நேரு இப்போது சொல்லும் "வெகுஜன எழுச்சி" என்பது, 25 வருடங்களுக்கு முன் ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டத்தில் உருவானதும் அவர் தலைமை தாங்கி இருந்ததும் ஆன தீவிர எழுச்சி அல்ல. அச்சமயத்தில் எழுந்த அந்த எழுச்சி பிரிட்டிஷ் ஏகாதிபத்தியதிற்கு எதிராக இருந்தது போலவே உள்நாட்டு பிற்போக்கு சக்திகளுக்கும் எதிராக நடத்தப்பட்டதாகும். அன்று இளம் காங்கிரஸ்காரர்களாக இருந்த எங்களுக்கு தலைமை தாங்கி இருந்தபோது எந்த உள்நாட்டு பிற்போக்கு சக்திகளுக்கு எதிராக எங்களை வழி நடத்தினாரோ அதே பிற்போக்கு சக்திகள் இப்போது எங்களுக்கு எதிராக அணிதிரண்டு அவருக்குப் பின்னால் நின்று இருந்தன.... .... ஒரு சில வருடங்களுக்கு முன்பு, 1952ஆம் வருட தேர்தல்களில் அவர் முஸ்லீம் லீக்கை "ஒரு செத்த குதிரை" என்று வர்ணித்தார். இன்று கம்யூனிஸ்ட்களை தோற்கடிப்பதற்காக அதே குதிரையின் மீதே சவாரி செய்கின்றார். இப்போது அவர் பயணம் செய்யும் இதர "குதிரைகள்" எவையெனில், ஏதாவது ஒரு ஜாதியின் "நலன்களுக்காக" வாதாடும் கிறிஸ்தவ சர்ச்சுகள், நாயர் ஆகிய இதர சாதிய அமைப்புகளே ஆகும். முப்பது வருடங்களுக்கு முன்பு தீவிரவாதியாக இருந்த நேரு, இந்த சாதிய அமைப்புகளில் ஏதாவது ஒன்றை ஒரு குச்சியால் கூட தொட்டு இருக்கமாட்டார். ஆனால் "விடுதலைபோராட்டம்" மூலம் தூக்கியெறியப்பட்ட, சபிக்கப்பட்ட கம்யூனிஸ்டுகள், இடைக்கால தேர்தலில் மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்பதை உத்தரவாதம் செய்வதற்காக பிரதமர் நேரு இத்தகைய அனைத்து சாதியக்கட்சிகளையும் தன் கட்சிக்குப் பின்னால் அணி திரட்டிக் கொண்டு இருக்கின்றார்.
... அவர் எங்களிடம் தனிப்பட்ட முறையில் கூறியபடி, "நாங்கள் யாரை விரோதித்துக் கொண்டோம்"? எங்களுடைய விவசாய உறவுகள் மசோதாவுக்கு எதிராக முஷ்டியை உயர்த்திய நிலப்பிரபுக்கள்; ஆசிரியர்களையும் இதர ஊழியர்களையும் வேலையில் அமர்த்துவதிலும் டிஸ்மிஸ் செய்வதிலும் தன்னிச்சையாக நடந்து கொள்ளாமல் ஒழுங்கு விதிகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று நாங்கள் வற்புறுத்திய தனியார் கல்வி நிலையங்களின் நிர்வாகிகள், நிர்வாகங்கள்; தொழிலாளர்களின் விவசாயிகளின் சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை ஒடுக்குவதற்காக கடந்தகாலத்தில் தாங்கள் கூப்பிட்ட குரலுக்கெல்லாம் போலீஸ் படைகளை ஓடி வரச்செய்தது போல இனியும் அவ்வாறு ஆட்டுவிக்க முடியாத கிராமப்புற, நகர்ப்புற பெருந்தனக்காரர்கள்; கடந்த காலத்தில் அருவருப்புடன் பார்க்கப்பட்ட "அடித்தட்டு மக்கள்", புதிய அரசு நிர்வாகத்தால் தங்களுக்கு சமமாக நடத்தப்படுவதை சகித்துக்கொள்ள முடியாத நகர்ப்புற, கிராமப்புற சமூகத்தின் வசதி படைத்த பகுதியினர் - இவர்கள்தான்.
...சட்டமன்றத்தில் எங்களுக்கு பெரும்பான்மை இருந்தபோதிலும் நாங்கள் பதவியை விட்டு விலக வேண்டும் என்ற கோரிக்கையை தவிர அது வேறொன்றும் இல்லை. அவரது அரசு கொடுத்த ஆலோசனையின்படி குடியரசுத்தலைவர் எங்களுடைய அரசை டிஸ்மிஸ் செய்து புதிய தேர்தல் நடத்த உத்தரவிட்டார். நாங்களாகவே பதவி விலக வேண்டும் என்ற அவரது ஆலோசனைக்கு பின் இருந்த அவரது உண்மையான நோக்கத்தை இந்த நடவடிக்கை வெளிப்படுத்தி விட்டது. அதாவது நாங்களாகவே பதவி விலகி இருந்தால், சட்டமன்றத்தில் பெரும்பான்மை பெற்றிருக்கும் ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசை (நேரு) கலைத்தார் என்ற அவப்பெயரில் இருந்து அவரைக் காப்பாற்றி இருக்கும். இந்தக் கூட்டம்தான் காங்கிரசுக்கு பின்னால் அணி திரண்டு, நேரு மிகவும் பாராட்டிய "வெகுஜன எழுச்சி"யை உருவாக்கியவர்கள்.
.... ....
ஓர் இந்தியக் கம்யூனிஸ்டின் நினைவலைகள் (Reminiscenes of an Indian Communist) என்ற நூலில் இருந்து சில பகுதிகள்.
ஆசிரியர்: ஈ எம் எஸ் நம்பூதிரிபாட்
தமிழில்: என் ராமகிருஷ்ணன்
1988 வெளியீடு, சென்னை புக் ஹவுஸ் பி லிட், சென்னை 600002
416 பக்கங்கள், அன்றைய விலை ரூ.35.
... ... ....
(வாசிப்பின் ஓட்டம் கருதி பத்திகளை சற்றே முன் பின்னாக இங்கே மாற்றி அமைத்துள்ளேன்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக