கொரோனா இரண்டாவது அலை இந்த ஏப்ரல், மே மாதங்களில் ஆடிய கொடூரப் பேயாட்டம் உண்மையில் எவரும் எதிர்பாராதது. எத்தனை உறவுகள், எத்தனை நட்புக்கள்! பேய் அரசாண்டதால் கொரோனா எல்லோரையும் தின்றது, பெருந்துயரம் அப்படி ஒரு அரசை தமிழ் மக்கள் பெற்றிருந்த கொடுங்காலம். கடந்த வாரம் நாம் கடந்து வந்த பெருவெள்ளமும் அல்லிராணி சாம்ராஜ்யத்தில் நள்ளிரவு செம்பரம்பாக்கம் ஏரி உடைப்பை தவிர்க்க இயலாமல் நினைவுக்கு கொண்டுவந்தது உண்மை உண்மை. மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டதும் உண்மைதான்.
மரணம் மீதான நினைப்பே கூட ஒரு சிலிர்ப்பையும் மீண்டும் அது பற்றி எண்ணுவதை தவிர்க்க வேண்டும் என்ற சாத்தியமில்லாத உறுதியையும் ஏற்படுத்துவது உண்மைதான். பிறக்கும் போதே இறப்பு என்பது உறுதி, எனில் இடைப்பட்ட நாளில் என்ன செய்தோம் என்பதுதான் வாழ்க்கை. உன் கண்ணில் ஒரு துளி நீர் வழிந்தாலும் உலகம் அழ வேண்டும் என்பது வெறும் திரைப்படப்பாடல்தானா?
அகிரா குரோசாவாவின் the dreams குறும்படத்தொகுப்பில் village of the watermills நீராலைக்கிராமம் என்றொரு படம். மரணத்தைக் கொண்டாடும் குறும்படம். இதன் பொருள் என்ன? வாழ்க்கையை கொண்டாடும் மனிதனால்தான் மரணத்தைக் கொண்டாட முடியும்! அக்கிராமத்தில் மனிதர்கள் வாழ்க்கையை கொண்டாடுகின்றார்கள், வாழ்கின்றார்கள். அது குறித்து ஒரு பதிவு எழுதினேன். அச்சில் கொண்டுவர திட்டமிட்டுள்ள என் நூலுக்காக அப்பதிவை மீண்டும் வாசிக்கும்போது புதிய பார்வையுடன் பார்க்கின்றேன். மாறிக்கொண்டே இருப்பதுதானே எல்லாமும், நாம் எழுதியது உட்பட!
... ..... ....
பார் மீது நான் சாகாதிருப்பேன்,
காண்பீர்!
காலா உன்னைச்சிறு புல்லென
மதிக்கிறேன்! - என்றன்
காலருகே வாடா, சற்றே உன்னை
மிதிக்கிறேன்!
சாவுக்கு எதிராக பாரதி விடுத்த
சவால்கள் இவை!
கறந்தபால் முலைப்புகா, கடைந்த
வெண்ணெய் மோர்புகா,
உடைந்துபோன சங்கின் ஓசை உயிர்களும்
உட்புகா,
விரிந்தபூ உதிர்ந்தகாயும் மீண்டும்
போய் மரம்புகா,
இறந்தவர் பின் பிறப்பதில்லை, இல்லை
இல்லை இல்லையே!
இவர் சிவவாக்கியர்! மறுபிறவி என்று ஒண்ணும் இல்லை, இப்பிறவியில் சமூகத்துக்கு ஏதாச்சும் பிரயோசனமா செய்துட்டு போ என்னும் கட்டளை தெரிகின்றது.
யாதும் ஊரே யாவருங்கேளிர்
தீதும் நன்றும் பிறர் தர வாரா
நோதலும் தணிதலும் அற்றோரன்ன
சாதலும் புதுவது அன்றே வாழ்தல்
இனிது என மகிழ்ந்தன்றும் இலமே
முனிவின்
இன்னாதென்றலும் இலமே, மின்னோடு...
இவர் கணியன் பூங்குன்றனார்
(புறநானூறு, 192).
முதல் இரண்டு வரிகள் உலகப்புகழ்
பெற்றவைதான். அடுத்த இரண்டு வரிகளில் மரணம் பற்றி அவர் பேசியுள்ளார் என்பதுதான்
முக்கியமாகப் படுகின்றது.
"சாதல் என்பது புதியது இல்லை,
வாழ்தல் இனிமையானது என்று மகிழ்ந்ததும் இல்லை. உலகின் மீதான வெறுப்பால் வாழ்வு
இனியது அல்ல என்று கூறுவதும் இல்லை. வாழ்க்கையில் பிறப்பு, இறப்பு எல்லாவற்றையும்
ஒரே சீராகப் பார்க்கும் மனப்பக்குவம் மனிதர்களுக்கு வேண்டும். இறப்பில் என்ன
அதிசயம்?" பூங்குன்றனார் சொல்ல வந்தது இதுதான். எல்லா மக்களும் என் மக்கள்,
எல்லா ஊரும் என் ஊரே என்று உலகம் தழுவிய பார்வை கொண்டவர் அவர், 'சமரசம் உலாவும்
இடமே நம் வாழ்வில் காணா...' என்று வெறுத்துப்போய் எழுதிடவில்லை, வாழ்க்கையை
அனுபவிக்க சொல்கின்றார்.
.... .... .....
நீராலைக்கிராமத்துக்கு புதிதாக
வருபவன் நம் கதைசொல்லி. எப்போதும் வற்றாத நதியின் கரையில் ஒரு முதியவர்
உட்கார்ந்துகொண்டு பழைய நீராலைசக்கரத்தை பழுது பார்த்துக்கொண்டு இருக்கின்றார்.
அவனுக்கும் அவருக்கும் நடக்கும் உரையாடல்தான் படம்.
அக்கிராமத்தில் மின்சாரம் இல்லை. நவீன கால சாதனங்கள் எதுவும் இல்லை. மரங்களிலிருந்து விழும் விறகையும் சாணத்தையும் எரிபொருளாக பயன்படுத்துகின்றார்கள். "மனிதன் எப்படி (முன்பு) வாழ்ந்தானோ அப்படியே வாழ நாங்கள் முயன்றுகொண்டு இருக்கின்றோம். அதுதான் இயற்கையுடன் இசைந்த வாழ்வு. இயற்கையின் ஒரு பாகமே மனிதன் என்ற உண்மையை மனிதனே மறந்துவிட்டான்..." இப்படிப்போகின்றது உரையாடல்.
தொலைவில் ஒரு பெருங்கூட்டம் பலத்த ஆரவாரத்துடன் இசைக்கருவிகளை இசைத்துக்கொண்டு வருகின்றது. திருவிழாவா என்று இவன் கேட்கின்றான். "இல்லை, அது இறுதி ஊர்வலம். மகிழ்ச்சியான இறுதி ஊர்வலம். கடுமையாக உழை, நீண்டகாலம் வாழ். இறந்துவிட்ட பெண்ணுக்கு வயது 99. ...இவள்தான் என் முதல் காதலி, வேறு ஒருத்தனை திருமணம் செய்துகொண்டு போய்விட்டாள்" என்று சொல்லியவாறே, வீட்டுக்குள் சென்று சிவப்பு மேலாடை அணிந்து கையில் ஜல் ஜல் என ஒலிக்கும் இசைக்கருவியுடன் வருகின்றார், வரும் ஊர்வலத்தில் அவரும் இசைத்துக்கொண்டே சங்கமிக்கின்றார்.
அப்படியெனில் உங்கள் வயது? 103 என்று அவர் சொல்கின்றார்.
... .... ....
9.10.1967. பொலிவியாவில்
வாலேகிராண்டே. அமெரிக்க சி ஐ ஏவால் சே கைது செய்யப்படுகின்றான். ஒரு கிராமப்
பள்ளிக்கூடம் ஒன்றில் சேயை சுட்டுக்கொல்கின்றது. இறுதி வரையிலும் தன் எதிரிகளின்
கண்களை நேருக்கு நேராகப் பார்த்தவாறு சே அனாவசியமாக இருக்க, சுட வந்த எதிரிகள்தான்
பீதி அடைகின்றார்கள். சுடு என்கிறான் சே, எதிரி ஓடுகின்றான்.
தன் மனைவிக்கும் குழந்தைகளுக்கும் இறுதியான ஒரு கடிதத்தை எழுதி வைத்திருந்தான், தன் பொலிவியப் பயணத்தில் எந்த ஒரு நொடியிலும் மரணத்தை எதிர்நோக்கியே இருந்த அவன்.
"என் அன்புக்குரிய ஹில்டிடா,
அலெய்டிடா, காமிலோ, செலியா, எர்னஸ்டோ,
இந்தக்கடிதத்தை நீங்கள்
வாசிக்கும்போது நான் உங்களையும் இந்த உலகத்தையும் விட்டு முழுமையாக
பிரிந்திருப்பேன். போராளிகளின் இறப்புக்காக யாரும் கண்ணீர் சிந்தக் கூடாது. உங்கள்
தந்தை அவர் ஏற்றுக்கொண்ட கொள்கைக்கு உண்மையாக வாழ்ந்தார் என்று பெருமை
கொள்ளுங்கள்..... உங்கள் கண் முன் ஒரு அநீதி நடக்கும்போது நீங்கள் அதை முழு
வலிமையுடன் எதிர்க்க வேண்டும்.
என் அன்புச்செல்வங்களே,
மீண்டும் உங்களை சந்திப்பேன் என்ற நம்பிக்கையுடன்,
பெரிய அழுத்தமான முத்தங்களுடன்
என்றும் உங்களுடைய
உங்கள் அப்பா"
... .... ....
39 வயதில் சே மரணத்தை
ஏந்திக்கொள்கின்றான், அவன் ஏந்திச்சென்ற கொள்கையை அதன் வெப்பம் தணியாமல் அவன்
குழந்தைகளுக்கும் என் குழந்தைகளுக்கும் கை மாற்றியபடி, பொலிவியா காடுகளில்
மட்டுமின்றி உலகெங்கும் அடக்குமுறைக்கு எதிரான போராட்டத்தை அவர்கள் தொடர்வார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக