2009இல் கொச்சியில் பணியில் இருந்தபோது சென்னை வருவதற்காக அதிகாலையிலேயே சென்று டட்கல் சீட்டு வாங்கிவிட்டு எர்ணாகுளம் வடக்கு ரயில்நிலையத்தை விட்டு வந்து மீண்டும் வீடு திரும்ப பேருந்து நிறுத்தம் நோக்கி நடந்தபோது ஒரு பெரியவர் எதிரே வந்து மிகுந்த தயக்கத்தோடு நின்றார். பார்த்தவுடன் தெரிந்தது தமிழர் என்று. குளித்து சுத்தமாக தலைசீவி துவைத்த சட்டை கைலி கட்டி எதிரே நின்றார். வணங்கினார். நானும் தமிழன் என்று கண்டுகொண்டதால் இருக்கலாம். நானும் வணங்கி நின்று என்ன என்று பார்வையிலேயே வினவ, ‘பிள்ளைங்க சாப்பிடணும், ஒரு இருபது ரூபா கொடுங்கய்யா’ என்று மீண்டும் வணங்கினார்.
அப்போதுதான் கண்டேன், சற்று தூரத்தில் இரண்டு பிள்ளைகளுடன் - பத்து வயதிற்குள் - ஒரு பெண்மணியும் நிற்க கண்டேன். அந்தப் பெண்ணோ மிகுந்த கூச்சத்துடன் தலை குனிந்தபடி நின்றிருந்தார். அவரும் குளித்து எண்ணெய் தேய்த்து படிய வாரி, குங்குமம் இட்டு, எளிய ஆனால் சுத்தமான ஆடை உடுத்தியிருந்தார். ‘எந்த ஊரு?’ என நான் கேட்க ‘திண்டுக்கல்’ என்றார் இவர். அடுத்து நான் கேட்கும் முன்னரே ‘கொத்தனார் வேலைக்கு வந்தேன், வர சொன்னவர போய் பாக்கணும், இப்போ காசு இல்ல, பிள்ளைங்களுக்கு சாப்பிட ஏதாச்சும் கொடுக்கணும், ஒரு இருபது ரூபா மட்டும் கொடுங்கய்யா, இன்னைக்கு வேல குடுத்துடுவாங்க’ என பணிவுடன மூன்றாம் மனிதர் காதில் விழுந்து விடமால் கவனமான பேசினார். ஊரை விட்டு ஊர் பிழைக்க போகும் குடும்பங்கள் எல்லாம் நடு ராத்திரியில்தான் ஊரை காலி செய்கின்றார்கள் என்று எஸ் ராமகிருஷ்ணன் எழுதியிருப்பார். தென்காசியில் இருந்து ஒரு நாள் நள்ளிரவில் என் ஏழாவது வயதில் எங்கள் குடும்பமும் மதுரை நோக்கி பிழைப்புக்காக இடம் பெயர்ந்தது நினைவுக்கு வந்தது.
என் தகப்பனைப் போலவே கறுப்பு நிறத்தில் நின்று கொண்டு கேவலம் ஒரு இருபது ரூபாய்க்காக என்னை வணங்கி நின்ற கோலம் என் கண்களில் எந்த தயக்கமும் இன்றி நீரை வர வைத்தது. கொச்சி என்ற எர்ணாகுளத்தின் காஸ்ட்லி முகத்தை புலர்ந்தும் புலராத அந்த அதிகாலையானது திண்டுக்கல்காரருக்கு இன்னும் காட்டவில்லை ஆதலால் ஒரு இருபது ரூபாயில் இரண்டு பிள்ளைகளுக்கும் காலை உணவு கொடுத்துவிட முடியும் என்று நம்பிய அந்த அப்பாவியை என்னென்று சொல்ல! நான்கு பேருக்கும் ஓரளவு சாப்பிடமுடிகின்ற ஒரு தொகையை அவர் கையில் கொடுத்தபோது அவர் கையெடுத்து வணங்க, சகிக்க முடியாமல் தலை குனிந்து அந்த இடத்தை விட்டு நகர்ந்தேன்.
.... .... ....
2020 நவம்பர் 27. மதுரை அரசுப்பொதுமருத்துவமனை எதிரே கருப்பாயூரணி செல்ல பேருந்தில் ஏறிய முதியவரின் ஒரு கால் செருப்பு கீழே விழுந்துவிட, அதனை எடுக்க கீழே இறங்கிய போது பேருந்து போய் விடுகின்றது. அமெரிக்கன் கல்லூரி காம்பவுண்ட் சுவர் ஓரம் சைக்கிள் பழுது நீக்கும் கடை வைத்திருப்பவர் ஒற்றை செருப்புடன் நடக்கும் முதியவரைப் பார்த்துவிட்டு, அவரிடம் விசாரிக்க முதியவர் நடந்ததை சொல்கின்றார். அவரை அங்கேயே நிற்க சொல்லிவிட்டு சைக்கிளில் வந்து தொலைந்த ஒற்றை செருப்பை மீட்டு வந்து அவரிடம் தருகின்றார்.
தற்செயலாக இதை பார்த்த ஒரு ஆட்டோ ஓட்டுநர், முதியவரிடம் எங்கே போக என்று விசாரிக்கின்றார். கருப்பாயூரணியில் ஒரு நிகழ்ச்சிக்கு அழைத்திருகின்றார்கள், செல்ல வேண்டும் என்று முதியவர் சொல்ல, நான் கொண்டு சென்று விடுகின்றேன் என்று ஓட்டுநர் சொல்ல, என்னிடம் இருப்பது இருபது ரூபாய் மட்டுமே என்று இவர் சொல்ல, பரவாயில்லை, வாங்க, நான் உங்களை அழைத்துச் செல்கின்றேன் என்று முன்வந்து அவ்வாறே செய்கின்றார்.
இருபது ரூபாய் மட்டுமே பாக்கெட்டில் வைத்துக்கொண்டு தன் ஆட்டோவில் வந்தவர் இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினர் ஆக இருந்த என் நன்மாறன் என்று அறிந்து முகநூலில் திரு.பாண்டி பதிவு செய்ய, உலகம் எங்கும் அதுவே பேசு பொருளாக ஆனது. பல தொலைக்காட்சிகளும் யூடியூப் சானல்களும் நன்மாறன் அவர்களை வீடு தேடி சென்று நேர்காணல் செய்து ஒளிபரப்பினர்.
..... .... .....
நன்மாறன் பல்வேறு நேரங்களில் கூறியவற்றில் ஒரு சில:
ஆட்டோ ஓட்டுனரிடம் நான் முன்னாள் எம் எல் ஏ என்று சொல்லவில்லை. 2011 வரை இருந்தேன், இப்போதும் அதை சொல்லிக்கொண்டே திரிவது சரி அல்ல.
என்னிடம் அரசு கொடுத்துள்ள இலவச பேருந்து அனுமதி சீட்டு உள்ளது, மாநிலம் எங்கும் பயணம் செய்யலாம், நான் பேருந்துகளில்தான் பயணம் செய்கின்றேன்.
அரசியலுக்கு வர தகுதி வேண்டாம், நல்ல எண்ணமும் சேவை செய்யும் மனதும்தான் வேண்டும்.
சமூகத்துக்கு நான் பயன்பட்டுள்ளேன், சமூகம் எனக்கு பயன்பட வேண்டும் என்பதில்லை. நாடு இப்போது ஒரு மோசமான சூழலில் சிக்கி உள்ளது, அதில் இருந்து விடுபட வேண்டும். அதற்காக நானும் வேலை செய்துகொண்டே இருக்கின்றேன்.
சட்டமன்றம் என்பது பணியாற்றக்கூடிய இடம்தானே அன்றி நம் சுகங்களை முன்னிட்டு போகின்ற இடம் அல்ல. நான் சட்டமன்ற உறுப்பினராக இரண்டு முறை இருந்தேன். சனி, ஞாயிறுகளில் விடுமுறைதான், ஆனால் என் அறையில் நான் இருப்பேன், திறந்து வைப்பேன். பார்வையாளர்கள் வராத அந்த இரண்டு நாட்களில் அடுத்த வார சட்டமன்ற பணிகளுக்கான தயாரிப்புகளை செய்ய முடியும். பழைய கோப்புக்களை வாசிப்பது உட்பட.
என் தந்தை ஹார்வி மில் தொழிலாளி. என் சிறு வயதில் மதுரை கீரைத்துறைப் பகுதியில் உள்ள சித்தர் சமாதிக்கு அழைத்து செல்வார். இரண்டு கரும்புகளுடன். நடந்தே செல்வோம். 'உண்பது நாழி, உடுப்பது முழம்' என்று கூட சொன்னதில்லை சித்தர்கள். அவர்களே எனக்கு முன்னோடி வழிபாட்டு அமைப்பாக இருந்தார்கள். "கோவிலாவது ஏனடா...." என்று கேட்டவர்கள் சித்தர்கள். கோவில்கள் பற்றி நிறைய ஆய்வு செய்துள்ளேன். என் தந்தையார் என்னை நூலகத்தில் கொண்டு போய் விட்டு 'நீ இருக்க வேண்டிய இடம் இதுதான்' என்றார். அவர்தான் எனக்கு முன்னோடி, inspiration. நூலகமே என் தாய் வீடு. அனைவரும், குறிப்பாக இளைஞர்கள் புத்தகம் வாசிக்க வேண்டும், முகநூல், வாட்சப் இதெல்லாம் போதாது.
காந்தியடிகள், பெரியார், அண்ணா, கம்யூனிஸ்ட் தலைவர்கள், கே பி ஜானகிஅம்மாள், எம் என் ராய் ஆகியோர் என்னை பாதித்தவர்கள். இந்தியாவுக்கு ஒரு அரசியல் சாசனம் வேண்டும் என்று முதலில் பேசியவர் ராய். ஜானகி அம்மாவின் வளர்ப்பு மகன் நான் என்று பெருமையுடன் சொல்வேன்.
எத்தனை ஏக்கர் வைத்து இருந்தாலும், எத்தனை வீடு வாசல்கள் வைத்து இருந்தாலும் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டுபோய் சேர்ந்த ஒரு மனிதனையாவது நீங்கள் காட்ட முடியுமா?
90களுக்கு பிறகான தனியார்மயம் தாராளமயம் உலகமயமாக்கல் கோட்பாடுதான் 'செலவு செய்பவனே அரசியலில் இருக்க முடியும்' என்ற நடைமுறையை உருவாக்கியது. "நீரளவே ஆகுமாம் ஆம்பல்". மக்கள் குணத்தைப் பொறுத்தே இன்றைய அரசியல்வாதிகள் பணத்தை வாரி இரைக்கின்றார்கள். இது மக்களுக்கும் நல்லது அல்ல, நாட்டுக்கும் நல்லது அல்ல. இல்லாத ஒன்றுக்காக ('கூடவே' வராத சொத்து சுகங்கள்) ஏங்குவதன் கோளாறுதான் அரசியல் வாழ்வில் சொத்து சேர்ப்பதும், செலவு பண்ணினால்தான் அரசியலுக்கு வர முடியும் என்கிற கருத்தும்.
... ... ...... .....
இங்கே ஆவடியை அடுத்த பட்டாபிராமில் முன்னாள் பிரதமர் ஒருவரின் சிலை ஒன்று உள்ளது. சிலையில் கல்வெட்டில் ஒருவர் பெயர் இப்படி உள்ளது: Ex-Parliament Candidate. அதாவது நாடாளுமன்ற தேர்தலில் போட்டி போட்டாராம் அவர்! வெள்ளையர்களுக்கு மனுப்போட என்பதற்காகவே 1885இல் நிறுவப்பட்ட கட்சியை சேர்ந்தவர் இவர்.
... .....
என் நன்மாறன் (13.5.1947- 28.10.2021)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக