செவ்வாய், செப்டம்பர் 21, 2021

1921 மாப்பிளா கிளர்ச்சியும் அந்தமானும்


1921  பற்றி Conrod Wood எழுதிய Moplah rebellion and it's Genesis என் நூலை மாப்ளா கிளர்ச்சியும் அதன் தோற்றுவாயும் என்று நான் தமிழாக்கம் செய்த நூல் 2007இல் அலைகள் பதிப்பக வெளியீடாக வந்தது.

அக்கிளர்ச்சி படுகொலைகள் மூலம் கொடூரமாக அடக்கப்பட்ட பின் சில ஆயிரம் மாப்பிளா மக்கள் அந்தமானுக்கு குடியேற்றம் செய்யப்பட்டார்கள். ஆறு வருடங்கள் முன் அந்தமானுக்கு சுற்றுலா சென்றிருந்தேன். கொடிய காலத்தின் சுவடான செல்லுலார் சிறையை பார்த்தேன். 60000 வருடங்களுக்கு முன் ஆப்பிரிக்க கண்டத்தில் இருந்து கடல் வழியே பயணித்த நம் மூதாதையர் அந்தமானில் குடியேறியதாக மானுடவியல் வரலாறு சொல்கின்றது. ஆறு ஆதிவாசி இன மக்கள் இப்போதும் அந்தமானில் வசிக்கின்றார்கள். இன்று நாம் சுற்றுலா தலமாக கருதும் அந்தமான், வெறும் கரடு முரடான பிரதேசமாக இருந்துள்ளது எனில் அத்தீவை செப்பனிட்டு செம்மையாக்கி மனிதன் வாழத்தகுந்த பூமியாக மாற்றியது யார் என்ற கேள்வி உள்ளது. Maddy என்னும் மலபார் நண்பர் ஹிஸ்டாரிக் அல்லேய்ஸ் historic alleys என்னும் தன் வலைப்பூவில் மலபார், அம்மக்கள், பண்பாடு, மலபாரின் சில நூற்றாண்டு வரலாறு, மாப்பிளா கிளர்ச்சி, மாப்பிளா மக்கள் குறித்து மிகப்பல அரிய தகவல்களை ஆங்கிலத்தில் பதிவிட்டு வருகின்றார். அவரது ஒரு பதிவின் தமிழாக்கம் இது.

..... ...... ....

TSS மஹாராஜா என்ற அக்கப்பல் 1879இல் கட்டப்பட்டது. இம்முறை அக்கப்பல் இதுவரை சென்றிடாத ஒரு புது வழியில் பயணம் சென்றது. தெற்கில் மெட்றாஸ் நோக்கிய பயணம். கப்பலில் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இருந்தார்கள், அனைவரும் பிரிட்டிஷ் அரசால் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டவர்கள். கூடவே பெருமளவு மளிகை சாமான்களும் கல்கத்தாவி ஏற்றப்பட்ட பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின், தபால் தந்தி துறையின் கடித மூட்டைகளும் இருந்தன. மெட்றாஸ் துறைமுகத்தில் கப்பல் நின்றபோது, அழுக்கடைந்த வேட்டி கட்டிய ஒரு கூட்டம் ஏறியது. கூடவே அவர்கள் சுமந்துகொண்டு வரும் சுமைகள். அவர்களில் பெரும்பாலோர் பெல்லாரியில் இருந்து கொண்டுவரப்பட்ட மாப்பிளா சமூகத்தை சேர்ந்த குற்றவாளிகள். வெப்பம் மிகுந்த கப்பலின் கீழ்த்தளத்தில் அவர்கள் தங்கவைக்கப்பட்டனர். பலர் கப்பலில் இருந்த சிறையில் அடைக்கப்பட்டார்கள். பரந்து விரிந்த நீலத்திரைக்கடலான வங்காள விரிகுடாவில் கப்பல் பயணத்தை தொடர்ந்தது. மாப்பிளாக்களில் சிலர், தங்களை ஆஸ்திரேலியாவில் உள்ள பாட்டனி வளைகுடாவுக்கு Botany Bay கொண்டு செல்கின்றனர் என்றும் வேறு சிலரோ சிங்கப்பூர் அல்லது மொரீசியஸ்க்கு கொண்டு செல்கின்றனர் என்றும் பேசிக்கொண்டார்கள். வேறு சிலரோ, தாங்கள் இனி என்றுமே திரும்பி வராத கருப்பு நீர்த்தீவுக்கு (காலாபாணி Kalapani, அதாவது ஹிந்தி மொழியில் கருப்பு நீர் என்றும் ஆயுளுக்கும் தண்டனை அனுபவிக்க போகின்றவர்கள் என்றும் பொருள்) சென்றுகொண்டிருப்பதாக உறுதியாக நம்பினார்கள். சிலர் கூண்டுகளில் அடைக்கப்பட்டார்கள், மற்றவர்கள் கப்பலின் தளத்திலோ காலி பங்கர்களிலோ உட்காரவோ படுத்துக்கொள்ளவோ அனுமதிக்கப்பட்டார்கள். மஹாராஜா தன் பயணத்தை தொடர்ந்தார். அந்தமான் நிக்கோபார் தீவுகளின் போர்ட் ப்ளேயர் என்னும்   தண்டனைக்குடியேற்றம் நோக்கி, ஆயுளுக்கும் இனிமேல் மீண்டு வர முடியாத தண்டனை த்தீவை நோக்கி ஒருவழிப்பயணம் மேற்கொண்டார்கள்.

இங்கே இவ்வாறு குடியேற்றம் செய்யப்பட்ட மாப்பிளாக்கள், மலபாரின் எரநாட்டை சேர்ந்த மக்கள், தொடர்ந்து அத்தீவுகளில் வசிக்குமாறு காலம் கட்டாயப்படுத்தியபோது, தங்கள் சொந்த கேரள மண்ணின் ஊர்களின் பெயர்களையே இந்த ஊர்களுக்கும் சூட்டினார்கள் - காலிக்கட், வாண்டூர், மன்னார்கட், திரூர், மஞ்சேரி என.

இப்போதோ காலிக்கட் என்ற பெயர் வரலாற்று ஏடுகளிலும் மூத்த குடிமக்களின் நினைவிலும் மட்டுமே உள்ளது, ஏனெனில் கேரளாவின் காளிக்கட், கோழிக்கோடு என்று பெயரை மாற்றிக்கொண்டுவிட்டது. ஆக இப்போது உலக வரைபடத்தில் இருக்கின்ற காளிக்கட் என்ற ஊர் கேரளாவில் இல்லை, மாறாக தெற்கு அந்தமான் தீவுகளில் தலைநகர் போர்ட் ப்ளேயருக்கு வடக்கே 20 கிமீ தொலைவில் உள்ளது!

தமது அரசுக்கு தொந்தரவாக இருக்கின்றவர்களை குற்றவாளிகள் என அறிவித்து தனிமைப்படுத்த மட்டுமே 18ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷார் கண்டுபிடித்த ஒரு தீவுதான் அந்தமான் தீவுகள். இரண்டாவது உலகப்போரின் போக்கில் 1942-45 காலகட்டத்தில் ஜப்பானியர் வசம் இத்தீவு இருந்தபோது நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இத்தீவுக்கு வந்துள்ளார். இந்திய தேசிய ராணுவத்தின் INA கொடியை அங்கே ஏற்றினார். கோழிகோட்டின் எரநாடு மாப்பிளாக்களை ஆயுள்தண்டனை கைதிகளாக இங்கே குடியேற்றியது பிரிட்டிஷ் ஆட்சி. ஆக இத்தீவை தண்டனைக்குடியேற்றமாக மட்டுமே பிரிட்டிஷார் பயன்படுத்தினார்கள்.

தொடக்கத்தில், குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட வெள்ளையர்களை ஆஸ்திரேலியாவில் உள்ள பாட்டனி வளைகுடாவுக்கு Botany Bay நாடு கடத்தினார்கள். குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட இந்தியர்களை அந்தமான் தீவுக்கும் கரக்பூர் அருகிலுள்ள ஹிஜிலி கேம்புக்கும் Hijli Camp அனுப்பினார்கள். அவை கொடும் தண்டனைக்குரிய சிறைகள். பின்னாட்களில் சிங்கப்பூருக்கும் பாட்டனி வளைகுடாவுக்கும் அனுப்பி அந்த பூமிகளை கைதிகளை கொண்டே செப்பனிட்டார்கள். கைதிகள் மிகக்கடுமையான உழைப்பை செலுத்தினர். இந்தியர்களின் காய் கால்களில் எப்போதும் இடப்பட்டு இருந்த சங்கிலிகள் எழுப்பிய க்ளிங் என்னும் ஓசை காரணமாக, இந்தியர்களை அங்கே இருந்தோர் க்ளிங் என்று அழைத்ததாகவும் தெரிகின்றது.

சாதிய மனநிலையில் ஊறிய இந்து மத்திய தர வர்க்க அரசியல் கைதிகள் உடலுழைப்பு அனுபவம் இல்லாதவர்கள். மேலும் இந்துமத நம்பிக்கை, கடல்கடந்து பயணிப்பது பாவம் என்று சொல்கின்றது. இவை இரண்டும் வெள்ளையர்கள் சிந்தனையில் 'இவர்களுக்கு இப்படி ஒரு தீவாந்தர தண்டனையை கொடுத்தால் என்ன' என்று சிந்திக்க தூண்டியது.

அந்தமானை ஒரு தண்டனைக்குடியேற்றமாக penal settlement மாற்றும் திட்டம், கிழக்கிந்திய பகுதியில் ஒரு கடல் வழியை கண்டறிந்தபின் 1789இல் தொடங்கியது. ஆனால் குடியேற்றத்துக்குப்பின் தீவில் சந்தித்த கொடும் நோய்கள், ஒத்துக்கொள்ளாத புதிய தட்பவெப்ப சூழல் ஆகியவற்றால் நிகழ்ந்த மரணங்களுக்கு பிறகு 1796இல் கைவிடப்பட்ட து. அடுத்த 60 வருடங்களும் சமகால மனிதர் தீண்டாத தனி தீவாகத்தான் அந்தமான் இருந்தது. 60000 வருடங்களுக்கு முன் அங்கே குடிபுகுந்த நம் மூதாதையர் ஆன ஆதிவாசிகள் ஏற்கனவே அங்கே இருக்கின்றனர் என்பதை கவனத்தில் கொள்கின்றேன். 1857 சிப்பாய் கிளர்ச்சிக்கு பின் இந்தியாவில் நிகழ்ந்த அரசியல் போக்குகள் காரணமாக அரசியல் கைதிகளின் எண்ணிக்கை அதிகரிக்க, சிறைகளில் இடம் இல்லாமல் போனது. 1858க்கு பிறகு அந்தமானில் மீண்டும் குடியேற்றம் தொடங்கியது. மூன்றாம் வகுப்பு, அதற்கு கீழான நிலையில் இருந்த கைதிகள், அரசின் கஜானாவுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத கைதிகளை கொண்டு தீவை செப்பனிட தொடங்கினார்கள். தீவின் பழங்குடிகளை அவர்களது பாரம்பரிய இடங்களில் இருந்து வெளியேற்றினார்கள். ஓரளவு கட்டுமானங்கள் உருவானபின் மூன்றாம் வகுப்பு கைதிகள் இரண்டாவது நிலைக்கு உயர்த்தப்பட்டார்கள், காவலில் இருந்து விடுவிக்கப்பட்டு வெளியே உள்ள நிலப்பரப்பில் தங்கி வாழ அனுமதிக்கப்பட்டார்கள். இது சற்றே நிம்மதியான வாழ்க்கையாக இருக்கவே, இந்தியாவில் தங்கள் சொந்த ஊர் மக்களுக்கு இச்செய்தியை தெரிவிக்கவே, அந்தமானுக்கு குடிபுக கைதிகள் தாமாகவே முன்வந்தார்கள்! இப்படி ஒரு சூழ்நிலையை எதிர்பார்க்காத நிர்வாகம், கெடுபிடிகளை அதிகரித்தது. இதன் பின்னர்தான் நட்சத்திர மீன் வடிவிலான செல்லுலார் சிறை கட்டும் திட்டம் உருவானது. இங்கே அரசின் ஆதரவில் மட்டுமே வாழ முடிந்த கைதிகளையும் கொடும் கிரிமினல் குற்றவாளிகளையும் அடைக்க திட்டமிட்டார்கள்.

1910இல் கட்டி முடிக்கப்பட்ட செல்லுலார் சிறையில் 698 தனியறைகள் இருந்தன. 15x9 அடி பரப்பளவு, 10 அடி உயரத்தில் ஒரு ஜன்னல். இங்கே ஒருமுறை வந்த எவரும் மீண்டும் வெளியே வருவதும் தீவில் இருந்து தப்பிக்க முயற்சிப்பதும் கனவிலும் நடக்காதது. 6 மாத தனிமைச்சிறை, பின் நான்கரை வருட கூட்டுழைப்பு, பின் 5 வருடக்கூலி உழைப்பு, அடுத்த 10-15 வருடங்களுக்கு தன்னைத்தானே சமாளிக்கும் திறனுடன் அரசின் உதவியோடு தீவில் வீடு கட்டிக்கொண்டு வசிப்பது, இதன் பின் சொந்த ஊருக்கு திரும்பலாம்.

பெண் கைதிகளுக்கு மூன்று வருட தண்டனை, அதன் பின் தீவிலுள்ள யாரையாவது திருமணம் செய்துகொள்ளலாம், அல்லது 15 வருடங்களுக்கு பிறகு சொந்த ஊர் திரும்பலாம், அல்லது கணவனின் தண்டனைக்காலம் முடியும்வரை காத்திருக்கலாம். டேவிட் பாரி David Barry என்ற சிறை கண்காணிப்பாளர் மிக கொடூரமான மனிதனாக இருந்துள்ளான். குறிப்பாக அரசியல் கைதிகளை தொடக்க காலத்தில் மிகக்கொடுமையாக நடத்தியுள்ளான், தாங்கள் பிறந்ததே பாவம் என்று கைதிகள் குமைந்து வருந்தும் அளவுக்கு கொடுமைகள் இழைத்துள்ளான்.

1924 பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் சிம்ப்சனுக்கு ரிச்சர்ட் அளித்த பதில்: கடந்த ஜூலையில் போர்ட்பிளேயரில் மட்டும் 1235 மாப்பிளாக்கள் இருந்தார்கள். 72 பேர் செல்லுலார் சிறையில், 12 பேர் விடலைகள், 40 பேர் விவசாயிகள், தங்கள் வாழ்க்கையை தாங்களே சமாளித்து கொள்பவர்கள், மீதியுள்ளோர் கைதிகள் அடைக்கப்படும் இடத்தில். மாப்பிளாக்களை பிற கைதிகளிடம் இருந்து பிரிக்கும் எந்த திட்டமும் இல்லை. ஆனால் தொடக்க காலத்தில் செல்லுலார் சிறைவாச காலம் அடிக்கடி குறைக்கப்பட்டது. அந்தமானில் வாழ்வதற்கு, தனியாகவோ குடும்பத்துடனோ, விருப்பப்பட்டால் அதற்கு அரசு அனுமதி வழங்கியது, தீவுக்கு வருவோரின் பயணச்செலவை அரசே ஏற்றுக்கொண்டது. 

மலபாரில் இருந்து அந்தமானுக்கு வந்தவர்கள் 1133 கைதிகள். இவர்களில் 379 பேருக்கு 'தம் வாழ்க்கையை தாமே சமாளித்துக்கொள்ளும் வல்லமை உடையவர்கள்' என்ற தகுதியை நிர்வாகம் 1926இல் வழங்கியது. அந்தமானை தண்டனை குடியேற்றம் என்ற நிலையில் இருந்து சுயவிருப்ப குடியேற்றம் voluntary settlement என்று பிரிட்டிஷ் அரசு உயர்த்தியது. மனைவியருக்கும் உறவினருக்கும் பயணக்கட்டணத்தை அரசே வழங்கியது. பண்டிகைகள் கொண்டாட, வழிபாட்டு தலங்கள் கட்டிக்கொள்ள அனுமதிக்கப்பட்டது.

அரசின் முதலாவது அறிக்கையின்படி, 1302 கைதிகளில் 90 பேர் இறந்தனர், 79 பேர் இந்தியாவில் சொந்த ஊருக்கு திரும்பினர், மீதி 1133 பேரில் 754 பேர் உடலுழைப்பு கைதிகள், 379 பேர் தங்களை தாங்களே சமாளித்து கொள்பவர்கள். மற்றொரு அறிக்கையின்படி 1932இல் மாப்பிளாக்கள் என்போர் 1885 கேரள முஸ்லிம்கள். இவர்கள் காலனிய அரசுக்கு எதிராகவும் இந்து மத நிலச்சுவான்தார்களுக்கு எதிராகவும் மாப்பிளா கிளர்ச்சியை நடத்தியவர்கள் (Dhingra, 2005:161). இவர்களை மறுசீரமைக்கவே 1921-26 காலக்கட்டத்தில் அந்தமானுக்கு கொண்டுவந்தார்கள், விவசாய நிலத்தில் குடியேற்றப்பட்டார்கள் (Mukhopadhyay, C, 2002:29). தம் சொந்த மதத்தை பின்பற்றவும் சொந்த ஊரின் பண்பாட்டை பின்பற்றவும் அனுமதிக்கபட்டார்கள். 1920களில் தம் சொந்த ஊரின் மலையாள மொழி உரையாடலின் சாயலையே இங்கும் பேசினார்கள் என சான்றுகள் தெரிவிக்கின்றன. இன்றுள்ள அந்தமானில் நாம் பார்க்கும் முஸ்லிம்களில் மிகப்பெரும்பான்மையோர் மாப்பிளா சமூக மக்களே. 1921இல் தொடங்கிய இந்த இடப்பெயர்ச்சி 1926இல் முடிந்தது. 1931 மக்கள்தொகையின்படி, 1885 மாப்பிளாக்கள் இருந்துள்ளார்கள், 1171 ஆண்கள், 714 பெண்கள். பிற தகவல்கள், 2500 பேர் அங்கே குடியேறினர் என்று சொல்கின்றன. தண்டனைக்காலம் முடிந்த பிறகும் கூட கேரளா திரும்பாமல் தம் குடும்பங்களை அங்கே அழைத்துக்கொண்டனர். ஆக அந்தமான் தீவுகளை செப்பனிட்டு பல கிராமங்களை உருவாக்கியதில் மாப்பிளாக்களின் பங்கு மிகப்பெரியது.

ஒரு கைதி தன் தாயாருக்கு எழுதிய கடிதம் மூலம் ஒரு விசயம் தெரியவந்தது. 1925 ஜூன் 20 அன்று 25 மாப்பிளாக்கள் மலபாருக்கு அனுப்பப்பட்டார்கள். அவர்கள் அந்தமானில் இருந்த தண்டனைக்கைதிகளின் குடும்பத்தை தேடி வந்தார்கள். விளைவாக 300 குடும்ப உறுப்பினர்கள் அந்தமானுக்கு இடம் பெயர்ந்தார்கள். அதே கைதி இரண்டு மாதங்களுக்கு பின் எழுதிய கடிதத்தில், பெங்களூருக்கு அருகில் உள்ள பெல்லாரி சிறையில் இருந்த 400 கைதிகள் தம் குடும்பத்தாருடன் அந்தமானுக்கு குடியேற விண்ணப்பித்த விவரம் உள்ளது. அந்தமானில் மவுண்ட் ஹாரிட் Mt.Harrit க்கு மேற்கே உள்ள கிராமங்களில் குடிபுகுந்தார்கள். தங்களது கிராமங்களுக்கு தமது சொந்த (கேரள) மண்ணின் கிராமப்பெயர்களையே சூட்டினார்கள் என்பதை தொடக்கத்தில் பார்த்தோம்.

தெற்கு அந்தமான் பகுதி இவ்வாறான கைதிகளால் குடியேற்றமானது. விரைவிலேயே மேலும் பல மாப்பிளாக்கள் இரண்டாம் தரத்துக்கு உயர்த்தப்பட்டு தங்களை தாங்களே சமாளித்துக்கொள்ளும் வல்லமை பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டார்கள். ஆனால் கொடும் சிறைகொடுமைகளுக்கு எதிராக போராட்டங்கள் வெடித்து நிலைமை மோசமானது. 1939இல் நிலைமை கட்டுக்குள் வந்தது. ஆனால் இரண்டாம் உலகப்போர் தொடங்கியபின்னும் போரில் ஜப்பான் 1941இல் இறங்கிய பின்னும் அந்தமானில் நிலைமை முற்றிலும் தலைகீழானது. போர்ட்பிளேயர் மீது ஜப்பானியர் 1942இல் குண்டு வீசினர். மார்ச் 1942இல் பிரிட்டிஷ் நிர்வாகம் வெளியேறியது, ஜப்பானியர் வசம் வந்தது. அப்போது 6000 கைதிகளும் அந்தமானிலேயே பிறந்த 12000 குடிமக்களும் இருந்தார்கள். தொடக்கத்தில் அனைத்துக் கைதிகளையும் விடுதலை செய்த ஜப்பானியர் பின் வந்த நாட்களில் இந்தியர்களை கொடுமை செய்தனர். உணவுப்பற்றாகுறையை சரிக்கட்டவே இந்த கொடுமைகள் நடந்தன. இதற்கு Operation Baldhead என்று திட்டமிடப்பட்டது. பிரிட்டிஷாருக்கு ஆதரவானவர்கள் என்று சந்தேகிக்கப்பட்ட அனைவரையும் ஜப்பானியர் சுட்டுக்கொன்றனர்.


காலம் ஓடியது. அந்தமானின் மக்கள்தொகையில் பெரும்பகுதியாக மாப்பிளாக்கள் இருந்தனர். சிலர் தமது கடந்தகால வரலாற்றை நினைவுகூர மற்றவர்கள் அது குறித்து பேச விரும்பவில்லை. மதமும் விவசாயிகள் போராட்டமும் பிணைந்து ஒரு கிளர்ச்சியை நோக்கி இட்டுச்செல்ல, விளைவாக பல அப்பாவிகள் உயிரையும் உடைமைகளையும் இழக்க, இறுதியாக தம் சொந்த மண்ணில் இருந்து பல நூறு மைல்கள் தொலைவில் உள்ள தீவில் வந்து குடியேற, இக்கொடுங்கதையை நினைப்பதை விடவும் மறப்பது எளிது என்று அவர்கள் நினைத்திருக்கக்கூடும்.

மிகச்சரியாக சொன்னால், அந்தமான் என்றாலே இப்போதும் அது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு எதிராகப் போராடியவர்களை நாடுகடத்தி சிறைவைக்க பயன்பட்ட ஒரு தீவாகவே அறிகின்றோம். ஆனால் Strange இன் கூற்று வேறுமாதிரி உள்ளது: அங்கே அரசியல் கைதிகளாக குடியேற்றப்பட்டவர்கள் சுமார் 500 பேர் மட்டுமே. அவர்களில் பலரும் பின்னர் மையப்பகுதி இந்தியாவுக்கு திரும்பிவிட்டார்கள். மாப்பிளா சமூகம் உள்ளிட்ட பிற சாதாரண கைதிகள் பல்லாயிரம் பேர்கள்தான் அந்தமானில் நிரந்தரமாக குடியேறியவர்கள், இன்று நாம் பார்க்கும் அழகிய தீவுகளை உருவாக்க உழைத்து சோர்ந்தவர்கள் இவர்கள்தான்.

- மு இக்பால் அகமது

புகைப்படங்கள்: அந்தமான் சிறையும் ஒரே நேரத்தில் மூவரை தூக்கில் இடக்கூடிய கொட்டடியும் (படங்கள் நான் எடுத்தவை)



கருத்துகள் இல்லை: