திங்கள், நவம்பர் 21, 2011

கலயத்தில் உறங்கும் சாம்பலும் ஒரு ஜோடி காலணிகளும்-3







 ("இராக் நாட்டின் முக்கிய உற்பத்திப்பொருள் ப்ரோக்கோலி மட்டுமே என்றிருந்தால், நீங்கள் உங்களிடம் உள்ள கடைசி டாலர் நோட்டையும் வைத்து தைரியமாக  பந்தயம் கட்டலாம் - புஷ் இராக்கின் மீது படையெடுத்திருக்க மாட்டார்" -பிரிட்டிஷ் பத்திரிக்கையாளரான ராபர்ட் ஃபிஸ்க்)




ஸ்பானிய மன்னனின் வேட்டை நாயான கொலம்பஸ், அமெரிக்க மண்ணில் கால் வைத்த நொடியில் இருந்து தொடங்க வேண்டும்.  அதை அமெரிக்க பயங்கரவாதம் என்று சொன்னால் தவறில்லை.  வெள்ளையர்கள் குடியேற வெள்ளை மாளிகையைக் கட்டியவர்கள் ஆப்பிரிக்காவிலிருந்து குடியேற்றப் பட்ட கறுப்பு மக்கள் என்பது வரலாறு.  அந்த மாளிகையின் அஸ்திவாரமாக இருப்பது எது?  கொலம்பசால் கொன்று குவிக்கப்பட்ட லட்சக்கணக்கான செவ்விந்திய மக்களின் ரத்தமும் சதையும்.  சூது வாது ஏதும் அறியாத செவ்விந்திய மக்கள், கரையில் இறங்கிய கொலம்பஸ் கும்பலைக் கண்டு ஓடி வந்தபோது, அந்த மக்களை நோக்கி தன்னிடம் இருந்த துப்பாக்கியால் கொலம்பஸ் கண்மூடித்தனமாக சுடத்தொடங்கிய அந்த நொடியில் இருந்துதான் உலகளாவிய பயங்கரவாதம் பற்றிப் பேசத் தொடங்க வேண்டும்.  இயற்கையோடு இசைந்த சுகாதாரமான வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்த செவ்விந்திய மக்களுக்கு கொலம்பசும் அவன் கும்பலும் கொடுத்த பரிசு, தாங்கள் எடுத்துச் சென்ற பால்வினை நோய்களும் துப்பாக்கிச்சூடும்தான். எனவே உலகளாவிய பயங்கரவாதத்தைத் தொடங்கி வைத்தது அமெரிக்காதான் என்றால் அது தவறு இல்லை.   இது ஏதோ இன்றைய அரசியல் நிகழ்வுகளில் இருந்து  பின்னோக்கி அமெரிக்காவின் மீது வீண்பழி போடும் முயற்சி அல்ல, நீண்ட நெடிய வரலாற்று உண்மை.   தனது சுயநலனுக்காக எந்த நாட்டின் மீதும் ஆக்கிரமிப்பு நடத்தவும் உயிரியல், ரசாயன, பவுதீக, பொருளாதார.... என அனைத்து ஆயுதங்களையும் பிரயோகிக்க அமெரிக்கா என்றுமே தயங்கியது இல்லை.  1945 ஹிரோஷிமா, நாகசாகி  அணுகுண்டு வீச்சு என்பது உண்மையில் ஒரு சோதனைதான்.  அணுகுண்டு வீசினால் உயிருள்ள மக்களும், பிற உயிரினங்களும், ஜடப்பொருட்களும் என்ன ஆகின்றன என்று சோதித்துப் பார்க்க விரும்பிய அமெரிக்க  பயங்கரவாதிகளுக்கு, சோதனை எலிகளாகத்தான் அன்றைக்கு அப்பாவி ஜப்பானிய மக்கள் பயன்படுத்தப்பட்டார்கள்.  இது அமெரிக்காவின் உலகளாவிய பயங்கரவாதம் இல்லையா?


இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ். கும்பல் செய்கின்ற 'பயங்கரவாத' எதிர்ப்பு பிரச்சாரத்திலும், அமெரிக்க ஏகாதிபத்தியம் தொடர்ந்து செய்து வருகின்ற 'பயங்கரவாத' எதிர்ப்பு பிரச்சாரத்திலும் ஒரு குறிப்பிட்ட மதத்தவர் - இஸ்லாமிய மக்கள் - உலகமக்களின் எதிரியாக நிறுத்தப்படுவது, ஒரு 'பொது எதிரியாக’ அடையாளப் படுத்தப்படுவது தற்செயலானதா திட்டமிடப்பட்டதா என்ற கேள்விக்கான பதிலை வரலாறு திட்டவட்டமாக வைத்திருக்கின்றது.


1900த்தின் முற்பகுதியில், ஈரானில் எண்ணெய் வளம் கண்டு பிடிக்கப்பட்ட பின் அமெரிக்க பயங்கரவாதத்தின் இலக்கு அரபுப் பிரதேசத்தின் மீது விழுந்தது.  அதன் நாடு பிடிக்கும் கொள்கை, கூடவே லத்தீன் அமெரிக்க, மத்திய கிழக்கு, அரபு நாடுகளில் ஒரு ரவுடியைப் போல் நுழைந்து கத்தியை வீசுகின்ற பயங்கரவாதப்போக்கு, இந்த நாடுகளின் மக்கள் மத்தியில் அமெரிக்காவுக்கு எதிரான தீராத பகையுணர்வைத் தோற்றுவிக்க காரணமாக இருந்தது.  அமெரிக்காவின் தந்திரமே அதுதான்!  அடுத்தவன் வீட்டுக்குள் அதிரடியாக ஒரு நாய் போல நுழைவது, அவனை வலுக்கட்டாயமாக எதிரியாக்குவது, அவன் திருப்பி அடிக்கும்போது அவனை 'தீவிரவாதி'யாக முத்திரை குத்துவது, 'பயங்கரவாதம்' பற்றி பேசுவது, அதன் பின் தான் ஏற்கனவே திட்டமிட்டு வைத்திருக்கும் மறைமுக செயல்திட்டங்களை (அஜெண்டா) அதிவேகமாக நிறைவேற்றுவது!  


இராக்கிலும் ஆஃப்கானிஸ்தானிலும் நுழைவதற்கான திட்டம் ஏற்கனவே அமெரிக்காவிடம் இருந்த திட்டம்தான்.  ஆனால் நுழைவதற்கான வாய்ப்பை, காரணத்தை மட்டும் எதிர்பார்த்திருந்தபோது, அமெரிக்காவால் கொம்பு சீவி வளர்க்கப்பட்ட பின்லாடனும் அல்-காய்தாவும் வழி ஏற்படுத்திக்கொடுத்தார்கள்.  9/11ஐ ஒரு காரணமாகச் சொல்லிக்கொண்டு இராக்கில் பேரழிவு ஆயுதங்கள் இருப்பதாக ஒரு பொய்க்காரணத்தைப் பரப்பி இராக்கில் நுழைந்தது, சதாம் உசேனையும் கொன்றது, இராக்கின் எண்ணெய் எடுக்கும் தனது நோக்கத்தை நிறைவேற்றிக் கொண்டது.  60 வருடங்களுக்கும் மேலாக பாலஸ்தீன மக்களைக் கொன்று குவிக்கும் இஸ்ரேல் என்ற வெறிநாய்க்கு கறிபோடும் எஜமானாக இருப்பது அமெரிக்காவே.  அமெரிக்கா மட்டும் அல்ல, இதர ஐரோப்பிய நாடுகளையும் சொல்லலாம்.  எகிப்தில் நெப்போலியன் ஆக்கிரமிப்பும் அதனைத் தொடர்ந்த எகிப்திய கலாச்சார அழிவும் (கிறிஸ்து பிறப்பதர்கு முந்தைய பழம்பெரும் சின்னமான ஸ்ஃபிங்க்ஸ் சிலையின் முகத்தில் இப்போது நாம் பார்க்கும் வடுக்கள், குழிகள் யாவும் நெப்போலியனின் படைகளால் ஏற்படுத்தப்பட்டவை, தங்கள் பீரங்கிகளால் ஸ்ஃபிங்க்சின் முகத்தை சுட்டார்கள்), அலெக்சான்ட்ரிட்யாவின் புகழ்பெற்ற பண்டைய காலத்து நூலகத்தை அழித்தது, லிபியாவில் முசோலினி ஆக்கிரமிப்பு, அல்ஜீரியாவில் ஃப்ரான்ஸ் ஆக்கிரமிப்பு, பாலஸ்தீனத்தில் இஸ்ரேலின் அழிச்சாட்டியம், இரானையும் இராக்கையும் மோதவிட்டு ஆயுத விற்பனை செய்த தந்திரம்...எனத் தொடர்கின்றது.  அமெரிக்காவின் நோக்கம் பெட்ரோலியத்தை திருடுவதாக இருக்கலாம், ஆனால் பெட்ரோலிய வள நாடுகள் இயற்கையாகவே இஸ்லாமிய நாடுகளாக  இருக்கும்போது, அங்கே மேற்கத்திய நாடுகளின் ஆக்கிரமிப்பும் அழித்தொழிப்பும் இஸ்லாமிய மண்ணின் கலாச்சார, மத அடையாளங்களுக்கு எதிரான ஆக்கிரமிப்பாகவும் அழிவு வேலையாகவும் அமைந்து விடுகின்றது.  அரபு பிராந்திய இஸ்லாமிய மக்களின் கோபத்தைத் தூண்ட முக்கிய காரணமாக இருப்பது, அமெரிக்கா தங்கள் மண்ணில் உள்ள பெட்ரோலியத்தை சுரண்டி எடுப்பது மட்டும் அல்ல - தங்களின் நீண்ட பாரம்பரிய, மத, கலாச்சார அடையாளங்களுடன் கூடிய அன்றாட வாழ்க்கையை சீரழித்ததையும், தங்கள் மண்ணின் மத, கலாச்சார அடையாள சின்னங்களை அழித்ததையும், மொத்தத்தில் அமெரிக்காவின் படையெடுப்பை தங்கள் மதத்தின் மீதான, கலாச்சாரத்தின் மீதான படையெடுப்பாக, இன அழிப்பாக அவர்கள் பார்த்தார்கள், பார்க்கின்றார்கள். 


பிரிட்டிஷ் பத்திரிக்கையாளரான ராபர்ட் ஃபிஸ்க் இவ்வாறு கூறுகின்றார்: "இராக் நாட்டின் முக்கிய உற்பத்திப்பொருள் ப்ரோக்கோலி
மட்டுமே என்றிருந்தால், நீங்கள் உங்களிடம் உள்ள கடைசி டாலர் நோட்டையும் வைத்து தைரியமாக  பந்தயம் கட்டலாம் - புஷ் இராக்கின் மீது படையெடுத்திருக்க மாட்டார்" (டால் டி'மோன்டி எழுதிய கட்டுரை, தி ஹிண்டு, 2008 டிசம்பர் 7).

...தொடரும்




கருத்துகள் இல்லை: