வியாழன், நவம்பர் 21, 2013

தொப்புள்கொடிகளும் மலக்குடல்களும்-5

19) 1989இல் போடி, தேவாரம் கலவரத்தில் தேவேந்திர சாதி மக்களுக்கு எதிராக நடந்த சாதிக்கலவரத்தில் இந்து முன்னணி இருந்தது.

20) வாச்சாத்தி மலைவாழ் மக்கள் மீது வனத்துறையினரும் அரசு நிர்வாகமும் சேர்ந்துகொண்டு ஆடிய வெறியாட்டம் அநாகரீகத்தின் எல்லைக்கும் அப்பாற்பட்டது என்பது வரலாறு. இருபது ஆண்டுகளுக்கும் மேலாக நடந்த வழக்கு மார்க்சிஸ்ட் கட்சியாலும் அதன் சக அமைப்பான தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தாலும்தான் நடத்தப்பட்டது. தீர்ப்பு வெளியான அன்று அம்மக்கள் வெடித்து அழுதார்கள், தொலைக்காட்சிகளில் பார்த்தோம். அதே போல் ஆதிக்கசாதியினரால் கட்டப்பட்ட  உத்தப்புரம் சாதிச்சுவரை உடைக்க மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் புதுடெல்லியில் இருந்து வரவேண்டியிருந்தது. தலித்துக்களின்  சம்பந்தியும் தமிழன் சுபிட்சமாக இருக்க வேண்டும் என்ற ஒற்றை நோக்கோடு தண்டவாளத்தில் தலைவைத்தவரும் பாம்புகள் பல்லிகள் நடுவினிலே சிறைவாசம் செய்தவரும்தான் அப்போது ஆட்சியில் இருந்தார். அங்கே தலித்துக்களுக்கு எதிராக திமுக, அ இ அதிமுக, மதிமுக, பாமக, காங்கிரஸ், பிஜேபி உள்ளிட்ட அனைவரும் ஒன்று திரண்டு வரிந்துகட்டி நின்றதையும் தலித்துக்களுக்கு எதிராக மலையில் குடியேறி போராடியதையும் அவர்கள் குடியிருந்த இடத்தை காலி செய்த பின் அங்கே சாராய பாட்டில்களும் பிரியாணியின் மிச்சங்களும் வண்டிவண்டியாக குவிந்து கிடந்த அசிங்கத்தையும் தமிழகம் பார்த்தது.

21) தொடர்ந்து பரமக்குடியில் தலித்துக்களுக்கும் தேவர்களுக்கும் நடக்கும் மோதலில் அரசு நிர்வாகமும் போலீசும் தேவர்கள் பக்கம் நிற்பதை உலகம் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றது. தேவர் குருபூஜைக்கு போலீஸ் காவல் காப்பதும், இம்மானுவேல் சேகரன் குருபூஜை என்றால் முன்னதாகவே தலித் மக்களை கைது செய்து சிறையில் அடைப்பதும் துப்பாக்கி சூடு நடத்துவதும் தொடர்கதையாக உள்ளது. ஒரு தலித் தலைவனுக்கு ‘குருபூஜை என்ற சொல்லைக் கூட ஆதிக்கசாதியினரால் தாங்க முடியவில்லை!

22) தென் தமிழகம் இப்படியெனில் வட, வடமேற்கு தமிழகம் எங்கும் தலித்துக்களுக்கு எதிராக ஆதிக்க சாதியினரின் அணியை திரட்டி வருபவர் நவீன மர்டர் மருத்துவர் ராமதாசு. அதாவது இப்பகுதிகளில் தமிழர்களை சாதீய அடிப்படையில் பிரித்து கலகம் செய்கின்றவர்களின் தலைவர் அவர். அதன் உச்சகட்டத்தை தர்மபுரியில் பார்த்தோம்; திவ்யா என்ற தமிழ்ப்பெண்ணின் தந்தை கொலை செய்யப்பட்டார், இளவரசன் என்ற தமிழ் இளைஞன் கொலை செய்யப்பட்டான். ‘2016ஆம் ஆண்டில் வன்னியர் ஆட்சி அமைவதை எந்தக் கொம்பனாலும் தடுக்க முடியாது’  என்ற நவீன மர்டர் மருத்துவர் கூரை ஏறி கொக்கறிக்கின்றார். அதாவது இலங்கையில் தமிழர்களுக்கு தனிநாடாம், தமிழ்நாட்டில் ‘வன்னியர்கள் ஆள்வார்களாம்! கடல்கடந்த தனி ஈழத்தில் வன்னியர்களும் தலித்துக்களும் ஒரே தட்டில் சாப்பிட்டு ஒரு பாயில் படுத்து உறங்குவார்களாம்; தமிழ்நாட்டில் கோட்டையில் வன்னியன் கொடிகட்டி கோலோச்ச, தலித்துக்களுக்கு ரயில்தண்டவாளம்தான் அடைக்கலமாம்!  ஆஹா! இதுவல்லவோ ஆண்டபரம்பரையின் அற்புத தத்துவம்!


23) இப்போது விசயத்திற்கு வருவோம். நெடுமாறன், வைகோ, சீமான், தமிழருவி உள்ளிட்ட இவர்களின் எந்த ஒரு அறிக்கையிலும் தொப்புள்கொடி தொப்புள்கொடி என்ற சொல்லை மலைபோல அடுக்கிக்கொண்டே போகின்றார்கள். அது என்ன தொப்புள்கொடி? 

தொடரும்...

கருத்துகள் இல்லை: