வெள்ளி, டிசம்பர் 16, 2011

ராட்க்லிஃப் கோடும் முல்லைப்பெரியாறும்


The Radcliffe Line was announced on 17 August 1947 as a boundary demarcation line between India and Pakistan upon the Partition of India. The Radcliffe Line was named after its architect, Sir Cyril Radcliffe, who as chair of the Border Commissions was tasked with equitably dividing 175,000 square miles (450,000 km2) of territory with 88 million people.

1) ஒரே ஒரு கோடுதான் போடப்பட்டது ஒரு ப்ரிட்டிஷ்காரனால்.  அனேகமாக குறைந்தது இருபது லட்சம் பேர் இந்தியர்கள் படுகேவலமாக பட்டினியிலும் படுகொலையிலும் செத்தார்கள், பெண்கள் (எப்போதும்போல்) பாலியல் வன்முறைக்கு பலியானார்கள். இவர்களில் இந்துக்கள், இஸ்லாமியர்கள், சீக்கியர்கள் என அனைவரும் இரு(ற)ந்தார்கள். அவர்கள் எல்லோருமே நேற்று வரை அருகருகே வீடுகளில் வசித்து வந்தவர்கள், அண்ணன் தம்பி மாமன் மச்சான் அக்கா தம்பி அம்மா என்று ஒருவரை ஒருவர் அன்பொழுக விளித்துக்கொண்டவர்கள்தான்; வெள்ளைக்காரன் போட்ட கோடு இவர்களை ஒருவரை ஒருவர் வெட்டி சாய்த்துக்கொள்ள செய்தது, எந்தப் பக்கத்துவீட்டுப் பெண்களை அக்கா தம்பி அம்மா என்று அழைத்துக் கொண்டார்களோ அதே பெண்களை நடுவீதிகளில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்தார்கள்.  400 வருட அந்நியர் ஆட்சியில் அவர்கள் செய்யாத படுகொலைகளை தங்களுக்குள்ளேயே ஒரு சில மாதங்களுக்குள் செய்து கொண்டார்கள், இந்திய தேசம் இந்தியா பாகிஸ்தான் என இரண்டாகப் பிரிக்கப்பட இத்தனை லட்சம் பேரின் பிணங்கள் தேவைப்பட்டது.

2)ஏற்கனவே எனது பதிவு ஒன்றில் சொல்லியபடி பல பத்தாண்டுகளுக்கு முன்பே கேரளாவில் குடும்பத்தோடு குடியேறி ஒரு தலைமுறையை பெற்றெடுத்து பாதி தமிழனாக பாதி மலையாளியாக வாழும் குடும்பங்கள் ஏராளம். இதே போல பல பத்தாண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் குடும்பத்தோடு குடியேறி ஒரு தலைமுறையை பெற்றெடுத்து பாதி மலையாளியாக பாதி தமிழனாக வாழும் மலையாளி குடும்பங்கள் இங்கே ஏராளம். தத்தமது மக்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு இரண்டு மாநில அரசுகளுக்கும் உள்ளது.  சென்னையிலும் கோவையிலும் கம்பம் போடி பகுதிகளிலும் மலையாளிகள் நடத்தும் கடைகள் தாக்கப்பட்டுள்ளன. சென்னையில் வாழும் மலையாளிகளின் சமாஜ் தலைவர் தொலைக்காட்சியில் சொன்னதை மீண்டும் நினைவு படுத்துகின்றேன்:'நாங்கள் இங்கே பல பத்தாண்டுகளுக்கு முன்பேயே குடும்பங்களோடு குடியேறிவிட்டோம். தமிழ்நாடுதான் எங்கள் ஊர். நாங்கள் தமிழ்க்கலாச்சாரத்தையும் மலையாளக்கலாச்சாரத்தையும் ஒரு fusion ஆக ஏற்று வாழ்க்கை நடத்திக்கொண்டிருகின்றோம்.'  அவர் சொன்ன வார்த்தைகள் கேரளாவில் பல பத்தாண்டுகளுக்கு முன் குடியேறிவிட்ட தமிழர்களுக்கும் பொருந்தும்தானே! 

ஆனால் தொடர்ந்து கேரளாவில் தமிழர்கள் மீது தாக்குதலும் தமிழகத்தில் கேரளமக்களின் வணிகத்தலங்கள், ஹோட்டல்கள் மீது தாக்குதலும் அருவருக்கத்தக்க விதத்தில் அதிகரித்துக்கொண்டே வருவதை தொலைக்காட்சியில் பார்க்க முடிகின்றது. 

3) ஆளும்கட்சியான அ இ அ திமுகவுக்கும் அழிந்துகொண்டிருக்கும் திமுகவுக்கும் உயிர் கொடுக்க முல்லைப்பெரியாறு கை கொடுத்துள்ளது. 'உரிமையாகக் கிடைத்திட வேண்டிய தண்ணீருக்காக உதிரம் சிந்திடும் வன்முறையைத் தவிர்த்து நன்முறை திரும்பிடும் வகையில், இந்தப் பிரச்னையில் அரசுக்கு தி.மு.க. உறுதுணையாக திகழ்ந்திடும் என்ற உறுதியைத் தெரிவிக்கிறேன்' என்கின்றார் ஸ்டாலின். திமுக,அ இ அதிமுக...தமிழ்நாட்டு மக்களின் பணத்தையும் பொதுச்சொத்தையும் சுரண்டித்தின்று கொழுத்த கட்சி அ இ அதிமுக என்றால், பல படி மேலே போய் இந்திய மக்களின் சோற்றை ஒரு பருக்கை விடாமல் நக்கித்தின்ற களவாணிதான் திமுக.  தாமிரபரணி தலித் தமிழ் மக்கள் படுகொலைக்கு (உதிரம் சிந்திடும் வன்முறை) திமுக சொந்தம் கொண்டாடலாம் என்றால் தர்மபுரி தமிழ் மாணவிகள் படுகொலைக்கும் பரமக்குடிக்கு தலித் தமிழ்மக்களின் படுகொலைக்கும் அ இ அதிமுக சொந்தம் கொண்டாடலாம், வாச்சாத்தியில் வனங்களில் நடந்த தமிழ்ப்பெண்கள் மீதான பாலியல் பலாத்காரத்துக்கோ இரண்டு கட்சிகளுமே சொந்தம் கொண்டாடலாம். இந்நிலையில் 2ஜி கேவலத்திலில் இருந்து மக்களை திசைதிருப்ப திமுகவுக்கும், பரமக்குடி, அண்ணா நூலகம் ஆகிய பிரச்னைகளிலி இருந்து திசைதிருப்ப அ இ அதிமுகவுக்கும் ஒரு நல்வாய்ப்பை கேரள அரசும் அங்குள்ள அரசியல் கட்சிகளும் இரண்டு திருடர்களுக்கும் வழங்கியுள்ளன.  இப்போது இரண்டு கட்சிகளும் தமிழர்களுக்காக வருந்தி மூக்கை சிந்துவதாக கண்ணீர் விடுகின்றன.  பொறுப்பற்ற அல்லது தமிழக மக்கள் ஓரங்கட்டிவிட்ட ஒருசில அரசியல் கட்சிகளோ இதுதான் சாக்கு என்று விளம்பரம் தேடும் முயற்சியில் எல்லை மாவட்டங்களில் தமிழ் மக்களை தூண்டிவிட்டு வன்முறையில் இறங்கியுள்ளன; இதை தொலைக்காட்சியில் பார்க்கும் பிற பகுதி மக்கள் தத்தம் பகுதிகளில் மலையாளிகளின் கடைகளை அடித்து நொறுக்குவது தொடர்கதையாகி வருகின்றது.  எந்த மலையாளிகள்? நேற்று வரை நமக்கு தேநீர் வழங்கிய, நமக்கு சாப்பாடு போட்டு தமது குடும்பத்துக்கான வருமானத்தை நம்மிடம் தேடிக்கொண்ட சேட்டன்களின் கடைகளை அங்கே தேநீர் அருந்திய, சாப்பாடு சாப்பிட்ட அதே தமிழர்கள்தான் அடித்து நொறுக்குகின்றார்கள்! ஆளும் கட்சியான அ இ அதிமுகவும் திமுகவும் இன்னபிற தேகா கூகா மூகா காக்கா நாக்கா கட்சிகளும் இது குறித்து உரத்த ஒருமித்த குரலில் அல்லவா கண்டித்திருக்க வேண்டும்! இல்லை! ஆக ஆளும் கட்சியின், பிற கட்சிகளின் இந்த கள்ள மவுனம் வன்முறையாளர்களுக்கு பச்சை விளக்கு காட்டியது போலாக, இதோ, தொலைக்காட்சியை பாருங்கள், தொடரும் வன்முறை, கடைகளை நொறுக்குவது... அணைப்பிரச்னையை சாக்காக வைத்துக்கொண்டு மிக எளிய வியாபாரம் செய்து குடும்பம் நடத்துகின்ற சகமனிதனை நொறுக்குவது என்ன நியாயம் என்று புரியவில்லை!  தமிழன் என்றோர் இனம் உண்டு, தனியே அவர்க்கொரு குணம் உண்டு...இதுதானோ? மனிதர் உணவை மனிதர் பறிக்கும் வழக்கம் இனியுண்டோ என்ற பாடலைப் பாடியவன் தமிழன் என்றுதான் ஞாபகம். (கேரள அரசும் அங்கு தமிழர்கள் மீதான தாக்குதலில் இதே மெத்தனத்தையும் மவ்னத்தையும்தான் கடைப்பிடிக்கின்றது என்ற நிலைமையை தெரிந்துதான் எழுதுகின்றேன்; அங்கே அவர்களது இழிவான அரசியல்!)

5 கருத்துகள்:

kumaraguruparan சொன்னது…

நல்ல கருத்துக்களை உரத்துக் கூறியுள்ளீர்கள்.பாகிஸ்தான்-பாரதம் என இரு பிரிவாகப் பிளந்து ரத்தக் களரியைச் சந்தித்து சொந்தச் சகோதரர்களை வேலிகளால் கூறு போட்டு விட்டோம் .இதே போல்தான் எங்கு நடக்கும் எல்லைப் பிரச்சினைகள்! ஒவ்வொரு முறையும் தமிழர்கள்-மலையாளிகள் அல்லது தமிழர்கள் -கன்னடத்தார்கள் என்ற விரிசல் வரும் போதெல்லாம் எளிய மக்கள் கடைகளே சூறையாடப் படுகின்றன. இருபது ஆண்டுகள் முன்பு .சென்னையில் பெத்தேல் லாட்ஜ் (இப்போது இருப்பதாகத் தெரியவில்லை)என்று சேப்பாக்கத்தில் கலைவாணர் அரங்கு முன்பு உள்ள ஒரு தேநீர்க்கடை தாக்கப்பட்டது அதில் ஓட்டைகள் விழுந்து காணப்படும் அதெல்லாம் இங்குள்ள 'பறக்கும் படை' செய்தது.எம் ஜி ஆருக்கு எதிர் என்பதாக அவர்கள் செய்த கைங்கர்யம்!அதன் உரிமையாளர் அதை அப்படியே நினைவுச் சின்னமாக விட்டு வைத்திருந்தார்! இன்னும் எத்தனை தடவை தாக்கப்படும் .ஒரேயடியாக பழுது பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்திருக்கலாம்...தேனாம்பேட்டையிலுள்ள உடுப்பி ஹோட்டல் சுவாமி கபேயும் இப்படித்தான் கன்னடத் தமிழர்கள் காவேரி பங்கீட்டுப் பிரச்சினையில் தாக்கப்பட்டது. இதில் என்ன கொடுமை என்றால் தாக்கிய கும்பல்கள் 'தன்மானச் சிங்கங்கள்' நடந்த அரவம் தெரியாதபடி பிற்காலங்களில் அங்கேயே டீ குடிப்பார்கள்/பொங்கல் வடை சாப்பிடுவார்கள்!...பெங்களூரில் எத்தனை தமிழர்கள் உள்ளார்கள் அவர்களுக்குச் சிக்கல்தானே என்பதெல்லாம் இங்குள்ள மரமண்டைகளுக்குப் புரியாது. இதே மாதிரி கேரளாவிலும் பிழைத்துக் கொண்டிருக்கும் தமிழர்களைப் 'பாண்டி' எனச் சொல்லி நக்கல் அடிப்பது தமிழர்கள் கடைகளை அடித்து நொறுக்குவது என்று தொடர்ந்து திட்டமிட்டே நடத்தப் படுகிறது.சபரிமலை செல்லும் தமிழ் அய்யப்பன்மாருக்கு மட்டும் கருணை! கேரளத்திலும் கர்நாடகாவிலும் சூர்யா டிவி, உதயா டி வி க்கு உரிமையாளர்கள் யார் என்று கூறத் தேவையில்லை. அவர்களுக்கும் இந்தப் பிரச்சினை எழாதா ? உடனடியாக முல்லைப் பெரியார் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வருவது அவசியம். தகர்ப்பது ஒரு நொடியில் முடியும்.(பாபர் மசூதி உதாரணம் )..கட்டுவதுதான் கடினம் ...நாம் கட்டுவோம்-மக்களின் பரந்த ஒற்றுமையை!

veligalukkuappaal சொன்னது…

உங்கள் கவலைகளை உள்ளவாறே பகிர்ந்து கொள்கின்றேன் தோழர் குமரகுருபரன்! இந்த தொலைக்காட்சி சனியன் எரிகின்ற கொள்ளியில் எண்ணெய் கொட்டுகின்றதோ என்று பயமாக இருக்கு...

kashyapan சொன்னது…

தோழர்களே! ரொட்டோரம் டீக்கடை,வெத்தலை பாக்கு கடை, பேபர் போடுரவன் அடிவாங்குவான். டி.வி காரன்,நகைகடை காரன் போலீஸ் பாதுகப்போட இருப்பான்.பெங்களுரு,ஹைதிராபாத்,மும்பை,டெல்லி ,எங்கன்னாலும் இதுதான் வளமை,சாதிகலவரம்,மதக்கலவரம்,எதுன்னாலும் அடிபடுவது அன்றாடம் காச்சிகள்தன். என செய்ய தோழா!---காஸ்யபன்

veligalukkuappaal சொன்னது…

தோழர் காஷ்யபன் அவர்களுக்கு நன்றி. என்ன விதமான பண்பாட்டை, நாகரிகத்தை, சகிப்புத்தன்மையை, சகமனிதனை மனிதனாகப் பார்க்கின்ற மனிதாபிமானத்தை நாமும் நமது பள்ளிக்கூடங்களும் நமது பிள்ளைகளுக்கு சிறு வயதில் இருந்து கற்றுக்கொடுத்து வந்தைருக்கின்றோம் என்பதற்கு இதெல்லாம் அடையாளம்தானோ?! குரு ரபீந்திரரின் ஜன கண மண பாடலை வங்க மொழியில்தான் மனப்பாடமாக காலைக்கூட்டத்தில் பள்ளிகளில் பாடக்கற்றுக்கொடுத்திருக்கின்றோம், அது எத்தனை அபாயமானது என்று இப்போது தெரிகின்றது! உண்மையில் அப்பாடலின் பொருளை தமிழில் அல்லவா நம் பிள்ளைகளுக்கு தினந்தோறும் காலையில் சொல்லிக் கொடுத்திருக்க வேண்டும்!

தென்காசித் தமிழ்ப் பைங்கிளி சொன்னது…

நீங்கள் கேட்ட சிறுகதை நான் படித்ததில்லை.மன்னிக்கவும் 3 நாட்களாக ஈரோடு சென்றிருந்தேன்.அதனால் உங்களுக்கு பதிலளிக்க முடியவில்லை