திங்கள், நவம்பர் 18, 2013

தொப்புள்கொடிகளும் மலக்குடல்களும்-3

8) அதே மாவட்டத்தில் இளஞ்செம்பூர் கிராமத்தில் தேவர்-தேவேந்திரர் பகை 1949ஆம் ஆண்டு கலவரமாக வெடித்ததில் ஒரு தேவரும் நான்கு தேவேந்திரர்களும் கொல்லப்பட்டனர்.

9) அன்றைய திருநெல்வேலி மாவட்டம் ஆழ்வார்திருநகரி அருகே உள்ள செய்யூர் கிராமத்தில் 1950களில் தொடக்கத்தில் தம் ஆதிக்கத்திற்கு கீழ்ப்படிய மறுத்த இரண்டு தேவேந்திரர்களை தேவர்கள் 1953 ஏப்ரல் 26 அன்று படுகொலை செய்தார்கள்.

10) 1969, 1978ஆம் ஆண்டுகளில் இந்து மதத்துக்கே உரிய கொடுமையான தீண்டாமையில் இருந்து விடுதலை பெற இஸ்லாமியத்துக்கு மாறிய தேவேந்திரர்கள் கொலை செய்யப்பட்டனர்.

11) திருநெல்வேலி மாவட்டம் தென்காசி அருகே உள்ள மீனாட்சிபுரம் என்ற ஊரில் தேவேந்திர சாதியினரான சுமார் 180 குடும்பங்கள் (சுமார் 1500 பேர்) 1981 பிப்ரவரி, மே மாதங்களில் தேவர் சாதியினரின் கொடுமைகளை தாங்காது இந்துமதத்தில் இருந்து வெளியேறும் முகமாக இஸ்லாத்தை தழுவினர். இச்சம்பவம் சாதீயத்தையும் தீண்டாமையையும் கட்டிக்காக்கும் ஆதிக்கசாதியினரையும் இந்துதுவாவாதிகளையும் அச்சப்படுத்தியது. தொடர்ந்த வன்முறையில் 10 தேவேந்திரர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இதனைத்தொடர்ந்து ஆர் எஸ் எஸ், விஷ்வ ஹிந்து பரிஷத் போன்ற இந்து தீவிரவாதிகள் மீனாட்சிபுரத்திற்குள் நுழைந்தனர். ‘மறுமதமாற்றம் என்ற முழக்கத்தோடு வி.இ.பரிஷத் அக்கிராமத்தில் இருந்த பார்ப்பன ஜமீன்தார் உதவியுடன் நுழைந்தது.

12) சாதி என்ற செங்கற்களால் கட்டப்பட்ட இந்துமதத்தின் அதிபிற்போக்குவாதம்தான் தீண்டாமை என்பதை சாமானிய இந்து மட்டும் அல்ல, எந்தக்காலத்திலும் நான் ரொம்ப முற்போக்கு இந்துவாக்கும் என்று சொல்லிக்கொள்ளும் எந்த ஒரு இந்துமதத்தலைவரும் கூட ஒத்துக்கொண்டதில்லை; தவிர தமது மதத்தின் பிடியில் இருந்து ஒரே ஒரு இந்து வெளியேறினாலும் பதட்டம் அடைகின்றார்கள்; சாதிக்கட்டுமானத்தில் இருந்து ஒரேஒரு செங்கல் உருவப்பட்டாலும் ஏற்படும் பதட்டமே இது. அரபு நாடுகளில் சம்பாதித்த பணத்தைக்காட்டி மதம் மாற்றியதாக (அக்காலகட்டத்தில் தமிழகத்தில் அத்தனை பிரபலம் ஆகாத) வாஜ்பேயி, சுப்பிரமண்யஸ்வாமி, அப்பகுதியின் ஆர் எஸ் எஸ் தலைவர் ரெங்கசாமித்தேவர் உள்ளிட்டோர் அசிங்கமான பிரச்சாரம் செய்தனர். ஆனால் மறுபுறம் வாஜ்பாய் போன்றோர் அந்த மக்கள் மீண்டும் இந்து மத்தை தழுவினால் ஆளுக்கு ஒரு இலட்சம் ரூபாய் தருவதாக ஆசை காட்டினார்கள். இந்திய அரசு நியமித்த விசாரணை கமிசன், தமிழக அமைச்சர் என பலர் பேசியும் எடுத்தமுடிவில் மாறாமலே இருந்தனர் அம்மக்கள்.  எனவே அப்பகுதியில் தொடர்ந்து திட்டமிட்டு இஸ்லாமிய மக்கள் மீதும் தலித் மக்கள் மீதும் ஆர் எஸ் எஸ் போன்ற இந்துத்துவா தீவிரவாத அமைப்புக்கள் தேவர் சாதியினரை தூண்டிவிட்டு கலகங்கள் செய்தார்கள். ஒரு எளிய கேள்வியை ஆர் எஸ் எஸ் பரிவார் முன்பும் நவீன மர்டர் மருத்துவர் முன்பும் வைக்கின்றோம்:  இஸ்லாத்தில் இருந்தும் கிறித்துவத்தில் இருந்தும் இந்து மதத்திற்கு மாறினால் இருக்கின்ற ஆயிரம் சாதியில் எந்த சாதியில் கொண்டுபோய் வைப்பீர்கள்?

13) மீனாட்சிபுரத்தை முன்மாதிரியாகக் கொண்டு மேலும் பல ஊர்களில், பகுதிகளில் மக்கள் இந்து மதத்திலிருந்து வெளியேறிவிடுவார்கள் என்று இயற்கையாகவே பயந்த ஆர் எஸ் எஸ் தனது சூழ்ச்சிகர நடவடிக்கைகளை எடுக்கத் துவங்கியது. மக்களை மத அடிப்படையில் வெறியூட்டி, மத அடிப்படையில் ஒருங்கிணைப்பது என்ற யுக்தியை கையில் எடுத்தது ஆர் எஸ் எஸ்.   இராம.கோபாலனைக் கொண்டு இந்து முன்னணி என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது என்பதைக் குறிப்பிட வேண்டும்.

தொடரும்....

கருத்துகள் இல்லை: