செவ்வாய், நவம்பர் 26, 2013

மாண்புமிகு டாஸ்மாக்கும் மது அருந்தா தேசவிரோதிகளும்....



1) ஸ்கூட்டர் வைத்திருக்கின்றேன். வீட்டில் இருந்து அலுவலகம் செல்லும் 9 கி,மீ. தூரத்துக்குள் தினமும் பல சாலை விபத்துக்களை பார்க்கின்றேன். இதுவன்றி அனேகமாக மோசமான விபத்துக்களில் தவறு செய்தவர்கள் அனைவரும் மாண்புமிகு டாஸ்மாக்கு மது அருந்தி வாகனத்தை ஓட்டியவர்கள் என்பதை நேராகவே பார்த்துள்ளேன். இன்று நானும் மனைவியும் குழந்தையும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த திருவள்ளூர் நெடுஞ்சாலையில் ஸ்கூட்டரில் வரும்போது ஒரு மாண்புமிகு மது அருந்திய பைக் ஓட்டி ஒருவரின் செயலால் கீழே விழுந்து குறைந்த காயங்களுடன் உயிர்தப்பினோம்; சாலையில் பயணித்தவர்களும் பிறரும் உதவினார்கள். மாண்புமிகு மது அருந்தி ஓட்டியவர் தன் பைக்கில் பெண் ஒருவருடன் பயணித்தார் என்பதும், விபத்து நடந்தவுடன் தப்பித்துப்போகும் முயற்சியில் சற்று தூரத்தில் கீழேவிழுந்து பலத்த காயமடைந்தார்கள் என்றும் பின்னர் அறிந்தேன். அதற்கு சற்று முன்னர்தான் பின்னிருக்கையில் ஒரு பெண்ணுடன் பயணித்த வேறு ஒரு ஸ்கூட்டர்காரர் அனேகமாக எங்களை கீழே தள்ளியிருப்பார், ஒரு வினாடி நேரத்தில் நாங்கள் தப்பினோம் என்பதும் தற்செயலே. அவர் மாண்புமிகுந்திருந்தாரா இல்லையா என்பது தெரியவில்லை.
2) மது ஒரு சமூக சீரழிவு, தமிழகத்தின் அரசியல் பண்பாட்டுத்தளத்தில் மதுவின் பாதிப்பு நீண்டகாலத்துக்கு இருக்கும், அதைப் பின்னோக்கி திருப்புவது மிக மிகக்கடினமாக இருக்கும், உழைக்கும் மக்களின் சிந்தனைப்போக்கில் ஆரோக்கியமான மாற்றங்களை ஏற்படுத்த இதுகாறும் இச்சமுதாயத்தில் இடதுசாரி இயக்கங்களும் ஜனநாயக முற்போக்கு கலை-பண்பாட்டு இயக்கங்களும் ஆற்றி வந்துள்ள செவ்விய பணிகள் யாவும் பயனற்றுப்போகும் என்பதை நன்கு அறிந்த அரசியல் கட்சிகளும் கலை-இலக்கிய பண்பாட்டு அமைப்புக்களும் மதுவை ஒழிக்க வேண்டும், டாஸ்மாக்கு கடைகளை மூட வேண்டும் என்று உறுதியாக கோரிக்கை வைப்பதற்குப் பதிலாக மிக சன்னமான குரலில் டாஸ்மாக்கு கடைகளின் நேரத்தை முறைப்படுத்த வேண்டும், குடியின் தீமையை விளக்க தமிழக அரசு தீவிரப்பிரச்சாரம் செய்ய வேண்டும்என்று மாண்புமிகு அம்மா அவர்களுக்கு எந்த விதத்திலும் மனம் கோணிவிடக்கூடாத வகையில் அம்மா அவர்கள் சமூகத்துக்கு தண்டனிட்டு மனுப்போட்டுக் கொண்டிருப்பதாலும் தலையங்கம் எழுதிக்கொண்டிருப்பதாலும் சில யோசனைகளை நாம் முன் வைக்கின்றோம்.
3) டாஸ்மாக்கில் குடிக்கின்ற தமிழர்களின் பணத்தில்தான் தமிழக அரசின் கஜானா நிரம்புகின்றதாம்; பல்வேறு நலத்திட்டங்கள், மருத்துவமனையில் மருந்துகள், மருத்துவர்களுக்கு சம்பளம், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் கட்டுவது, இலவச பாடப்புத்தகங்கள் வழங்குவது, ஆசிரியர்களுக்கு சம்பளம், சத்துணவு சமைப்பது, சத்துணவு ஊழியர்களுக்கு சம்பளம், அணைகள் கட்டுவது, மின்சாரத்திட்டங்கள், தொழிற்சாலைகள் கட்டுவது, சாலைகள் போடுவது, மது ஒழிப்பு பிரச்சாரம் செய்வது...ஆக இப்படியான சமூகநலத்திட்டங்கள் யாவும் நமது பச்சைத்தமிழர்கள் குடித்துக்கொடுத்த காசில்தான் நிறைவேறுகின்றன என்பதால் தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் சில அரசாணைகளை வெளியிட வேண்டும்.
4) போலீசுகாரர்கள் மாண்புமிகு மது அருந்தி மேற்படி சமூக சேவைகள் செய்து வாகனம் ஓட்டுபவர்களை நிறுத்தி வாயை ஊதுஎன்று கட்டளை இடுவது காலவிரயமாகவும் அபத்தமாகவும் படுகின்றது; எனவே மாண்புமிகு மது அருந்தாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு முதல் முறை நூறு ரூபாய், இரண்டாம் முறை 500 ரூபாய், மூன்றாம் முறை போலீசுகாரர்களே ஒரு பாட்டில் மாண்புமிகு மதுவை வாயில் ஊற்றி பழக்கப் படுத்தலாம்; இதன் மூலம் அரசுக்கு மேலும் வருவாய் அதிகரிக்கும்.
5) சாலைகளில் இவ்வாறு மாண்புமிகு மது அருந்தாமல் வாகனம் ஓட்டி மாண்புமிகு மது அருந்தி ஓட்டுபவர்களுக்கு பெரும் தொல்லை கொடுப்பதால் மாண்புமிகு மது அருந்தி ஓட்டுபவர்களுக்கு என்றே பிரத்தியேகமாக நான்குவழிச்சாலைகள் ஏற்படுத்தலாம்; அவ்வாறான சாலைகளில் சிக்னல், ஸ்பீட் பிரேக்கர் போன்ற சமூகவிரோத தொல்லைகளை தவிர்க்கலாம். மாண்புமிகு மது அருந்தாமல் வாகனம் ஓட்டும் தேசத்துரோகிகள் பயணிக்க என்றே ஊருக்கு வெளியே பிரத்தியேக சாலைகள் அமைக்கலாம்.
6) இவ்வாறு மாண்புமிகு மது அருந்துபவர்கள் மாண்புமிகு டாஸ்மாக்கு கடைகளில் குடித்துவிட்டு தள்ளாடி விழுவதும் வாந்தி எடுப்பதும் தேசத்துக்கு பெருத்த அவமானம் என்பதால் இவர்களை தாங்கிப்பிடித்து முகவரி அறிந்து அவரவர் வீடுகளில் சேர்ப்பதற்கென்றே பிரத்தியேகமாக 999 ஆம்புலன்ஸ் சேவை தொடங்கலாம்; தவிர மாண்புமிகு மது அருந்துபவர்கள் உடல்நலம் கெட்டால் அரசின் நிதிநிலை தள்ளாடும் நிலை ஏற்படும் என்பது உள்ளங்கை காலி பாட்டில் போல தெளிவான விசயம் என்பதால் மாதம் ஒரு முறை மாண்புமிகு மது அருந்துபவர்களுக்கு இலவச முழு உடல் பரிசோதனைத்திட்டத்தை கொண்டுவரலாம். தொடர்ந்து உடல்நலனைப் பராமரித்து தேசசேவை செய்யும் மாண்புமிகு மது அருந்துபவர்களுக்கு அவர்களின் தேசசேவையின் அளவுக்கு ஏற்ப கலக்கல் மாமணி, கட்டிங் கிங்காங், குவாட்டர் திலகம், ஃபுல்காப்பியன், டாஸ்மாக் ரத்னா, டாஸ்மாக் சக்ரா போன்ற வீரதீர பட்டங்களை வழங்குவதன் மூலம் இளம்தலைமுறையினருக்கு அவர்கள் வழிகாட்டியாக இருப்பார்கள். அன்னாரது வாழ்க்கை வரலாற்றை பாடப்புத்தகங்களில் இடம்பெறச் செய்யலாம். பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் போன்ற பொது இடங்களில் நுழைவாயிலில் அவர்களின் படங்களை இடம் பெறச்செய்யலாம்.
7) அரசின் நலத்திட்டங்களுக்கு எதிரான தேசதுரோகிகள் எப்போதும் பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், மருத்துவமனைகள், வழிபாட்டுத்தலங்கள் அருகே உள்ள மாண்புமிகு டாஸ்மாக் கடைகளை அப்புறப்படுத்த வேண்டும் என்பதாக மனு மேல் மனு போட்டுக்கொண்டே இருப்பதால் இப்பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காணும் வகையில் அத்தகைய பிரச்னைக்குரிய பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், மருத்துவமனைகள், வழிபாட்டுத்தலங்களை உடனடியாக இடித்துத்தள்ளிவிடலாம்; அந்த இடங்களில் கூடுதலாக மாண்புமிகு டாஸ்மாக் கடைகளை திறக்கலாம்.
8) மாண்புமிகு மது அருந்திவிட்டு குடும்பத்தைக் கவனிக்கவில்லை என்று புகார் செய்யும் மனைவிகள் பிள்ளைகளை திருத்தும் வகையில் அவர்கள் குடும்பத்தலைவர் இந்த அரசுக்கும் நாட்டுக்கும் எப்படியெல்லாம் உதவுகின்றார் என்பதை விளக்கிச்சொல்ல அரசுப்பள்ளி ஆசிரியர்களை சனி, ஞாயிறுகளில் அன்னாரது வீடுகளில் பிரச்சாரம் செய்ய சொல்லலாம்.
9) மேலும் பல கிறங்க வைக்கும் ஆலோசனைகள் உங்களிடம் இருந்து வரவேற்கப்படுகின்றன.
.........................................................................................................
நா.வே.அருள் அவர்களின் ஆலோசனைகள்:
ஒவ்வொரு திருமண விருந்துகளிலும் கட்டாயம் இடம் பெற்றாக வேண்டும். எல்லோரையும் குடிகாரர்கள் ஆக்க அரசு ஒரு ஆக்க பூர்வத் திட்டம் வகுக்கலாம்...ரேஷன் கடைகளில் வழங்கப்படலாம். உழைப்பாளர் சிலைகளை அகற்றிவிட்டு குடிகாரர்கள் சிலை நிறுவப்படலாம்...குடிகாரர்களுக்கு வரிவிலக்கு செய்யலாம். குடிப்பழக்கம் இருப்பவர்கள் மட்டுமே வாக்களிக்க அனுமத்திக்கப்படலாம்....குடிப்பழக்கம் உள்ளவர்களுக்கு மட்டுமே வேலையில் முன்னுரிமை வழங்கலாம்.

கருத்துகள் இல்லை: