புதன், நவம்பர் 23, 2011

கலயத்தில் உறங்கும் சாம்பலும் ஒரு ஜோடி காலணிகளும்-5






(ஒட்டுமொத்த இந்திய அரசு எந்திரமும் இந்துமயமாக்கப்பட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ்.இன்  "ஒரு மதம்ஒரு தேசம்ஒரு கலாச்சாரம்ஒரு மொழி" என்ற கொள்கை இந்த இந்துத் துவாவாதிகளின் அரசு எந்திரத்தால் தீவிரமாக அமலாக்கப் பட்டு வருகின்றதுஇது இந்திய அரசே சிறுபான்மை மத மக்கள் மீது நடத்தும் அரசு பயங்கர வாதம் என்று சொன்னால் என்ன தவறு?  இங்கே காங்கிரஸ் அரசு, பா.ஜ.க. அரசு என்று கொள்ள வேண்டாம், இந்திய அரசு எந்திரம் என்று சொல்கின்றேன்)


உலகெங்கிலும் உள்ள இஸ்லாமிய மக்களை இப்படி வலுக் கட்டாயமாக எதிரியாக்கியது அமெரிக்க பயங்கரவாதத்தின் வரலாறு எனில், இந்தியாவில் உள்ள இஸ்லாமிய மக்களை வலுக்கட்டாயமாக எதிரியாக்கியது ஆர்.எஸ்.எஸ்., ஜனசங் ஆகிய இந்துத்துவா பயங்கரவாதிகளைச் சாரும். ஹெட்கே ராம் பாலிவார், கோல்வாகர், வீரசவர்க்கார், நாதுராம் கோட்சே வழியாக, ஷ்யாம ப்ரஸாத் முகர்ஜி, சுதர்சன், வாஜ்பேயி, அத்வானி, முரளிமனோகர் ஜோஷி, ப்ரவீன் தொகாடியா, நரேந்திர மோடி, பால் தாக்கரே, ராஜ் தாக்கரே, ராம் கோபாலன், சோ ராமஸ்வாமி, இல.கணேசன் போன்ற தீவிர வாதிகளால் தொடர்ந்து இந்த "எதிரியாக்கல்" என்ற அஜெண்டா முன்னெடுத்துச் செல்லப்படுகின்றது. ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது பூட்டிக்கிடந்த பாபர் மசூதியைத் திறந்து இந்துத்துவா பயங்கரவாதிகள் பூஜை செய்ய அனுமதித்த அன்றைக்கு இவர்களின் வெற்றிப் பயணம் தொடங்கியது எனலாம். ஆனால் நாலுசுவருக்குள் வெறும் பூஜை மட்டுமே செய்து கொண்டிருந்தால் போதுமா? வி.பி.சிங் ஆட்சியின்போது அமலாக்கப்பட்ட மண்டல் கமிஷன் அறிக்கையை ஒரு ஆயுதமாகக் கையில் எடுத்தது ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. கும்பல். தொடர்ந்து அயோத்தியில் கோவில் கட்ட தனது ரத்தயாத்திரையை நடத்தினார் அத்வானி. பீஹாரில் முதல்வராக இருந்த லல்லு பிரசாத் யாதவ் அத்வானியைக் கைது செய்ய, வி.பி.சிங் அரசுக்கான தனது ஆதரவை அத்வானி விலக்கிக்கொள்ள, மானம் என்ற வேட்டியே பெரிது என பதவித்துண்டைத் தூக்கி வீசி எறிந்து விட்டு கம்பீரமாக வெளியேறினார் வி.பி.சிங் (வேறு யாராவது நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பல்ல).

தொடர்ந்து வந்த தேர்தலில் பேசாமடந்தையும் ஒருகாலத்தில் ஆர்.எஸ்.எஸ்.இல் உறுப்பினராக இருந்தவருமான நரசிம்ம ராவ் பிரதமராக, 1992 டிசம்பர் 6ஆம் நாள் பாபர் மசூதி இடிக்கப்பட்டது, நாடெங்கும் கலவரம் மூண்டது. ஆயிரக் கணக்கானோர் மாண்டனர். மும்பையிலும் கோவையிலும் குண்டு வெடித்தது ("அத்வானியை ஆண்டவன் காப்பாற்றி னான்"-ரஜினிகாந்த்). இஸ்லாமியர்களை 'வலுக்கட்டாயமாக எதிரி'யாக்குவதில் ஆர்.எஸ்.எஸ். கும்பல் வெற்றி கண்டது. முதலில் 'சர்ச்சைக்குரிய இடம்' என்று சொல்லி வந்த பத்திரிகைகளும் டி.வி.சானல்களும் நாட்கள் ஓடஓட ராமர் கோவில் என்றே எழுதவும் பிரச்சாரம் செய்யவும் தொடங்கி னார்கள். இப்போது 'சர்ச்சைக்குரிய இடம்' என்ற சொல் ஊடகங்களில் மறைந்துவிட்டது. அடுத்துவந்த வருடங்களில், டிசம்பர் 6 தேதியில் (இப்போது நவம்பர் 26 அன்றும்) வேண்டுமென்றே செய்யப்படும் போலீஸ் கெடுபிடிகளால் பொதுமக்கள் மத்தியில் இஸ்லாமிய மக்கள்மீது வெறுப்புணர்வு திட்டமிட்டு வளர்க்கப் பட்டது.

பூட்டு ரிப்பேர், குடை ரிப்பேர், பீடி சுற்றுவது, கைத்தறி நெசவு, பாய் முடைவது, கத்தி சாணை தீட்டுவது, மீன், கருவாடு, மாமிச விற்பனை, மிஞ்சிப்போனால் பெட்டிக் கடை அல்லது வெளிநாட்டில் கூலிவேலை என்று இந்திய சமூகத்தின் விளிம்புநிலைத் தொழில்களைச் செய்து தமது அன்றாட உணவுக்கான வழியை ஏற்படுத்திக் கொண்டிருக் கும் ஒரு சமூகத்தின் மீது 'தீவிரவாதிகள்' என்ற முத்திரை குத்தப்படுவதற்கு ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத அமைப்பு வழியைக் காட்டியது எனில், அதன் சார்பு செய்தித்தாள்களும் டி.வி.சானல்களும், விஜயகாந்த், அர்ஜூன் போன்ற 'தேஷ் பக்த' நடிகர்களின் திரைப்படங்களும் பெருமளவு அந்த வழி யில் தொடர்ந்து ஜாக்கிரதையாக ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரத்தை முன்னெடுத்து சென்று கொண்டிருக்கின்றது.

இஸ்லாமிய சமூகத்தின் இன்றைய அவலமான நிலைமையையும் பொரு ளாதார நிலைமையையும் சொல்லும் ராஜீந்தர் சச்சார் கண்டறி தல்களையும் அவரது அறிக்கையையும் வெறுப்புடன் பார்க்கின்றார்கள். கட்டுரையின் ஒரு இடத்தில் சொன்னது போல, இந்திராகாந்தியோ, ராஜீவ்காந்தியோ, நரசிம்மராவோ, வாஜ்பேயியோ, இப்போதுள்ள மன்மோஹன்சிங்கோ, ஆட்சியில் யார் இருந்தாலும் உண்மையில் இந்திய அரசு எந்திரத்தை ஓட்டிக்கொண்டிருப்பது இந்துத்துவாவாதிகளே. இதையும் மீறி ஹேமந்த் கார்காரே போன்ற போலீஸ் அதிகாரிகள் உண்மையைத் தேடிப்போனால் அவர்களுக்கும் அவர்கள் குடும்பத்தாருக்கும் கொடுக்கப்படும் தொல்லை மிகப் பயங் கரமானது, பைத்தியம் பிடிக்க வைப்பது. ஒட்டுமொத்த இந்திய அரசு எந்திரமும் இந்துமயமாக்கப்பட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ்.இன் "ஒரு மதம், ஒரு தேசம், ஒரு கலாச்சாரம், ஒரு மொழி" என்ற கொள்கை இந்த இந்துத் துவாவாதிகளின் அரசு எந்திரத்தால் தீவிரமாக அமலாக்கப் பட்டு வருகின்றது. போலீசிலும் ராணுவத்திலும் முக்கிய அதிகாரிகளாக இருக்கின்ற பலர், பதவி ஓய்வு பெற்ற மறுநாளே பி.ஜே.பி. யில் சேர்ந்துவிடுகின்றார்கள் என்பது இந்த வாதத்தை வலு வாக்குகின்ற வெட்டவெளிச்சமான ஆதாரம். இதுபோன்ற அதிகாரிகள் தமது பதவிக்காலத்தில் யாருக்கு ஆதரவாக, யாருக்கு எதிராக இருந்திருப்பார்கள்? பொடா சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களில் ஓரிருவர் மட்டுமே இந்து மதத்தைச் சேர்ந்தவர்களென்பதும் மற்ற அனைவரும் முஸ்லிம்களே என்பதும் இத்தோடு இணைத்துப் பார்க்கப்பட வேண்டிய ஒன்று. இது முக்கியமான கேள்வி.


ராணுவத்தின் முக்கிய ஆயுதங்கள், கருவிகள், போர்த்தளவாடங்கள், கட்டி டங்கள் அனைத்துக்கும் ராமாயண, மஹாபாரத பக்கங்களி லிருந்துதான் சம்ஸ்கிருதப் பெயர்கள் வைக்கப்படுகின்றன. பல உதாரணங்களைக் கூறமுடியும். ரஷ்யாவில் இருந்து ட்டீ-90 ரக போர் டாங்குகள் வாங்கி "பீஷ்மர்" என்று பெயர் வைத்தார்கள்! எங்கே இருக்கின்றது மதச்சார்பின்மை? அரசு அலுவலகங்களில் பஜனைகள் (தவறாமல் வெள்ளிக்கிழமை) ஒலிக்கின்றன. சமீப காலங்களில் ஆயுதபூஜை மிகத்தீவிர மாகக் கொண்டாடப்படுகிறது. இந்திய அரசு அலுவலகங்க ளில் பணியாற்றும் சிறுபான்மை மத மக்கள் (தலித்களையும் சேர்த்து) "நாம் பணி செய்வது ஒரு மதச்சார்பற்ற ஜனநாயக நாட்டின் அலுவலகத்தில்" என்று நம்ப வேண்டுமா? இது இந்திய அரசே சிறுபான்மை மத மக்கள் மீது நடத்தும் பயங்கர வாதம் என்று சொன்னால் என்ன தவறு? இந்திய மக்களின் பணத்தில் சம்பளம் வாங்குகின்ற ஒரு உச்சநீதிமன்ற நீதிபதி "பகவத் கீதைதான் இந்த நாட்டின் தர்ம நியாய சட்டமாக இருக்க வேண்டும்" என்று கொக்கரிக்கின்றார்; சேது சமுத்திர விவகாரத்தில் மத்திய சட்டஅமைச்சர் "கடவுள் ராமர் இருப் பது சந்தேகத்துக்கு இடமற்ற ஒன்று; ராமர், இந்திய கலாச் சாரத்தின் பிரிக்க முடியாத ஒரு பகுதி" என்று முழக்கமிடு கின்றார், இவர்கள்தான் சிறுபான்மை மத மக்களையும், இந்து மதத்திலேயே இருக்கின்ற தலித்துகளையும் காப்பாற்றுவார் கள் என்று நம்ப வேண்டுமா? ஒரு பந்த் நடந்தபோது "தமிழ் நாட்டில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும்" என்று கூரைமீது ஏறி நின்று கோஷம் போட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள், ஒரிசாவிலும் குஜராத்திலும் முஸ்லிம், கிறித்துவ மக்களின் கழுத்தும் வயிறும் அறுக்கப்பட்ட போதும், முஸ்லிம், கிறித்துவ பெண்கள் கூட்டமாக வன்புணர்ச்சிக்கு உள்ளானபோதும், கயர்லாஞ்சியில் போட்மாங்கே என்ற தலித் குடும்பத்தினர் உயர்சாதி இந்துக்களால் படுகொலை செய்யப்பட்டபோதும் எங்கே போனார்கள்?






...தொடரும்

கருத்துகள் இல்லை: