ஞாயிறு, நவம்பர் 13, 2011

புள்ளியில் இணையா நெடும்பயணம்

தினமும் நடந்து செல்லும் கால்கள் பழகிய அதே பாதைதான்
இன்று ஒரு கிளை முறிந்து தலையில் விழுந்தது 

எப்போதும் என்னை மறந்து நீந்தும் நீச்சல் குளம்தான்
இன்று கீழிருந்து கொடிகள் எழும்பி 
கால்களை சுற்றி இறுக்கிப் பிடித்து உள்ளே உள்ளே இழுத்தன 
நுரையீரல் வெடிக்க வெடிக்க   

எப்போதும் கையில் தூக்கி எடுத்து கொஞ்சும் குழந்தைதான் 
இன்று கன்னத்தில் ரத்தம் வரக் கீறியது
நகம் என்று நினைத்தேன்
ஆனால் உள்ளங்கையில் சிறு கத்தி இருந்தது 

ரோஜாசெடி என்றெண்ணி நீருற்றி வளர்த்தேன்
துளிர்க்கும் கணத்தை நொடி தோறும் எதிர்பார்த்தேன் 
ஒருநாள் சிறு இலை துளிர் விட்டது கண்டு துள்ளி குதித்தேன்
உற்றுப்பார்த்தேன் அது கருவேல முள்ளாக இருந்தது  

கண்மூடிக்கிடந்த தினத்தில் இருந்தே எடுத்து வளர்த்தேன்  
எப்போதும் என் உள்ளங்கையிலும் மடியிலும் சுருண்டு சுகமாய் தூங்கும்
புட்டிப்பாலை சப்பிசப்பிக் குடிக்கும் 
ஒருநாள் தோலில் வரிகள் தோன்றின...
அவை புலியின் வரிகளாய் இருந்தன 

நட்பும் துரோகமும் ஒன்றுக்கொன்று இணையாகவே பயணிக்கின்றன 
தண்டவாளங்களைப்போல்
ஆயினும் ஒரு புள்ளியில் ஒன்றாக ஒரு நாளும் இணைவதில்லை 
ஆயினும் ஒன்றுக்கொன்று இணையாகவே பயணிக்கின்றன.

கருத்துகள் இல்லை: