(2008 நவம்பர் மாதம் பாகிஷ்தானில் இருந்து கடல் வழியாக மும்பையில் நுழைந்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியது குறித்து புதுவிசை ஜனவரி-மார்ச் 2009 இதழில் எழுதிய கட்டுரை)
(நமது மக்கள் அப்பாவிகள். தீவிரவாதிகள் என்றால் கறுப்பு நிறத்துடன், சவரம் செய்யப்படாத முகத்துடன், முக்கியமாக தாடியுடன், அழுக்கு உடையுடன், கையில் ஏ.கே.47 துப்பாக்கி, மார்பில் சுற்றப்பட்ட தோட்டா மேகசைன், கழுத்தில் சயனைடு குப்பியுடன், உருது பேசுபவனாக இருப்பதாகவே நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள். தீவிரவாதிகள் வெள்ளை நிறத்துடன், சுத்தமாக சவரம் செய்யப்பட்டு அழகாக, (முந்தைய ஒன்றுபட்ட இந்தியாவின்) லாஹூர் கல்லூரியில் படித்து பட்டம் பெற்றவனாக, இலக்கணம் தப்பாமல் ஆங்கிலம் பேசுபவனாக, முன்னாள் துணைப்பிரதமர்களாக, நாடாளுமன்ற எதிர்க்கட்சித்தலைவராக, எதிர்கால பிரதமர் கனவுகளுடன் அதிக பட்ச இசட் பிரிவு போலீஸ் பாதுகாப்புடன் வலம்வருபவர்களாகவும் இருக்கின்றார்கள் என்பதை நம் மக்களுக்கு எடுத்துச்சொல்ல வேண்டியிருக்கின்றது)
மீண்டும் ஒரு முறை உலகளாவிய பயங்கரவாதம் பற்றி வாய் ஓயாது பேசிச்சலித்தாகி விட்டது. கூடவே யாரும் சந்தேகப்பட்டுவிடாமல் இருக்க மறக்காமல் தேஷ்பக்தியைப் பற்றியும் உணர்ச்சிவசப்பட்டு முழங்கி, "அரசியல்வாதிகளையெல்லாம் சுட்டுக் கொல்லணும்பா, பாரு, வரிக்கட்டுறோம், ஆனா உசிருக்கு பாதிகாப்பு இல்லே, இனிமே எதுக்கு வரிக்கட்டணும்?" போன்ற தேஷ்பக்த வாதங்களை முன்வைத்த திருவாளர் மிடில்கிளாஷ், வழக்கம் போல் டி.வி. பார்த்து, "சூப்பரா பாலைத் தூக்குனாம் பாரு, நான் நினச்சமாறியே சிக்சர்...ஆனா அநியாயமா அவுட்டானாம்பா.." என்று சாராயவியாபாரி விஜய்மல்லையாவின் குதிரை லாயத்தில் புதிதாகக் கட்டப்பட்ட கிரிக்கெட் குதிரைகளின் இரண்டுகால் பாய்ச்சல் பற்றி சிலாகித்து புழகாங்கிதம் அடைந்து மல்லாக்கப்படுத்து தூங்கப் போய்விட்டார்.
நான் சொல்ல வருவது 'இந்தியத்தொலைக்காட்சிகளில் முதல்முறையாக நேரடியாக ஒளிபரப்பப்பட்ட 66 மணிநேர பயங்கரவாதம்' பற்றித்தான் என்று நீங்கள் ஊகித்திருந்தால் அடுத்த மாத கேபிள் டி.வி.சந்தாவை உங்களுக்காக நான் கட்டுவேன். அது பயங்கரவாதமா கிரிக்கெட்டா என்று குழப்பம் வருகிற அளவுக்கு சி.என்.என். நேரடி ஒளிபரப்பில் கீழ்மூலையில் ஸ்கோர் போடப்பட்டது. இறுதியாக 10 பயங்கரவாதிகள் சேர்ந்து 183 கொலைகள் செய்ததாக இறுதி ஸ்கோர் காட்டியது. இப்படி நான் சொல்வதால் பயங்கரவாதமும் கிரிக்கெட்டும் ஒன்றா என்று நீங்கள் கேள்வி கேட்டால், என் உறுதிமொழி வாபஸ், நான் கிரிக்கெட்டின் தாய்வீடான இங்கிலாந்தின் பிரதமரைக் கேட்டுத்தான் பதில் சொல்ல முடியும், அது வரை நீங்கள் காத்திருக்கலாம்.
நவம்பர் 26ஆம் தேதி இரவு 1030 மணிக்கு மும்பை சத்ரபதி சிவாஜி ரயில்வே ஸ்டேஷனில் நுழைந்த இரண்டு தீவிரவாதிகள் சரமாரியாகச் சுட்டதாகவும் ஒரு ரவுண்ட் சுட்டபின் மேகசனை மாற்றி மீண்டும் புது மேகசைன் மாற்றும் அளவுக்கு கால அவகாசம் இருந்ததாக அனைத்தையும் நேரில் பார்த்துக் கொண்டிருந்த நேர அறிவிப்பாளரான விஷ்ணு தத்தாராம் ஜெண்டே கூறுகின்றார். அதன்பின் சாவகாசமாக டாக்சியைக் கைப்பற்றி தாஜ் ஓட்டலுக்கு சென்றதாகவும்...மீண்டும் மறுஒளிபரப்பு அவசியமில்லை என்பதால் விசயத்துக்கு வருகின்றேன். இந்த பயங்கரவாதத் தாக்குதலால் பயனடைந்தவர்கள் என்று இரண்டு பேரைக் கூற முடியும்- மீண்டும் ஒருமுறை தங்கள் தேஷ்பக்தியை நாடெங்கும் ஓடவிட்டு சிறுபான்மை மக்களுக்கு எதிரான உள்நோக்க அரசியலைக் கட்டவிழ்த்து விட்ட ஆர்.எஸ்.எஸ்., அதன் அரசியல் முகமூடியான பி.ஜே.பி.; உலகளாவிய பயங்கரவாதத்தை வேரொடு அறுக்க அவதாரம் எடுத்த உலகரட்சகன் அமொ¢க்காவும் அதன் ஆயுத உற்பத்தியாளர்களும். டி.வி, செய்தித்தாள், இணையதளம் போன்ற ஊடகங்கள் 'இழவு வீட்டில் காசு வைத்து சூதாடி' நேரடி ஒளிபரப்பு செய்து தங்கள் பாக்கெட்டை நிரப்பிக்கொண்டதுடன், மேற்படி ஆர்.எஸ்.எஸ். + அமெரிக்க கூட்டணிக்கு பிரச்சாரம் செய்து எஜமான விசுவாசத்தையும் காட்டிக் கொண்டன, ஒரே கல்லில் ரெண்டு மாங்காய். அதற்கு அடுத்து வந்த நாட்களில் இங்கிலீஷ், டமில் என எல்லா சானல்களிலும் வெள்ளையும் சொள்ளையுமான நபர்கள் உட்கார்ந்துகொண்டு பயங்கரவாதம் பற்றி உணர்ச்சிவசப்பட்டு பேசிப்பேசி மாய்ந்து போனார்கள். மூக்கைச் சிந்தி அழவில்லை என்பதுதான் பாக்கி. இதை ஊடக பயங்கரவாதம் என்று ஏன் சொல்லக்கூடாது?
மும்பை பயங்கரங்கள் குறித்து விலாவரியாகப் பேசுவதானால், அதற்கு முன் இரண்டு கேள்விகளைப் பற்றிப் பேச வேண்டும். விடுதலை பெற்ற இந்தியாவின் பயங்கரவாதத்தை எங்கே இருந்து தொடங்குவது? உலகளாவிய பயங்கரவாத்தை எங்கே இருந்து தொடங்குவது? இந்த இரண்டு கேள்விகளையும் பேசாமல் பயங்கரவாதம் பற்றியும் தேஷ்பக்தி பற்றியும் உணர்ச்சிவசப்பட்டு பேசினால் இரத்த அழுத்தம் ஏறுவதைத் தவிர வேறு ஒரு பிரயோசனமும் இல்லை.
1947க்குப் பின்னான இந்தியாவின் பயங்கரவாதம் என்பது ஆகஸ்ட் 15க்கு முன்னதாகவே தொடங்கி விட்டது. அதன் உச்சகட்டம்தான் பிரிவினையின் போது வடக்கு, வட மேற்குப்பகுதிகளிலும் அதிகபட்சமாக பஞ்சாபிலும் நடந்த கொடூரங்கள். இதைப்பற்றி தனியேதான் எழுத வேண்டும். இந்தப் படுகொலைகளில் ஈடுபட்டவர்கள் இந்து, முஸ்லிம், சீக்கியர் என்று அனைத்துத்தரப்பாரும் இருந்தார்கள். அநேகமாக இந்தப்படுகொலைகள் அனைத்தும் எந்த விதமான திட்டமிடலும் இல்லாமல், அன்றைக்கு நிலவிய சூழ்நிலையில் உணர்ச்சிவசப்பட்ட நிலையிலும் ஒரு மதத்தவர் மேல் மற்றவர் கொண்ட எதிர்ப்பு உணர்வாலும் நிகழ்ந்தவை, தனிநபர்களாலும் கூட்டமாகவும் நடத்தப்பட்டவை என்று கூறலாம்.
ஆனால் முதல்முதலாக, சுதந்திர இந்தியாவின் நன்கு திட்டமிடப்பட்ட, தனிநபர் மீதான ஒரு படுகொலை என்பது ஆர்.எஸ்.எஸ்.ஆல் நடத்தப்பட்டது. அதன் இலக்கு மஹாத்மா காந்தியடிகள். படுகொலைக்கு ஒரே ஒரு காரணம் மட்டுமே இருந்தது: அவர் இந்து-முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்தினார். எனவே 1948 ஜனவரி 20இலிருந்து பேசத்தொடங்குவதுதான் சரியாக இருக்கும். அன்றைக்கு பிர்லா மாளிகையில் காந்தியார் கூட்டத்தில் பேசும்போது, அதற்கு பத்தடிகள் பின்னால் உள்ள அறையிலிருந்து நாதுராம் கோட்சே வெடிகுண்டை வீச வேண்டும், கூட்டத்தில் கலந்துவிட்ட மதன்லால் பாவா காந்தியாரை துப்பாக்கியால் சுட வேண்டும் என்பதே திட்டம். ஆனால் அவர்களே எதிர்பாராத விதமாக, அந்த அறையின் ஜன்னல், தரையிலிருந்து எட்டு அடி உயரத்தில் இருந்ததால் அன்றைய முயற்சி வெறும் வெடி குண்டு வீச்சோடு முடிந்தது, காந்தியார் இன்னும் ஒரு பத்து நாள் உயிரோடு இருந்தார். ஜனவரி 30 அன்று நாதுராம் கோட்சே அடுத்த முயற்சியில் காரியத்தை நிறைவேற்றினான். இந்து வைஸ்யரான மோஹன்தாஸ் கரம்சந்த் காந்தியை இந்து சித்பவன் பிராமணனான கோட்சே சுட்டுக் கொன்றான் (இந்துக்களே, ஒன்று படுவீர்! இந்துக் கடைகளிலேயே சாமான் வாங்குவீர், துப்பாக்கி வாங்குவீர்!) இப்படுகொலையைத் திட்டமிட்ட அனைவரும் இந்துக்களே - கோபால் கோட்சே, அவன் தம்பி நாதுராம், மதன்லால் பாவா, கார்காரே, திகம்பர் பாட்கே,நாரயண் ஆப்தே, வீர சாவர்க்கார். (மாலேகாவ் குண்டுவெடிப்பில் ஈடுபட்ட இந்துதுவா தீவிரவாதிகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த போலீஸ் அதிகாரியின் பெயரும் ஹேமந்த் 'கார்காரே' என்பது வேடிக்கை!). இந்தியாவில், ஒரு அரசியல் தலைவர் மீதான முதல் படுகொலையை நடத்தியது இந்துத்வா பயங்கரவாதம்தான் என்பதையும், "இந்து முஸ்லிம் ஒற்றுமையை" வலியுறுத்தியதற்கு எதிராகத்தான் அது நடத்தப்பட்டது என்பதையும் நாம் அழுத்தமாகப் பதிவு செய்ய வேண்டும்.
அன்றைக்கு கோட்சே செய்திருந்த ஆண்குறித்தோல் நீக்கமும் (இஸ்லாமிய மதச்சடங்கு), கையில் குத்தியிருந்த இஸ்மாயில் என்ற முஸ்லிம் பெயரும் எதிர்கால இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ். என்ன செய்யப் போகின்றது என்பதை அறுதியிட்டுச் சொல்வனவாகவும் இரண்டு செய்திகளை விட்டுச் செல்வனவாகவும் இருந்தன. ஒன்று, அவர்களது நோக்கம்: சர்வதேச அளவில் கவனத்தைப் பெற்ற, காலமெல்லாம் இந்து-முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்திய தேசப்பிதா என்று அழைக்கப் பட்டவரை ஒரு முஸ்லிம் கொன்று விட்டான் என்ற செய்தியைப் பரப்புவதன் மூலம், இந்தியாவில் உள்ள முஸ்லிம் மக்களுக்கு எதிராக மட்டுமல்ல, சர்வதேச அளவில் முஸ்லிம் மக்களுக்கு எதிரான வெறுப்புணர்வைத் தூண்டி விடுவது, அனைத்து மத மக்களையும் 'முஸ்லிம் பயங்கரவாதத்துக்கு' எதிராகத் தூண்டி விடுவது. இரண்டு: அவர்களது இந்துத்வா, அகண்ட பாரதம் குறித்த மதிப்பீடுகளுக்கு நம்மால் வர முடிந்தது: இந்துத்வாதத்துவம் என்பது சூப்பர் டூப், புரட்டு; அது உள்ளீடற்ற ஒரு வறட்டுத் தத்துவம், நியாயமான தர்க்கவாதம் செய்யத்தக்க அளவுக்கு அடிப்படை நியாயம் ஏதும் அற்றது. ஹிட்லா¢ன் நாஜியிசத்துக்கு நூறு சதவீதம் ஈடானது. எனவேதான் ஒரு பரந்த வெகுஜன வெளியில் திறந்த விவாதத்தில், தர்க்க விவாதத்தில் தம்மால் ஜெயிக்க இயலாது என்று தொ¢ந்து கொண்ட ஆர்.எஸ்.எஸ். கும்பல், ஹிட்லர் கையில் எடுத்த "வன்முறை, அடாவடித்தனம், எதிர்ப்பவர்களைக் கொன்று விடுவது" என்ற அதே வழிமுறையைக் கையில் எடுத்தது.
இன்றைய நிலையில் பயங்கரவாதத்தை அல்லது இஸ்லாமிய பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்டிவிட்டுத்தான் மறுவேலை என்று கங்கணம் கட்டிக்கொண்டு முதுகு வரை வாயைக் கிழித்துக்கொண்டு பேசும் ஊடகங்களும் ஆட்சியாளர்களும் கூட 1948 ஜனவரி 20, 30 பற்றியோ கோட்சேவின் முஸ்லிம் வேசம் பற்றியோ பேசாமல் மிக ஜாக்கிரதையாக இருக்கின்றார்கள். அநேகமாக இனிமேல் பேச மாட்டார்களோ என்ற சந்தேகம் வருவதற்கு காரணம் உண்டு. காரணம், நமது பள்ளி, கல்லூரி பாடப்புத்தகங்களில் கூட "காந்தியாரை ஒருவன் சுட்டான்" என்ற ஒற்றை வர்யோடு காந்தியாரின் வரலாறு அல்லது கதை முடிந்து போகின்றது என்பது தற்செயலான ஒன்றல்ல. மத்திய, மாநில கல்வித்திட்டங்களை இயற்றுகின்ற பொறுப்பில் உள்ளவர்களும், இந்திய வரலாற்றை எழுதுகின்ற அதிகாரிகளும், பல்கலைக்கழக மானியக் குழுவில் இருக்கின்ற கனவான்களும் கோட்சேவின் தம்பிகளாகத்தான் இருக்கின்றார்கள் என்பதைச் சொல்ல யாரும் தயங்க வேண்டாம். காந்தியாருக்கு நமது அரசு அதிகாரிகள் பரிவோடு செய்கின்ற அதிக பட்ச மரியாதை என்பது, அக்டோபர் 2 பொது விடுமுறை (அன்று டி.வி.யில் இந்தியத்தொலைக்காட்சியில் முதல் முறையாக சில தொடைகளைப் பார்க்கலாம்), ஜனவரி 30 அன்று 11 மணிக்கு ஒரு 'சங்கு'. அநேகமாக அடுத்த சம்பளக்கமிஷன் தலைவர், "எதுக்கு இதெல்லாம்" என்ற கேள்வி கேட்டு இதற்கும் சங்கு ஊதி விடுவார் என்ற சந்தேகம் உள்ளது.
...தொடரும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக