வாசிப்பும் எழுத்தும் 2020இல் மார்ச்சுக்கு பிறகு இருந்தது போல இல்லை. அப்படி எல்லாம் இல்லை, எப்பொதும்போல்தான் என்பவர்களின் சித்தத்தை போற்றுவோம்.
இன்று ஆசிரியர் ஒருவரிடம் பேசிக்கொண்டு இருந்தபோது வாழ்க்கைப் பயணத்தில் கோரோனா pause பட்டனை அழுத்திவிட்டது என்றார். உண்மைதான். பயணங்கள், நினைத்த நேரத்துக்கு நினைத்த நேரத்தில் சென்று வருவது எல்லாம் இயலாமல்... வாசிப்பும் எழுத்தும் கதி என்று கிடந்தவர்கள் பத்து பதினைந்து பக்கத்துக்கு மேல் நகர மாட்டேங்குது என்று முகநூலில் புலம்புகின்றார்கள். எனக்கும் அப்படியே. வேறு வழியில்லை, ஒரு நோய்த்தொற்று நம் மனநிலையை ஆட்டுவிக்க, நம்மை முடக்க நாம் அனுமதித்து விடலாமா என்ற கேள்வியை எழுப்பிக் கேட்டுக்கொள்ள வேண்டியுள்ளது. என்ன செய்யலாம்? முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும். வாசிப்பும் எழுத்தும்தான் நம்மை மீட்கும்.
ஒவ்வொரு வருடமும் ஏதாவது ஒரு புதிய ஊருக்கு பயணம் செல்வது வழக்கம். மதுரை, திண்டுக்கல், களக்காடு குளியல் என்று இந்த வருடம் சுற்றியதும் உறவுகள் நண்பர்களை கண்டதும் மகிழ்ச்சிதான். ஆனால் ஆர்ப்பரித்துக்கொட்டும் ஆளில்லாக் குற்றாலத்தை செய்தியில் காணும்போது மனம் வெறுப்படைகின்றது. என்ன வாழ்க்கை இது!
ரயில் பயணங்கள் சுகமானவை. ஜன்னலோர இருக்கை சொர்க்கம். அதிலும் தென்காசியில் இருந்து கொல்லம் செல்லும் அந்த மலைப்பாதை ரயில் பயணம், ஊட்டி டார்ஜிலிங் பயணங்களுக்கும் அழகுக்கும் சற்றும் குறைந்தது அல்ல. செங்கோட்டை தாண்டினால் அது வேறு உலகம். மலையும் காடும் கேரள உழைக்கும் மக்களும் மரச்செறிவுகளுக்குள் மறைந்திருந்து பார்க்கும் வீடுகளும் ரயில் ஜன்னலை உரசி செல்லும் செடிகொடிகளுமாக... வளைந்து வளைந்து ஒரு மலைப்பாம்பை போல ச்சக் சக் சக்.... என்றவாறு புகைகக்கி செல்லும் டீசல் எஞ்சின் இழுத்துச்செல்லும் ரயில். புனலூர், தென்மலை ஆகியவை அழகிய ஊர்கள். தென்மலை அழகிய சுற்றுலாத்தலம். புனலூரில் பிரிட்டிஷ் காலத்திய தொங்குபாலம் இப்போதும் பயனில் உள்ளது. 13 கண் பாலம் மிகப்புகழ் பெற்றது. கட்டஞ்சாயா, பழம்பொரி, கப்ப, மாட்டுக்கறி வறுவல் பற்றி சொல்ல வேண்டிய அவசியமில்லை. இந்த மலைரயில் பயணத்துக்கு தனியே இலக்கு ஒன்றும் தேவையில்லை, பயணிப்பது மட்டும்தான் இலக்கு. அகல ரயில் பாதை இடப்பட்ட பின் இன்னும் பயணம் செய்யாமல் இருப்பது அர்த்தமில்லாத வாழ்க்கை வாழ்வதன்றி வேறென்ன?
பழைய டெல்லியில் இருந்து டேரா டூன் சென்ற ரயில் பயணத்தின்போது, அதிகாலை எழுந்து ஜன்னல் ஓரம் உட்கார்ந்தால் கடந்து செல்லும் நிலையங்கள் எல்லாம் பழமையானவை, பயணம் நெடுகிலும் கங்கையும் யமுனையும் நம்மை கடந்து சென்றுகொண்டே இருக்கின்றன. ஹரித்வார் ரயில் நிலையத்தில் பத்துக்கும் மேற்பட்ட டிக்கெட் கவுண்டர்களை கண்டேன், ஆள் உயரத்துக்கு புல் முளைத்து மூடிக்கிடந்தன. அதாவது கும்பமேளாவுக்கு வரும் லட்சக்கணக்கான சாமியார்களுக்கு டிக்கெட் வாங்குவதில் சிரமம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக இத்தனை கவுண்டர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்று புரிந்துகொண்டேன்.
பயணங்கள் முடக்கப்பட்டு இருப்பது வாழ்க்கை முடக்கப்பட்டு கிடப்பதாகும், நம் வாழ்க்கை மட்டுமல்ல, மனிதர்கள் இடம்பெயராமல் தேங்கிக்கிடப்பது நம் வாழ்வில் மட்டுமே பொருளாதார இழப்பையும் சிக்கல்களையும் உருவாக்கவில்லை, இது ஒரு சங்கிலித்தொடர், சக மனிதர்களின் வாழ்விலும் பொருளாதாரத்திலும் இழப்பை ஏற்படுத்தி, விளைவாக மனநிலையிலும் உணர்வுகளிலும் கூடவோ குறையவோ பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தி உள்ளது. அசைவும் இயக்கமுமே வாழ்க்கை, இது சகல உயிர்களுக்கும் பொருந்தும்.
... ... .... ....
2000இன் முற்பாதியில் த மு எ ச சென்னை DIBICAவில் திரைப்படக்கலை குறித்த ஒரு பட்டறையை நடத்தியது. மூன்று நாட்கள். பாலு மகேந்திரா, இயக்குநர் சிவக்குமார், வெங்கடேஷ் சக்கரவர்த்தி, உமா வாங்கல், இயக்குநர் ஹரிஹரன் (ஏழாவது மனிதன்), ச தமிழ்ச்செல்வன், ஆதவன் தீட்சண்யா, பிரளயன் ஆகியோருடன் இருந்த பெரும் வாய்ப்பு அது. சத்யஜித் ரே அவர்களின் சாருலதாவில் இருந்து ஒரு காட்சி திரையிடப்பட்டது. சாருலதா குரு ரவீந்திரநாத் தாகூரின் கதை. காட்சியின் சகல வித அமைப்புகள் - ஒளி, ஒலி, கதாப்பாத்திரத்தின் நகர்வு, பேசும் விதம், க்ளோஸ் அப், மிட் சாட், லாங் சாட், நிற்கும் இடம் உள்ளிட்ட பல அம்சங்களும் எப்படி திட்டமிடப்பட்ட ஒத்திசைவுடன் படமாக்கப்பட்டது என்று ஒவ்வொரு அம்சமாக விளக்கினார் இயக்குநர் சிவக்குமார்.
ஏழாவது மனிதனுக்கு முன்பு வரை ஹரிஹரன் பம்பாயில் மராட்டிய மேடை நாடகத்தில் முழுமையாக அர்ப்பணித்துக்கொண்டு இயங்கியவர் அவர். அங்கே அவர் பெரும் அனுபவசாலி. இங்கே வரும்போது தமிழ் தெரியாது அவருக்கு. பிறருடன் ஆங்கிலத்தில்தான் உரையாடி இருக்கின்றார். ஏழாவது மனிதன் படம் தயாரிப்பில் இருந்தபோது அவருக்கு உதவியாக இருந்தவர் சி எஸ் லட்சுமி (அம்பை) என்று அவர் குறிப்பிட்டார். ஊருக்குள் வந்த சிமெண்ட் ஆலையால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் சீர்கேட்டை சொல்லும் படம் அது. ரகுவரன் நடித்து இருந்தார்.
பயிற்சிப்பட்டறையில் Night Mail என்னும் 1936ஆம் வருடப்படம் ஒன்று திரையிடப்பட்டது. அப்போது யூடியூப் எதுவும் கிடையாது. தியேட்டருக்கு போக வேண்டும் அல்லது திரைப்பட விழாவுக்கு போக வேண்டும். இல்லையேல் பர்மா பஜாரில் வெளிநாட்டு சிடிக்களை வாங்கலாம். இப்போது night mail இணையத்தில் கிடைக்கின்றது. 23 நிமிட படம். படத்தில் ஒரு ஆங்கிலகவிதை உள்ளது. பின்னணியில் ஒலிக்கும். திரையில் கவிதையும் ரயிலும் ஓட, கூடவே திரையின் முன்னே நின்றுகொண்டு அப்பாடலைப்பாடினார் ஹரிஹரன், சொல்லும் உச்சரிப்பும் சிறிதும் பிசகாமல்! அரங்கில் இருந்த கூட்டம் கைதட்டி ஆரவாரம் செய்தது, படத்துக்கும் ஹரிஹரனுக்கும் சேர்த்து.
This is the night mail
Crossing the border
Bringing the check and the
Postal order
Letters for the rich
Letters for the poor
The shop at the corner and the
Girl next door.... என்று கவிதை போகின்றது. ரயில் சக்கரத்தின் ஓட்டத்துடனும் தாள லயத்துடனும் இசைந்து ஓடுகின்ற ஓசை நயமிக்க சொற்களுடன் கவிதை ஓடும். W H Auden என்ற புகழ்பெற்ற கவிஞரின் கவிதை அது. இங்கிலாந்து நாட்டில் பிறந்தவர். Benjamin Britten என்பவர் பாடியிருக்கின்றார். இணையத்தில் தேடுங்கள், படமும் உள்ளது, இந்தப் பாடல் ஒலிக்கும் பகுதியும் தனியாக கிடைக்கின்றது. (ஒருவர் மனதை ஒருவர் அறிய உதவும் சேவை இது... என்ற பாட்டு என் நினைவுக்கு வந்தது, பாடலின் பொருளுக்காக). Auden அவர்களின் கவிதைகள் நான் வாசித்தது இல்லை என்பதை ஒப்புக்கொள்கின்றேன். அவரது கவிதை மிகக்கச்சிதமாக இப்படத்தில் பொருந்திவருவதை மட்டுமே கருத்தில் கொண்டு இப்பதிவை எழுதுகின்றேன். கவிதை வரிகளும் கவிதை படத்தில் இடம்பெறும் 3 நிமிட காட்சியும் யூடியூப்பில் உள்ளன.
கடிதங்களை ஒரு ஊரில் இருந்து மற்ற ஊர்களுக்கு சுமந்து செல்லும் மெயில் எனப்படும் ரயிலில் பணியாற்றும் ஊழியர்கள், ரயில் நிலையங்களில் இந்த ரயிலின் வரவுக்காக காத்திருக்கும் ஊழியர்கள், இதே ரயிலில் வரும் ஒரே ஒரு செய்தித்தாளுக்காக காத்திருக்கும் ஒருவர், ரயில் கடக்கும் பாதையில் உள்ள ஊர்கள், காடுகள், மலைகள் என கருப்பு வெள்ளையில் 84 வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்ட படம் நம்மை வியப்பில் ஆழ்த்தும். கடிதங்கள் அடங்கிய கனத்த பையை நிற்காமல் ஓடும் ரயிலுக்கு எப்படி மாற்றுகின்றார்கள் என்கிற தொழிநுட்பம் நம்மை கைதட்ட செய்கின்றது. ஒரே ஒரு நொடிக்கும் குறைவாகவே வரும் அக்காட்சி படத்தின் சூப்பர் காட்சி.
கொடுங்காலம் ஒழியும் நாளுக்கென காத்திருக்கின்றேன், பயணங்கள் முடிவதில்லை.
ரஷ்கின் பாண்ட் எழுதிய ரயில் நிலைய கதை ஒன்றுடன் அடுத்த பதிவில் சந்திக்கின்றேன்.
... .... ...
நீர்வண்ண ஓவியம்: Bijaynanda Rahman
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக