செவ்வாய், நவம்பர் 26, 2013

மாண்புமிகு டாஸ்மாக்கும் மது அருந்தா தேசவிரோதிகளும்....



1) ஸ்கூட்டர் வைத்திருக்கின்றேன். வீட்டில் இருந்து அலுவலகம் செல்லும் 9 கி,மீ. தூரத்துக்குள் தினமும் பல சாலை விபத்துக்களை பார்க்கின்றேன். இதுவன்றி அனேகமாக மோசமான விபத்துக்களில் தவறு செய்தவர்கள் அனைவரும் மாண்புமிகு டாஸ்மாக்கு மது அருந்தி வாகனத்தை ஓட்டியவர்கள் என்பதை நேராகவே பார்த்துள்ளேன். இன்று நானும் மனைவியும் குழந்தையும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த திருவள்ளூர் நெடுஞ்சாலையில் ஸ்கூட்டரில் வரும்போது ஒரு மாண்புமிகு மது அருந்திய பைக் ஓட்டி ஒருவரின் செயலால் கீழே விழுந்து குறைந்த காயங்களுடன் உயிர்தப்பினோம்; சாலையில் பயணித்தவர்களும் பிறரும் உதவினார்கள். மாண்புமிகு மது அருந்தி ஓட்டியவர் தன் பைக்கில் பெண் ஒருவருடன் பயணித்தார் என்பதும், விபத்து நடந்தவுடன் தப்பித்துப்போகும் முயற்சியில் சற்று தூரத்தில் கீழேவிழுந்து பலத்த காயமடைந்தார்கள் என்றும் பின்னர் அறிந்தேன். அதற்கு சற்று முன்னர்தான் பின்னிருக்கையில் ஒரு பெண்ணுடன் பயணித்த வேறு ஒரு ஸ்கூட்டர்காரர் அனேகமாக எங்களை கீழே தள்ளியிருப்பார், ஒரு வினாடி நேரத்தில் நாங்கள் தப்பினோம் என்பதும் தற்செயலே. அவர் மாண்புமிகுந்திருந்தாரா இல்லையா என்பது தெரியவில்லை.
2) மது ஒரு சமூக சீரழிவு, தமிழகத்தின் அரசியல் பண்பாட்டுத்தளத்தில் மதுவின் பாதிப்பு நீண்டகாலத்துக்கு இருக்கும், அதைப் பின்னோக்கி திருப்புவது மிக மிகக்கடினமாக இருக்கும், உழைக்கும் மக்களின் சிந்தனைப்போக்கில் ஆரோக்கியமான மாற்றங்களை ஏற்படுத்த இதுகாறும் இச்சமுதாயத்தில் இடதுசாரி இயக்கங்களும் ஜனநாயக முற்போக்கு கலை-பண்பாட்டு இயக்கங்களும் ஆற்றி வந்துள்ள செவ்விய பணிகள் யாவும் பயனற்றுப்போகும் என்பதை நன்கு அறிந்த அரசியல் கட்சிகளும் கலை-இலக்கிய பண்பாட்டு அமைப்புக்களும் மதுவை ஒழிக்க வேண்டும், டாஸ்மாக்கு கடைகளை மூட வேண்டும் என்று உறுதியாக கோரிக்கை வைப்பதற்குப் பதிலாக மிக சன்னமான குரலில் டாஸ்மாக்கு கடைகளின் நேரத்தை முறைப்படுத்த வேண்டும், குடியின் தீமையை விளக்க தமிழக அரசு தீவிரப்பிரச்சாரம் செய்ய வேண்டும்என்று மாண்புமிகு அம்மா அவர்களுக்கு எந்த விதத்திலும் மனம் கோணிவிடக்கூடாத வகையில் அம்மா அவர்கள் சமூகத்துக்கு தண்டனிட்டு மனுப்போட்டுக் கொண்டிருப்பதாலும் தலையங்கம் எழுதிக்கொண்டிருப்பதாலும் சில யோசனைகளை நாம் முன் வைக்கின்றோம்.
3) டாஸ்மாக்கில் குடிக்கின்ற தமிழர்களின் பணத்தில்தான் தமிழக அரசின் கஜானா நிரம்புகின்றதாம்; பல்வேறு நலத்திட்டங்கள், மருத்துவமனையில் மருந்துகள், மருத்துவர்களுக்கு சம்பளம், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் கட்டுவது, இலவச பாடப்புத்தகங்கள் வழங்குவது, ஆசிரியர்களுக்கு சம்பளம், சத்துணவு சமைப்பது, சத்துணவு ஊழியர்களுக்கு சம்பளம், அணைகள் கட்டுவது, மின்சாரத்திட்டங்கள், தொழிற்சாலைகள் கட்டுவது, சாலைகள் போடுவது, மது ஒழிப்பு பிரச்சாரம் செய்வது...ஆக இப்படியான சமூகநலத்திட்டங்கள் யாவும் நமது பச்சைத்தமிழர்கள் குடித்துக்கொடுத்த காசில்தான் நிறைவேறுகின்றன என்பதால் தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் சில அரசாணைகளை வெளியிட வேண்டும்.
4) போலீசுகாரர்கள் மாண்புமிகு மது அருந்தி மேற்படி சமூக சேவைகள் செய்து வாகனம் ஓட்டுபவர்களை நிறுத்தி வாயை ஊதுஎன்று கட்டளை இடுவது காலவிரயமாகவும் அபத்தமாகவும் படுகின்றது; எனவே மாண்புமிகு மது அருந்தாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு முதல் முறை நூறு ரூபாய், இரண்டாம் முறை 500 ரூபாய், மூன்றாம் முறை போலீசுகாரர்களே ஒரு பாட்டில் மாண்புமிகு மதுவை வாயில் ஊற்றி பழக்கப் படுத்தலாம்; இதன் மூலம் அரசுக்கு மேலும் வருவாய் அதிகரிக்கும்.
5) சாலைகளில் இவ்வாறு மாண்புமிகு மது அருந்தாமல் வாகனம் ஓட்டி மாண்புமிகு மது அருந்தி ஓட்டுபவர்களுக்கு பெரும் தொல்லை கொடுப்பதால் மாண்புமிகு மது அருந்தி ஓட்டுபவர்களுக்கு என்றே பிரத்தியேகமாக நான்குவழிச்சாலைகள் ஏற்படுத்தலாம்; அவ்வாறான சாலைகளில் சிக்னல், ஸ்பீட் பிரேக்கர் போன்ற சமூகவிரோத தொல்லைகளை தவிர்க்கலாம். மாண்புமிகு மது அருந்தாமல் வாகனம் ஓட்டும் தேசத்துரோகிகள் பயணிக்க என்றே ஊருக்கு வெளியே பிரத்தியேக சாலைகள் அமைக்கலாம்.
6) இவ்வாறு மாண்புமிகு மது அருந்துபவர்கள் மாண்புமிகு டாஸ்மாக்கு கடைகளில் குடித்துவிட்டு தள்ளாடி விழுவதும் வாந்தி எடுப்பதும் தேசத்துக்கு பெருத்த அவமானம் என்பதால் இவர்களை தாங்கிப்பிடித்து முகவரி அறிந்து அவரவர் வீடுகளில் சேர்ப்பதற்கென்றே பிரத்தியேகமாக 999 ஆம்புலன்ஸ் சேவை தொடங்கலாம்; தவிர மாண்புமிகு மது அருந்துபவர்கள் உடல்நலம் கெட்டால் அரசின் நிதிநிலை தள்ளாடும் நிலை ஏற்படும் என்பது உள்ளங்கை காலி பாட்டில் போல தெளிவான விசயம் என்பதால் மாதம் ஒரு முறை மாண்புமிகு மது அருந்துபவர்களுக்கு இலவச முழு உடல் பரிசோதனைத்திட்டத்தை கொண்டுவரலாம். தொடர்ந்து உடல்நலனைப் பராமரித்து தேசசேவை செய்யும் மாண்புமிகு மது அருந்துபவர்களுக்கு அவர்களின் தேசசேவையின் அளவுக்கு ஏற்ப கலக்கல் மாமணி, கட்டிங் கிங்காங், குவாட்டர் திலகம், ஃபுல்காப்பியன், டாஸ்மாக் ரத்னா, டாஸ்மாக் சக்ரா போன்ற வீரதீர பட்டங்களை வழங்குவதன் மூலம் இளம்தலைமுறையினருக்கு அவர்கள் வழிகாட்டியாக இருப்பார்கள். அன்னாரது வாழ்க்கை வரலாற்றை பாடப்புத்தகங்களில் இடம்பெறச் செய்யலாம். பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் போன்ற பொது இடங்களில் நுழைவாயிலில் அவர்களின் படங்களை இடம் பெறச்செய்யலாம்.
7) அரசின் நலத்திட்டங்களுக்கு எதிரான தேசதுரோகிகள் எப்போதும் பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், மருத்துவமனைகள், வழிபாட்டுத்தலங்கள் அருகே உள்ள மாண்புமிகு டாஸ்மாக் கடைகளை அப்புறப்படுத்த வேண்டும் என்பதாக மனு மேல் மனு போட்டுக்கொண்டே இருப்பதால் இப்பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காணும் வகையில் அத்தகைய பிரச்னைக்குரிய பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், மருத்துவமனைகள், வழிபாட்டுத்தலங்களை உடனடியாக இடித்துத்தள்ளிவிடலாம்; அந்த இடங்களில் கூடுதலாக மாண்புமிகு டாஸ்மாக் கடைகளை திறக்கலாம்.
8) மாண்புமிகு மது அருந்திவிட்டு குடும்பத்தைக் கவனிக்கவில்லை என்று புகார் செய்யும் மனைவிகள் பிள்ளைகளை திருத்தும் வகையில் அவர்கள் குடும்பத்தலைவர் இந்த அரசுக்கும் நாட்டுக்கும் எப்படியெல்லாம் உதவுகின்றார் என்பதை விளக்கிச்சொல்ல அரசுப்பள்ளி ஆசிரியர்களை சனி, ஞாயிறுகளில் அன்னாரது வீடுகளில் பிரச்சாரம் செய்ய சொல்லலாம்.
9) மேலும் பல கிறங்க வைக்கும் ஆலோசனைகள் உங்களிடம் இருந்து வரவேற்கப்படுகின்றன.
.........................................................................................................
நா.வே.அருள் அவர்களின் ஆலோசனைகள்:
ஒவ்வொரு திருமண விருந்துகளிலும் கட்டாயம் இடம் பெற்றாக வேண்டும். எல்லோரையும் குடிகாரர்கள் ஆக்க அரசு ஒரு ஆக்க பூர்வத் திட்டம் வகுக்கலாம்...ரேஷன் கடைகளில் வழங்கப்படலாம். உழைப்பாளர் சிலைகளை அகற்றிவிட்டு குடிகாரர்கள் சிலை நிறுவப்படலாம்...குடிகாரர்களுக்கு வரிவிலக்கு செய்யலாம். குடிப்பழக்கம் இருப்பவர்கள் மட்டுமே வாக்களிக்க அனுமத்திக்கப்படலாம்....குடிப்பழக்கம் உள்ளவர்களுக்கு மட்டுமே வேலையில் முன்னுரிமை வழங்கலாம்.

சனி, நவம்பர் 23, 2013

தொப்புள்கொடிகளும் மலக்குடல்களும்-6

24) பசும்பொன்னில் சமீபத்தில் நடந்த முத்துராமலிங்கத் தேவரின்  பிறந்த நாள் மற்றும் குருபூஜை விழாவில் கலந்துகொண்ட வைகோ, செய்தியாளரிடம் பேசியபோது முத்துராமலிங்கத்தேவரின் புகழ் பாடுகின்றார். அவர் இன்று இருந்திருந்தால் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக இருந்திருப்பார் என்று பேசுகின்றார். முத்துராமலிங்கத்தேவர் இருந்திருந்தால் என்ன நடக்கும் என்பது நமக்கு தெரியாது. ஆனால் அவரது சாதியினர் கடந்த 50 வருடங்களாக தென் தமிழகத்தில் என்ன செய்து கொண்டிருக்கின்றார்கள் என்பது மோசமான வரலாறு. தொடர்ந்து  தென்தமிழகத்தில் சாதிக்கலவரங்களில் முன் நிற்பது தேவர் சாதியினர்தான். தமிழ்நாட்டில் உள்ள தொப்புள்கொடிகளை  சாதிஅடிப்படையில் பிரித்து கலகம் செய்பவர்கள் தேவர் சாதியினர். தொடர்ந்து அரசு நிர்வாகத்திலும் காவல்துறையிலும் ஆதிக்கசாதியினரின் ஆதிக்கத்துக்கு வழிசெய்தவர்கள் திமுக, அ இ அதிமுகவினர்தான். குறிப்பாக அ இ அதிமுக ஆட்சிகளில் இந்த வேலையைச் செய்தவர் இப்போது முற்றத்துக்காக தனது சொத்துக்களை எல்லாம் விற்றதாகவும் ஏலம் விட்டதாகவும் சொல்கின்ற, புதிய தொப்புள்கொடி உறவை ஏற்படுத்திக்கொள்கின்ற அதே சாதியை சேர்ந்த அரசியல் தரகர் நடராசன்தான்.

25) மேலே பட்டியல் இடப்பட்ட ஒரு கலவர நிகழ்வில் கூட இந்த சாதியினருக்கு எதிராக வைகோ, நெடுமாறன், சீமான், தமிழருவி போன்ற தொப்புள்கொடிகள் ஒரே ஒரு ஒற்றை வார்த்தை கூட உதிர்த்ததும் இல்லை, கலவரப்பகுதிகளுக்கு சென்று பாதிக்கப்பட்டோருக்கு ஆதரவாக நின்றதும் இல்லை. ஒருவேளை தலித் மக்களோடு கொள்ளும் உறவு மலக்குடல் உறவு என்று கருதுகின்றார்களா? இந்த நடராசனுக்கும் தமிழக தலித் மக்களுக்கும் என்னவிதமான உறவு இருக்க முடியும்? தொப்புள்கொடி உறவா மலக்குடல் உறவா?

26) அதேபோல் இப்போது தொடர்ந்து மகிந்த ராஜபக்சேவுக்கு எதிராகவும் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாகவும் ஆவேசப் பேட்டிகளை அள்ளிவிடுபவர் உள்ளூர் தமிழர்கள் வீடுகளுக்கு தீ வைக்கும் நவீன மருத்துவர். சமீபத்தில், இலங்கையின் வரலாறு குறித்தும் சிங்களவர்கள் தமிழர்கள் பிரிவினை தகராறு எப்போது உருவானது என்பது குறித்தும் மெய் சிலிர்க்கும் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார்! இலங்கையில் ராஜபக்‌ஷே செய்ததை தமிழகத்தில், குறிப்பாக தர்மபுரியிலும் மேற்கு மாவட்டங்களிலும்  இவர் செய்யும்போது வைகோ, நெடுமாறன், சீமான் போன்றோர் அப்படி என்ன தேசமுக்கியத்துவம் வாய்ந்த வேலையை செய்துகொண்டிருந்தார்கள் என்பதை தமிழகத்தின் ஆறு கோடி தொப்புள்கொடிகளுக்கும் விளக்கவேண்டும். தமிழகத்தில் வன்னியர்களுக்கும் தலித் மக்களுக்கும் ஆன உறவு தொப்புள்கொடி உறவா மலக்குடல் உறவா? ஒரு வேளை பிரபாகரனுடன் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தார்களோ என்னவோ! ‘இறந்துபோனவர்களின் நினைவுச்சின்னம்தான் முள்ளிவாய்க்கால் முற்றம், எனவே பிரபாகரனுக்கு அங்கே சிலை இல்லை என்று நெடுமாறன் பேட்டி அளித்துள்ளதை நினைவு கூர்க.

27) இலங்கையில் இருந்து பிற நாடுகளுக்கு இடம் பெயர்ந்த தமிழர்கள் வாழும் புலம் பெயர்ந்தோர் முகாம்கள் மனிதர்கள் வாழத்தகுந்த முறையில் நாகரிகமான முறையில் இருப்பதாகவும், அந்தந்த நாடுகள் இந்த மக்கள் வாழ்வதற்கான பொருளீட்ட அனுமதி வழங்கியிருப்பதாகவும் பல செய்திகளை நம்மால் வாசிக்க முடிகின்றது; ஆனால் தமிழகத்தில்தான் புலம் பெயர்ந்தோர் அகதிகள் என்று அழைக்கப்படுவதும், அவர்கள் வாழும் முகாம்கள் இலங்கையின் முள்வேலி  முகாம்களை விடவும் மிகக்கேவலமாக இருப்பதும், தமிழக அரசு நிர்வாகத்தாலும் காவல்துறையாலும் அம்மக்கள் பூச்சி புழுக்களை விடவும் கேவலமாக நட்த்தப்படுவதும் வெளிச்சம், கண்கூடு. முள்ளிவாய்க்கால் கட்டிடத்தைவிடவும்  விடவும் உடனடியாகக் கவனிக்கப்பட வேண்டியது இதுதான். தமது தொப்புள்கொடி உறவுகளின் துன்பம் நீக்க தமிழ்த்தேசிய நெடுமாறன், வைகோ, சீமான் உள்ளிட்டோரும் இந்துதேசிய பொன்.ராதாகிருஸ்ணனும், அரசியல் தரகர் நடராசனிடம் பேசி ஜெயலலிதாவிடம் இதற்கான தீர்வு காணலாம்.

28) தொடர்ந்து இந்த 50 வருட வரலாற்றில் தமிழகத்தில் சாதீய மோதல்களில் செத்தவர்களின் எண்ணிக்கை பல நூறுகளைத் தாண்டுகின்றது. ஆதிக்கசாதியினரும் இடைனிலை சாதியினரும் இந்தியா எங்கும் இருப்பதைப்போல் தமிழகத்திலும் தலித்துக்களுக்கு எதிராக ஓரணியில் நிற்கின்றார்கள். இங்கே தமிழகத்தில் உள்ளவர்கள்- தலித்துக்கள், இஸ்லாமியர்கள், கிறித்துவர்கள், இதர சாதியினர் உள்ளிட்ட அனைவரும்- தொப்புள்கொடி உறவுகள் இல்லையா? தொப்புள்கொடி எங்கே அறுந்து போகின்றது? இங்கே அறுந்து போகும் தொப்புள்கொடி கடல்தாண்டி இலங்கைத்தமிழனை மட்டும் எவ்வாறு இணைக்கின்றது? 
தொடரும்...


வியாழன், நவம்பர் 21, 2013

தொப்புள்கொடிகளும் மலக்குடல்களும்-5

19) 1989இல் போடி, தேவாரம் கலவரத்தில் தேவேந்திர சாதி மக்களுக்கு எதிராக நடந்த சாதிக்கலவரத்தில் இந்து முன்னணி இருந்தது.

20) வாச்சாத்தி மலைவாழ் மக்கள் மீது வனத்துறையினரும் அரசு நிர்வாகமும் சேர்ந்துகொண்டு ஆடிய வெறியாட்டம் அநாகரீகத்தின் எல்லைக்கும் அப்பாற்பட்டது என்பது வரலாறு. இருபது ஆண்டுகளுக்கும் மேலாக நடந்த வழக்கு மார்க்சிஸ்ட் கட்சியாலும் அதன் சக அமைப்பான தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தாலும்தான் நடத்தப்பட்டது. தீர்ப்பு வெளியான அன்று அம்மக்கள் வெடித்து அழுதார்கள், தொலைக்காட்சிகளில் பார்த்தோம். அதே போல் ஆதிக்கசாதியினரால் கட்டப்பட்ட  உத்தப்புரம் சாதிச்சுவரை உடைக்க மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் புதுடெல்லியில் இருந்து வரவேண்டியிருந்தது. தலித்துக்களின்  சம்பந்தியும் தமிழன் சுபிட்சமாக இருக்க வேண்டும் என்ற ஒற்றை நோக்கோடு தண்டவாளத்தில் தலைவைத்தவரும் பாம்புகள் பல்லிகள் நடுவினிலே சிறைவாசம் செய்தவரும்தான் அப்போது ஆட்சியில் இருந்தார். அங்கே தலித்துக்களுக்கு எதிராக திமுக, அ இ அதிமுக, மதிமுக, பாமக, காங்கிரஸ், பிஜேபி உள்ளிட்ட அனைவரும் ஒன்று திரண்டு வரிந்துகட்டி நின்றதையும் தலித்துக்களுக்கு எதிராக மலையில் குடியேறி போராடியதையும் அவர்கள் குடியிருந்த இடத்தை காலி செய்த பின் அங்கே சாராய பாட்டில்களும் பிரியாணியின் மிச்சங்களும் வண்டிவண்டியாக குவிந்து கிடந்த அசிங்கத்தையும் தமிழகம் பார்த்தது.

21) தொடர்ந்து பரமக்குடியில் தலித்துக்களுக்கும் தேவர்களுக்கும் நடக்கும் மோதலில் அரசு நிர்வாகமும் போலீசும் தேவர்கள் பக்கம் நிற்பதை உலகம் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றது. தேவர் குருபூஜைக்கு போலீஸ் காவல் காப்பதும், இம்மானுவேல் சேகரன் குருபூஜை என்றால் முன்னதாகவே தலித் மக்களை கைது செய்து சிறையில் அடைப்பதும் துப்பாக்கி சூடு நடத்துவதும் தொடர்கதையாக உள்ளது. ஒரு தலித் தலைவனுக்கு ‘குருபூஜை என்ற சொல்லைக் கூட ஆதிக்கசாதியினரால் தாங்க முடியவில்லை!

22) தென் தமிழகம் இப்படியெனில் வட, வடமேற்கு தமிழகம் எங்கும் தலித்துக்களுக்கு எதிராக ஆதிக்க சாதியினரின் அணியை திரட்டி வருபவர் நவீன மர்டர் மருத்துவர் ராமதாசு. அதாவது இப்பகுதிகளில் தமிழர்களை சாதீய அடிப்படையில் பிரித்து கலகம் செய்கின்றவர்களின் தலைவர் அவர். அதன் உச்சகட்டத்தை தர்மபுரியில் பார்த்தோம்; திவ்யா என்ற தமிழ்ப்பெண்ணின் தந்தை கொலை செய்யப்பட்டார், இளவரசன் என்ற தமிழ் இளைஞன் கொலை செய்யப்பட்டான். ‘2016ஆம் ஆண்டில் வன்னியர் ஆட்சி அமைவதை எந்தக் கொம்பனாலும் தடுக்க முடியாது’  என்ற நவீன மர்டர் மருத்துவர் கூரை ஏறி கொக்கறிக்கின்றார். அதாவது இலங்கையில் தமிழர்களுக்கு தனிநாடாம், தமிழ்நாட்டில் ‘வன்னியர்கள் ஆள்வார்களாம்! கடல்கடந்த தனி ஈழத்தில் வன்னியர்களும் தலித்துக்களும் ஒரே தட்டில் சாப்பிட்டு ஒரு பாயில் படுத்து உறங்குவார்களாம்; தமிழ்நாட்டில் கோட்டையில் வன்னியன் கொடிகட்டி கோலோச்ச, தலித்துக்களுக்கு ரயில்தண்டவாளம்தான் அடைக்கலமாம்!  ஆஹா! இதுவல்லவோ ஆண்டபரம்பரையின் அற்புத தத்துவம்!


23) இப்போது விசயத்திற்கு வருவோம். நெடுமாறன், வைகோ, சீமான், தமிழருவி உள்ளிட்ட இவர்களின் எந்த ஒரு அறிக்கையிலும் தொப்புள்கொடி தொப்புள்கொடி என்ற சொல்லை மலைபோல அடுக்கிக்கொண்டே போகின்றார்கள். அது என்ன தொப்புள்கொடி? 

தொடரும்...

செவ்வாய், நவம்பர் 19, 2013

தொப்புள்கொடிகளும் மலக்குடல்களும்-4

14) இதனைத் தொடர்ந்து அதே மாவட்டத்தில் நடந்த புளியங்குடி கலவரத்திலும் தேவர்கள் போலீசோடு சேர்ந்து கொண்டு தேவேந்திர சாதி மக்களை தாக்கினர், அவர்களது வயல்களையும் வாழைத்தோப்புக்களையும் அழித்தனர். தேவேந்திரர்களை அரசு சிறையில் அடைத்தது. தீர்வு தேடிய தேவேந்திரர்களும் இஸ்லாமியர்களும் இணைந்து சகோதர சமத்துவ சங்கத்தை தொடங்கினர்.

15) 1982 ஜூன் 8 அன்று காயிதே மில்லத் பிறந்தநாள் விழாக்கொண்டாட்டத்தின்போது கலவரம் வெடித்தது. 15 தலித்துக்களும் 1 இஸ்லாமியரும் படுகாயம் அடைந்தனர். மறுநாள் 9ஆம் தேதி பேருந்துகளை நிறுத்தி தலித்துக்களையும் இஸ்லாமியர்களையும் தேவர்கள் தாக்கினர். 10ஆம் தேதி தேவர்கள் 1500 பேர் திரண்டு அய்யாபுரம், வெள்ளியக்கவுண்டன்பட்டி ஆகிய ஊர்களில் தேவேந்திரர்களைத் தாக்கி வீடுகளுக்கு தீயிட்டனர், கொள்ளையடித்தனர், காவல்துறை வேடிக்கை பார்த்தது. (30 வருடங்களுக்குப் பிறகு தர்மபுரியிலும் இதுதான் நடந்தது, தேவர்கள் இடத்தில் வன்னியர்கள், அவ்வளவே). 15 வயதுப் பையன், ஆறு வயதுக்குழந்தை, ஒரு கைக்குழந்தை உட்பட 10 தேவேந்திரர்கள் கொலை செய்யப்பட்டார்கள். இத்தோடு நிற்காமல் அடுத்த நாளும் புளியங்குடியை சுற்றியுள்ள கிராமங்களில் தேவேந்திரர், இஸ்லாமியர் வீடுகள் தீயிடப்பட்டன, கொள்ளையடிக்கப்பட்டன. பல கிராமங்களில் தேவேந்திரர்கள் கொலை செய்யப்பட்டார்கள். கலவரம் தொடங்கிய நாள் முதல் திட்டமிட்ட வகையில் காவல்துறை வேடிக்கை மட்டுமே பார்த்தது, அதாவது கலவரக்காரர்களுக்கு உதவி செய்தது.

16) மேற்கூறிய அனைத்துக் கலவரங்களிலும் தலித்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் எதிராக ஆதிக்க சாதியினரும் இடைச்சாதியினரும் இவர்களின் பிரதிநிதியான அரசு எந்திரமும் கூடவே மார்க்சிஸ்ட் கட்சியைத்தவிர காங்கிரஸ், ஆர் எஸ் எஸ், அ இ அதிமுக, திமுக என அனைவரும் ஒன்றுபட்டு நின்றனர்.

17) இதனைத்தொடர்ந்து 1982இல் கன்னியாகுமரி மாவட்டத்தில் உருவான  மண்டைக்காடு கலவரம். அங்குள்ள மீனவ கிராமம் புதூர். அந்த மக்கள் கத்தோலிக்கர்களாக மாறி 450 வருடங்கள் கடந்து விட்டன. அங்குள்ள கிறித்துவ மக்களும் இந்துக்களும் சகோதரர்களாகவே வாழ்ந்து வந்தனர். கிறித்துவ மக்கள் மண்டைக்காடு பஹவதி அம்மன் கோவில் திருவிழாவுக்கு வரும் பக்தர்களை விருந்தினராகவே உபசரித்து வந்தனர். அது போல மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கடலுக்கு புதூரில் கடலுக்கு சென்று நீராடி விட்டு  அருகிலுள்ள மேரி மாதா குருசடிக்கும் சென்று வணங்குவது வழக்கம். இன்னும் சொல்லப்போனால் மண்டைக்காடு பகவதி அம்மனும் மாதாவும் சகோதரிகளாகவே மக்கள் மனத்தில் பதிந்திருந்தார்கள். மதவெறியை அறியாத மக்களிடம் மண்டைக்காடு கலவரத்தின் மூலம் இந்துமுன்னணியும், ஆர் எஸ் எஸ்சும்  பிரிவினையை உருவாக்கின.

18) சென்னையில் இருந்த இல.கணேசன், இராமகோபாலன் போன்ற இந்துத்துவவாதிகள் மண்டைக்காடு கலவரத்திற்கு எட்டு மாதத்திற்கும் முன்னரே கன்னியாகுமரி மாவட்டத்தின் பல ஊர்களில் சுற்றித்திரிந்து ஆர் எஸ் எஸ் அமைப்பை உருவாக்கினர். ஆர் எஸ் எஸ் சாகாக்களில் மதவெறியும், பிற மதத்தவர் மீது பகையுணர்வும் பரப்பப்பட்டது. அதனைத் தொடர்ந்து நடந்த திட்டமிட்ட சதியும் கூட்டுமுயற்சியும் விளைவுமே மண்டைக்காடு கலவரம்.    மண்டைக்காடு கலவரம் நடந்தபோது எம்ஜிஆர்தான் ஆட்சியில் இருந்தார். ஆர் எஸ் எஸ் உள்ளிட்ட இந்துத்துவா இயக்கங்களுக்கு அவர் மறைமுக ஆதரவு தந்தார். உள்ளூர் ஆட்களோடு  கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வெளியே இருந்தவர்களும் இக்கலவரத்தை திட்டமிட்டு செய்தார்கள். 

தொடரும்....

திங்கள், நவம்பர் 18, 2013

தொப்புள்கொடிகளும் மலக்குடல்களும்-3

8) அதே மாவட்டத்தில் இளஞ்செம்பூர் கிராமத்தில் தேவர்-தேவேந்திரர் பகை 1949ஆம் ஆண்டு கலவரமாக வெடித்ததில் ஒரு தேவரும் நான்கு தேவேந்திரர்களும் கொல்லப்பட்டனர்.

9) அன்றைய திருநெல்வேலி மாவட்டம் ஆழ்வார்திருநகரி அருகே உள்ள செய்யூர் கிராமத்தில் 1950களில் தொடக்கத்தில் தம் ஆதிக்கத்திற்கு கீழ்ப்படிய மறுத்த இரண்டு தேவேந்திரர்களை தேவர்கள் 1953 ஏப்ரல் 26 அன்று படுகொலை செய்தார்கள்.

10) 1969, 1978ஆம் ஆண்டுகளில் இந்து மதத்துக்கே உரிய கொடுமையான தீண்டாமையில் இருந்து விடுதலை பெற இஸ்லாமியத்துக்கு மாறிய தேவேந்திரர்கள் கொலை செய்யப்பட்டனர்.

11) திருநெல்வேலி மாவட்டம் தென்காசி அருகே உள்ள மீனாட்சிபுரம் என்ற ஊரில் தேவேந்திர சாதியினரான சுமார் 180 குடும்பங்கள் (சுமார் 1500 பேர்) 1981 பிப்ரவரி, மே மாதங்களில் தேவர் சாதியினரின் கொடுமைகளை தாங்காது இந்துமதத்தில் இருந்து வெளியேறும் முகமாக இஸ்லாத்தை தழுவினர். இச்சம்பவம் சாதீயத்தையும் தீண்டாமையையும் கட்டிக்காக்கும் ஆதிக்கசாதியினரையும் இந்துதுவாவாதிகளையும் அச்சப்படுத்தியது. தொடர்ந்த வன்முறையில் 10 தேவேந்திரர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இதனைத்தொடர்ந்து ஆர் எஸ் எஸ், விஷ்வ ஹிந்து பரிஷத் போன்ற இந்து தீவிரவாதிகள் மீனாட்சிபுரத்திற்குள் நுழைந்தனர். ‘மறுமதமாற்றம் என்ற முழக்கத்தோடு வி.இ.பரிஷத் அக்கிராமத்தில் இருந்த பார்ப்பன ஜமீன்தார் உதவியுடன் நுழைந்தது.

12) சாதி என்ற செங்கற்களால் கட்டப்பட்ட இந்துமதத்தின் அதிபிற்போக்குவாதம்தான் தீண்டாமை என்பதை சாமானிய இந்து மட்டும் அல்ல, எந்தக்காலத்திலும் நான் ரொம்ப முற்போக்கு இந்துவாக்கும் என்று சொல்லிக்கொள்ளும் எந்த ஒரு இந்துமதத்தலைவரும் கூட ஒத்துக்கொண்டதில்லை; தவிர தமது மதத்தின் பிடியில் இருந்து ஒரே ஒரு இந்து வெளியேறினாலும் பதட்டம் அடைகின்றார்கள்; சாதிக்கட்டுமானத்தில் இருந்து ஒரேஒரு செங்கல் உருவப்பட்டாலும் ஏற்படும் பதட்டமே இது. அரபு நாடுகளில் சம்பாதித்த பணத்தைக்காட்டி மதம் மாற்றியதாக (அக்காலகட்டத்தில் தமிழகத்தில் அத்தனை பிரபலம் ஆகாத) வாஜ்பேயி, சுப்பிரமண்யஸ்வாமி, அப்பகுதியின் ஆர் எஸ் எஸ் தலைவர் ரெங்கசாமித்தேவர் உள்ளிட்டோர் அசிங்கமான பிரச்சாரம் செய்தனர். ஆனால் மறுபுறம் வாஜ்பாய் போன்றோர் அந்த மக்கள் மீண்டும் இந்து மத்தை தழுவினால் ஆளுக்கு ஒரு இலட்சம் ரூபாய் தருவதாக ஆசை காட்டினார்கள். இந்திய அரசு நியமித்த விசாரணை கமிசன், தமிழக அமைச்சர் என பலர் பேசியும் எடுத்தமுடிவில் மாறாமலே இருந்தனர் அம்மக்கள்.  எனவே அப்பகுதியில் தொடர்ந்து திட்டமிட்டு இஸ்லாமிய மக்கள் மீதும் தலித் மக்கள் மீதும் ஆர் எஸ் எஸ் போன்ற இந்துத்துவா தீவிரவாத அமைப்புக்கள் தேவர் சாதியினரை தூண்டிவிட்டு கலகங்கள் செய்தார்கள். ஒரு எளிய கேள்வியை ஆர் எஸ் எஸ் பரிவார் முன்பும் நவீன மர்டர் மருத்துவர் முன்பும் வைக்கின்றோம்:  இஸ்லாத்தில் இருந்தும் கிறித்துவத்தில் இருந்தும் இந்து மதத்திற்கு மாறினால் இருக்கின்ற ஆயிரம் சாதியில் எந்த சாதியில் கொண்டுபோய் வைப்பீர்கள்?

13) மீனாட்சிபுரத்தை முன்மாதிரியாகக் கொண்டு மேலும் பல ஊர்களில், பகுதிகளில் மக்கள் இந்து மதத்திலிருந்து வெளியேறிவிடுவார்கள் என்று இயற்கையாகவே பயந்த ஆர் எஸ் எஸ் தனது சூழ்ச்சிகர நடவடிக்கைகளை எடுக்கத் துவங்கியது. மக்களை மத அடிப்படையில் வெறியூட்டி, மத அடிப்படையில் ஒருங்கிணைப்பது என்ற யுக்தியை கையில் எடுத்தது ஆர் எஸ் எஸ்.   இராம.கோபாலனைக் கொண்டு இந்து முன்னணி என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது என்பதைக் குறிப்பிட வேண்டும்.

தொடரும்....

ஞாயிறு, நவம்பர் 17, 2013

தொப்புள்கொடிகளும் மலக்குடல்களும்-2

4) ஆதிஆந்திரர் தொடங்கி வேட்டுவன் வரையிலான 80க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர்களும், ஆதியன் தொடங்கி உரளி வரையிலான 40க்கும் மேற்பட்ட பழங்குடியினரும், அகமுடையாரில் தொடங்கும் சுமார் 150 சாதிக்கும் மேற்பட்ட பிற்படுத்தப்பட்ட வகுப்பினரும், ஆண்டிப்பண்டாரத்தில் தொடங்கி யோகீஸ்வர்ர் வரையிலான சுமார் 40 சாதி மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியினரும், சுமார் 60 சாதி சீர்மரபினரும், 70க்கும் மேற்பட்ட முற்பட்ட சாதியினரும் (இந்தப் பட்டியலில் ஆண்ட பரம்பரையினரான வன்னியர், கவுண்டர், கொங்குவேளாளர், நாயக்கர், நாயுடு, கள்ளர், மறவர், சேர்வை, அகமுடையார் ஆகியோரும், காலம் காலமாக  அடக்கப்பட்ட பரம்பரையினரான  பள்ளர், பறையர், தேவேந்திரகுல வேளாளர், அருந்ததியர் உள்ளிட்ட பாவப்பட்ட ஜென்மங்களும், கூடவே தேர்தல் ஆதாயங்களுக்காகவும் உள்ளூர் ஆதாயங்களுக்காகவும் தீவிரவாதிகளாக்கப்படும் முஸ்லிம் மக்களும், கிறித்துவர்கள் உள்ளிட்ட சிறுபான்மை மக்கள் அனைவரும் அடங்குவர்)    தமிழர்களே என்ற கோட்பாட்டை நெடுமாறன், வைகோ, தமிழருவி மணியன் போன்றோர் ஏற்றுக்கொண்டால் பல கேள்விகளுக்கு அவர்கள் பதில் சொல்ல வேண்டியிருக்கும்.
5) பழ.நெடுமாறன் முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்ன திறப்பு விழாவுக்கான அழைப்பில் தஞ்சை பெரிய கோவில் என்பது தமிழனுடைய வெற்றியின் ஒரு சின்னம், அது கலைக் கோவில் என்று கூறுகின்றார். நாம் பெரிய கோவிலின் கலை நுட்பத்தை வியந்து போற்றுவோம்; ஆனால் ராஜராஜ சோழன் ஒரு சைவ வெறியன் என்பது நெடுமாறன் அவர்கள் அறியாதது அல்ல; அவ்வாறிருக்க அது தமிழர்களின் பொதுச்சின்னமாக எப்படி ஆகும்? வெற்றிச்சின்னம்? நெடுமாறன் சொல்லும் ‘தமிழர்களில் யார் யாரெல்லாம் அடக்கம்? யாரை வென்ற வெற்றிச்சின்னம்? சாதீய சைவத்துக்கு எதிராக இருந்த சமணர்களையும் பிறரையும் ஒழித்துக்கட்டியதன் வெற்றிச்சின்னமா? இரண்டாம் ராஜராஜன் என்ற பட்டம் வேறு நெடுமாறனுக்கு சூட்டப்பட்டதாம்! ‘ஆண்ட பரம்பரை நாம் என்று நவீன மர்டர் மருத்துவரும் ஊர் கொளுத்தியும் வெறியுடன் பேசுவதுதான் இங்கு நினைவுக்கு வருகின்றது. ஜனநாயகத்தில் நம்பிக்கையற்ற சாணிப்பால், சவுக்கடி, தீண்டாமை நிலப்பிரபுத்துவ சிந்தனையின் பிடியில் இருந்து நெடுமாறனும் விடுபடவில்லை என்று சொல்லலாமா?

6) தஞ்சையில் கீழ்வெண்மணியில் 44 தலித் மக்கள் உயிரோடு ஆதிக்கசாதியினரால் தீவைத்து கொல்லப்பட்ட சம்பவமும் இதுபோன்றதுதான்; கம்யூனிஸ்டுக்கள் தலித் மக்கள் பக்கம் நின்றனர்; கட்சிகள் வேறாக இருந்தாலும் தலித்துக்களின் எதிரிகள் என்ற ஒற்றைப்புள்ளி ஆதிக்கசாதிகள்  நிறைந்த அனைத்துக்கட்சியினரையும் ஓரணியில் வைத்த்து; நீதிமன்றமும் ‘கார் வைத்திருக்கின்ற ஒரு பெரிய மனுசன் தானே நேரடியாக தீவட்டி எடுத்துசென்று குடிசைக்கு தீ வைத்தது நம்பும்படியாக இல்லை என்று தீர்ப்பு சொன்னது; ‘செவப்பா இருக்குறவன் பொய் சொல்ல மாட்டான்டா என்ற நவீன சினிமா டயலாக்குக்கு இந்த தீர்ப்புத்தான் அடிப்படையோ என்ற சந்தேகம் வருகின்றது. இது குறித்து இன்று ஒரே நேர்கோட்டில் நிற்கின்ற பழைய தொப்புள்கொடிகளான நெடுமாறன், வைகோ, தமிழருவி மணியன், புதிய தொப்புள்கொடியான பொன்.ராதாகிருஷ்ணனின் கருத்து என்ன?

...தொடரும்

தொப்புள்கொடிகளும் மலக்குடல்களும்-1


1) 2014ஆம் ஆண்டு நடக்கவுள்ள நாடாளுமன்றத்தேர்தலுக்கான அணிசேர்க்கை தீவிரம் அடைந்துள்ளது. இதுவரை இந்தியா கண்டிராத ஒண்ணாம் நம்பர் ஊழல் அரசாக, மக்கள் விரோத அரசாக தற்போதைய காங்கிரஸ் கூட்டணி அரசு பெயரும் புகழும் பெற்றுள்ளது. காசு கொடுத்தால் ஓட்டு தானாகவே வந்து விழும் என்ற கொள்கையில் நம்பிக்கை வைத்து தொடர்ந்து இந்த அரசை காங்கிரஸ் நடத்திக்கொண்டு போவதாகவே படுகின்றது.

2) தனது அணியில் இருந்து இரண்டு கட்சிகளைத் தவிர அனைத்துக் கட்சிகளும் தன்னைக் கைகழுவிவிட்ட நிலையில் எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலைக்கு ஆர் எஸ் எஸ்சின் கொடுக்கான பிஜேபி வந்துள்ளது என்பதை நரமாமிச மோடிதான் பிரதமர் என்று அறிவித்துவிட்டு இப்போது திரும்பிய திசையில் எல்லாம் எதிர்வரும் பல கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் பிஜேபி திணறுவதில் இருந்து தெரிகின்றது. கார்ப்பொரேட்டுக்களின் பணப்பெட்டிகள் எப்போதும் திறந்தே இருப்பது, அச்சு ஊடகம், டிவி ஊடகம் என்ற இரண்டு பிரதான கருவிகளும் வெளிப்படையாகவோ பல்வேறு பினாமிகள் பெயரிலோ இதே கார்பொரேட்டுக்களின் கையில் இருப்பது, இந்த ஊடகங்களின் வழியே ஒரு பொய்யை பத்து முறை சொல்லி உண்மையாக ஆக்கிவிடலாம் என்ற ஆர் எஸ் எஸ்+பிஜேபியின் தத்துவ ஆசான் ஹிட்லரின் ஒண்ணாம் நம்பர் தத்துவம் ஆகிய மூன்று பெரும் நம்பிக்கைகள் மட்டுமே கார்ப்பொரேட்டுக்களின் கனவு நாயகனும் வளர்ச்சி புருஷனும் ஆன நரமாமிச மோடிக்கு தினமும் தூக்கத்தை தரும் அரும் மருந்துகள் என்பதில் சந்தேகத்துக்கே இடமில்லை.  ஆனால் இந்தியாவில் தேர்தல் முடிவுகளை கார்ப்பொரேட்டுக்களும் கூடுகின்ற கூட்டமும் மட்டுமே நிர்ணயித்துவிடவில்லை என்பதை கடந்த காலத்தில் மக்கள் மெய்ப்பித்துள்ளார்கள். தன் குடும்ப உறுப்பினர் எண்ணிக்கையே பத்து இருக்க, உள்ளூர் கவுன்சிலர் தேர்தலில் வெறும் ஐந்து, ஆறு வாக்குகள் மட்டுமே பெற்று குடும்பச்சண்டை நாறிய வேட்பாளர்களும் இருக்கின்றார்கள் என்பது வேறு எதைக் காட்டுகின்றது?

3) பிஜேபி தலைமையில் ஆன தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்த 20க்கும் மேற்பட்ட கட்சிகள் இப்போது பிஜேபியை விட்டு விலகிய நிலையில் தமிழகத்தில் திமுக (காங்கிரஸை விட்டு திமுக விலகாது, 2ஜி தொப்புள்கொடி கன்னாபின்னாவென கழுத்தைச் சுற்றிக் கிடக்கின்றது. மத்தியில் மந்திரிசபையில் இருந்து விலகியபோதும் நாடாளுமன்றத்தில் காங்கிரஸுக்கு ஆதரவாகத்தான் திமுக இப்போதும் நடந்து வருகின்றது), அ இ அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளோடும் தேர்தல் உறவுக்கு வாய்ப்பில்லை என்று உறுதியான பின், உணர்ச்சிமயமான இலங்கை விசயத்தைக் கையில் எடுத்து இங்கே அரசியல் நடத்த பிஜேபி முயற்சி செய்து, தமிழருவி மணியனை முதலில் கைக்குள் போட்டது; அவர் வழியே வைகோவை வளைத்தது;  பிஜேபியின் இந்துத்துவா தீவிரவாதத்துக்கு முற்றிலும் உடன்பாடான சாதீயக்கோட்பாட்டுக்கு  தமிழகத்தில் முழுப்பாதுகாவலராக உள்ள ராமதாசு, 2104 தேர்தலுக்கான கூட்டணி திமுகவுடனும் இல்லை அ இ அதிமுகவுடனும் இல்லை என்று தெளிவான நிலையில் இலங்கைப்பிரச்னையை கையில் எடுத்துக்கொண்டு இயல்பாக இந்த அணியில் இணைகின்றார்.  ஆக ஒரு புதிய தொப்புள்கொடி உறவுக்கு தமிழகத்தில் கால்கோள் இடப்பட்டுள்ளது. இந்த புதிய தொப்புள்கொடி அணி சேர்க்கையின் பின்னால் பிஜேபி உள்ளது என அன்றாடம் செய்தித்தாள் வாசிக்கின்ற எந்த ஒரு சாமானியனுக்கும் தெரியும். அவ்வாறிருக்க ஏதோ இலங்கைத்தமிழர், தொப்புள்கொடி, ஈழம் போன்ற உணர்ச்சிமிகு வார்த்தைகளைப்போட்டு முள்ளிவாய்க்கால் முற்றம் என்ற பெயரில் 2014 தேர்தலை மனத்தில் கொண்டு தமிழகத்தில் பாரதீய ஜனதா கட்சியின் அணிசேர்க்கைக்கு பந்தக்கால் நடும் நெடுமாறன், வைகோ, தமிழருவி மணியன், சீமான் போன்றோர் தமிழ்நாட்டு மக்களை ஏமாற்ற முடியாது. தொடர்ந்து விஜயகாந்த் வருவார் என்றும் சொல்கின்றார்கள். 

தொடரும்...

திங்கள், நவம்பர் 04, 2013

ஆதாரின் பின்னால் மறைந்திருக்கும் அபாயங்கள்

1)                குற்றப்பரம்பரைச்சட்டம் (Criminal Tribes Act):

இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சியின்போது வெவ்வேறு காலகட்டங்களில் நிறைவேற்றப்பட்ட குறிப்பிட்ட சமூகத்தினருக்கு எதிரான சட்டம் ஆகும்.
முதன்முதலாக 1871இல் இயற்றப்பட்ட இச்சட்டம் பெரும்பாலும் வட இந்திய சமூகத்தவரையே அதிக அளவில் குறிவைத்து உருவாக்கப்பட்டதாகும். பின்னாளில் வங்கமாகாணத்திற்கும் 1876இல் அமலாக்கப்பட்டது. அதன்பின்  1911இல் சென்னை மாகாணத்தில் அமலாக்கப்பட்டு பல திருத்தங்களுக்கு உள்ளாகி கடைசியாக குற்றப்பரம்பரைச்சட்டம் (1924ஆம் ஆண்டின் ஆறாவது திருத்தம்) என இந்தியா முழுவதும் அமலானது.
குறிப்பிட்ட சமூகத்தவரை ஒடுக்கவும் குலத்தொழிலாக திருட்டு போன்ற சமூக விரோத காரியங்களில் ஈடுபடுவோரை சிறையில் அடைக்கவும் இச்சட்டம் வழிசெய்தது. இச்சட்டத்தின் கீழ் வரும் சமூகத்தவர் குழந்தைகள் தவிர்த்த ஆண்கள் அனைவரும் அருகில் உள்ள காவல்நிலையத்தில் வாரம் ஒருமுறை தங்கள் இருப்பை பதிவு செய்ய வேண்டும்.
தமிழகத்தில் முக்குலத்தோர் என்று சொல்லப்படும் கள்ளர், மறவர், பிரமலைக்கள்ளர், வலையர், கேப்மாரி, அகமுடையோர் என 89 சாதிகள் குற்றப்பரம்பரைச்சட்டத்தின் பட்டியலில் இருந்தனர்.

2) கைரேகைச்சட்டம்:

குற்றப்பரம்பரைப்பட்டியலில் கொண்டுவரப்பட்ட சாதி ஆண்கள் 16 முதல் 60 வயதானவர்கள் காவல் கண்காணிப்பில் இருப்பார்கள்.அவர்களிடம் நாள்தோறும் கைரேகை பதிவு செய்யப்படும். பெரும்பான்மையான நேரங்களில் அவர்கள் காவல்நிலையத்திலேயே தூங்குமாறும் அங்கேயே இருக்குமாறும் கட்டாயப்படுத்தப்பட்டனர்.
இச்சட்டத்தை எதிர்த்து பல்வேறு கட்டங்களில் தனிநபர்களும் இயக்கங்களும் தொடர்ந்து போராட்டங்களை நடத்தியுள்ளனர், காவல்துறை அடக்குமுறையில் உயிர் இழந்துள்ளனர். இறுதியாக 1947 ஏப்ரலில் சென்னை மாகாண உட்துறை அமைச்சராக இருந்தவரும் பெரியாரின் ஆதரவாளரும் சுயமரியாதை இயக்கத்தலைவர்களில் ஒருவருமான டாக்டர் பி.சுப்பராயன்தான் இக்கொடிய சட்டத்தை ஒழிக்கும் சட்டமுன்வடிவை ஆளுனருக்கு சமர்ப்பித்து 1947 ஜூன் 5ஆம் நாளில் ஆளுனர் ஒப்புதலுடன் குற்றப்பரம்பரைச்சட்ட்த்தை ஒழித்தார்.

3)             தென் ஆப்பிரிக்காவில் ஆசியர்கள் பதிவுச்சட்டம் 1906 (The Asiatic Registration Act):

நூறு வருடங்களுக்கு முன்பான தென் ஆப்பிரிக்க வரலாறு இது. இச்சட்டத்தின்படி இந்தியர்களும் சீனர்களும் அரபு மக்களும் துருக்கியரும் ஆசியர்களாக கருதப்பட்டனர்; இவர்கள் ஒவ்வொருவரும் தம்மை அரசிடம் பதிவு செய்துகொள்ள வேண்டும்; ஒரு அடையாள அட்டையில் கையின் பெருவிரல்ரேகை பதிவுசெய்யப்பட்ட சான்றிதழை எப்போதும் தன் கைவசம் வைத்திருக்க வேண்டும்.
எட்டு வயதிற்கு மேற்பட்ட ஆசிய ஆண்கள் பெண்கள் ட்ரான்ஸ்வால் நகரில் குடியிருக்கவேண்டுமெனில் ஆசியர்களுக்கான பதிவாளரிடம் தம்மைப் பதிவுசெய்துகொள்ள வேண்டும். பதிவு செய்யாதவர்கள் தண்டிக்கப்படுவார்கள்; அபராதம் விதிக்கப்படும்; சிறையில் அடைக்கப்படுவார்கள், நாடுகடத்தப்படுவார்கள்.
மஹாத்மா காந்தி அப்போது தென் ஆப்பிரிக்காவில் இருந்தார்; 1906 செப்டம்பர் 11 அன்று காந்தி 3000 இந்தியர்களைத் திரட்டி இச்சட்டத்திற்கு எதிராக ஒரு பொதுக்கூட்டத்தை கூட்டினார். “இச்சட்டம் இந்தியர்களுக்கு எதிரான வெறுப்புணர்வை மையமாகக்கொண்ட்து; இச்சட்டத்தை ஏற்றுக்கொண்டால் தென்னாப்பிரிக்க இந்தியர்கள் வேரோடு அழிவார்கள்; இச்சட்டத்தை எதிர்ப்பதானது வாழ்வா சாவா என்ற போராட்டமேஎன அறிவித்தார். நீண்ட ஏழு வருடங்கள் போராட்டத்திற்குப்பின் ஜெனரல் ஜான் கிறிஸ்டியன் ஸ்மட்ஸ் காந்தியுடன் பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக்கொண்டார்.
1871இல் இந்தியாவில் வந்த சட்டம், 1906இல் தென்னாப்பிரிக்காவில் வந்த சட்டம் இரண்டுமே மனிதர்களின் தன்மானத்தில் கைவைத்த அடக்குமுறைகளே; ஒரு மனிதனின் கைரேகை இன்னொரு மனிதனின் ரேகையை ஒத்திருப்பதில்லை; அடிப்படையில் கிரிமினல் குற்றவாளிகளை கண்டுபிடிக்க உதவும் ஒரு உத்திதான் கைரேகை என்பது. ஒரு மனிதனின் கைரேகையை அடக்குமுறையால் அரசு ஆவணத்தில் பதிவுசெய்வது என்பது ‘நீ குற்றவாளியோ இல்லையோ, அது பற்றி கவலை இல்லை, உன் கைரேகை அரசிடம் உள்ளது, எனவே எல்லா நேரங்களிலும் அரசின் கண்காணிப்பில் உள்ளாய் என்பதை மறக்காதே; நீ குற்றவாளியாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் குற்றம் நடக்கின்ற இடங்களில் பெறப்படும் கைரேகையோடு உன் கைரேகையும் ஒப்பிட்டுப்பார்க்கப்படும்என்று அச்சுறுத்துவதோடு தனிமனிதனை அவமானப்படுத்துவதும் ஆகும். அதாவது எப்போதும் முதுகுக்குப்பின்னால் ஒரு போலீஸ்காரன் நின்றுகொண்டு ஒரு மனிதனின் எல்லா நடவடிக்கைகளையும் 24 மணி நேரமும் கண்காணிப்பதன்றி இது வேறில்லை.

4) ஆதார் அடையாள அட்டை:

தற்போதைய மன்மோஹன் சிங், சிதம்பரம், மாண்டேக்சிங் அலுவாலியா கும்பலால் நட்த்தப்படும் மத்திய அரசு ஆதார் அடையாள அட்டை என்ற ஒரு அட்டையை கூவிக்கூவி வாங்கச்சொல்கின்றது; கைரேகையோடு, கண்ணின் கண்மணியையும் பதியச்சொல்கின்றது; ஆதார் அடையாள அட்டை இல்லாமல் இனி எந்த ஒருமனிதனும் இந்தியாவில் சாப்பிட முடியாது,  மலஜலம் கழிக்க முடியாது, தூங்க முடியாது, தெருவில் நடமாட முடியாது, மனைவியுடன்/கணவனுடன் உறவுவைத்துக்கொள்வது கூட கஷ்டம்தான் என்ற ரீதியில் பரப்பப்படும் பிரச்சாரத்தை காணும்போது தலை சுற்றுகின்றது; ‘நாங்கள்தான் உலகத்திலேயே ஆகப்பெரும் ஜனநாயக நாடுங்கோஎன்ற காதைக்கிழிக்கும் குடுகுடுப்பைச் சத்தம் வெறும் வெத்துவேட்டுச்சத்தம் என்று மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்படுகின்றது.   
-ஆதார் நாடாளுமன்ற நிலைக்குழுவால் (Parliament Standing Committee) நிராகரிக்கப்பட்ட ஒன்று
-ஆதார் என்பது கட்டாயம் அல்ல; அது தனி நபரின் விருப்பத்தைப் பொறுத்தது (It is voluntary) என்று ஆதார் குறித்த இணையதளமே சொல்கின்றது.
-ஆதார் அட்டையில் ஒரு நபரின் உயிரியல் கூறுகளான கைரேகையோடு கண்ணின் கண்மணியும் பதியப்படும்.

5) இந்திய அரசியலமைப்புச்சட்டத்துக்கு எதிரானது:

இந்திய அரசியலமைப்புச்சட்டம் சரத்து 21 கூறுவது: No person shall be deprived of his life or personal liberty except according to procedure established by law.  ‘எந்த ஒரு மனிதருக்கும் அவர் உயிருடன் வாழும் உரிமையையோ அவரது சுதந்திரத்தையோ பறித்தலாகாது; சட்டத்தின் அடிப்படையிலான நடவடிக்கைகளின் பேரில் மட்டுமே இந்த உரிமையோ சுதந்திரமோ மறுக்கப்படலாம்’.  ஆதார் நாடாளுமன்றத்தால் ஒப்புதல் வழங்கப்படாத ஒரு அட்டை, ஆதார் நிறுவனம் ஒரு அரசு நிறுவனமே அல்ல என்ற நோக்கில் பார்த்தாலும் சரி, ஒப்புதல் வழங்கப்பட்ட ஒன்று, அரசு நிறுவனமே என்று வைத்துக்கொண்டாலும் கூட   இச்சரத்தின்படி ஒரு தனிமனிதனின் கைரேகையையோ கண்மணியின் பதிவையோ பதிவு செய்வது என்பது அவனது தனி மனித சுதந்திரத்தில் தலையிடுவதும் 21ஆவது சரத்தை மீறுவதும் ஆகும். இத்தகைய பின்னணியில் அடிப்படையான கேள்விகள் சில எழும்புகின்றன:
1.       ஆதார் அட்டை கொடுக்கும் பொறுப்பை ஏற்றுள்ள நிறுவனம் ஒரு அரசு நிறுவனமே இல்லை என்பது முக்கியம்; இத்தகைய ஒரு அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்பதை கொள்கை அளவிலே கூட மத்திய நிதியமைச்சகத்தின் நாடாளுமன்ற நிலைக்குழு நிராகரித்துவிட்ட்து என்பதை அழுத்தமாக சொல்லவேண்டியுள்ளது.  இன்ஃபொசிஸ்           என்ற தகவல்தொழில் நிறுவனத்தில் வேலை செய்த நந்தன் நீல்கேணி என்பவர் இந்த நிறுவனத்தின் தலைவராம். அரசு நிறுவனமே இல்லை என்றால் இவர் அரசு ஊழியரும் இல்லைதானே? அப்படியெனில் இந்தியாவில் குடியிருக்கும் ஒவ்வொரு மனிதரின் கைரேகையையோ விழிப்பதிவையோ பதிவு செய்யும் உரிமையை அரசியலமைப்பு சட்டத்தை மீறி அவர் எங்கிருந்து பெறுகின்றார்?
2.       இந்த நீலகேணி என்ற தனிநபர் தான் திரட்டும் தகவல்களை எங்கே வைக்கின்றார்? தகவல்களைத் திரட்ட அவரால் நியமிக்கப்படும் நபர்களும் அரசு ஊழியர்கள் இல்லை என்றால் திரட்டப்படும் தகவல்களுக்கு இவர்கள் எந்த வகையில் எந்த அளவுக்கு பொறுப்பாளி ஆகின்றார்கள்?
3.       நீலகேணி உள்ளிட்ட இந்த காண்ட்ராக்ட் தொழிலாளிகளிடம் இந்திய மக்களை வற்புறுத்தி கைரேகை விழிப்பதிவு ஆகியவற்றை பதிவு செய்யச்சொல்லும் அரசு சட்டத்தை மீறும் அரசு ஆகாதா?
4.       இந்த காண்ட்ராக்ட் தொழிலாளிகள் தாங்கள் திரட்டும் தகவல்களை பிற தனியார் நிறுவனங்களுக்கோ பிற நாடுகளுக்கோ விற்க மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்?
5.       போலீஸ், ராணுவம், உளவுத்துறை போன்ற அமைப்புக்கள் இத்தகைய தகவல்களைப் பெற முடியுமா? கேட்டும் கேட்காமலும் பெறலாம் என்றால் இத்தகவல்களை எதற்காகவெல்லாம் பயன்படுத்த முடியும்?
6.       தனது தனிபட்ட உயிரியல் தகவல்களைக் கொடுத்த ஒருவர் பிற்பாடு  தனது தகவல்களை அழிக்க வேண்டும் என விண்ணப்பித்தால் அழிக்கப்படுமா?

6) உச்சநீதிமன்றத்தீர்ப்பு:

ஆதார் அடையாள அட்டை பெறுவதை கட்டாயமாக்குவதை எதிர்த்து கர்நாடகா மாநிலத்தின் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த புட்டஸ்வாமி அவர்களும் பிறரும் உச்சநீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் உச்சநீதிமன்றம் சரியாகவே தீர்ப்புச்சொல்லியுள்ளது. அவர்களின் வாதம் இவ்வாறு இருந்தது:   ஆதார் என்பது அரசியலமைப்புச்சட்டத்துக்கு எதிரானது, ஏனெனில் அடிப்படை உரிமையான உயிர் வாழ்வதற்கான உரிமையை வழங்குகின்ற  இந்திய அரசியலமைப்புச்சட்டம் சரத்து 21க்கு எதிரானது என்பதால் ஒரு மனிதனின் தனிப்பட்ட விவகாரத்திற்குள் அத்து மீறுவதாகும்.  ஆதார் அட்டை வாங்குவது ஒருவரின் விருப்பத்தைப் பொருத்தது என்று அரசு ஒரு பக்கம் சொல்லிக்கொண்டே மறுபுறம்  உணவுப்பாதுகாப்பு, சமையல் எரிவாயு, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (ப்ராவிடெண்ட் ஃபண்ட்) நிதி, அரசு நிதி உதவி நேரடியாக பயனாளியின் கணக்கிற்கு வருகின்ற திட்டங்கள் ஆகியவற்றுக்கு ஆதார் அட்டை அவசியம் என்று சொல்வது முரணானது.

கட்டாயம் இல்லாத ஒரு அட்டையை சமையல் எரிவாயு சிலிண்டர் பெறவும், அரசின் உதவித்திட்டங்கள் பெறவும் கட்டாயமாக்குவது செல்லாது என்பதே அத்தீர்ப்பு. கட்டாயம் இல்லாத ஒரு அட்டையை சமையல் எரிவாயு பெற கட்டாயப்படுத்துவது மறைமுகமாக மானிய எரிவாயு சிலிண்டர்களையும், ரேசன் முறையையும், கல்விக்கடன், விவசாயிகளுக்கான கடன், இன்னபிற சாமானிய மக்களுக்கான அரசின் உதவித்திட்டங்களையும் ஒழித்துக்கட்டும் ஒரு முயற்சிதான் என்பதையும் எச்சரிக்கையுடன் கவனிப்போம்.

7)எட்வர்ட்  ஸ்னோடென்னும்  சல்மான் குர்ஷித்தும்:...

அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ.(CIA)யில் 2009 வரை தொழினுட்ப உதவியாளராக வேலை செய்தவர்; மேலும் அதிரகசிய அமெரிக்க உளவு நிறுவனமான நேஷனல் செக்யூரிட்டி ஏஜென்சி (NSA)யின் காண்ட்ராக்ட் கம்பெனிகளான பூஸ் ஆல்லன் ஹாமில்டன் உள்ளிட்டவற்றில் வேலை செய்தவர்; எட்வர்ட் ஸ்னோடென் ஒரு நாள் தன் வேலையை உதறிவிட்டு வெளி உலகுக்கு சொன்ன சேதிகள் அதிர்ச்சி அளிப்பவை: என் ஒரே நோக்கம் என்னவெனில் அமெரிக்க மக்களின் பெயரால் அமெரிக்க அரசு என்னவெல்லாம் செய்து கொண்டிருக்கின்றது, உண்மையில் அவர்களுக்கு எதிராக அந்த அரசு என்ன செய்து கொண்டிருக்கின்றது என்பதை பகிரங்கப்படுத்த வேண்டும்”. ஒரு நிலையான வேலையும் நிறைவான ஊதியமும் அமைந்த வாழ்க்கையை உதறித்தள்ள முடிவு செய்ததற்கு அவர் சொன்ன காரணம்: “அனைத்தையும் உதறித்தள்ள நான் தயார்; இப்படியான ஒரு பிரமாண்டமான ரகசிய ஒற்றறியும் அரசு எந்திரத்தை உருவாக்கி, உலக மக்கள் அனைவரது அடிப்படை சுதந்திரத்தையும் தனிநபர் விவகாரங்களையும் உலகத்தில் உள்ள அனைத்து மக்களையும், தனக்கு வேண்டப்பட்டவர்கள் எதிரிகள் என யாரையும் விட்டுவைக்காமல் அவர்களை எப்போதும் உளவு பார்த்துகொண்டே இருக்கின்றது; தன் சொந்த நாட்டு மக்களையும் எப்போதும் கண்காணித்துக் கொண்டே இருக்கின்றது. இத்தகைய ஒரு பணியில் அமெரிக்காவுக்கு உதவ என் மனச்சாட்சி இடங்கொடாது”. ஸ்னோடென் இப்போது அமெரிக்காவால் வேட்டையாடப்படும் ஒரு நபர், ரஷ்யாவில் தஞ்சம் புகுந்துள்ளார்.
சமீபத்தில் ஜெர்மனிய அதிபரின் கைபேசியை பல வருடங்களாக அமெரிக்கா ஒட்டுக்கேட்டதாக செய்திகள் வந்துள்ளன; உலக ரட்சகன் ஒபாமா இது குறித்து சற்றும் அலட்டிகொள்ளவில்லை; ‘அப்படியா?என்று கொட்டாவி விட்டுக்கொண்டுள்ளார்; உண்மையில் அவரது உத்தரவின்பேரில்தான் இந்த ஒட்டுகேட்கும் வேலைகள் நடந்துள்ளன; இப்படி ஒரு செய்தி வெளியானதும் நேரடியாக ஒபாமாவிடம் தொடர்பு கொண்ட ஜெர்மனிய அதிபர் ஏஞ்ஜெலா மெர்கெல் தனது கண்டனத்தை தெரிவித்ததுடன், ஜெர்மன்-அமெரிக்க உறவுகளை புதிய ஒரு புள்ளியில் இருந்து தொடங்க வேண்டிய கட்டாயம் இருப்பதாகவும் பகிரங்கமாக தெரிவித்துள்ளார்; ஐரோப்பிய யூனியனில் உள்ள பெரும்பான்மை நாடுகளும் இதேபோன்ற கவலையில் ஆழ்ந்துள்ளன.
ஃப்ரான்ஸ் நாட்டின் ஏழு கோடிக்கும் மேற்பட்ட தொலைபேசிகள் அமெரிக்க உளவு நிறுவனத்தால் ஒட்டுக்கேட்கப்பட்ட்தாக செய்திகள் வருகின்றன்; அதனைத் தொடர்ந்து அமெரிக்க தூதரை அழைத்து ஃப்ரான்ஸ் அரசு விளக்கம் கேட்டுள்ளது.
இத்தாலிய மக்களின் தொலைபேசிகள், ஈமெயில்கள், எஸ் எம் எஸ் ஆகியவை அமெரிக்காவால் ஒட்டுக்கேட்கப்படுவதாக செய்திகள் வந்தபோது இத்தாலிய பிரதமர் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளரிடம் விளக்கம் கேட்டுள்ளார்.
பிரேசில் நாட்டவர்களையும் அமெரிக்கா உளவு பார்த்ததாக செய்திகள் வந்தன; பிரேசில் குடியரசுத்தலைவர் டில்மா ரூசெஃப்பின் அலுவலகமும் இதில் இருந்து தப்பவில்லை என டேவிட் ஃப்ளீஸர் என்ற அரசியல் விஞ்ஞானி கூறுகின்றார். இதனைக் கண்டிக்கும் விதமாக அமெரிக்காவுக்கு செல்ல இருந்த திட்டத்தையே பிரேசில் குடியரசுத்தலைவர் ரத்து செய்தார்.
இந்திய அரசின் முக்கியமான அரசுத்துறை நிறுவனங்களும், குறிப்பாக இந்திய விண்வெளித்துறை உள்ளிட்ட தேசப்பாதுகாப்பு தொடர்புடைய நிறுவனங்கள் அமெரிக்காவால் ஒற்றறியப்படுகின்றன, இந்தியாவின் முக்கிய அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள், விஞ்ஞானிகள் ஆகியோரின் தொலைபேசிகளும் அவர்களது இ-மெயில் தொடர்புகளும் ஆன்லைனில் ஒற்றறியப்படுவதாக செய்திகள் வந்தன; மேலும் தலைநகர் டெல்லியில் உள்ள முக்கிய அரசு அலுவலகங்கள், அதிகாரிகளின் இணையதள இணைப்புக்கள், ஈமெயில்கள் யாவும் நேரடியாக அமெரிக்காவால் உளவு பார்க்கப்படுகின்றன; அமெரிக்காவில் இருந்து இங்கு இறக்குமதியாகும் கம்ப்யூட்டர்கள், அதிலுள்ள முக்கிய சிப்கள் யாவற்றிலும் ரகசிய கட்டளைகள் பதியப்பட்டுள்ளன என்றும், இவற்றைப் பயன்படுத்துவோருக்கு இது குறித்து தெரியாது என்றும், இக்கம்ப்யூட்டர்களில் பதிவாகும் தகவல்களை தேவைப்படும் நேரத்தில் அமெரிக்க உளவு நிறுவனங்கள் இறக்குமதி செய்து கொள்ள முடியும் என்றும் தகவல்கள் வருகின்றன;  அமெரிக்காவால் அதிகம்  உளவறியப்பட்ட நாடுகளின் பட்டியலில் ஐந்தாவதாக இந்தியா உள்ளதாக செய்திகள் வந்தபோது இது  உளவு வேலை இல்லை; செய்யப்பட்ட அழைப்புக்கள், அனுப்பப்படும் ஈமெய்ல்கள் பற்றிய ஒரு கம்ப்யூட்டர் பகுப்பாய்வு மட்டுமே; இத்தகைய ஆய்வின் உதவியால் கிடைத்த சில தகவல்கள் அடிப்படையில் பல நாடுகள் மீது திட்டமிடப்பட்ட மோசமான தீவிரவாத தாக்குதல்களை அமெரிக்கா தடுத்து நிறுத்தியுள்ளதுஎன இந்திய அரசின் வெளியுறவுத்துறை மந்திரியான சல்மான்குர்ஷித் அமெரிக்க வெள்ளைமாளிகையின் ஆகவிசுவாசமான ஒரு வேலையாள் போல கருத்து தெரிவித்துள்ளார்.
அதாவது தனது வீடு, அண்டை அயலார் வீடு என பாகுபாடு இல்லாமல் உளவறியும் நிலைமைக்கு அமெரிக்கா வந்துவிட்டால் அதன் நிலைமை உச்சகட்டப்பரிதாப நிலையில் உள்ளது என்றே பொருள், அதாவது ஒரு மனநோயாளியின் மனநிலைக்கு அமெரிக்க அதிபரும் அவரது உளவு நிறுவனங்களும் வந்துவிட்டார்கள் என்பதே பொருள்; இது மிக அபாயகரமான ஒரு திருப்பமாகும். ஒரு மனநோயாளியின் கையில் மிகப்பயங்கரமான ஆயுதங்கள் இருப்பதை நாம் ஒப்புக்கொண்டாக வேண்டும். கோழைகள்தான் ஆயுதங்களை தேவைக்கு அதிகமாக சேர்த்துக்கொண்டே போகின்றார்கள் என்பதை வரலாற்றில் நாம் படித்துள்ளோம்; காந்தியடிகளுக்கு ஒரு கைத்தடி நடப்பதற்கு மட்டும் தேவைப்பட்டது, நாதுராம் கோட்சே போன்ற கொலைகாரர்களுக்கே ஆயுதங்கள் தேவைப்படுகின்றன.
தனது குடிமக்கள் மீதே நம்பிக்கையற்று ஒற்றறியும் ஒரு நாடு உலகமக்கள் அனைவரையும் தீவிரவாதிகளாகப் பார்ப்பதில் வியப்பேதும் இல்லை; அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் மட்டுமல்ல, வெளுத்ததெல்லாம்  கூட பேயாகத்தெரிகின்றது; உலக மக்கள் 400 கோடிப்பேரின் தனிப்பட்ட விவரங்கள், அங்க, உயிரியல் அடையாளங்கள் உலகரட்சகன் அமெரிக்காவுக்கு பல்வேறு காரணங்களுக்காக தேவைப்படுகின்றது என்பதையே தொடர்ந்து வரும் செய்திகள் உறுதிப்படுத்துகின்றன. ஆனால் அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் இத்தகைய ஒரு அடையாள அட்டையை அரசு கொண்டுவர முயற்சித்தபோது மக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டது என்பதை மறக்க வேண்டாம்.

8. என்ன செய்ய வேண்டும்?

வாக்காளர் அடையாள அட்டை, ரேசன் அட்டை, வாகன ஓட்டுனர் உரிமம், சொத்துள்ளவர் எனில் அவரது சொத்துவரி ரசீது, ஊதியம் பெறுபவர் எனில் வருமானவரி எண் அட்டை (அரசு ஊழியர்களுக்கு இது கட்டாயம்), வங்கிக்கணக்கு புத்தகம், பிறப்புச்சான்றிதழ், அரசு ஊழியர் எனில் அவரது நிறுவனத்தால் வழங்கப்படும் அடையாள அட்டை என எத்தனையோ அடையாள அட்டைகள் இந்தியாவில் இருக்க, பெறுவது கட்டாயம் இல்லைஎன்ற அளவில் உள்ள ஒரு சாதாரண அட்டையில் இந்திய மக்கள் ஒவ்வொருவருடைய  அடிப்படையான தனிப்பட்ட அடையாளங்கள், உயிரியல் விவரங்களை பதிவு செய்ய இந்திய அரசு ஒரு திட்டத்தை தீட்டி அதனையும் ஒரு தனியார் நபரிடம் கொடுத்துள்ளது என்பது அபாயகரமான ஒன்றாகும்.
இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சியின்போது 1871இல் நிறைவேற்றப்பட்ட குற்றப்பரம்பரைச்சட்டம், அதன் துணைச்சட்டமான கைரேகைச்சட்டம், தென்னாப்பிரிக்காவில் கொண்டுவரப்பட்ட ஆசியர்களை இழிவுபடுத்தும் ஆசியர்கள் பதிவுச்சட்டம் ஆகியவை சகமனிதர்களை இழிவுபடுத்துகின்ற சட்டங்கள், நூறு வருடங்களுக்கு முற்பட்ட காலத்தில், அதாவது காலனிய ஆட்சிக்காலத்தில் தம்மை எதிர்த்துப்போராட்டங்களை நடத்திய மண்ணின் மைந்தர்களை அடக்கவும் ஒடுக்கவும் ஆக்கிரமிப்பாளர்களான அன்னியர்கள் கொண்டுவந்த சட்டங்கள் அவை என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகின்றது. எனில் உலகின் ஆகப்பெரிய ஜனநாயக நாடு நாங்களே என்று மார்தட்டிக்கொள்கின்ற நமது நவீனகால ஆட்சியாளர்களுக்கு சொந்த நாட்டின் மக்களுடைய கைரேகை, விழிப்படலம் உள்ளிட்ட பதிவுகள் எதற்கு என்ற கேள்வியை நாம் எழுப்ப வேண்டியுள்ளது.    

இத்தகைய ஒரு சூழலில் இந்திய மக்கள் ஒவ்வொருவரின் தனிப்பட்ட உயிரியல் அடையாளங்களை அரசுக்கு பதில் சொல்லவேண்டிய எந்த ஒரு பொறுப்பும் இல்லாத ஒரு நபரிடம் ஒப்படைப்பதானது எந்த அளவுக்கு அறிவார்ந்த ஒரு செயல், கட்டாயமற்ற ஒரு அட்டை எனில் இதன் உள்நோக்கம் என்ன, இத்தனை விளம்பரம் எதற்கு என்ற அடிப்படைக் கேள்விகளுக்கு அரசு பதில் சொல்ல வேண்டும்; பதில் சொல்லுமாறு கட்டாயப்படுத்த வேண்டிய கடமை பொறுப்புள்ள அரசியல் கட்சிகளுக்கும் மனித உரிமைக்காகப் போராடும் அமைப்புக்களுக்கும் உண்டு.