புதன், நவம்பர் 23, 2011

கலயத்தில் உறங்கும் சாம்பலும் ஒரு ஜோடி காலணிகளும்-5






(ஒட்டுமொத்த இந்திய அரசு எந்திரமும் இந்துமயமாக்கப்பட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ்.இன்  "ஒரு மதம்ஒரு தேசம்ஒரு கலாச்சாரம்ஒரு மொழி" என்ற கொள்கை இந்த இந்துத் துவாவாதிகளின் அரசு எந்திரத்தால் தீவிரமாக அமலாக்கப் பட்டு வருகின்றதுஇது இந்திய அரசே சிறுபான்மை மத மக்கள் மீது நடத்தும் அரசு பயங்கர வாதம் என்று சொன்னால் என்ன தவறு?  இங்கே காங்கிரஸ் அரசு, பா.ஜ.க. அரசு என்று கொள்ள வேண்டாம், இந்திய அரசு எந்திரம் என்று சொல்கின்றேன்)


உலகெங்கிலும் உள்ள இஸ்லாமிய மக்களை இப்படி வலுக் கட்டாயமாக எதிரியாக்கியது அமெரிக்க பயங்கரவாதத்தின் வரலாறு எனில், இந்தியாவில் உள்ள இஸ்லாமிய மக்களை வலுக்கட்டாயமாக எதிரியாக்கியது ஆர்.எஸ்.எஸ்., ஜனசங் ஆகிய இந்துத்துவா பயங்கரவாதிகளைச் சாரும். ஹெட்கே ராம் பாலிவார், கோல்வாகர், வீரசவர்க்கார், நாதுராம் கோட்சே வழியாக, ஷ்யாம ப்ரஸாத் முகர்ஜி, சுதர்சன், வாஜ்பேயி, அத்வானி, முரளிமனோகர் ஜோஷி, ப்ரவீன் தொகாடியா, நரேந்திர மோடி, பால் தாக்கரே, ராஜ் தாக்கரே, ராம் கோபாலன், சோ ராமஸ்வாமி, இல.கணேசன் போன்ற தீவிர வாதிகளால் தொடர்ந்து இந்த "எதிரியாக்கல்" என்ற அஜெண்டா முன்னெடுத்துச் செல்லப்படுகின்றது. ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது பூட்டிக்கிடந்த பாபர் மசூதியைத் திறந்து இந்துத்துவா பயங்கரவாதிகள் பூஜை செய்ய அனுமதித்த அன்றைக்கு இவர்களின் வெற்றிப் பயணம் தொடங்கியது எனலாம். ஆனால் நாலுசுவருக்குள் வெறும் பூஜை மட்டுமே செய்து கொண்டிருந்தால் போதுமா? வி.பி.சிங் ஆட்சியின்போது அமலாக்கப்பட்ட மண்டல் கமிஷன் அறிக்கையை ஒரு ஆயுதமாகக் கையில் எடுத்தது ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. கும்பல். தொடர்ந்து அயோத்தியில் கோவில் கட்ட தனது ரத்தயாத்திரையை நடத்தினார் அத்வானி. பீஹாரில் முதல்வராக இருந்த லல்லு பிரசாத் யாதவ் அத்வானியைக் கைது செய்ய, வி.பி.சிங் அரசுக்கான தனது ஆதரவை அத்வானி விலக்கிக்கொள்ள, மானம் என்ற வேட்டியே பெரிது என பதவித்துண்டைத் தூக்கி வீசி எறிந்து விட்டு கம்பீரமாக வெளியேறினார் வி.பி.சிங் (வேறு யாராவது நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பல்ல).

தொடர்ந்து வந்த தேர்தலில் பேசாமடந்தையும் ஒருகாலத்தில் ஆர்.எஸ்.எஸ்.இல் உறுப்பினராக இருந்தவருமான நரசிம்ம ராவ் பிரதமராக, 1992 டிசம்பர் 6ஆம் நாள் பாபர் மசூதி இடிக்கப்பட்டது, நாடெங்கும் கலவரம் மூண்டது. ஆயிரக் கணக்கானோர் மாண்டனர். மும்பையிலும் கோவையிலும் குண்டு வெடித்தது ("அத்வானியை ஆண்டவன் காப்பாற்றி னான்"-ரஜினிகாந்த்). இஸ்லாமியர்களை 'வலுக்கட்டாயமாக எதிரி'யாக்குவதில் ஆர்.எஸ்.எஸ். கும்பல் வெற்றி கண்டது. முதலில் 'சர்ச்சைக்குரிய இடம்' என்று சொல்லி வந்த பத்திரிகைகளும் டி.வி.சானல்களும் நாட்கள் ஓடஓட ராமர் கோவில் என்றே எழுதவும் பிரச்சாரம் செய்யவும் தொடங்கி னார்கள். இப்போது 'சர்ச்சைக்குரிய இடம்' என்ற சொல் ஊடகங்களில் மறைந்துவிட்டது. அடுத்துவந்த வருடங்களில், டிசம்பர் 6 தேதியில் (இப்போது நவம்பர் 26 அன்றும்) வேண்டுமென்றே செய்யப்படும் போலீஸ் கெடுபிடிகளால் பொதுமக்கள் மத்தியில் இஸ்லாமிய மக்கள்மீது வெறுப்புணர்வு திட்டமிட்டு வளர்க்கப் பட்டது.

பூட்டு ரிப்பேர், குடை ரிப்பேர், பீடி சுற்றுவது, கைத்தறி நெசவு, பாய் முடைவது, கத்தி சாணை தீட்டுவது, மீன், கருவாடு, மாமிச விற்பனை, மிஞ்சிப்போனால் பெட்டிக் கடை அல்லது வெளிநாட்டில் கூலிவேலை என்று இந்திய சமூகத்தின் விளிம்புநிலைத் தொழில்களைச் செய்து தமது அன்றாட உணவுக்கான வழியை ஏற்படுத்திக் கொண்டிருக் கும் ஒரு சமூகத்தின் மீது 'தீவிரவாதிகள்' என்ற முத்திரை குத்தப்படுவதற்கு ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத அமைப்பு வழியைக் காட்டியது எனில், அதன் சார்பு செய்தித்தாள்களும் டி.வி.சானல்களும், விஜயகாந்த், அர்ஜூன் போன்ற 'தேஷ் பக்த' நடிகர்களின் திரைப்படங்களும் பெருமளவு அந்த வழி யில் தொடர்ந்து ஜாக்கிரதையாக ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரத்தை முன்னெடுத்து சென்று கொண்டிருக்கின்றது.

இஸ்லாமிய சமூகத்தின் இன்றைய அவலமான நிலைமையையும் பொரு ளாதார நிலைமையையும் சொல்லும் ராஜீந்தர் சச்சார் கண்டறி தல்களையும் அவரது அறிக்கையையும் வெறுப்புடன் பார்க்கின்றார்கள். கட்டுரையின் ஒரு இடத்தில் சொன்னது போல, இந்திராகாந்தியோ, ராஜீவ்காந்தியோ, நரசிம்மராவோ, வாஜ்பேயியோ, இப்போதுள்ள மன்மோஹன்சிங்கோ, ஆட்சியில் யார் இருந்தாலும் உண்மையில் இந்திய அரசு எந்திரத்தை ஓட்டிக்கொண்டிருப்பது இந்துத்துவாவாதிகளே. இதையும் மீறி ஹேமந்த் கார்காரே போன்ற போலீஸ் அதிகாரிகள் உண்மையைத் தேடிப்போனால் அவர்களுக்கும் அவர்கள் குடும்பத்தாருக்கும் கொடுக்கப்படும் தொல்லை மிகப் பயங் கரமானது, பைத்தியம் பிடிக்க வைப்பது. ஒட்டுமொத்த இந்திய அரசு எந்திரமும் இந்துமயமாக்கப்பட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ்.இன் "ஒரு மதம், ஒரு தேசம், ஒரு கலாச்சாரம், ஒரு மொழி" என்ற கொள்கை இந்த இந்துத் துவாவாதிகளின் அரசு எந்திரத்தால் தீவிரமாக அமலாக்கப் பட்டு வருகின்றது. போலீசிலும் ராணுவத்திலும் முக்கிய அதிகாரிகளாக இருக்கின்ற பலர், பதவி ஓய்வு பெற்ற மறுநாளே பி.ஜே.பி. யில் சேர்ந்துவிடுகின்றார்கள் என்பது இந்த வாதத்தை வலு வாக்குகின்ற வெட்டவெளிச்சமான ஆதாரம். இதுபோன்ற அதிகாரிகள் தமது பதவிக்காலத்தில் யாருக்கு ஆதரவாக, யாருக்கு எதிராக இருந்திருப்பார்கள்? பொடா சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களில் ஓரிருவர் மட்டுமே இந்து மதத்தைச் சேர்ந்தவர்களென்பதும் மற்ற அனைவரும் முஸ்லிம்களே என்பதும் இத்தோடு இணைத்துப் பார்க்கப்பட வேண்டிய ஒன்று. இது முக்கியமான கேள்வி.


ராணுவத்தின் முக்கிய ஆயுதங்கள், கருவிகள், போர்த்தளவாடங்கள், கட்டி டங்கள் அனைத்துக்கும் ராமாயண, மஹாபாரத பக்கங்களி லிருந்துதான் சம்ஸ்கிருதப் பெயர்கள் வைக்கப்படுகின்றன. பல உதாரணங்களைக் கூறமுடியும். ரஷ்யாவில் இருந்து ட்டீ-90 ரக போர் டாங்குகள் வாங்கி "பீஷ்மர்" என்று பெயர் வைத்தார்கள்! எங்கே இருக்கின்றது மதச்சார்பின்மை? அரசு அலுவலகங்களில் பஜனைகள் (தவறாமல் வெள்ளிக்கிழமை) ஒலிக்கின்றன. சமீப காலங்களில் ஆயுதபூஜை மிகத்தீவிர மாகக் கொண்டாடப்படுகிறது. இந்திய அரசு அலுவலகங்க ளில் பணியாற்றும் சிறுபான்மை மத மக்கள் (தலித்களையும் சேர்த்து) "நாம் பணி செய்வது ஒரு மதச்சார்பற்ற ஜனநாயக நாட்டின் அலுவலகத்தில்" என்று நம்ப வேண்டுமா? இது இந்திய அரசே சிறுபான்மை மத மக்கள் மீது நடத்தும் பயங்கர வாதம் என்று சொன்னால் என்ன தவறு? இந்திய மக்களின் பணத்தில் சம்பளம் வாங்குகின்ற ஒரு உச்சநீதிமன்ற நீதிபதி "பகவத் கீதைதான் இந்த நாட்டின் தர்ம நியாய சட்டமாக இருக்க வேண்டும்" என்று கொக்கரிக்கின்றார்; சேது சமுத்திர விவகாரத்தில் மத்திய சட்டஅமைச்சர் "கடவுள் ராமர் இருப் பது சந்தேகத்துக்கு இடமற்ற ஒன்று; ராமர், இந்திய கலாச் சாரத்தின் பிரிக்க முடியாத ஒரு பகுதி" என்று முழக்கமிடு கின்றார், இவர்கள்தான் சிறுபான்மை மத மக்களையும், இந்து மதத்திலேயே இருக்கின்ற தலித்துகளையும் காப்பாற்றுவார் கள் என்று நம்ப வேண்டுமா? ஒரு பந்த் நடந்தபோது "தமிழ் நாட்டில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும்" என்று கூரைமீது ஏறி நின்று கோஷம் போட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள், ஒரிசாவிலும் குஜராத்திலும் முஸ்லிம், கிறித்துவ மக்களின் கழுத்தும் வயிறும் அறுக்கப்பட்ட போதும், முஸ்லிம், கிறித்துவ பெண்கள் கூட்டமாக வன்புணர்ச்சிக்கு உள்ளானபோதும், கயர்லாஞ்சியில் போட்மாங்கே என்ற தலித் குடும்பத்தினர் உயர்சாதி இந்துக்களால் படுகொலை செய்யப்பட்டபோதும் எங்கே போனார்கள்?






...தொடரும்

செவ்வாய், நவம்பர் 22, 2011

கலயத்தில் உறங்கும் சாம்பலும் ஒரு ஜோடி காலணிகளும்-4






 ( 9/11ஆல் உண்மையில் பயனடைந்தவர்கள் யார்?  மூவர்தான்.  அல்-காய்தாவும் அமெரிக்க ஆயுத உற்பத்தி முதலாளிகளும் அவர்களது கூட்டாளிகளான குடியரசுக்கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சி அரசியல்வாதிகளும்தான்)

மும்பை தாக்குதலின் உச்சகட்ட துயரமே உலகளாவிய பயங்கரவாதத்தின் தாய்வீடான அமெரிக்காவின் மந்திரி காண்டோலிசா ரைஸ் இந்தியாவுக்கு வந்ததுதான். அப்படியே பாகிஷ்தானுக்கும் போனார். நரிய  காவலுக்கு வச்சா கிடைக்கு ரெண்டு ஆடு வேணும்ணு கேக்குமாம்.


ஆக இஸ்லாமிய நாடுகளின் மீதான படை எடுப்புக்கான எதிர்வினை என்பது அமெரிக்காவுக்கும் பிற ஐரோப்பிய நாடுகளுக்கும் எதிரான இஸ்லாமிய மக்களின் கோபம் என்ற புள்ளியில் தொடங்கி அதன் நீட்சியாக இன்று அமெரிக்காவுக்கும் அதன் கூட்டாளிகளுக்கும் எதிரான 'இஸ்லாமிய' பயங்கரவாதமாக ஆக்கப்பட்டுள்ளது என்பதுதான் வரலாறு கூறும் உண்மை.  இஸ்லாமிய மக்களை பயங்கரவாதிகளாக சித்தரிப்பதில் வெற்றி பெற்றுள்ள அமெரிக்க சார்பு ஊடகங்கள், "நீ ஏன் அவனை முதலில் அடித்தாய்?" என்ற எளிமையான கேள்வியை அமெரிக்காவிடம் கேட்பதில்லை, ஆனால் சர்வதேச சமுதாயத்துக்கு அந்தக் கடமை உள்ளது.  தான் ஒரு உலக ரவுடி என்ற சுயரூபம் உலக சமுதாயத்தின் முன் அம்பலப்பட்டுப் போனதில் அமெரிக்காவுக்கு வருத்தம் உண்டு; 'உலகளாவிய பயங்கரவாதத்தின் மீது தாக்குதல்' என்ற தனது ஒற்றைத்திட்டத்தின் சதிவலையில் தான் மட்டும் தனித்து நிற்காமல் இந்தியாவையும் இணைப்பதன் மூலம், தனது செயலுக்கு நியாயம் கற்பிக்கலாம்.  இதற்காக தன்னைப் போலவே 'உலகளாவிய பயங்கரவாத'த்தின் மீது தாக்குதல் தொடுக்கக் கூடிய ஒரு கூட்டாளியாக இந்தியாவை மாற்ற அமெரிக்கா பெரும் முயற்சி செய்து கொண்டிருக்கின்றது.  இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை இந்த நோக்கில் பார்த்தால் மட்டுமே புரியும்.  'நான் மட்டுமா ரவுடி, அவனும்தான்'.  இதற்கு அமெரிக்கா வைத்துள்ள குறிதான் இந்தியா.   உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு, அதாவது மும்பை தாக்குதலை சாக்காக வைத்து, பக்கத்தில் உள்ள பாகிஸ்தான் மீது போர் தொடுக்குமானால், தனது பிரச்சாரத்துக்கு அது ஆதரவாக இருக்கும் என்று அமெரிக்கா கணக்குப் போடுகின்றது.  இதற்காக, இந்தியாவுக்குள் தனது அடிமைகளான ஆர்.எஸ்.எஸ். போன்ற வலதுசாரி இந்துத்துவா அமைப்புக்கள் மூலம் "பாகிஷ்தான் மீது படையெடு!" என்று மக்களிடையே பொதுக்கருத்தை உருவாக்க முனைகின்றது; இந்துத்துவா பயங்கரவாதிகளைக் கொண்டு பத்திரிக்கைகளில் கட்டுரை, ஆசிரியருக்கு கடிதம் எழுதுவது, இன்டெர்நெட்டில் பிரச்சாரம் செய்வது, டி.வி.சானல்களில் வாக்கெடுப்பு நடத்துவது, செல்ஃபோனில் எஸ்.எம்.எஸ். பிரச்சாரம் என பல வகையிலும் பிரச்சாரம் செய்கின்றது.

மார்ச் 2003 தொடங்கி 2006 இறுதி வரை 6,50,000 இராக் மக்களை ஜார்ஜ் புஷ் கொன்று குவித்துள்ளான்.  ஜான்ஸ் ஹாப்கின்ஸ் ப்ளூம்பெர்க் பொதுசுகாதாரக் கல்வி மையத்தின் கணக்கோ இப்படிக் கூறுகின்றது: "...வருடத்திற்கு 1,43,000 மக்கள் செத்து மடிவார்கள் என மதிப்பிடப் பட்டிருந்தது (மார்ச் 2003க்கு முன்னால்).  ஆனால் இன்றைய கணக்கு உண்மையில் இதை விடவும் அதிகம்".  "பேரழிவு ஆயுதங்கள் இருப்பதாக நாங்கள் பொய் சொன்னோம்" என அமெரிக்க  கனவான்களே அருள்கூர்ந்து ஒத்துக்கொண்டபின் "அங்கிருந்து வெளியேறு" என்று சொல்ல முடியாத அளவுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் நியாயவான்களும் பொதுச்செயலாளரும் இந்தியாவில் இருக்கின்ற அமெரிக்க விசுவாசிகளும் வாயில் என்ன வைத்திருக்கின்றார்கள் என்பதை திறந்துதான் பார்க்க வேண்டும்.  9/11ஆல் உண்மையில் பயனடைந்தவர்கள் யார்?  மூவர்தான்.  அல்-காய்தாவும் அமெரிக்க ஆயுத உற்பத்தி முதலாளிகளும் அவர்களது கூட்டாளிகளான குடியரசுக்கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சி அரசியல்வாதிகள்தான். இந்த இடத்தில்,  ஜூலை மாதம் இந்திய நாடளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற ரிலையன்ஸ் முதலாளி அம்பானியின் பணத்தை காங்கிரஸ், பாரதீய ஜனதா கட்சி என  இரண்டு பேரும் பங்கு போட்டுப் பிடித்துக் கொண்டதும், இந்த இரண்டு தேஷ்பக்த கட்சிகளுக்கும் ஏஜெண்டாக ஆயுத வியாபாரியான சமாஜ்வாடி பொதுச்செயலாளர் அமர்சிங் இருந்ததும் உங்கள் நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பல்ல.

...தொடரும்

திங்கள், நவம்பர் 21, 2011

கலயத்தில் உறங்கும் சாம்பலும் ஒரு ஜோடி காலணிகளும்-3







 ("இராக் நாட்டின் முக்கிய உற்பத்திப்பொருள் ப்ரோக்கோலி மட்டுமே என்றிருந்தால், நீங்கள் உங்களிடம் உள்ள கடைசி டாலர் நோட்டையும் வைத்து தைரியமாக  பந்தயம் கட்டலாம் - புஷ் இராக்கின் மீது படையெடுத்திருக்க மாட்டார்" -பிரிட்டிஷ் பத்திரிக்கையாளரான ராபர்ட் ஃபிஸ்க்)




ஸ்பானிய மன்னனின் வேட்டை நாயான கொலம்பஸ், அமெரிக்க மண்ணில் கால் வைத்த நொடியில் இருந்து தொடங்க வேண்டும்.  அதை அமெரிக்க பயங்கரவாதம் என்று சொன்னால் தவறில்லை.  வெள்ளையர்கள் குடியேற வெள்ளை மாளிகையைக் கட்டியவர்கள் ஆப்பிரிக்காவிலிருந்து குடியேற்றப் பட்ட கறுப்பு மக்கள் என்பது வரலாறு.  அந்த மாளிகையின் அஸ்திவாரமாக இருப்பது எது?  கொலம்பசால் கொன்று குவிக்கப்பட்ட லட்சக்கணக்கான செவ்விந்திய மக்களின் ரத்தமும் சதையும்.  சூது வாது ஏதும் அறியாத செவ்விந்திய மக்கள், கரையில் இறங்கிய கொலம்பஸ் கும்பலைக் கண்டு ஓடி வந்தபோது, அந்த மக்களை நோக்கி தன்னிடம் இருந்த துப்பாக்கியால் கொலம்பஸ் கண்மூடித்தனமாக சுடத்தொடங்கிய அந்த நொடியில் இருந்துதான் உலகளாவிய பயங்கரவாதம் பற்றிப் பேசத் தொடங்க வேண்டும்.  இயற்கையோடு இசைந்த சுகாதாரமான வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்த செவ்விந்திய மக்களுக்கு கொலம்பசும் அவன் கும்பலும் கொடுத்த பரிசு, தாங்கள் எடுத்துச் சென்ற பால்வினை நோய்களும் துப்பாக்கிச்சூடும்தான். எனவே உலகளாவிய பயங்கரவாதத்தைத் தொடங்கி வைத்தது அமெரிக்காதான் என்றால் அது தவறு இல்லை.   இது ஏதோ இன்றைய அரசியல் நிகழ்வுகளில் இருந்து  பின்னோக்கி அமெரிக்காவின் மீது வீண்பழி போடும் முயற்சி அல்ல, நீண்ட நெடிய வரலாற்று உண்மை.   தனது சுயநலனுக்காக எந்த நாட்டின் மீதும் ஆக்கிரமிப்பு நடத்தவும் உயிரியல், ரசாயன, பவுதீக, பொருளாதார.... என அனைத்து ஆயுதங்களையும் பிரயோகிக்க அமெரிக்கா என்றுமே தயங்கியது இல்லை.  1945 ஹிரோஷிமா, நாகசாகி  அணுகுண்டு வீச்சு என்பது உண்மையில் ஒரு சோதனைதான்.  அணுகுண்டு வீசினால் உயிருள்ள மக்களும், பிற உயிரினங்களும், ஜடப்பொருட்களும் என்ன ஆகின்றன என்று சோதித்துப் பார்க்க விரும்பிய அமெரிக்க  பயங்கரவாதிகளுக்கு, சோதனை எலிகளாகத்தான் அன்றைக்கு அப்பாவி ஜப்பானிய மக்கள் பயன்படுத்தப்பட்டார்கள்.  இது அமெரிக்காவின் உலகளாவிய பயங்கரவாதம் இல்லையா?


இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ். கும்பல் செய்கின்ற 'பயங்கரவாத' எதிர்ப்பு பிரச்சாரத்திலும், அமெரிக்க ஏகாதிபத்தியம் தொடர்ந்து செய்து வருகின்ற 'பயங்கரவாத' எதிர்ப்பு பிரச்சாரத்திலும் ஒரு குறிப்பிட்ட மதத்தவர் - இஸ்லாமிய மக்கள் - உலகமக்களின் எதிரியாக நிறுத்தப்படுவது, ஒரு 'பொது எதிரியாக’ அடையாளப் படுத்தப்படுவது தற்செயலானதா திட்டமிடப்பட்டதா என்ற கேள்விக்கான பதிலை வரலாறு திட்டவட்டமாக வைத்திருக்கின்றது.


1900த்தின் முற்பகுதியில், ஈரானில் எண்ணெய் வளம் கண்டு பிடிக்கப்பட்ட பின் அமெரிக்க பயங்கரவாதத்தின் இலக்கு அரபுப் பிரதேசத்தின் மீது விழுந்தது.  அதன் நாடு பிடிக்கும் கொள்கை, கூடவே லத்தீன் அமெரிக்க, மத்திய கிழக்கு, அரபு நாடுகளில் ஒரு ரவுடியைப் போல் நுழைந்து கத்தியை வீசுகின்ற பயங்கரவாதப்போக்கு, இந்த நாடுகளின் மக்கள் மத்தியில் அமெரிக்காவுக்கு எதிரான தீராத பகையுணர்வைத் தோற்றுவிக்க காரணமாக இருந்தது.  அமெரிக்காவின் தந்திரமே அதுதான்!  அடுத்தவன் வீட்டுக்குள் அதிரடியாக ஒரு நாய் போல நுழைவது, அவனை வலுக்கட்டாயமாக எதிரியாக்குவது, அவன் திருப்பி அடிக்கும்போது அவனை 'தீவிரவாதி'யாக முத்திரை குத்துவது, 'பயங்கரவாதம்' பற்றி பேசுவது, அதன் பின் தான் ஏற்கனவே திட்டமிட்டு வைத்திருக்கும் மறைமுக செயல்திட்டங்களை (அஜெண்டா) அதிவேகமாக நிறைவேற்றுவது!  


இராக்கிலும் ஆஃப்கானிஸ்தானிலும் நுழைவதற்கான திட்டம் ஏற்கனவே அமெரிக்காவிடம் இருந்த திட்டம்தான்.  ஆனால் நுழைவதற்கான வாய்ப்பை, காரணத்தை மட்டும் எதிர்பார்த்திருந்தபோது, அமெரிக்காவால் கொம்பு சீவி வளர்க்கப்பட்ட பின்லாடனும் அல்-காய்தாவும் வழி ஏற்படுத்திக்கொடுத்தார்கள்.  9/11ஐ ஒரு காரணமாகச் சொல்லிக்கொண்டு இராக்கில் பேரழிவு ஆயுதங்கள் இருப்பதாக ஒரு பொய்க்காரணத்தைப் பரப்பி இராக்கில் நுழைந்தது, சதாம் உசேனையும் கொன்றது, இராக்கின் எண்ணெய் எடுக்கும் தனது நோக்கத்தை நிறைவேற்றிக் கொண்டது.  60 வருடங்களுக்கும் மேலாக பாலஸ்தீன மக்களைக் கொன்று குவிக்கும் இஸ்ரேல் என்ற வெறிநாய்க்கு கறிபோடும் எஜமானாக இருப்பது அமெரிக்காவே.  அமெரிக்கா மட்டும் அல்ல, இதர ஐரோப்பிய நாடுகளையும் சொல்லலாம்.  எகிப்தில் நெப்போலியன் ஆக்கிரமிப்பும் அதனைத் தொடர்ந்த எகிப்திய கலாச்சார அழிவும் (கிறிஸ்து பிறப்பதர்கு முந்தைய பழம்பெரும் சின்னமான ஸ்ஃபிங்க்ஸ் சிலையின் முகத்தில் இப்போது நாம் பார்க்கும் வடுக்கள், குழிகள் யாவும் நெப்போலியனின் படைகளால் ஏற்படுத்தப்பட்டவை, தங்கள் பீரங்கிகளால் ஸ்ஃபிங்க்சின் முகத்தை சுட்டார்கள்), அலெக்சான்ட்ரிட்யாவின் புகழ்பெற்ற பண்டைய காலத்து நூலகத்தை அழித்தது, லிபியாவில் முசோலினி ஆக்கிரமிப்பு, அல்ஜீரியாவில் ஃப்ரான்ஸ் ஆக்கிரமிப்பு, பாலஸ்தீனத்தில் இஸ்ரேலின் அழிச்சாட்டியம், இரானையும் இராக்கையும் மோதவிட்டு ஆயுத விற்பனை செய்த தந்திரம்...எனத் தொடர்கின்றது.  அமெரிக்காவின் நோக்கம் பெட்ரோலியத்தை திருடுவதாக இருக்கலாம், ஆனால் பெட்ரோலிய வள நாடுகள் இயற்கையாகவே இஸ்லாமிய நாடுகளாக  இருக்கும்போது, அங்கே மேற்கத்திய நாடுகளின் ஆக்கிரமிப்பும் அழித்தொழிப்பும் இஸ்லாமிய மண்ணின் கலாச்சார, மத அடையாளங்களுக்கு எதிரான ஆக்கிரமிப்பாகவும் அழிவு வேலையாகவும் அமைந்து விடுகின்றது.  அரபு பிராந்திய இஸ்லாமிய மக்களின் கோபத்தைத் தூண்ட முக்கிய காரணமாக இருப்பது, அமெரிக்கா தங்கள் மண்ணில் உள்ள பெட்ரோலியத்தை சுரண்டி எடுப்பது மட்டும் அல்ல - தங்களின் நீண்ட பாரம்பரிய, மத, கலாச்சார அடையாளங்களுடன் கூடிய அன்றாட வாழ்க்கையை சீரழித்ததையும், தங்கள் மண்ணின் மத, கலாச்சார அடையாள சின்னங்களை அழித்ததையும், மொத்தத்தில் அமெரிக்காவின் படையெடுப்பை தங்கள் மதத்தின் மீதான, கலாச்சாரத்தின் மீதான படையெடுப்பாக, இன அழிப்பாக அவர்கள் பார்த்தார்கள், பார்க்கின்றார்கள். 


பிரிட்டிஷ் பத்திரிக்கையாளரான ராபர்ட் ஃபிஸ்க் இவ்வாறு கூறுகின்றார்: "இராக் நாட்டின் முக்கிய உற்பத்திப்பொருள் ப்ரோக்கோலி
மட்டுமே என்றிருந்தால், நீங்கள் உங்களிடம் உள்ள கடைசி டாலர் நோட்டையும் வைத்து தைரியமாக  பந்தயம் கட்டலாம் - புஷ் இராக்கின் மீது படையெடுத்திருக்க மாட்டார்" (டால் டி'மோன்டி எழுதிய கட்டுரை, தி ஹிண்டு, 2008 டிசம்பர் 7).

...தொடரும்




சனி, நவம்பர் 19, 2011

கலயத்தில் உறங்கும் சாம்பலும் ஒரு ஜோடி காலணிகளும்-2





















     

(ஆர்.எஸ்.எஸ். கும்பல் ஆட்சியில் இருந்தபோது,  தான் ஆட்சியில் இல்லாவிட்டாலும் எதிர்காலத்தில் இந்திய அரசு எந்திரத்தை தனது இந்துதுவா ஆசாமிகள் நடத்த வேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வையுடன், பல்கலைக்கழக மானியக்குழு, இந்திய வரலாற்று ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐ.சி.ஹெச்.ஆர்), இந்திய தொல்லியல் துறை, உயர்கல்விக்கான பாடத்திட்டங்களை வடிவமைக்கின்ற குழுக்கள், நீதிமன்ற நீதிபதிகள், ராணுவத்தின் உயர் அதிகாரிகள் என முக்கிய இடங்களில் இந்துதுவா ஆர்.எஸ்.எஸ். வெறியர்களைக் கொண்டு திட்டமிட்டு நிரப்பியது)


1948 ஜனவரி 20, 31 ஆகியவற்றின் தொடர்ச்சியாக, அடுத்த ஒருங்கிணைக்கப்பட்ட பயங்கரவாத நிகழ்வாக, 1984 இந்திரா காந்தி படுகொலையைத் தொடர்ந்து சீக்கிய இன மக்களுக்கு எதிரான காங்கிரசார் நடத்திய  கொலைவெறித்தாண்டவத்தை சொல்லலாம்.  இன்று மத்திய ஆட்சியில் மந்திரிகளாக இருக்கின்ற, நுனிநாக்கு ஆங்கிலம் பேசுகின்ற பல கனவான்கள், அன்று டெல்லி வீதிகளில் கத்தியோடும் கட்டாரிகளோடும் பெட்ரோல் கேன்களோடும் பல சீக்கியர்களைக் கொன்று குவித்த பேர்வழிகள், கடைகளைச் சூறையாடிக் கொள்ளை அடித்தவர்கள். இந்தப் படுகொலைகளை ராஜீவ் காந்தி இப்படி நியாயப்படுத்தினார்: ‘ஒரு பெரிய மரம் விழுந்தால் நிலம் அதிரத்தான் செய்யும்’. மரம் மட்டுமல்ல, மரத்தின் கனத்துக்கு மயிர் விழுந்தாலும் நிலம் அதிரும் என்பது அவருக்குத் தெரியாது.
இதன் பின் நிகழ்ந்த மிகப்பெரும் திட்டமிடப்பட்ட, ஒருங்கிணைக்கப்பட்ட பயங்கரவாதமாக 1992 டிசம்பர் 6 அயோத்தி பாபர் மசூதி இடிப்பும் அதனைத் தொடர்ந்த முஸ்லிம் மக்களுக்கு எதிரான ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி. கொலைவெறித்தாண்டவமும், இதற்கு எதிர்வினையாக நாடெங்கும் நடந்த குண்டுவெடிப்புக்களும்.  இந்த கொலைதாண்டவத்துக்கு தலைமை தாங்கி நடத்தியவர் பிற்காலத்தில் இந்தியாவின் உள்துறை அமைச்சராகவும், துணைப்பிரதமராகவும், அதன் பின் நாடாளுமன்ற எதிர்க்கட்சித்தலைவருமாக அதிக பட்ச இசட் பிரிவு பாதுகாப்புடன் ஊர் சுற்றுகின்றார்.  இந்த நபர் இப்போது தானே அடுத்த பிரதமர் என்ற கனவுடன் ஊர் ஊராக பிரச்சாரம் செய்து வருகின்றார்.  ஆனாலும் ஆச்சரியம் இல்லை.  இந்திய ஜனநாயகம் இதை அனுமதித்துள்ளது. பாரத் மாதா கீ ஜே!  தொடர்ச்சியாக, ஒரிசாவில் ஸ்டெயின்ஸ் பாதிரியாரையும் அவர் பிள்ளைகளையும் வைக்கோல் போரில் போட்டு உயிரோடு கொளுத்தியது, அதே ஒரிசாவிலும் குஜராத்திலும்  கிறித்துவ, முஸ்லிம் மக்களை நடு வீதியில் கத்தியால் கிழிப்பது, அவர்கள் பெண்களை கூட்டாக வன்புணர்ச்சி செய்வது, நிர்வாணமாக ஊர்வலம் வரச்செய்வது, கர்ப்பிணியாக இருந்தால் வயிற்றைக் கிழித்து சிசுவை தீயில் போட்டு வாட்டுவது, சிறுவர் சிறுமிகளை அறுத்து எறிவது எனத் தொடரும் ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி., பஜ்ரங் தள், விஷ்வ இந்து பரிஷத், சிவ சேனா போன்ற பயங்கரவாத இயக்கங்களைப் பற்றிப் பேசாமல் இந்தியாவில் பயங்கரவாதம் பற்றிய விவாதம் முழுமை பெறாது.  


ஆர்.எஸ்.எஸ். கும்பல் ஆட்சியில் இருந்தபோது,  தான் ஆட்சியில் இல்லாவிட்டலும் எதிர்காலத்தில் இந்திய அரசு எந்திரத்தை தனது இந்துதுவா ஆசாமிகள் நடத்த வேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வையுடன், பல்கலைக்கழக மானியக்குழு, இந்திய வரலாற்று ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐ.சி.ஹெச்.ஆர்), இந்திய தொல்லியல் துறை, உயர்கல்விக்கான பாடத்திட்டங்களை வடிவமைக்கின்ற குழுக்கள், நீதிமன்ற நீதிபதிகள், ராணுவத்தின் உயர் அதிகாரிகள் என முக்கிய இடங்களில் இந்துதுவா ஆர்.எஸ்.எஸ். வெறியர்களைக் கொண்டு திட்டமிட்டு நிரப்பியது ஆர்.எஸ்.எஸ். கும்பல்.  தேசத்தின் கல்வி, கலாச்சார, நீதி நிர்வாக, அறிவுசார் துறைகளைக் கைப்பற்றுவதில் ஆர்.எஸ்.எஸ். கும்பல் வெற்றி பெற்றது.  அன்றைக்கு இது பற்றி தொடர்ந்து பேசிய இடதுசாரிகள், கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக தங்கள் ஆதரவுடன் இருந்த ஒரு ஆட்சியின் காலத்தில் (ஐக்கிய முற்போக்கு கூட்டணி-1) இது பற்றி எதுவுமே பேசவில்லை, இத்தகைய நபர்களைக் களையெடுக்க குரல் கொடுக்கவும் இல்லை, சிறிதளவு முயற்சியையும் கூட செய்யவில்லை என்பது கவலைக்குரிய விசயம்.  எனவே கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய ஆட்சியை நடத்தியது, இப்போதும் நடத்துவது ஆர்.எஸ்.எஸ். ஆட்கள்தான், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அல்ல என்று சொன்னால் தவறில்லை, உரக்கவே சொல்லலாம்.  நாம் வாய் மூடி மவுனமாக இருந்தால் எதிர்காலத்திலும் அவர்கள்தான் நடத்துவார்கள்.

 மாலேகாவ் குண்டு வெடிப்பையும், தமிழகத்தின் தென்காசி ஆர்.எஸ்.எஸ். அலுவலக குண்டுவெடிப்பையும் நடத்தியவர்கள் ஆர்.எஸ்.எஸ். பேர்வழிகளே என்று இப்போது தெரிகின்றது, பேசப்படுகின்றது.  ஆனால், காஷ்மீரில் போலி என்கவுன்டர்களை நடத்தி அப்பாவி 16, 17 வயது முஸ்லிம் பையன்களை சுட்டு வீழ்த்தி தங்களது பதவி உயர்வுக்கு வழி செய்து கொண்ட இந்துத்துவா ராணுவ அதிகாரிகளைப் பற்றி சில காலம் முன்பு செய்தி வந்தது.  ஆனால் இது பற்றி அதன் பின் எந்த விதமான தகவலும் இல்லை.  மாலேகாவ் குண்டுவெடிப்பைப் போலவே, தென்காசி குண்டுவெடிப்பைப் போலவே, இந்த போலி என்கவுன்டர் + பதவி உயர்வுது குறித்தும், இதுவரை நிகழ்த்தப்பட்ட ராணுவ, போலீஸ் துப்பாக்கிச்சூடுகள், என்கவுன்டர்களில் எங்கேயெல்லாம் முஸ்லிம் மக்கள் கொல்லப்பட்டார்களோ அவை அனைத்தையும் மீண்டும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று கேட்பதிலும் நியாயம் உள்ளது. 


இந்திய பயங்கரவாதத்தின் தொடக்கப்புள்ளி 1948 ஜனவரி 20 என்றால், நவீன கால உலகளாவிய பயங்கரவாதத்தை எங்கே இருந்து பேசத் தொடங்குவது?  

....தொடரும்.

கலயத்தில் உறங்கும் சாம்பலும் ஒரு ஜோடி காலணிகளும்-1


(2008 நவம்பர் மாதம் பாகிஷ்தானில் இருந்து கடல் வழியாக மும்பையில் நுழைந்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியது குறித்து புதுவிசை ஜனவரி-மார்ச் 2009 இதழில் எழுதிய கட்டுரை)



(நமது மக்கள் அப்பாவிகள். தீவிரவாதிகள் என்றால் கறுப்பு நிறத்துடன், சவரம் செய்யப்படாத முகத்துடன், முக்கியமாக தாடியுடன், அழுக்கு உடையுடன், கையில் ஏ.கே.47 துப்பாக்கி, மார்பில் சுற்றப்பட்ட தோட்டா மேகசைன், கழுத்தில் சயனைடு குப்பியுடன், உருது பேசுபவனாக இருப்பதாகவே நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள். தீவிரவாதிகள் வெள்ளை நிறத்துடன், சுத்தமாக சவரம் செய்யப்பட்டு அழகாக, (முந்தைய ஒன்றுபட்ட இந்தியாவின்) லாஹூர் கல்லூரியில் படித்து பட்டம் பெற்றவனாக, இலக்கணம் தப்பாமல் ஆங்கிலம் பேசுபவனாக, முன்னாள் துணைப்பிரதமர்களாக, நாடாளுமன்ற எதிர்க்கட்சித்தலைவராக, எதிர்கால பிரதமர் கனவுகளுடன் அதிக பட்ச இசட் பிரிவு போலீஸ் பாதுகாப்புடன் வலம்வருபவர்களாகவும் இருக்கின்றார்கள் என்பதை நம் மக்களுக்கு எடுத்துச்சொல்ல வேண்டியிருக்கின்றது)
மீண்டும் ஒரு முறை உலகளாவிய பயங்கரவாதம் பற்றி வாய் ஓயாது பேசிச்சலித்தாகி விட்டது. கூடவே யாரும் சந்தேகப்பட்டுவிடாமல் இருக்க மறக்காமல் தேஷ்பக்தியைப் பற்றியும் உணர்ச்சிவசப்பட்டு முழங்கி, "அரசியல்வாதிகளையெல்லாம் சுட்டுக் கொல்லணும்பா, பாரு, வரிக்கட்டுறோம், ஆனா உசிருக்கு பாதிகாப்பு இல்லே, இனிமே எதுக்கு வரிக்கட்டணும்?" போன்ற தேஷ்பக்த வாதங்களை முன்வைத்த திருவாளர் மிடில்கிளாஷ், வழக்கம் போல் டி.வி. பார்த்து, "சூப்பரா பாலைத் தூக்குனாம் பாரு, நான் நினச்சமாறியே சிக்சர்...ஆனா அநியாயமா அவுட்டானாம்பா.." என்று சாராயவியாபாரி விஜய்மல்லையாவின் குதிரை லாயத்தில் புதிதாகக் கட்டப்பட்ட கிரிக்கெட் குதிரைகளின் இரண்டுகால் பாய்ச்சல் பற்றி சிலாகித்து புழகாங்கிதம் அடைந்து மல்லாக்கப்படுத்து தூங்கப் போய்விட்டார்.
நான் சொல்ல வருவது 'இந்தியத்தொலைக்காட்சிகளில் முதல்முறையாக நேரடியாக ஒளிபரப்பப்பட்ட 66 மணிநேர பயங்கரவாதம்' பற்றித்தான் என்று நீங்கள் ஊகித்திருந்தால் அடுத்த மாத கேபிள் டி.வி.சந்தாவை உங்களுக்காக நான் கட்டுவேன். அது பயங்கரவாதமா கிரிக்கெட்டா என்று குழப்பம் வருகிற அளவுக்கு சி.என்.என். நேரடி ஒளிபரப்பில் கீழ்மூலையில் ஸ்கோர் போடப்பட்டது. இறுதியாக 10 பயங்கரவாதிகள் சேர்ந்து 183 கொலைகள் செய்ததாக இறுதி ஸ்கோர் காட்டியது. இப்படி நான் சொல்வதால் பயங்கரவாதமும் கிரிக்கெட்டும் ஒன்றா என்று நீங்கள் கேள்வி கேட்டால், என் உறுதிமொழி வாபஸ், நான் கிரிக்கெட்டின் தாய்வீடான இங்கிலாந்தின் பிரதமரைக் கேட்டுத்தான் பதில் சொல்ல முடியும், அது வரை நீங்கள் காத்திருக்கலாம்.
நவம்பர் 26ஆம் தேதி இரவு 1030 மணிக்கு மும்பை சத்ரபதி சிவாஜி ரயில்வே ஸ்டேஷனில் நுழைந்த இரண்டு தீவிரவாதிகள் சரமாரியாகச் சுட்டதாகவும் ஒரு ரவுண்ட் சுட்டபின் மேகசனை மாற்றி மீண்டும் புது மேகசைன் மாற்றும் அளவுக்கு கால அவகாசம் இருந்ததாக அனைத்தையும் நேரில் பார்த்துக் கொண்டிருந்த நேர அறிவிப்பாளரான விஷ்ணு தத்தாராம் ஜெண்டே கூறுகின்றார். அதன்பின் சாவகாசமாக டாக்சியைக் கைப்பற்றி தாஜ் ஓட்டலுக்கு சென்றதாகவும்...மீண்டும் மறுஒளிபரப்பு அவசியமில்லை என்பதால் விசயத்துக்கு வருகின்றேன். இந்த பயங்கரவாதத் தாக்குதலால் பயனடைந்தவர்கள் என்று இரண்டு பேரைக் கூற முடியும்- மீண்டும் ஒருமுறை தங்கள் தேஷ்பக்தியை நாடெங்கும் ஓடவிட்டு சிறுபான்மை மக்களுக்கு எதிரான உள்நோக்க அரசியலைக் கட்டவிழ்த்து விட்ட ஆர்.எஸ்.எஸ்., அதன் அரசியல் முகமூடியான பி.ஜே.பி.; உலகளாவிய பயங்கரவாதத்தை வேரொடு அறுக்க அவதாரம் எடுத்த உலகரட்சகன் அமொ¢க்காவும் அதன் ஆயுத உற்பத்தியாளர்களும். டி.வி, செய்தித்தாள், இணையதளம் போன்ற ஊடகங்கள் 'இழவு வீட்டில் காசு வைத்து சூதாடி' நேரடி ஒளிபரப்பு செய்து தங்கள் பாக்கெட்டை நிரப்பிக்கொண்டதுடன், மேற்படி ஆர்.எஸ்.எஸ். + அமெரிக்க கூட்டணிக்கு பிரச்சாரம் செய்து எஜமான விசுவாசத்தையும் காட்டிக் கொண்டன, ஒரே கல்லில் ரெண்டு மாங்காய். அதற்கு அடுத்து வந்த நாட்களில் இங்கிலீஷ், டமில் என எல்லா சானல்களிலும் வெள்ளையும் சொள்ளையுமான நபர்கள் உட்கார்ந்துகொண்டு பயங்கரவாதம் பற்றி உணர்ச்சிவசப்பட்டு பேசிப்பேசி மாய்ந்து போனார்கள். மூக்கைச் சிந்தி அழவில்லை என்பதுதான் பாக்கி. இதை ஊடக பயங்கரவாதம் என்று ஏன் சொல்லக்கூடாது?
மும்பை பயங்கரங்கள் குறித்து விலாவரியாகப் பேசுவதானால், அதற்கு முன் இரண்டு கேள்விகளைப் பற்றிப் பேச வேண்டும். விடுதலை பெற்ற இந்தியாவின் பயங்கரவாதத்தை எங்கே இருந்து தொடங்குவது? உலகளாவிய பயங்கரவாத்தை எங்கே இருந்து தொடங்குவது? இந்த இரண்டு கேள்விகளையும் பேசாமல் பயங்கரவாதம் பற்றியும் தேஷ்பக்தி பற்றியும் உணர்ச்சிவசப்பட்டு பேசினால் இரத்த அழுத்தம் ஏறுவதைத் தவிர வேறு ஒரு பிரயோசனமும் இல்லை.
1947க்குப் பின்னான இந்தியாவின் பயங்கரவாதம் என்பது ஆகஸ்ட் 15க்கு முன்னதாகவே தொடங்கி விட்டது. அதன் உச்சகட்டம்தான் பிரிவினையின் போது வடக்கு, வட மேற்குப்பகுதிகளிலும் அதிகபட்சமாக பஞ்சாபிலும் நடந்த கொடூரங்கள். இதைப்பற்றி தனியேதான் எழுத வேண்டும். இந்தப் படுகொலைகளில் ஈடுபட்டவர்கள் இந்து, முஸ்லிம், சீக்கியர் என்று அனைத்துத்தரப்பாரும் இருந்தார்கள். அநேகமாக இந்தப்படுகொலைகள் அனைத்தும் எந்த விதமான திட்டமிடலும் இல்லாமல், அன்றைக்கு நிலவிய சூழ்நிலையில் உணர்ச்சிவசப்பட்ட நிலையிலும் ஒரு மதத்தவர் மேல் மற்றவர் கொண்ட எதிர்ப்பு உணர்வாலும் நிகழ்ந்தவை, தனிநபர்களாலும் கூட்டமாகவும் நடத்தப்பட்டவை என்று கூறலாம்.
ஆனால் முதல்முதலாக, சுதந்திர இந்தியாவின் நன்கு திட்டமிடப்பட்ட, தனிநபர் மீதான ஒரு படுகொலை என்பது ஆர்.எஸ்.எஸ்.ஆல் நடத்தப்பட்டது. அதன் இலக்கு மஹாத்மா காந்தியடிகள். படுகொலைக்கு ஒரே ஒரு காரணம் மட்டுமே இருந்தது: அவர் இந்து-முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்தினார். எனவே 1948 ஜனவரி 20இலிருந்து பேசத்தொடங்குவதுதான் சரியாக இருக்கும். அன்றைக்கு பிர்லா மாளிகையில் காந்தியார் கூட்டத்தில் பேசும்போது, அதற்கு பத்தடிகள் பின்னால் உள்ள அறையிலிருந்து நாதுராம் கோட்சே வெடிகுண்டை வீச வேண்டும், கூட்டத்தில் கலந்துவிட்ட மதன்லால் பாவா காந்தியாரை துப்பாக்கியால் சுட வேண்டும் என்பதே திட்டம். ஆனால் அவர்களே எதிர்பாராத விதமாக, அந்த அறையின் ஜன்னல், தரையிலிருந்து எட்டு அடி உயரத்தில் இருந்ததால் அன்றைய முயற்சி வெறும் வெடி குண்டு வீச்சோடு முடிந்தது, காந்தியார் இன்னும் ஒரு பத்து நாள் உயிரோடு இருந்தார். ஜனவரி 30 அன்று நாதுராம் கோட்சே அடுத்த முயற்சியில் காரியத்தை நிறைவேற்றினான். இந்து வைஸ்யரான மோஹன்தாஸ் கரம்சந்த் காந்தியை இந்து சித்பவன் பிராமணனான கோட்சே சுட்டுக் கொன்றான் (இந்துக்களே, ஒன்று படுவீர்! இந்துக் கடைகளிலேயே சாமான் வாங்குவீர், துப்பாக்கி வாங்குவீர்!) இப்படுகொலையைத் திட்டமிட்ட அனைவரும் இந்துக்களே - கோபால் கோட்சே, அவன் தம்பி நாதுராம், மதன்லால் பாவா, கார்காரே, திகம்பர் பாட்கே,நாரயண் ஆப்தே, வீர சாவர்க்கார். (மாலேகாவ் குண்டுவெடிப்பில் ஈடுபட்ட இந்துதுவா தீவிரவாதிகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த போலீஸ் அதிகாரியின் பெயரும் ஹேமந்த் 'கார்காரே' என்பது வேடிக்கை!). இந்தியாவில், ஒரு அரசியல் தலைவர் மீதான முதல் படுகொலையை நடத்தியது இந்துத்வா பயங்கரவாதம்தான் என்பதையும், "இந்து முஸ்லிம் ஒற்றுமையை" வலியுறுத்தியதற்கு எதிராகத்தான் அது நடத்தப்பட்டது என்பதையும் நாம் அழுத்தமாகப் பதிவு செய்ய வேண்டும்.
அன்றைக்கு கோட்சே செய்திருந்த ஆண்குறித்தோல் நீக்கமும் (இஸ்லாமிய மதச்சடங்கு), கையில் குத்தியிருந்த இஸ்மாயில் என்ற முஸ்லிம் பெயரும் எதிர்கால இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ். என்ன செய்யப் போகின்றது என்பதை அறுதியிட்டுச் சொல்வனவாகவும் இரண்டு செய்திகளை விட்டுச் செல்வனவாகவும் இருந்தன. ஒன்று, அவர்களது நோக்கம்: சர்வதேச அளவில் கவனத்தைப் பெற்ற, காலமெல்லாம் இந்து-முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்திய தேசப்பிதா என்று அழைக்கப் பட்டவரை ஒரு முஸ்லிம் கொன்று விட்டான் என்ற செய்தியைப் பரப்புவதன் மூலம், இந்தியாவில் உள்ள முஸ்லிம் மக்களுக்கு எதிராக மட்டுமல்ல, சர்வதேச அளவில் முஸ்லிம் மக்களுக்கு எதிரான வெறுப்புணர்வைத் தூண்டி விடுவது, அனைத்து மத மக்களையும் 'முஸ்லிம் பயங்கரவாதத்துக்கு' எதிராகத் தூண்டி விடுவது. இரண்டு: அவர்களது இந்துத்வா, அகண்ட பாரதம் குறித்த மதிப்பீடுகளுக்கு நம்மால் வர முடிந்தது: இந்துத்வாதத்துவம் என்பது சூப்பர் டூப், புரட்டு; அது உள்ளீடற்ற ஒரு வறட்டுத் தத்துவம், நியாயமான தர்க்கவாதம் செய்யத்தக்க அளவுக்கு அடிப்படை நியாயம் ஏதும் அற்றது. ஹிட்லா¢ன் நாஜியிசத்துக்கு நூறு சதவீதம் ஈடானது. எனவேதான் ஒரு பரந்த வெகுஜன வெளியில் திறந்த விவாதத்தில், தர்க்க விவாதத்தில் தம்மால் ஜெயிக்க இயலாது என்று தொ¢ந்து கொண்ட ஆர்.எஸ்.எஸ். கும்பல், ஹிட்லர் கையில் எடுத்த "வன்முறை, அடாவடித்தனம், எதிர்ப்பவர்களைக் கொன்று விடுவது" என்ற அதே வழிமுறையைக் கையில் எடுத்தது.
இன்றைய நிலையில் பயங்கரவாதத்தை அல்லது இஸ்லாமிய பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்டிவிட்டுத்தான் மறுவேலை என்று கங்கணம் கட்டிக்கொண்டு முதுகு வரை வாயைக் கிழித்துக்கொண்டு பேசும் ஊடகங்களும் ஆட்சியாளர்களும் கூட 1948 ஜனவரி 20, 30 பற்றியோ கோட்சேவின் முஸ்லிம் வேசம் பற்றியோ பேசாமல் மிக ஜாக்கிரதையாக இருக்கின்றார்கள். அநேகமாக இனிமேல் பேச மாட்டார்களோ என்ற சந்தேகம் வருவதற்கு காரணம் உண்டு. காரணம், நமது பள்ளி, கல்லூரி பாடப்புத்தகங்களில் கூட "காந்தியாரை ஒருவன் சுட்டான்" என்ற ஒற்றை வர்யோடு காந்தியாரின் வரலாறு அல்லது கதை முடிந்து போகின்றது என்பது தற்செயலான ஒன்றல்ல. மத்திய, மாநில கல்வித்திட்டங்களை இயற்றுகின்ற பொறுப்பில் உள்ளவர்களும், இந்திய வரலாற்றை எழுதுகின்ற அதிகாரிகளும், பல்கலைக்கழக மானியக் குழுவில் இருக்கின்ற கனவான்களும் கோட்சேவின் தம்பிகளாகத்தான் இருக்கின்றார்கள் என்பதைச் சொல்ல யாரும் தயங்க வேண்டாம். காந்தியாருக்கு நமது அரசு அதிகாரிகள் பரிவோடு செய்கின்ற அதிக பட்ச மரியாதை என்பது, அக்டோபர் 2 பொது விடுமுறை (அன்று டி.வி.யில் இந்தியத்தொலைக்காட்சியில் முதல் முறையாக சில தொடைகளைப் பார்க்கலாம்), ஜனவரி 30 அன்று 11 மணிக்கு ஒரு 'சங்கு'. அநேகமாக அடுத்த சம்பளக்கமிஷன் தலைவர், "எதுக்கு இதெல்லாம்" என்ற கேள்வி கேட்டு இதற்கும் சங்கு ஊதி விடுவார் என்ற சந்தேகம் உள்ளது.

...தொடரும்

வியாழன், நவம்பர் 17, 2011

அம்மான்னா சும்மாவா?


                                                                  அம்மான்னா சும்மாவா?
அம்மான்னா சும்மாதான்!
ஆனா இது சாதா அம்மாவா?
இட்லியில் ஸ்பெசல் இட்லி
தோசையில் ஸ்பெசல் தோசை
வார்டிலும் ஸ்பெசல் வார்டு
அட! கக்கூசிலும் ஸ்பெசல் கக்கூஸ் இருக்க
அம்மா மட்டும் சும்மாவா?
இது ஸ்பெசல் அம்மா!
மனுநீதி காத்த அம்மா!
சூத்திரர்கள் முதுகேறிப் பயணம் செய்து
ஆரிய அரியாசனம் ஏறிய ஸ்பெசல் அம்மா!
ஸ்வாஹா!


பேய் ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரம்!
சூத்திரனின் கல்வியும் அறிவும்
ஸ்பெசல் அம்மாவுக்கு மூத்திரம்!
ஸ்வாஹா!


அரசு ஊழியர்கள்
சாலைப்பணியாளர்கள்
மக்கள் நலப்பணியாளர்கள்...
அடச்சீ! சூத்திரர்கள் என்று சொல்லடா!


சமச்சீர்
சமநீதி
புத்தகம்
நூலகம்...
அட! மநுவின் காதில் விழக்கூடுமோ, தீட்டு!


மனிதருசி கண்ட புலியும்
சூத்திர ருசி கண்ட வாளும் சும்மா கிடப்பதில்லை!


அது சம்புகனின் தலைசீவிய வாள்
ஏகலைவனின் விரல் சீவிய வாள்
நந்தனின் உயிரை நறுவிசாய் பறித்த வாள்!


உரையில் உறங்குவதாக பொய் சொல்லப்பட்ட
மநுவின் வாள் மீண்டும் ஒரு முறை வெળியே வந்தது
படிந்திருந்த குருதியின் கனம் தாஙகாமல்
ஒரு கணம் தடுமாறினாலும்
மீண்டும் ஒரு முறை உயர்ந்து அடங்கியது
காரியம் கச்சிதமாக முடிந்தது
ஸ்வாஹா!


யாரங்கே?
வேதகாலப்பழமையான அண்டாக்களை
மீண்டும் அடுப்பில் ஏற்றுங்கள்
ஈயத்தை காய்ச்சுங்கள்
சூத்திரர்கળின் காதுகளை
அகலத்திறந்து வையுங்கள்


யாரங்கே?
அண்டாக்கળின் கீழே அடுப்பெரிக்க
சூத்திர நூலகத்தின் தூண்களையும்
சூத்திர நுலகத்தின் நூல்களையும்
பெயர்த்தெடுத்துப் போடுங்கள்
ஆரிய நெருப்பு
ஆகாயம் முட்டும் எரியட்டும்!
ஸ்வாஹா!

ஞாயிறு, நவம்பர் 13, 2011

புள்ளியில் இணையா நெடும்பயணம்

தினமும் நடந்து செல்லும் கால்கள் பழகிய அதே பாதைதான்
இன்று ஒரு கிளை முறிந்து தலையில் விழுந்தது 

எப்போதும் என்னை மறந்து நீந்தும் நீச்சல் குளம்தான்
இன்று கீழிருந்து கொடிகள் எழும்பி 
கால்களை சுற்றி இறுக்கிப் பிடித்து உள்ளே உள்ளே இழுத்தன 
நுரையீரல் வெடிக்க வெடிக்க   

எப்போதும் கையில் தூக்கி எடுத்து கொஞ்சும் குழந்தைதான் 
இன்று கன்னத்தில் ரத்தம் வரக் கீறியது
நகம் என்று நினைத்தேன்
ஆனால் உள்ளங்கையில் சிறு கத்தி இருந்தது 

ரோஜாசெடி என்றெண்ணி நீருற்றி வளர்த்தேன்
துளிர்க்கும் கணத்தை நொடி தோறும் எதிர்பார்த்தேன் 
ஒருநாள் சிறு இலை துளிர் விட்டது கண்டு துள்ளி குதித்தேன்
உற்றுப்பார்த்தேன் அது கருவேல முள்ளாக இருந்தது  

கண்மூடிக்கிடந்த தினத்தில் இருந்தே எடுத்து வளர்த்தேன்  
எப்போதும் என் உள்ளங்கையிலும் மடியிலும் சுருண்டு சுகமாய் தூங்கும்
புட்டிப்பாலை சப்பிசப்பிக் குடிக்கும் 
ஒருநாள் தோலில் வரிகள் தோன்றின...
அவை புலியின் வரிகளாய் இருந்தன 

நட்பும் துரோகமும் ஒன்றுக்கொன்று இணையாகவே பயணிக்கின்றன 
தண்டவாளங்களைப்போல்
ஆயினும் ஒரு புள்ளியில் ஒன்றாக ஒரு நாளும் இணைவதில்லை 
ஆயினும் ஒன்றுக்கொன்று இணையாகவே பயணிக்கின்றன.

திங்கள், நவம்பர் 07, 2011

நல்ல காலம் பொறக்குது...நல்ல காலம் பொறக்குது....புதிய கோடாங்கி அப்துகலாம்...

 1) ’10000 வேலை வாய்ப்புக்களை உருவாக்க வேண்டும்; நான்கு தடச்சாலை, 500 படுக்கை கொண்ட ‘உலகத்தரம்’ வாய்ந்த மருத்துவமனை, நடமாடும் ம்ருத்துவ வசதி,இளைஞர்களுக்கு 25% தள்ளுபடியுடன் கூடிய வங்கிக்கடன், மீனவர்களுக்கு மோட்டார் படகுகள், சிறு படகுத்துறைகள், குளிர்பதன மீன் பாதுகாப்பு வசதி, க்ரீன் ஹௌஸ், பல்லடுக்கு கட்டிடங்கள், விளையாட்டு மைதானங்கள், பத்து லட்சம் லிட்டர் குடிநீர் வசதி, ஐந்து செண்ட்ரல் சிலபஸ் பள்ளிகள், கூடவே மாநில அரசுப்பள்ளிகள், எல்லா கிராமங்களையும் இணைக்கும் ப்ராட்பேண்ட் இணைப்பு....’ பயப்படாதீங்க சார், தேர்தல்லாம் ஒண்ணும் வரல, இவை யாவும் கூடங்கூளத்தை பார்வை இட்ட பின் அணுசக்தியின் காதலரும் வலதுசாரி இந்துதுவா அமைப்புக்களின் அபிமானத்துக்குரியவரும் ஆன அப்துல்கலாம் அரசுகு பரிந்துரைத்தவை. கூடங்குளத்தில் அணுமின் நிலையம் தேவை இல்லை என்று போராடிக் கொண்டிருப்பவர்களின் தர்க்கவாதங்களுக்கும் தேர்தல் கால அரசியல்வாதி போன்று இங்கே கலாம் அடுக்கிகொண்டே போகும் பல்வேறு ‘கனவு’களுக்கும் என்னய்யா தொடர்பு? கலாம் இங்கே அடுக்குகின்ற யாவும் ஒரு மக்கள் நல அரசால் எப்போதுமே எங்கேயும் செய்யப்பட வேண்டிய நலத்திட்டங்கள்தானே? கூடங்குள பிரச்னைக்கும் இந்த ‘கனவு’களுக்கும் பிரத்யேகமான தொடர்புதான் என்ன? சின்னப்புள்ளத்தனமா இருக்கு! 2) பல நீண்ட வருடங்களாக தொடரும் லட்சக்கணக்கான விவசாயிகளின் தற்கொலை, சிறு தொழில்கள் அழிப்பு, சிறிய நடுத்தர தொழிற்சாலைகளில் வேலை செய்த பல கோடிப்பேர் வேலை இழப்பு (கலாம் சொல்கின்ற தங்க நாற்கர சாலைகள் எல்லாம் பன்னாட்டு முதலாளிகளின் இந்திய தொழிற்சாலைகள் தங்கள் சரக்குகளை எடுத்து செல்வதற்காக மட்டுமே இந்திய அரசால் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டவை),பன்னாட்டு முதலாளிகளால் சிறப்பு பொருளாதார மண்டலங்களில் மறுக்கப்படும் இந்தியாவின் தொழிற்சாலை சட்டம் 1948, தொழிற்தகராறு சட்டம் 1947, தொழிற்சங்க சட்டம் 1926... இவை குறித்தெல்லாம் இது வரை ஒரு சொல் கூட உதிர்க்காமல் (கவனிக்க: இந்தியக்குடியரசுத்தலைவர் என்பவர் இந்திய அரசியல் அமைப்பு சட்டம், இந்தியாவின் மக்கள் நல சட்டங்களின் பாதுகாவலர் (Custodian of the Constitution), இவர்தான் அத்தகைய பதவியை அலங்கரித்தவர்) மிக கவனமாக இருக்கின்ற உலக முதலாளிகளின் சேவகன் இப்போது ஃப்ரான்ஸ், அமெரிக்க, ஐரோப்பிய முதலாளிகளின் அணு உலைகளை இந்தியாவில் விற்கும் சேல்ஸ் ரெப்ரெசெண்டிவ்-ஆக புதிய அவதாரம் எடுத்துள்ளார். 3) /அணுசக்தி என்பது மனித இனத்துக்கு கடவுள் கொடுத்த வரம், அதை ஆக்கத்துக்கு பயன்படுத்துவதும் அழிவுக்கு பயன்படுத்துவதும் நம் கையில்தான் உள்ளது/ சொன்னவர் கலாம்.... அது சரி, கலாம் சொல்கின்ற கடவுள் யார்? கையில் வீணையுடன் இருக்கின்ற சரஸ்வதியம்மாவா, அல்லது கிறித்துவர்களின் கடவுளா, முஸ்லிம்களின் அல்லாவா? 1998 போக்ரானில் சிரித்தவர் இந்த மூன்று பேரும் அல்லாத புத்தர் அல்லவா?! அது சரி, இந்திய அரசு மக்கள்பணத்தில் அணுகுண்டு வெடித்தால் அது சரஸ்வதியம்மாவின் அரசாங்கம் ஆக்க வேலைகளுக்காகவும் உலக அமைதி சமாதானம் அன்பு கருணை காதல் கருமாதி போன்ற மேலான சமாச்சாரஙளை பாதுகாப்பதற்காக வெடிப்பது, அதையே பாகிஸ்தான் அரசு பாகிஸ்தான் மக்கள் பணத்தில் வெடித்தால் அது தீவிரவாதிகள் அழிவுவேலைகளுக்காக வெடிப்பது, உடனடியாக தெற்காசிய பிராந்தியத்தில் அமைதியும் சமாதானமும் கெட்டு சீரழிந்து சின்னாபின்னமாகி விடும்! ... பிருத்விராஜன் சாரின் காமெடி வடிவேலையும் மிஞ்சுகின்றது! (1998 போக்ரான் குண்டுவெடிப்பு திட்டம் முடியும் வரை கலாம் தனக்கு சூட்டிக்கொண்ட ரகசிய சங்கேத பெயர்).
(மேலே உள்ள படம் செர்னோபில் அழிவு)

செவ்வாய், நவம்பர் 01, 2011

ஏழாம் அறிவு...ஹாலிவுட்டுக்கு நம்மளால முடிஞ்ச சின்ன உதவி...ஹிஹிஹி...!



1) சோவியத் யூனியன் இருந்தவரை இயான் ஃப்ளேமிங் (ஜேம்ஸ்பாண்ட் கதைகளின் ஆசிரியர்), சோவியத் ரஸ்யா என்ற தேசம் உலகத்தை எந்த நொடியிலும் அழித்துவிடக்கூடும் என்றும், உலகத்தை காப்பாற்றும் வல்லமை தெம்பு திராணி அல்லது சூடு சொரணை அரிப்பு சொறி (எப்போதும் போல) அமெரிக்காவைத்தவிர வேறு எந்த கேடுகெட்டவனுக்கும் இல்லை, அதிலும் ஜேம்ஸ்பாண்டைத் தவிர வேறு எவனும் ஆம்பளையே இல்லை என்ற ரீதியில் சரடு விட்டுக்கொண்டிருக்க, அந்த காமெடியையே வருசத்துக்கு ஒண்ணு என்ற கணக்கில் ஜேம்ஸ்பாண்ட் படமாக எடுத்து ஊரை ஏமாத்தி காசு புடுங்கிகிட்டு இருந்தாய்ங்க. சோவியத்த அழிச்ச பிறகு உலகத்துக்கு அல்லது அமெரிக்காவுக்கு ‘எதிரி' அதாவது வில்லன் இல்லாம போகவே 1989.90க்கு பிறகு வந்த படங்களில் வேறு மாதிரி வில்லன்களை சித்தரித்தார்கள்... இப்போ இருக்குற நிலைமையில் கம்யூனிச சீன தேசம்தான் அமெரிக்காவுக்கு பெரும் அளவில் நிதி அல்லது கடன் கொடுத்துள்ள மிகப்பெரிய நாடு என்பது வெளிப்படையான உண்மை. எனவே இன்றைய நிலையில் சீனாவை ஒரு 'உலக எதிரியாக' சித்தரித்து ஜேம்ஸ்பாண்ட் படம் எடுக்க அமெரிக்க அரசு ஒத்துக்கொள்ளாது, ஹாலிவுட் வியாபாரிகளுக்கும் இது தெரியும், எனவே ஜேம்ஸ்பாண்ட் இப்போது எங்கோ ஒரு ஓட்டலில் யாரோ ஒரு ஆப்பிரிக்க அல்லது ஆசிய அல்லது கீழ்த்திசை நாட்டு பெண்ணோடு கட்டிலில் கம்பளிப்போர்வையை போர்த்தியபடி உறங்கி கொண்டிருக்கின்றார். அமெரிக்காவுக்கு சீனா என்றைக்கு பிடிக்காமல் போகின்றதோ அன்றைக்கு அலறியடித்து எழுந்து ஜட்டியை மாட்டியபடியே அரைகுறை தூக்கத்தில் இருக்கின்ற மலங்க மலங்க விழிக்கின்ற அந்தப் பெண்ணுக்கு ‘பை' சொல்லியபடியே, கோட்டின் உள்பையில் கையடக்கமான பிஸ்டலை சொருகியபடியே வெளியே வருவார்.

2) அதுவரைக்கும் நம்ம முருகதாசுக்கு பொறுக்கலைய்யா பொறுக்கல... ஹாலிவுட் தாதாக்களுக்கே பாடம் கத்து தர்றாரு நம்ம முருகதாசு...'சோவியத்த அழிச்சுப்போட்டு ஜேம்ஸ்பாண்ட் படம் எடுக்க முடியாம திருதிருன்னு முழிக்கிற ஹாலிவுட் அண்ணாச்சிகளே, இதோ புதிய உலக எதிரி, அமெரிக்க வில்லன் சீனா! புடிச்சுக்கோங்க!'. ஹாலிவுட் படங்களையே எத்தன நாளைக்கி டப்பா காப்பி அடிக்கிறது, மனசாட்சி உலுக்குதுங்க சார், அதான் போனாப்போவுதுன்னு ஹாலிவுட்டுக்கு நம்மளால முடிஞ்ச சின்ன உதவி...ஹிஹிஹி...!