அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே
அதிரூபன் தோன்றினானே!
வைக்கோலின் மேலொரு வைரமாய் வைரமாய்
வந்தவன் மின்னினானே!
விண்மீன்கள் கண்பார்க்க சூரியன் தோன்றுமோ
புகழ் மைந்தன் தோன்றினானே!
போர்க்கொண்ட பூமியில் பூக்காடு தோன்றவே
புகழ்மைந்தன் தோன்றினானே!
முட்காடு எங்கிலும் பூக்காடு பூக்கவே
புவிராஜன் தோன்றினானே!
நூற்றாண்டு இருளினை நொடியோடு போக்கிட
ஒளியாகத் தோன்றினானே!
……………………………………………………..
’வருத்தப்பட்டு பாரம் சுமப்பவர்களே, என்னிடம் வாருங்கள், நான் இளைப்பாறுதல் தருவேன்’ என்று சகமனிதனின் துயரம் சிந்திய கருணைமகன் பிறந்தநாள் இன்று. ‘வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் நானும் வாடினேன்’ என்று உள்ளம் உருகிய வள்ளலாரைப்போல. சக மனிதனின் துன்பம் கண்டு எவன் கண் கலங்குகின்றானோ அவனே உண்மையான மனிதன், இறை நம்பிக்கையுள்ளவர்கள் அவனை இறைவனின் அவதாரம் என்று கொண்டாடக் கூடும்.
ஆனாலும் என்ன, பெத்லஹேமில் கருணைமகன் பிறந்த அன்றே முளைவிட்ட ஒரு மரம் அறியுமோ ஒரு 33 வருடங்கள் கழிந்தபின்னர் அவனுக்கு தானே சிலுவை மரமாக மாறக் கூடும் என்று அறிந்திருந்தால் அந்த மரம் முளைக்காமலேயே போயிருக்க கூடும்!
தச்சனின் மகனாக மாட்டுத்தொழுவத்தில் தோன்றிய அந்த மகனை, வெறும் மரங்களாய் கிடந்த மானிடரை செதுக்கி சிற்பமாய் வடித்தெடுத்த அந்த நல்மேய்ப்பனை, பிற்பாடு தான் செய்யப்போகும் ஒரு சிலுவையில்தான் ரத்தம் வடிய வடிய ஆணியடித்து சித்திரவதை செய்யப் போகின்றார்கள் என்று அறிந்திருந்தால் அதே ஊரில் பிறந்த இன்னொரு தச்சன் பிறக்காமலேயே இருந்திருக்கவும் கூடும்!
கீழ்த்தஞ்சையில் பிறந்த கொடுமைக்காக நிலப்பிரபுத்துவ சாதீய நெருப்பில் கரைந்து சாம்பலாகும் நாள் வரும் என்று முன்னரே தெரிந்திருந்தால் அந்த 44 உயிர்களும் சாதீயப்பெருவியாதியால் பீடிக்கப்பட்ட இந்த தேசத்தில் பிறக்காமலேயே இருந்திருக்கவும் கூடும்!
தஞ்சை. சோழவள நாடு சோறுடைத்து என்றால் வெறும் காவிரி நீர் மட்டுமே காரணமா? எல்லா இடத்திலும்தான் மண் இருக்கின்றது, ஆனால் வெறும் மண்ணில் தம் வியர்வையோடு ரத்தத்தையும் கீழ்வெண்மணியின் விவசாயிகள் ஆண்களோடு பெண்களும் சிந்தி வெறும் மண்ணுக்கு உயிரூட்டி தமிழ்மக்களுக்கு சோறு ஊட்டினார்கள்.
”சூரிய உதயத்திற்கு முன்னாலேயே வயலில் இறங்கிடணும், சூரியம் மறஞ்ச பொறவுதான் வெளியே வரணும்”. தோளில் துண்டு போடக்கூடாது, காலில் செருப்பு போடக் கூடாது என்ற சமூக ஒடுக்குமுறைகள் ஒருபுறம். தங்களுக்கான நியாயமான கூலி வேண்டி விவசாயத்தொழிலாளிகள் நடத்தும் பொருளாதாரப்போராட்டம் மறுபுறம். அங்கே இருந்த அரசியல் கட்சிகள், பிரதானமான திமுக, காங்கிரஸ் உட்பட எல்லோரும் நிலப்பிரபுக்களின் கொல்லைப்புறங்களில் எச்சில்களுக்கு கையேந்தி நின்று கொண்டிருந்தபோது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொடி உயர்கின்றது, அரசியல் போராட்டம் வேர் விடுகின்றது. (40 வருடங்களுக்குப் பின்னும் இதைத்தானே உத்தப்புரத்திலும் பார்த்தோம்!). கர்நாடகத்தில் இருந்து தமிழகம் நோக்கிப் பாய்ந்த காவிரி போல் உயர்சாதி வகுப்பில் பிறந்த பி.சீனிவாசராவ் அங்கே விவசாயிகளின் தலைவனாகின்றார், அவர்களோடு உண்டு உறங்கி அவர்களொடு தன்னைக் கரைத்துக் கொள்கின்றார்.
1968 டிசம்பர் 6 அன்றே வெண்மணியில் மிராசுகளின் கூட்டத்தில் கீழ்சாதிக்கூலிக்காரன்களின் குடிசைகளைக் கொளுத்துவோம் என்று பகிரங்கமாகவே மிரட்டுகின்றார்கள். இது பற்றி அன்றைய திமுக அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டும் எவ்வித நடவடிக்கையையும் அரசு எடுக்கவில்லை. உச்சக்கட்டமாக டிசம்பர் 25 அன்று நிலப்பிரபுக்கள் சாதிவெறியர்களின் தாக்குதலில் இருந்து தப்பிக்க ராமையா என்ற விவசாயியின் குடிசையில் ஓடி ஒளிந்த 44 விவசாய யேசுநாதர்கள் உயிரோடு எரித்து சாம்பல் ஆக்கப்பட்டார்கள். 20 பெண்கள் (2 கர்ப்பிணிகள்), 19 சிறுவர் சிறுமியர், 5 முதியோர் உட்பட. 25க்கும் மேற்பட்ட குடிசைகளுக்கும் தீ வைக்கப்பட்ட்து.
வழக்கு பதிவு செய்யப்பட்டது. வேதனை என்னவெனில் வெண்மணிப்படுகொலைக்கு காரணமான கோபாலக்ருஷ்ண நாயுடு உள்ளிட்டோர் மட்டும் இன்றி, பக்கிரி என்ற ரவுடி இறந்தான் என்று சொல்லி கோபால் உள்ளிட்ட 22 விவசாயத்தொழிலாளர் மீதும் வழக்கு போடப்பட்டது!
முதல்குற்றவாளியான கோபாலக்ருஷ்ண நாயுடுவுக்கும் அவரோடு 7 பேருக்கும் 10 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அதே நேரத்தில் விவசாயத்தொழிலாளர் மீது தொடுக்கப்பட்ட வழக்கில் தோழர் கோபாலுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட்து. தோழர் ராமய்யனுக்கு 5 ஆண்டு, மற்ற 6 பேருக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அதாவது பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கும் சிறைத்தண்டனை! மனிதர்களை உயிரோடு கொளுத்திய கொடூரன் ஒருவனுக்குக் கூட ஆயுள்தண்டனை வழங்கப்படவில்லை! இதுவல்லவோ நீதி!
இறுதியில் என்னதான் நடந்தது? மிராசுதார் கோபாலக்ருஷ்ண நாயுடு உள்ளிட்ட 8 பேர் சென்னை உயர்நீதி (?) மன்றத்தால் நிரபராதிகள் என்று அறிவிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டார்கள்! தோழர் கோபாலோ ஆயுள்தண்டனை உறுதிசெய்யப்பட்டு 14 ஆண்டுகள் சிறையில் இருந்தார்!
உச்சகட்டமாக இவ்வழக்கின் தீர்ப்பில் உயர்நீதிமன்றம் சொன்னதுதான் இந்த அரசும் நிர்வாகமும் காவல்துறை நீதிமன்றங்களும் யாருக்கு சேவகம் செய்கின்றன என்பதை உறுதி செய்கின்றது: ‘இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 23 பேருமே மிராசுதாரர்களாக இருப்பது வியப்பாக உள்ளது. அவர்களில் பெரும்பாலோர் பணக்காரர்கள், மிகப்பெரிய நில உடைமையாளர்கள், கவுரவம் மிக்க சமூக அந்தஸ்து உடையவர்கள். அவர்கள் இந்தக் குற்றத்தை செய்திருக்க மாட்டார்கள். விவசாயிகளை பழி தீர்க்க அவர்கள் எவ்வளவுதான் ஆர்வமாக இருந்திருந்தாலும் வேலையாட்கள் எவருடைய உதவியும் இல்லாமல் அவர்கள் சம்பவம் நடந்த இட்த்திற்கு தாங்களாகவே நேரில் நடந்து வந்து வீடுகளுக்கு தீ வைத்திருப்பார்கள் என்பது நம்புவதற்கு கடினமாக உள்ளது’.
கோபாலக்ருஷ்ண நாயுடுவின் கைக்கொள்ளி சாதீய ஒடுக்குமுறையின் பல்வேறு வடிவங்களில் இன்றும் அணையாமல் பற்றி எரிந்துகொண்டேதான் இருக்கின்றது, கொள்ளிக்கு எண்ணெய் ஊற்றும் வேலைகளை வேறு யாரும் அல்ல, அரசாங்கமே செய்யும்! தாமிரபரணியிலும் பரமக்குடியிலும் உத்தப்புரத்திலும் பாப்பாப்பட்டி கீரிப்பட்டியிலும் நடந்தது வேறென்ன? இதற்கு சவாலாக விவசாயிகளின் தொழிலாளிகளின் போராட்ட நெருப்பின் தகிப்பு வெண்மணியின் பல்மடங்கு உக்கிரத்தோடு ஆக்ரோசமான ஆவேசத்தோடு கனன்று கொண்டேதான் இருக்கின்றது. அன்று ராமையாவின் குடிசையில் நிலப்பிரபுக்கள் பற்ற வைத்த சாதீயத்தீ தன் நாக்குகளால் 44 அப்பாவிகளை எரித்தபோது அவர்களைக் காப்பாற்ற எந்த ஆண்டவனும் வரவில்லை, ஆண்டுகொண்டிருந்தவர்களும் வரவில்லை. மக்கள் ஒற்றுமை என்னும் வலிமையான ஆயுதம் மட்டுமே நிலப்பிரபுத்துவ முதலாளித்துவ அடக்குமுறைகளையும் சாதீய ஒடுக்குமுறைகளையும் வெட்டி வீழ்த்தும். ”கேளுங்கள் தரப்படும், தட்டினால் மட்டுமே திறக்கப்படும்.”
6 கருத்துகள்:
இனிய கிறிஸ்மஸ் வாழ்த்துகள்
இன்றய ஸ்பெஷல்
நடிகர் விஜய்யின் நண்பன் சிறப்பு போட்டோ பதிவு
அருமையான பதிவு தோழரே!வாழ்த்துக்கள்---காஸ்யபன்
கருத்திட்ட நண்பர்கள் அனைவருக்கும் நன்றி! உலகம் அன்பு மயம் ஆகட்டும்!சகோதரத்துவம் செழிக்கட்டும்! என் இனிய கிறித்துமஸ் நல்வாழ்த்துக்கள்!
மிகவும் தெளிவான ஒப்பீட்டு பதிவு..
கருணை மகன், சிலுவை மரம் போன்ற சொல்லாடல்கள் சிறப்பு கவனம் கோருகின்றன.
உருக்கத்தின் வழி சொல்லப்படும் கதையின் இறுதிக் கட்டத்தில் அநீதிக்கு எதிரான போருக்கான சூத்திரமும் சொல்லப்படுவது பதிவின் கனத்தை மேலும் கூட்டுகிறது.
வாழ்த்துக்கள்.
எஸ் வி வேணுகோபாலன்
தோழர் எஸ்விவி! உங்களது உற்சாகமூட்டல் என்னை மேலும் மேலும் எழுதத் தூண்டுகின்றது, அதிக கவனத்துடன்! நன்றி! அன்பும் கனிவும் எங்கும் பரவ இந் நன்னாளில் கைகோர்த்து பாடுபடுவோம்! என் உளமார்ந்த கிறித்துமஸ் வாழ்த்துக்கள் உங்களுக்கு!.. நேற்று வெளியிடப்பட்ட எஸ்.ராமக்ருஷ்ணனின் படைப்புலகம் தொகுப்பில் உங்களது விமர்சனமும் இடம் பெற்றிருப்பது எங்களுக்கெல்லாம் பெருமை!
கருத்துரையிடுக