1836 தொடங்கி 1921 வரை 85 வருடங்களாக நீடித்த கிளர்ச்சி அது.
இறுதியாக 1921 ஆகஸ்ட்டில் 22 வட்டாரங்களில் சுமார் 10 லட்சம் மக்கள் பங்கேற்ற மாபெரும் கிளர்ச்சியில், சுமார் 10000 பேர் மரணமுற்றனர். கொடிய அந்தமான் சிறையில் மட்டும் 3000 பேர் கொல்லப்பட்டனர். 42 பேருக்கு பிரிட்டிஷ் ஏகாதிபத்திய அரசு ஆயுள்தண்டன விதித்தது.
Conrod Wood என்னும் ஆங்கிலேயர் தன் ஆய்வுக்காக எழுதிய தொகுப்பை, பின்னர் the moplah rebellion and it's Genesis என்று நூலாக வெளியிட்டார். மாப்ளா கிளர்ச்சியும் அதன் தோற்றுவாயும் என்று தமிழில் நான் மொழிபெயர்த்தேன், அலைகள் வெளியீட்டக பதிப்பு, 2007.
100 ஆண்டுகள் ஆன நிலையில், கிளர்ச்சியை மையமாகக் கொண்டு கேரளாவில் சில திரைப்படங்கள் எடுக்கப்பட்டு வருவதாக அறிகின்றோம். பிரிட்டிஷார் + ஜென்மிகள் எனப்படும் இந்து மத உயர்சாதி நிலப்பிரபுக்கள் என்ற அதிகார வர்க்க கெடுபிடிக் கூட்டணிக்கு எதிராக மாப்பிளை முஸ்லிம்கள் நடத்திய நீண்ட போராட்டம் அது. 1919க்குப் பின் கிலாபத் இயக்கம், காங்கிரஸ் இயக்கம் ஆகியவற்றின் தலையீடு, இப்போராட்டத்தில் என்ன செய்தது என்பதும் கூடவே வாசிக்கப்பட வேண்டியது. ஒருபுறம் இக்கிளர்ச்சியை தேசபக்தப்போராடம் என்று ஒருசாராரும், இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் ஆன மதப்பிரச்னையே இதன் மையம் என்று மறுசாராரும் வெவ்வேறு நிலைகளில் நின்று வாதிடுகின்றனர். 1980களில் வெளியான 1921 என்ற மலையாள திரைப்படம், மாப்பிளா கிளர்ச்சியை மையமாக கொண்டதுதான்.
கான்ராட் உட் தன் நூலின் முடிவுரையில் இப்படித்தான் சொல்கின்றார்:
1921-22 மாப்பிளா கிளர்ச்சி, தெற்கு மலபார் மாப்பிளா சமூக மக்களின் வரலாற்றில் ஒரு மிகப்பெரும் திருப்புமுனை எனலாம். 1792இல் கிழக்கிந்திய கம்பெனி வடிவில் முதல் முறையாக பிரிட்டிஷ் நிர்வாகம் நிறுவப்பட்ட நாள் தொடங்கி, பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராகவும், அதன் ஆதரவோடு வளர்ந்த ஜென்மி ஆதிக்க சக்திகளுக்கு எதிராகவும் மாப்பிளா சமூக மக்கள் தொடர்ந்து நீண்ட பல ஆண்டுகளாகத் தமது எதிர்ப்பை கலகங்கள் மூலம் அறிவித்தபடியே இருந்துள்ளார்கள். தொடந்த போராட்டங்களின் இறுதி வடிவமாகவே, தீவிர மண்டலத்தை தம் ஆட்சியின் கீழ்க் கொண்டுவரும் முயற்சியாகவே 1921-22 மாப்ளா ஆயுதம் தாங்கிய போராட்டம் வெடித்தது. ... ஒட்டுமொத்தமாகச் சொல்லவேண்டும் எனில், தெற்கு உட்புற மலபாரின் பாதிக்கப்பட்ட இசுலாமிய சமூகத்தின் எழுச்சியாகத்தான் 1921-22ஆம் ஆண்டில் நடந்த மாப்ளா கிளர்ச்சியை வரையறுக்க முடியும்.
... .... ....
ரயில் எண் 77, சரக்குப்பெட்டி எண் 1711
கோழிக்கோட்டில் இருந்து புறப்பட்ட ரயில் அது. கிளர்ச்சியின் மையமாக இருந்த திரூருக்கு 1921 நவம்பர் 19 அன்று மாலை 6.45 மணிக்கு ரயில் வந்து சேர்கின்றது. மூடப்பட்ட சரக்கு ரயில் பெட்டி ஒன்றில் நூற்றுக்கும் மேற்பட்ட மாப்பிளா முஸ்லிம்களும் 3 இந்துக்களும் அடைக்கப்பட்டார்கள், வெளிப்புறம் தாழிடப்பட்டது. அந்த ரயிலுடன் இணைக்கப்பட்டது. ஆடு மாடுகளை கொண்டு செல்வதற்கான பெட்டி அது. தவிர புதிதாக பெயிண்ட் பூசப்பட்டு இருந்ததால் சிறு துவாரங்களும் அடைக்கப்பட்டு காற்றுப் புகாத பெட்டி ஆனது. இவர்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டவர்கள், வழக்குப்பதிவு செய்யப்பட்டவர்கள். ஹெட் கான்ஸ்டபிள் ஓ கோபாலன் நாயரும் 5 கான்ஸ்டபிள்களும் அடுத்த பெட்டியில் பயணிக்க, சார்ஜெண்ட் A H ஆண்ட்ரூஸ் என்பவர் என்ஜினுக்கு அடுத்து இருந்த இரண்டாவது வகுப்பு பெட்டியில் பயணிக்கின்றார்.
வழி நெடுகிலும் உள்ளே இருந்தவர்கள் காற்றுக்கும் குடிநீருக்கும் கதறி கூச்சல் இட்டுள்ளார்கள். பெட்டியின் கதவை தட்டி திறக்க போராடியுள்ளார்கள். சோரனூரில் அரை மணி நேரமும் ஒலவகோட்டில் 15 நிமிடங்களும் ரயில் நின்றபோது அவர்களின் கதறல் இந்த போலீஸ்காரர்களுக்கு கேட்கவே செய்தது. தவிர பின்னர் நடத்தப்பட்ட விசாரணையின்போது சாட்சியம் அளித்த பொதுமக்கள் பலர், ரயில் சென்ற வழிநெடுக உள்ளே அடைக்கப்பட்டவர்களின் கூச்சலையும் கதறலையும் கேட்டதாக சொன்னார்கள்.
முக்கியமாக, இரவு 12.30 மணிக்கு போதனூருக்கு ரயில் வந்து சேர்ந்தபோது அதே ரயிலில் பயணித்த மஞ்சேரி ராம ஐயர் என்பவர், இறங்கி வந்து சத்தம்போட்டு பெட்டியின் கதவை திறக்கச் செய்தார். கதவு திறக்கப்பட்டது. உள்ளே அடைக்கப்பட்ட அனைவரும் மயக்கமுற்றுக் கிடந்தார்கள். 56 பேர் ஏற்கனவே இறந்துவிட்டார்கள். உடனடியாக இறந்தவர்கள் 6 பேர். 13 பேரை கோயம்புத்தூர் மருத்துவமனைக்கு எடுத்து சென்றார்கள். 25 பேரை மத்திய சிறை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். 13 பேரில் 8 பேர் பின்னர் இறந்தார்கள். ஆக மொத்தம் 70 பேர் இறந்தார்கள். கோயம்புத்தூர் மருத்துவமனையில் சிகிச்சை அளித்த மருத்துவரின் பெயர் T ராமன்.
மெட்றாஸ் அரசு இதற்காக ஒரு விசாரணைகமிசனை அமைத்தது. விசாரணையின் முடிவில், 30.8.1922 அன்று அரசு பின்வரும் ஆணையை வெளியிட்டது:
"......கைதிகளைக் கொண்டு செல்லும் அவசரத்தேவைக்காக ஒரு சரக்குப்பெட்டியை பயன்படுத்தியதை தவறு என்று சொல்ல முடியாது, மனிதாபிமானம் அற்ற செயல் என்றும் சொல்ல முடியாது. ... சார்ஜெண்ட் ஆண்ட்ரூஸ், 5 போலீஸ் ஆகியோர் மீது விசாரணை நடத்த வேண்டும் என இந்திய அரசு, மெட்றாஸ் அரசுக்கு உத்தரவு இட்டது. இறுதியில் அனைவரும் குற்றமற்றவர்கள் என விடுவிக்கப்பட்டார்கள்.
உயிரிழந்த 70 பேர்களின் குடும்பத்துக்கு, தலா 300 ரூபாய் கருணைத்தொகை வழங்கப்பட்டது. (ஆணை எண் 290, 1.4.1922)
…... .....
ரயில்பெட்டி கொடூரமரண நிகழ்வின் 93ஆவது நினைவு தினம் மலப்புரத்தில் திரூருக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் 2014 நவம்பர் 20 அன்று கடைப்பிடிக்கப்பட்டது. குறுவம்பலம் என்பது அக்கிராமம். ரயில் பெட்டியில் அடைக்கப்பட்டு இறந்தவர்களில் 41 பேர் கிராமத்தை சேர்ந்தவர்கள். இவர்களில் பெரும்பாலானோர் திருமணம் ஆகாத இளைஞர்கள். "கிளர்ச்சியின்போது இக்கிராமத்தின் இளைஞர்கள் மிகப்பெரும் பங்காற்றியதாக முதியவர்கள் கூறுகின்றனர். மிக சமீப காலம் வரையிலும் கூட கிளர்ச்சியில் குறுவம்பலம் கிராமத்தின் பங்கு பற்றி கிராம மக்களுக்கும் வரலாற்று அறிஞர்களுக்கும் கூட தெரியாமலேதான் இருந்தது. இது குறித்து மேலும் பல ஆய்வுகளை செய்ய வேண்டியது அவசியம்" என்று சலீம் குறுவம்பலம் கூறுகிறார். இவர் 2014இல் மலப்புரம் மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர். குறுவம்பலம் கிராமத்தில் ரயில்பெட்டி தியாகிகளுக்கு நினைவுச்சின்னம் அமைப்பதில் முன்னின்றவர்.
வரலாற்றறிஞர் KKN குருப், "ரயில்பெட்டி கொடூர நிகழ்வு குறித்தும் மலபாரில் கிளர்ச்சியின்போது நிகழ்ந்த அனைத்தையும் அரசு முற்றாக ஆய்வு செய்ய வேண்டும்" என்றார். வரலாற்றறிஞர் எம் கங்காதரன், "ரயில்பெட்டி கொடூர நிகழ்வுதான் மலபாரில் பிரிட்டிஷ் ஆட்சி நடத்திய மிகப்பெரிய கொடுமை என்று சொல்லிவிட முடியாது, சுமார் 200 மாப்பிளா இளைஞர்களை அவர்களின் வீடுகளுக்குள் இருந்து வெளியே இழுத்து வந்து அவர்களின் குடும்பத்தார் கண்ணெதிரிலேயே பிரிட்டிஷார் சுட்டுக்கொன்ற சம்பவம் 1921 அக்டொபர் மாதத்தில் நடந்தது" என்று சொல்கின்றார்.
... .... ....
1971இல் சி அச்சுதமேனன் முதல்வராக இருந்த இடதுசாரிகள் அரசு, மாப்பிளா கிளர்ச்சியை இந்திய விடுதலைப்போராட்ட இயக்கத்தின் ஒரு பகுதியாக அங்கீகாரம் செய்தது, கிளர்ச்சியில் பங்கு பெற்று வாழ்ந்து வந்தவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கியது. மாப்பிளா கிளர்ச்சி, பிரிட்டிஷ் காலனிய ஆதிக்கத்துக்கு எதிரான போராட்டம் என்று பத்து வருடங்களுக்குப் பிறகு ஒன்றிய அரசும் அங்கீகாரம் அளித்து, கிளர்ச்சியில் பங்கு பெற்று வாழ்ந்து வந்தவர்களுக்கும் கிளர்ச்சியில் உயிர் இழந்தவர்களின் வாரிசுகளுக்கும் பல உதவிகளை அறிவித்தது.
திரூர் ரயில் நிலையத்தில் ரயில்பெட்டி மரணங்களை சித்தரிக்கும் சித்திரம் அழிக்கப்பட்ட வரலாறு:
திரூர் ரயில்நிலையத்தின் சுவரில் ரயில்பெட்டி கொடூரத்தில் மரணமுற்ற தியாகிகளை நினைவூட்டும் சித்திரம் ரயில்வே நிர்வாகத்தால் வரையப்பட்டது. குட்டிபுரம் என்ற ஊரை சேர்ந்த ஓவியர் பிரேமன் சித்திரத்தை வரைந்தார். 2018 நவம்பர் மாதத்தில் உள்ளூர் பிஜேபி ஆர் எஸ் எஸ் கும்பல் இச்சித்திரத்தை அழிக்க வேண்டும் என ரயில்வே நிர்வாகத்தை வற்புறுத்தியதால் அச்சித்திரம் அழிக்கப்பட்டது.
வரலாற்றில் இருந்து மாப்பிளா கிளர்ச்சி தியாகிகள் நீக்கப்படும் வரலாறு:
கேரள அரசு 1960களில், மாப்பிளா கிளர்ச்சியாளர்களை விடுதலைப்போராட்ட தியாகிகள் என அங்கீகரித்து தியாகிகள் பட்டியலில் சேர்த்தது. அப்போராடம் விவசாயிகள் புரட்சி என்றும் அடையாளப்படுத்தப்பட்டது.
இப்போது இந்திய வரலாற்று ஆய்வுக்குழுமத்தின் மூன்று பேர் குழு ஒன்று, ரயில்பெட்டி கொடூரத்தில் மரணமுற்றோர், பிற கிளர்ச்சி தலைவர்கள் ஆகியோரை விடுதலைப்போராட்ட தியாகிகள் என அங்கீகரிக்க அவசியம் இல்லை என்று முடிவு செய்துள்ளது. Dictionary of Martyrs: India's freedom struggle 1857-1947 என்ற நூலின் ஐந்தாவது பாகத்தில் இருந்து 387 மாப்பிளா தியாகிகளின் பெயரை நீக்குவது என்று முடிவு செய்துள்ளது. அலி முசலியார், வரியம்குன்னத் அஹமது ஹாஜி, அவரது இரண்டு சகோதரர்கள் ஆகியோர் பெயரும் அடக்கம்.
குழுமத்தின் ஒரு உறுப்பினர் ஆன C I ஐசக் என்பவர், ".... மாப்பிள்ளாகளின் நடவடிக்கைகள் ஏறத்தாழ அனைத்துமே மத அடிப்படையில் ஆனவை. அவர்கள் இந்து மதத்தினர்க்கு எதிரானவர்கள், அவர்களின் செயற்பாடுகள் மத சகிப்பின்மையின் அடிப்படையில் ஆனவை. .... ரயில்பெட்டி நிகழ்வில் இறந்தவர்களில் பலர், கிலாபத் கொடியேற்றியவர்கள், கிலாபத் நீதிமன்றம் அமைத்தவர்கள், கிலாபத் அரசை நிறுவியவர்கள். உயிரிழந்த பல மாப்பிளாக்கள், விசாரணை கைதிகளாக இருந்தபோது காலரா போன்ற நோய்களாலும் இயற்கையாகவும் இறந்தவர்கள் என்பதால் அவர்களை தியாகிகள் என்று அங்கீகரிக்க முடியாது" என்று சொல்கின்றார்.
2021 ஆகஸ்ட் 19 அன்று ஆர் எஸ் எஸ் தலைவர் ராம் மாதவ் என்பவர், 1921 மாப்பிளா கிளர்ச்சி ஆனது, இந்தியாவில் அறியப்பட்ட முதல் "தாலிபான் சிந்தனை" என்று பேசினார். கேரளாவின் இடதுசாரி அரசு, இதை மறைத்து அக்கிளர்ச்சியை கம்யூனிஸ்ட் புரட்சியாக சித்தரிக்க முயல்கின்றது என்றும் பேசினார்.
இதன் பின்னர்தான் ICHR அப்படி ஒரு முடிவை எடுத்துள்ளது.
.... .... .... .....
(தொடரும்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக