ஞாயிறு, நவம்பர் 28, 2021

சலீல் சவுத்ரி: எல்லை கடந்த இசை மேதை

சலீல் தா என்று அன்புடன் அழைக்கப்படும் சலீல் சவுத்ரி 1922 நவம்பர் மாதம் 19ஆம் நாள் வங்கத்தில் தெற்கு 24 பர்கானா மாவட்டத்தில் காஜிப்பூர் என்ற கிராமத்தில் பிறந்தவர்.

அவரது தந்தையார் அசாம் தேயிலைத்தோட்டத்தில் மருத்துவர் ஆக இருந்தவர். பெரும் இசை ரசிகர், இசை ஞானம் மிக்கவர். பீத்தோவன், மொசார்ட் உள்ளிட்ட பெரும் இசை மேதைகளின் இசைத்தொகுப்புக்கள், மேற்கத்திய இசை, அசாம், வங்க நாட்டுப்புற பாடல்கள் உட்பட  பெரிய சேகரிப்பை வைத்திருந்தார். பிள்ளைப்பருவம் தொட்டே சலீல் இவற்றை கேட்டு வளர்ந்தவர். எட்டாவது வயதிலேயே புல்லாங்குழல் இசைப்பதில் வல்லமை பெற்றார். 

தந்தையார் மிகுந்த தேசப்பற்று மிக்கவர். பிரிட்டிஷ் அரசையும் அதன் அடக்குமுறைகளையும் விமர்சிப்பவர். ஒரு முறை பிரிட்டிஷ் மானேஜர் ஒருவன் "அழுக்குப்பிடித்த கருப்பனே" என்று அவரை திட்ட, அவனை அடித்து மூன்று பற்களையும் உடைத்தார் அவர்.  

தேயிலைத்தோட்ட தொழிலாளர்கள் படும் துயரங்களை நேரில் கண்டு வளர்ந்தார் சலீல். அவரது அண்ணனும் இசைக்கலைஞர், பிற்காலத்தில் இசைக்குழு ஒன்றை நடத்தியவர்.

ஆங்கில இலக்கியத்தில் இளங்கலைப் பட்டமும் வங்க இலக்கியத்தில் முதுகலைப்பட்டமும் பெற்றார் சலீல். அவர் கல்லூரியில் பயின்ற காலம் தேச விடுதலைப் போராட்டம் தீவிரமாக நடந்து கொண்டிருந்த காலம். இரண்டாம் உலகப்போர், போருக்குப்பின்னான இந்திய அரசியல் சூழலில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் சந்தித்த நெருக்கடி, பிரிட்டிஷாரால் உருவாக்கப்பட்ட1942 வங்கப் பஞ்சம் ஆகியவற்றை நேரில் கண்டு தன் அனுபவங்களால் தன்னை கூர்மைப் படுத்திக்கொண்டார் சலீல். 

1945இல் நடந்த விவசாயிகள் போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்டு விவசாயிகளுடன் களத்தில் போராடினார். ஒரு கட்டத்தில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் அவரை கைது செய்ய முயன்றபோது தலைமறைவாக சென்றார். 

இந்தியாவின் முன்னோடி இலக்கிய அமைப்புக்கள் எனில், முற்போக்கு எழுத்தாளர் சங்கம், கல்கத்தாவில் இயங்கிய இளைஞர் கலாச்சார நிறுவனம், பெங்களூரில் அமைந்த மக்கள் நாடக மேடை ஆகியவை. இந்திய அளவில் இயங்கிய இலக்கியவாதிகளும் கலைஞர்களும் முனைந்து நிறுவிய இந்திய மக்கள் நாடக மன்றத்தின் (இப்டா) நிறுவனர்களில் சலீலும் ஒருவர். இப்டாவின் முன்னோடிகளில் பிருத்வி ராஜ் கபூர், பிஜோன் பட்டாச்சார்யா, பால்ராஜ் சாஹ்னி, ரித்விக் கட்டக், உத்பல் தத், காஜா அகமது அப்பாஸ், பண்டிட் ரவிசங்கர், இந்திரா மொய்த்ரா ஆகியோர் இருந்தார்கள்.

குறிப்பாக வங்கம், மராட்டியம் என இரண்டு மாநிலங்களிலும் இப்டாவை நிறுவியர்களில் மிக முக்கியமானவர் சலீல். பம்பாயில் பாம்பே இளைஞர் சேர்ந்திசைக்குழுவை நிறுவினார். மன்னா டே, முகேஷ், லதா மங்கேஸ்கர், கனு கோஷ், ரூமா கங்குலி, பிரேம் தாவன், சைலேந்திரா ஆகியோர் இக்குழுவில் இயங்கியவர்கள்.

காலனிய ஆட்சிக்கும் ஏகாதிபத்திய அரசியலுக்கும் எதிரான உணர்வு கொண்ட எழுத்தாளர்களும் கலைஞர்களும்  கலைக்குழுக்கள், நாடக குழுக்கள், இசைக்குழுக்கள் என நாடெங்கிலும் தொடங்கி இயங்கினர். கொள்கை அடிப்படையில் இக்குழுக்கள் யாவும் இடதுசாரிகளாக இருந்தன, அன்றைய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் பி சி ஜோஷி, முற்போக்கு எழுத்தாளர்சங்க செயலாளர் சாஜத் ஜஹீர் ஆகியோரால் உற்சாகம் பெற்றன. தமிழகத்தில் இந்த அமைப்புகள் விதை விடாமல் போனதை எண்ணி மறைந்த மக்களிசை மேதை எம் பி சீனிவாசன் வருந்தினார் என்பதையும் தமிழ்நாடு தாண்டி இந்த கலைஞர்களுடன் இயக்க ரீதியாகவே நெருங்கிய  நட்புடன் அவர் இருந்தார், இயங்கினார் என்பதையும் குறிப்பிட வேண்டும்.

வங்க மொழியிலும் இந்தி மொழியிலும் உணர்வு பொங்கும் தேச பக்தி பாடல்களை சலீல் எழுதினார். முக்கியமாக விவசாயிகள், தொழிலாளர்கள், சாமானிய ஏழை மக்களின் பாடுகளை அவர் பாடல்களில் எழுதினார், இசையமைத்தார், மக்களுடன் மக்களாக போராட்ட இயக்கங்களில் நின்றார்.  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார் சலீல்.

சலீல் மிகப்பெரிய இசைமேதை. 1949இல் பொரிபோர்தன் என்ற வங்கப்படத்துக்கு இசையமைத்து தன் திரையுலக வாழ்க்கையை தொடங்குகின்றார். இசையில் புதிய பரிமாணங்களையும் எல்லைகளையும் கண்டவர், அவர் பாடல்களில் இது தெளிவாக வெளிப்படுகின்றன. ரிக்சாக்காரன் என்ற சிறுகதையை அவர் எழுதிய பின் அதனை இந்தியில் படமாக்க  விரும்பிய பிமல் ராய் சலீலையே வசனம் எழுத சொல்கின்றார். பின்னர் படத்துக்கு இசையமைக்கவும் வேண்டிக்கொள்ள, இந்தியில் இசையமைப்பாளர் ஆகும் வாய்ப்பு தேடி வருகிறது. தோ பிகா ஜமீன் என்பதே அப்படம், புகழ்பெற்ற படம்.

இந்தியில் 75, வங்கத்தில் 45, மலையாளத்தில் 27 படங்களுக்கு சலீல் இசையமைத்தார். அரசின் திரைப்பட துறை தயாரித்த படங்கள், ஆவணப்படங்கள், டிவி தொடர்கள், டிவி ஆவணப்படங்கள், படங்கள் என மிகப்பரந்த அளவில் அவர் பணியாற்றினார். தமிழ், தெலுங்கு, கன்னடம், குஜராத்தி, மராத்தி, அசாமி, ஒரிய மொழிப்படங்களுக்கும் இசையமைத்தார். மிகப்பல படங்களுக்கு பின்னணி இசை மட்டுமே அமைத்துள்ளார், பாடல்கள் இல்லாத படங்கள் அவை.

மலையாளத்தில் அவர் இசையமைத்த செம்மீன் (1965) பெரும்புகழ் பெற்ற படம். 

என் பள்ளி நாட்களில், சிலப்பதிகாரத்தின் 'திங்கள் மாலை வெண்குடையான்' என்ற பாடல் இலங்கை வானொலியில் நான் கேட்காத நாள் இல்லை. யேசுதாஸ் பாடினார், அதே பாடலை பி சுசீலாவும் பாடினார். கரும்பு என்ற படம், வெளிவரவே இல்லை. செம்மீன் இயக்கிய ராமு காரியத் இயக்கினார், செம்மீனுக்கு இசையமைத்த சலீல்தான் இதற்கும் இசையமைத்தார். இணையத்தில் பாடல் கிடைக்கின்றது. தமிழின் இளங்கோவடிகள், வங்கத்தின் சலீல், கேரளத்தின் ராமு காரியத், யேசுதாஸ்! எல்லோரையும் இசை இணைத்தது. 

பருவமழை என்ற தமிழ்ப்படத்துக்கு அவர் இசையமைத்தார். யேசுதாஸ் பாடிய மாடப்புறாவே வா என்ற பாடல் புகழ் பெற்றது.

உள்ளமெல்லாம் தள்ளாடுதே என்று தூரத்து இடிமுழக்கத்தில் ஒரு பாட்டு. என்ன ஒரு நவீனமான கற்பனை கொண்ட இசைக்கோர்வை! பாடலின் தொடக்கம் ஒரு பறவை மெதுவாக மேலெழும்புவது போன்றது, அதன் பின் வானத்தில் வட்டமிடுகின்றது, வெட்டவெளி எங்கும் கட்டுப்பாடின்றி சுற்றித்திரிகின்றது, கேளுங்கள்.

வங்கத்திலும் இந்தியிலும் கிசோரும் லதாவும் பாடிய ஒரு டூயட் பாடல், பின்னர் மலையாளத்தில் யேசுதாஸ் மட்டும் பாடும் பாடலானது (ஏதோ ஒரு சொப்னம் 1978),  தமிழில் ஜெயச்சந்திரனும் சுசீலாவும் பாடினார்கள். பூவண்ணம் போல நெஞ்சம் என்றால் உங்களுக்கு தெரியும். ஒரே மெட்டில் ஆன பாடல் வங்கத்தில் தொடங்கும் போது எப்படி இருந்தது, இந்தியில் எப்படி சற்றே வடிவம் மாறியது, யேசுதாசின் குரலுக்கும் பாடலின் சூழலுக்கும் ஏற்றவாறு மலையாளத்தில் எப்படி வடிவம் பெற்றது, அழியாத கோலங்களில் ஒரு இளைஞனுக்கும் அவனது தோழிக்கும் ஆன ஒரு பாடலாக பாலு மஹேந்திராவுக்காக  எப்படி அமர்க்களமாக உருமாற்றம் ஆனது என்பதை அனுபவியுங்கள்.

"நான் என் இசைத்தொழிலை தொடங்கியபோது, இசையுலகம் என்பது நான் ஏறி விட முடியாத அளவுக்கு மிக மிக உயர்ந்த கோபுரம் என்றுதான் கற்பனையில் இருந்தேன். நீண்ட பல வருடங்களுக்குப் பிறகு இப்போது நான் பார்க்கும்போது அந்தக் கோபுரம் அப்போது எத்தனை உயரமாக இருந்ததோ அப்படியே இருப்பதை பார்க்கின்றேன்" என்று 1993இல் ஒரு நேர்காணலில் சொன்னார் சலீல்.

சலீலும் எம் பி சீனிவாசனும் மக்களிடம் இருந்து இசையை கற்றுக்கொண்டு மக்களுடன் இருந்தவர்கள். இசை கடவுள் கொடுத்த வரம், உங்களுக்கு இசை கொடுக்க கடவுள் என்னை அனுப்பியிருக்கிறான் என்றெல்லாம் ஒருபோதும் புலம்பியது இல்லை. இவர்கள் மக்களிசைக் கலைஞர்கள்.

(சலீல் சவுத்ரி 19.11.1922 - 5.9.1995)

கருத்துகள் இல்லை: