நமது மக்கள் அப்பாவிகள். தீவிரவாதிகள் என்றால் கறுப்பு நிறத்துடன், சவரம் செய்யப்படாத முகத்துடன், முக்கியமாக தாடியுடன், அழுக்கு உடையுடன், கையில் ஏ.கே.47 துப்பாக்கி, மார்பில் சுற்றப்பட்ட தோட்டா மேகசைன், கழுத் தில் சயனைடு குப்பியுடன், உருது பேசுபவனாக இருப்ப தாகவே நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள். தீவிரவாதிகள் வெள்ளைநிறத்துடன், சுத்தமாக சவரம் செய்யப்பட்டு அழகாக, லாஹூர் கல்லூரியில் படித்து பட்டம் பெற்ற வனாக, இலக்கணம் தப்பாமல் ஆங்கிலம் பேசுபவனாக, முன்னாள் துணைப்பிரதமர்களாக, நாடாளுமன்ற எதிர்க் கட்சித் தலைவராக, எதிர்கால பிரதமர் கனவுகளுடன் அதிக பட்ச இசட் பிரிவு போலீஸ் பாதுகாப்புடன் வலம் வருபவர் களாகவும் இருக்கின்றார்கள் என்பதை நம் மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டியிருக்கின்றது.
இறுதியாக, தனது பதவிக்காலத்தின் இறுதியில் இராக் நாட்டிற்கு சென்ற அமெரிக்க பயங்கரவாதி ஜார்ஜ் புஷ் மீது, முன்டாசர் என்ற அந்த இராக் பத்திரிகையாளன் 'பத்திரிகையாளன்' என்ற மரபு மீறி தனது ஒரு ஜோடி காலணிகளையும் ஏன் வீசி எறிந்தான் என்பது குறித்தும், அவன் பணி புரிந்த பத்திரிகையின் ஆசிரியர் "முன்டாசர் ஒரு வீரம் மிக்க அரபு தேச பக்தன்; அவன் தேச பக்த உணர்வில்தான் அத்தகைய காரியத்தை செய்தான்" என்று பெருமைப்பட்டதையும், அரபுப் பிராந்திய மக்கள் ஏன் உணர்ச்சிவசப்பட்டு முன்டாசரை வாழ்த்துகின்றார்கள் என்பது பற்றியும் நமது மக்களுக்கு, குறிப்பாக நமது இந்திய ஊடக முதலாளி களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் ஊடக நண்பர்களுக்கும் சொல்ல வேண்டியிருக்கின்றது.
இவை அனைத்தையும் பேசாமல், பொத்தாம் பொதுவாக பயங்கரவாதம் பற்றிப் பேசுவதும், மனிதாபிமானம், 'நாமெல்லாம் ஒற்றுமையா இருக்கணும்' என்று அடிச்சு விடு வதும், வெடிகுண்டுகள் வெடித்தபின் அந்த இடத்தைக் கழுவிவிட்டு, டி.வி.காமிராக்கள் வந்தவுடன் கையிலிருக் கின்ற மெழுகுவர்த்தியை ஏற்றுவதும், செத்துப்போன போலீஸ் அதிகாரிகள் 'தேஷ்பக்தர்'கள் என்று கோஷம் போடு வதும், அவர்கள் சாவில் சந்தேகம் இருப்பதாக யாராவது சொன்னால் உடனடியாக 'நீ தேச விரோதி' என்று கூச்சல் போடுவதும், ஒவ்வொரு முறை குண்டுவெடித்த பின்னாலும் டி.வி.சானல்களில் ஜாக்கிரதையாக காங்கிரஸ்-ஆர்.எஸ்.எஸ். வகையறா ஆட்களை உட்கார வைத்து பொத்தாம் பொதுவாக தேஷ்பக்தி பேசி "நாங்க வேற வேற கட்சின்னாலும் தேஷ் பக்தின்னா ஒண்ணா இருப்போம், பாருங்க" என்று பீத்திக் கொள்வதும், 'மீண்டும் அடுத்தவாரம் இதே நேரத்தில் மீண்டும் ஒரு குண்டுவெடிப்பின்போது சந்திப்போம்' என்று வணக்கம் கூறி விடை பெறுவதும் எதுக்கும் பிரயோசனப் படாது.
(நன்றி: புதுவிசை ஜனவரி-மார்ச் 2009)
*****************************************
இக்கட்டுரை எழுதப்பட்டது 2008 நவம்பர் தாக்குதலுக்குப் பின். கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தின் போது குஜராத் மாநில காவல்துறையில் அடிசனல் டி.ஜி.பி. ஆக இருந்த ஸ்ரீகுமார், 2002 இஸ்லாமியர்களுக்கு எதிரான படுகொலைகளின் போது உளவுத்துறை டி.ஜி.பி. ஆக இருந்தார். நரேந்திரமோடி இந்துமத வெறியர்களுக்கு ஆதரவாக செயல்பட்டார் என்று ஸ்ரீகுமார் நானாவதி-ஷா கமிசன் முன்பு வாக்குமூலம் தந்ததை அடுத்து அவருக்கு டி.ஜி.பி. பதவி உயர்வை மோடி மறுத்தார். பின்னர் இருவேறு வழக்கு மன்றங்களிலும் வென்ற ஸ்ரீகுமாருக்கு பதவி உயர்வு கிடைத்தது.
இப்போது சஞ்சீவ் பட் என்ற ஐ.பி.எஸ் அதிகாரி, கலவரங்களின்போது மோடி வீட்டில் நடந்த கூட்டத்தில் தான் கலந்து கொண்டதாகவும், ‘ இஸ்லாமியர்களுகு எதிராக இந்து மத வெறியர்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தும்போது போலீஸ்காரர்கள் கை கட்டி வேடிக்கை பார்க்க வேண்டும்’ என்று மோடி உத்தரவிட்டதற்கு தான் ஒரு சாட்சி என்று சொன்னதால் இப்போது அவரை மோடி அரசு பந்தாடுகின்றது, அவருக்கு மனநிலை சரியில்லை என்று சொல்கின்றது.
நான்கு நாட்களுக்கு முன்பு வந்த தீர்ப்பு ஒன்று, இஷ்ரத் ஜஹான், சொராபுதீன் ஷேக் உள்ளிட்ட அப்பாவி நான்குபேர் குஜராத் போலீசால் சுட்டுக்கொல்லப்பட்ட பின் அவர்களது பிணங்களை அதே போலீஸ் நடுரோட்டில் போட்டு ‘மோடியை சுட்டுக்கொல்ல வந்த நபர்களை என்கவுண்டரில் சுட்டுக்கொன்றதாக’ சொன்னது வடிகட்டிய பொய் என்று சொல்கின்றது.
குஜராத் குல்பர்க் சொசைட்டியில் தன் மனைவி, மக்கள் முன் இந்துமத வெறியர்களால் கண்டதுண்டமாக வெட்டிக் கொல்லப்பட்ட இஷான் ஜாஃப்ரி என்ற முதியவரின் குடும்பம் இன்றைக்கும் நீதி வேண்டி தெருத்தெருவாக அலைகின்ற்து. இந்திய அரசியல் அமைப்பு சட்டம் மதச்சார்பின்மைகோட்பாடு பற்றியும் சகோதரத்துவம் பற்றியும் நீட்டி முழக்கி பேசுகின்றது, அத்தகைய ஒரு அரசியல் சட்டத்தின் பெயரால் பதவியில் இருக்கின்ற நபர்கள் இஸ்லாமியர்களுக்கு எதிரான அரசு பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளது என்ன வகை ஜனநாயகம் என்பதை தெரிந்தவர்கள் சொல்ல வேண்டும்.
காஸ்மீரிலும் மணிப்பூர் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களிலும் பாரத்மாதாவின் ராணுவ வீரர்கள் இன்றைக்கும் ‘தேசப்பாதுகாப்பு’ ’அரசியல் சட்டம்’ என்ற பெயரில் மத்திய அரசின் ஆசியோடும் பாரத்மாதாவின் தேஷத்தைக் காப்பாத்த மட்டுமே அவதாரம் எடுத்துள்ள, மெடல்களை வரிசையாக மார்பில் குத்தி சாகசம் காட்டும் ராணுவ அதிகாரிகளின் ஆசியோடும் நடத்தும் கொலைகள், ஆட்கடத்தல், பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் ஆகியன இந்திய அரசு சிறுபான்மையினருக்கு எதிராக நடத்தும் அரசு பயங்கரவாதம் இல்லையென்றால் வேறு என்ன என்று தெரிந்தவர்கள் சொல்லலாம்.
இறுதியாக, 1947 ஆகஸ்ட் 15 நள்ளிரவில் புதிய இந்தியா பிறப்பதாக ஜவஹர்லால் நேரு குதூகலித்த கணத்தில் அதற்கு அடியுரமாக இருந்த அந்த அரை நிர்வாணக்கிழவன் எங்கே இருந்தான், ஏன் புது தில்லியில் இல்லை என்ற கேள்வியுடனும்,
'அட நீங்க வேற, ஜனநாயகம், மத நல்லிணக்கம், சகோதரத்துவம்.. அப்படியெல்லாம் ஒரு எழவும் இங்க இல்லை, எல்லாம் வெத்து டப்பா. கட்டுரையில் சொன்னபடி இந்த தேசம் இந்துத்வா வலதுசாரிகளால்தான் ஆளப்படுகின்றது, அரசு எந்திரம் முழுக்கவும் இந்துத்துவா மயம் ஆக்கப்பட்டு ஆண்டுகள் பல ஓடி விட்டன, இங்கே தலித்துக்களுக்கும் இஸ்லாமியர்கள் கிறித்துவர்களுக்கும் முழு ஜனநாயகம், நூறு சதவீத சமத்துவம் இருப்பதாக சொல்லப்படுவதெல்லாம் பம்மாத்து, மூணு சீட்டு வெளயாட்டு சார்!’ என்று நீங்கள் சொன்னால் இந்தக் கேள்வியோடும் என் கட்டுரையை முடிகின்றேன்: ‘அப்புறம் என்ன மயிருக்கு, யார காப்பாத்த இந்த சட்டம்? யாருக்கு இந்த தேசம்?’.
********************************
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக