செவ்வாய், செப்டம்பர் 21, 2021

1921 மாப்பிளா கிளர்ச்சியும் அந்தமானும்


1921  பற்றி Conrod Wood எழுதிய Moplah rebellion and it's Genesis என் நூலை மாப்ளா கிளர்ச்சியும் அதன் தோற்றுவாயும் என்று நான் தமிழாக்கம் செய்த நூல் 2007இல் அலைகள் பதிப்பக வெளியீடாக வந்தது.

அக்கிளர்ச்சி படுகொலைகள் மூலம் கொடூரமாக அடக்கப்பட்ட பின் சில ஆயிரம் மாப்பிளா மக்கள் அந்தமானுக்கு குடியேற்றம் செய்யப்பட்டார்கள். ஆறு வருடங்கள் முன் அந்தமானுக்கு சுற்றுலா சென்றிருந்தேன். கொடிய காலத்தின் சுவடான செல்லுலார் சிறையை பார்த்தேன். 60000 வருடங்களுக்கு முன் ஆப்பிரிக்க கண்டத்தில் இருந்து கடல் வழியே பயணித்த நம் மூதாதையர் அந்தமானில் குடியேறியதாக மானுடவியல் வரலாறு சொல்கின்றது. ஆறு ஆதிவாசி இன மக்கள் இப்போதும் அந்தமானில் வசிக்கின்றார்கள். இன்று நாம் சுற்றுலா தலமாக கருதும் அந்தமான், வெறும் கரடு முரடான பிரதேசமாக இருந்துள்ளது எனில் அத்தீவை செப்பனிட்டு செம்மையாக்கி மனிதன் வாழத்தகுந்த பூமியாக மாற்றியது யார் என்ற கேள்வி உள்ளது. Maddy என்னும் மலபார் நண்பர் ஹிஸ்டாரிக் அல்லேய்ஸ் historic alleys என்னும் தன் வலைப்பூவில் மலபார், அம்மக்கள், பண்பாடு, மலபாரின் சில நூற்றாண்டு வரலாறு, மாப்பிளா கிளர்ச்சி, மாப்பிளா மக்கள் குறித்து மிகப்பல அரிய தகவல்களை ஆங்கிலத்தில் பதிவிட்டு வருகின்றார். அவரது ஒரு பதிவின் தமிழாக்கம் இது.

..... ...... ....

TSS மஹாராஜா என்ற அக்கப்பல் 1879இல் கட்டப்பட்டது. இம்முறை அக்கப்பல் இதுவரை சென்றிடாத ஒரு புது வழியில் பயணம் சென்றது. தெற்கில் மெட்றாஸ் நோக்கிய பயணம். கப்பலில் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இருந்தார்கள், அனைவரும் பிரிட்டிஷ் அரசால் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டவர்கள். கூடவே பெருமளவு மளிகை சாமான்களும் கல்கத்தாவி ஏற்றப்பட்ட பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின், தபால் தந்தி துறையின் கடித மூட்டைகளும் இருந்தன. மெட்றாஸ் துறைமுகத்தில் கப்பல் நின்றபோது, அழுக்கடைந்த வேட்டி கட்டிய ஒரு கூட்டம் ஏறியது. கூடவே அவர்கள் சுமந்துகொண்டு வரும் சுமைகள். அவர்களில் பெரும்பாலோர் பெல்லாரியில் இருந்து கொண்டுவரப்பட்ட மாப்பிளா சமூகத்தை சேர்ந்த குற்றவாளிகள். வெப்பம் மிகுந்த கப்பலின் கீழ்த்தளத்தில் அவர்கள் தங்கவைக்கப்பட்டனர். பலர் கப்பலில் இருந்த சிறையில் அடைக்கப்பட்டார்கள். பரந்து விரிந்த நீலத்திரைக்கடலான வங்காள விரிகுடாவில் கப்பல் பயணத்தை தொடர்ந்தது. மாப்பிளாக்களில் சிலர், தங்களை ஆஸ்திரேலியாவில் உள்ள பாட்டனி வளைகுடாவுக்கு Botany Bay கொண்டு செல்கின்றனர் என்றும் வேறு சிலரோ சிங்கப்பூர் அல்லது மொரீசியஸ்க்கு கொண்டு செல்கின்றனர் என்றும் பேசிக்கொண்டார்கள். வேறு சிலரோ, தாங்கள் இனி என்றுமே திரும்பி வராத கருப்பு நீர்த்தீவுக்கு (காலாபாணி Kalapani, அதாவது ஹிந்தி மொழியில் கருப்பு நீர் என்றும் ஆயுளுக்கும் தண்டனை அனுபவிக்க போகின்றவர்கள் என்றும் பொருள்) சென்றுகொண்டிருப்பதாக உறுதியாக நம்பினார்கள். சிலர் கூண்டுகளில் அடைக்கப்பட்டார்கள், மற்றவர்கள் கப்பலின் தளத்திலோ காலி பங்கர்களிலோ உட்காரவோ படுத்துக்கொள்ளவோ அனுமதிக்கப்பட்டார்கள். மஹாராஜா தன் பயணத்தை தொடர்ந்தார். அந்தமான் நிக்கோபார் தீவுகளின் போர்ட் ப்ளேயர் என்னும்   தண்டனைக்குடியேற்றம் நோக்கி, ஆயுளுக்கும் இனிமேல் மீண்டு வர முடியாத தண்டனை த்தீவை நோக்கி ஒருவழிப்பயணம் மேற்கொண்டார்கள்.

இங்கே இவ்வாறு குடியேற்றம் செய்யப்பட்ட மாப்பிளாக்கள், மலபாரின் எரநாட்டை சேர்ந்த மக்கள், தொடர்ந்து அத்தீவுகளில் வசிக்குமாறு காலம் கட்டாயப்படுத்தியபோது, தங்கள் சொந்த கேரள மண்ணின் ஊர்களின் பெயர்களையே இந்த ஊர்களுக்கும் சூட்டினார்கள் - காலிக்கட், வாண்டூர், மன்னார்கட், திரூர், மஞ்சேரி என.

இப்போதோ காலிக்கட் என்ற பெயர் வரலாற்று ஏடுகளிலும் மூத்த குடிமக்களின் நினைவிலும் மட்டுமே உள்ளது, ஏனெனில் கேரளாவின் காளிக்கட், கோழிக்கோடு என்று பெயரை மாற்றிக்கொண்டுவிட்டது. ஆக இப்போது உலக வரைபடத்தில் இருக்கின்ற காளிக்கட் என்ற ஊர் கேரளாவில் இல்லை, மாறாக தெற்கு அந்தமான் தீவுகளில் தலைநகர் போர்ட் ப்ளேயருக்கு வடக்கே 20 கிமீ தொலைவில் உள்ளது!

தமது அரசுக்கு தொந்தரவாக இருக்கின்றவர்களை குற்றவாளிகள் என அறிவித்து தனிமைப்படுத்த மட்டுமே 18ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷார் கண்டுபிடித்த ஒரு தீவுதான் அந்தமான் தீவுகள். இரண்டாவது உலகப்போரின் போக்கில் 1942-45 காலகட்டத்தில் ஜப்பானியர் வசம் இத்தீவு இருந்தபோது நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இத்தீவுக்கு வந்துள்ளார். இந்திய தேசிய ராணுவத்தின் INA கொடியை அங்கே ஏற்றினார். கோழிகோட்டின் எரநாடு மாப்பிளாக்களை ஆயுள்தண்டனை கைதிகளாக இங்கே குடியேற்றியது பிரிட்டிஷ் ஆட்சி. ஆக இத்தீவை தண்டனைக்குடியேற்றமாக மட்டுமே பிரிட்டிஷார் பயன்படுத்தினார்கள்.

தொடக்கத்தில், குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட வெள்ளையர்களை ஆஸ்திரேலியாவில் உள்ள பாட்டனி வளைகுடாவுக்கு Botany Bay நாடு கடத்தினார்கள். குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட இந்தியர்களை அந்தமான் தீவுக்கும் கரக்பூர் அருகிலுள்ள ஹிஜிலி கேம்புக்கும் Hijli Camp அனுப்பினார்கள். அவை கொடும் தண்டனைக்குரிய சிறைகள். பின்னாட்களில் சிங்கப்பூருக்கும் பாட்டனி வளைகுடாவுக்கும் அனுப்பி அந்த பூமிகளை கைதிகளை கொண்டே செப்பனிட்டார்கள். கைதிகள் மிகக்கடுமையான உழைப்பை செலுத்தினர். இந்தியர்களின் காய் கால்களில் எப்போதும் இடப்பட்டு இருந்த சங்கிலிகள் எழுப்பிய க்ளிங் என்னும் ஓசை காரணமாக, இந்தியர்களை அங்கே இருந்தோர் க்ளிங் என்று அழைத்ததாகவும் தெரிகின்றது.

சாதிய மனநிலையில் ஊறிய இந்து மத்திய தர வர்க்க அரசியல் கைதிகள் உடலுழைப்பு அனுபவம் இல்லாதவர்கள். மேலும் இந்துமத நம்பிக்கை, கடல்கடந்து பயணிப்பது பாவம் என்று சொல்கின்றது. இவை இரண்டும் வெள்ளையர்கள் சிந்தனையில் 'இவர்களுக்கு இப்படி ஒரு தீவாந்தர தண்டனையை கொடுத்தால் என்ன' என்று சிந்திக்க தூண்டியது.

அந்தமானை ஒரு தண்டனைக்குடியேற்றமாக penal settlement மாற்றும் திட்டம், கிழக்கிந்திய பகுதியில் ஒரு கடல் வழியை கண்டறிந்தபின் 1789இல் தொடங்கியது. ஆனால் குடியேற்றத்துக்குப்பின் தீவில் சந்தித்த கொடும் நோய்கள், ஒத்துக்கொள்ளாத புதிய தட்பவெப்ப சூழல் ஆகியவற்றால் நிகழ்ந்த மரணங்களுக்கு பிறகு 1796இல் கைவிடப்பட்ட து. அடுத்த 60 வருடங்களும் சமகால மனிதர் தீண்டாத தனி தீவாகத்தான் அந்தமான் இருந்தது. 60000 வருடங்களுக்கு முன் அங்கே குடிபுகுந்த நம் மூதாதையர் ஆன ஆதிவாசிகள் ஏற்கனவே அங்கே இருக்கின்றனர் என்பதை கவனத்தில் கொள்கின்றேன். 1857 சிப்பாய் கிளர்ச்சிக்கு பின் இந்தியாவில் நிகழ்ந்த அரசியல் போக்குகள் காரணமாக அரசியல் கைதிகளின் எண்ணிக்கை அதிகரிக்க, சிறைகளில் இடம் இல்லாமல் போனது. 1858க்கு பிறகு அந்தமானில் மீண்டும் குடியேற்றம் தொடங்கியது. மூன்றாம் வகுப்பு, அதற்கு கீழான நிலையில் இருந்த கைதிகள், அரசின் கஜானாவுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத கைதிகளை கொண்டு தீவை செப்பனிட தொடங்கினார்கள். தீவின் பழங்குடிகளை அவர்களது பாரம்பரிய இடங்களில் இருந்து வெளியேற்றினார்கள். ஓரளவு கட்டுமானங்கள் உருவானபின் மூன்றாம் வகுப்பு கைதிகள் இரண்டாவது நிலைக்கு உயர்த்தப்பட்டார்கள், காவலில் இருந்து விடுவிக்கப்பட்டு வெளியே உள்ள நிலப்பரப்பில் தங்கி வாழ அனுமதிக்கப்பட்டார்கள். இது சற்றே நிம்மதியான வாழ்க்கையாக இருக்கவே, இந்தியாவில் தங்கள் சொந்த ஊர் மக்களுக்கு இச்செய்தியை தெரிவிக்கவே, அந்தமானுக்கு குடிபுக கைதிகள் தாமாகவே முன்வந்தார்கள்! இப்படி ஒரு சூழ்நிலையை எதிர்பார்க்காத நிர்வாகம், கெடுபிடிகளை அதிகரித்தது. இதன் பின்னர்தான் நட்சத்திர மீன் வடிவிலான செல்லுலார் சிறை கட்டும் திட்டம் உருவானது. இங்கே அரசின் ஆதரவில் மட்டுமே வாழ முடிந்த கைதிகளையும் கொடும் கிரிமினல் குற்றவாளிகளையும் அடைக்க திட்டமிட்டார்கள்.

1910இல் கட்டி முடிக்கப்பட்ட செல்லுலார் சிறையில் 698 தனியறைகள் இருந்தன. 15x9 அடி பரப்பளவு, 10 அடி உயரத்தில் ஒரு ஜன்னல். இங்கே ஒருமுறை வந்த எவரும் மீண்டும் வெளியே வருவதும் தீவில் இருந்து தப்பிக்க முயற்சிப்பதும் கனவிலும் நடக்காதது. 6 மாத தனிமைச்சிறை, பின் நான்கரை வருட கூட்டுழைப்பு, பின் 5 வருடக்கூலி உழைப்பு, அடுத்த 10-15 வருடங்களுக்கு தன்னைத்தானே சமாளிக்கும் திறனுடன் அரசின் உதவியோடு தீவில் வீடு கட்டிக்கொண்டு வசிப்பது, இதன் பின் சொந்த ஊருக்கு திரும்பலாம்.

பெண் கைதிகளுக்கு மூன்று வருட தண்டனை, அதன் பின் தீவிலுள்ள யாரையாவது திருமணம் செய்துகொள்ளலாம், அல்லது 15 வருடங்களுக்கு பிறகு சொந்த ஊர் திரும்பலாம், அல்லது கணவனின் தண்டனைக்காலம் முடியும்வரை காத்திருக்கலாம். டேவிட் பாரி David Barry என்ற சிறை கண்காணிப்பாளர் மிக கொடூரமான மனிதனாக இருந்துள்ளான். குறிப்பாக அரசியல் கைதிகளை தொடக்க காலத்தில் மிகக்கொடுமையாக நடத்தியுள்ளான், தாங்கள் பிறந்ததே பாவம் என்று கைதிகள் குமைந்து வருந்தும் அளவுக்கு கொடுமைகள் இழைத்துள்ளான்.

1924 பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் சிம்ப்சனுக்கு ரிச்சர்ட் அளித்த பதில்: கடந்த ஜூலையில் போர்ட்பிளேயரில் மட்டும் 1235 மாப்பிளாக்கள் இருந்தார்கள். 72 பேர் செல்லுலார் சிறையில், 12 பேர் விடலைகள், 40 பேர் விவசாயிகள், தங்கள் வாழ்க்கையை தாங்களே சமாளித்து கொள்பவர்கள், மீதியுள்ளோர் கைதிகள் அடைக்கப்படும் இடத்தில். மாப்பிளாக்களை பிற கைதிகளிடம் இருந்து பிரிக்கும் எந்த திட்டமும் இல்லை. ஆனால் தொடக்க காலத்தில் செல்லுலார் சிறைவாச காலம் அடிக்கடி குறைக்கப்பட்டது. அந்தமானில் வாழ்வதற்கு, தனியாகவோ குடும்பத்துடனோ, விருப்பப்பட்டால் அதற்கு அரசு அனுமதி வழங்கியது, தீவுக்கு வருவோரின் பயணச்செலவை அரசே ஏற்றுக்கொண்டது. 

மலபாரில் இருந்து அந்தமானுக்கு வந்தவர்கள் 1133 கைதிகள். இவர்களில் 379 பேருக்கு 'தம் வாழ்க்கையை தாமே சமாளித்துக்கொள்ளும் வல்லமை உடையவர்கள்' என்ற தகுதியை நிர்வாகம் 1926இல் வழங்கியது. அந்தமானை தண்டனை குடியேற்றம் என்ற நிலையில் இருந்து சுயவிருப்ப குடியேற்றம் voluntary settlement என்று பிரிட்டிஷ் அரசு உயர்த்தியது. மனைவியருக்கும் உறவினருக்கும் பயணக்கட்டணத்தை அரசே வழங்கியது. பண்டிகைகள் கொண்டாட, வழிபாட்டு தலங்கள் கட்டிக்கொள்ள அனுமதிக்கப்பட்டது.

அரசின் முதலாவது அறிக்கையின்படி, 1302 கைதிகளில் 90 பேர் இறந்தனர், 79 பேர் இந்தியாவில் சொந்த ஊருக்கு திரும்பினர், மீதி 1133 பேரில் 754 பேர் உடலுழைப்பு கைதிகள், 379 பேர் தங்களை தாங்களே சமாளித்து கொள்பவர்கள். மற்றொரு அறிக்கையின்படி 1932இல் மாப்பிளாக்கள் என்போர் 1885 கேரள முஸ்லிம்கள். இவர்கள் காலனிய அரசுக்கு எதிராகவும் இந்து மத நிலச்சுவான்தார்களுக்கு எதிராகவும் மாப்பிளா கிளர்ச்சியை நடத்தியவர்கள் (Dhingra, 2005:161). இவர்களை மறுசீரமைக்கவே 1921-26 காலக்கட்டத்தில் அந்தமானுக்கு கொண்டுவந்தார்கள், விவசாய நிலத்தில் குடியேற்றப்பட்டார்கள் (Mukhopadhyay, C, 2002:29). தம் சொந்த மதத்தை பின்பற்றவும் சொந்த ஊரின் பண்பாட்டை பின்பற்றவும் அனுமதிக்கபட்டார்கள். 1920களில் தம் சொந்த ஊரின் மலையாள மொழி உரையாடலின் சாயலையே இங்கும் பேசினார்கள் என சான்றுகள் தெரிவிக்கின்றன. இன்றுள்ள அந்தமானில் நாம் பார்க்கும் முஸ்லிம்களில் மிகப்பெரும்பான்மையோர் மாப்பிளா சமூக மக்களே. 1921இல் தொடங்கிய இந்த இடப்பெயர்ச்சி 1926இல் முடிந்தது. 1931 மக்கள்தொகையின்படி, 1885 மாப்பிளாக்கள் இருந்துள்ளார்கள், 1171 ஆண்கள், 714 பெண்கள். பிற தகவல்கள், 2500 பேர் அங்கே குடியேறினர் என்று சொல்கின்றன. தண்டனைக்காலம் முடிந்த பிறகும் கூட கேரளா திரும்பாமல் தம் குடும்பங்களை அங்கே அழைத்துக்கொண்டனர். ஆக அந்தமான் தீவுகளை செப்பனிட்டு பல கிராமங்களை உருவாக்கியதில் மாப்பிளாக்களின் பங்கு மிகப்பெரியது.

ஒரு கைதி தன் தாயாருக்கு எழுதிய கடிதம் மூலம் ஒரு விசயம் தெரியவந்தது. 1925 ஜூன் 20 அன்று 25 மாப்பிளாக்கள் மலபாருக்கு அனுப்பப்பட்டார்கள். அவர்கள் அந்தமானில் இருந்த தண்டனைக்கைதிகளின் குடும்பத்தை தேடி வந்தார்கள். விளைவாக 300 குடும்ப உறுப்பினர்கள் அந்தமானுக்கு இடம் பெயர்ந்தார்கள். அதே கைதி இரண்டு மாதங்களுக்கு பின் எழுதிய கடிதத்தில், பெங்களூருக்கு அருகில் உள்ள பெல்லாரி சிறையில் இருந்த 400 கைதிகள் தம் குடும்பத்தாருடன் அந்தமானுக்கு குடியேற விண்ணப்பித்த விவரம் உள்ளது. அந்தமானில் மவுண்ட் ஹாரிட் Mt.Harrit க்கு மேற்கே உள்ள கிராமங்களில் குடிபுகுந்தார்கள். தங்களது கிராமங்களுக்கு தமது சொந்த (கேரள) மண்ணின் கிராமப்பெயர்களையே சூட்டினார்கள் என்பதை தொடக்கத்தில் பார்த்தோம்.

தெற்கு அந்தமான் பகுதி இவ்வாறான கைதிகளால் குடியேற்றமானது. விரைவிலேயே மேலும் பல மாப்பிளாக்கள் இரண்டாம் தரத்துக்கு உயர்த்தப்பட்டு தங்களை தாங்களே சமாளித்துக்கொள்ளும் வல்லமை பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டார்கள். ஆனால் கொடும் சிறைகொடுமைகளுக்கு எதிராக போராட்டங்கள் வெடித்து நிலைமை மோசமானது. 1939இல் நிலைமை கட்டுக்குள் வந்தது. ஆனால் இரண்டாம் உலகப்போர் தொடங்கியபின்னும் போரில் ஜப்பான் 1941இல் இறங்கிய பின்னும் அந்தமானில் நிலைமை முற்றிலும் தலைகீழானது. போர்ட்பிளேயர் மீது ஜப்பானியர் 1942இல் குண்டு வீசினர். மார்ச் 1942இல் பிரிட்டிஷ் நிர்வாகம் வெளியேறியது, ஜப்பானியர் வசம் வந்தது. அப்போது 6000 கைதிகளும் அந்தமானிலேயே பிறந்த 12000 குடிமக்களும் இருந்தார்கள். தொடக்கத்தில் அனைத்துக் கைதிகளையும் விடுதலை செய்த ஜப்பானியர் பின் வந்த நாட்களில் இந்தியர்களை கொடுமை செய்தனர். உணவுப்பற்றாகுறையை சரிக்கட்டவே இந்த கொடுமைகள் நடந்தன. இதற்கு Operation Baldhead என்று திட்டமிடப்பட்டது. பிரிட்டிஷாருக்கு ஆதரவானவர்கள் என்று சந்தேகிக்கப்பட்ட அனைவரையும் ஜப்பானியர் சுட்டுக்கொன்றனர்.


காலம் ஓடியது. அந்தமானின் மக்கள்தொகையில் பெரும்பகுதியாக மாப்பிளாக்கள் இருந்தனர். சிலர் தமது கடந்தகால வரலாற்றை நினைவுகூர மற்றவர்கள் அது குறித்து பேச விரும்பவில்லை. மதமும் விவசாயிகள் போராட்டமும் பிணைந்து ஒரு கிளர்ச்சியை நோக்கி இட்டுச்செல்ல, விளைவாக பல அப்பாவிகள் உயிரையும் உடைமைகளையும் இழக்க, இறுதியாக தம் சொந்த மண்ணில் இருந்து பல நூறு மைல்கள் தொலைவில் உள்ள தீவில் வந்து குடியேற, இக்கொடுங்கதையை நினைப்பதை விடவும் மறப்பது எளிது என்று அவர்கள் நினைத்திருக்கக்கூடும்.

மிகச்சரியாக சொன்னால், அந்தமான் என்றாலே இப்போதும் அது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு எதிராகப் போராடியவர்களை நாடுகடத்தி சிறைவைக்க பயன்பட்ட ஒரு தீவாகவே அறிகின்றோம். ஆனால் Strange இன் கூற்று வேறுமாதிரி உள்ளது: அங்கே அரசியல் கைதிகளாக குடியேற்றப்பட்டவர்கள் சுமார் 500 பேர் மட்டுமே. அவர்களில் பலரும் பின்னர் மையப்பகுதி இந்தியாவுக்கு திரும்பிவிட்டார்கள். மாப்பிளா சமூகம் உள்ளிட்ட பிற சாதாரண கைதிகள் பல்லாயிரம் பேர்கள்தான் அந்தமானில் நிரந்தரமாக குடியேறியவர்கள், இன்று நாம் பார்க்கும் அழகிய தீவுகளை உருவாக்க உழைத்து சோர்ந்தவர்கள் இவர்கள்தான்.

- மு இக்பால் அகமது

புகைப்படங்கள்: அந்தமான் சிறையும் ஒரே நேரத்தில் மூவரை தூக்கில் இடக்கூடிய கொட்டடியும் (படங்கள் நான் எடுத்தவை)



சனி, செப்டம்பர் 11, 2021

மாப்பிளா கிளர்ச்சி (4)


(சலீல் இலக்கில் அவர்களின் பதிவின் தமிழாக்கத்தை தொடர்கின்றேன்)

5. கோணோம்பாற சீரங்கந்தோடி அரீப்புரம் பாரக்கல் சக்காரியாவின் பரம்பரை வீட்டுக்கு அருகில் தோண்டப்பட்ட குழியில் நான்கு பேர் அடக்கம் செய்யப்பட்டனர். அரீப்புரம் பாரக்கல் குஞ்சீன் ஹாஜி, அவர் மகன் ஆயாமு, மகள் கடியாமு, மருமகன் நானத் இஞ்ஞாலி ஆகியோர். நோய்வாய்ப்பட்டு இருந்த ஹாஜி, பிரிட்டிஷாரின் கண்ணில் படாத இடத்தில் தன்னை மறைத்து வைக்குமாறு சொன்னார். நோயாளியான அவருக்கு பிரிட்டிஷார் துன்பம் தர மாட்டார்கள் என்றுதான் குடும்பத்தின் பிறர் எண்ணியதாக  ஆயாமுவின் பேத்தி பாத்திமா சொல்கின்றார். ஆயாமுவின் மகன் வாப்பு ஹாஜி (அப்போது இவருக்கு வயது 14)யும் நண்பன் நானத் குஞ்ஞாலாவியும் பெண் உடையணிந்து பிற பெண்களோடு கலந்து வைக்கப்பட்டதால் தப்பினர். 

வல்லிக்கடன் குடும்பத்தில் ஒருவர் மிக மோசமாக காயம் அடைந்துள்ளார். நான்கு நாட்களாக காயத்துடன் போராடியுள்ளார். பாப்பு ஹாஜி என்னும் சிறுவன், அவருக்கு குடிக்க நீர் கொடுத்துள்ளான். ஆனால் அருந்தி ய நீர் முழுமையாக வெளியேறிவிட, கவனிக்க யாருமற்ற நிலையில் நான்காம் நாள் உயிரிழந்தார், அதே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டார். காலம் ஓடிவிட்டது, அவரது கல்லறையும் மறந்துவிட்டது.

6. கோணோம்பாறவில் சந்தைக்கு பின்புறம் உள்ள அடக்க ஸ்தலத்தில் நரிப்பட்ட கபூர் குடும்பத்தை சேர்ந்த இருவர் அடக்கம் செய்யப்பட்டனர். நரிப்பட்ட கபூர் அகமது, அவர் மகன் போக்கர் இருவரும் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களின் வீட்டுக்கு தீ வைக்கப்பட்டபின் இருவரும் தப்பியோடி காய்ந்த சருகுகளின் பின்னால் ஒளிந்திருக்கும் போது சுட்டுக் கொல்லப்பட்டனர். அங்கேயே அடக்கம் செய்யப்பட்டனர். அகமதுவின் மற்றுமொரு மகன் குஞ்ஞாலாவி பிடிபட்டு அந்தமான் தீவுக்கு கொண்டுக்குச்செல்லப் பட்டார். அகமதுவின் பேரன் அலாவி (மொய்தீன் குட்டியின் மகன்) தன் குடும்பத்துடன் இங்கே வசிக்கின்றார்.

7. மேல்முறி வலியட்டபாடி நம்பன்குண்ணன் முகம்மது அலி வீட்டின் கொல்லையில் அவர் தாத்தாவின் தந்தை அலாவி அடக்கம் செய்யப்பட்டார். மிக வயதான அவரை வேறு யாரும் சுமந்து செல்ல மாட்டார்கள் என்று எண்ணியதால், சிறிய ஜன்னல் வழியே வெளியே வந்துள்ளார். பிரிட்டிஷாரின் கையில் பிடிபட்ட பின்னர் தன்னை சுட்டுக்கொல்வது உறுதி என்று தெரிந்த பின் தொழுகை நடத்த ஆயத்தம் ஆனார். தன்னை நீரால் சுத்தப்படுத்திக்கொண்டு மேற்குத்திசை நோக்கி நின்றார் என்று உறவினர் மொய்தீன் (87 வயது) கூறுகின்றார். பிரிட்டிஷாரின் பீரங்கிகள் தாக்கியதில் அங்கே இருந்த தென்னை மரங்கள் மொட்டையாக இருந்தன என்று அவர் சொல்கின்றார்.  சுட்டுக்கொல்லப்பட்ட  அலாவியின் உடலை, பெண்கள்தான் இரவில் குழி தோண்டி அடக்கம் செய்ததாகவும் இரண்டு அடி ஆழம் மட்டுமே அவர்களால் தோண்ட முடிந்தது என்றும் சொல்கின்றார்.

8. கபூர் உஸ்மானின் வீட்டு கொல்லையில் கபூர் குடும்பத்தின் இருவர், கபூர் இத்தீரும்மாவின் தந்தையின் சகோதரர், தாத்தா ஆகியோர் அடக்கம் செய்யப்பட்டனர். இத்தீரும்மாவுக்கு குழந்தைகள் இல்லை, சமீபத்தில்தான் அவர் காலமானார். இருவரும் முறையே கபூர் உஸ்மானின் தாத்தா ஆன இஸ்மாயில் என்ற இதேலுவின் சகோதரரும் மகனும் ஆவர். இத்தேலு பிடிபட்டார், ஆந்திராவில் ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டார், அங்கேயே இறந்தார். அவர்களின் பரம்பரை வீட்டுக்கு பிரிட்டிஷார் தீ வைத்து அழித்தனர். வீட்டின் இடிபாடுகளை  இடித்தபோது பிரிட்டிஷாரின் துப்பாக்கி தோட்டாக்கள் சுவரில் புதைந்து இருந்ததை கண்டுபிடித்ததாக உஸ்மானின் தந்தை முகம்மது ஹாஜி நினைவுகூர்ந்துள்ளார்.

9. மேல்முறி முட்டிப்பாடி மத்திய தொடக்கப்பள்ளியின் பின்புறம் உள்ள மடாம்பி உபையத்தின் வீட்டின் அருகே நான்கு பேர் அடக்கம் செய்யப்பட்டனர். மடாம்பி குஞ்ஞாரமு, மடாம்பி மாமுண்ணி, காடேறி மூஸா ஹாஜி, சேர்க்காடன் மொய்தீன் ஆகிய நால்வர். மடாம்பி குடும்பத்தின் பரம்பரை வீட்டின் முற்றத்தில் நால்வரும் சுட்டுக்கொல்லப்பட்டனர். சமீபத்தில் இந்த வீட்டை செப்பனிட்ட போது சுவர்களில் தோட்டாக்கள் புதைந்து இருந்ததை கண்டுபிடித்தார்கள். மூஸா ஹாஜியின் மகன் ஆன மம்முது ஹாஜிதான் இந்த நிலத்தை விலைக்கு வாங்கி, நிலம் பறிபோகா வண்ணம் அதை தன் தாயார் இயாத்துக்குட்டி ஹஜும்மாவின் பெயரில் ஆலத்தூர்பாடியில் உள்ள மசூதிக்கு வக்பு கொடையாக அளித்துள்ளார். இக்குடும்பத்தை சேர்ந்த எழுத்தாளர் உமர் மேல்முறி இத்தகவலை தருகின்றார்.

பெரும்கொல்லன் சாதியை சேர்ந்த சிலர் இஸ்லாம் மதத்தை தழுவியுள்ளனர். தட்டாந்தோடி அருகே உள்ள வைஷ்யர்தோடியில் வசித்து வந்தார்கள். இவர்களின் தலைமுறையை சேர்ந்த மூவரை பிரிட்டிஷ் ராணுவம் சுட்டுக்கொன்றது. அவர்களின் வீட்டுக்கு தீ வைத்தது. வீட்டின் கிணற்றருகே அவர்கள் அடக்கம் செய்யப்பட்டனர். ஆனால் கல்லறைகளை முறையாக பராமரிக்கவில்லை என்று ஆலத்தூர்ப்பாடியை சேர்ந்த பி டி முகம்மது மாஸ்டர் கூறுகின்றார்.

.... ..... ...... .....

பிரிட்டிஷ் ராணுவம் நிகழ்த்திய படுகொலையின் நோக்கம் என்ன?

மலபார் கிளர்ச்சியின் தலைவர் அலி முஸ்லியாரின் செல்வாக்கு மேல்முறியிலும் அதிகாரித்தோடியிலும் பலமாக இருந்ததுதான் அப்பகுதிகளை பிரிட்டிஷார் தம் இலக்காக ஆக்கியமைக்கு காரணமாகும்.  தார் (Dar) எனப்படும் இஸ்லாமியக்கல்வி மையங்களை மேல்முறி பொடியாட் பரம்மலிலும் பின்னர் மேல்முறி ஆலத்தூர்ப்பாடியிலும் முஸ்லியார் நடத்திவந்தார். மூன்று வருடங்கள் இப்பகுதியில் அவர் இருந்தார் என்பதால் இயற்கையாகவே அப்பகுதி மக்களிடம் செல்வாக்கை வளர்த்து இருந்தார். காங்கிரஸ் கிலாபத் இயக்கத்தின் கோழிக்கோடு தாலுக்கா தலைவர் பழக்கம்தோடி அபூபக்கர் முஸ்லியார் மலபார் கிளர்ச்சி இயக்கத்தின் முக்கியமான தலைவர்களில் ஒருவர், அவர் பொடியாட்டின் தாரில் இருந்த அலி முஸ்லியாரின் மாணவர் (A K Kodoor,  page 98). மலபார் கிளர்ச்சியின் பல தலைவர்கள் இளவயது அறிவாளிகள், அலி முஸ்லியாரின் மாணவர்கள்.

அலி முஸ்லியார் தவிர மற்றுமொரு குறிப்பிடத்தக்ககிளர்ச்சி த் தலைவர் வரியன்குன்னத் குஞ்ஞாகமது ஹாஜி, இவர் தலைமறைவாக இருந்தபோது மேல்முறிக்கு பலமுறை ரகசியமாக வந்து சென்றுள்ளார். தத்தையில் குடும்பத்தின் மாடம்பி முஹம்மது, தன் தந்தை தன்னிடம் கூறியதாக சொல்கின்றார்: குஞ்ஞாகமது ஹாஜி ஒருநாள் இரவில் வந்து அரிசிக்கஞ்சி கேட்டார்,கஞ்சி இல்லாமல் போகவே தேங்காய் சில்லுகளை வைத்துக்கொண்டு  பழைய சோறு மட்டுமே உண்டார். (Nisar Kaderi,  page 23). 

பிரிட்டிஷார் இப்பகுதியை குறிவைத்து தாக்கியமைக்கு பூக்கோட்டூர் போர்க்களம் மற்றொரு காரணம். 1921 ஆகஸ்ட் 21 அன்று நடந்த சண்டையில், மாப்பிளாகள் ஒருபுறமும் பிரிட்டிஷ் ராணுவத்தின் ஆயுதப்படையான Leinster ரெஜிமெண்ட், சிறப்பு போலீஸ் படை ஆகியன மறுபுறமும் மோதியதில் ஒரு வெள்ளிக்கிழமை அன்று மாப்பிளாக்கள் முறியடிக்கப்பட்டார்கள். பூக்கோட்டூர் போர்க்கள வீழ்ச்சி என்பது ஒட்டுமொத்த மலபார் கிளர்ச்சியின் வீழ்ச்சியில் முக்கியமான பங்கை வகித்தது. இக்களத்தில் மாப்பிளாக்கள் பெரும் உயிர்ச்சேதத்தை சந்தித்தார்கள் என்பது உண்மைதான் எனினும் பிரிட்டிஷ் அரசு இக்களத்தை மிகக் கவலையுடன்தான் பார்த்தது. காரணம், வேறொரு ராணுவம் அல்லது அரசின் உதவி ஏதும் இல்லாத நிலையில் மாப்பிளாகளால் இவ்வுலகத்தின் மிக வலிமையான ராணுவத்தை எதிர்த்து தாக்குப்பிடிக்க முடிந்தது என்பதே. பூக்கோட்டூர் கும்பல் எனப்பட்ட மாப்பிளா ராணுவ அமைப்பில் இருந்தவர்கள் முற்காலத்தில் பிரிட்டிஷ் ராணுவத்தில் பணியாற்றியவர்கள். இவர்களுடைய திட்டங்களும் கிளர்ச்சியை ஒருங்கமைத்த விதமும் பூக்கோட்டூர் களத்தில் பிரிட்டிஷ் ராணுவத்துக்கு மிகப்பெரும் சேதங்களை விளைவித்தது என்று மாவட்ட மாஜிஸ்திரேட் ஆக இருந்த FB Evans மெட்ராஸ் அரசுக்கு அனுப்பிய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். Tottenham , page 48. 1921 அக்ட்டோபர் 20- நவம்பர் 10 இடைக்காலத்தில் கொண்டோட்டி, மஞ்சேரி, அரீகோட், மலப்புரம் ஆகிய பகுதிகளில் பிரிட்டிஷ் ராணுவம் மேற்கொண்ட நடவடிக்கையின் பகுதியாகவே மேல்முறி-அதிகாரித்தோடி படுகொலைகள் இருந்தன, அதன் உடனடி நோக்கம் பூக்கோட்டூர் கும்பலையும் ஆதரவாளர்களையும் வளைத்துப் பிடிப்பதுதான். Tottenham, page 40.

அவ்வாறெனில் உண்மையான நோக்கம் என்ன? பூக்கோட்டூர் கும்பலை ஒழித்துக்கட்டவே இந்த படுகொலைகள் என்று சொல்லிக்கொண்டாலும், கிளர்ச்சியில் நேரடியாக பங்கு பெறாத மாப்பிளா மக்களை அச்சுறுத்துவதே இப்படுகொலையின் உண்மையான நோக்கம்.  கிளர்ச்சியில் தாங்கள் பங்கு பெறாததால் பிரிட்டிஷ் ராணுவம் தங்களுக்கு தீங்கு செய்யாது என்று நம்பியவர்களையும் ராணுவம் தீர்த்துக்கட்டியது. நானத் குருவயில் மொய்து அப்படி கொல்லப்பட்டவர்களில் ஒருவர். இவ்வாறு ஒரு பயங்கரத்தை கட்டவிழ்த்து விடுவதன் மூலம், பிரிட்டிஷ் ஆட்சி ஒரு செய்தியை எச்சரிக்கையாக அனுப்பியது - பிரிட்டிஷ் ஆதரவாளராக இருங்கள் அல்லது மரணத்தை சந்தியுங்கள்.

பிரிட்டிஷ் அரசு ஆவணங்கள் கூட படுகொலைக்கு ஆளானவர்கள் அப்பாவிகள் என்றுதான் சொல்கின்றன. அன்றைய அரசின் கீழமை செயலாளர் இவ்வாறு பதிவு செய்துள்ளார்: "....அக்ட்டோபர் 25 அன்று மேல்முறியில் 246 மாப்பிள்ளாகளை Dorset படையினர் படுகொலை செய்தார்கள். இவர்கள் அனைவருமே கிளர்ச்சியில் நேரடியாக பங்கு பெற்றவர்கள் என்று சொல்லிவிட முடியாது, ஏனெனில் இப்படுகொலைகள் அப்பகுதி மக்கள் மத்தியில் மனக்கிலேசத்தை உருவாக்கிவிட்டதை பார்க்க முடிந்தது. படுகொலைகள் நிகழ்ந்த பின்னர் உடனடியாக, மலப்புரத்தின் சுற்று வட்டார அம்சங்களில் (கிராம நிர்வாக அமைப்பு) இருந்து அரசுக்கு வந்த மனுக்களை பார்த்தால், அவை அரசுடன் ஒத்துழைப்பதாக எழுதப்பட்டு இருந்தன". ஹிட்ச்காக்கின் பதிவு, டார்செட் படையினர் அப்பகுதியில் ஒவ்வொரு வீடாக நுழைந்து மாப்பிளாகளை பிடித்ததாக சொல்கின்றது. தங்களுக்கு பிரிட்டிஷ் அரசு பாதுகாப்பு அளிக்கும் எனில் பெண்களும் குழந்தைகளுமாக சுமார் ஆயிரம் பேர் சரணடைய ஆயத்தமாக இருப்பதாக மலப்புரம் காஜி மனு எழுதியாக நவம்பர் 2 அன்று Evans மெட்ராஸ் அரசுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடுகிறார். Tottenham page 257.

...... ....... ......

மவுனத்தின் வரலாறும் வரலாற்றின் மவுனமும்

ஆப்பிரிக்க-அமெரிக்க எழுத்தாளர் Saidiya Hartman தனது முதல் நூலான Scenes of subjection னில் இப்படி குறிப்பிடுகிறார்: ஆப்பிரிக்காவில் இருந்து அமெரிக்காவுக்கு அட்லாண்டிக் பெருங்கடலை கடந்து கடத்தி செல்லப்பட்ட அடிமைகளின் அவல ஓலத்தை விடவும் அட்லாண்டிக் பெருங்கடலில் மூழ்கி சமாதி ஆன பல்லாயிரம் அடிமைகளின் மவுனம் மிக உரத்தது. இப்போது வரலாற்றில் இடம்பெற்றுள்ள வாக்குமூலங்களின், வரலாற்றின் அடிப்படையில் ஆன ஆவணங்களை விடவும் பதிவு செய்யப்பட வேண்டியவை எவை எனில் பெருங்கடலில் மூழ்கி உயிரை இழந்த பல்லாயிரம் அடிமைகளின் குரல்கள்தான்.

ஹார்ட்மானின் கூற்று சரி எனில், மேல்முறி அதிகாரத்தோடியில் உயிரை இழந்த 200 பேர்களின் வரலாற்றை எதன் ஆதாரத்தின் பேரில் எழுதுவது? 40 பேர்களின் சமாதி ஒன்றைத்தவிர?  சான்றுகள் எதையும் விட்டு வைக்காமல் மூழ்கி சமாதி அடைந்தவர்கள் ஒரே ஒரு செய்தியை விட்டு செல்கின்றார்கள்: வரலாற்றின் சிக்கல் என்பது அதன் குரல்கள் அல்ல, வரலாற்றின் மவுனம்தான் சிக்கலானது.  மலபார் கிளர்ச்சி என்பது  நம் தேச வரலாற்றின் மவுனம் எனில் இந்த புதைக்குழிகள்தான் அந்த வரலாற்றின் மவுனத்துக்குள் உறைகின்ற மவுனம். எழுதப்பட்ட, சொல்லப்பட்ட சான்றுகளையும் தாண்டி சான்றுகளும் எச்சங்களும் இன்றி மறைந்து போனவர்களின் வரலாற்றை தோண்டி ஆய்வதன் முக்கியத்துவத்தையே மலபார் கிளர்ச்சியின் இந்த மையமான பகுதி நமக்கு உணர்த்துகின்றது.

(முற்றும்)

- மு இக்பால் அகமது

ஞாயிறு, செப்டம்பர் 05, 2021

மாப்பிளா கிளர்ச்சி (3)

மாப்பிளா கிளர்ச்சி (3)

மலபார் புரட்சியின் போக்கில் பெண்கள், குழந்தைகள், முதியோர்க்கு பிரிட்டிஷ் ராணுவம் இழைத்த கொடுமைகளில் பலவும் பொதுவெளியில் ஆவணப்படுத்தப்படாமலேயே போயின. மேல்முறி - அதிகாரத்தோடி நிகழ்வில்  பெண்கள், குழந்தைகள், முதியோர் சந்தித்த கொடுமைகள், போர்க்காலங்களின்போது பின்பற்ற வேண்டிய பொதுவான கட்டுப்பாடுகளை மீறியவை ஆகும். தங்கள் தந்தையரை பிரிட்டிஷ் ராணுவத்தினர் இழுத்துச்சென்றபோது தடுக்க முனைந்த இரண்டு மகள்களின் கல்லறைகளும் அங்கே உள்ளன.

அதிகாரத்தோடியில் இருந்த கீடக்கடன் குடும்பத்தை சேர்ந்த 11 வயதுக்குழந்தை அவள். வீட்டுக்குள் புகுந்து தன் தந்தையை பிரிட்டிஷ் ராணுவத்தினர் இழுத்துச்செல்ல முயன்றபோது இவள் அவரை கட்டிப்பிடித்து இழுத்திருக்கின்றாள், அப்போது இரக்கமின்றி துப்பாக்கியின் பின் கட்டையால் அவளை அடித்திருக்கின்றார்கள். அதையும் மீறி அவள் தன் தந்தையை இறுக தழுவி இருந்ததால் இருவரையும் பிரிக்க முடியாத நிலையில் இருவரையும் ராணுவம் சுட்டுக்கொன்றது. தன் அம்மாவழிப் பாட்டியின் வீட்டுக்கு வந்தபோதுதான் இருவருக்கும் இந்த கொடுநிலை ஏற்பட்டுள்ளது.

கோணோம்பாற சீரங்கந்தோடியை சேர்ந்த அரீப்புரம் பாரக்கல் குஞ்சீன் ஹாஜியின் மகள் கடியாமு. திருமணம் ஆன அவள், நோய்வாய்ப்பட்டு இருந்த வயதான தன் தந்தையை கவனித்துக்கொள்ள வந்திருந்தாள் கடியாமு. பத்தாயம் எனப்படும் பெரிய  மரப்பெட்டியின் மீது படுத்துக்கொண்டு இருந்த தந்தையை, பிரிட்டிஷ் ராணுவத்தினர் இழுத்துச்செல்ல முயன்றபோது தடுக்க முனைந்த அவளை துப்பாக்கியின் பின்கட்டையால் தாக்கியுள்ளனர்.  வலுக்கட்டாயமாக அவரை இழுத்து சென்று வீட்டின் கிழக்கு முற்றத்தில் தரையைப் பார்த்ததுபோல படுக்கச்சொல்லி ஆனையிட்டுள்ளனர். தன் தந்தையை சுட்டுவிடுவார்கள் என்று அறிந்த கடியாமு, அவர் மீது கட்டிப்பிடித்து படுத்துள்ளாள். ராணுவம் இருவரையுமே சுட்டுக்கொன்றது. இந்த இரு வீராங்கனைகள் பற்றி நம் வரலாற்றுப்பக்கங்களில் எதுவும் சொல்லபடவில்லை. மாப்பிளா வரலாறு குறித்த, மாப்பிளா சமூக பெண்கள் குறித்த வரலாறு திட்டமிடப்பட்டவகையில் மறைக்கப்படுகின்றது என்பதற்கு இந்த நிகழ்வுகள்  உதாரணம். 

மேல்முறி-அதிகாரத்தோடி படுகொலைகள் குறித்து பொதுவான வரலாறு மவுனமாக இருக்கின்றது, ஆனால் மலபார் முஸ்லிம் சமூகத்தின் கிசாப்பாட்டுகளில் இந்த நிகழ்வை அந்த மக்கள் பாட்டாக பாடி பதிவு செய்துள்ளார்கள். யோக்யன் ஹம்ஸா மாஸ்டர் என்ற கிசாப்பாட்டு நிபுணர், விடுதலைப்போராட்ட வீரர் முகம்மத் அப்துர் ரஹ்மானைப் போற்றி எழுதிய அப்துர் ரஹ்மான் கிசாப்பாட்டு என்ற பாடலில் இந்த நிகழ்வை பதிவு செய்துள்ளார். 

இப்பாடலின் பொருள் இது: மேல்முறியில் கிளர்ச்சியாளர்கள் கூடியுள்ளதை அறிந்த பிரிட்டிஷ் ராணுவம், பீரங்கிகள், குண்டுகள், துப்பாக்கிகள் ஆகியவற்றுடன் வந்து, ஓசையடக்கப்பட்ட துப்பாக்கிகளால் சிரித்துக்கொண்டே மக்களை சுட்டு வீழ்த்தினார்கள், ஒரு விசாரணையும் இன்றி.

.... .... .... .......

ஒன்பது சவக்குழிகள்:

1. அதிகாரித்தோடி வட்டப்பரம்பில் இருக்கும் அரீப்புரம் பாரக்கல் கோயாகுட்டி ஹாஜியின் வீட்டு முற்றத்தில் தோண்டப்பட்ட குழியில் 11 பேர் புதைக்கப்பட்டனர். அவர்களின் விவரம்: அவரது தாத்தா அரீப்புரம் பாரக்கல் அகமது குட்டி ஹாஜி, அவர் சகோதரர் மொய்தீன் குட்டி ஹாஜி, குட்டிரயீன், மரைக்காயர், கொங்காயன் அலாவி, கீடக்காடன் குடும்பத்தின் ஒரு ஆணும் அவர் மகளும். அவள் 11 வயதே ஆனவள், சென்ற பதிவில் சொல்லியிருந்தேன்.

அகமது குட்டி ஹாஜியின் மகள் ஆயிஷா அப்போது 4 வயது சிறுமி. பிற்காலத்தில் அவர் தன் மகன் யோக்யன் ஹம்ஸா மாஸ்டருக்கு இந்த சம்பவங்களை பற்றி சொல்லியிருக்கிறார், மாஸ்டர் கிசாப்பாட்டு எழுதுபவர், பாடுபவர். மாஸ்டர் 2017இல் தன் 102ஆவது வயதில் காலமானார். வீட்டில் இருந்த அனைவரையும் வலுக்கட்டாயமாக வெளியேற்றிய பின் வீட்டுக்கு தீ வைத்தார்கள். பெண்களும் குழந்தைகளும் 

அருகில் இருந்த வாழைத்தோப்புக்குள் சென்றுவிட, ஆண்கள் அனைவரையும் ஓசையடைக்கப்பட்ட துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார்கள்.

அகமது குட்டி ஹாஜியின் நண்பரும் அருகில் வசித்துவரும் ஆன கொங்கையன் அலாவியும்  கொல்லப்பட்டவர்களில் ஒருவர் என்று அலாவியின் பேரன் சொல்கின்றார். இவர் தந்தையின் பெயரும் அலாவிதான். நான்கு தலைமுறைகளிலும் ஒருவருக்கு அலாவி என்று பெயர் சூட்டியுள்ளனர். ஏமன் நாட்டில் இருந்து மாம்புரத்தில் தங்கி அங்கேயே வசித்துவந்த மாம்புரம் சையத் அலாவி தங்ஞள் என்ற இஸ்லாமிய அறிஞரின் நினைவாகவே இப்படி பெயர் சூட்டப்படுகின்றது. ஆன்மிகம், மதம், சமூகம் தொடர்பான விசயங்களைப் பற்றி அவருடன் உரையாடுவதற்காக மக்கள் அவரை சந்திப்பது வழக்கம். 19ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியததுக்கு எதிரான நிலை எடுத்திருந்தார் என்பதால் அவர் புகழ் பெற்றிருந்தார். மாம்புரத்தில் அமைந்துள்ள அவரது நினைவுத்தூண், கேரளாவின் புகழ்பெற்ற புண்ணிய யாத்திரைதலங்களில் ஒன்று.

வீட்டின் முற்றத்தில் அமைந்துள்ள செவ்வோடு குவாரியில் பாய்கள் விரிக்கப்பட்டு இறந்தவர்களின் உடல்கள் அவற்றில் கிடத்தப்பட்டு பின்னர் புதைக்கப்பட்டனர்.

2. கபூர் குடும்பத்தில் 5 பேர் கொல்லப்பட்டனர். அதிகாரித்தோடியில் அமைந்துள்ள அரசு மாப்பிளா உயர் தொடக்கப்பள்ளியின் பின்னால் இருந்த நிலத்தில் குழி தோண்டப்பட்டு அதில் புதைக்கப்பட்டனர். கபூர் முண்டசேரி யூசுப், அவர் மகன் போக்கர், கபூர் மூசம், ஆயமுட்டி, மம்முது ஆகிய அந்த ஐவரின் வாரிசுகள் ஒருவர் கூட இப்போது அந்த ஊரில் இல்லை.

3. நானத் குருவயில் ஹம்சாவின் வீட்டுக்கு அருகில் குழிதோண்டப்பட்டு அறுவர் புதைக்கப்பட்டனர். ஹம்சாவின் அப்பாவழி தாத்தாவான நானத் குருவயில் மொய்து, அவர் சகோதரர் குஞ்ஞி மரைக்காயர், மாடம்பி குஞ்ஞி முகம்மது ஆகியோர் உட்பட அறுவர்.

நானத் குருவயில் மொய்து தன் வீட்டுக்குள் உட்கார்ந்து குர் ஆன் வாசித்துக்கொண்டு இருந்தார். தாங்கள் ஒரு சம்பவத்திலும் ஈடுபட்டதில்லை என்பதால் கவலைப்பட அவசியமில்லை என்று நம்பிக்கொண்டு இருந்தார். அவரை ராணுவத்தினர் வந்து பிடித்தபோது 14 வயது மகன் முகம்மது தன் தந்தையின் கையை இறுகப்பிடித்து இழுத்துள்ளான், ஆனால் ராணுவத்தினர் அவனை கீழே தள்ளியுள்ளனர். இத்தகவலை முகம்மதுவின் மூத்த மகன் ஆன மொய்து (82) இப்போது கூறுகின்றார். அங்கிருந்து செல்லும்முன் வீட்டின் கூரையில் ராணுவத்தினர் தீ வைத்துள்ளார்கள். ஹம்சாவின் இப்போதுள்ள வீடு அந்த இடத்தில்தான் கட்டப்பட்டுள்ளது.

அருகில் கரட்டுபரம்பனில் அப்போது குடியிருந்த தீயர் சமூக மக்கள்தான் அப்போது உதவிக்கு ஓடி வந்தவர்களில் முதன்மை ஆனவர்கள் என்று மொய்து கூறுகின்றார். தீயர் சமூக மக்கள் அப்போது அங்கே நடந்த அனைத்துக் கொடுமைகளையும் தொலைவில் இருந்து பார்த்துக்கொண்டு இருந்தார்கள், அவர்களால் ஒன்றும் செய்ய இயலாத நிலை. ராணுவம் அங்கிருந்து நகன்ற பின் உடனடியாக ஓடி வந்து வீட்டின் தீயை அணைத்துள்ளார்கள். தாழ்த்தப்பட்ட சாதியினர் ஆன ஈழவர், தீயர் ஆகியோரும் முஸ்லிம் மக்களும் அப்போது யாருக்கு ஆதரவாக இருந்தார்கள் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு உதாரணம். (தீயர், ஈழவ மக்கள் இப்போது இதர பிற்படுத்தப்பட்ட சமூக மக்களாக அறியப்படுகின்றனர்.)

4. அதிகாரித்தோடி ஆக்கப்பரம்பில் கண்ணன்தோடு என்ற ஊரில் முள்ளப்பள்ளி உம்மர் என்பவர் வீட்டின் பின்புறம் தோண்டப்பட்ட குழியில் 5 பேர் அடக்கம் செய்யப்பட்டனர். அதிமண்ணில் மம்மூட்டி, வல்லிக்கடன் குடும்பத்தின் ஒரு உறுப்பினர் உட்பட ஐவர். மம்மூட்டியின் மகன் குஞ்ஞி முகம்மது பெண் உடை தரித்து தப்பியதாக அவர் மகன் மொய்தீன் (72) கூறுகின்றார். வீட்டில் இருந்த அனைவரும் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட பின் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது. கொல்லப்பட்டவர்களின் உடல்கள் செவ்வோடு குவாரிகளில் புதைக்கப்பட்டன.

தொடரும்.

செவ்வாய், ஆகஸ்ட் 31, 2021

வயது 74, ஆனால் பள்ளிக்கல்வியே இன்னும் முழுமையடையவில்லை

வயது 74, ஆனால் பள்ளிக்கல்வியே இன்னும் முழுமையடையவில்லை

(Still short of schooling at 74)

ஆசிரியர்: ழான் டெரெஸ் (Jean Derez) 

இந்திய வளர்ச்சிப்பொருளாதார வல்லுநர்களிடம் இரண்டு விதமான சிந்தனைப்போக்குகள் இருப்பதாக சொல்லப்படுகின்றது - ஒன்று, வளர்ச்சியை மையமாகக் கொண்டது, மற்றது வளங்களை பங்கீடு  செய்வதை மையமாக கொண்டது. இந்த பார்வை தவறானது.  வளர்ச்சியும் வளங்களை பங்கீடு செய்வதும் மட்டுமே வளமான உலகுக்கு வழி செய்யாது. 

உதாரணமாக குடிமை சமூக உரிமைகள் மனித வாழ்வுக்கு மிகப்பெரிய பங்காற்ற முடியும் என்பது உண்மைதான். எனினும் வளர்ச்சிக்கும் வளமைப்பங்கீடுக்கும் இந்த உரிமைகளால் பெரிய அளவுக்கு உதவி செய்ய முடியாது. மறுபுறம், வளர்ச்சியா வளமைப்பங்கீடா என்ற கேள்விக்கு மேல் மற்றொரு உண்மையும் உள்ளது - சில பொருளாதார கொள்கைகள் இரண்டையுமே முதன்மைப் படுத்துகின்றன. சிறந்த உதாரணம், அனைவருக்கும் தொடக்கக்கல்வி. பொருளாதார முன்னேற்றத்துக்கு உதவுவது போலவே சமூக ஏற்றத்தாழ்வுகளை களைவதற்கும் தொடக்கபள்ளிக்கல்வி உதவுகின்றது. தரமான கல்வி என்பது மனித வாழ்க்கை மேம்படவும் பல்வேறு வழிகளில் அவசியமாகின்றது. உதாரணமாக, நம் உடலநலனைப் பேணிக்கொண்டு சமூகத்தின் சகமனிதர்களின் உடல்நலத்தையும் பேணுகின்றோம். இது, 'மூன்று தரப்புக்கும் வெற்றி' என்ற கொள்கை போன்றது. உண்மை என்னவெனில் வளரச்சிப்பாதையின் தொடக்க கட்டத்திலேயே அனைவருக்கும் கல்வி என்ற இலக்கை நோக்கி முன்னேறிய நாடுகள் மிகப்பெரிய பலன்களை அடைந்துள்ளன. இந்தியாவில் இதற்கு உதாரணமாக கேரள மாநிலம் உள்ளது.

கடந்த காலத்தில் கல்விக்கொள்கை:

தொடக்ககால ஐந்தாண்டு திட்டங்களில் தொடக்கக்கல்விக்கு அவ்வளவு முக்கியத்துவம் தரப்படவில்லை. பவுதீக அளவிலான முதலீடுகளுக்கே முக்கியத்துவம் தரப்பட்டது. "புதியதாக தொடக்கப்பள்ளிகளை திறப்பது என்ற முனைப்பைக் கட்டுப்படுத்த வேண்டும்" என்றுதான் முதலாவது ஐந்தாண்டு திட்டம் கூறியது. மாறாக "ஏற்கனவே இருக்கின்ற தொடக்கப்பள்ளிகளை அடிப்படையான கொள்கைகள் மீது புதுப்பித்துக் கட்டமைக்க வேண்டும்" என்றுதான் திட்டமிட்டு இருக்க வேண்டும் (மகாத்மா காந்தி கனவுகண்ட கல்விக்கொள்கைகளின் அடிப்படையில் "தொடக்கக்கல்வித்திட்டம்" என்பதை நினைவில் கொண்டு சொல்கின்றேன்).

வேறு ஒரு காரணமும் உள்ளது. சமூகத்தின் கீழ்சாதியினருக்கு கல்வி என்பது அவசியம் அற்றதும் முக்கியத்துவம் அற்றதும் ஆகும் என்ற பாரம்பரியம் ஆன மேல்சாதிக் கண்ணோட்டத்தின் அடிப்படையில்தான் அக்காலத்தில் கல்விக்கொள்கைகள் வடிவமைக்கப்பட்டன. இப்போது மட்டும் என்ன? மேல்சாதியினரும் கிராமப்புறப்பள்ளி ஆசிரியர்களும் "உழைக்கும் வர்க்கங்களின் குழந்தைகளுக்கு கல்வி கற்பிப்பது அவசியம் அற்றது, நன்றிக்கு உரியதும் அல்ல" என்று சொல்வதை இப்போதும் நாம் கேட்கின்றோம். "ஏழைகள் கல்வி கற்றால் எங்கள் வயல்களிலும் வீடுகளிலும் யார் வேலை செய்வது?" என்று வெளிப்படையாகவும் வெறுப்புடனும் புலம்புவார்கள்.

விடுதலைக்குப்பின் கல்வித்தரம் உயர்ந்துள்ளது என்பது உண்மைதான். 1951இல் பெண்கல்வி 9% தான், 2011இல் அது 65% (1951இல் ஏழு வயதுக்கு மேலும், 201இல் 5 வயதுக்கு மேலும் என்று கொள்க). வரலாற்றுப்பார்வையில் இது மிகப்பெரிய பாய்ச்சல்தான். ஆனால் ஒப்பீட்டளவில் குறைந்த பட்சம் தெற்காசிய நாடுகளின் தர அடிப்படையில் இது திருப்தி அளிக்கும் வளர்ச்சி அல்ல. பல்வேறு சமூகக்கூறுகள், சுகாதார கணக்கீட்டு புள்ளி விவரங்கள் அடிப்படையில், 15-24 வயது வரம்புக்குள் ஆன பெண் கல்வி என்பது இந்தியா, பங்களாதேஷ், நேபாளம் ஆகிய நாடுகளில் ஏறத்தாழ சமமாகத்தான் உள்ளது - 2016இல் 85%. உண்மையில் பங்களாதேஷ், நேபாளம் இரண்டும் இந்தியாவுக்கு வெகு பின்னால்தான் இருந்தன, ஆனால் இந்தியாவில் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆன  ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி GDP, அதிவிரைவான பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றுடன் ஒப்பிடும்போது, இந்த இரண்டு நாடுகளின் பெண்கல்வி நிலை மிகப்பெரிய முன்னேற்றம் அடைந்துள்ளது. இந்த நிலையில் இந்தியாவை கிழக்கு ஆசிய நாடுகளின் பெண்கல்வித் தரத்துடன் ஒப்பிட்டால் அது துயரில் முடியும்.

பள்ளிக்கல்விக்கான வாய்ப்புக்கள் எனில் சிலருக்கு அது உலகத்தரத்திலும் பலருக்கு அது மிக மோசமான நிலையிலும்தான் உள்ளது. மிகச்சிறிய கிராமங்களில் கூட இந்தப் பாகுபாடு நிலவுவது வியப்புக்குரியது. முப்பது வருடங்களுக்கு முன்பு, மேற்கு உத்தரப்பிரதேசத்தில் பாலன்பூர் என்ற சிறிய கிராமத்தில் கல்வி கற்றோர் எண்ணிக்கை, தலித் சமூக பெண்களிடம் பூஜ்யம் விழுக்காடாக இருக்க, காயஸ்தா சமூகத்தின் ஆண் குழந்தைகள் 100% கல்வியறிவு பெற்றவர்கள் ஆக இருந்தார்கள். வகுப்பறைகளிலும் கற்றல் திறனில் மிகப்பெரிய பாகுபாட்டைப் பார்க்கின்றோம், சில குழந்தைகளின் வாசிப்புத்திறன் மேம்பட்ட நிலையில் இருக்க, மற்றவர்களோ அடிப்படை எழுத்துக்களைக் கூட வாசிக்கத் தடுமாறுகின்றார்கள். யுனெஸ்கோ அறிக்கை ஒன்றின்படி, 2012ஆம் ஆண்டில் உலகளாவிய அளவில் தனியார் நடத்தும் தொடக்கப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை ஏறத்தாழ 12% ( இந்தியா தவிர), அதுவே "வளர்ச்சியடைந்த நாடுகளில்" 10%க்கும் கீழே. ஆனால் இந்தியாவில் அதுவே 40% ஆக இருந்தது, அதற்கு மேலும் உயர்ந்துகொண்டே இருந்தது.

தவிர, அரசுப்பள்ளிகளின் பாடங்களுக்கும், தனியார் பள்ளிகளின் பாடங்களுக்குமே கூட மிகப்பெரிய இடைவெளி உள்ளது. அறிவுக்குப்பொருத்தமான சமதகுதி உள்ள கல்வியே குழந்தைகளுக்குச்சிறந்தது என்பதுதான் உலகளாவிய நியதி. இந்தியாவிலோ கல்வியின் தரம் என்பது, வர்க்கம், சாதி, பாலினம், பள்ளிகட்டணத்தை கட்டக்கூடிய தகுதி ஆகிய காரணிகளால் நிர்ணயிக்கப்படுகின்றது. சமூக அசமத்துவங்களில் இருந்து விடுபட பள்ளிக்கல்வி ஒரு வழியாக இருக்கும் என்ற நோக்கத்தையே இந்தப் பாகுபாடுகள் அடித்து நொறுக்குகின்றன.

முரண்பட்ட அடுக்குகளைக் கொண்ட இந்தியாவின் பள்ளிக்கல்வித்திட்டத்தின் முகம் கடந்த சில மாதங்களாக அம்பலப்பட்டுள்ளது. கோவிட்19 தொற்றுக் காலத்தின் பின் பள்ளிகள் உடனடியாக மூடப்பட்டன. இன்னும் மூடிக்கிடக்கின்றன. பொருளாதார வசதி படைத்த குடும்பத்து பிள்ளைகள் வசதிகள் பொருந்திய தம் வீடுகளில் உட்கார்ந்து இணையவழியாக பாடங்களை கற்றுக்கொண்டு இருக்க, வசதி இல்லாத குழந்தைகள் "இணையவழிப்பள்ளி"யில் இருந்த வெளியேற்றப்பட்டுள்ளாகள். இணையவழிகல்வி என்னும் அத்தி இலை, பள்ளிக்கல்வி மறுப்பு என்னும் யானையை மறைந்துவிட்டது, 16 மாதங்களாக. 

ஜார்கண்டில் Latehar கிராமத்தில் நாங்கள் இந்த மாத தொடக்கத்தில் வீடுதோறும் சென்று நடத்திய கணக்கெடுப்பில் தெரிந்தது இதுவே. தலித் - ஆதிவாசி சமூக மக்களின் நான்கு குடியிருப்பு பகுதிகளில் நாங்கள் கண்டது என்னவெனில், பெரும்பாலான குழந்தைகளுக்கு ஒரே ஒரு சொல்லைக் கூட வாசிக்க தெரியவில்லை, இணையவழிக்கல்வி என்பதன் அடையாளமே தெரியவில்லை. 

.... .... .....

The Hindu, 15.8.2021

தமிழில் மு இக்பால் அகமது

மாப்பிளா கிளர்ச்சி - 2


1921 கிளர்ச்சி திருரங்காடியில்தான் பிறந்தது. ஆகஸ்ட் 1921இல் மலப்புரம் மாவட்டம் திரூர்தான் கிளர்ச்சியின் கனல் பிரதேசமாக விளங்கியது. பிரிட்டிஷ் மலபாரின் நான்கு தாலுகாக்களில் ராணுவ சட்டம் பிறப்பிக்கப்பட்டது - கோழிக்கோடு, எரநாடு, வள்ளுவநாடு, பொன்னாணி. பின்னர் குரும்பரநாடு, வயநாடு தாலுகாக்களிலும் பிறப்பிக்கப்பட்டது. கிளர்ச்சியை வழி நடத்திய அலி முசலியார் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் ஆகஸ்ட் இறுதியில் சரணடைந்தார்கள் எனினும் பிரிட்டிஷ் ராணுவம் தன் அடக்குமுறை, கைதுகளை தொடர்ந்து செய்தது. பிரிட்டிஷ் ராணுவத்தின் ஒரு பிரிவான Dorset Regiment என்னும் படைப்பிரிவு, எரநாடு, வள்ளுவநாடு, மஞ்சேரி ஆகிய தாலுக்காக்களில் முஸ்லிம் சமூக மக்களுக்கு எதிராக நடத்திய தொடர் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகள் காரணமாக முஸ்லிம் மக்கள் எதிர்வினை ஆற்றவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்கள். 1921 அக்ட்டோபர் 25 அன்று, மலப்புரத்தில் மேல்முறி என்ற ஊரில் வீடுகளில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியே இழுத்துவரப்பட்ட பெண்கள், குழந்தைகள், வயது முதிர்ந்தோர், நோயாளிகள் என 246 பேர் வரிசையாக நிற்க வைக்கப்பட்டு டார்செட் ரெஜிமெண்ட் படையால் சுட்டுக்கொல்லப்பட்டனர். டிசம்பர் இறுதியில் சுமார் 27000 முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டு இருந்தார்கள்.

வரலாற்றறிஞர் எம் கங்காதரன், கிளர்ச்சி உச்சக்கட்டத்தில் இருந்த கடைசி ஆறு மாதங்களில் முஸ்லிம்கள், இந்துக்கள் இரண்டு தரப்பினருமே பெரும் நெருக்கடியில் இருந்தார்கள் என்று குறிப்பிட்டுள்ளார். குறைந்தபட்சம் 10000 மாப்பிளாக்கள் கொல்லப்பட்டிருக்கலாம், அதே அளவு மாப்பிளாக்கள் கைது செய்யப்பட்டு மலபாரில்  இருந்து வெளியேற்றப்பட்டார்கள், அந்தமானின் கொடிய தனிமைச்சிறைக்கும் பல நூறு பேர் கடத்தப்பட்டனர்.

கங்காதரனின் கூற்றுப்படி, அன்று அங்கே போலீஸ் படைக்கு தலைமை ஏற்றிருந்த போலீஸ் சூப்பிரண்டு  Richard Harvard Hitchcock க்கின் அதீத நடவடிக்கைகள்தான் கிளர்ச்சிக்கு காரணமாக இருந்தன. ஹிட்ச்காக்கின் பதிவுகளே இதற்கு ஆதாரம். மலபாரில் அப்போது கிலாபத் இயக்கம் செல்வாக்கு மிக்கதாக இருந்தது. குறிப்பாக முஸ்லிம்கள் அடர்த்தியாக இருந்த பகுதிகளில் கிலாபத் இயக்கம் தீவிரமாக இயங்கியது. கிலாபத் செயற்பாடுகளை, அவற்றின் செயற்பாட்டு எல்லைகளையும்  தாண்டி அதிகமான கற்பனைகளுடன் பார்த்த பிரிட்டிஷ் போலீஸ், எல்லை மீறிய அடக்குமுறைகளில் இறங்கி இயக்கத்தை நசுக்க முனைந்தது. இதனால் கோபமுற்ற மாப்பிளா முஸ்லிம்கள் வேறு வழியின்றி எதிர் நடவடிக்கைகளில் இறங்கினார்கள். கோழிகோட்டில் காங்கிரஸ் கூட்டம் நடந்தபோது, மிகப்பெரிய அளவில் முஸ்லிம்கள் கலந்துகொண்டார்கள். காந்தியும் மவுலானா சவுக்கத் அலியும் கலந்துகொண்ட மாநாடு அது. இக்கூட்டம் ஒரு ஆயுதம் தாங்கிய போராட்டத்துக்கு அறைகூவல் விடுப்பதாக அதீத கற்பனையில் இறங்கியது பிரிட்டிஷ் காலனிய அரசு. 

.... ..... ......

சமீல் இல்லிகல் (Sameel Illikal) கேரள இதழியலாளர். வரலாற்று ஆய்வாளர், திரைப்பட விமர்சகர், திரைப்பட இயக்குநர். மத்யமம் என்ற வார இதழின் துணை ஆசிரியர். மாப்பிளா மக்களின் வரலாறு, பண்பாடு குறித்து ஆழ்ந்து ஆய்வு செய்பவர். Graves of 1921 Martyrs என்ற ஆய்வுத்திட்டத்தை செய்து வந்தார். நாடக நடிகர், வில்லடிச்சாம்பாட்டு என்ற கேரள கிராமியக்கலையில் தேர்ந்தவர்.

2018 அக்ட்டோபர் மாத மத்யமம் இதழில் வெளியான கட்டுரை இது. சமீல் மலையாளத்தில் எழுதியதை O Najiya ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து Two circles. Net இணைய இதழில் வெளியிட்டார். இரண்டு பாகங்களாக வெளியான கட்டுரையின் சில பகுதிகளை நான் தமிழில் இங்கு தருகின்றேன்.

..... ...... ....

இந்திய விடுதலைப்போர் வரலாற்றில் ஜாலியன் வாலாபாக் படுகொலை 19.4.1919 (379 பேர் மரணம்), சவ்ரி சவ்ராவில் 5.2.1922 அன்று , கொதிப்புற்ற விவசாயிகள்  23 போலீசாரை உயிருடன் கொளுத்திய நிகழ்வு ஆகியவை என்றென்றும் பேசப்படுவை. அரசு பதிவேடுகளின் படிமாப்பிளா கிளர்ச்சி அல்லது மலபார் கிளர்ச்சியில் 2337 பேர் கொல்லப்பட்டார்கள், 1652 பேர் காயமுற்றனர், 45404 பேர் சிறையில் அடைப்பு. 10000 பேர் வரை மரணம், 50000 பேர் சிறையிலடைப்பு,, 20000 பேர் நாடுகடத்தல், 10000 பேரைக்காணவில்லை - இது பொதுமக்கள் கணக்கு.

மலபார் புரட்சியுடன் ஒப்பிடும்போது பிற நிகழ்ச்சிகள் அவற்றின் பரப்பளவிலும் வீச்சிலும் சிறியவை. மலபார் கிளர்ச்சியை தேசிய வரலாறு புறக்கணிக்கின்றது, மலபார் கிளர்ச்சியின் போக்கில்

 
நிகழ்ந்தவற்றையும் வரலாறு கண்டுகொள்ளாமல் கடந்து செல்கின்றது. உதாரணமாக மலப்புரத்தில் மேல்முறி-அதிகாரித்தோடியில் நடத்தப்பட்ட கூட்டுப்படுகொலைகள். மலபாரில் நிகழ்த்தப்பட்ட பல்வேறு கூட்டுப்படுகொலை நிகழ்வுகளில் பூக்கோட்டூர் கலவரத்துக்கு அடுத்ததாக சொல்லப்படுவது மேல்முறி படுகொலைகள்.

பூக்கோட்டூர் படுகொலையில் 350க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டார்கள். 1921 அக்டொபர் 29 அன்று, பெண்கள், குழந்தைகள், வயது முதிர்ந்தோர், நோயாளிகள் உட்பட அனைவரும் வீடுகளில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியே இழுத்து வரப்பட்டு வரிசையாக நிற்கவைத்து சுடப்பட்டார்கள். Dorset Regiment என்னும் பிரிட்டிஷ் துப்பாக்கி படையினர்தான் இப்படுகொலையை நிகழ்த்தினர்.

..... ... .....

The Mappila Rebellion 1921, GRF Tottenham, Madras Govt Press, 1922: : வடமேற்கே 4 மைல் தொலைவில் பெரும்கும்பல் கூடியது. டோர்செட் ரெஜிமெண்ட், துப்பாக்கி படை, கவச வாகனங்கள் அக்கும்பலை எதிர்கொண்டன. மேல்முறிக்கு மேற்கே உள்ள காட்டிலும் வீடுகளிலும் இருந்த எதிரிகள் வெளியே வந்து சரணடைய மறுத்ததுடன் நமது படைகளுக்கு எதிராக தொடர்ந்தும் உறுதியுடனும் சண்டையிட்டனர். இறுதியில் 246 கிளர்ச்சியாளர்கள் இறந்தனர் என்று படைப்பிரிவின் தலைமை கமாண்டர் மெட்ராஸ் அரசுக்கு 25.10.1921 அன்று அனுப்பிய தந்தியில் குறிப்பிட்டார்.

ஒன்றரை கிலோமீட்டர் சுற்றளவுக்குள் இருந்த கோணோம்பாற, அதிகாரிகொடி, மேல்முறி முட்டிப்படி, வலியாட்டப்பட்டி ஆகிய கிராமங்களில் டோர்செட் ரெஜிமெண்ட் நடத்திய படுகொலை இது. மலப்புரம் நகரில் இருந்து 3 கிமீ தொலைவில் கோழிக்கோடு பாலக்காடு தேசிய  நெடுஞ்சாலை யில் அமைந்துள்ள ஊர்கள் இவை.

டோர்செட் ரெஜிமெண்ட்டின் இரண்டாவது பட்டாளத்தில் A, D கம்பெனிகள், கோணோம்பாறயை நோக்கி பீரங்கி குண்டுகள் தாங்கிய கவச வாகனங்களில் வந்து சேர்ந்தனர். Lt.Hevic, Lt.Goff  ஆகியோர் தலைமையில்தான் 246 மாப்பிளா மக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்.

அந்த நிகழ்வுக்கு 10 வருடங்கள் பின் பிறந்த நம்பன் குண்ணனின் (மேல்முறி வலியட்டப்படி) வாக்குமூலம் இது: பீரங்கிக்குண்டுகள் பெருத்த சத்தத்துடன் பொழிந்தன. அதன் பின் ராணுவம் ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் புகுந்து அனைவரையும் வலுக்கட்டாயமாக வெளியேற்றியது. வெளியே வர மறுத்தவர்களை துப்பாக்கியின் கத்தி முனையாலும் பின் கட்டையாலும் குத்தினார்கள், அடித்தார்கள். மஞ்சா, பத்தாயம் போன்ற மரப்பெட்டிகளை உடைத்து பொருட்களை கொள்ளை அடித்தார்கள். குர் ஆன், சபீனாப்பாட்டு (முகமதுநபியை புகழ்ந்து அரபு மொழியில் எழுதப்பட்ட பாடல்கள்), அரபு மொழிப்பாடல்கள், படைப்பாட்டு (போர்ப்பரணிகள்) போன்றவற்றை முற்றத்தில் குவித்து தீயிட்டனர். ஓலைகள், புற்களால் வேயப்பட்ட வீடுகளுக்கு தீயிட்டனர். அதன் பின் ஆண்களை வரிசையாக நிறுத்தி ஒவ்வொருவராக சுட்டுக் கொன்றனர். கட்டுப்பட மறுத்தவர்கள், காப்பாற்ற முனைந்தவர்கள், அவர்கள் பெண்கள், குழந்தைகள் ஆயினும் சுட்டுக்கொல்லப்பட்டனர். காலையில் தொடங்கிய படுகொலை நண்பகலில் படைத்தளபதி எழுப்பிய நீண்ட விசில் ஒலிக்கும் வரை நீண்டது. அவ்வாறு விசில் ஒலித்தபோது துப்பாக்கியின் முனை சாலத்தில் கல்லடித்தோடி மொய்தீன் குட்டி ஹாஜியை குறிவைத்து இருந்தது. துப்பாக்கியின் விசை இழுபடும் முன் அவர் தப்பித்தார். இந்த நிகழ்வை குறிப்பிட்டவர் P T முகம்மது மாஸ்டர், அப்போது அவர் வயது 4 (Nisar Kaderi - Pookottur Yuddhavum Melmuri Operationum, 1921 Churul Nivaranam - Pookkottur Yudha Smaraka Samithi Souvenir, 2007).

246 பேர் சுடப்பட்டனர், சுமார் நூறு வீடுகளுக்கு தீயிட்டனர். சுடப்பட்ட சிலரோ மிக மோசமான காயம்பட்டு இருந்தனர், உயிர் மட்டுமே இருந்தது. இன்னும் பலரோ கவனிக்க ஆளின்றி நான்கு நாட்கள் அங்கேயே கிடந்து செத்து மடிந்தனர். இறந்தவர்கள் எங்கே விழுந்து கிடந்தார்களோ அங்கேயே புதைக்கப்பட்டனர்.

விடுதலைப்போராட்டம் ஆகட்டும், மலபார் கிளர்ச்சி ஆகட்டும், வரலாறுகள் இந்தப் படுகொலைகள் பற்றிப் பேசியதில்லை. ஆனால் கல்லறைகள் இருக்கின்றனவே, அவை நடந்த படுகொலைகளை உயிர்ப்புடன் வைத்துள்ளன -  இப்பகுதி மக்களின், பின் வந்த தலைமுறைகளின் நினைவில். வீட்டின் முன்பக்க திடலில் கொல்லப்பட்டவர்கள் அங்கேயே புதைக்கப்பட்டனர். மலப்புரம் கிலாபத் தலைவர் குஞ்சி தங்கள் (மலப்புரத்தின் வலியங்காடியை சேர்ந்தவர்), கேட்டுக்கொண்டதற்கு இணங்க, அருகில் உள்ள ஊர்களில், கிராமங்களில் இருந்து வந்தவர்கள்தான் இறந்தவர்களை அடக்கம் செய்தார்கள்.

ஒரே குழியில் பலரையும் அடக்கம் செய்ததும் நடந்தது. ராணுவத்துக்கு பயந்து இரவு நேரங்களில் அடக்கம் செய்தார்கள். ஆண்கள் இல்லாத நிலையில் பெண்களே குழிகள் வெட்டினார்கள். ஒரு புதைகுழி இரண்டு அடி ஆழம் மட்டுமே இருந்தது கண்டுபிடிக்க பட்டுள்ளது. 246 பேர் கொல்லப்பட்டதில் ஒன்பது குழிகளில் அடக்கம் செய்யப்பட்ட 40 பேர்களின் விவரங்கள் நம்மிடம் உள்ளன.

(தொடரும்)

படத்தில்: 246 பேர்களில் 11 பேர் ஒரே குழியில் அடக்கம் செய்யப்பட்டனர், இடம் அதிகாரத்தோடி, மேல்முறி. டெக்கான் ஹெரால்ட் 25.10.2018.

மாப்பிளா கிளர்ச்சி - 1


1836 தொடங்கி 1921 வரை 85 வருடங்களாக நீடித்த கிளர்ச்சி அது. 

இறுதியாக 1921 ஆகஸ்ட்டில் 22 வட்டாரங்களில் சுமார் 10 லட்சம் மக்கள் பங்கேற்ற மாபெரும் கிளர்ச்சியில், சுமார் 10000 பேர் மரணமுற்றனர். கொடிய அந்தமான் சிறையில் மட்டும் 3000 பேர் கொல்லப்பட்டனர். 42 பேருக்கு பிரிட்டிஷ் ஏகாதிபத்திய அரசு ஆயுள்தண்டன விதித்தது. 

Conrod Wood என்னும் ஆங்கிலேயர் தன் ஆய்வுக்காக எழுதிய தொகுப்பை, பின்னர் the moplah rebellion and it's Genesis என்று நூலாக வெளியிட்டார். மாப்ளா கிளர்ச்சியும் அதன் தோற்றுவாயும் என்று தமிழில் நான் மொழிபெயர்த்தேன், அலைகள் வெளியீட்டக பதிப்பு, 2007.

100 ஆண்டுகள் ஆன நிலையில், கிளர்ச்சியை மையமாகக் கொண்டு கேரளாவில் சில திரைப்படங்கள் எடுக்கப்பட்டு வருவதாக அறிகின்றோம். பிரிட்டிஷார் +  ஜென்மிகள் எனப்படும் இந்து மத உயர்சாதி நிலப்பிரபுக்கள் என்ற அதிகார வர்க்க கெடுபிடிக் கூட்டணிக்கு எதிராக மாப்பிளை முஸ்லிம்கள் நடத்திய நீண்ட போராட்டம் அது. 1919க்குப் பின் கிலாபத் இயக்கம், காங்கிரஸ் இயக்கம் ஆகியவற்றின் தலையீடு, இப்போராட்டத்தில் என்ன செய்தது என்பதும் கூடவே வாசிக்கப்பட வேண்டியது. ஒருபுறம் இக்கிளர்ச்சியை தேசபக்தப்போராடம் என்று ஒருசாராரும், இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் ஆன மதப்பிரச்னையே இதன் மையம் என்று மறுசாராரும் வெவ்வேறு நிலைகளில் நின்று வாதிடுகின்றனர். 1980களில் வெளியான 1921 என்ற மலையாள திரைப்படம், மாப்பிளா கிளர்ச்சியை மையமாக கொண்டதுதான்.

கான்ராட் உட் தன் நூலின் முடிவுரையில் இப்படித்தான் சொல்கின்றார்:

1921-22 மாப்பிளா கிளர்ச்சி, தெற்கு மலபார் மாப்பிளா சமூக மக்களின் வரலாற்றில் ஒரு மிகப்பெரும் திருப்புமுனை எனலாம். 1792இல் கிழக்கிந்திய கம்பெனி வடிவில் முதல் முறையாக பிரிட்டிஷ் நிர்வாகம் நிறுவப்பட்ட நாள் தொடங்கி, பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராகவும், அதன் ஆதரவோடு வளர்ந்த ஜென்மி ஆதிக்க சக்திகளுக்கு எதிராகவும் மாப்பிளா சமூக மக்கள் தொடர்ந்து நீண்ட பல ஆண்டுகளாகத் தமது எதிர்ப்பை கலகங்கள் மூலம் அறிவித்தபடியே இருந்துள்ளார்கள். தொடந்த போராட்டங்களின் இறுதி வடிவமாகவே, தீவிர மண்டலத்தை தம் ஆட்சியின் கீழ்க் கொண்டுவரும் முயற்சியாகவே 1921-22 மாப்ளா ஆயுதம் தாங்கிய போராட்டம் வெடித்தது. ... ஒட்டுமொத்தமாகச் சொல்லவேண்டும் எனில், தெற்கு உட்புற மலபாரின் பாதிக்கப்பட்ட இசுலாமிய சமூகத்தின் எழுச்சியாகத்தான் 1921-22ஆம் ஆண்டில் நடந்த மாப்ளா கிளர்ச்சியை வரையறுக்க முடியும்.

... .... ....

ரயில் எண் 77, சரக்குப்பெட்டி எண் 1711

கோழிக்கோட்டில் இருந்து புறப்பட்ட ரயில் அது. கிளர்ச்சியின் மையமாக இருந்த திரூருக்கு 1921 நவம்பர் 19 அன்று மாலை 6.45 மணிக்கு ரயில் வந்து சேர்கின்றது. மூடப்பட்ட சரக்கு ரயில் பெட்டி ஒன்றில் நூற்றுக்கும் மேற்பட்ட மாப்பிளா முஸ்லிம்களும் 3 இந்துக்களும் அடைக்கப்பட்டார்கள், வெளிப்புறம் தாழிடப்பட்டது. அந்த ரயிலுடன் இணைக்கப்பட்டது. ஆடு மாடுகளை கொண்டு செல்வதற்கான பெட்டி அது. தவிர புதிதாக பெயிண்ட் பூசப்பட்டு இருந்ததால் சிறு துவாரங்களும் அடைக்கப்பட்டு காற்றுப் புகாத பெட்டி ஆனது. இவர்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டவர்கள், வழக்குப்பதிவு செய்யப்பட்டவர்கள். ஹெட் கான்ஸ்டபிள் ஓ கோபாலன் நாயரும் 5 கான்ஸ்டபிள்களும் அடுத்த பெட்டியில் பயணிக்க, சார்ஜெண்ட் A H ஆண்ட்ரூஸ் என்பவர் என்ஜினுக்கு அடுத்து இருந்த இரண்டாவது வகுப்பு பெட்டியில் பயணிக்கின்றார். 

வழி நெடுகிலும் உள்ளே இருந்தவர்கள் காற்றுக்கும் குடிநீருக்கும் கதறி கூச்சல் இட்டுள்ளார்கள். பெட்டியின் கதவை தட்டி திறக்க போராடியுள்ளார்கள். சோரனூரில் அரை மணி நேரமும் ஒலவகோட்டில் 15 நிமிடங்களும் ரயில் நின்றபோது அவர்களின் கதறல் இந்த போலீஸ்காரர்களுக்கு கேட்கவே செய்தது. தவிர பின்னர் நடத்தப்பட்ட விசாரணையின்போது சாட்சியம் அளித்த பொதுமக்கள் பலர், ரயில் சென்ற வழிநெடுக உள்ளே அடைக்கப்பட்டவர்களின் கூச்சலையும் கதறலையும் கேட்டதாக சொன்னார்கள். 

முக்கியமாக, இரவு 12.30 மணிக்கு போதனூருக்கு ரயில் வந்து சேர்ந்தபோது அதே ரயிலில் பயணித்த மஞ்சேரி ராம ஐயர் என்பவர், இறங்கி வந்து சத்தம்போட்டு பெட்டியின் கதவை திறக்கச் செய்தார். கதவு திறக்கப்பட்டது. உள்ளே அடைக்கப்பட்ட அனைவரும் மயக்கமுற்றுக் கிடந்தார்கள். 56 பேர் ஏற்கனவே இறந்துவிட்டார்கள்.  உடனடியாக இறந்தவர்கள் 6 பேர். 13 பேரை கோயம்புத்தூர் மருத்துவமனைக்கு எடுத்து சென்றார்கள். 25 பேரை மத்திய சிறை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். 13 பேரில் 8 பேர் பின்னர் இறந்தார்கள். ஆக மொத்தம் 70 பேர் இறந்தார்கள். கோயம்புத்தூர் மருத்துவமனையில் சிகிச்சை அளித்த மருத்துவரின் பெயர் T ராமன். 

மெட்றாஸ் அரசு இதற்காக ஒரு விசாரணைகமிசனை அமைத்தது. விசாரணையின் முடிவில், 30.8.1922 அன்று அரசு பின்வரும் ஆணையை வெளியிட்டது:

"......கைதிகளைக் கொண்டு செல்லும் அவசரத்தேவைக்காக ஒரு சரக்குப்பெட்டியை பயன்படுத்தியதை தவறு என்று சொல்ல முடியாது, மனிதாபிமானம் அற்ற செயல் என்றும் சொல்ல முடியாது. ... சார்ஜெண்ட் ஆண்ட்ரூஸ், 5 போலீஸ் ஆகியோர் மீது விசாரணை நடத்த வேண்டும் என இந்திய அரசு, மெட்றாஸ் அரசுக்கு உத்தரவு இட்டது.  இறுதியில் அனைவரும் குற்றமற்றவர்கள் என விடுவிக்கப்பட்டார்கள்.

உயிரிழந்த 70 பேர்களின் குடும்பத்துக்கு, தலா 300 ரூபாய் கருணைத்தொகை வழங்கப்பட்டது. (ஆணை எண் 290, 1.4.1922)

…... .....

ரயில்பெட்டி கொடூரமரண நிகழ்வின் 93ஆவது நினைவு தினம் மலப்புரத்தில் திரூருக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் 2014 நவம்பர் 20 அன்று கடைப்பிடிக்கப்பட்டது. குறுவம்பலம் என்பது அக்கிராமம். ரயில் பெட்டியில் அடைக்கப்பட்டு இறந்தவர்களில் 41 பேர் கிராமத்தை சேர்ந்தவர்கள். இவர்களில் பெரும்பாலானோர் திருமணம் ஆகாத இளைஞர்கள். "கிளர்ச்சியின்போது இக்கிராமத்தின் இளைஞர்கள் மிகப்பெரும் பங்காற்றியதாக முதியவர்கள் கூறுகின்றனர். மிக சமீப காலம் வரையிலும் கூட கிளர்ச்சியில் குறுவம்பலம் கிராமத்தின் பங்கு பற்றி கிராம மக்களுக்கும் வரலாற்று அறிஞர்களுக்கும் கூட தெரியாமலேதான் இருந்தது. இது குறித்து மேலும் பல ஆய்வுகளை செய்ய வேண்டியது அவசியம்" என்று சலீம் குறுவம்பலம் கூறுகிறார். இவர் 2014இல் மலப்புரம் மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர். குறுவம்பலம் கிராமத்தில் ரயில்பெட்டி தியாகிகளுக்கு நினைவுச்சின்னம் அமைப்பதில் முன்னின்றவர். 

வரலாற்றறிஞர் KKN குருப், "ரயில்பெட்டி கொடூர நிகழ்வு குறித்தும் மலபாரில் கிளர்ச்சியின்போது நிகழ்ந்த அனைத்தையும் அரசு முற்றாக ஆய்வு செய்ய வேண்டும்" என்றார். வரலாற்றறிஞர் எம் கங்காதரன், "ரயில்பெட்டி கொடூர நிகழ்வுதான் மலபாரில் பிரிட்டிஷ் ஆட்சி நடத்திய மிகப்பெரிய கொடுமை என்று சொல்லிவிட முடியாது, சுமார் 200 மாப்பிளா இளைஞர்களை அவர்களின் வீடுகளுக்குள் இருந்து வெளியே இழுத்து வந்து அவர்களின் குடும்பத்தார் கண்ணெதிரிலேயே பிரிட்டிஷார் சுட்டுக்கொன்ற சம்பவம் 1921 அக்டொபர் மாதத்தில் நடந்தது" என்று சொல்கின்றார். 

... .... ....

1971இல் சி அச்சுதமேனன் முதல்வராக இருந்த இடதுசாரிகள் அரசு, மாப்பிளா கிளர்ச்சியை இந்திய விடுதலைப்போராட்ட இயக்கத்தின் ஒரு பகுதியாக அங்கீகாரம் செய்தது, கிளர்ச்சியில் பங்கு பெற்று வாழ்ந்து வந்தவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கியது. மாப்பிளா கிளர்ச்சி, பிரிட்டிஷ் காலனிய ஆதிக்கத்துக்கு எதிரான போராட்டம் என்று பத்து வருடங்களுக்குப் பிறகு ஒன்றிய அரசும் அங்கீகாரம் அளித்து, கிளர்ச்சியில் பங்கு பெற்று வாழ்ந்து வந்தவர்களுக்கும் கிளர்ச்சியில் உயிர் இழந்தவர்களின் வாரிசுகளுக்கும் பல உதவிகளை அறிவித்தது.

திரூர் ரயில் நிலையத்தில் ரயில்பெட்டி மரணங்களை சித்தரிக்கும் சித்திரம் அழிக்கப்பட்ட வரலாறு:

திரூர் ரயில்நிலையத்தின் சுவரில் ரயில்பெட்டி கொடூரத்தில் மரணமுற்ற தியாகிகளை நினைவூட்டும் சித்திரம் ரயில்வே நிர்வாகத்தால் வரையப்பட்டது. குட்டிபுரம் என்ற ஊரை சேர்ந்த ஓவியர் பிரேமன் சித்திரத்தை வரைந்தார். 2018 நவம்பர் மாதத்தில் உள்ளூர் பிஜேபி ஆர் எஸ் எஸ் கும்பல் இச்சித்திரத்தை அழிக்க வேண்டும் என ரயில்வே நிர்வாகத்தை வற்புறுத்தியதால் அச்சித்திரம் அழிக்கப்பட்டது. 

வரலாற்றில் இருந்து மாப்பிளா கிளர்ச்சி தியாகிகள் நீக்கப்படும் வரலாறு:

கேரள அரசு 1960களில், மாப்பிளா கிளர்ச்சியாளர்களை விடுதலைப்போராட்ட தியாகிகள் என அங்கீகரித்து தியாகிகள் பட்டியலில் சேர்த்தது. அப்போராடம் விவசாயிகள் புரட்சி என்றும் அடையாளப்படுத்தப்பட்டது. 

இப்போது இந்திய வரலாற்று ஆய்வுக்குழுமத்தின் மூன்று பேர் குழு ஒன்று, ரயில்பெட்டி கொடூரத்தில் மரணமுற்றோர், பிற கிளர்ச்சி தலைவர்கள் ஆகியோரை விடுதலைப்போராட்ட தியாகிகள் என அங்கீகரிக்க அவசியம் இல்லை என்று முடிவு செய்துள்ளது. Dictionary of Martyrs: India's freedom struggle 1857-1947 என்ற நூலின் ஐந்தாவது பாகத்தில் இருந்து 387 மாப்பிளா தியாகிகளின் பெயரை நீக்குவது என்று முடிவு செய்துள்ளது. அலி முசலியார், வரியம்குன்னத் அஹமது ஹாஜி, அவரது இரண்டு சகோதரர்கள் ஆகியோர் பெயரும் அடக்கம். 

குழுமத்தின் ஒரு உறுப்பினர் ஆன C I ஐசக் என்பவர், ".... மாப்பிள்ளாகளின் நடவடிக்கைகள் ஏறத்தாழ அனைத்துமே மத அடிப்படையில் ஆனவை. அவர்கள் இந்து மதத்தினர்க்கு எதிரானவர்கள், அவர்களின் செயற்பாடுகள் மத சகிப்பின்மையின் அடிப்படையில் ஆனவை. .... ரயில்பெட்டி நிகழ்வில் இறந்தவர்களில் பலர், கிலாபத் கொடியேற்றியவர்கள், கிலாபத் நீதிமன்றம் அமைத்தவர்கள், கிலாபத் அரசை நிறுவியவர்கள். உயிரிழந்த பல மாப்பிளாக்கள், விசாரணை கைதிகளாக இருந்தபோது காலரா போன்ற நோய்களாலும் இயற்கையாகவும் இறந்தவர்கள் என்பதால் அவர்களை தியாகிகள் என்று அங்கீகரிக்க முடியாது"  என்று சொல்கின்றார். 

2021 ஆகஸ்ட் 19 அன்று ஆர் எஸ் எஸ் தலைவர் ராம் மாதவ் என்பவர், 1921 மாப்பிளா கிளர்ச்சி ஆனது, இந்தியாவில் அறியப்பட்ட முதல் "தாலிபான் சிந்தனை" என்று பேசினார். கேரளாவின் இடதுசாரி அரசு, இதை மறைத்து அக்கிளர்ச்சியை கம்யூனிஸ்ட் புரட்சியாக சித்தரிக்க முயல்கின்றது என்றும் பேசினார்.

இதன் பின்னர்தான் ICHR அப்படி ஒரு முடிவை எடுத்துள்ளது.

.... .... .... .....

(தொடரும்)

வியாழன், ஜூன் 24, 2021

தேவ்லி வரும் இரவு ரயில்

The Night Train at Deoli

- Ruskin Bond

தமிழில்: மு இக்பால் அகமது

... .... ...... 

கல்லூரியில் படிக்கும்போது கோடை விடுமுறையை களிப்பதற்காக டேராவில் இருந்த என் பாட்டியின் வீட்டுக்கு வந்துவிடுவேன். சமவெளியில் இருக்கும் ஊரைவிட்டு மே மாதத்தின் முற்பாதியில் புறப்பட்டு வந்தால் ஜூலை மாதத்தின் பிற்பகுதியில்தான் திரும்புவேன். தேவ்லி டேராவில் இருந்து சுமார் 30 மைல் தொலைவில் உள்ள சிறிய ரயில் நிலையம் . டெராய் எனப்படும் அடர்ந்த காடுகள் அடங்கிய  இந்தியப்பகுதியின் எல்லையாகும் தேவ்லி.


ரயில் தேவ்லிக்கு வரும் நேரம் அதிகாலை ஐந்து மணியாகும். இருள் விலகாத அப்பொழுதில் மின்சார விளக்குகளும் எண்ணெயில் எரியும் விளக்குகளும் சிந்தும் மங்கலான வெளிச்சத்தில் நிலையம் சற்றே ஒளிரும். ரயில் பாதைகளுக்கு அப்பால் விரியும் காடுகள் விடியலில் மெல்லிய வெளிச்சத்தில் புகைபோல் தெரியும். தேவ்லி நிலையத்தில் ஒரே ஒரு ரயில் மேடை மட்டுமே உண்டு. ஸ்டேஷன் மாஸ்டருக்கு ஒரு அறை, பயணிகள் காத்திருப்பு அறை தவிர ஒரு தேநீர் கடை, ஒரு பழக்கடை, சில நாய்கள். இவை தவிர அங்கு வேறொன்றும் இல்லை, அடுத்துள்ள அடர்ந்த காட்டுக்குள் நுழைந்து பயணிக்கும் முன் இங்கே பத்து நிமிடம் மட்டுமே ரயில் நிற்கும், வேறென்ன வேண்டும்.

தேவ்லியில் ரயில் ஏன் நிற்கின்றது, இது எனக்குப் புரியாத ஒன்று. அந்த ரயில் நிலையத்தில் சொல்லிக்கொள்ளும்படி இதுவரை எதுவும் நடக்கவும் இல்லை. ரயிலில் இருந்து ஒருவரும் இறங்குவது இல்லை, ஒருவரும் ரயிலுக்கள் ஏறுவதும் இல்லை. சுமைதூக்கிகளை அங்கே நான் பார்த்ததே இல்லை. ஆனால் ரயில் என்னவோ இங்கே முழுதாக பத்து நிமிடங்கள் நிற்கும், பிறகு மணியடிக்கும், கார்ட் விசில் ஊதுவார், பிறகென்ன, தியொலியை பிரிந்து செல்வோம், மறந்து விடுவோம்.

எனக்குள் எப்போதுமே ஒரு குறுகுறுப்பு உண்டு, அந்த சுவர்களுக்குப் பின்னால் தேவ்லியில் நடப்பது என்ன? அந்த தனிமையான பிளாட்பாரத்தை நினைத்து எப்போதும் வருந்துவேன், அங்கே வருவதற்கு யாருக்கும் விருப்பமில்லை. முடிவு செய்தேன், ஒரு நாள் நான் தேவ்லியில்  இறங்குவேன், நாள் முழுக்க அங்கேயே இருப்பேன், அந்த நகரத்துக்கு என் வரவு மகிழ்ச்சியை தரட்டும்.

எனக்கு பதினெட்டு வயது அப்போது, பாட்டியின் வீட்டுக்கு ரயிலில் சென்று கொண்டு இருந்தேன், இரவு ரயில் தேவ்லியில்   நின்றது. ஒரு இளம்பெண் பிளாட்பாரத்தில் கூடைகள் விற்றுகொண்டு இருந்தாள். 

அது குளிர்ச்சிமிகு அதிகாலை நேரம். அவள் தன் துப்பட்டாவை தோள்களை சுற்றி அணிந்து இருந்தாள். கால்களில் செருப்பு ஏதும் இல்லை, அவள் பழைய உடைகளை அணிந்து இருந்தாள், ஆனால் அவள் பதின்ம வயதில் இருந்தாள், அவள் நடையில் நாகரிகமும் மரியாதையும் இருந்தன.

என் ஜன்னலுக்கு வந்தவுடன் நின்றாள். நான் அவளையே உற்றுக்கவனிப்பதை அறிந்து இருந்தாலும் அது தெரியாதது போல் அலட்சியமாக இருந்தாள். வெளிர்ந்த நிறம், ஒளிரும் தலை முடி, அலைபாயும் விழிகள். அங்கும் இங்கும் சுற்றியடித்துவிட்டு உணர்வலைகள் வீசியடிக்கும் அவ்விழிகள் இறுதியில் என் விழிகளை சந்தித்து நின்றன.

என் ஜன்னலில் சிறிது நேரம் நின்றாள், இருவருமே எதுவும் பேசிக்கொள்ளவில்லை. ஆனால் அவள் அங்கிருந்து அகலும்போது நான் என் இருக்கையில் இருந்து எழுந்ததை உணர்ந்தேன். பெட்டியின் வாசலை நோக்கி நகர்ந்தேன்,  பிளாட்பாரத்தில் இறங்கி  எதிர்த்திசையில் பார்த்துக்கொண்டு நின்றேன். தேநீர்க்கடையை நோக்கி நடந்தேன். மெல்லியதாக எரிந்து கொண்டு இருந்த அடுப்பின் மீது கெட்டிலில் தேநீர் கொதித்துக்கொண்டு இருந்தது. ஆனால் கடைக்காரர் தேனீர் விற்கும் பொருட்டு ரயிலுக்கு சென்று இருந்தார். அவள் கடையின் பின் இருந்து என்னைத் தொடர்ந்து வந்தாள்.

'கூடை வேண்டுமா?' என்று கேட்டாள். 'மிகத் தரமான பிரம்பால் ஆனவை, மிக உறுதியானவை'.

'வேண்டாம், எனக்குத் தேவையில்லை'

நாங்கள் ஒருவரை ஒருவர் நேருக்கு நேராக பார்த்துக்கொண்டு நின்றோம், அது மிக நீளமான பொழுதாகத் தெரிந்தது. 'அப்படியா? உண்மையாகவே வேண்டாமா?'

'சரி, ஒரு கூடை கொடு'. மேலே இருந்த கூடையை எடுத்துக்கொண்டு ஒரு ரூபாய் நாணயம் ஒன்றைக் கொடுத்தேன், அவள் விரல்களைத் தொடும் துணிச்சல் இல்லை எனக்கு.

அவள் ஏதோ சொல்ல வந்தாள், கார்ட் விசில் ஊதினார்; ஏதோ சொன்னாள், மணி ஓசையிலும் ரயில் என்ஜினின் மூச்சிலும் அவள் சொன்னது காற்றோடு போனது. நான் என் பெட்டியை நோக்கி ஓடினேன். ரயில் புறப்பட்ட வேகத்தில் பெட்டி முன்னும் பின்னுமாக மோதிக் குலுங்கியது.

ரயில் நகர்ந்து முன்னோட பிளாட்பாரம் பின்னோக்கி ஓட நான் அவளையே பார்த்துக்கொண்டு நின்றேன். பிளாட்பாரத்தில் அவளைத்தவிர யாரும் இல்லை, நின்ற இடத்திலேயே நின்றுகொண்டு என்னைப்பார்த்து புன்னகைத்துக்கொண்டு இருந்தாள். ரயில் சிக்னல் கம்பம் தாண்டும் வரை அவளையே பார்த்துக்கொண்டு இருந்தேன், ரயில் காட்டுக்குள் நுழைய ஸ்டேஷன் கண்ணில் இருந்து மறைந்தது, ஆனால் அவள் தன்னந்தனியே அங்கே நிற்பதை என்னால் பார்க்க முடிந்தது.

அதன் பின் நான் படுக்கவில்லை, உட்கார்ந்தே பயணித்தேன். அவளது முகமும் நெருப்பின்றிப்புகைந்த கண்களும் ஆன அந்தச்சித்திரம் என் நினைவை விட்டு அகல மறுத்தது.

டேராவுக்கு வந்து சேர்ந்த பின் அங்குள்ள புதிய அன்றாட வாழ்க்கை ஓட்டத்தில் இந்த நிகழ்ச்சி மங்கலாகி தொலைதூரத்துக்கு சென்றுவிட்டது. இரண்டு மாதங்களுக்குப்பிறகு பாட்டி வீட்டில் இருந்து மீண்டும் ஊருக்கு புறப்படும்போது அவள் என் நினைவுக்கு வந்தாள்.

தேவ்லி ரயில்நிலையத்துக்குள் வண்டி நுழையும்போது அவளைத்தேடினேன். என்னால் நம்பமுடியவில்லை, பிளாட்பாரத்தில் அவள் நடந்து வந்து கொண்டிருந்தாள். பெட்டியின் படிக்கட்டில் இருந்து கீழே குதித்தேன், அவளை நோக்கி கை அசைத்தேன்.

என்னைக்கண்டு கொண்டாள், புன்னகை செய்தாள். நான் அவளை நினைவில் வைத்துள்ளேன் என்பது அவளுக்கு மகிழ்ச்சியை கொடுத்தது. அவள் என்னை நினைவில் வைத்துள்ளாள் என்பதால் நான் மகிழ்ச்சியுற்றேன். இரண்டு பழைய நண்பர்கள் சந்தித்துக்கொண்ட நிகழ்வு போல இருந்தது அது.

தன்னிடம் இருந்த கூடைகளை விற்கும் பொருட்டு ஒவ்வொரு பெட்டியாக போகவில்லை அவள், நேராக தேநீர்க்கடையை நோக்கி வந்தாள். ஒளியற்று இருந்த அவள் கண்களில் வெளிச்சம் மின்னியது. நாங்கள் எதுவும் பேசிக்கொள்ளவில்லை, ஆனால் அதற்கு மேலும் உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில் இருந்தோம். 

அப்படியே அவளை அள்ளி ரயிலுக்குள் தள்ளி என்னுடனேயே கொண்டுசென்றுவிட வேண்டும் என்று உணர்ச்சிவசப்பட்டேன்.  தேவ்லி ரயில் நிலையத்தில் மீண்டும் அவள் என் கண் பார்வையில் இருந்து தொலைவில் மறையும் எண்ணத்தை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அவள் கையில் இருந்த கூடைகளை எடுத்து தரையில் வைத்தேன். அவள் ஒரு கூடையை எடுக்க எத்தனித்தாள், ஆனால் நான் அவள் கையை இறுகப்பற்றினேன்.

'நான் டெல்லிக்கு போகின்றேன்'

தலையசைத்து அவள் சொன்னாள், 'நான் எங்கும் போக வேண்டியதில்லை'

கார்ட் விசில் ஊதினார், ரயில் புறப்பட வேண்டும், கார்ட் மீது அக்கணத்தில் பெரும் வெறுப்பு உண்டானது.

'நான் மீண்டும் வருவேன்... நீ இங்கே வருவாயா?'

மீண்டும் தலையசைத்து ஆமோதித்தாள். அப்போது மணியோசை ஒலிக்க ரயில் நகரத்தொடங்கியது. வேறு வழியின்றி என் கையை அவளிடம் இருந்து விடுவித்துக்கொண்டு ரயிலை நோக்கி ஓடினேன்.

இந்த முறை நான் அவளை மறக்கவில்லை. பயணத்தின் பிற்பகுதி முழுவதும் அவள் என்னுடனேயே இருந்தாள், அதன் பின்னரும் நெடுநாட்களாக. அந்த வருடம் முழுவதுமே ஒளிரும் உயிர்ப்புடன் அவள் என் நினைவில் இருந்தாள். அந்த வருடம் கல்லூரி முடிந்த உடன் வழக்கத்திற்கு மாறாக சற்று முன்பாகவே டேராவுக்கு புறப்பட்டேன். முன்பாகவே தன்னைப் பார்க்க வந்துவிட்ட பேரனைக் கண்டு பாட்டி மகிழ்ந்து போவாள்.

தேவ்லியில்  ரயில் நுழையும்போது படபடப்பும் எதிர்பார்ப்பும் என்னை ஆட்கொண்டன. அவளிடம் என்ன சொல்வது? அவளைக்கண்டால் என்ன செய்வது? சரி, அவள் முன்பு கதியற்றவன் போல நடந்துகொள்ளக் கூடாது, பேச இயலாமல் தத்தளிக்க கூடாது, உணர்வுகளை வெளிப்படுத்தாமல் கட்டுப்பாடுடன் நடந்துகொள்ள வேண்டும் என்று உறுதி பூண்டேன்.

ரயில் தேவ்லி   நிலையத்துக்குள் வந்தது, பிளாட்பாரம் நெடுகிலும் தேடினேன், அவள் எங்கேயும் இல்லை.

கதவைத் திறந்து படிக்கட்டில் இருந்தும் இறங்கிவிட்டேன். என்னால் அந்த ஏமாற்றத்தை உணர முடிந்தது, நடக்கக்கூடாத ஏதோ ஒன்று நடந்துகொண்டு இருப்பதாக உணர்ந்தேன். நான் ஏதாவது செய்தாக வேண்டும், ஸ்டேஷன் மாஸ்டர் அறையை நோக்கி ஓடினேன், 'இங்கே கூடைகளை விற்பாளே ஒரு இளம்பெண், உங்களுக்கு தெரியுமா?'

'அப்படி யாரையும் தெரியாது.... பாருங்க, ரயிலை விட்டுவிடக் கூடாதுன்னா உடனே  போய் ரயிலில் ஏறுங்கள்'.

ஆனால் பிளாட்பாரத்தின் இரண்டு முனைகளிலும் என் கண்கள் அலை பாய அவளைத் தேடினேன். ரயில் நிலைய இரும்பு வேலியடைப்புக்களை வெறித்துப் பார்த்தேன். ஒரு மாமரத்தையும் காட்டை நோக்கிச்செல்லும் புழுதி படிந்த சாலையையும் அன்றி வேறொன்றும் இல்லை அங்கே. அந்தச்சாலை எங்கே செல்கின்றது? ரயில் பிளாட்பாரத்தை தாண்டி வெளியே வந்துவிட்டது, ஓட வேண்டும், ஓடினேன், என் பெட்டியின் கதவைப் பிடித்து உள்ளே ஏறினேன். ரயிலின் வேகம் அதிகரித்தது, காட்டுக்குள் நுழைந்தது, ஏதும் செய்ய இயலாதவனாக ஜன்னலின் வழியே வெளியே வெறித்து நோக்கினேன்.

இரண்டே முறை மட்டுமே சந்தித்த ஒரு இளம்பெண், அதுவும் என்னிடம் எதுவுமே பேசாதவள், அவளைப்பற்றி எனக்கும் ஒன்றும் தெரியாது, தெரியாது என்றால் துளியும் தெரியாது, ஆனால் அவள் மீது என் இதயத்தில் மென்மை சுரந்தது, அவள் மீது ஒரு பொறுப்புணர்வு பிறந்தது,  அவளை நான் எங்கே எப்படித் தேடுவேன்? 

நான் பாட்டி வீட்டில் இரண்டு வாரங்களுக்கு மேல் தங்கவில்லை, எனவே பாட்டிக்கும் இந்த முறை என் மேல் வருத்தமே. நான் அங்கே நிம்மதியாக இருக்கவும் இல்லை, தன்னிலை மறந்தவனாக இருந்தேன். எனவே மீண்டும் சமவெளி நோக்கி ரயிலைப் பிடித்தேன், தேவ்லி   ரயில் நிலையத்தில் மீண்டும் ஸ்டேஷன் மாஸ்டரிடம் அவளைப்பற்றி கேட்க வேண்டும்.

ஆனால் இப்போது புதிய ஸ்டேஷன் மாஸ்டர் வந்திருந்தார். கடந்த வாரம்தான் பழைய மாஸ்டர் வேறொரு ஊருக்கு பணியிடமாற்றத்தில் போயிருந்தார். புதியவருக்கோ கூடைகள் விற்கும் இளம்பெண்ணைப் பற்றி ஒன்றும் தெரியவில்லை. தேநீர்க்கடையின் உரிமையாளரை சென்று பார்த்தேன், ஒடுங்கிய சிறிய உருவம் கொண்ட அவர் பழைய ஆடைகளை அணிந்து இருந்தார். கூடைகளை விற்கும் அந்த இளம்பெண்ணைப் பற்றி எதுவும் தெரியுமா எனக் கேட்டேன்.

'ஆமா, அப்படி ஒரு பெண் இங்கே இருந்தாள், எனக்கு நன்றாக நினைவுள்ளது. ஆனால் இப்போதெல்லாம் அவளைப் பார்க்க முடிவதில்லை'

'அப்படியா? என்ன ஆச்சு அவளுக்கு?'

'எனக்கு எப்படியப்பா தெரியும்? அவள் யார் எனக்கு?'

மீண்டும் ஒருமுறை ரயிலைப் பிடிக்க ஓடினேன்.

தேவ்லியின் ப்ளாட்பாரம் கரைந்து ஓடியது. எனது அடுத்த பயணத்தில் ஒரு முறை இந்த ஊரில் இறங்குவேன், ஒரு நாள் முழுவதும் இங்கே இருந்து அவளைத் தேடுவேன், அவளைப்பற்றி விசாரிப்பேன், இறுதியில் அவளைக் கண்டுபிடிப்பேன். வேறு எதனாலும் அல்ல, தன் கரிய அலைபாயும் விழியின் பார்வை ஒன்றால் மட்டுமே என் இதயத்தைக் கொள்ளைக்கொண்ட அவளைக் கண்டுபிடிப்பேன் என்று உறுதி பூண்டேன்.

இந்த நினைவுடன் என்னைத் தேற்றிக்கொண்டு மீதமுள்ள இறுதியாண்டு கல்லூரிப்படிப்பை முடித்தேன். கோடை வந்தது, டேராவுக்கு ரயிலில் பயணமானேன், அதிகாலை இருள்விலகாத பொழுதில் 

தேவ்லி  நிலையத்துக்குள் ரயில் நுழைந்தது. பிளாட்பாரம் நெடுகிலும் அவளைத் தேடினேன், எனக்குத் தெரியும், அவளை என்னால் மீண்டும் காண முடியாது, ஆனாலும் ஒரு நம்பிக்கை...

ஆனாலும் முன்பு நான் முடிவு செய்தபடி தேவ்லியில் பயணத்தை இடை நிறுத்தி அந்த ஊரில் அவளைத்தேடுவது என்பது நடக்காமல் போனது. (என்ன செய்ய, இது கதையாகவோ சினிமாகவோ இருந்திருந்தால், தேவ்லியில்  இறங்கியிருப்பேன், மர்மத்தை துலக்கி சுபமான முடிவு கண்டிருப்பேன்). உண்மையில் அவ்வாறு செய்வதற்கு எனக்குள் பயம் இருந்தது என்றே நினைக்கிறேன். உண்மையில் அவளுக்குக்கு என்ன நேர்ந்தது இருக்கும் என்று தெரிந்துகொள்வதில் எனக்கு பயம் இருந்தது. ஒருவேளை அவள் தேவ்லியை  விட்டு சென்றிருக்கலாம், ஒருவேளை அவளுக்கு திருமணம் ஆகியிருக்கலாம், ஒருவேளை அவளுக்கு உடலநலக்குறைவு ஏற்பட்டு இருக்கலாம்...

கடந்த சில வருடங்களில் தேவ்லியை   பல முறை கடந்து சென்றிருக்கின்றேன், என் ஜன்னலின் வழியே எப்போதும் வெளியே தேடுவேன், என்னை நோக்கிப் புன்னகையை வீசிய அதே முகத்தை மீண்டும் கண்டுவிட மாட்டேனா என்கிற சிறு நம்பிக்கை. 

தேவ்லி நிலையத்தின் சுவர்களுக்கு அந்தப்பக்கம் என்ன நடந்திருக்கக்கூடும் என்று யோசித்து இருக்கின்றேன். ஆனால் என் பயணத்தை ஒருபோதும் இடைநிறுத்தி அங்கே இறங்கியது இல்லை. அது என் விளையாட்டை நாசம் செய்துவிடக்கூடும். என் நம்பிக்கையும் கனவும் இப்படியே தொடரட்டும், ஆளரவமற்ற அந்த பிளாட்பாரம் நெடுகிலும் ஜன்னல் வழியே நான் தேடுவேன், கையில் கூடைகளுடன் அவள் வருகைக்காக.

தேவ்லியில்  நான் ஒருபொழுதும் என் பயணத்தை இடைநிறுத்தி இறங்கியது இல்லை, ஆனால் எத்தனை முறை என்னால் அவ்வழியே பயணிக்க முடியுமோ அத்தனை முறையும் பயணிக்கின்றேன்.

..... ......

ஞாயிறு, ஜூன் 20, 2021

ரயிலோடு போய்...

வாழ்க்கை ரயிலை நகர்த்துவது கடந்த இரண்டு மாதங்களாக அதனை எளிதாக இல்லை.

வாசிப்பும் எழுத்தும் 2020இல் மார்ச்சுக்கு பிறகு இருந்தது போல இல்லை. அப்படி எல்லாம் இல்லை, எப்பொதும்போல்தான் என்பவர்களின் சித்தத்தை போற்றுவோம். 

இன்று ஆசிரியர் ஒருவரிடம் பேசிக்கொண்டு இருந்தபோது வாழ்க்கைப் பயணத்தில் கோரோனா pause பட்டனை அழுத்திவிட்டது என்றார். உண்மைதான். பயணங்கள், நினைத்த நேரத்துக்கு நினைத்த நேரத்தில் சென்று வருவது எல்லாம் இயலாமல்... வாசிப்பும் எழுத்தும் கதி என்று கிடந்தவர்கள் பத்து பதினைந்து பக்கத்துக்கு மேல் நகர மாட்டேங்குது என்று முகநூலில் புலம்புகின்றார்கள். எனக்கும் அப்படியே. வேறு வழியில்லை, ஒரு நோய்த்தொற்று நம் மனநிலையை ஆட்டுவிக்க, நம்மை முடக்க நாம் அனுமதித்து விடலாமா என்ற கேள்வியை எழுப்பிக் கேட்டுக்கொள்ள வேண்டியுள்ளது. என்ன செய்யலாம்? முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும். வாசிப்பும் எழுத்தும்தான் நம்மை மீட்கும். 

ஒவ்வொரு வருடமும் ஏதாவது ஒரு புதிய ஊருக்கு பயணம் செல்வது வழக்கம். மதுரை, திண்டுக்கல், களக்காடு குளியல் என்று இந்த வருடம் சுற்றியதும் உறவுகள் நண்பர்களை கண்டதும் மகிழ்ச்சிதான். ஆனால் ஆர்ப்பரித்துக்கொட்டும் ஆளில்லாக் குற்றாலத்தை செய்தியில் காணும்போது மனம் வெறுப்படைகின்றது. என்ன வாழ்க்கை இது!

ரயில் பயணங்கள் சுகமானவை. ஜன்னலோர இருக்கை சொர்க்கம். அதிலும் தென்காசியில் இருந்து கொல்லம் செல்லும் அந்த மலைப்பாதை ரயில் பயணம், ஊட்டி டார்ஜிலிங் பயணங்களுக்கும் அழகுக்கும் சற்றும் குறைந்தது அல்ல. செங்கோட்டை தாண்டினால் அது வேறு உலகம். மலையும் காடும் கேரள உழைக்கும் மக்களும் மரச்செறிவுகளுக்குள் மறைந்திருந்து பார்க்கும் வீடுகளும் ரயில் ஜன்னலை உரசி செல்லும் செடிகொடிகளுமாக... வளைந்து வளைந்து ஒரு மலைப்பாம்பை போல ச்சக் சக் சக்.... என்றவாறு புகைகக்கி செல்லும் டீசல் எஞ்சின் இழுத்துச்செல்லும் ரயில். புனலூர், தென்மலை ஆகியவை அழகிய ஊர்கள். தென்மலை அழகிய சுற்றுலாத்தலம். புனலூரில் பிரிட்டிஷ் காலத்திய தொங்குபாலம் இப்போதும் பயனில் உள்ளது. 13 கண் பாலம் மிகப்புகழ் பெற்றது. கட்டஞ்சாயா, பழம்பொரி, கப்ப, மாட்டுக்கறி வறுவல் பற்றி சொல்ல வேண்டிய அவசியமில்லை. இந்த மலைரயில் பயணத்துக்கு தனியே இலக்கு ஒன்றும் தேவையில்லை, பயணிப்பது மட்டும்தான் இலக்கு. அகல ரயில் பாதை இடப்பட்ட பின் இன்னும் பயணம் செய்யாமல் இருப்பது அர்த்தமில்லாத வாழ்க்கை வாழ்வதன்றி வேறென்ன?

பழைய டெல்லியில் இருந்து டேரா டூன் சென்ற ரயில் பயணத்தின்போது, அதிகாலை எழுந்து ஜன்னல் ஓரம் உட்கார்ந்தால் கடந்து செல்லும் நிலையங்கள் எல்லாம் பழமையானவை, பயணம் நெடுகிலும் கங்கையும் யமுனையும் நம்மை கடந்து சென்றுகொண்டே இருக்கின்றன. ஹரித்வார் ரயில் நிலையத்தில் பத்துக்கும் மேற்பட்ட டிக்கெட் கவுண்டர்களை கண்டேன், ஆள் உயரத்துக்கு புல் முளைத்து மூடிக்கிடந்தன. அதாவது கும்பமேளாவுக்கு வரும் லட்சக்கணக்கான சாமியார்களுக்கு டிக்கெட் வாங்குவதில் சிரமம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக இத்தனை கவுண்டர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்று புரிந்துகொண்டேன்.

பயணங்கள் முடக்கப்பட்டு இருப்பது வாழ்க்கை முடக்கப்பட்டு கிடப்பதாகும், நம் வாழ்க்கை மட்டுமல்ல, மனிதர்கள் இடம்பெயராமல் தேங்கிக்கிடப்பது நம் வாழ்வில் மட்டுமே பொருளாதார இழப்பையும் சிக்கல்களையும் உருவாக்கவில்லை, இது ஒரு சங்கிலித்தொடர், சக மனிதர்களின் வாழ்விலும் பொருளாதாரத்திலும் இழப்பை ஏற்படுத்தி, விளைவாக மனநிலையிலும் உணர்வுகளிலும் கூடவோ குறையவோ பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தி உள்ளது. அசைவும் இயக்கமுமே வாழ்க்கை, இது சகல உயிர்களுக்கும் பொருந்தும்.

... ... .... ....

2000இன் முற்பாதியில் த மு எ ச சென்னை DIBICAவில் திரைப்படக்கலை குறித்த ஒரு பட்டறையை நடத்தியது. மூன்று நாட்கள். பாலு மகேந்திரா, இயக்குநர் சிவக்குமார், வெங்கடேஷ் சக்கரவர்த்தி, உமா வாங்கல், இயக்குநர் ஹரிஹரன் (ஏழாவது மனிதன்), ச தமிழ்ச்செல்வன், ஆதவன் தீட்சண்யா, பிரளயன் ஆகியோருடன் இருந்த பெரும் வாய்ப்பு அது. சத்யஜித் ரே அவர்களின் சாருலதாவில் இருந்து ஒரு காட்சி திரையிடப்பட்டது. சாருலதா குரு ரவீந்திரநாத் தாகூரின் கதை. காட்சியின் சகல வித  அமைப்புகள் - ஒளி, ஒலி, கதாப்பாத்திரத்தின் நகர்வு, பேசும் விதம், க்ளோஸ் அப், மிட் சாட், லாங் சாட், நிற்கும் இடம் உள்ளிட்ட பல அம்சங்களும் எப்படி திட்டமிடப்பட்ட ஒத்திசைவுடன் படமாக்கப்பட்டது என்று ஒவ்வொரு அம்சமாக விளக்கினார் இயக்குநர் சிவக்குமார்.

ஏழாவது மனிதனுக்கு முன்பு வரை ஹரிஹரன் பம்பாயில் மராட்டிய மேடை நாடகத்தில் முழுமையாக அர்ப்பணித்துக்கொண்டு இயங்கியவர் அவர். அங்கே அவர் பெரும் அனுபவசாலி. இங்கே வரும்போது தமிழ் தெரியாது அவருக்கு. பிறருடன்  ஆங்கிலத்தில்தான் உரையாடி இருக்கின்றார்.  ஏழாவது மனிதன் படம் தயாரிப்பில் இருந்தபோது அவருக்கு உதவியாக இருந்தவர் சி எஸ் லட்சுமி (அம்பை) என்று அவர் குறிப்பிட்டார். ஊருக்குள் வந்த சிமெண்ட் ஆலையால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் சீர்கேட்டை சொல்லும் படம் அது. ரகுவரன் நடித்து இருந்தார். 

பயிற்சிப்பட்டறையில் Night Mail என்னும் 1936ஆம் வருடப்படம் ஒன்று திரையிடப்பட்டது. அப்போது யூடியூப் எதுவும் கிடையாது. தியேட்டருக்கு போக வேண்டும் அல்லது திரைப்பட விழாவுக்கு போக வேண்டும். இல்லையேல் பர்மா பஜாரில் வெளிநாட்டு சிடிக்களை வாங்கலாம். இப்போது night mail இணையத்தில் கிடைக்கின்றது. 23 நிமிட படம். படத்தில் ஒரு ஆங்கிலகவிதை உள்ளது. பின்னணியில் ஒலிக்கும். திரையில் கவிதையும் ரயிலும் ஓட, கூடவே திரையின் முன்னே நின்றுகொண்டு அப்பாடலைப்பாடினார் ஹரிஹரன், சொல்லும் உச்சரிப்பும் சிறிதும் பிசகாமல்! அரங்கில் இருந்த கூட்டம் கைதட்டி ஆரவாரம் செய்தது, படத்துக்கும் ஹரிஹரனுக்கும் சேர்த்து. 

This is the night mail

Crossing the border

Bringing the check and the

Postal order

Letters for the rich

Letters for the poor

The shop at the corner and the

Girl next door.... என்று கவிதை போகின்றது. ரயில் சக்கரத்தின் ஓட்டத்துடனும் தாள லயத்துடனும் இசைந்து ஓடுகின்ற ஓசை நயமிக்க சொற்களுடன் கவிதை ஓடும். W H Auden என்ற புகழ்பெற்ற கவிஞரின் கவிதை அது. இங்கிலாந்து நாட்டில் பிறந்தவர். Benjamin Britten என்பவர் பாடியிருக்கின்றார். இணையத்தில் தேடுங்கள், படமும் உள்ளது, இந்தப் பாடல் ஒலிக்கும் பகுதியும் தனியாக கிடைக்கின்றது. (ஒருவர் மனதை ஒருவர் அறிய உதவும் சேவை இது... என்ற பாட்டு என் நினைவுக்கு வந்தது, பாடலின் பொருளுக்காக). Auden அவர்களின் கவிதைகள் நான் வாசித்தது இல்லை என்பதை ஒப்புக்கொள்கின்றேன். அவரது கவிதை மிகக்கச்சிதமாக இப்படத்தில் பொருந்திவருவதை மட்டுமே கருத்தில் கொண்டு இப்பதிவை எழுதுகின்றேன். கவிதை வரிகளும் கவிதை படத்தில் இடம்பெறும் 3 நிமிட காட்சியும் யூடியூப்பில் உள்ளன. 

கடிதங்களை ஒரு ஊரில் இருந்து மற்ற ஊர்களுக்கு சுமந்து செல்லும் மெயில் எனப்படும் ரயிலில் பணியாற்றும் ஊழியர்கள், ரயில் நிலையங்களில் இந்த ரயிலின் வரவுக்காக காத்திருக்கும் ஊழியர்கள், இதே ரயிலில் வரும் ஒரே ஒரு செய்தித்தாளுக்காக காத்திருக்கும் ஒருவர், ரயில் கடக்கும் பாதையில் உள்ள ஊர்கள், காடுகள், மலைகள் என கருப்பு வெள்ளையில் 84 வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்ட படம் நம்மை வியப்பில் ஆழ்த்தும். கடிதங்கள் அடங்கிய கனத்த பையை நிற்காமல் ஓடும் ரயிலுக்கு எப்படி மாற்றுகின்றார்கள் என்கிற தொழிநுட்பம் நம்மை கைதட்ட செய்கின்றது. ஒரே ஒரு நொடிக்கும் குறைவாகவே வரும் அக்காட்சி படத்தின் சூப்பர் காட்சி.

கொடுங்காலம் ஒழியும் நாளுக்கென காத்திருக்கின்றேன், பயணங்கள் முடிவதில்லை.

ரஷ்கின் பாண்ட் எழுதிய ரயில் நிலைய கதை ஒன்றுடன் அடுத்த பதிவில் சந்திக்கின்றேன்.

... .... ...

நீர்வண்ண ஓவியம்: Bijaynanda Rahman

திங்கள், ஜூன் 14, 2021

எர்னெஸ்டோ சே குவேரா: இளம்பருவம்

போரில் இறங்குமாறு எதிரிகள் எங்களை அறைகூவி அழைத்தார்கள். ஆகவே வேறு வழியின்றி நாங்கள் போருக்கு ஆயத்தமாக வேண்டியிருந்தது. துணிச்சலுடன் போர்முனை நோக்கிப் போக வேண்டியிருந்தது - சே.

... ... ..

1969 ஒரு பிப்ரவரி மாதத்து மாலையில் ஹவானா நகரின் மிராமர் என்னும் புறநகரில் சேயின் தந்தை டான் எர்னஸ்டோ குவேரா லிஞ்ச், சேயின் நண்பர் ஆல்பெர்ட்டோ, சேயின் மனைவி ஜூலியா ஆகியோரை I Lavretsky  என்ற ரஷியர் நேரில் கண்டு பேசிய பதிவு: 

பாடிஸ்டாவை துரத்தியடித்தபின், கியுபன் தேசிய வங்கியின் இயக்குனராக பொறுப்பேற்றுக்கொண்ட குவேரா, புதிய அரசு வெளியிட்ட புதிய நாணய தாள்களில் சே என்று கையெழுத்து இட்டு எதிர்ப்புரட்சியாளர்கள் மத்தியில் பெரும் கோபமும் வெறுப்பும் ஏற்படக் காரணமாக விளங்கினார்.

கியுப புரட்சி வெற்றிக்குப்பின் ஒரு முறை அவரிடம் சே என்ற புதிய பெயரை விரும்புகின்றாரா என்று கேட்கப்பட்டபோது அவர் சொன்னார்: என்னைப்பொறுத்தவரை சே என்ற சொல் என் வாழ்க்கையின் மிக மதிப்பு வாய்ந்த, அதி முக்கியமான விசயங்கள் அனைத்தையும் குறிக்கின்றது. அதுவன்றி அது வேறு எப்படியும் இருக்க முடியாது. என் முதற்பெயரும் குடும்பப் பெயரும் சிறிய, தனிப்பட்ட, முக்கியத்துவம் அற்ற சில விசயங்களை மட்டுமேதான் குறிக்கின்றன.

டான் எர்னெஸ்டோ (தந்தை) சொல்கின்றார்: என் மகன் ஏன் 'மேஜர் சே' ஆனான்? ஏன் அவன் கியுப புரட்சியின் தலைவர்களில் ஒருவராக விளங்கினான்? எது அவனை பொலிவிய மலைத்தொடர்களுக்கு உந்தித்தள்ளியது? இவற்றையெல்லாம் புரிந்துகொள்ள வேண்டும் எனில் நாம் கடந்த காலத்தையும், எங்கள் குடும்ப மூதாதையர்கள் பற்றியும் அறிந்துகொள்ள வேண்டும். என் மகனின் நரம்புகளில் ஐரிஷ் புரட்சியாளர்கள், ஸ்பானிய வீரர்கள், அர்ஜென்டினாவின் தேசபக்தர்கள் ஆகியோரின் குருதி பாய்ந்தது என்ற உண்மையை முதலில் குறித்துக்கொள்ளுங்கள். ஒருபோதும் ஓய்ந்து இராத தன் மூதாதையர்கள் இடம் இருந்து சில அம்சங்களை சே மரபுச்செல்வமாகப் பெற்றிருந்தான் என்பது தெளிவான உண்மை. தூர தேசங்களில் அலைந்து திரியவும், அபாயகரமான சாகசங்களில் ஈடுபடவும் புதிய கருத்துக்களை கண்டு தெளிவு கொள்ளவும் அவனது இயல்பிலேயே சில அம்சங்கள் காரணமாக இருந்தன. 

... ... ....

1930ஆம் ஆண்டு மே மாதம் 2ஆம் நாள், எனக்கு அந்த நாள் மிக நன்றாக நினைவில் இருக்கிறது, நானும் சிலியாவும் (குவேராவின் தாயார்) டேட்டியுடன் (குழந்தையான குவேராவை செல்லமாக Tete என்று அழைத்தனர்) நீச்சல் குளத்தில் குளிக்க சென்றிருந்தோம். சிலியாவுக்கு தண்ணீர் என்றால் மிக ஆசை, அவள் நல்லதொரு நீச்சல் வீராங்கனையும் ஆவாள். அன்று குளிர்ச்சி அதிகமாக இருந்தது. குளிர்ந்த காற்றும் வீசிக்கொண்டு இருந்தது. திடீரென டேட்டி மூச்சுவிட கஷ்டப்பட்டு இருமத் தொடங்கினான். நாங்கள் உடனே அவனை ஒரு மருத்துவரிடம் அழைத்துக்கொண்டு சென்றோம், அவன் ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டு இருப்பதாக அவர் சொன்னார். ஒருவேளை கடும் குளிரின் காரணமாக அவன் இந்த நோய்க்கு ஆளாகி இருக்கலாம். அல்லது அவன் அம்மாவிடம் இருந்து இந்த நோய் அவனுக்கு வந்திருக்கக் கூடும், சிலியா குழந்தையாக இருந்தபோது அவளும் இந்த நோயால் அவஸ்தைப் பட்டிருக்கிறாள்.... .... அந்தக்காலத்திய மருந்துகளுக்கு ஆஸ்துமாவை குணப்படுத்தும் திறன் இல்லை. தட்பவெப்பநிலை மாறினால் சரியாகிவிடும் என்று எல்லோரும் எங்களுக்கு ஆலோசனை கூறினார்கள்..... ஒரு வருத்தமும் இன்றி எங்கள் தோட்டத்தை விற்றுவிட்டு, கோர்டோபாவுக்கு அருகில் கடல் மட்டத்தில் இருந்து இரண்டாயிரம் மீட்டர் உயரத்தில் அமைந்திருந்த அல்ட்டா கிராசியா என்ற இடத்தில் வில்லா நிடியா என்ற வீட்டை வாங்கினோம். ... ஒவ்வொரு நாளும் , குறிப்பாக இரவுகளில், சே ஆஸ்துமாவால் அவதிப்பட்டான். நான் அவனது படுக்கைக்கு அருகில்தான் படுத்து இருப்பேன், அவன் மூச்சுவிட திணறும்போது அவனை எடுத்து தோள்களில் ஏந்தி, அவன் அவஸ்தையில் இருந்து விடுபடும் வரையிலும், களைப்புற்று தானாகவே தூங்கும் வரையிலும் , நேரமாகி விடும், விடிவதற்கு சற்று முன்னர்தான் அவன் தூக்கத்தில் ஆழ்வான், அவனை தேய்த்துவிட்டுக் கொண்டும் தட்டிக்கொடுத்தும் தூங்க வைப்பேன்....

புரட்சியாளர்கள் நோயின் காரணமாகவோ உடலுறுப்பு குறைபாடுகள் காரணமாகவோ சிலவகை உணர்ச்சிகளின் காரணமாகவோ உருவாவதில்லை. மாறாக அவர்கள் ஒரு சுரண்டும் அமைப்பின் காரணத்தாலும் நீதிக்காகப் போராடும் மனிதனின் இயல்பான உந்துதலின் காரணமாகவே உருப்பெறுகின்றார்கள். ... .... பல்வேறு விளையாட்டுக்களில் ஈடுபடுமாறு டேட்டியை நாங்கள் உற்சாகப்படுத்தினோம். டேட்டி விளையாட்டுக்களை நேசித்தான். தன் நோயைப்பற்றி கவலைப்படாமல் எதை எடுத்துக்கொண்டாலும் அதில் தான் முழுத்திறனையும் செலுத்தி செயல்பட்டான். சாபக்கேடான ஆஸ்துமா இருந்தபோதும் தான் யாருக்கும் சளைத்தவன் அல்லன் என்று நிரூபிக்க முயல்வதுபோல அவன் செயல்பட்டான். பள்ளி மாணவனாக இருந்தபோதே அவன் பிரதேச விளையாட்டு மன்றமான Atalaya வில் உறுப்பினராகி அதன் கால்பந்தாட்டக்குழுவில் மாற்று ஆளாக விளையாடினான். அவன் சிறந்த ஆட்டக்காரன்தான் எனினும் விளையாடும்போதே ஆஸ்துமாவின் தாக்குதலுக்கு ஆளாகி மைதானத்தை விட்டு வெளியேறவும் மூச்சுத்திணறலை சரியாக்கவும் வேண்டிய நிலையில் இருந்தால் அவனால் முழு ஆட்டக்காரனாக விளங்க முடியவில்லை. கடுமையானதும் கஷ்டமானதும் உடல் முழுவதையும் பயன்படுத்தி விளையாடக்கூடியதும் ஆன ரக்பி விளையாட்டையும் விளையாடினான். சில காலம் குதிரைச்சவாரி செய்தான். கோல்ப் விளையாடினான், சறுக்கு விளையாடினான். ஆனால் குழந்தைப்பருவத்திலும் இளமையிலும் அவன் உண்மையாகவே ஈடுபாடு காட்டியது சைக்கிள் சவாரிதான் என்பதில் மறுகருத்து இல்லை. 

... சே ஒருபோதும் வீட்டில் முடங்கி கிடந்தது இல்லை. அவன் மாணவனாக இருந்தபோதே ஓர் அர்ஜென்டைன் கப்பலில் மாலுமியாக சேர்ந்து ட்ரினிடாட்டில் இருந்து பிரிட்டிஷ் கயானா வரை பல நாடுகளுக்கும் சுற்றினான். பின்னர் கிறானோடாசுடன் சேர்ந்து தென் அமெரிக்காவின் பாதி பகுதியை சுற்றினான், சரியாக சொல்வது எனில் நடந்தே சுற்றினான். 

(இப்போது லாவரெட்ஸ்கி தன்னிடம் இருந்த காகிதங்களில் இருந்து 1950 மே 5 தேதியிட்ட El Grafico என்ற அர்ஜென்டினா நாளிதழில் வெளிவந்த ஒரு விளம்பரத்தை வாசிக்கின்றார், சேயின் தந்தை கேட்கின்றார்) : 1950 பிப்ரவரி மாதம் 23, செனோரேஸ், Micron Moped Firm நிறுவனத்தின் பிரதிநிதியான நான் உங்களுக்கு, நீங்கள் வலம் வருவதற்காக ஒரு மைக்ரோன் மொபெட்டை அனுப்புகின்றேன். நான் இதில் அமர்ந்து 12 அர்ஜென்டைன் மாநிலங்கள் வழியாக 4000 கிலோமீட்டர்கள் பயணம் செய்தேன். அப்பயணம் முழுவதும் இந்த மொபெட் எவ்வித தடங்கலும் இன்றி வேலை செய்தது. இதில் ஒரு குறையைக்கூட என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதில் பயணம் செய்த பின், புறப்படும் போது எவ்வாறு இருந்தேனோ அதே நிலையிலேயே திரும்பி வந்து சேர்ந்தேன் என்று கூறுகின்றேன். எர்னெஸ்டோ குவேரா செர்னா (கையொப்பம்).

தொடர்ந்து சேயின் தந்தை கூறுகின்றார்: .... டேட்டிக்கு அப்போது வயது பதினொன்று, ராபெர்டோவுக்கு எட்டு. இருவரும் வீட்டில் இருந்து காணாமல் போனார்கள். காற்றில் கரைந்தது போல எங்கேயும் அவர்களை பார்க்க முடியவில்லை.... போலீசுக்கு தகவல் கொடுத்தோம்... 800 கிலோமீட்டர்க்கு அப்பால் அவர்களை கண்டுபிடித்தார்கள். ஒரு ட்ரக் வண்டியின் பின்னால் கட்டணம் இன்றி பயணம் செய்துள்ளார்கள்.... .... ஒருமுறை கிறேனாடோசும் அவனும் எழுதிய கடிதத்தை பெறும்போது நாங்கள் கனத்த இதயத்தோடும் கலக்கத்தோடும் இருந்தோம். தென் அமெரிக்காவில் பயணித்த காலத்தில் அவர்கள் சென்று இருந்த தொழுநோயாளிகள் காலனியைப் பற்றி விவரித்து எழுதி இருந்தார்கள். ஒரு சமயம் பெருவில் இருந்து எழுதிய கடிதத்தில் அவனும் ஆல்பர்ட்டோவும் கட்டுக்கு அடங்காத காட்டாற்று வெள்ளம் பாயும் அமேசான் நதியில் தொழுநோயாளிகள் வழங்கியிருந்த ஒரு தெப்பத்தில் ஏறிப்பயணம் செய்வதாக எழுதி இருந்தான். ஒரு மாதத்துக்குள் என்னிடம் இருந்து கடிதம் ஏதும் வரவில்லை எனில் நாங்கள் முதலைகளுக்கு இரையாகி விட்டோம் அல்லது ஜிப்ரோ இந்தியர்களுக்கு உணவாகப் பரிமாறப்பட்டு விட்டோம் என்றோ எங்கள் தலைகள் அமெரிக்க சுற்றுலா பயணிகளுக்கு விற்கப்பட்டு விட்டன என்றோ ஊகம் செய்து கொள்ளுங்கள். அப்படி ஏதும் நடந்தால் பாடம் செய்யப்பட்ட எங்கள் தலைகளை நியு யார்க் நகரில் அழகுப்பொருட்கள் விற்கும் கடைகளில் நீங்கள் பார்த்துக்கொள்ளுங்கள் என்று எழுதி எங்களுக்கு சிரிப்பூட்ட முயற்சி செய்து இருந்தான்.

பின்னர் அவன் மெக்சிகோவில் இருந்து எழுதிய கடிதத்தில், தான் பிடல் காஸ்ட்ரோவுடன் சேர்ந்துவிட்டதாகவும் பாடிஸ்ட்டாவை எதிர்த்துப் போராட கியூபாவுக்குப் போவதாகவும் சொல்லி இருந்தான்.

... .... ....

உதவிய நூல்: எர்னெஸ்டோ சே குவேரா, ஆசிரியர்: I Lavretsky, தமிழில்: சந்திரகாந்தன்

வெளியீடு: NCBH, 1986

ஈ எம் எஸ்: ஓர் இந்தியக் கம்யூனிஸ்டின் நினைவலைகள்

.... ... கேரள அரசாங்கம் செயல்பட்டதன் கடைசி சில வாரங்களில் இதைக் காண முடியும். அச்சமயத்தில் "கம்யூனிஸ்ட் அரசாங்கத்தின் வேலையை முடக்கி விடுவது" என்ற அப்பட்டமான நோக்கத்துடன் கேரளாவில் இருந்த கம்யூனிஸ்ட் எதிர்ப்பாளர்கள் இறுதியான "விடுதலைபோராட்டத்"திற்கு (விமோசன சமரம்) தங்களை தயார் படுத்திக்கொண்டு இருந்தனர். இங்கே பயன்படுத்தப்பட்ட முறைகள் வேறெந்த மாநிலத்திலாவது காங்கிரஸ் அல்லாத எதிர்க்கட்சியால் பயன்படுத்தப் பட்டிருந்தால் அவை "வன்முறை, அரசியல் சட்டத்துக்கு விரோதமானவை" என்றும் நிந்திக்கப்பட்டு இருக்கும். அவ்வாறு இருந்தும் அந்தப் போராட்டங்கள் காங்கிரஸ் "உயர்தலைமை"யின் ஆசீர்வாதத்தை பெற்று இருந்தன. அந்த உயர்தலைமையானது பிரதமரின் மகள் இந்திரா காந்தியை பெயரளவுக்கு காங்கிரஸின் தலைவராக கொண்டிருந்தது. பிரதமரும் (ஜவஹர்லால் நேரு) தன்னுடைய பொறுப்பை தட்டிக் கழித்துவிட முடியாது. உண்மையில் அவர் மட்டும் இதை உறுதியாக கண்டித்து இருப்பாரே ஆனால் (வேறெந்த மாநிலத்தின் காங்கிரஸ் அரசாவது இத்தகைய நிலைமையை எதிர்நோக்க வேண்டி இருந்தால் அவர் செய்திருக்க கூடியதைப்போல்)  கேரளாவில் எந்த ஒரு "விடுதலைபோராட்டமும்" இருந்திருக்காது.... கேரளாவின் கம்யூனிஸ்ட் எதிர்ப்பு ஐக்கிய முன்னணி மற்றும் "விடுதலைபோராட்டத்தில்" நேரு வகித்த பங்கானது தன்னை ஒரு "மிதவாதி" என்றும் "சமூக ஜனநாயகவாதி" என்றும் முகமூடி தரித்துக்கொண்டு, எதிர்க்கட்சி குறித்து சகித்துக்கொள்ளாத அப்பட்டமான முதலாளித்துவ தலைவர் அவர் என்று கணிப்பதில் இருந்து தவற முடியாது. அவருடைய வாழ்க்கை முழுவதும் எதிர்த்து வந்த முஸ்லீம் லீகுடன் அவருடைய கட்சி கூட்டு சேர்ந்ததை அவர் நியாயப்படுத்த முடியாது. ....."பலரை நாங்கள் விரோதித்துக் கொண்டோம்" என்று தனிப்பட்ட முறையில் எங்களிடம் கூறிய அவர், பகிரங்கமாக பேசும்போது "எங்களுடைய கட்சிக்கும் அதன் அரசுக்கும் எதிராக பெரும் "வெகுஜன எழுச்சி" ஏற்பட்டு இருப்பது தன்னை மிகவும் ஆகர்சித்து இருப்பதாக பிரகடனம் செய்தார். மாநிலத்தின் மக்கள் ஒருவரை எதிர்த்து ஒருவர் இரண்டு விரோதமான முகாம்களில் அணி திரண்டிருக்கும் நிலைமைக்கு ஒரு தீர்வாக , சட்டமன்றத்திற்கு புதிய தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று யோசனை தெரிவித்தார்....

நேரு இப்போது சொல்லும் "வெகுஜன எழுச்சி" என்பது, 25 வருடங்களுக்கு முன் ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டத்தில் உருவானதும் அவர் தலைமை தாங்கி இருந்ததும் ஆன தீவிர எழுச்சி அல்ல. அச்சமயத்தில் எழுந்த அந்த எழுச்சி பிரிட்டிஷ் ஏகாதிபத்தியதிற்கு எதிராக இருந்தது போலவே உள்நாட்டு பிற்போக்கு சக்திகளுக்கும் எதிராக நடத்தப்பட்டதாகும். அன்று இளம் காங்கிரஸ்காரர்களாக இருந்த எங்களுக்கு தலைமை தாங்கி இருந்தபோது எந்த உள்நாட்டு பிற்போக்கு சக்திகளுக்கு எதிராக எங்களை வழி நடத்தினாரோ அதே பிற்போக்கு சக்திகள் இப்போது எங்களுக்கு எதிராக அணிதிரண்டு அவருக்குப் பின்னால் நின்று இருந்தன.... .... ஒரு சில வருடங்களுக்கு முன்பு, 1952ஆம் வருட தேர்தல்களில் அவர் முஸ்லீம் லீக்கை "ஒரு செத்த குதிரை" என்று வர்ணித்தார். இன்று கம்யூனிஸ்ட்களை தோற்கடிப்பதற்காக அதே குதிரையின் மீதே சவாரி செய்கின்றார். இப்போது அவர் பயணம் செய்யும் இதர "குதிரைகள்" எவையெனில், ஏதாவது ஒரு ஜாதியின் "நலன்களுக்காக" வாதாடும் கிறிஸ்தவ சர்ச்சுகள், நாயர் ஆகிய இதர சாதிய அமைப்புகளே ஆகும். முப்பது வருடங்களுக்கு முன்பு தீவிரவாதியாக இருந்த நேரு, இந்த சாதிய அமைப்புகளில் ஏதாவது ஒன்றை ஒரு குச்சியால் கூட தொட்டு இருக்கமாட்டார். ஆனால் "விடுதலைபோராட்டம்" மூலம் தூக்கியெறியப்பட்ட, சபிக்கப்பட்ட கம்யூனிஸ்டுகள், இடைக்கால தேர்தலில் மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்பதை உத்தரவாதம் செய்வதற்காக பிரதமர் நேரு இத்தகைய அனைத்து சாதியக்கட்சிகளையும் தன் கட்சிக்குப் பின்னால் அணி திரட்டிக் கொண்டு இருக்கின்றார்.

... அவர் எங்களிடம் தனிப்பட்ட முறையில் கூறியபடி, "நாங்கள் யாரை விரோதித்துக் கொண்டோம்"? எங்களுடைய விவசாய உறவுகள் மசோதாவுக்கு எதிராக முஷ்டியை உயர்த்திய நிலப்பிரபுக்கள்;  ஆசிரியர்களையும் இதர ஊழியர்களையும் வேலையில் அமர்த்துவதிலும் டிஸ்மிஸ் செய்வதிலும்  தன்னிச்சையாக நடந்து கொள்ளாமல் ஒழுங்கு விதிகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று நாங்கள் வற்புறுத்திய தனியார் கல்வி நிலையங்களின் நிர்வாகிகள், நிர்வாகங்கள்; தொழிலாளர்களின் விவசாயிகளின் சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை ஒடுக்குவதற்காக கடந்தகாலத்தில் தாங்கள் கூப்பிட்ட குரலுக்கெல்லாம் போலீஸ் படைகளை ஓடி வரச்செய்தது போல இனியும் அவ்வாறு ஆட்டுவிக்க முடியாத கிராமப்புற, நகர்ப்புற பெருந்தனக்காரர்கள்; கடந்த காலத்தில் அருவருப்புடன் பார்க்கப்பட்ட "அடித்தட்டு மக்கள்", புதிய அரசு நிர்வாகத்தால் தங்களுக்கு சமமாக நடத்தப்படுவதை சகித்துக்கொள்ள முடியாத நகர்ப்புற, கிராமப்புற சமூகத்தின் வசதி படைத்த பகுதியினர் - இவர்கள்தான்.

...சட்டமன்றத்தில் எங்களுக்கு பெரும்பான்மை இருந்தபோதிலும் நாங்கள் பதவியை விட்டு விலக வேண்டும் என்ற கோரிக்கையை தவிர அது வேறொன்றும் இல்லை. அவரது அரசு கொடுத்த ஆலோசனையின்படி குடியரசுத்தலைவர் எங்களுடைய அரசை டிஸ்மிஸ் செய்து புதிய தேர்தல் நடத்த உத்தரவிட்டார். நாங்களாகவே பதவி விலக வேண்டும் என்ற அவரது ஆலோசனைக்கு பின் இருந்த அவரது உண்மையான நோக்கத்தை இந்த நடவடிக்கை வெளிப்படுத்தி விட்டது. அதாவது நாங்களாகவே பதவி விலகி இருந்தால், சட்டமன்றத்தில் பெரும்பான்மை பெற்றிருக்கும் ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசை (நேரு) கலைத்தார் என்ற அவப்பெயரில் இருந்து அவரைக் காப்பாற்றி இருக்கும். இந்தக் கூட்டம்தான் காங்கிரசுக்கு பின்னால் அணி திரண்டு, நேரு மிகவும் பாராட்டிய "வெகுஜன எழுச்சி"யை உருவாக்கியவர்கள்.

.... ....

ஓர் இந்தியக் கம்யூனிஸ்டின் நினைவலைகள் (Reminiscenes of an Indian Communist) என்ற நூலில் இருந்து சில பகுதிகள்.

ஆசிரியர்: ஈ எம் எஸ் நம்பூதிரிபாட்

தமிழில்: என் ராமகிருஷ்ணன்

1988 வெளியீடு, சென்னை புக் ஹவுஸ் பி லிட், சென்னை 600002

416 பக்கங்கள், அன்றைய விலை ரூ.35.

... ... ....

(வாசிப்பின் ஓட்டம் கருதி பத்திகளை சற்றே முன் பின்னாக இங்கே மாற்றி அமைத்துள்ளேன்)