ஞாயிறு, டிசம்பர் 04, 2011

அயோத்தியா தீர்ப்பு: ஒரு வரலாற்றறிஞரின் பார்வையில் - ரொமிலா தாப்பர்

(டிசம்பர் 6. சாதீயத்துக்கும் பிராமணீயத்துக்கும் எதிராக அவற்றின் ஆணிவேர் வரை கோடரியை ஆழமாக வீசிய அண்ணல் அம்பேத்கரின் நினைவு நாள்! எதிர்கால இந்தியா அம்பேத்கரை தவிர்த்து விட்டு வரலாறு பேச முடியாது! வலதுசாரி ஆர் எஸ் எஸ், பாஜக இந்துத்வா சக்திகளுக்கு இது கசப்பாக இருந்தது. கை சும்மா இருக்குமா? கை அரிப்பெடுத்தது, கடப்பாரை தூக்கியது, 400 வருட கால அயோத்தி மசூதியை இடித்தது, ஆக இஸ்லாமிய மக்களின் உணர்வுகளை புண்படுத்தியதன் பின்னால் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளை பின்னுக்கு தள்ளும் மகத்தான தந்திரத்தையும் செய்தார்கள். இடித்தவர்கள் இசட் பிரிவு பாதுகாப்புடன் பத்திரமாக ஊர் சுற்ற, இடி பட்டவர்களோ பொது இடங்களில் போலீசாலும் ராணுவத்தாலும் தீவிரவாதிகளாக சித்தரிக்கப்பட்டு இந்த நாளில் அவமானப்படுத்தப் படுகின்றார்கள்... அயோத்தி குறித்த அயோக்கியத்தனமான தீர்ப்பு பற்றி மூத்த வரலாற்றறிஞர் ரொமீலா தாப்பர் எழுதிய கட்டுரை இங்கே...)


அயோத்தியா தீர்ப்பு: ஒரு வரலாற்றறிஞரின் பார்வையில் - ரொமிலா தாப்பர்
(The verdict on Ayodhya: a historian’s perspective - Romila Thapar)
தமிழில்: இக்பால்

[இன்றைய அரசியலை நியாயப்படுத்த கடந்த் காலத்தை மாற்றியமைக்க முடியாது (We cannot change the past to justify the politics of the present)]

இத்தீர்ப்பு ஒரு அரசியல் தீர்ப்பு; இத்தகைய ஒரு தீர்ப்பை அரசாங்கமே கூட பல வருடங்களுக்கு முன்னரே கொடுத்திருக்க முடியும்.  நிலம் யாருக்கு சொந்தம், அழிக்கப்பட்ட மசூதி இருந்த இடத்தில் புதிதாக ஒரு கோவிலைக் கட்டுவது என்ற இரு விசயங்களின் மீது இத்தீர்ப்பு மையம் கொண்டுள்ளது.  பல்வேறு மத அடையாளங்களும் பாதிக்கின்ற தற்கால அரசியலில் இப்பிரச்னை சிக்கி சுழல்கின்றது. வரலாற்று ஆதாரங்களின் அடிப்படையில் வழங்கப்பட்ட தீர்ப்பு என்பதாகவும் சொல்லப்படுகின்றது.  வரலாற்று ஆதாரங்கள் என மேற்கோள் காட்டப்பட்டவை எதுவும் இறுதித்தீர்ப்பில் இடம் பெறவில்லை.

ஒரு குறிப்பிட்ட இடத்தில்தான் கடவுள் அல்லது அரைக்கடவுளான மனிதன் ஒருவன் பிறந்தான் என்றும் அந்த இடத்தில்தான் அந்தப் பிறப்பை குறிக்கும் வகையில் ஒரு புதிய கோவிலைக் கட்டவேண்டும் என்றும் நீதிமன்றம் சொல்கின்றது. இந்துக்களின் நம்பிக்கை, உணர்வு என்ற அடிப்படையில் வைக்கப்பட்ட வாதங்களுக்கு பதிலாகவே இந்த தீர்ப்பு உள்ளது.  இத்தகைய உரிமைகோரலுக்கு ஆதாரங்கள் ஏதும் இல்லாத நிலையில் ஒரு நீதிமன்றத்தில் இருந்து இப்படியான ஒரு தீர்ப்பை யாரும் எதிர்பார்க்க மாட்டார்கள்.  இந்துக்கள் ராமர் என்பவரை ஆழ்ந்த உணர்வுடன் கடவுளாக வழிபடுகின்றார்கள் என்பது உண்மையே, ஆனால் இந்த வழிபாடும் நம்பிக்கையும் மட்டுமே ஒரு இடம் இன்னார் பிறந்த இடம்தான் என்று நிரூபிக்கவும், அந்த இடத்தின் மீதான உரிமையை பெறுவதற்கும், அத்தகைய இடத்தை வசப்படுத்த அங்கே இருந்த முக்கியமான வரலாற்று நினைவுசின்னத்தை திட்டமிட்டு அழிப்பதற்கும் ஆன போதிய ஆதாரங்கள் ஆகி விடுமா?

கி.பி.12ஆம் நூற்றாண்டில் அக்குறிப்பிட்ட இடத்தில் கோவில் இருந்தது என்றும் மசூதி கட்டப்படுவதற்காக அக்கோவில் இடிக்கப்பட்டது என்றும் எனவே அதே இடத்தில் புதிய கோவில் கட்டப்படுவற்கான உரிமை உள்ளது என்றும் இத்தீர்ப்பு சொல்கின்றது.

இந்திய தொல்லியல் ஆய்வுத்துறை அங்கே தோண்டி செய்த ஆராய்ச்சிகளும் அவற்றின் குறிப்புக்களும் நீதிமன்றத்தால் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்பட்டன, ஆனால் இவற்றை தொல்லியல் ஆய்வாளர்களும் வரலாற்றாய்வாளர்களும் கடுமையாக மறுத்துள்ளனர்.  ஆக இவ்விசயம் துறைசார் நிபுணத்துவத்துக்கு உட்பட்டது என்பதாலும் இந்த ஆய்வு, ஆதாரங்கள் ஆகியவற்றின் மீது கருத்து வேறுபாடுகள் இருப்பதாலும், ஆனால் அத்தகைய கருத்துக்களில் ஒன்றை மட்டும் கண்ணை மூடிக்கொண்டு ஏற்றுக்கொண்டு உச்சநீதிமன்றம் அளித்துள்ள இத்தீர்ப்பின் மீது நம்பிக்கை ஏற்படுவது கடினமே.  ”வரலாற்று ஆதாரங்கள் சார்ந்து நான் தீர்ப்பு சொல்ல முடியாது, ஏனெனில் நான் வரலாற்று அறிஞன் அல்லன்” என்று கூறியுள்ள ஒரு நீதிபதி “வரலாறும் தொல்லியல் ஆய்வும் மட்டுமே வழக்கில் தீர்ப்பு சொல்ல முற்றிலும் போதுமான ஆதாரங்கள் அல்ல” என்றும் கூறியுள்ளார்! ஆயினும் வழக்கின் சிக்கலே ஆதாரங்களின் வரலாற்று உண்மைத்தன்மையும், கடந்த ஆயிரம் வருடங்களில் அங்கே இருந்த கட்டிடங்கள் எவை என்பது பற்றியும்தான்.

ஏறத்தாழ 500 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட ஒரு மசூதி, பிற்காலத்தில் நமது கலாச்சார பாரம்பரியத்தின் ஒரு பகுதியான அந்த மசூதி, ஒரு அரசியல் கட்சியின் தலைமை தூண்டிவிட்டதன் பேரில் ஒரு பெரும் கும்பல் திட்டமிட்டு இடித்து தள்ளியது.  ஆனால் வழஙகப்பட்ட தீர்ப்பின் எந்த ஒரு இடத்திலும் இத்தகைய திட்டமிட்ட அழிவு நடவடிக்கையையும் நமது பாரம்பரியத்தின் மீதான தாக்குதல் என்ற குற்ற நடவடிக்கையையும் கண்டிக்க வேண்டும் என்ற குறிப்பை காண முடியவில்லை.  ராமர் பிறந்ததாகச் சொல்லப்படும் அந்த குறிப்ப்ட்ட இடத்தின் மீது அமைய உள்ள, கட்டப்பட உள்ள அந்தக் கோவிலின் கர்ப்பக் கிருகம் இடிக்கப்பட்ட மசூதியின் இடத்தில்தான் அமையும்.  ஆனால் தீர்ப்பில் ‘ஏற்கனவே இருந்ததாக சொல்லப்பட்ட ஒரு கோவில் இடிக்கப்பட்டது’ கண்டிக்கப்பட்டுள்ளது, ஒரு புதிய கோவில் கட்டப்படுவதற்கான நியாயமாகவும் அது போதிக்கப்பட்டுள்ளது, ஆனால் 1992ஆம் ஆண்டில் மசூதி இடிக்கப்பட்ட செயல் கண்டிக்கப்படவே இல்லை - அது வழக்குக்கு அப்பாற்பட்ட விசயம் என்பதாக தந்திரமாக முடிவு செய்திருக்க கூடும்.

ஒரு முன்னுதாரணம் உருவாக்கப்பட்டது:

இத்தீர்ப்பு நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு ஒரு முன்னுதாரணத்தை உருவாக்கி உள்ளது - தம்மை ஒரு சமூகக்குழுவாக அறிவித்துக் கொண்டுள்ள எந்த ஒரு கூட்டமும் தாம் வணங்குகின்ற ஒரு கடவுள் அல்லது அரைக்கடவுள் பிறந்ததாக நம்புகின்ற எந்த ஒரு இடத்தையும் தமக்கே உரியது என்று உரிமை கோரலாம்.  ஆக எதிர்காலத்தில் சொத்து என்று உரிமை கோரத்தக்க இடங்களிலும், சர்ச்சைகள் உற்பத்தி செய்யப்படக் கூடிய இடங்களிலும் பல ‘ஜன்மஸ்தானங்களை’ பார்க்க முடியும். திட்டமிடப்பட்ட வகையில் வரலாற்று நினைவு சின்னங்கள் இடித்து அழிக்கப்படுவது கண்டிக்கப்படாதபோது, அடுத்தவருடைய கட்டிடங்களை சொத்துக்களை யாராவது அழிப்பதை யார், எது தடுக்கப்போகின்றது?  வழிபாட்டுத்தலங்களின் நிலைமையை மாற்றுவதை தடுக்கும் 1933 சட்டமானது, சமீபத்திய நிகழ்வுகளைப் பார்க்கும்போது செயலற்ற ஒன்றாகவே போய் விட்டது.

வரலாற்றில் நடந்த்து நடந்ததுதான், மாற்றி அமைக்க முடியாது.  ஆனால் நடந்தவற்றை முழுமையான ஆய்வுக்கு உட்படுத்தி நாம் கற்றுக்கொள்ள முடியும், நம்பத்தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் அவற்றைப் புரிந்து கொள்ள முடியும்.  இன்றைய அரசியலை நியாயப்படுத்த கடந்த காலத்தை மாற்றி அமைக்க முடியாது.  நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு வரலாற்றின் மீதான மரியாதையை சீர்குலைத்துள்ளது, வரலாற்றின் இடத்தில் வெறும் மதநம்பிக்கையை வைக்க முயல்கின்றது.  இத்தேசத்தின் சட்டமானது நம்பிக்கைகளின், உணர்வுகளின் அடிப்படையில் அமைந்தது அல்ல, சான்றுகளின் மீது அமைந்த்து என்ற நம்பிக்கை மக்கள் மனதில் பிறக்கும்போதுதான் உண்மையான தீர்ப்பு வழங்கப்படும்.

(The Hindu, October 2, 2010)
தமிழில்: இக்பால்

3 கருத்துகள்:

kumaraguruparan சொன்னது…

அந்த டிசம்பர் 6 ,1992 எப்படி மறக்க முடியும்? ஒவ்வொரு மணியும் தொலைக்காட்சியைப் பார்த்துப் பார்த்து இறுதியில் கோபுரங்கள் அற்ற புழுதிப் படலத்துடன் மசூதியின் தோற்றம் கண்டு அதிர்ந்து போனேன். அதன் பின் விளைவுகள் என்னவாக இருக்கக் கூடும் என்பதை உணர்ந்தேன்.எந்த சமயம் மீதும் நம்பிக்கை அற்ற எனக்கு அன்று ஏற்பட்ட உளவியல் பாதிப்பு வார்த்தைகளில் எழுதமுடியாதது. பாப்ரி மசூதியை இடித்ததன் மூலம் சமூக ஒற்றுமையைக் குலைத்தது பற்றி அதே மனநிலையுடன் அன்று BANK WORKERS' UNITY யில் தலையங்கம் எழுதியது நினைவுக்கு வருகிறது..சகமனிதனை மனிதநேயத்தோடு பார்த்த பம்பாய், மனிதர்களைப் புரட்டிப் போட்ட விதம்...பம்பாய்க் கலவரம் பற்றி பத்திரிகையாளர் பி.சாய்நாத் சென்னையில் அடுத்த இருதினங்கள் கழித்து அதைப் பகிர்ந்து கொண்டது....எல்லாம் நிழலாடுகிறது. கடந்த பத்தொன்பது வருடங்களும் எல்லா வழிபாட்டுத் தலங்களிலும் உண்மையான பக்தர்களைத் தடவிப் பரிசோதனை செய்யும் காவல்துறையினர் நடவடிக்கைகள் இன்னும் தொடர்கதையாகிப் போனது பற்றி வருந்தும் வகுப்பு ஒற்றுமை காணும் பெரியோர்கள் கவலை...ஒவ்வொரு குண்டுவெடிப்பின் போதும் பக்கத்து வீட்டு இஸ்லாமிய நண்பர்கள் பற்றி சங்கேதமாக தங்களுக்குள் பகிர்ந்து கொள்ளும் இந்துக் குடும்பங்கள் ... சொந்த நாட்டிலேயே சந்தேகமாகப் பார்க்கப் படும் அவலத்தோடு தனது கருத்துக்களைப் பகிர முடியாமல் உள்ளுக்குள் மருகும் எனது இஸ்லாமிய சகோதரர்கள்...குஜராத்தில் இஸ்லாமியர்களை 'நரவேட்டையாடிய' நரேந்திரமோதி சமீபத்தில் நடத்திய வகுப்பு நல்லிணக்க உண்ணாவிரத நாடகம் இப்படி எதைச் சொல்ல இக்பால் ?

veligalukkuappaal சொன்னது…

உண்மைதான் தோழர்! உங்களைப் போன்ற உள்ளங்கள் எம் இதயத்துடிப்பை உணர்ந்து எங்களோடு இருக்கின்றீர்கள் என்ற சத்தியமான உண்மை மட்டுமே நாளையும் வாழ முடியும் என்ற நம்பிக்கையோடு வீட்டுக்கு வெளியே எம்மை தைரியமாக வர சொல்கின்றது. இப்போது டி.வி. பாருங்கள், சொல்கின்றார்கள்: ’பாபர் மசூதி இடித்த தினத்தை முன்னிட்டு ரயில்வே நிலையம், விமான நிலையம், பஸ் நிலையங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால் தீவிர சோதனை’. இடித்தவர்கள் தீவிரவாதிகள் இல்லையாம், இடிபட்டவர்கள் தீவிரவாதிகளாம்! யாருக்கு இந்த தேசம், யாருக்கு இந்த சட்டம் எல்லாம்?

karuppasamy சொன்னது…

neengal oru samuthayaththin aadaravalarraga karuththu theriviththu ulleerkal. Ramar intha desathin alikka mudiyatha varalaatru unmai. babar masque idiththathu thavarillai kaaranam intha desathin ellaaraalum vanangappadum oruvarin aalayaththil kaddappaddathu.

innum solvathanaal baber masuthi nammai adimai paduththiyavanin vetri sinnam... en indiyavin indiyanai avamana paduththum sinnam...


indiavil pala masuthikal kovilai idiththu kadda paddathu thaan....

nammudaya nilaththai aduththavar anupavikka naam oru naalum sammathippathillai. appadi irukkaiyil oru naddin adaiya sinnaththai eppadi anumathikka mudium....

baber masuthiyai idiththathu thavaru entraal............, avarkal seythathu maddum niyaayamaanathaa?

engalin nampikkaikalukku unarvukalukku mathippu kodunkal.....