செவ்வாய், நவம்பர் 19, 2013

தொப்புள்கொடிகளும் மலக்குடல்களும்-4

14) இதனைத் தொடர்ந்து அதே மாவட்டத்தில் நடந்த புளியங்குடி கலவரத்திலும் தேவர்கள் போலீசோடு சேர்ந்து கொண்டு தேவேந்திர சாதி மக்களை தாக்கினர், அவர்களது வயல்களையும் வாழைத்தோப்புக்களையும் அழித்தனர். தேவேந்திரர்களை அரசு சிறையில் அடைத்தது. தீர்வு தேடிய தேவேந்திரர்களும் இஸ்லாமியர்களும் இணைந்து சகோதர சமத்துவ சங்கத்தை தொடங்கினர்.

15) 1982 ஜூன் 8 அன்று காயிதே மில்லத் பிறந்தநாள் விழாக்கொண்டாட்டத்தின்போது கலவரம் வெடித்தது. 15 தலித்துக்களும் 1 இஸ்லாமியரும் படுகாயம் அடைந்தனர். மறுநாள் 9ஆம் தேதி பேருந்துகளை நிறுத்தி தலித்துக்களையும் இஸ்லாமியர்களையும் தேவர்கள் தாக்கினர். 10ஆம் தேதி தேவர்கள் 1500 பேர் திரண்டு அய்யாபுரம், வெள்ளியக்கவுண்டன்பட்டி ஆகிய ஊர்களில் தேவேந்திரர்களைத் தாக்கி வீடுகளுக்கு தீயிட்டனர், கொள்ளையடித்தனர், காவல்துறை வேடிக்கை பார்த்தது. (30 வருடங்களுக்குப் பிறகு தர்மபுரியிலும் இதுதான் நடந்தது, தேவர்கள் இடத்தில் வன்னியர்கள், அவ்வளவே). 15 வயதுப் பையன், ஆறு வயதுக்குழந்தை, ஒரு கைக்குழந்தை உட்பட 10 தேவேந்திரர்கள் கொலை செய்யப்பட்டார்கள். இத்தோடு நிற்காமல் அடுத்த நாளும் புளியங்குடியை சுற்றியுள்ள கிராமங்களில் தேவேந்திரர், இஸ்லாமியர் வீடுகள் தீயிடப்பட்டன, கொள்ளையடிக்கப்பட்டன. பல கிராமங்களில் தேவேந்திரர்கள் கொலை செய்யப்பட்டார்கள். கலவரம் தொடங்கிய நாள் முதல் திட்டமிட்ட வகையில் காவல்துறை வேடிக்கை மட்டுமே பார்த்தது, அதாவது கலவரக்காரர்களுக்கு உதவி செய்தது.

16) மேற்கூறிய அனைத்துக் கலவரங்களிலும் தலித்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் எதிராக ஆதிக்க சாதியினரும் இடைச்சாதியினரும் இவர்களின் பிரதிநிதியான அரசு எந்திரமும் கூடவே மார்க்சிஸ்ட் கட்சியைத்தவிர காங்கிரஸ், ஆர் எஸ் எஸ், அ இ அதிமுக, திமுக என அனைவரும் ஒன்றுபட்டு நின்றனர்.

17) இதனைத்தொடர்ந்து 1982இல் கன்னியாகுமரி மாவட்டத்தில் உருவான  மண்டைக்காடு கலவரம். அங்குள்ள மீனவ கிராமம் புதூர். அந்த மக்கள் கத்தோலிக்கர்களாக மாறி 450 வருடங்கள் கடந்து விட்டன. அங்குள்ள கிறித்துவ மக்களும் இந்துக்களும் சகோதரர்களாகவே வாழ்ந்து வந்தனர். கிறித்துவ மக்கள் மண்டைக்காடு பஹவதி அம்மன் கோவில் திருவிழாவுக்கு வரும் பக்தர்களை விருந்தினராகவே உபசரித்து வந்தனர். அது போல மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கடலுக்கு புதூரில் கடலுக்கு சென்று நீராடி விட்டு  அருகிலுள்ள மேரி மாதா குருசடிக்கும் சென்று வணங்குவது வழக்கம். இன்னும் சொல்லப்போனால் மண்டைக்காடு பகவதி அம்மனும் மாதாவும் சகோதரிகளாகவே மக்கள் மனத்தில் பதிந்திருந்தார்கள். மதவெறியை அறியாத மக்களிடம் மண்டைக்காடு கலவரத்தின் மூலம் இந்துமுன்னணியும், ஆர் எஸ் எஸ்சும்  பிரிவினையை உருவாக்கின.

18) சென்னையில் இருந்த இல.கணேசன், இராமகோபாலன் போன்ற இந்துத்துவவாதிகள் மண்டைக்காடு கலவரத்திற்கு எட்டு மாதத்திற்கும் முன்னரே கன்னியாகுமரி மாவட்டத்தின் பல ஊர்களில் சுற்றித்திரிந்து ஆர் எஸ் எஸ் அமைப்பை உருவாக்கினர். ஆர் எஸ் எஸ் சாகாக்களில் மதவெறியும், பிற மதத்தவர் மீது பகையுணர்வும் பரப்பப்பட்டது. அதனைத் தொடர்ந்து நடந்த திட்டமிட்ட சதியும் கூட்டுமுயற்சியும் விளைவுமே மண்டைக்காடு கலவரம்.    மண்டைக்காடு கலவரம் நடந்தபோது எம்ஜிஆர்தான் ஆட்சியில் இருந்தார். ஆர் எஸ் எஸ் உள்ளிட்ட இந்துத்துவா இயக்கங்களுக்கு அவர் மறைமுக ஆதரவு தந்தார். உள்ளூர் ஆட்களோடு  கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வெளியே இருந்தவர்களும் இக்கலவரத்தை திட்டமிட்டு செய்தார்கள். 

தொடரும்....

கருத்துகள் இல்லை: