சனி, நவம்பர் 23, 2013

தொப்புள்கொடிகளும் மலக்குடல்களும்-6

24) பசும்பொன்னில் சமீபத்தில் நடந்த முத்துராமலிங்கத் தேவரின்  பிறந்த நாள் மற்றும் குருபூஜை விழாவில் கலந்துகொண்ட வைகோ, செய்தியாளரிடம் பேசியபோது முத்துராமலிங்கத்தேவரின் புகழ் பாடுகின்றார். அவர் இன்று இருந்திருந்தால் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக இருந்திருப்பார் என்று பேசுகின்றார். முத்துராமலிங்கத்தேவர் இருந்திருந்தால் என்ன நடக்கும் என்பது நமக்கு தெரியாது. ஆனால் அவரது சாதியினர் கடந்த 50 வருடங்களாக தென் தமிழகத்தில் என்ன செய்து கொண்டிருக்கின்றார்கள் என்பது மோசமான வரலாறு. தொடர்ந்து  தென்தமிழகத்தில் சாதிக்கலவரங்களில் முன் நிற்பது தேவர் சாதியினர்தான். தமிழ்நாட்டில் உள்ள தொப்புள்கொடிகளை  சாதிஅடிப்படையில் பிரித்து கலகம் செய்பவர்கள் தேவர் சாதியினர். தொடர்ந்து அரசு நிர்வாகத்திலும் காவல்துறையிலும் ஆதிக்கசாதியினரின் ஆதிக்கத்துக்கு வழிசெய்தவர்கள் திமுக, அ இ அதிமுகவினர்தான். குறிப்பாக அ இ அதிமுக ஆட்சிகளில் இந்த வேலையைச் செய்தவர் இப்போது முற்றத்துக்காக தனது சொத்துக்களை எல்லாம் விற்றதாகவும் ஏலம் விட்டதாகவும் சொல்கின்ற, புதிய தொப்புள்கொடி உறவை ஏற்படுத்திக்கொள்கின்ற அதே சாதியை சேர்ந்த அரசியல் தரகர் நடராசன்தான்.

25) மேலே பட்டியல் இடப்பட்ட ஒரு கலவர நிகழ்வில் கூட இந்த சாதியினருக்கு எதிராக வைகோ, நெடுமாறன், சீமான், தமிழருவி போன்ற தொப்புள்கொடிகள் ஒரே ஒரு ஒற்றை வார்த்தை கூட உதிர்த்ததும் இல்லை, கலவரப்பகுதிகளுக்கு சென்று பாதிக்கப்பட்டோருக்கு ஆதரவாக நின்றதும் இல்லை. ஒருவேளை தலித் மக்களோடு கொள்ளும் உறவு மலக்குடல் உறவு என்று கருதுகின்றார்களா? இந்த நடராசனுக்கும் தமிழக தலித் மக்களுக்கும் என்னவிதமான உறவு இருக்க முடியும்? தொப்புள்கொடி உறவா மலக்குடல் உறவா?

26) அதேபோல் இப்போது தொடர்ந்து மகிந்த ராஜபக்சேவுக்கு எதிராகவும் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாகவும் ஆவேசப் பேட்டிகளை அள்ளிவிடுபவர் உள்ளூர் தமிழர்கள் வீடுகளுக்கு தீ வைக்கும் நவீன மருத்துவர். சமீபத்தில், இலங்கையின் வரலாறு குறித்தும் சிங்களவர்கள் தமிழர்கள் பிரிவினை தகராறு எப்போது உருவானது என்பது குறித்தும் மெய் சிலிர்க்கும் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார்! இலங்கையில் ராஜபக்‌ஷே செய்ததை தமிழகத்தில், குறிப்பாக தர்மபுரியிலும் மேற்கு மாவட்டங்களிலும்  இவர் செய்யும்போது வைகோ, நெடுமாறன், சீமான் போன்றோர் அப்படி என்ன தேசமுக்கியத்துவம் வாய்ந்த வேலையை செய்துகொண்டிருந்தார்கள் என்பதை தமிழகத்தின் ஆறு கோடி தொப்புள்கொடிகளுக்கும் விளக்கவேண்டும். தமிழகத்தில் வன்னியர்களுக்கும் தலித் மக்களுக்கும் ஆன உறவு தொப்புள்கொடி உறவா மலக்குடல் உறவா? ஒரு வேளை பிரபாகரனுடன் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தார்களோ என்னவோ! ‘இறந்துபோனவர்களின் நினைவுச்சின்னம்தான் முள்ளிவாய்க்கால் முற்றம், எனவே பிரபாகரனுக்கு அங்கே சிலை இல்லை என்று நெடுமாறன் பேட்டி அளித்துள்ளதை நினைவு கூர்க.

27) இலங்கையில் இருந்து பிற நாடுகளுக்கு இடம் பெயர்ந்த தமிழர்கள் வாழும் புலம் பெயர்ந்தோர் முகாம்கள் மனிதர்கள் வாழத்தகுந்த முறையில் நாகரிகமான முறையில் இருப்பதாகவும், அந்தந்த நாடுகள் இந்த மக்கள் வாழ்வதற்கான பொருளீட்ட அனுமதி வழங்கியிருப்பதாகவும் பல செய்திகளை நம்மால் வாசிக்க முடிகின்றது; ஆனால் தமிழகத்தில்தான் புலம் பெயர்ந்தோர் அகதிகள் என்று அழைக்கப்படுவதும், அவர்கள் வாழும் முகாம்கள் இலங்கையின் முள்வேலி  முகாம்களை விடவும் மிகக்கேவலமாக இருப்பதும், தமிழக அரசு நிர்வாகத்தாலும் காவல்துறையாலும் அம்மக்கள் பூச்சி புழுக்களை விடவும் கேவலமாக நட்த்தப்படுவதும் வெளிச்சம், கண்கூடு. முள்ளிவாய்க்கால் கட்டிடத்தைவிடவும்  விடவும் உடனடியாகக் கவனிக்கப்பட வேண்டியது இதுதான். தமது தொப்புள்கொடி உறவுகளின் துன்பம் நீக்க தமிழ்த்தேசிய நெடுமாறன், வைகோ, சீமான் உள்ளிட்டோரும் இந்துதேசிய பொன்.ராதாகிருஸ்ணனும், அரசியல் தரகர் நடராசனிடம் பேசி ஜெயலலிதாவிடம் இதற்கான தீர்வு காணலாம்.

28) தொடர்ந்து இந்த 50 வருட வரலாற்றில் தமிழகத்தில் சாதீய மோதல்களில் செத்தவர்களின் எண்ணிக்கை பல நூறுகளைத் தாண்டுகின்றது. ஆதிக்கசாதியினரும் இடைனிலை சாதியினரும் இந்தியா எங்கும் இருப்பதைப்போல் தமிழகத்திலும் தலித்துக்களுக்கு எதிராக ஓரணியில் நிற்கின்றார்கள். இங்கே தமிழகத்தில் உள்ளவர்கள்- தலித்துக்கள், இஸ்லாமியர்கள், கிறித்துவர்கள், இதர சாதியினர் உள்ளிட்ட அனைவரும்- தொப்புள்கொடி உறவுகள் இல்லையா? தொப்புள்கொடி எங்கே அறுந்து போகின்றது? இங்கே அறுந்து போகும் தொப்புள்கொடி கடல்தாண்டி இலங்கைத்தமிழனை மட்டும் எவ்வாறு இணைக்கின்றது? 
தொடரும்...


கருத்துகள் இல்லை: