ணு ராமகிருஷ்ண கார்கரே: இசை வல்லுநர், ஓட்டல் பணியாளர், பிற்காலத்தில் ஓட்டல் முதலாளி, ஊர் அஹமத் நகர்

7. மதன்லால் காஷ்மீரிலால் பாவா: முன்னாள் பிரிட்டிஷ் ராணுவ வீரர், பாகிஸ்தானில் இருந்த பஞ்சாபில் இருந்து இந்தியாவுக்கு இடம் பெயர்ந்த அகதி, அஹமத் நகர் அகதிகள் முகாமில் இருந்தவர்

8. கோபால் கோட்ஸே: நாதுராமின் தம்பி, ஊர் புனா.

9. சங்கர் கிஷ்டய்யா: ரிக்சா ஓட்டும் தொழிலாளி, ஊர் புனா

காந்தி படுகொலைக்கு பின்னும் இப்போதும் கோட்ஸேவுக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை என்று ஆர் எஸ் எஸ் கூறிக்கொண்டே வருகின்றது. தி கேரவன் ஜனவரி2020 ஆங்கில இதழில் தீரேந்திர கே ஜா எழுதியுள்ள கட்டுரையில் ஒரு பகுதி இது: 

"கடந்த எட்டு மாதங்களாக நான் தேடி வாசித்து வரும் வரலாற்று ஆவணங்கள் சொல்வது என்னவென்றால் ஆர் எஸ் எஸ் உறுப்பினர் பொறுப்பில் இருந்து கோட்ஸே ஒருபோதும் விலகியது இல்லை என்பதுதான். 1948 மார்ச் மராத்திய மொழியில் அளித்த ஒரு வாக்குமூலத்தை இப்போதும் கூட பல வரலாற்று அறிஞர்கள் அறியாமல் இருக்கின்றார்கள். இந்த அறிக்கை உண்மையில் கோட்ஸேயின் தன்வரலாறு ஆகும். ஒரே நேரத்தில் ஆர் எஸ் எஸ், இந்து மகா சபை இரண்டிலும் தான் வேலை செய்ததை கோட்ஸே ஒப்புக்கொண்டு இருக்கின்றான். 18, 19ஆவது பக்கங்களில் அவன் தெளிவாக சொல்கின்றான், 'மீண்டும் இந்துமகாசபை வேலைகளை செய்ய தொடங்கி உள்ளேன், கூடவே ஆர் எஸ் எஸிலும் தொடர்ந்து இயங்குகின்றேன்".

1994 ஃபிரண்ட் லைன் இதழுக்கு கோபால் கோட்ஸே கொடுத்த வாக்குமூலம் முக்கியமானது: "காந்தி கொலைக்கு பின் கோல்வாக்கரும் ஆர் எஸ் எஸ்ஸும் மிகுந்த தொல்லைக்கு உள்ளானார்கள், இதை தவிர்க்க விரும்பித்தான் தான் ஆர் எஸ் எஸ்சில் இருந்து விலகிவிட்டதாக (நீதிமன்றத்தில்) அவர் சொன்னார். ஆனால் ஆர் எஸ் எஸ்சில் இருந்து அவர் விலகவில்லை. நாங்கள் நான்கு சகோதரர்களும் ஆர் எஸ்எஸ் உறுப்பினர்கள். நாங்கள் குடும்பத்தில் வளர்ந்தோம் என்பதை விடவும் ஆர் எஸ் எஸில் வளர்ந்தோம் என்று நீங்கள் சொல்லலாம். அதுவே எங்கள் குடும்பம் போன்றது". தன் தொண்டனை கைவிட்டது குறித்து இந்த பேட்டியில் அவர் ஆர் எஸ் எஸ்ஸை விமர்சித்துள்ளார், கைவிட்டுவிடாத இந்துமகாசபையை பாராட்டுகின்றார், அதாவது காந்தி கொலையில் இ ம சபை தன் பங்கை எப்போதும் மறுத்தது இல்லை.

(தொடர்ந்து எழுதுவேன்)

செவ்வாய், டிசம்பர் 07, 2021

கற்பனை செய்யுங்கள்! (Imagine)

 


கற்பனை செய்யுங்கள்! (Imagine)

சொர்க்கம் என்ற ஒன்றில்லை, கற்பனை செய்யுங்கள்

முயற்சி செய்யுங்கள், மிக எளிது

காலுக்கு கீழே நரகம் ஏதும் இல்லை

தலைக்கு மேலோ ஆகாயம் மட்டுமே


மக்கள் அனைவரும் 

இன்றைய வாழ்வை வாழ்கின்றார்கள், கற்பனை செய்யுங்கள்


தேசங்கள் என்று ஏதும் இல்லை, கற்பனை செய்யுங்கள்

கடினமான காரியம் இல்லை

எதையும் கொல்ல வேண்டாம்

எதற்காகவும் சாக வேண்டாம்

மதங்கள் என்று ஏதுமில்லை, ஆம்


கற்பனை செய்யுங்கள்,

மக்கள் அனைவரும் சமாதானமாக வாழ்கின்றார்கள்


நீங்கள் சொல்லலாம், நான் கனவு காண்கின்றேன் என்று

ஆனால் கனவு காண்பது நான் மட்டுமே அல்ல

என்றாவது ஒருநாள் நீங்களும் என்னுடன் இணைந்து கொள்வீர்கள்

அன்று உலகம் ஒரே உலகமாக இருக்கும்


சொத்து என்று ஏதுமில்லை, கற்பனை செய்யுங்கள்

உங்களால் முடியும் எனில் நான் வியப்புறுவேன்

பொறாமைக்கும் பசிக்கும் இடமில்லை

சகோதரத்துவம் மட்டுமே எங்கிலும்


கற்பனை செய்யுங்கள்,

உலக மக்கள் அனைவரும் 

இந்த உலகினை பகிர்ந்துகொள்கின்றார்கள்


நீங்கள் சொல்லலாம், நான் கனவு காண்கின்றேன் என்று

ஆனால் கனவு காண்பது நான் மட்டுமே அல்ல

என்றாவது ஒருநாள் நீங்களும் என்னுடன் இணைந்து கொள்வீர்கள்

அன்று உலகமக்கள் அனைவரும் ஒன்றாக வாழ்வார்கள்


- ஜான் லென்னான்

 9.10.1940-8.12.1980 (கொல்லப்பட்டார்)

வியட்நாம் மீது அமெரிக்கா போர் தொடுத்த நாட்களில் இக்கவிதையை எழுதினார் (மார்ச் 1971)

தமிழில்: மு இக்பால் அகமது

ஞாயிறு, நவம்பர் 28, 2021

சலீல் சவுத்ரி: எல்லை கடந்த இசை மேதை

சலீல் தா என்று அன்புடன் அழைக்கப்படும் சலீல் சவுத்ரி 1922 நவம்பர் மாதம் 19ஆம் நாள் வங்கத்தில் தெற்கு 24 பர்கானா மாவட்டத்தில் காஜிப்பூர் என்ற கிராமத்தில் பிறந்தவர்.

அவரது தந்தையார் அசாம் தேயிலைத்தோட்டத்தில் மருத்துவர் ஆக இருந்தவர். பெரும் இசை ரசிகர், இசை ஞானம் மிக்கவர். பீத்தோவன், மொசார்ட் உள்ளிட்ட பெரும் இசை மேதைகளின் இசைத்தொகுப்புக்கள், மேற்கத்திய இசை, அசாம், வங்க நாட்டுப்புற பாடல்கள் உட்பட  பெரிய சேகரிப்பை வைத்திருந்தார். பிள்ளைப்பருவம் தொட்டே சலீல் இவற்றை கேட்டு வளர்ந்தவர். எட்டாவது வயதிலேயே புல்லாங்குழல் இசைப்பதில் வல்லமை பெற்றார். 

தந்தையார் மிகுந்த தேசப்பற்று மிக்கவர். பிரிட்டிஷ் அரசையும் அதன் அடக்குமுறைகளையும் விமர்சிப்பவர். ஒரு முறை பிரிட்டிஷ் மானேஜர் ஒருவன் "அழுக்குப்பிடித்த கருப்பனே" என்று அவரை திட்ட, அவனை அடித்து மூன்று பற்களையும் உடைத்தார் அவர்.  

தேயிலைத்தோட்ட தொழிலாளர்கள் படும் துயரங்களை நேரில் கண்டு வளர்ந்தார் சலீல். அவரது அண்ணனும் இசைக்கலைஞர், பிற்காலத்தில் இசைக்குழு ஒன்றை நடத்தியவர்.

ஆங்கில இலக்கியத்தில் இளங்கலைப் பட்டமும் வங்க இலக்கியத்தில் முதுகலைப்பட்டமும் பெற்றார் சலீல். அவர் கல்லூரியில் பயின்ற காலம் தேச விடுதலைப் போராட்டம் தீவிரமாக நடந்து கொண்டிருந்த காலம். இரண்டாம் உலகப்போர், போருக்குப்பின்னான இந்திய அரசியல் சூழலில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் சந்தித்த நெருக்கடி, பிரிட்டிஷாரால் உருவாக்கப்பட்ட1942 வங்கப் பஞ்சம் ஆகியவற்றை நேரில் கண்டு தன் அனுபவங்களால் தன்னை கூர்மைப் படுத்திக்கொண்டார் சலீல். 

1945இல் நடந்த விவசாயிகள் போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்டு விவசாயிகளுடன் களத்தில் போராடினார். ஒரு கட்டத்தில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் அவரை கைது செய்ய முயன்றபோது தலைமறைவாக சென்றார். 

இந்தியாவின் முன்னோடி இலக்கிய அமைப்புக்கள் எனில், முற்போக்கு எழுத்தாளர் சங்கம், கல்கத்தாவில் இயங்கிய இளைஞர் கலாச்சார நிறுவனம், பெங்களூரில் அமைந்த மக்கள் நாடக மேடை ஆகியவை. இந்திய அளவில் இயங்கிய இலக்கியவாதிகளும் கலைஞர்களும் முனைந்து நிறுவிய இந்திய மக்கள் நாடக மன்றத்தின் (இப்டா) நிறுவனர்களில் சலீலும் ஒருவர். இப்டாவின் முன்னோடிகளில் பிருத்வி ராஜ் கபூர், பிஜோன் பட்டாச்சார்யா, பால்ராஜ் சாஹ்னி, ரித்விக் கட்டக், உத்பல் தத், காஜா அகமது அப்பாஸ், பண்டிட் ரவிசங்கர், இந்திரா மொய்த்ரா ஆகியோர் இருந்தார்கள்.

குறிப்பாக வங்கம், மராட்டியம் என இரண்டு மாநிலங்களிலும் இப்டாவை நிறுவியர்களில் மிக முக்கியமானவர் சலீல். பம்பாயில் பாம்பே இளைஞர் சேர்ந்திசைக்குழுவை நிறுவினார். மன்னா டே, முகேஷ், லதா மங்கேஸ்கர், கனு கோஷ், ரூமா கங்குலி, பிரேம் தாவன், சைலேந்திரா ஆகியோர் இக்குழுவில் இயங்கியவர்கள்.

காலனிய ஆட்சிக்கும் ஏகாதிபத்திய அரசியலுக்கும் எதிரான உணர்வு கொண்ட எழுத்தாளர்களும் கலைஞர்களும்  கலைக்குழுக்கள், நாடக குழுக்கள், இசைக்குழுக்கள் என நாடெங்கிலும் தொடங்கி இயங்கினர். கொள்கை அடிப்படையில் இக்குழுக்கள் யாவும் இடதுசாரிகளாக இருந்தன, அன்றைய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் பி சி ஜோஷி, முற்போக்கு எழுத்தாளர்சங்க செயலாளர் சாஜத் ஜஹீர் ஆகியோரால் உற்சாகம் பெற்றன. தமிழகத்தில் இந்த அமைப்புகள் விதை விடாமல் போனதை எண்ணி மறைந்த மக்களிசை மேதை எம் பி சீனிவாசன் வருந்தினார் என்பதையும் தமிழ்நாடு தாண்டி இந்த கலைஞர்களுடன் இயக்க ரீதியாகவே நெருங்கிய  நட்புடன் அவர் இருந்தார், இயங்கினார் என்பதையும் குறிப்பிட வேண்டும்.

வங்க மொழியிலும் இந்தி மொழியிலும் உணர்வு பொங்கும் தேச பக்தி பாடல்களை சலீல் எழுதினார். முக்கியமாக விவசாயிகள், தொழிலாளர்கள், சாமானிய ஏழை மக்களின் பாடுகளை அவர் பாடல்களில் எழுதினார், இசையமைத்தார், மக்களுடன் மக்களாக போராட்ட இயக்கங்களில் நின்றார்.  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார் சலீல்.

சலீல் மிகப்பெரிய இசைமேதை. 1949இல் பொரிபோர்தன் என்ற வங்கப்படத்துக்கு இசையமைத்து தன் திரையுலக வாழ்க்கையை தொடங்குகின்றார். இசையில் புதிய பரிமாணங்களையும் எல்லைகளையும் கண்டவர், அவர் பாடல்களில் இது தெளிவாக வெளிப்படுகின்றன. ரிக்சாக்காரன் என்ற சிறுகதையை அவர் எழுதிய பின் அதனை இந்தியில் படமாக்க  விரும்பிய பிமல் ராய் சலீலையே வசனம் எழுத சொல்கின்றார். பின்னர் படத்துக்கு இசையமைக்கவும் வேண்டிக்கொள்ள, இந்தியில் இசையமைப்பாளர் ஆகும் வாய்ப்பு தேடி வருகிறது. தோ பிகா ஜமீன் என்பதே அப்படம், புகழ்பெற்ற படம்.

இந்தியில் 75, வங்கத்தில் 45, மலையாளத்தில் 27 படங்களுக்கு சலீல் இசையமைத்தார். அரசின் திரைப்பட துறை தயாரித்த படங்கள், ஆவணப்படங்கள், டிவி தொடர்கள், டிவி ஆவணப்படங்கள், படங்கள் என மிகப்பரந்த அளவில் அவர் பணியாற்றினார். தமிழ், தெலுங்கு, கன்னடம், குஜராத்தி, மராத்தி, அசாமி, ஒரிய மொழிப்படங்களுக்கும் இசையமைத்தார். மிகப்பல படங்களுக்கு பின்னணி இசை மட்டுமே அமைத்துள்ளார், பாடல்கள் இல்லாத படங்கள் அவை.

மலையாளத்தில் அவர் இசையமைத்த செம்மீன் (1965) பெரும்புகழ் பெற்ற படம். 

என் பள்ளி நாட்களில், சிலப்பதிகாரத்தின் 'திங்கள் மாலை வெண்குடையான்' என்ற பாடல் இலங்கை வானொலியில் நான் கேட்காத நாள் இல்லை. யேசுதாஸ் பாடினார், அதே பாடலை பி சுசீலாவும் பாடினார். கரும்பு என்ற படம், வெளிவரவே இல்லை. செம்மீன் இயக்கிய ராமு காரியத் இயக்கினார், செம்மீனுக்கு இசையமைத்த சலீல்தான் இதற்கும் இசையமைத்தார். இணையத்தில் பாடல் கிடைக்கின்றது. தமிழின் இளங்கோவடிகள், வங்கத்தின் சலீல், கேரளத்தின் ராமு காரியத், யேசுதாஸ்! எல்லோரையும் இசை இணைத்தது. 

பருவமழை என்ற தமிழ்ப்படத்துக்கு அவர் இசையமைத்தார். யேசுதாஸ் பாடிய மாடப்புறாவே வா என்ற பாடல் புகழ் பெற்றது.

உள்ளமெல்லாம் தள்ளாடுதே என்று தூரத்து இடிமுழக்கத்தில் ஒரு பாட்டு. என்ன ஒரு நவீனமான கற்பனை கொண்ட இசைக்கோர்வை! பாடலின் தொடக்கம் ஒரு பறவை மெதுவாக மேலெழும்புவது போன்றது, அதன் பின் வானத்தில் வட்டமிடுகின்றது, வெட்டவெளி எங்கும் கட்டுப்பாடின்றி சுற்றித்திரிகின்றது, கேளுங்கள்.

வங்கத்திலும் இந்தியிலும் கிசோரும் லதாவும் பாடிய ஒரு டூயட் பாடல், பின்னர் மலையாளத்தில் யேசுதாஸ் மட்டும் பாடும் பாடலானது (ஏதோ ஒரு சொப்னம் 1978),  தமிழில் ஜெயச்சந்திரனும் சுசீலாவும் பாடினார்கள். பூவண்ணம் போல நெஞ்சம் என்றால் உங்களுக்கு தெரியும். ஒரே மெட்டில் ஆன பாடல் வங்கத்தில் தொடங்கும் போது எப்படி இருந்தது, இந்தியில் எப்படி சற்றே வடிவம் மாறியது, யேசுதாசின் குரலுக்கும் பாடலின் சூழலுக்கும் ஏற்றவாறு மலையாளத்தில் எப்படி வடிவம் பெற்றது, அழியாத கோலங்களில் ஒரு இளைஞனுக்கும் அவனது தோழிக்கும் ஆன ஒரு பாடலாக பாலு மஹேந்திராவுக்காக  எப்படி அமர்க்களமாக உருமாற்றம் ஆனது என்பதை அனுபவியுங்கள்.

"நான் என் இசைத்தொழிலை தொடங்கியபோது, இசையுலகம் என்பது நான் ஏறி விட முடியாத அளவுக்கு மிக மிக உயர்ந்த கோபுரம் என்றுதான் கற்பனையில் இருந்தேன். நீண்ட பல வருடங்களுக்குப் பிறகு இப்போது நான் பார்க்கும்போது அந்தக் கோபுரம் அப்போது எத்தனை உயரமாக இருந்ததோ அப்படியே இருப்பதை பார்க்கின்றேன்" என்று 1993இல் ஒரு நேர்காணலில் சொன்னார் சலீல்.

சலீலும் எம் பி சீனிவாசனும் மக்களிடம் இருந்து இசையை கற்றுக்கொண்டு மக்களுடன் இருந்தவர்கள். இசை கடவுள் கொடுத்த வரம், உங்களுக்கு இசை கொடுக்க கடவுள் என்னை அனுப்பியிருக்கிறான் என்றெல்லாம் ஒருபோதும் புலம்பியது இல்லை. இவர்கள் மக்களிசைக் கலைஞர்கள்.

(சலீல் சவுத்ரி 19.11.1922 - 5.9.1995)

திங்கள், நவம்பர் 15, 2021

மரணம் கொண்டாடப்பட வேண்டியது, எப்போது? (2)

 

கொரோனா இரண்டாவது அலை இந்த ஏப்ரல், மே மாதங்களில் ஆடிய கொடூரப் பேயாட்டம் உண்மையில் எவரும் எதிர்பாராதது. எத்தனை உறவுகள், எத்தனை நட்புக்கள்! பேய் அரசாண்டதால் கொரோனா எல்லோரையும் தின்றது, பெருந்துயரம் அப்படி ஒரு அரசை தமிழ் மக்கள் பெற்றிருந்த கொடுங்காலம். கடந்த வாரம் நாம் கடந்து வந்த பெருவெள்ளமும் அல்லிராணி சாம்ராஜ்யத்தில் நள்ளிரவு செம்பரம்பாக்கம் ஏரி உடைப்பை தவிர்க்க இயலாமல் நினைவுக்கு கொண்டுவந்தது உண்மை உண்மை. மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டதும் உண்மைதான்.

மரணம் மீதான நினைப்பே கூட ஒரு சிலிர்ப்பையும் மீண்டும் அது பற்றி எண்ணுவதை தவிர்க்க வேண்டும் என்ற சாத்தியமில்லாத உறுதியையும் ஏற்படுத்துவது உண்மைதான். பிறக்கும் போதே இறப்பு என்பது உறுதி, எனில் இடைப்பட்ட நாளில் என்ன செய்தோம் என்பதுதான் வாழ்க்கை. உன் கண்ணில் ஒரு துளி நீர் வழிந்தாலும் உலகம் அழ வேண்டும் என்பது வெறும் திரைப்படப்பாடல்தானா?

அகிரா குரோசாவாவின் the dreams குறும்படத்தொகுப்பில் village of the watermills நீராலைக்கிராமம் என்றொரு படம். மரணத்தைக் கொண்டாடும் குறும்படம். இதன் பொருள் என்ன? வாழ்க்கையை கொண்டாடும் மனிதனால்தான் மரணத்தைக் கொண்டாட முடியும்! அக்கிராமத்தில் மனிதர்கள் வாழ்க்கையை கொண்டாடுகின்றார்கள், வாழ்கின்றார்கள். அது குறித்து ஒரு பதிவு எழுதினேன். அச்சில் கொண்டுவர திட்டமிட்டுள்ள என் நூலுக்காக அப்பதிவை மீண்டும் வாசிக்கும்போது புதிய பார்வையுடன் பார்க்கின்றேன். மாறிக்கொண்டே இருப்பதுதானே எல்லாமும், நாம் எழுதியது உட்பட!

... ..... ....

பார் மீது நான் சாகாதிருப்பேன், காண்பீர்!

காலா உன்னைச்சிறு புல்லென மதிக்கிறேன்! - என்றன்

காலருகே வாடா, சற்றே உன்னை மிதிக்கிறேன்!

 

சாவுக்கு எதிராக பாரதி விடுத்த சவால்கள் இவை!

 

கறந்தபால் முலைப்புகா, கடைந்த வெண்ணெய் மோர்புகா,

உடைந்துபோன சங்கின் ஓசை உயிர்களும் உட்புகா,

விரிந்தபூ உதிர்ந்தகாயும் மீண்டும் போய் மரம்புகா,

இறந்தவர் பின் பிறப்பதில்லை, இல்லை இல்லை இல்லையே!

இவர் சிவவாக்கியர்! மறுபிறவி என்று ஒண்ணும் இல்லை, இப்பிறவியில் சமூகத்துக்கு ஏதாச்சும் பிரயோசனமா செய்துட்டு போ என்னும் கட்டளை தெரிகின்றது.

 

யாதும் ஊரே யாவருங்கேளிர்

தீதும் நன்றும் பிறர் தர வாரா

நோதலும் தணிதலும் அற்றோரன்ன

சாதலும் புதுவது அன்றே வாழ்தல்

இனிது என மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்

இன்னாதென்றலும் இலமே, மின்னோடு...

இவர் கணியன் பூங்குன்றனார் (புறநானூறு, 192).

 

முதல் இரண்டு வரிகள் உலகப்புகழ் பெற்றவைதான். அடுத்த இரண்டு வரிகளில் மரணம் பற்றி அவர் பேசியுள்ளார் என்பதுதான் முக்கியமாகப் படுகின்றது.

 

"சாதல் என்பது புதியது இல்லை, வாழ்தல் இனிமையானது என்று மகிழ்ந்ததும் இல்லை. உலகின் மீதான வெறுப்பால் வாழ்வு இனியது அல்ல என்று கூறுவதும் இல்லை. வாழ்க்கையில் பிறப்பு, இறப்பு எல்லாவற்றையும் ஒரே சீராகப் பார்க்கும் மனப்பக்குவம் மனிதர்களுக்கு வேண்டும். இறப்பில் என்ன அதிசயம்?" பூங்குன்றனார் சொல்ல வந்தது இதுதான். எல்லா மக்களும் என் மக்கள், எல்லா ஊரும் என் ஊரே என்று உலகம் தழுவிய பார்வை கொண்டவர் அவர், 'சமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில் காணா...' என்று வெறுத்துப்போய் எழுதிடவில்லை, வாழ்க்கையை அனுபவிக்க சொல்கின்றார்.

.... .... .....

நீராலைக்கிராமத்துக்கு புதிதாக வருபவன் நம் கதைசொல்லி. எப்போதும் வற்றாத நதியின் கரையில் ஒரு முதியவர் உட்கார்ந்துகொண்டு பழைய நீராலைசக்கரத்தை பழுது பார்த்துக்கொண்டு இருக்கின்றார். அவனுக்கும் அவருக்கும் நடக்கும் உரையாடல்தான் படம்.

அக்கிராமத்தில் மின்சாரம் இல்லை. நவீன கால சாதனங்கள் எதுவும் இல்லை. மரங்களிலிருந்து விழும் விறகையும் சாணத்தையும் எரிபொருளாக பயன்படுத்துகின்றார்கள். "மனிதன் எப்படி (முன்பு) வாழ்ந்தானோ அப்படியே வாழ நாங்கள் முயன்றுகொண்டு இருக்கின்றோம். அதுதான் இயற்கையுடன் இசைந்த வாழ்வு. இயற்கையின் ஒரு பாகமே மனிதன் என்ற உண்மையை மனிதனே மறந்துவிட்டான்..." இப்படிப்போகின்றது உரையாடல்.

தொலைவில் ஒரு பெருங்கூட்டம் பலத்த ஆரவாரத்துடன் இசைக்கருவிகளை இசைத்துக்கொண்டு வருகின்றது. திருவிழாவா என்று இவன் கேட்கின்றான். "இல்லை, அது இறுதி ஊர்வலம். மகிழ்ச்சியான இறுதி ஊர்வலம். கடுமையாக உழை, நீண்டகாலம் வாழ். இறந்துவிட்ட பெண்ணுக்கு வயது 99. ...இவள்தான் என் முதல் காதலி, வேறு ஒருத்தனை திருமணம் செய்துகொண்டு போய்விட்டாள்" என்று சொல்லியவாறே, வீட்டுக்குள் சென்று சிவப்பு மேலாடை அணிந்து கையில் ஜல் ஜல் என ஒலிக்கும் இசைக்கருவியுடன் வருகின்றார், வரும் ஊர்வலத்தில் அவரும் இசைத்துக்கொண்டே சங்கமிக்கின்றார்.

அப்படியெனில் உங்கள் வயது? 103 என்று அவர் சொல்கின்றார்.

... .... ....

9.10.1967. பொலிவியாவில் வாலேகிராண்டே. அமெரிக்க சி ஐ ஏவால் சே கைது செய்யப்படுகின்றான். ஒரு கிராமப் பள்ளிக்கூடம் ஒன்றில் சேயை சுட்டுக்கொல்கின்றது. இறுதி வரையிலும் தன் எதிரிகளின் கண்களை நேருக்கு நேராகப் பார்த்தவாறு சே அனாவசியமாக இருக்க, சுட வந்த எதிரிகள்தான் பீதி அடைகின்றார்கள். சுடு என்கிறான் சே, எதிரி ஓடுகின்றான்.

தன் மனைவிக்கும் குழந்தைகளுக்கும் இறுதியான ஒரு கடிதத்தை எழுதி வைத்திருந்தான், தன் பொலிவியப் பயணத்தில் எந்த ஒரு நொடியிலும் மரணத்தை எதிர்நோக்கியே இருந்த அவன். 

"என் அன்புக்குரிய ஹில்டிடா, அலெய்டிடா, காமிலோ, செலியா, எர்னஸ்டோ,

இந்தக்கடிதத்தை நீங்கள் வாசிக்கும்போது நான் உங்களையும் இந்த உலகத்தையும் விட்டு முழுமையாக பிரிந்திருப்பேன். போராளிகளின் இறப்புக்காக யாரும் கண்ணீர் சிந்தக் கூடாது. உங்கள் தந்தை அவர் ஏற்றுக்கொண்ட கொள்கைக்கு உண்மையாக வாழ்ந்தார் என்று பெருமை கொள்ளுங்கள்..... உங்கள் கண் முன் ஒரு அநீதி நடக்கும்போது நீங்கள் அதை முழு வலிமையுடன் எதிர்க்க வேண்டும்.

என் அன்புச்செல்வங்களே,

மீண்டும் உங்களை சந்திப்பேன் என்ற நம்பிக்கையுடன்,

பெரிய அழுத்தமான முத்தங்களுடன்

என்றும் உங்களுடைய

உங்கள் அப்பா"

... .... ....

39 வயதில் சே மரணத்தை ஏந்திக்கொள்கின்றான், அவன் ஏந்திச்சென்ற கொள்கையை அதன் வெப்பம் தணியாமல் அவன் குழந்தைகளுக்கும் என் குழந்தைகளுக்கும் கை மாற்றியபடி, பொலிவியா காடுகளில் மட்டுமின்றி உலகெங்கும் அடக்குமுறைக்கு எதிரான போராட்டத்தை அவர்கள் தொடர்வார்கள்.

 

திங்கள், நவம்பர் 08, 2021

1905: 1917 அக்டோபர் புரட்சிக்கான ஒத்திகை


1905 ஒத்திகை இல்லாமல் போயிருந்தால் 1917 அக்டோபர் புரட்சியின் வெற்றி சாத்தியமாகி இருக்காது - லெனின்

.......

எதிர்கால வரலாற்றை மாற்றி எழுதக்கூடிய பல நிகழ்வுகளுடன்தான் 1905ஆம் வருடம் பிறந்தது. செய்ன்ட் பீட்டர்ஸ்பார்க் நகரின் புத்திலோவ் Putilov தொழிற்சாலையின் 13,000 தொழிலாளர்கள் ஜனவரி 3ஆம் நாள் வேலை நிறுத்தத்தில் இறங்கினார்கள். நகரில் இருந்த பிற தொழிற்சாலைகளின் தொழிலாளர்கள் புத்திலோவ் வேலைநிறுத்தத்துக்கு ஆதரவு அளித்தார்கள். 7ஆம் நாள் இந்த வேலைநிறுத்தம் பொது வேலைநிறுத்தமாக மாறியது.

உழைக்கும்வர்க்கத்தின் போராட்ட இயக்கத்தை முறியடிக்க தன் கையில் இருந்த அனைத்து அதிகாரங்களையும் ஜார் அரசு பயன்படுத்தியது. போலீசும் ராணுவமும் இணைந்த 40,000க்கும் மேற்பட்ட படை தலைநகரில் குவிக்கப்பட்டது. போராட்டம் மேலும் பரவாமல் தடுக்க தொழிலாளர்கள் மீது வன்முறையை ஏவி பெரும் ரத்தக்களரியை உருவாக்குவதே அரசின் நோக்கம். கூடவே அதிகார வர்க்கம் தனது தந்திரத்தை செய்தது - போலீசின் துணையுடன் போலியான தொழிலாளர்கள் அமைப்பை (Zubatov அமைப்புகள்) உருவாக்கி, அரசியல் நடவடிக்கைகள், புரட்சிகர போராட்டங்கள் ஆகியவற்றில் இருந்து தொழிலாளர்களை திசைதிருப்புவது, பாட்டாளிவர்க்க போராட்ட இயக்கத்தை சீர்திருத்தவாத பாதையில் தள்ளுவது. 

குறிப்பாக, பீட்டர்ஸ்பர்க் நகரின் ரஷிய ஆலைத்தொழிலாளர்கள் சபை (Assembly of Russian Factory Workers) என்ற அமைப்பில் ஏறத்தாழ 9,000 உறுப்பினர்கள் இருந்தார்கள். இந்த அமைப்பின் தலைவர் கபோன் என்ற கிறித்துவ பாதிரியார். உண்மையில் இவர் ரகசிய போலீஸ் ஏஜென்ட். கோரிக்கை மனுவை எழுதி ஊர்வலமாக சென்று ஜார் மன்னரிடம் சமர்ப்பித்தால் அவர் மனம் இரங்குவாரென்பது கபோனின் திட்டம். இதனை தொழிலாளர்களும் ஏற்றுக்கொண்டனர். கருணை மனுவால் ஒரு பயனும் கிட்டாது என்று போல்ஷெவிக்குகள்  எச்சரித்தார்கள். ஆனால் பாதிரியார் திரட்டும் ஊர்வலத்தை தடுக்க முடியாது என்று உணர்ந்த அவர்கள், தொழிலாளர்களுடன் ஊர்வலத்தில் பங்கு கொள்வது என்று முடிவுசெய்தார்கள். 

ஜனவரி 9 ஞாயிற்றுக்கிழமை அன்று பீட்டரஸ்பர்க் நகரின் தொழிலாளர்கள், தேவாலய பதாகைகள், சொரூபங்கள், ஜார் மன்னரின் உருவப்படங்களை கையில் ஏந்திய படி மன்னனின் குளிர்கால அரண்மனையை நோக்கி ஊர்வலமாக சென்றார்கள். பலர், தம் மனைவியர், குழந்தைகள், முதியவர்கள் என தம் குடும்பங்களையும் ஊர்வலத்தில் பங்குபெறச்செய்தார்கள். 1,40,000க்கும் மேற்பட்ட மக்கள் ஊர்வலமாக சென்றார்கள். ஏற்கனவே முடிவு செய்தபடி, ஆயுதங்கள் ஏதும்  இல்லாத அந்த மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. ஆயிரத்துக்கும்  மேற்பட்ட மக்கள் உயிரிழந்தார்கள், ஏறத்தாழ 5,000 பேர் காயமுற்றார்கள். "ஆயுதங்கள் இன்றி அமைதியாக சென்ற மக்கள் மீது கொடூரமாக நடத்தப்பட்ட ரத்தத்தை உறைய செய்யும் படுகொலைஇது".

இத்தகைய படுகொலைகள் மூலம் போராடும் தொழிலாளர்களை அச்சுறுத்தி அவர்களின் போராட்ட உணர்வை ஒடுக்கிவிடலாம்,  பணிந்துபோக செய்துவிடலாம் என ஜார் அரசு கணக்குப்போட்டது. ஆனால் அரசின் கணக்கு தவறாக முடிந்தது. ஆயுதம் ஏதும் தாங்காத, கோரிக்கை பதாகைகளை மட்டுமே ஏந்தி அமைதியாக சென்ற தொழிலாளர்கள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலை கண்டு, ஜார் மன்னர் அன்பும் கருணையும் நிறைந்தவர் என்று கண்மூடித்தனமாக இதுவரை நம்பிக்கொண்டு இருந்த மக்கள் அதிர்ச்சியுற்றனர். தானுண்டு தன் வேலையுண்டு என்று போராட்டங்களில்இருந்து ஒதுங்கி வாழும் கடைக்கோடி தொழிலாளியும் கூட இப்போது ஒரு உண்மையை உணர்ந்தான், அரசிடம் கெஞ்சி கேட்பதாலோ கோரிக்கை விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதாலோ மட்டுமே கசக்கிப்பிழியப்படும் இன்றைய கேடுகெட்ட பணிச்சூழலில் இருந்து தாங்கள் வெளியே வந்துவிட முடியாது. கையில் ஆயுதங்களை ஏந்தினால் மட்டுமே விடுதலை கிடைக்கும் என்ற உண்மையை உணர்ந்தான். புரட்சிகரப்பாதையில் இருந்து பாட்டாளிவர்க்க இயக்கத்தை தடம் மாற்ற ஜார் அரசு எடுத்த இப்படி பரிதாபகரமான தோல்வியில் முடிந்தது. அன்று மாலைக்குள் பீட்டர்ஸ்பர்கின் தொழிலாளர்கள் நிரம்பிய வீதிகளில் போலீசாரால் நிறுவப்பட்டு இருந்த தடைகள் யாவும் தூக்கி எறியப்பட்டன. ஜார் மன்னனுக்கு எதிரான போரில் மக்கள் திரளத்தொடங்கினர்.

ஜனவரி 9 படுகொலையை கண்டித்து மறுநாள்10ஆம் தேதி லெனின் மிகவும் உணர்ச்சிமிக்க விதத்தில் தன் எதிர்வினையை ஆற்றினார்.

நடந்து முடிந்த படுகொலைகளுக்கு எதிரான தொழிலாளர்களின் ஆவேசமிக்க போராட்டத்தை ரஷ்யாவில் புரட்சியின் தொடக்கம் என்று லெனின் கணித்தார். 'ரஷ்யாவில் புரட்சி' Revolution in Russia என்ற கட்டுரையை அன்றே எழுதினார். புரட்சியின் மூச்சுக்காற்றின் வெப்பம் தகிக்கும் அக்கட்டுரை, பீட்டர்ஸ்பர்க்  பாட்டாளிவர்க்கத்தின் ஜனவரி 9 வீரஞ்செறிந்த போராட்டத்தை தெளிவாகவும் விரிவாகவும் சித்தரித்தது. "தாக்குதலுக்கு எதிராக தாக்குதல். வீதிகளில் ஆவேசமிக்க சண்டைகள் நடக்கின்றன, தடுப்புக்கள் தூக்கி வீசப்படுகின்றன, துப்பாக்கிகளில் இருந்து தோட்டாக்கள் சீரும் ஓசையும் பீரங்கிகளின் கர்ஜனையும் கேட்கின்றன. வீதிகளில் ரத்த ஆறு ஓடுகின்றது, விடுதலைக்கான மக்கள் போராட்டம் சூடு பிடிக்கின்றது. மாஸ்கோவும் தெற்கும், காக்கசாசும் போலந்தும் பீட்டர்ஸ்பர்க்கின் பாட்டாளிவர்க்கத்துடன் கைகோர்க்க ஆயத்தமாகி விட்டன. பாட்டாளி மக்களின் முழக்கம் இப்போது இதுதான்:மரணம் அல்லது விடுதலை!" லெனின் பிரகடனம் செய்தார், "புரட்சி நீடுழி வாழ்க! புரட்சியை முன்னெடுத்துள்ள பாட்டாளிவர்க்கம் நீடுழி வாழ்க!"

1905 ஜனவரி 5 அன்று நடத்திய வெகுமக்கள் போராட்டம், ரஷிய பாட்டாளிவர்க்கத்துக்கு உறுதியான பாடத்தை கற்றுக்கொடுத்தது; மிகப்பல நீண்ட வருடங்களாக அனுபவிக்கும் இழிந்த, சலிப்பான, கேடுகெட்ட இந்த வாழ்க்கை கற்றுத்தராத புரட்சிகரப்பாடத்தை இந்த ஒரே நாளில் கற்றுக்கொண்ட பாட்டாளிவர்க்கம் அவர்களை மேலும் முன்னேறத் தூண்டியது. 

அரசியல் புலம்பெயர்ந்தவராக வாழ வேண்டிய கட்டாயத்தில் இருந்த லெனின், ரஷ்யாவில் நடந்து வந்த நிகழ்வுகளுடன் தன்னை நெருக்கமாக பிணைத்துக்கொண்டார், ஒவ்வொரு புதிய நடவடிக்கையையும் நெருங்கிப்பார்த்து ஆய்வு செய்து அது பற்றி விளக்கினார். புரட்சி வெடிப்பதற்கு நீண்ட காலம் முன்பாகவே அப்படியான ஒரு புரட்சி தவிர்க்க இயலாதது என்பதையும் அப்புரட்சியில் ரஷிய மக்கள் அனைவரும் பங்கு பெறுவார்கள் என்பதையும் சரியாக கணித்து சொன்னார். எதிர்காலத்தில் வெடிக்கப்போகும் மக்கள்போராட்டக்களத்திற்கு ஆயத்தமாகும் வகையில் கட்சியை உயிர்ப்புடன் வைக்க ஓய்வு ஒழிச்சல் இன்றி பணியாற்றினார், இப்போருக்கு பாட்டாளிவர்க்கமே தலைமை ஏற்கும் என்பதில் அவர் தெளிவாக இருந்தார்.

ரஷிய பாட்டாளிவர்க்கத்தின் வீரஞ்செறிந்த இப்புரட்சி உலகளாவிய பாட்டாளிவர்க்க இயக்கத்தின்மீது ஏற்படுத்த உள்ள உறுதியான தாக்கத்தை லெனின் தீர்மானமாக வலியுறுத்தினார். "உலகப்  பாட்டாளிவர்க்கம், ரஷிய பாட்டாளிவர்க்கம் என்ன செய்யப்போகின்றது என்று பேரார்வத்துடன் எதிர்பார்க்கின்றது" என்று எழுதினார். ரஷ்ய பாட்டாளிவர்க்கம் உறுதியுடன் முன்னெடுத்து ரஷ்யாவின் ஜார் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவரும்போது அந்த நிகழ்வு உலக நாடுகளின் வரலாற்றில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தும். உலகெங்கிலும் உள்ள உழைக்கும் மக்களின், அனைத்து நாடுகளின் உழைக்கும் மக்களின், உலகின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள உழைக்கும் மக்களின் போராட்ட நடவடிக்கைகளை அது பற்றச் செய்யும்". 

போல்ஷெவிக் செய்திஏடுகளிலும் கட்சி அமைப்புகளுக்கு அவர் எழுதிய கணக்கற்ற கடிதங்களும் ரஷ்யாவில் அவரை சந்தித்து உரையாடி வெளிநாடுகளுக்கு திரும்பும் அவரது தோழர்கள் சொல்லும் செய்திகளும் புரட்சியை மேலும் முன்னெடுத்துச் செல்வதற்கு கட்சிக்கு உதவின, வழிகாட்டின.

முதலாம் ரஷ்யப்புரட்சியின் குணாம்சத்தையும் அதன் வரலாற்று அம்சங்களையும் விளக்கி கூறியுள்ளார். அதன் குணாம்சத்திலும் இலட்சியத்திலும் இப்புரட்சி ஒரு முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சிதான்; ஜார் மன்னனின் அரசாட்சியை தகர்ப்பதும் தனியார் நிலவுடைமையையும் நிலப்பிரபுத்துவத்தின் மிச்ச சொச்சங்களையும் ஒழித்துக்கட்டுவதும் ஒரு ஜனநாயகக்குடியரசை நிறுவுவதும் இப்புரட்சியின் இலட்சியம். அது முதலாளித்துவ ஜனநாயக குணாசம்சத்தை கொண்ட புரட்சிதான், ஆனால் அப்புரட்சிக்கு தலைமை ஏற்றதும் வழி நடத்தியதில் முன்னால் நின்றதும் பாட்டாளிவர்க்கமே.  விவசாயி வர்க்கமும் அவர்களின் நண்பர்களும், ரஷிய தேசிய இனம் அல்லாத எல்லைப்புற பிரதேசங்களின் பிற தேசிய இனங்களின் பாட்டாளிகளும் புரட்சிக்கு ஆதரவளித்தனர், இப்பெரும்  மக்கள் திரள் இப்புரட்சியில் தங்களை இணைத்துக்கொண்டது. 

லெனின் பின்னாட்களில் கூறியதுபோல் உண்மையில் சில அம்சங்களின் அடிப்படையில் அப்புரட்சி ஒரு பாட்டாளிவர்க்கப்புரட்சயே; எவ்வாறு? புரட்சிக்கு தலைமை ஏற்றது பாட்டாளிவர்க்க சக்தியே, புரட்சியை நடத்திய விதமும் பாட்டாளிவர்க்க அணுகுமுறையுடன்தான் இருந்தது, முக்கியமாக வேலைநிறுத்தங்கள், ஆயுதம் தாங்கிய கிளர்ச்சி ஆகியவற்றை சொல்ல வேண்டும். பாட்டாளிவர்க்கம் தன் கொள்கை அளவிலும் நடைமுறையிலும் புரட்சிகரமானது, மன்னாராட்சிக்கு எதிரான தன் அணுகுமுறையில் மிக மிக உறுதியானது, சமரசம் செய்து கொள்ளாதது. அத்தகைய உறுதி கொண்ட பாட்டாளிவர்க்கமே ஜார் அரசை தூக்கி எறிந்து முழுமையான புரட்சியை நடத்திட முடியும்; அந்த வெற்றியை அடைய எனில் பாட்டாளிவர்க்கத்தின் பின்னால் விவசாயவர்க்கம் அணிதிரள வேண்டும், இரண்டு வர்க்கங்களும் கைகோர்த்து இணைந்து புரட்சியை நடத்த வேண்டும்.

மேற்கத்திய நாடுகளில் இதற்கு முன் நடந்த முதலாளித்துவ புரட்சிகளில் இருந்து ரஷ்யப்புரட்சி குறிப்பிடத்தக்க விதத்தில் எங்கே வேறுபடுகின்றது என லெனின் குறிப்பாக சொல்கின்றார். முதலாளித்துவம் ஏற்கனவே ஓர் எதிர்ப்புரட்சி சக்தியாக நிலைபெற்றுவிட்ட, ஜார் ஆட்சிக்கு எதிராக ஒரு புரட்சிகரப் போராட்டத்திற்கு தலைமை தாங்கி நடத்தக்கூடிய வலிமையான தனிப்பட்ட அரசியல் சக்தியாக பாட்டாளிவர்க்கம் வளர்ந்துவிட்ட புதிய வரலாற்று சூழலில் முதல் மக்கள் புரட்சி இப்புரட்சி. 

புரட்சியின் தொடக்க கட்டத்தில், பாட்டாளி வர்க்கத்தின் தலைவர், ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் கட்சியின் இலக்குகளை லெனின் நிர்ணயித்தார். புரட்சியானது புதிய சூழ்நிலைகளில் கட்சியின் நடவடிக்கைகளை வரையறுக்க செய்தது, மக்களுக்கு புதிய வழிகளில் சமூகத்தைப் பற்றி கற்பிக்க வேண்டியிருந்தது. கட்சி அணிகளை பரந்த அளவில் திரட்டுவதற்கும், புரட்சிகர நடவடிக்கைகளை தொடங்குவதை ஊக்குவிப்பதற்கும், இளம் தலைமுறையினரை தயக்கமின்றி முன்னே கொண்டு வருவதற்கும் கட்சி அணிகள் பாடுபட வேண்டும். பாட்டாளிவர்க்கத்தின் முன்னணிப்படை என்னும் பாத்திரத்தை நிறைவேற்ற வேண்டும் எனில், இன்று பிறந்துள்ள புதிய, புரட்சிகர சூழலின் பின்னணியில் கட்சியின் வேலைகளையும் வெகுமக்களின் தலைமைப்பாத்திர அணுகுமுறைகளையும் மறு ஒழுங்கமைவு செய்ய வேண்டும். "எந்த அளவுக்கு வெகுமக்களின் இயக்கம் பரவுகின்றதோ அந்த அளவுக்கு பல்வேறுபட்ட வர்க்கங்களின் உண்மையான குணாம்சம் வெளியே தெரியும், பாட்டாளிவர்க்கத்தை அணி திரட்டி தலைமை தாங்கும் பொறுப்புள்ள அமைப்பு என்ற அடிப்படையில் கட்சியின் பொறுப்பு என்னும் சுமை அதிகரிக்கும்" என்று லெனின் எழுதுகின்றார். உழைப்பாளர்களின் கட்சி என்ற அடிப்படையில் கட்சி செய்ய வேண்டிய அடிப்படை வேலையும் கடமையும் எவை என்று லெனின் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி கூறுவது என்ன? பாட்டாளிவர்க்க சக்திகளை அணித்திரட்டுவது, ஒருங்கிணைப்பது, வெளிப்படையான வெகுமக்கள் போராட்டத்திற்கு, சர்வாதிகாரம் பொருந்திய அரசை தகர்க்கும் பொருட்டு  ஆயுதம் தாங்கிய கிளர்ச்சிக்கு அவர்களை ஆயத்தம் செய்வது.

மக்களை அணித்திரட்டும் மகத்தான பணியில் போல்ஷெவிக் செய்தி நிறுவனமும், மிக முக்கியமாக லெனினை ஆசிரியராக கொண்ட விப்பர்யோத் Vperyod செய்தியேடும் பாராட்டத்தக்க பங்கை ஆற்றியுள்ளன. லெனின் எழுதிய அறுபதுக்கும் மேற்பட்ட கட்டுரைகளும் அறிக்கைகளும் தொழிலாளர்கள் இடையே மிகுந்த வரவேற்பை பெற்றன. புரட்சியில் போல்ஷெவிக்குகளின் நடைமுறைத்தந்திரத்தை வரையறுக்கும் பணியில், ஆயுதம் தாங்கிய கிளர்ச்சிக்கு திட்டமிடுவது, நடத்தி முடிப்பது ஆகியவற்றுக்கான தலைமைப் பாத்திரத்தை கட்சியே ஏற்க வேண்டியதன் அவசியத்தை லெனின் ஆணித்தரமாக வலியுறுத்தினார்.

இந்த அவசியமான பணியில் ஈடுபட்டபோது, கோட்பாடு, உலகைப்பற்றிய அறிவியல் பூர்வமான பார்வை ஆகியவற்றில் கட்சியின் தலையாய கொள்கைகள், உறுதிப்பாடு ஆகியவற்றின் மீது லெனின் தனிப்பட்ட கவனம் செலுத்தினார். 1905 ஏப்ரல் மாதம் அவர் எழுதினார்: "புரட்சியின் இன்றைய சகாப்தத்தில், கோட்பாடு குறித்த கேள்விகளை சந்திக்காமல் நழுவுவதும் அல்லது அரை குறை அறிவுடன் இருப்பதும் கோட்பாடு விசயத்தில் மிக மோசமாக வெறுங்கையுடன் இருப்பதையே குறிக்கும்; ஒரு சோசலிஸ்ட் ஆனவனுக்கு இதற்கு முன் எப்போதும் தேவைப்படாத அளவுக்கு தெளிவான சிந்தனையும் உலகம் குறித்த பார்வையும் அவசியமாகின்றது, அத்தகைய தகுதி இருந்தால் மட்டுமே சூழ்நிலைகளை அவரால் கட்டுப்படுத்த முடியும், சூழ்நிலைகள் அவரை கட்டுப்படுத்தக்கூடாது.

புரட்சிக்காலத்தில், வெகுமக்களின் ஆயுதம் தாங்கிய கிளர்ச்சி, கிளர்ச்சியை முறையாக ஒருங்கமைத்து நடத்துவது ஆகிய கேள்விகளின் மீது தனிக்கவனம் செலுத்தினார். க்ரூப்ஸ்காயா எழுதினார்: "மார்க்ஸும் எங்கெல்சும் புரட்சி, கிளர்ச்சி ஆகியன குறித்து எழுதிய அனைத்தையும் இலியிச் மீண்டும் வாசித்தார், ஊன்றி வாசித்தார், ஆழ்ந்து சிந்தித்தார், மட்டுமின்றி போர்க்கலை குறித்து எழுதப்பட்ட பல நூல்களை வாசித்தார், ஆயுதம் தாங்கிய கிளர்ச்சியின் நுட்பங்கள், அதை ஒருங்கிணைப்பது ஆகியன குறித்து ஆழமாக வாசித்தார். மற்றவர்கள் ஊகிப்பதை விடவும் இந்த தளங்களில் அவர் மிக ஆழமான கவனம் செலுத்தினார்."

பாரிஸ் கம்யூன் அனுபவம் லெனினை மிகவும் ஈர்த்த ஒன்று. இது குறித்த அறிவை சமூக ஜனநாயகவாதிகளுக்கும் முன்னணி பாட்டாளிகளுக்கும் புகட்ட வேண்டும் என்று அவர் விரும்பினார். பாரிஸ் கம்யூனில் பங்கு வகித்த ஜெனரல் க்ளூசேரட் Cluseret பாரிஸ் கம்யூன் அனுபவங்கள் பற்றி எழுதிய தெருச்சண்டை Street Fighting என்ற நூலில், கம்யூன் வீரர்கள் அரசுப்படைகளுடன் தெருவில் நடத்திய சண்டைகள் குறித்து பொதுவாகவும் திரட்சியாகவும் எழுதியிருந்தார். இந்த நினைவுக்குறிப்புக்களின் ரஷிய மொழியாக்கத்தை அவர் தொகுத்தார், விப்பர்யோத்தில் வெளியானது. மட்டுமின்றி, கம்யூனின் புகழ்பெற்ற ஜெனரல் க்ளுசேரட்டின் நினைவுக்குறிப்புக்கள், சுருக்கமான வரலாறு ஆகியவற்றுக்கு ஒரு முன்னுரையும் எழுதினார். 1905 மார்ச் 5 (18) அன்று, ஜெனீவாவில் இருந்த ரஷ்ய அரசியல் குடிபெயர்ந்தோர் காலனியில் நடந்த ஒரு கூட்டத்தில், பாரிஸ் கம்யூன் பற்றி ஒரு குறிப்பை வாசித்தார். "இன்றைய கணத்தில் நாம் அனைவரும் கம்யூனின் தோள்களின் மீது நிற்கின்றோம்" என்று செவிமடுத்த அனைவருக்கும் நினைவூட்டினார்.

மூலம்: Lenin: a biography, அத்தியாயம் 5, The first assault on the Tsarist autocracy, Progress Publishers, நான்காம் பதிப்பு, 1986.

தமிழில்: மு இக்பால் அகமது

சனி, அக்டோபர் 30, 2021

நன்மாறனும் பிற தோழர்களும் நமக்கு உணர்த்துவது என்ன?


திருக்குறளும் சித்தர்கள் பாடல்களும் இல்லாமல் அவரது உரையாடலோ மேடைப்பேச்சோ நிறைவு பெற்றதாக எனக்கு நினைவில்லை. பழந்தமிழ் இலக்கியங்களில் இருந்து எங்கிருந்தோ ஒரு பாடல் வரியை திடீரென மேற்கோள் காட்டுவார், நமக்கு வியப்பாக இருக்கும். 'மனுசன் இதையெல்லாம் எப்படித்தான் ஞாபகம் வைத்திருக்கின்றாரோ!'

ஒரு யூடியூப் சானல் நேர்காணல். நாடெங்கும் பேசப்பட்ட அவரது 2020 நவம்பர் 20 ரூபாய் ஆட்டோ பயணத்தின் பின் நடந்தது. 'சாதாரண வார்டு கவுன்சிலர்கள் கூட பார்ச்சுன், இன்னோவா என்று கார்களில் பறப்பதும் பல கோடி சொத்துக்கள் சேர்ப்பதும் நடைமுறை ஆன காலத்தில், இரண்டு முறை எம் எல் ஏ ஆக இருந்த நீங்கள் வாடகை வீட்டில் வசிக்கின்றீர்கள், பேருந்தில் பயணம் செய்கின்றீர்கள்.... என்ற கேள்விக்கு நன்மாறன் இப்படி பதில் சொல்கின்றார்: 

சித்தர்கள் எதன் மீதும் பற்றற்றவர்கள், உண்பது நாழி உடுப்பது முழம் என்று கூட சொல்ல மாட்டார்கள். அவர்களே எனக்கு முன்னோடி வழிபாட்டு அமைப்பாக இருந்தார்கள்.... எத்தனை ஏக்கர் நிலம் வைத்திருந்தாலும் எத்தனை வீடு வாசல்கள் வைத்திருந்தாலும் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு 'போன' ஒரு மனிதனையாவது காட்ட முடியுமா? இல்லாத ஒன்றுக்காக ஏங்குவது, இதன் கோளாறுதான் அரசியல் வாழ்க்கையில் சம்பாதிப்பதும் 'செலவு செய்தால்தான் அரசியலுக்கு வர முடியும்'ங்கற கருத்தும்....

இவ்வாறு சொன்னவர், சித்தர்களின் பொருள் சார்ந்த பற்றற்ற வாழ்க்கை பற்றி குறிப்பிட்டு, சித்தர்கள் உண்பது நாழி.... என்று கூட சொல்ல மாட்டார்கள்  என்று முடிக்கின்றார். அப்பாடல் இது:

உண்பது நாழி! உடுப்பது நான்கு முழம்!

எண்பது கோடி நினைந்து எண்ணுவன - கண் புதைந்த

மாந்தர் குடிவாழ்க்கை மண்ணின் கலம்போலச்

சாந்துணையும் சஞ்சலமேதான்!

- ஒளவையாரின் நல்வழி

பொருள்: மனிதன் உண்பது ஒரு நாழி அளவே சோறுதான், உடுப்பதோ நான்கு முழத்துணி. ஆனால், மனதில் நிழலாகும் எண்ணங்கள் மட்டும் எண்பது கோடியாகப் பெருகி மனத்துன்பத்தைத் தருகின்றது. அகக்கண் குருடாக இருக்கின்ற மாந்தர்களின் குடிவாழ்க்கை ஆனது, தடம் மாறி கருத்தின்றி பயணித்தால், உள்ளதே போதும் என்ற மன அமைதி பெறாவிடில், எளிதில் உடைந்து விடும் மண் கலம் போலச் சாகும் வரை அவனுக்குத் துன்பமே அளிக்கும்!

... .... ....

கேட்பதற்கு இது ஏதோ ஆன்மிகவாதம் போல் முதல் பார்வையில் தோன்றக்கூடும். உண்மை அதுவல்ல.

உண்மையில் சித்தர்கள் பொருள்முதல்வாதிகள். ஆனால் தமக்கெனவும் எதிர்காலத்துக்கும் எதுவும் சேர்த்து வைத்துக்கொள்ளாத பெருந்தகைகள். இன்றிருப்பதை திருப்தியுடன் ஏற்றுக்கொண்டு நாளைக் கழிப்பவர்கள். இந்த மனநிலை, தனக்கும் தன் வாரிசுகளுக்கும் சொத்தும் பொருளும் சேர்க்காத மனநிலை, தன்னலம் அற்ற கம்யூனிஸ்ட் மனநிலையன்றி வேறில்லை. அதுவே மறைந்த நன்மாறன் தன் காலம் நெடுகிலும், ஒரு சிறு பிரயத்தனமும் தனிப்பட்ட முயற்சியும் இன்றி, சாதாரணமாக கைக்கொண்டு இருந்த மனநிலையும் வாழ்க்கை நடைமுறையும்.

கேரளாவின் உயர்சாதி ஆன நம்பூதிரி வகுப்பில், பெரும் செல்வமிகு குடும்பத்தில் பிறந்தவர். பின்னர் அம்மாநில முதலமைச்சராக இருந்தவர். தனக்கு கிடைத்த குடும்ப  சொத்தின் பங்கு அனைத்தையும் கட்சிக்கு கொடுத்தவர் ஈ எம் எஸ் நம்பூதிரிப்பாட். அவரை நேர்காணல் கண்டு சுபமங்களாவில் எழுதினார் கோமல் சுவாமிநாதன். ஈ எம் எஸ் தேநீர் அருந்திய கோப்பையில் கீறல் விழுந்து இருந்தது என்று பதிவு செய்தார், வாசித்தது எனக்கு இப்போதும் நினைவில் உள்ளது.

அவர் தந்தை ராமாயணத்துக்கு ஆங்கிலத்தில் விளக்கவுரை எழுதியவர், செல்வந்தர். இவர் வழக்கறிஞர். மதுரையில் செல்வந்தர்கள் விளையாடும் 'கிளப்'பில் டென்னிஸ் விளையாடுவார். கப்பல் கம்பெனியில் வேலை கிடைத்தது. அனைத்தையும் உதறிவிட்டு திண்டுக்கல் தோல் பதனிடும் தொழிலாளர்களுடன் படுத்தும் உண்டும் உறங்கியும் தங்கியும் அவர்களுக்கான உரிமைபோரில் முன்னால் நின்று களம் கண்டார். அநேகமாக அவர்கள் அனைவரும் தலித் சமூக மக்கள்தான். மாட்டுக்கறி உண்டார். அவர் அமிர்தலிங்கம் ஐயரின் மகனான பாலசுப்ரமணியம். கூடவே எஸ் ஏ தங்கராஜன் என்ற அதிசயப்பிறவி. இவர் வாழ்க்கை வரலாற்றை வாசித்தேன், 'ஊறல் குழியில் இருந்து....'. எங்கேயாவது இரண்டு நாள் சேர்ந்தால்போல் நிம்மதியாக தூங்கியிருக்கின்றாரா என்று நூல் முழுக்க தேடினேன், இல்லவே இல்லை. போலீஸ் ஸ்டேசன், ஜெயில், தடியடி, கற்பனைக்கும் எட்டாத சித்ரவதைகள். திண்டுக்கல் பேகம்பூர் இவர்களால் தலை நிமிர்ந்து நிற்கின்றது.

கர்நாடகாவில் இருந்து வந்த பிராமணர் அவர். சிவப்பு நிற  மேனியர். கட்சியின் கட்டளை, தஞ்சையில் விவசாயிகள் சங்கத்தை கட்டுகின்றார். தமிழ் தெரியாது. அடித்தால் திருப்பி அடி என்று கற்றுக் கொடுக்கின்றார். மாமிசம் உண்டார், அந்த  மக்களுடன் தன் வாழ்க்கையை பிணைத்துக் கொண்டார் பி ஸ்ரீனிவாச ராவ்.

கேரளாவில் பிறந்த சிண்டன் கட்சியின் கட்டளையை ஏற்று தமிழ்நாடு வருகின்றார். பாரதிதாசன் அவருக்கு சிந்தன் என்று பெயர் சூட்டுகின்றார். சமூக விரோதிகளின் கத்திகுத்துக்கு ஆளாகின்றார், 30க்கும் மேற்பட்ட கத்திகுத்துக்கள். அதிசயம், உயிர் பிழைக்கின்றார். ஹோட்டல் தொழிலாளர்கள், நகரசுத்தி தொழிலாளர்கள் என அடிமட்ட தொழிலாளர்களுடன் வாழ்க்கையை பிணைத்துக் கொள்கின்றார்.

பெரும் செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தவர், பார் அட் லா பட்டம் பெற்றவர், சி பா ஆதித்தனார் குடும்பத்து பெண்ணை திருமணம் செய்துகொண்டவர். நாடாளுமன்ற உறுப்பினர் ஆனவர், தன் வாழ்நாளின் இறுதியில் சென்னை அரசுப்பொதுமருத்துவமனையில் சிகிச்சை பெற்றார் கே டி கே தங்கமணி. நான் முன்னுதாரணமாக இல்லை எனில் யார் இருப்பார் என்று மதுரை அரசுப்பொதுமருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டவர் மாணவர் இயக்கத்தில் இருந்து வந்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் ஆக இருந்த பி மோகன். வேட்டியை துவைத்து காயப்போட்டுள்ளேன், பொறுங்கள், கட்டிக்கொண்டு வருகின்றேன் என்று வாழ்ந்த ப ஜீவானந்தம். இப்போதும் வாழும் தியாக தீபங்கள் ஆன என் சங்கரய்யாவும் ஆர் நல்லக்கண்ணுவும்.

இவர்கள் சொந்த வாழ்வும் அரசியல் வாழ்வும் வெவ்வேறு ஆக வாழ்ந்தார்கள் இல்லை. வீட்டுக்குள் ஒரு வாழ்க்கை, வீட்டு வாசலுக்கு வெளியே ஒரு வாழ்க்கை வாழவில்லை. தாம் ஏற்றுக்கொண்ட பொதுவுடைமைக் கொள்கையை தம் சொந்த வாழ்விலும் மிக சாதாரணமாக வெற்றிகரமாக கடைபிடித்து வாழ்ந்து காட்டியவர்கள், காட்டுகின்றார்கள்.

பொதுவுடைமை இயக்கத்தில் ஈடுபடும் அனைவருக்கும் இவர்கள் விட்டுச்செல்லும் செய்தியும் வாழ்க்கை நடைமுறையும் இதுவே. இது பாடம் அல்ல, வாழ்க்கையாக நாம் கைகொள்ள வேண்டியதும் பயில வேண்டியதும்.

.... ... .....

என் நன்மாறன் (13.5.1947 - 28.10.2021)



இரண்டு இருபது ரூபாய் தாள்களும் ஒற்றை செருப்பும்


2009இல் கொச்சியில் பணியில் இருந்தபோது சென்னை வருவதற்காக அதிகாலையிலேயே சென்று டட்கல் சீட்டு வாங்கிவிட்டு எர்ணாகுளம் வடக்கு ரயில்நிலையத்தை விட்டு வந்து மீண்டும் வீடு திரும்ப பேருந்து நிறுத்தம் நோக்கி நடந்தபோது ஒரு பெரியவர் எதிரே வந்து மிகுந்த தயக்கத்தோடு நின்றார். பார்த்தவுடன் தெரிந்தது தமிழர் என்று.  குளித்து சுத்தமாக தலைசீவி துவைத்த சட்டை கைலி கட்டி எதிரே நின்றார்.  வணங்கினார்.  நானும் தமிழன் என்று கண்டுகொண்டதால் இருக்கலாம்.  நானும் வணங்கி நின்று என்ன என்று பார்வையிலேயே வினவ, ‘பிள்ளைங்க சாப்பிடணும், ஒரு இருபது ரூபா கொடுங்கய்யா’ என்று மீண்டும் வணங்கினார்.  

அப்போதுதான் கண்டேன், சற்று தூரத்தில் இரண்டு பிள்ளைகளுடன் - பத்து வயதிற்குள் - ஒரு பெண்மணியும் நிற்க கண்டேன்.  அந்தப் பெண்ணோ மிகுந்த கூச்சத்துடன் தலை குனிந்தபடி நின்றிருந்தார்.  அவரும் குளித்து எண்ணெய் தேய்த்து படிய வாரி, குங்குமம் இட்டு, எளிய ஆனால் சுத்தமான ஆடை உடுத்தியிருந்தார்.  ‘எந்த ஊரு?’ என நான் கேட்க ‘திண்டுக்கல்’ என்றார் இவர். அடுத்து நான் கேட்கும் முன்னரே ‘கொத்தனார் வேலைக்கு வந்தேன், வர சொன்னவர போய் பாக்கணும், இப்போ காசு இல்ல, பிள்ளைங்களுக்கு சாப்பிட ஏதாச்சும் கொடுக்கணும், ஒரு இருபது ரூபா மட்டும் கொடுங்கய்யா, இன்னைக்கு வேல குடுத்துடுவாங்க’ என பணிவுடன மூன்றாம் மனிதர் காதில் விழுந்து விடமால் கவனமான பேசினார்.  ஊரை விட்டு ஊர் பிழைக்க போகும் குடும்பங்கள் எல்லாம் நடு ராத்திரியில்தான் ஊரை காலி செய்கின்றார்கள் என்று எஸ் ராமகிருஷ்ணன் எழுதியிருப்பார். தென்காசியில் இருந்து ஒரு நாள் நள்ளிரவில் என் ஏழாவது வயதில் எங்கள் குடும்பமும் மதுரை நோக்கி பிழைப்புக்காக இடம் பெயர்ந்தது நினைவுக்கு வந்தது.

என் தகப்பனைப் போலவே கறுப்பு நிறத்தில் நின்று கொண்டு கேவலம் ஒரு இருபது ரூபாய்க்காக என்னை வணங்கி நின்ற கோலம் என் கண்களில் எந்த தயக்கமும் இன்றி நீரை வர வைத்தது.   கொச்சி என்ற எர்ணாகுளத்தின் காஸ்ட்லி முகத்தை புலர்ந்தும் புலராத அந்த அதிகாலையானது திண்டுக்கல்காரருக்கு இன்னும் காட்டவில்லை ஆதலால் ஒரு இருபது ரூபாயில் இரண்டு பிள்ளைகளுக்கும் காலை உணவு கொடுத்துவிட முடியும் என்று நம்பிய அந்த அப்பாவியை என்னென்று சொல்ல!  நான்கு பேருக்கும் ஓரளவு சாப்பிடமுடிகின்ற ஒரு தொகையை அவர் கையில் கொடுத்தபோது அவர் கையெடுத்து வணங்க, சகிக்க முடியாமல் தலை குனிந்து அந்த இடத்தை விட்டு நகர்ந்தேன்.

.... .... ....

2020 நவம்பர் 27. மதுரை அரசுப்பொதுமருத்துவமனை எதிரே கருப்பாயூரணி செல்ல பேருந்தில் ஏறிய முதியவரின் ஒரு கால் செருப்பு கீழே விழுந்துவிட, அதனை எடுக்க கீழே இறங்கிய போது பேருந்து போய் விடுகின்றது. அமெரிக்கன் கல்லூரி காம்பவுண்ட் சுவர் ஓரம் சைக்கிள் பழுது நீக்கும் கடை வைத்திருப்பவர் ஒற்றை செருப்புடன் நடக்கும் முதியவரைப் பார்த்துவிட்டு, அவரிடம் விசாரிக்க முதியவர் நடந்ததை சொல்கின்றார். அவரை அங்கேயே நிற்க சொல்லிவிட்டு சைக்கிளில் வந்து தொலைந்த ஒற்றை செருப்பை மீட்டு வந்து அவரிடம் தருகின்றார். 

தற்செயலாக இதை பார்த்த ஒரு ஆட்டோ ஓட்டுநர், முதியவரிடம் எங்கே போக என்று விசாரிக்கின்றார். கருப்பாயூரணியில் ஒரு நிகழ்ச்சிக்கு அழைத்திருகின்றார்கள், செல்ல வேண்டும் என்று முதியவர் சொல்ல, நான் கொண்டு சென்று விடுகின்றேன் என்று ஓட்டுநர் சொல்ல, என்னிடம் இருப்பது இருபது ரூபாய் மட்டுமே என்று இவர் சொல்ல, பரவாயில்லை, வாங்க, நான் உங்களை அழைத்துச் செல்கின்றேன் என்று முன்வந்து அவ்வாறே செய்கின்றார்.

இருபது ரூபாய் மட்டுமே பாக்கெட்டில் வைத்துக்கொண்டு தன் ஆட்டோவில் வந்தவர் இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினர் ஆக இருந்த என் நன்மாறன் என்று அறிந்து முகநூலில் திரு.பாண்டி பதிவு செய்ய, உலகம் எங்கும் அதுவே பேசு பொருளாக ஆனது. பல தொலைக்காட்சிகளும் யூடியூப் சானல்களும் நன்மாறன் அவர்களை வீடு தேடி சென்று நேர்காணல் செய்து ஒளிபரப்பினர். 

..... .... .....

நன்மாறன் பல்வேறு நேரங்களில் கூறியவற்றில் ஒரு சில:

ஆட்டோ ஓட்டுனரிடம் நான் முன்னாள் எம் எல் ஏ என்று சொல்லவில்லை. 2011 வரை இருந்தேன், இப்போதும் அதை சொல்லிக்கொண்டே திரிவது சரி அல்ல. 

என்னிடம் அரசு கொடுத்துள்ள இலவச பேருந்து அனுமதி சீட்டு உள்ளது, மாநிலம் எங்கும் பயணம் செய்யலாம், நான் பேருந்துகளில்தான் பயணம் செய்கின்றேன்.

அரசியலுக்கு வர தகுதி வேண்டாம், நல்ல எண்ணமும் சேவை செய்யும் மனதும்தான் வேண்டும். 

சமூகத்துக்கு நான் பயன்பட்டுள்ளேன், சமூகம் எனக்கு பயன்பட வேண்டும் என்பதில்லை. நாடு இப்போது ஒரு மோசமான சூழலில் சிக்கி உள்ளது, அதில் இருந்து விடுபட வேண்டும். அதற்காக நானும் வேலை செய்துகொண்டே இருக்கின்றேன். 

சட்டமன்றம் என்பது பணியாற்றக்கூடிய இடம்தானே அன்றி நம் சுகங்களை முன்னிட்டு போகின்ற இடம் அல்ல. நான் சட்டமன்ற உறுப்பினராக இரண்டு முறை இருந்தேன். சனி, ஞாயிறுகளில் விடுமுறைதான், ஆனால் என் அறையில் நான் இருப்பேன், திறந்து வைப்பேன். பார்வையாளர்கள் வராத அந்த இரண்டு நாட்களில் அடுத்த வார சட்டமன்ற பணிகளுக்கான தயாரிப்புகளை செய்ய முடியும். பழைய கோப்புக்களை வாசிப்பது உட்பட. 

என் தந்தை ஹார்வி மில் தொழிலாளி. என் சிறு வயதில் மதுரை கீரைத்துறைப் பகுதியில் உள்ள சித்தர் சமாதிக்கு அழைத்து செல்வார். இரண்டு கரும்புகளுடன். நடந்தே செல்வோம். 'உண்பது நாழி, உடுப்பது முழம்' என்று கூட சொன்னதில்லை சித்தர்கள். அவர்களே எனக்கு முன்னோடி வழிபாட்டு அமைப்பாக இருந்தார்கள். "கோவிலாவது ஏனடா...." என்று கேட்டவர்கள் சித்தர்கள். கோவில்கள் பற்றி நிறைய ஆய்வு செய்துள்ளேன். என் தந்தையார் என்னை நூலகத்தில் கொண்டு போய் விட்டு 'நீ இருக்க வேண்டிய இடம் இதுதான்' என்றார். அவர்தான் எனக்கு முன்னோடி, inspiration. நூலகமே என் தாய் வீடு. அனைவரும், குறிப்பாக இளைஞர்கள் புத்தகம் வாசிக்க வேண்டும், முகநூல், வாட்சப் இதெல்லாம் போதாது.

காந்தியடிகள், பெரியார், அண்ணா, கம்யூனிஸ்ட் தலைவர்கள், கே பி ஜானகிஅம்மாள், எம் என் ராய் ஆகியோர் என்னை பாதித்தவர்கள். இந்தியாவுக்கு ஒரு அரசியல் சாசனம் வேண்டும் என்று முதலில் பேசியவர் ராய். ஜானகி அம்மாவின் வளர்ப்பு மகன் நான் என்று பெருமையுடன் சொல்வேன். 

எத்தனை ஏக்கர் வைத்து இருந்தாலும், எத்தனை வீடு வாசல்கள் வைத்து இருந்தாலும் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டுபோய் சேர்ந்த ஒரு மனிதனையாவது நீங்கள் காட்ட முடியுமா? 

90களுக்கு பிறகான தனியார்மயம் தாராளமயம் உலகமயமாக்கல் கோட்பாடுதான் 'செலவு செய்பவனே அரசியலில் இருக்க முடியும்' என்ற நடைமுறையை உருவாக்கியது. "நீரளவே ஆகுமாம் ஆம்பல்". மக்கள் குணத்தைப் பொறுத்தே இன்றைய அரசியல்வாதிகள் பணத்தை வாரி இரைக்கின்றார்கள். இது மக்களுக்கும் நல்லது அல்ல, நாட்டுக்கும் நல்லது அல்ல. இல்லாத ஒன்றுக்காக ('கூடவே' வராத சொத்து சுகங்கள்) ஏங்குவதன் கோளாறுதான் அரசியல் வாழ்வில் சொத்து சேர்ப்பதும், செலவு பண்ணினால்தான் அரசியலுக்கு வர முடியும் என்கிற கருத்தும்.

... ... ...... .....

இங்கே ஆவடியை அடுத்த பட்டாபிராமில் முன்னாள் பிரதமர் ஒருவரின் சிலை ஒன்று உள்ளது. சிலையில் கல்வெட்டில் ஒருவர் பெயர் இப்படி உள்ளது: Ex-Parliament Candidate. அதாவது நாடாளுமன்ற தேர்தலில் போட்டி போட்டாராம் அவர்! வெள்ளையர்களுக்கு மனுப்போட என்பதற்காகவே 1885இல் நிறுவப்பட்ட கட்சியை சேர்ந்தவர் இவர்.

... .....

என் நன்மாறன் (13.5.1947- 28.10.2021)


சனி, அக்டோபர் 09, 2021

1921 ரயில்பெட்டி கோர மரணங்கள் குறித்த விசாரணை மீது பிரிட்டிஷ் அரசு எடுத்த முடிவு


1921 மாப்பிளா கிளர்ச்சியின் போக்கில் நவம்பர் மாதத்தில் ரயில்பெட்டியில் அடைத்து எடுத்துச்செல்லப்பட்ட கிளர்ச்சியாளர்களில் 70 பேர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்தார்கள். இக்கோர மரணம் குறித்து தனியே ஒரு பதிவு எழுதியுள்ளேன். இதன் மீது விசாரணை நடத்தப்பட்டது, விசாரணை அறிக்கையின் மீது பிரிட்டிஷ் அரசு என்ன முடிவுக்கு வந்தது என்பதை மலபார் துணை கலெக்டராக இருந்த திவான் பகதூர் சி கோபாலன் நாயர் தான் எழுதிய The Moplah Rebellion, 1921 என்ற நூலில் எழுதியுள்ளார். 1923 பதிப்பு. The train tragedy என்ற தலைப்பில் உள்ள எட்டாவது அத்தியாயத்தை இங்கே தமிழில் தருகின்றேன். அரசதிகாரம் எல்லா காலங்களிலும் யாருக்கு சாதகமான அமைப்பாக இருக்கும் என்பதற்கு பிரிட்டிஷ் அரசின் இந்த நடவடிக்கை மிகச்சிறந்த உதாரணம்.

.... .... .... ....

கிளர்ச்சியின் போக்கில் பின்வரும் நிகழ்ச்சி நடந்தது: 

"கிளர்ச்சியுடன் தொடர்புடைய குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டு தண்டனையும் வழங்கப்பட்ட 100 கைதிகள் (97 மாப்பிளாக்கள், 3 இந்துக்கள்) 1921 நவம்பர் 19 அன்று திரூரில் இருந்து கோயம்புத்தூருக்கு ரயில் மூலம் அனுப்பப்பட்டனர். MS&SM ரயில்வே சரக்குப்பெட்டி எண்1711இல் அடைக்கப்பட்டனர். கோழிக்கோட்டில் இருந்து மாலை நேரம் புறப்படும் ரயில் எண் 77இன் பின்னால் அப்பெட்டி இணைக்கப்பட்டது. போத்தனூர் ரயில்நிலையத்துக்கு வந்தபோது அனைத்துகைதிகளும் மயக்கமடைந்த நிலையில் காணப்பட்டனர். மூன்று இந்துக்கள் உள்ளிட்ட 56 பேர் இறந்துவிட்டார் கள். உயிர் இருந்த 44 பேரை கோயம்புத்தூருக்கு எடுத்துச்சென்றனர். இவர்களில் 6 பேர் கோயம்புத்தூர் ரயில்நிலையத்தில் இறந்தார்கள். 13 பேர் கோயம்புத்தூர் சிவில் மருத்துவமனைக்கும் 25 பேர் மத்திய சிறைக்கும் கொண்டுசெல்லப்பட்டனர். சிவில் மருத்துவமனைக்கு வந்தவுடன் இருவரும் பிற்பகலில் 4 பேரும் இறந்தார்கள். 26ஆம் தேதி இருவர் இறந்தார்கள். ஆக மொத்தம்70 பேர் இறந்தார்கள்.

மெட்றாஸ் அரசு இதுகுறித்து விசாரிக்க விசாரணைக்குழு அமைத்தது. குழுவின் அறிக்கை அடிப்படையில், 1922 ஆகஸ்ட் 30 அன்று இந்திய அரசு கீழ்க்கண்ட அறிக்கையை வெளியிட்டது.

சரக்குப்பெட்டியை அத்தகைய ஒரு அவசர நிலையில் பயன்படுத்தியதை கண்டனத்துக்குரியது என்றோ மனிதாபிமானம் அற்ற செயல் என்றோ கூற முடியாது என்று விசாரணைக்குழு கூறுவதை அரசு அங்கீகரிக்கின்றது.

பயணிகள் பயணம் செய்வதற்கான பெட்டி இல்லை என்றாலும் கூட அவை மூடப்பட்ட டிரக்குகள் அல்ல, காற்றோட்டம் உள்ளவை, காற்றுத்துளைகள் மூடப்பட்டு இருக்கவில்லை, போதிய காற்றுத்துளைகள் இருந்தன என்பதால் கணிசமான பயணிகளை பாதுகாப்பாக ஏற்றிக்கொண்டு செல்ல தக்கவைதான்.

மனிதர்களை ஏற்றிக்கொண்டு செல்வதற்காக இத்தகைய பெட்டிகளை பயன்படுத்துவது என்ற முடிவை எடுக்கும் அதிகாரம் கீழ்மட்ட ஊழியர்களுக்கு அளிக்கப்பட்டு இருக்க கூடாது, மாறாக அதற்கான முறையான விதிகளின் கீழ் அத்தகைய முடிவு எடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்று விசாரணைக்குழு கூறுவதையும் அரசு ஏற்றுக்கொள்கின்றது. இத்தகைய ஒருமுன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க தவறியதாலேயே ராணுவ கமாண்டரை அதற்காக பொறுப்பாக்க முடியாது என்ற முடிவையும் அரசு ஏற்றுக்கொள்கின்றது.

கிளர்ச்சியின்போது திரு இவான்ஸ், திரு ஹிட்ச்காக் இருவரும் செய்த பணிகளை இந்திய அரசு பாராட்டுகின்றது. அவர்கள் செய்த பணியின் கடுமையை அரசு உணர்ந்துள்ளது. தகுந்த விதிகளின் கீழேயே  சரக்குப்பெட்டியில் கைதிகளை கொண்டுசெல்ல வேண்டும் என்ற நடைமுறையை கொண்டுவருவதற்கான முயற்சிகளை இந்த இரண்டு அதிகாரிகளும் மேற்கொள்ளவில்லை என்று அரசாங்கம் பெரிதாக வருத்தப்படவும் முடியாது. ரயில்வே அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்த பின்னர், ஒரு சரக்குப்பெட்டியில் அடைக்கப்படும் கைதிகளின் எண்ணிக்கைக்கு தேவையான காற்றோட்டம் அப்பெட்டியில் உள்ளது என்று ஒரு பொறுப்பான அரசு அதிகாரி முடிவு செய்ய வேண்டும் என விதிகளில் சொல்லப்பட்டு இருந்திருந்தால், அநேகமாக உயிரிழப்பு எதுவும் நடந்திருக்காது.

ஹிட்ச்காக், இவான்ஸ் இருவரில் ஆகப்பெரிய பொறுப்பு யாருக்கு இருக்கின்றது என்றால் இவான்சுக்குதான். திரூரில் தொடர்ந்து பொறுப்பில் இருந்தவர் என்ற முறையில், கைதிகளை கொண்டுசெல்வற்கான  ஏற்பாடுகளை கண்காணிப்பதில் இவான்ஸ் இன்னும் கூடுதல் பொறுப்புணர்வுடன் செயல்பட்டு இருந்திருக்க வேண்டும்.

ஆனால் அந்த குறிப்பிட்ட ரயில்பெட்டியை தேர்வு செய்ததற்காக  சார்ஜெண்ட் ஆண்ட்ரூஸ்ஐ குறை சொல்ல முடியாது என்ற கமிட்டியின் கருத்தை அரசு ஏற்றுக்கொள்ள முடியாது. ஒரு போலீஸ் அதிகாரி என்ற முறையில், ரயில்பெட்டியின் பாதுகாப்பு குறித்த பரிசோதனையுடன் அவர் தன் வேலையை முடித்துக்கொண்டு இருக்க கூடாது, கைதிகளை கொண்டுசெல்வதற்கு தகுதியான ரயில்பெட்டிதான் என்றும் கூட அவர் தன்னளவில் திருப்தி அடைந்து இருக்க வேண்டும்.

பெட்டியில் இருந்து கைதிகள் எழுப்பிய கூச்சல், அவர்கள் பெரும் ஆபத்தில் சிக்கி இருந்தார்கள் என்பதையே காட்டியது என்று நிரூபிக்க தனிப்பட்ட சாட்சியம் உள்ளது. கைதிகளின் பெருங்கூச்சலுக்கான சரியான காரணம் இன்னதுதான் என்று மிக உறுதியாக சொல்லமுடியவில்லை என்று கமிட்டி சொல்கின்றது. ஆனால் காற்றுக்காகவும் குடிநீருக்காகவும் கைதிகள் எழுப்பிய பெரும் ஓலம், சார்ஜென்டின், அவரது பாதுகாவலரின் சிறப்பு கவனத்தை ஈர்க்கும் வண்ணம் இருந்தன என்பதை மறுக்கமுடியாது. இந்த முடிவை இந்திய அரசு ஏற்றுக்கொள்கின்றது.

சார்ஜெண்ட் ஆண்ட்ரூஸ் என்பவர், வேண்டுமென்றேதான் மனிதாபிமானம் இல்லாமல் நடந்துகொண்டார் என்று சொல்வதற்கில்லை என்ற கமிட்டியின் கருத்தில் இருந்து அரசு மாறுபடவில்லை. ஆனால் பெட்டியில் இருந்து கிளம்பிய பெருங்கூச்சலை கண்டுகொள்ளாமல் இருந்தது, அதற்கான காரணத்தை தெரிய முற்படாமல் அலட்சியம் செய்தது என்பது அசாதாரணமான ஒன்று,  தெரிந்தேதான் சார்ஜெண்ட் இத்தகைய தவறை செய்தார் என்ற கமிட்டியின் சொற்களை அரசு கவனத்தில் கொள்கின்றது. நடந்தவற்றை புரிந்துகொள்ளும் அளவுக்கு உள்ளூர் மொழியை நன்கு அறிந்துஇருந்த தலைமை காவலரும் பிற காவலர்களும் சார்ஜெண்ட் ஆண்ட்ரூஸ்சிடம் தெரிவிக்க தவறியதால் மேற்படி கண்டனத்தை அவர்களும் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

சார்ஜெண்ட் ஆண்ட்ரூஸ் மீதான விசாரணைக்கு ஒரு குழு அமைக்க வேண்டும் என இந்திய அரசு மெட்றாஸ் அரசுக்கு அறிவுறுத்துகிறது. கமிட்டியின் மேற்கண்ட கண்டறிதல்களின் அடிப்படையில், தலைமைக்காவலர், பிற காவலர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதை அரசு முடிவு செய்யும். (மெட்ராஸ் மெய்ல்).

சார்ஜெண்ட் ஆண்ட்ரூஸ், பிற காவலர்கள் மீது குற்றச்சாட்டப்பட்டது, ஆனால் பின்னர் குற்றத்திலிருந்து விடுவிக்கப்பட்ட னர்.

இறந்த 70 கைதிகளின் ஒவ்வொரு குடும்பத்துக்கும் 300 ரூபாய்  இழப்பீடு வழங்க மெட்ராஸ் அரசு உத்தரவிட்டுள்ளது. (ஆணை எண் 290, 1.4.1922)

புதன், அக்டோபர் 06, 2021

சரக்குரயில்பெட்டி எண் 1711 சந்தித்த கோர மரணம் (1921 நவம்பர்)

Maddy என்னும் நண்பர் historic alleys என்ற தன் வலைப்பூவில் (blog), 1921 நவம்பர் மாதம் மாப்பிளா கிளர்ச்சியின் போக்கில் நிகழ்ந்த ரயில்பெட்டி கோர மரணம் குறித்து நுட்பமான தகவல்கள் அடிப்படையில் விரிவாக எழுதியுள்ளார் (The tragedy in wagon 1711 - a complete picture). அதன் தமிழாக்கத்தை இங்கே தருகின்றேன்.
... ....
இதுவரையிலும் செய்தியேடுகளிலும் வெளிவந்த பலவிதமான தகவல்களும் உண்மைக்கு வெகுதொலைவில் இருப்பவை, முழுமையாநத்தம் அல்ல. இப்போது என்னிடம் ரயில்பெட்டி கோர மரண நிகழ்வு குறித்து போதிய தகவல்கள் உள்ளன என்பதால் அவற்றை முழுமையாக பதிவு செய்கின்றேன்.
மலப்புரத்தில் கைது செய்யப்பட்ட பெருமளவு கைதிகளுக்கு ராணுவ சட்டத்தின் கீழ் தண்டனை வழங்கப்பட்டது. மலபாரின் சிறைகள் கொள்ளளவுக்கு மேலும் நிரம்பி வழிந்தன என்பதாலும் திரூரிலேயே அவர்களை சிறைவைக்க முடியாது என்பதாலும் கோயம்புத்தூர், வேலூர், பெல்லாரி சிறைகளுக்கு அனுப்புவது என முடிவு செய்யப்பட்டது. கர்னல் Humphreys, காவல்துறை கண்காணிப்பாளர் Hitchcock, F B Evans ஆகியோருக்கு இப்பொறுப்பு தரப்பட்டது. ரயில் எண் 77 கோழிக்கோடு -மெட்ராஸ் பாசஞ்சர், 1921 நவம்பர் 19 அன்று ஒரு கோர நிகழ்வை நோக்கி தன் பயணத்தை தொடங்கியது. நவம்பர்19 மாலை MS & SM சரக்குப்பெட்டி எண் 1711 அந்த ரயிலுடன் இணைக்கப்பட்டது. 100 கைதிகள் (97 முஸ்லிம்கள், 3 இந்துக்கள்) அந்த சரக்குப்பெட்டியில் ஏற்றப்பட்டனர். இவர்களில் பெரும்பாலோர் கருவம்பலம், புலமாந்தோல் பகுதிகளை சேர்ந்தவர்கள். இக்கூடுதல் பெட்டி திரூரில் இருந்து (கர்நாடகாவின்) பெல்லாரிக்கு கைதிகளை கொண்டு செல்ல வரவழைக்கப்பட்டது. தென்னிந்திய ரயில்வே அதிகாரிகள் அவ்வாறே பெட்டி எண் 1711ஐ ரயில் எண் 77உடன் இணைத்தார்கள். கோழிகோட்டில் இருந்து திரூருக்கு மாலை 6.45க்கு ரயில் வந்து சேர்ந்தது. சரக்குப்பெட்டியில் இருந்த பொருட்கள் கீழே இறக்கப்பட்டு சுத்தமாக்கப் பட்டன, நோய்ப்பரவல் தடுப்பு மருந்து தெளிக்கப்பட்டது.
அந்த பெட்டிக்கு போலீஸ்காரர்கள்தான் காவலாக சென்றிருக்க வேண்டும். கைதிகளை கோழிகோட்டில் இருந்து கண்ணூருக்கு கொண்டுசெல்லும் போது எப்போதும் அதுதான் நடைமுறை. ஆனால் இம்முறை அப்படி நடக்கவில்லை. (காங்கிரஸ் கட்சியின் கே கேளப்பனின் அனுபவம் அது, அப்படிப்பட்ட ஒரு ரயில் பயண அனுபவம் அவருக்கு இருந்தது, ஆனால் அவர் பயணித்த பெட்டியின் கதவு திறந்து இருந்தது, ஒரு போலீஸ்காரரும் காவல் இருந்தாராம்). மொயாரத் Moyarath சொல்கின்றார்: இதுபோ பயணங்களில் சாவு என்பது பொதுவாக நடப்பதுதான். இப்படிப்பட்ட ரயில்களும் பெட்டிகளும் மலபாரின் ரயில் நிலையங்களை கடந்து செல்லும்போது பொதுமக்கள் அவற்றை கடும்பீதியுடன்தான் பார்ப்பார்களாம். மூடப்படாத ரயில்பெட்டிகள்தான் கடந்தகாலத்தில் பயன்படுத்தபட்டன என்று மாதவன் நாயர் சொல்கின்றார். ஆனால் பின்னர் நடந்த விசாரணையின் போது ஹிட்ச்காக் அளித்த வாக்குமூலத்தில், "இந்த முறை நவம்பர் 20 அன்று அவ்வாறு செய்து இருந்தால் அது தவறில் முடிந்திருக்கும். திறந்த பெட்டியில் அடைக்கப்பட்டு இருந்த கிளர்ச்சியாளர்களை பொதுமக்கள் பார்த்து இருந்தால், அப்போது நிலவிய சூழ்நிலையின் பின்னணியில் ஆவேசம் கொண்டு திரண்டு கைதிகளை காப்பாற்ற முனைந்திருப்பார்கள்" என்று சொல்லியிருக்கிறார். இதற்கு முன்பு இவ்வாறு கைதிகளை கொண்டுசெல்ல பயன்படுத்த ப்பட்ட பெட்டிகள் உண்மையில் கால்நடைகளை கொண்டுசெல்ல பயன்படுத்தப்பட்டவைதான். ஹிட்ச்காக்கின் கருத்து என்னவெனில் நவம்பர் 21 அன்று பயன்படுத்தப்பட்ட ரயில்பெட்டி பாதுகாப்பானது என்பதே. Alfred Emanuel தான் எழுதிய New Outlook இல், 'அந்த ரயில்பெட்டிக்கு புத்தம் புதிதாக பெயிண்ட் அடிக்கப்பட்டு இருந்ததால் மிகச்சிறிய துளைகள் கூட அடைக்கப்பட்டு காற்று உள்ளே வருவது தடுக்கப்பட்டுவிட்டது' என்று சொல்கின்றார்! (பக்கம் 698). (இதற்கு முன் இப்படி கராச்சி ராணுவ ரயில்வண்டி ஒன்றில் இதேபோல ஆங்கிலேய படைவீரர்களை அனுப்பியபோது பலர் இறந்துபோன கசப்பான வரலாறு பிரிட்டிஷாருக்கு உண்டு!)
 
ரிசர்வ் போலீஸ் சார்ஜெண்ட் AH Andrews, தலைமைக்காவலர் O கோபாலன் நாயர், கான்ஸ்டபிள்கள் P நாராயண நாயர், K ராமன் நம்பியார், I Ryru, N T குஞ்ஞாம்பு, P கோரோடுண்ணி நாயர் ஆகியோர் இந்த ரயிலில் பாதுகாப்புக்காக சென்றவர்கள். சரக்குப்பெட்டி 1711இன் பின்னால் இருந்த பெட்டியில் தலைமைக்காவலரும் பிற காவலர்களும் பயணிக்க, ரயில் என்ஜினின் பின்னால் இருந்த இரண்டாம் வகுப்பு பயணிகள் பெட்டியில் சார்ஜெண்ட் பயணித்தார். அனைத்துக் கைதிகளையும் பெட்டியினுள் அடைத்தபின் கதவை வெளிப்புறம் தாழிட்டு தாழ்ப்பாளை ஒரு கம்பியாலும் கட்டினார்கள்.
மாலை 7 மணிக்கு ரயில் புறப்பட்டது. சோரனூர் ரயில்நிலையத்தில் அரை மணி நேரமும் ஒலவக்கோட்டில் கால் மணி நேரமும் ரயில் நின்றது. பாதுகாப்புக்கு வந்த காவலர்கள் அடுத்த பிளாட்பாரத்துக்கு வந்தபோது ரயில்பெட்டிக்குள் இருந்த கைதிகள் கத்தி கதறி கூச்சல் இட்டதை அவர்கள் கேட்டிருப்பார்கள். கதவை திறந்து காற்றோட்டத்துக்கு வழி செய்து குடிநீரும் கொடுத்திருந்தால் உயிருக்கு போராடிய கைதிகளை காப்பாற்றியிருக்க முடியும். இவ்வாறு ரயில் சென்ற வழியில் இருந்த அனைத்து நிலையங்களிலும் பெட்டிக்குள் இருந்து வந்த பெரும் கதறலை பலரும் கேட்டிருக்கின்றார்கள். ஆனால் எதற்கும் அசைந்து கொடுக்காத காவலர்கள், போதனூரில் மட்டுமே கதவைத் திறப்பது என்று உறுதியாக இருந்துள்ளார்கள். திரூரில் இருந்து ஏறத்தாழ 111 மைல்கள் தொலைவில் உள்ளது போதனூர்.
மரணத்தின் பின் நடந்த விசாரணையில், செருவண்ணத்தூரில் ரயில் நின்றபின் கைதிகள் தண்ணீர் கேட்டு அலறியதை தன் காதால் கேட்டதாக சார்ஜெண்ட் சொல்லியிருக்கிறார். ஆனால் நேரம் கடந்து போனதால் கைதிகளின் கதறலை அவர் பொருட்படுத்தவில்லை. அதேபோல் ஒலவகோடு உள்ளிட்ட பல ரயில்நிலையங்களிலும் கைதிகளின் கதறலை காதால் கேட்டதாக பலர் சாட்சியம் அளித்தனர். காற்றுக்காகவும் குடிநீருக்காகவும் போராடித்தவித்த அக்கைதிகள் பித்துப்பிடித்து புத்தி பேதலித்த நிலையில் இருந்ததாக சொல்கின்றார்கள்.
"கைதிகளுக்கு குடிநீர் வழங்குவதை இரக்கத்தின்பால் செய்யலாமே தவிர சட்டத்தில் அப்படி ஒன்றும் இடமில்லை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். சோரனூரிலோ ஒலவகோட்டிலோ கைதிகள் மீது இரக்கம் கொண்டு சார்ஜெண்ட் கதவை திறந்திருப்பார் எனில் கைதிகள் கோபம்கொண்டு ரயில்நிலையத்தை சூறையாடி இருப்பார்கள், அப்பாவி மக்களை படுகொலை செய்திருப்பார்கள். அவ்வாறு நடந்திருக்கும் எனில், காவலர்கள் தம் கடமையில் இருந்து தவறிய குற்றத்துக்காக தண்டனை பெற்றிருப்பார்கள்" என சென்னை குற்றப்புலனாய்வு துணை கண்காணிப்பாளர் விசாரணையின்போது வாக்குமூலம் அளித்தார்.
போதனூர் ரயில்நிலையத்துக்கு நள்ளிரவு, அதாவது அதிகாலை 1230 மணிக்கு ரயில்வந்து நின்றபோது, அதே ரயிலில் வந்த ஒரு பயணி குறிப்பிட்ட ரயில்பெட்டியில் இருந்து கதறல்கள் கேட்பதாக பெருங்கூச்சலிட்ட பிறகே சரக்குப்பெட்டியின் கதவு திறக்கப்பட்டது. அங்கே அதிகாரிகள் கண்டதென்ன? அடைக்கப்பட்டு இருந்த அனைவரும் மயக்கமுற்றுக் கீழே கிடந்தார்கள், பலர் ஏற்கனவே உயிரை இழந்திருந்தார்கள்.மூன்று இந்துக்கள் உள்ளிட்ட 56 பேர் இழந்துகிடந்தார்கள். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் 6 பேர், கொண்டுசென்றபின் 2, பிற்பகலில் 4, 26ஆம்தேதி 2, ஆக மொத்தம் 70 பேர் இறந்துபோனார்கள்.
இறந்தவர்களின் உடலோடு அந்த சரக்குரயில்பெட்டி மீண்டும் திரூருக்கு அனுப்பப்பட்டது. மறுநாள் காலை மீதியிருந்த 44 பேரை கோயம்புத்தூருக்கு கொண்டு சென்றார்கள். ரயில்வே பிளாட்பாரத்தில் 6 பேர் இறந்தனர். கோயம்புத்தூர் மத்திய சிறைக்கு 25 பேரை அனுப்பினார்கள். பொது மருத்துவமனையை அடையும் முன் 2 பேர் இறந்தனர். பிற்பகலில் 4 பேர் இறந்தனர். 26.11.1921 அன்று இருவர் இறந்தனர்.
 
நான் (Maddy) கூறுவது சரி எனில், தி ஹிந்து நாளிதழின் செய்தியாளர்தான் இச்செய்தியை கோயம்புத்தூரில் இருந்து முதலில் வெளியே தெரிவித்தார். நவம்பர் 22ஆம் தேதி காலை இக்கோரமரணம் பற்றி உலகுக்கு வெளியே சொன்னவர் அவர்தான்.
Moyarath கூறுவது என்ன? கோழிக்கோட்டை சேர்ந்த மஞ்சேரி ராம ஐயர் என்பவரின் வற்புறுத்தலால்தான் போதனூரில் ரயில்பெட்டி திறக்கப்பட்டது. உயிருடன் இருந்தவர்களுக்கு கோயம்புத்தூரில் சிகிச்சை அளித்த மருத்துவர் டாக்டர் T ராமன். (ஹிஸ்டாரிக் அல்லேய்ஸ் வலைப்பூவில் இது குறித்து Maddy எழுதிய கட்டுரைக்கு பின்னூட்டம் இட்ட பிரேம்நாத் முர்கோத் என்ற நண்பர், அந்த டாக்டர் T ராமன் தன் தாத்தா என்றும் 1895இல் மெட்ராஸ் மருத்துவ கல்லூரியில் மருத்துவர் பட்டம் பெற்றார் என்றும் பதிவு செய்துள்ளார். தன் தாத்தாவின் புகைப்படம், அவர் பெற்ற பட்டத்தின் நகல் ஆகியவற்றையும் பதிவு செய்துள்ளார். அவற்றை இங்கே நான் பதிவு செய்கின்றேன்.
ரயில்பெட்டியில் இருந்து உயிருடன் மீண்ட ஒருவரின் வாக்குமூலம் இது: பெட்டிக்குள் இருந்த அனைவரும் வியர்வையில் நனைந்தோம். காற்று இல்லாததால் சுவாசிக்க முடியவில்லை. தண்ணீர் தாகம் எடுத்த நிலையில் எங்கள் துணியில் ஊறிய வியர்வையை பிழிந்து குடித்தோம். பெட்டியின் கதவில் இருந்த சிறுதுவாரங்களும் கூட அடைக்கப்பட்டு இருந்ததால் காற்று வரவில்லை. கதவை உடைக்க முயற்சித்தோம், முடியவில்லை.
பிரம்மதத்தன் நம்பூதிரி தன் நூலில் சொல்கின்றார்: இரண்டு கைதிகளுக்கு ஒரு விலங்கு என பூட்டியிருந்தனர். சாவின் பிடியில் சிக்கி மனம் பேதலித்த அவர்கள், ஒருவரை ஒருவர் நகத்தால் கீறியும் கடித்தும் தாக்கியும் இருந்தார்கள் என்பதை இறந்தவர்களின் உடலில் இருந்த காயங்கள் சொன்னன.
MPS மேனன் எழுதிய MP நாராயண மேனன் என்ற நூலும் கான்ராட் உட் எழுதிய நூலும் பின்வரும் தகவலை தருகின்றன: 70 பேர்களில் 32 பேர் கூலிகள், 19 பேர் விவசாய தொழிலாளர்கள், 4 பேர் குர் ஆன் போதிப்பவர்கள், 2 பேர் தேனீர்கடைக்காரர்கள், 2 பேர் மசூதி ஊழியர்கள், 2 பேர் மத போதகர்கள், 2 பேர் சிறு வணிகர்கள், 2 பேர் வணிகர்கள், 1 மர வணிகர், 1 பொற்கொல்லர், 1 தச்சுத்தொழிலாளி, 1 முடித்திருத்திருத்துபவர். இவர்களில் 67 மாப்பிளாக்கள், 3 இந்துக்கள். 10 பேர் ஓரளவு வசதியான நிலவுடைமையாளர்கள்.
B C Scott அப்போது தென்னிந்திய ரயில்வே ஏஜென்ட் ஆக இருந்தவர். இந்த சரக்குப்பெட்டிகளை ரயில்வே அதிகாரிகளின் சம்மதத்துடன்தான் திரூருக்கு அனுப்பினார்களா என்று விசாரணை செய்தார். கைதிகளை கொண்டுசெல்ல சரக்குப்பெட்டிகளை பயன்படுத்தியதை மாவட்ட போக்குவரத்து கண்காணிப்பாளர் அறிவார் என்று தெரிந்தது. A R Knapp என்பவர் தலைமையில் இந்த கோர மரணத்தை விசாரிக்க மெட்ராஸ் அரசு விசாரணைக்குழு அமைத்தது. மேலும் இந்திய தண்டனை சட்டங்கள் பிரிவு 304A, இந்திய ரயில்வே சட்டம் பிரிவு, 1890 ஆகியவற்றின் கீழ் சார்ஜெண்ட் Andrews மீதும் பிற காவலர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யுமாறு மெட்ராஸ் அரசு உத்தரவிட்டது. அரசு நிர்வாகம், தொடக்கத்தில் இந்த விவகாரத்தை அத்தனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இக்கோர மரணங்கள் யாவும் 'சூழ்நிலைகள் காரணமாக நிகழ்ந்தவை, யாரையும் இதற்கு பொறுப்பாக்க முடியாது' என்றே சொன்னது. 'மூச்சுத்திணறல் காரணமாக ஏற்பட்ட மரணங்கள்' என கோயம்புத்தூர் மருத்துவமனை அதிகாரி உறுதி செய்தார். ஆனால் 'வேறு காரணங்களால் நிகழ்ந்த மரணங்கள்' என்று திசைதிருப்ப அரசு முயன்றது. ஆனால் கோயம்புத்தூர் ராணுவசட்டத்தின் கீழ் இல்லாமல் இருந்ததால் இந்த கோரமரணம் பற்றிய செய்தி மக்களுக்கும் பத்திரிக்கையாளர்களுக்கும் பரவிவிட்டது.
விசாரணைக்குழுவின் முதல் அமர்வு கோயம்புத்தூரில் 28.11.1921 அன்று நடந்தது. உயிருடன் மீண்டவர்களின் வாக்குமூலங்களை இக்குழு கவனமாக பதிவு செய்தது. 34 சாட்சிகளை விசாரித்தது. பெட்டியில் அடைக்கப்பட்டவர்கள் பெருங்கூச்சலிட்டனர் என்பதை குழு ஒத்துக்கொண்டது. பின்னர் கோயம்புத்தூர் மாவட்ட மாஜிஸ்திரேட் H L Braidwood தலைமையில் விசாரணை நடந்தது. மெட்றாசின் புகழ்பெற்ற வழக்கறிஞர்கள் சார்ஜெண்ட் ஆண்ட்ரூஸ்க்காகவும் குற்றம் சாட்டப்பட்ட பிறருக்காகவும் வாதாடினார்கள். இதற்கு முன் ஒன்பது முறை இதே போன்ற சரக்குப்பெட்டிகளில் கைதிகளை கொண்டுசென்ற அனுபவம் உள்ளவர் அவர், அப்போது இதுபோன்ற துயரங்கள் நிகழ்ந்தது இல்லை என்று வாதிட்டனர்.
ஐரோப்பிய ஆசியர் ஒருவரின் (கொதிகலன்களை உருவாக்குபவர்) வாக்குமூலத்தின்படி, சோரனூர் ரயில்நிலைய பிளாட்பாரத்தில் அவர் நின்றுகொண்டு இருந்தபோது மூடப்பட்ட ரயில்பெட்டியினுள் இருந்து 'வெள்ளம் வெள்ளம்' (தண்ணீர் தண்ணீர்) என்று கூக்குரல்கள் வந்தன. மற்றொருவர், 'நாங்கள் செத்துக்கொண்டு இருக்கின்றோம்' என்று ரயில்பெட்டியினுள் இருந்து குரல்களை கேட்டதாக சொன்னார்.
Robert Hardgrave: மூச்சுத்திணறல்தான் இந்த சாவுகளுக்கு முக்கிய காரணம், கூடவே வெப்பமும் சேர்ந்து கொண்டது என்று விசாரணை குழு முடிவு செய்தது. ரயில்பெட்டியை சோதனை செய்தபோது, கதவின் மேல்பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த காற்றுத்துளைகள் உட்புறமாக மூடப்பட்டிருந்ததும் அதன் மீது பூசப்பட்டு இருந்ததால் படிந்த தூசியும் சேர்ந்து ஒரு துளி காற்றும் உள்ளே வராமல் அடைக்கப்பட்டு இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. எனவே பெட்டி ஒரு காற்றுப்புகாத அறை ஆனது. தங்கள் பணியை முறையாக செய்யாத அரசு ஊழியர்களால் இந்த கோரமரணம் நேர்ந்தது என்றாலும் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் இறுதியில் விடுவிக்கப்பட்டார்கள். Lord Willington 1922இல் சமர்ப்பித்த விசாரணைக்குழு அறிக்கையில் குற்றம் செய்தவர்களின் பெயரும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரும் பரிந்துரையும் இருந்தன.
(இந்த விசாரணைக்குழுவின் அறிக்கை மீது பிரிட்டிஷ் அரசு நிர்வாகம் என்ன முடிவுக்கு வந்தது, என்ன நடவடிக்கை எடுத்தது என்பதை, அன்றைய கோழிக்கோடு டெபுடி கலெக்டர் ஆக இருந்த திவான் பகதூர் C Gopalan Nair தனது The Moplah Rebellion, 1921 என்ற நூலில் (1923 பதிப்பு) சொல்லியிருக்கிறார். அதனை அடுத்த பதிவில் தனியே மொழியாக்கம் செய்து பதிவேன்).
... ..... ..... ....
புகைப்படம்: திரூர் ரயில்நிலையத்தின் சுவரில் ரயில்பெட்டி கோர மரணத்தை நினைவுகூரும் ஓவியத்தை ரயில்வே துறை வரைய முடிவு செய்தது. ரயில்வேயின் அழைப்பின் பேரில் ஓவியர் பிரேம்குமார் தன் நண்பர்களுடன் சேர்ந்து ஓவியத்தை வரைந்தார். வலதுசாரி சங்கிகளின் வற்புறுத்தலுக்கு பணிந்து அவ்வோவியத்தை ரயில்வே துறை அழிந்துவிட்டது. 2018ஆம் ஆண்டு நினைகூரல் நிகழ்வின்போது, திரூர் பேருந்து நிலையத்தில் இதனை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தின்போது, ஓவியர் பிரேம்குமாரும் ஹர்ஷாவும் மக்கள் மத்தியில் வரைந்த ஓவியங்கள் இவை.