வியாழன், ஜூன் 24, 2021

தேவ்லி வரும் இரவு ரயில்

The Night Train at Deoli

- Ruskin Bond

தமிழில்: மு இக்பால் அகமது

... .... ...... 

கல்லூரியில் படிக்கும்போது கோடை விடுமுறையை களிப்பதற்காக டேராவில் இருந்த என் பாட்டியின் வீட்டுக்கு வந்துவிடுவேன். சமவெளியில் இருக்கும் ஊரைவிட்டு மே மாதத்தின் முற்பாதியில் புறப்பட்டு வந்தால் ஜூலை மாதத்தின் பிற்பகுதியில்தான் திரும்புவேன். தேவ்லி டேராவில் இருந்து சுமார் 30 மைல் தொலைவில் உள்ள சிறிய ரயில் நிலையம் . டெராய் எனப்படும் அடர்ந்த காடுகள் அடங்கிய  இந்தியப்பகுதியின் எல்லையாகும் தேவ்லி.


ரயில் தேவ்லிக்கு வரும் நேரம் அதிகாலை ஐந்து மணியாகும். இருள் விலகாத அப்பொழுதில் மின்சார விளக்குகளும் எண்ணெயில் எரியும் விளக்குகளும் சிந்தும் மங்கலான வெளிச்சத்தில் நிலையம் சற்றே ஒளிரும். ரயில் பாதைகளுக்கு அப்பால் விரியும் காடுகள் விடியலில் மெல்லிய வெளிச்சத்தில் புகைபோல் தெரியும். தேவ்லி நிலையத்தில் ஒரே ஒரு ரயில் மேடை மட்டுமே உண்டு. ஸ்டேஷன் மாஸ்டருக்கு ஒரு அறை, பயணிகள் காத்திருப்பு அறை தவிர ஒரு தேநீர் கடை, ஒரு பழக்கடை, சில நாய்கள். இவை தவிர அங்கு வேறொன்றும் இல்லை, அடுத்துள்ள அடர்ந்த காட்டுக்குள் நுழைந்து பயணிக்கும் முன் இங்கே பத்து நிமிடம் மட்டுமே ரயில் நிற்கும், வேறென்ன வேண்டும்.

தேவ்லியில் ரயில் ஏன் நிற்கின்றது, இது எனக்குப் புரியாத ஒன்று. அந்த ரயில் நிலையத்தில் சொல்லிக்கொள்ளும்படி இதுவரை எதுவும் நடக்கவும் இல்லை. ரயிலில் இருந்து ஒருவரும் இறங்குவது இல்லை, ஒருவரும் ரயிலுக்கள் ஏறுவதும் இல்லை. சுமைதூக்கிகளை அங்கே நான் பார்த்ததே இல்லை. ஆனால் ரயில் என்னவோ இங்கே முழுதாக பத்து நிமிடங்கள் நிற்கும், பிறகு மணியடிக்கும், கார்ட் விசில் ஊதுவார், பிறகென்ன, தியொலியை பிரிந்து செல்வோம், மறந்து விடுவோம்.

எனக்குள் எப்போதுமே ஒரு குறுகுறுப்பு உண்டு, அந்த சுவர்களுக்குப் பின்னால் தேவ்லியில் நடப்பது என்ன? அந்த தனிமையான பிளாட்பாரத்தை நினைத்து எப்போதும் வருந்துவேன், அங்கே வருவதற்கு யாருக்கும் விருப்பமில்லை. முடிவு செய்தேன், ஒரு நாள் நான் தேவ்லியில்  இறங்குவேன், நாள் முழுக்க அங்கேயே இருப்பேன், அந்த நகரத்துக்கு என் வரவு மகிழ்ச்சியை தரட்டும்.

எனக்கு பதினெட்டு வயது அப்போது, பாட்டியின் வீட்டுக்கு ரயிலில் சென்று கொண்டு இருந்தேன், இரவு ரயில் தேவ்லியில்   நின்றது. ஒரு இளம்பெண் பிளாட்பாரத்தில் கூடைகள் விற்றுகொண்டு இருந்தாள். 

அது குளிர்ச்சிமிகு அதிகாலை நேரம். அவள் தன் துப்பட்டாவை தோள்களை சுற்றி அணிந்து இருந்தாள். கால்களில் செருப்பு ஏதும் இல்லை, அவள் பழைய உடைகளை அணிந்து இருந்தாள், ஆனால் அவள் பதின்ம வயதில் இருந்தாள், அவள் நடையில் நாகரிகமும் மரியாதையும் இருந்தன.

என் ஜன்னலுக்கு வந்தவுடன் நின்றாள். நான் அவளையே உற்றுக்கவனிப்பதை அறிந்து இருந்தாலும் அது தெரியாதது போல் அலட்சியமாக இருந்தாள். வெளிர்ந்த நிறம், ஒளிரும் தலை முடி, அலைபாயும் விழிகள். அங்கும் இங்கும் சுற்றியடித்துவிட்டு உணர்வலைகள் வீசியடிக்கும் அவ்விழிகள் இறுதியில் என் விழிகளை சந்தித்து நின்றன.

என் ஜன்னலில் சிறிது நேரம் நின்றாள், இருவருமே எதுவும் பேசிக்கொள்ளவில்லை. ஆனால் அவள் அங்கிருந்து அகலும்போது நான் என் இருக்கையில் இருந்து எழுந்ததை உணர்ந்தேன். பெட்டியின் வாசலை நோக்கி நகர்ந்தேன்,  பிளாட்பாரத்தில் இறங்கி  எதிர்த்திசையில் பார்த்துக்கொண்டு நின்றேன். தேநீர்க்கடையை நோக்கி நடந்தேன். மெல்லியதாக எரிந்து கொண்டு இருந்த அடுப்பின் மீது கெட்டிலில் தேநீர் கொதித்துக்கொண்டு இருந்தது. ஆனால் கடைக்காரர் தேனீர் விற்கும் பொருட்டு ரயிலுக்கு சென்று இருந்தார். அவள் கடையின் பின் இருந்து என்னைத் தொடர்ந்து வந்தாள்.

'கூடை வேண்டுமா?' என்று கேட்டாள். 'மிகத் தரமான பிரம்பால் ஆனவை, மிக உறுதியானவை'.

'வேண்டாம், எனக்குத் தேவையில்லை'

நாங்கள் ஒருவரை ஒருவர் நேருக்கு நேராக பார்த்துக்கொண்டு நின்றோம், அது மிக நீளமான பொழுதாகத் தெரிந்தது. 'அப்படியா? உண்மையாகவே வேண்டாமா?'

'சரி, ஒரு கூடை கொடு'. மேலே இருந்த கூடையை எடுத்துக்கொண்டு ஒரு ரூபாய் நாணயம் ஒன்றைக் கொடுத்தேன், அவள் விரல்களைத் தொடும் துணிச்சல் இல்லை எனக்கு.

அவள் ஏதோ சொல்ல வந்தாள், கார்ட் விசில் ஊதினார்; ஏதோ சொன்னாள், மணி ஓசையிலும் ரயில் என்ஜினின் மூச்சிலும் அவள் சொன்னது காற்றோடு போனது. நான் என் பெட்டியை நோக்கி ஓடினேன். ரயில் புறப்பட்ட வேகத்தில் பெட்டி முன்னும் பின்னுமாக மோதிக் குலுங்கியது.

ரயில் நகர்ந்து முன்னோட பிளாட்பாரம் பின்னோக்கி ஓட நான் அவளையே பார்த்துக்கொண்டு நின்றேன். பிளாட்பாரத்தில் அவளைத்தவிர யாரும் இல்லை, நின்ற இடத்திலேயே நின்றுகொண்டு என்னைப்பார்த்து புன்னகைத்துக்கொண்டு இருந்தாள். ரயில் சிக்னல் கம்பம் தாண்டும் வரை அவளையே பார்த்துக்கொண்டு இருந்தேன், ரயில் காட்டுக்குள் நுழைய ஸ்டேஷன் கண்ணில் இருந்து மறைந்தது, ஆனால் அவள் தன்னந்தனியே அங்கே நிற்பதை என்னால் பார்க்க முடிந்தது.

அதன் பின் நான் படுக்கவில்லை, உட்கார்ந்தே பயணித்தேன். அவளது முகமும் நெருப்பின்றிப்புகைந்த கண்களும் ஆன அந்தச்சித்திரம் என் நினைவை விட்டு அகல மறுத்தது.

டேராவுக்கு வந்து சேர்ந்த பின் அங்குள்ள புதிய அன்றாட வாழ்க்கை ஓட்டத்தில் இந்த நிகழ்ச்சி மங்கலாகி தொலைதூரத்துக்கு சென்றுவிட்டது. இரண்டு மாதங்களுக்குப்பிறகு பாட்டி வீட்டில் இருந்து மீண்டும் ஊருக்கு புறப்படும்போது அவள் என் நினைவுக்கு வந்தாள்.

தேவ்லி ரயில்நிலையத்துக்குள் வண்டி நுழையும்போது அவளைத்தேடினேன். என்னால் நம்பமுடியவில்லை, பிளாட்பாரத்தில் அவள் நடந்து வந்து கொண்டிருந்தாள். பெட்டியின் படிக்கட்டில் இருந்து கீழே குதித்தேன், அவளை நோக்கி கை அசைத்தேன்.

என்னைக்கண்டு கொண்டாள், புன்னகை செய்தாள். நான் அவளை நினைவில் வைத்துள்ளேன் என்பது அவளுக்கு மகிழ்ச்சியை கொடுத்தது. அவள் என்னை நினைவில் வைத்துள்ளாள் என்பதால் நான் மகிழ்ச்சியுற்றேன். இரண்டு பழைய நண்பர்கள் சந்தித்துக்கொண்ட நிகழ்வு போல இருந்தது அது.

தன்னிடம் இருந்த கூடைகளை விற்கும் பொருட்டு ஒவ்வொரு பெட்டியாக போகவில்லை அவள், நேராக தேநீர்க்கடையை நோக்கி வந்தாள். ஒளியற்று இருந்த அவள் கண்களில் வெளிச்சம் மின்னியது. நாங்கள் எதுவும் பேசிக்கொள்ளவில்லை, ஆனால் அதற்கு மேலும் உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில் இருந்தோம். 

அப்படியே அவளை அள்ளி ரயிலுக்குள் தள்ளி என்னுடனேயே கொண்டுசென்றுவிட வேண்டும் என்று உணர்ச்சிவசப்பட்டேன்.  தேவ்லி ரயில் நிலையத்தில் மீண்டும் அவள் என் கண் பார்வையில் இருந்து தொலைவில் மறையும் எண்ணத்தை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அவள் கையில் இருந்த கூடைகளை எடுத்து தரையில் வைத்தேன். அவள் ஒரு கூடையை எடுக்க எத்தனித்தாள், ஆனால் நான் அவள் கையை இறுகப்பற்றினேன்.

'நான் டெல்லிக்கு போகின்றேன்'

தலையசைத்து அவள் சொன்னாள், 'நான் எங்கும் போக வேண்டியதில்லை'

கார்ட் விசில் ஊதினார், ரயில் புறப்பட வேண்டும், கார்ட் மீது அக்கணத்தில் பெரும் வெறுப்பு உண்டானது.

'நான் மீண்டும் வருவேன்... நீ இங்கே வருவாயா?'

மீண்டும் தலையசைத்து ஆமோதித்தாள். அப்போது மணியோசை ஒலிக்க ரயில் நகரத்தொடங்கியது. வேறு வழியின்றி என் கையை அவளிடம் இருந்து விடுவித்துக்கொண்டு ரயிலை நோக்கி ஓடினேன்.

இந்த முறை நான் அவளை மறக்கவில்லை. பயணத்தின் பிற்பகுதி முழுவதும் அவள் என்னுடனேயே இருந்தாள், அதன் பின்னரும் நெடுநாட்களாக. அந்த வருடம் முழுவதுமே ஒளிரும் உயிர்ப்புடன் அவள் என் நினைவில் இருந்தாள். அந்த வருடம் கல்லூரி முடிந்த உடன் வழக்கத்திற்கு மாறாக சற்று முன்பாகவே டேராவுக்கு புறப்பட்டேன். முன்பாகவே தன்னைப் பார்க்க வந்துவிட்ட பேரனைக் கண்டு பாட்டி மகிழ்ந்து போவாள்.

தேவ்லியில்  ரயில் நுழையும்போது படபடப்பும் எதிர்பார்ப்பும் என்னை ஆட்கொண்டன. அவளிடம் என்ன சொல்வது? அவளைக்கண்டால் என்ன செய்வது? சரி, அவள் முன்பு கதியற்றவன் போல நடந்துகொள்ளக் கூடாது, பேச இயலாமல் தத்தளிக்க கூடாது, உணர்வுகளை வெளிப்படுத்தாமல் கட்டுப்பாடுடன் நடந்துகொள்ள வேண்டும் என்று உறுதி பூண்டேன்.

ரயில் தேவ்லி   நிலையத்துக்குள் வந்தது, பிளாட்பாரம் நெடுகிலும் தேடினேன், அவள் எங்கேயும் இல்லை.

கதவைத் திறந்து படிக்கட்டில் இருந்தும் இறங்கிவிட்டேன். என்னால் அந்த ஏமாற்றத்தை உணர முடிந்தது, நடக்கக்கூடாத ஏதோ ஒன்று நடந்துகொண்டு இருப்பதாக உணர்ந்தேன். நான் ஏதாவது செய்தாக வேண்டும், ஸ்டேஷன் மாஸ்டர் அறையை நோக்கி ஓடினேன், 'இங்கே கூடைகளை விற்பாளே ஒரு இளம்பெண், உங்களுக்கு தெரியுமா?'

'அப்படி யாரையும் தெரியாது.... பாருங்க, ரயிலை விட்டுவிடக் கூடாதுன்னா உடனே  போய் ரயிலில் ஏறுங்கள்'.

ஆனால் பிளாட்பாரத்தின் இரண்டு முனைகளிலும் என் கண்கள் அலை பாய அவளைத் தேடினேன். ரயில் நிலைய இரும்பு வேலியடைப்புக்களை வெறித்துப் பார்த்தேன். ஒரு மாமரத்தையும் காட்டை நோக்கிச்செல்லும் புழுதி படிந்த சாலையையும் அன்றி வேறொன்றும் இல்லை அங்கே. அந்தச்சாலை எங்கே செல்கின்றது? ரயில் பிளாட்பாரத்தை தாண்டி வெளியே வந்துவிட்டது, ஓட வேண்டும், ஓடினேன், என் பெட்டியின் கதவைப் பிடித்து உள்ளே ஏறினேன். ரயிலின் வேகம் அதிகரித்தது, காட்டுக்குள் நுழைந்தது, ஏதும் செய்ய இயலாதவனாக ஜன்னலின் வழியே வெளியே வெறித்து நோக்கினேன்.

இரண்டே முறை மட்டுமே சந்தித்த ஒரு இளம்பெண், அதுவும் என்னிடம் எதுவுமே பேசாதவள், அவளைப்பற்றி எனக்கும் ஒன்றும் தெரியாது, தெரியாது என்றால் துளியும் தெரியாது, ஆனால் அவள் மீது என் இதயத்தில் மென்மை சுரந்தது, அவள் மீது ஒரு பொறுப்புணர்வு பிறந்தது,  அவளை நான் எங்கே எப்படித் தேடுவேன்? 

நான் பாட்டி வீட்டில் இரண்டு வாரங்களுக்கு மேல் தங்கவில்லை, எனவே பாட்டிக்கும் இந்த முறை என் மேல் வருத்தமே. நான் அங்கே நிம்மதியாக இருக்கவும் இல்லை, தன்னிலை மறந்தவனாக இருந்தேன். எனவே மீண்டும் சமவெளி நோக்கி ரயிலைப் பிடித்தேன், தேவ்லி   ரயில் நிலையத்தில் மீண்டும் ஸ்டேஷன் மாஸ்டரிடம் அவளைப்பற்றி கேட்க வேண்டும்.

ஆனால் இப்போது புதிய ஸ்டேஷன் மாஸ்டர் வந்திருந்தார். கடந்த வாரம்தான் பழைய மாஸ்டர் வேறொரு ஊருக்கு பணியிடமாற்றத்தில் போயிருந்தார். புதியவருக்கோ கூடைகள் விற்கும் இளம்பெண்ணைப் பற்றி ஒன்றும் தெரியவில்லை. தேநீர்க்கடையின் உரிமையாளரை சென்று பார்த்தேன், ஒடுங்கிய சிறிய உருவம் கொண்ட அவர் பழைய ஆடைகளை அணிந்து இருந்தார். கூடைகளை விற்கும் அந்த இளம்பெண்ணைப் பற்றி எதுவும் தெரியுமா எனக் கேட்டேன்.

'ஆமா, அப்படி ஒரு பெண் இங்கே இருந்தாள், எனக்கு நன்றாக நினைவுள்ளது. ஆனால் இப்போதெல்லாம் அவளைப் பார்க்க முடிவதில்லை'

'அப்படியா? என்ன ஆச்சு அவளுக்கு?'

'எனக்கு எப்படியப்பா தெரியும்? அவள் யார் எனக்கு?'

மீண்டும் ஒருமுறை ரயிலைப் பிடிக்க ஓடினேன்.

தேவ்லியின் ப்ளாட்பாரம் கரைந்து ஓடியது. எனது அடுத்த பயணத்தில் ஒரு முறை இந்த ஊரில் இறங்குவேன், ஒரு நாள் முழுவதும் இங்கே இருந்து அவளைத் தேடுவேன், அவளைப்பற்றி விசாரிப்பேன், இறுதியில் அவளைக் கண்டுபிடிப்பேன். வேறு எதனாலும் அல்ல, தன் கரிய அலைபாயும் விழியின் பார்வை ஒன்றால் மட்டுமே என் இதயத்தைக் கொள்ளைக்கொண்ட அவளைக் கண்டுபிடிப்பேன் என்று உறுதி பூண்டேன்.

இந்த நினைவுடன் என்னைத் தேற்றிக்கொண்டு மீதமுள்ள இறுதியாண்டு கல்லூரிப்படிப்பை முடித்தேன். கோடை வந்தது, டேராவுக்கு ரயிலில் பயணமானேன், அதிகாலை இருள்விலகாத பொழுதில் 

தேவ்லி  நிலையத்துக்குள் ரயில் நுழைந்தது. பிளாட்பாரம் நெடுகிலும் அவளைத் தேடினேன், எனக்குத் தெரியும், அவளை என்னால் மீண்டும் காண முடியாது, ஆனாலும் ஒரு நம்பிக்கை...

ஆனாலும் முன்பு நான் முடிவு செய்தபடி தேவ்லியில் பயணத்தை இடை நிறுத்தி அந்த ஊரில் அவளைத்தேடுவது என்பது நடக்காமல் போனது. (என்ன செய்ய, இது கதையாகவோ சினிமாகவோ இருந்திருந்தால், தேவ்லியில்  இறங்கியிருப்பேன், மர்மத்தை துலக்கி சுபமான முடிவு கண்டிருப்பேன்). உண்மையில் அவ்வாறு செய்வதற்கு எனக்குள் பயம் இருந்தது என்றே நினைக்கிறேன். உண்மையில் அவளுக்குக்கு என்ன நேர்ந்தது இருக்கும் என்று தெரிந்துகொள்வதில் எனக்கு பயம் இருந்தது. ஒருவேளை அவள் தேவ்லியை  விட்டு சென்றிருக்கலாம், ஒருவேளை அவளுக்கு திருமணம் ஆகியிருக்கலாம், ஒருவேளை அவளுக்கு உடலநலக்குறைவு ஏற்பட்டு இருக்கலாம்...

கடந்த சில வருடங்களில் தேவ்லியை   பல முறை கடந்து சென்றிருக்கின்றேன், என் ஜன்னலின் வழியே எப்போதும் வெளியே தேடுவேன், என்னை நோக்கிப் புன்னகையை வீசிய அதே முகத்தை மீண்டும் கண்டுவிட மாட்டேனா என்கிற சிறு நம்பிக்கை. 

தேவ்லி நிலையத்தின் சுவர்களுக்கு அந்தப்பக்கம் என்ன நடந்திருக்கக்கூடும் என்று யோசித்து இருக்கின்றேன். ஆனால் என் பயணத்தை ஒருபோதும் இடைநிறுத்தி அங்கே இறங்கியது இல்லை. அது என் விளையாட்டை நாசம் செய்துவிடக்கூடும். என் நம்பிக்கையும் கனவும் இப்படியே தொடரட்டும், ஆளரவமற்ற அந்த பிளாட்பாரம் நெடுகிலும் ஜன்னல் வழியே நான் தேடுவேன், கையில் கூடைகளுடன் அவள் வருகைக்காக.

தேவ்லியில்  நான் ஒருபொழுதும் என் பயணத்தை இடைநிறுத்தி இறங்கியது இல்லை, ஆனால் எத்தனை முறை என்னால் அவ்வழியே பயணிக்க முடியுமோ அத்தனை முறையும் பயணிக்கின்றேன்.

..... ......

கருத்துகள் இல்லை: