அது bee hummingbird ஆ bee hummingbird moth ஆ?
இரண்டு வருடங்கள் முன் திருநெல்வேலியில் என் அண்ணன் வீட்டு தோட்டத்தில் நான் பார்த்ததும், நேற்று என் வீட்டு முருங்கை மரப்பூக்களை வட்டமடித்ததும் எது?
Bee hummingbird ஆண் பறவை 5.51 செமீ, பெண் 6.1 செமீ அளவே உள்ளவை என்றும் கியூபா, அமெரிக்கா போன்ற நாடுகளில் மட்டும் உள்ளன என்றும் வாசித்துள்ளேன். மேலும் humming bird moth என்ற உயிரினத்தை hummingbird என்று மக்கள் பொதுவாக தவறாக புரிந்துகொள்கின்றனர் என்றும் தெரிகிறது. எனில் நேற்று நான் பார்த்தது என்ன? எதுவாயினும் நேற்றைய மாலையை வண்ணமயம் ஆக்கிய அந்த சின்னஞ்சிறு உயிருக்கு நன்றி! இந்தக்கொடுங்காலம் இப்படியான சில வினாடிப்பொழுதுகளால் தோற்கடிக்கப்படுவது மகிழ்ச்சியே! உருவு கண்டு எள்ளாமை வேண்டும்.
அதுவரையிலும் பார்த்திராத சில பறவைகள் என் வீட்டு மரங்களில் எப்போதாவது சில வினாடிகள் அல்லது ஒன்று இரண்டு நிமிடங்கள் வந்து காட்சியளித்துவிட்டுப் போவது வழக்கம். உடனே அவற்றின் அடையாளங்களை கொண்டு இணையத்தில் தேடி வந்துசென்ற விருந்தாளி யாராக இருப்பார் என அறிந்துகொள்ள முற்படுவேன். சில நேரங்களில் வெற்றி பெற்றுள்ளேன். சென்னையில் வழக்கமாக காண முடியாத பறவைகள் எனில் அவை வேறு மாநிலங்களில் இருந்து இடப்பெயர்ச்சிக்கு வந்த பறவைகளாக இருக்கக்கூடும் என்றும் தெரிகின்றது. சலீம் அலி பற்றி வாசித்த பின்னர் மைசூர் ரங்கணத்திட்டு சென்றிருந்தது இன்னும் என் மகிழ்ச்சியை அதிகப்படுத்தியது. அங்குள்ள சிறிய காட்சியரங்குக்கு அவர் பெயர் சூட்டப்பட்டு இருந்ததை கண்டு என் மகிழ்ச்சி எல்லை கடந்தது. குற்றலாக்குறவஞ்சியில் தென்காசியை சுற்றியுள்ள மலைகளில் வட்டமிடும் விதவிதமான பறவைகள் பற்றிய பாடல் மிக மிக அற்புதமானது.
குடகில் இருந்து திரும்பி வரும்போது நகர்கோலெ வனம் ஊடாக ஒரு மணி நேரத்திற்கும் அதிகமாக பயணித்து வந்தோம். மான்கள், குரங்குகள், நரிகள் போன்றவை தவிர வேறு வன விலங்குகளை காணமுடியவில்லை எனினும் அதுவரை கேட்டிராத காட்டு விலங்குகளின் குரலோசையும் பறவைகளின் குரலோசையும் மிக நிசப்தமான அந்த வனப்பயணத்தை அர்த்தமுள்ளதாக்கியது. அந்தமான் ஜார்வா ஆதிவாசி மக்கள் வசிக்கும் காட்டின் ஊடாக மிக நீண்ட பயணம் சென்றிருக்கின்றேன். அது 60000 வருடங்கள் பின்னோக்கிய பயணம், கால எந்திரம் எனக்கு அப்பயணத்தை அங்கே சாத்தியம் ஆக்கியது! இன்று வரையிலும் இனக்கலப்பு இல்லாத ஜார்வா மக்கள், 60000 வருடங்களுக்கு முன் ஆப்பிரிக்காவில் இருந்து பயணித்து அங்கே குடியேறியவர்கள். காட்டின் ஊடான பயணத்தில் அவர்களை நேரில் கண்டபோது எனக்கு மெய் சிலிர்த்தது உண்மை. ஏனெனில் அவர்கள் என் மதிப்பிற்குரிய மூதாதையர்கள். 60000 வருடங்களாக அந்த மிக மிகப்பெரிய காட்டை அவர்கள்தான் பாதுகாத்து வருகின்றார்கள், நவீன மனிதன் லட்சத்தீவில் தன் மரண ஆட்டத்தை தொடங்கி விட்டான். அடுத்த குறி அந்தமானின் கிழக்கு கடற்கரை என்றும் இலக்கு குறித்துவிட்டான்.
நகர்கோலெ காட்டின் ஊடான பெரும்பகுதி பயணம் முடியும்போது காட்டிலேயே தொன்றுதொட்டு வசிக்கும் நகர் இன பழங்குடி மக்களை பார்க்கலாம். அவர்களும் காடும் வன விலங்குகளும் பறவைகளும் மரங்களும் ஒத்திசைந்து வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார்கள். காட்டுக்கு வெளியே வசிக்கும் நமக்குத்தான் காடும் விலங்குகளும் அந்நியமாக இருக்கின்றன. நகர்கோலெ என்றால் நகர்களின் நீரோடை, நீரூற்று என்று பொருள். டிராவல் xp சானலில் எத்தியோப்பியாவில் காடுகளில் வசிக்கும் மக்கள் பற்றி இரண்டு நாட்களாக ஓடிக்கொண்டிருக்கின்றது. அந்த மக்களுக்கும் ஜார்வா மக்களுக்கும் பெரிய வேறுபாடு எதையும் என்னால் பார்க்க முடியவில்லை. எத்தியோப்பியா மக்கள் நாகரிக உலக மக்களின் பழக்கவழக்கங்களை கைக்கொண்டு விட்டார்கள் என்பதன்றி வேறு வேறுபாடு இல்லை.
மசூரியில் இருந்தபோது அதிகாலை ஜில் குளிரை பொருட்படுத்தாமல் எழுந்து கையில் அடக்கமான கேமராவை வீடியோவை முடுக்கி நடக்கத்தொடங்கினேன். அதுவரையில் கேட்டிராத எத்தனை எத்தனை பறவைகளின் குரல்கள்! அதிகாலையின் அமைதியும் பறவைகளின் குரல்களும் ஆள் நடமாட்டம் இல்லாத மூடுபனி மறையாத மலைச்சாலையும் மரங்களுமாக இந்தப் பதிவு ஒரு பொக்கிஷம். ரஷ்கின் பாண்டை Ruskin Bond வாசியுங்கள்.
... ... ...
நெடுந்தொலைவு செல்லும் விமானங்கள் 18, 20 கிமீ உயரத்தில் பறப்பவை. சாதாரணமாக 8 -10 கிமீ உயரத்திலேயே ஆகாயத்தில் மைனஸ் 40 டிகிரியை தாண்டிய குளிர்ச்சி நிலவும். 18 கிமீ உயரத்தில் பறக்கும்போது இடப்பெயர்ச்சிக்கு வரும் பறவைகளை பார்த்துள்ளதாக விமான ஓட்டிகள் பதிவு செய்துள்ளார்கள்! அவை பொதுவாக இமயம் தாண்டியும் ரஸ்யா, சைபீரியா போன்ற நாடுகளில் இருந்து பறந்து வரும் பறவைகளாக இருக்கக்கூடும். நம்ப இயலாததும் வியப்புக்கு உரியதும் என்னவெனில் அப்பறவைகள் இடையில் எங்கும் ஓய்வுக்காக இறங்குவது இல்லை என்பதே. அதே போல், ஆப்பிரிக்காவில் இருந்தும் அரபிக்கடலுக்கு அப்பால் உள்ள நாடுகளில் இருந்தும் சென்னைக்கு இடப்பெயர்ச்சிக்காக பறவைகள் வருகின்றனவாம்.
கொச்சியில் இருந்தபோது நான் இருந்த திரிக்காகராவில் NGO க்வார்ட்டர்ஸ் பகுதியில் மன்னத் ஸ்டோர் என்ற கடையின் முன் மிக மிகப்பெரிய அரசமரம் ஒன்று இருந்தது. மாலை ஆறு மணிக்கு நீங்கள் அங்கே இருக்க வேண்டும்! அந்த மரம் முழுக்க முழுக்கவும் சிட்டுக்குருவிகள் சிட்டுக்குருவிகள்! எத்தனை ஆயிரம்! என்னென்ன பாடல்கள்! நான் சொல்வது 2009 கதை. இப்போது எப்படி என்று தெரியவில்லை, செல்போன் டவர்கள் சிட்டுக்குருவிகள் இனத்தை அழிப்பதாக சொல்கின்றனர்.
.... ... ....
காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஆக இருந்த இஷான் ஜாப்ரி என்ற முதியவர், தன் அறையில் குருவிகள் கூடு கட்டுவதை அறிந்து மின்விசிறியை இயக்குவதை நிறுத்தி வைத்தார் என்று வாசித்துள்ளேன். குஜராத் கலவரத்தின்போது குல்பர்க் சொசைட்டி என்ற அவர் வீட்டின் முன் இந்துத்துவா தீவிரவாதிகள் பயங்கர ஆயுதங்கள், பெட்ரோல், மண்ணெண்ணெய் டின்களுடன் நூற்றுக்கணக்கில் திரண்டு நின்று வெளியே வா என்று சவால் விடுக்கின்றார்கள். குல்பர்க் சொசைட்டி என்பது மிகப்பல வீடுகளையும் குடும்பங்களையும் கொண்ட ஒற்றை சுற்றுசுவருக்குள் அடங்கிய பெரிய வசிப்பிடம். சொசைட்டியின் மொத்த மக்களும் ஜாப்ரியின் செல்வாக்கு தங்களை காப்பாற்றும் என்று நம்பி அவரது வீட்டுக்குள் ஒட்டுமொத்தமாக தஞ்சம் அடைகின்றார்கள். ஜாப்ரி தொலைபேசியில் மாவட்ட நிர்வாகம், அமைச்சர்கள் என அனைவரையும் அழைத்துப் பேசுகின்றார். இறுதியில் ஜாப்ரியும் தஞ்சம் புகுந்த மக்களும் வெட்டி வீழ்த்தப்பட்டு தீ வைத்து கொளுத்தப்பட்டார்கள், குருவிகளும் தப்பவில்லை, ஜாப்ரியுடன் மடிந்து போயின. Fall of too many sparrows.
நமக்கென்ன, அம்பானி நமக்கு 5ஜி தரப்போறாராம், Antilia வில் மரங்கள் இருக்கிறதா, சிட்டுக்குருவிகள் இருக்கின்றனவா எனத்தெரியவில்லை.
அந்தமான் காட்டில் இருந்து நான் எடுத்து வந்த குயிலின் இறகு ஒன்று இப்போதும் என் வீட்டில் எங்கள் கண்பார்வையில் உள்ளது.
..... ....
(The fall of a sparrow என்ற நூல் சலீம் அலி எழுதியது)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக