1) கொச்சியில் இருந்தபோது சென்னை வருவதற்காக அதிகாலையிலேயே சென்று டட்கல் சீட்டு வாங்கிவிட்டு எர்ணாகுளம் வடக்கு ரயில்நிலையத்தை விட்டு வந்து மீண்டும் வீடு திரும்ப பேருந்து நிறுத்தம் நோக்கி நடந்தபோது ஒரு பெரியவர் எதிரே வந்து மிகுந்த தயக்கத்தோடு நின்றார். பார்த்தவுடன் தெரிந்தது தமிழர் என்று. குளித்து சுத்தமாக தலைசீவி துவைத்த சட்டை கைலி கட்டி எதிரே நின்றார். வணங்கினார். நானும் தமிழன் என்று கண்டுகொண்டதால் இருக்கலாம். நானும் வணங்கி நின்று என்ன என்று பார்வையிலேயே வினவ, ‘பிள்ளைங்க சாப்பிடணும், ஒரு இருபது ரூபா கொடுங்கய்யா’ என்று மீண்டும் வணங்கினார். அப்போதுதான் கண்டேன், சற்று தூரத்தில் இரண்டு பிள்ளைகளுடன் - பத்து வயதிற்குள் - ஒரு பெண்மணியும் நிற்க கண்டேன். அந்தப் பெண்ணோ மிகுந்த கூச்சத்துடன் தலை குனிந்தபடி நின்றிருந்தார். அவரும் குளித்து எண்ணெய் தேய்த்து படிய வாரி, குங்குமம் இட்டு, எளிய ஆனால் சுத்தமான ஆடை உடுத்தியிருந்தார். ‘எந்த ஊரு?’ என நான் கேட்க ‘திண்டுக்கல்’ என்றார் இவர். அடுத்து நான் கேட்கும் முன்னரே ‘கொத்தனார் வேலைக்கு வந்தேன், வர சொன்னவர போய் பாக்கணும், இப்போ காசு இல்ல, பிள்ளைங்களுக்கு சாப்பிட ஏதாச்சும் கொடுக்கணும், ஒரு இருபது ரூபா மட்டும் கொடுங்கய்யா, இன்னைக்கு வேல குடுத்துடுவாங்க’ என்ற அவரது பணிவான, சாலையில் நடந்து செல்லும் மூன்றாம் மனிதர் காதில் விழுந்து விடக்கூடாத கவனமான பேச்சிலும், தள்ளி நின்று தரையப் பார்த்தபடி நின்றிருந்த அவர் மனைவியின் வெட்கத்திலும் மானமுடன் வாழ்ந்த ஒரு தமிழ்க்குடும்பம் கட்டிக்காத்து வந்த பெருமை கேரள வீதி ஒன்றில் வீழ்ந்துபட்ட கேவலமும் அவமானமும் தெரிந்தது. ’ஊரை விட்டு ஓடி விடும் குடும்பங்கள் நடு ராத்திரியில்தான் கிளம்புகின்றன’ என்று எஸ்.ராமக்ருஸ்ணன் சமீபத்தில் பேசியது இப்போது ஞாபகம் வருகின்றது. தென்காசியில் இருந்து மதுரைக்கு பிழைப்பு தேடி என் சிறு வயதில் புறப்பட்ட என் குடும்பமும் குளிர் நடுங்கும் ஒரு நடு ராத்திரியில்தான் புறப்பட்டது எனக்கு என்றும் மறக்காது. என் தகப்பனைப் போலவே கறுப்பு நிறத்தில் நின்று கொண்டு கேவலம் ஒரு இருபது ரூபாய்க்காக என்னை வணங்கி நின்ற கோலம் என் கண்களில் எந்த தயக்கமும் இன்றி நீரை வர வைத்தது. ’என் பிள்ளைகளுக்காக’ என்று வைத்த அந்த வேண்டுகோளில் ‘எனக்கும் என் சம்சாரத்துக்கும் நீ ஒண்ணும் தரவேண்டாம், அதை நான் பார்த்துக் கொள்வேன்’ என்ற தன்மானம் ஒளிர்ந்து மிளிர்ந்ததை என்னென்று சொல்ல! தவிர கொச்சி என்ற எர்ணாகுளத்தின் காஸ்ட்லி முகத்தை புலர்ந்தும் புலராத அந்த அதிகாலையானது திண்டுக்கல்காரருக்கு இன்னும் காட்டவில்லை ஆதலால் ஒரு இருபது ரூபாயில் இரண்டு பிள்ளைகளுக்கும் காலை உணவு கொடுத்துவிட முடியும் என்று நம்பிய அந்த அப்பாவியை என்னென்று சொல்ல! நான்கு பேருக்கும் ஓரளவு சாப்பிடமுடிகின்ற ஒரு தொகையை அவர் கையில் கொடுத்தபோது அவர் கையெடுத்து வணங்க, சகிக்க முடியாமல் அந்த இடத்தை விட்டு நகர்ந்தேன்.
2) கொச்சியின் அதிகாலை, அந்திமாலைப் பொழுதுகளில் பேருந்துகளில் பயணித்தவர்களுக்கு ‘நாம் இருப்பது தமிழ்நாடோ?’ என்ற சந்தேகம் வரும் அளவுக்கு தமிழ் மக்களின் கூட்டத்தைப் பார்க்க முடியும். அத்தனை பேரும் கட்டிடத்தொழிலாளர்கள், ஆண்கள் பெண்கள். இவர்களில் சிலர் குடும்பமாக, மற்றவர்கள் நாலைந்து ஆண்கள் சேர்ந்து ஒரு வீட்டை வாடகைக்கு பிடித்து இருப்பார்கள். கேரளாவில் இத்தகு வேலைகளுக்கும் வீட்டுவேலைகளுக்கும் உள்ளூர் மலையாளிகள் கிடைப்பது அரிதிலும் அரிது, இதுதான் தமிழர்களையும் வங்காள, ஒரிய மக்களையும் கேரளத்தின்பால் தள்ளுகின்றது. இதன்றி பல பத்தாண்டுகளுக்கு முன்பே அங்கே குடும்பத்தோடு குடியேறி ஒரு தலைமுறையை பெற்றெடுத்து பாதி தமிழனாக பாதி மலையாளியாக வாழும் குடும்பங்கள் ஏராளம். கொச்சியின் பிரபலமான அபிராமி குரூப் ஓட்டல், கச்சேரிப்படியில் உள்ள அசோக்பவன் போன்ற ஓட்டல்கள் எல்லாம் தமிழர்களுக்கு உரியவை. கொச்சியின் தெற்குப் பகுதியான தேவார தமிழ்நாடோ என்று ஐயுறும் அளவுக்கு ஒரு சின்ன தமிழ்நாடு! இதே போல பல பத்தாண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் குடும்பத்தோடு குடியேறி ஒரு தலைமுறையை பெற்றெடுத்து பாதி மலையாளியாக பாதி தமிழனாக வாழும் மலையாளி குடும்பங்கள் இங்கே ஏராளம்.
3) முல்லைப்பெரியாறு பிரச்னையை கேரள அரசும் கேரள அரசியல்கட்சிகளும் அரசியல்வாதிகளும் கையாளும் விதம் கண்டனத்துக்கு உரியது. ஒரே அரசியல் கட்சி ஆயினும் இரண்டு மாநிலங்களிலும் இரண்டு நிலை எடுத்துள்ள கட்சிகளும் உள்ளன. இப்பிரச்னையை கையில் எடுத்துக்கொண்டு எல்லை மாவட்டங்களில் சில அமைப்புக்களும் சில கும்பல்களும் வன்முறையில் இறங்கியுள்ளன. தத்தமது மக்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு இரண்டு மாநில அரசுகளுக்கும் உள்ளது. சென்னையிலும் கோவையிலும் கம்பம் போடி பகுதிகளிலும் மலையாளிகள் நடத்தும் கடைகள் தாக்கப்பட்டுள்ளன. மலையாளிகள் நடத்தும் கோடிக்கணக்கான பணம் புரளும் நகைக்கடைகள் தாக்கப்பட்டவுடன் தமிழக போலீஸ் துப்பாக்கிக்காவல் போட்டுள்ளது! இப்போது தமிழ் தேசிய பொதுவுடமைக்கட்சியினர் எங்கே போனார்கள் என்று தெரியவில்லை! ஆனால் அன்றாட வருமானத்தை மட்டுமே எதிர்பார்த்து தேநீர் குளிர்பானக் கடை நடத்தி ஆவேச தமிழ்ப்பற்றாளர்களின் வன்முறையால் பாதிக்கப்பட்ட சாமானிய மலையாளிகளுக்கு ஏற்பட்ட நட்டம் நட்டம்தான்! இப்போது தொலைக்காட்சியில், சென்னையில் ‘நாம் தமிழர்’ கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டம் செய்ததாக ஒரு செய்தி வருகின்றது. சென்னையில் வாழும் மலையாளிகளின் சமாஜ் தலைவர் தொலைக்காட்சியில் சொன்னது: 'நாங்கள் இங்கே பல பத்தாண்டுகளுக்கு முன்பேயே குடும்பங்களோடு குடியேறிவிட்டோம். தமிழ்நாடுதான் எங்கள் ஊர். நாங்கள் தமிழ்க்கலாச்சாரத்தையும் மலையாளக்கலாச்சாரத்தையும் ஒரு fusion ஆக ஏற்று வாழ்க்கை நடத்திக்கொண்டிருகின்றோம்.' அவர் சொன்ன வார்த்தைகள் கேரளாவில் பல பத்தாண்டுகளுக்கு முன் குடியேறிவிட்ட தமிழர்களுக்கும் பொருந்தும்தானே!
4) முல்லைப்பெரியாறு பிரச்னை அமைதியாக தீர்க்கப்பட வேண்டும் என்பதை அமைதியை விரும்பும் அனைவரும் ஏற்பர். கேரளாவில் தமிழர்கள் மீதான தாக்குதல் கண்டிக்கப்பட வேண்டியதே. அதே போல் தமிழகத்தில் கேரள மக்கள் மீதான தாக்குதலையும் கண்டிக்க வேண்டும். இல்லை இல்லை, 'தமிழ்தேசியம்’ ‘நாம் தமிழர்’ என்று ஆவேசப்படுகின்றவர்களிடம் ஒரே ஒரு கேள்வி: அந்த ‘தேசியத்’தில், ‘நாமி’ல் கேரள வீதியில் அதிகாலையில் குடும்பத்தோடு நின்றுகொண்டு ஒரு ஒற்றை இருபது ரூபாய்க்காக ஒரு தமிழன் முகத்தை தேடிய திண்டுக்கல்காரரும் அடக்கமா?

4 கருத்துகள்:
இந்தப் பதிவினை பார்க்கும்பொழுது
என் தந்தையின் நினைவுகளும்
பாரதியின் வரிகளும் நினைவுக்கு வருகிறது..
தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் ........
இதயம் கனக்கிறது..
1)இப்போதும் நான் தொலைக்காட்சியைப் பார்த்துக்கொண்டே இருக்கின்றேன்.போராட்டம் என்ற பெயரில் என்னென்னமோ கூத்துக்கள் நடப்பதை பதட்டம் மட்டுமே மிஞ்சுகின்றது. அணைப்பிரச்னை பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது, சில சக்திகள் விரும்பியது போலவே! இரண்டு மாநில அரசுகளும் என்ன உள்நோக்கம் கருதியோ மௌனமாக இருக்கின்றன.
2)அன்று பூராவும் எந்த வேலையிலும் என்னால் ஆழ்ந்து ஈடுபட முடியவில்லை. அந்த கொடுமையான காட்சி இப்போதும் என் கண் முன்னால் அழியாத அவலச்சித்திரமாக நிற்கின்றது. நீங்கள் சொன்னதுதான், நம் தகப்பனும் தாயும் நமக்கு கண் முன் நிற்க வேண்டும்,இதயம் கசிய வேண்டும்,நாம் மனிதன் என்பதற்கு அதுதான் அடையாளமாக இருக்கும்.
வணக்கம் ,உங்களது பதிவுஒன்றினை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளேன் நண்பரே நேரம் இருக்கும்போது பார்த்துச் செல்லவும் .நன்றி http://blogintamil.blogspot.in/2012/02/blog-post_28.html
அன்புக்குரிய பைங்கிளி! நேற்று முதல் வலைச்சரத்தின் ஆசிரியராகப் பொறுப்பேற்றதை மகிழ்வுடன் அறிவேன். நிறைந்த மனத்துடன் பல்வேறு வலைத்தள நண்பர்களின் படைப்புக்களை அறிமுகம் செய்துள்ளீர்கள், பாராட்டுகின்றேன். எனது படைப்பு ஒன்றையும் அறிமுகம் செய்து என்னையும் பெருமைப்படுத்தியுள்ளீர்கள், மிக்க நன்றி! நான் எழுதியவற்றில் என் மனத்தில் முன் நிற்கும் படைப்புக்களில் இதுவும் ஒன்று, என்றும் மாறாத தழும்பு. உங்கள் மனத்தையும் நெகிழச்செய்ததை அறிவேன். தொடர்க உங்கள் செவ்விய பணி பைங்கிளி! நன்றி!...இக்பால்
கருத்துரையிடுக