வியாழன், ஏப்ரல் 29, 2021

கீழ்க்கண்ட தலைப்புகளில் ஏதாவது ஒன்றுக்கு ஒரு பக்கத்துக்கு மிகாமல் கட்டுரை வரைக

கீழ்க்கண்ட தலைப்புகளில் ஏதாவது ஒன்றுக்கு ஒரு பக்கத்துக்கு மிகாமல் கட்டுரை வரைக:

1. பணம் பாதாளத்தை தாண்டியும் பாயும் - உதாரணங்களுடன் நிறுவுக.

2. விச வாயுக்களின் பயனும் அவற்றின் உற்பத்தியாளர்களின் கதையும்

.... ... ...

மாணவன் எழுதிய கட்டுரை:

(விடைத்தாளை திருத்தும் அய்யா! எனக்கு தெரிந்ததை எழுதியிருக்கின்றேன், அது ஒன்றாவது தலைப்புக்கு உரியதா இரண்டாவதுக்கு உரியதா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்)

1. 1939 முதல் 1945 வரை நடந்த இரண்டாம் உலகப்போரில் நாஜி ஹிட்லர், கார்பன் மோனாக்சைடு, Zyklon B என்று அழைக்கப்பட்ட ஹைட்ரஜன் சயனைடு ஆகிய வாயுக்களை மூடப்பட்ட மிகப்பெரும் அறைகளில் செலுத்தி, அடைத்து வைக்கப்பட்ட 10 லட்சம் யூதர்கள், சுமார் 75000 போலந்தியர்கள், 20000 ஜிப்ஸிகள், சிறை பிடிக்கப்பட்ட 15000 சோவியத் வீரர்கள், 10000-15000 செக்கோஸ்லோவாக்கியர், பைலோரஷ்யன், யுக்கோஸ்லோவியர், பிரெஞ்சு, ஜெர்மானிய, ஆஸ்திரிய மக்களை கொன்றதாக வரலாறு சொல்கின்றது. இதில் ஹைட்ரஜன் சயனைடு பூச்சிக்கொல்லியாக பயன்படுத்த பட்டதாக தெரிகின்றது. போலந்தில் ஆறு இடங்களில் அத்தகைய வாயு அறைகள் இருந்ததாகவும் அங்கு கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை எவ்வளவு என்றும் வரலாறு சொல்வதை இங்கு குறிப்பிட்டுள்ளேன்:

1. Auschwitz Birkenau 11லட்சம் - Zyklon B

2. Majdanek 80,000 - Zyklon B

3. Treblinka 8 லட்சம், 4.Belzec 6 லட்சம், 5. Sobibor 250000 - டீசல் எஞ்சினை ஓடவிட்டு அதில் இருந்து வரும் கார்பன் மோனாக்சைடு வாயுவை செலுத்தி கொன்றார்கள்

6. Chelmno 320000 - நடமாடும் வேன்களில் வாயுவை நிரப்பி தேவையான இடங்களுக்கு கொண்டு சென்று கொன்றார்கள்.

2. இவ்வாறு செத்தவர்களின் உடல்களில் இருந்து நகைகள், தங்கத்தால் ஆன பற்களை வெட்டி எடுத்துக்கொண்டார்கள். பெண்களின் கூந்தலை வெட்டி எடுத்துக்கொண்டார்கள். பின் அத்தனை உடல்களையும் குவித்து வைத்து எரித்தனர். அவ்வாறு அரைகுறையாக எரிந்த உடல்களை அரைத்து பொடியாக்க ஸ்பெஷல் அரவை எந்திரங்கள் கண்டுபிடிக்கபட்டன. அப்படி கிடைத்த பல்லாயிரம் டன் எலும்பு துகளை Sola, Vistula ஆகிய நதிகளிலும் பிற ஏரி குளங்களிலும் கரைத்தார்கள். அப்படியும் எஞ்சிய துகளைக்கொண்டு சாலைகளில் பள்ளங்களை நிரப்புவது, வயல்களில் உரமாக்குவது என பயன்படுத்தினார்கள். 

3. Union Carbide என்னும் அமெரிக்க கம்பெனி, மத்திய பிரதேசத்தில் போபாலில் ரசாயன தொழிற்சாலை நிறுவியது. 1984ஆம் ஆண்டு டிசம்பர் 2-3 நள்ளிரவில் அந்த தொழிற்சாலையில் இருந்த Methyl Isocyanide என்ற வாயு கசிந்ததால் தூங்கிக்கொண்டு இருந்த பல்லாயிரம் மக்கள் அவ்வாயுவை சுவாசித்து செத்து மடிந்தார்கள். தொழிற்சாலையின் அமெரிக்க நிர்வாகி ஆன வாரன் ஆண்டர்சனையும் இந்தியர்கள் ஆன சில நிர்வாகிகளையும் மாநில அரசு கைது செய்தது. ஆண்டர்சன் ஆறே மணி நேரத்தில் 25000 ரூபாய் ஜாமீனில் வெளியே வந்தார். அன்று ம.பி. காங்கிரஸ் முதல்வராக இருந்த அர்ஜுன் சிங்கும் ஆண்டர்சனும் நெருங்கிய நண்பர்கள். ஆண்டர்சன் மாநில அரசு ஏற்பாடு செய்த ஒரு விமானத்தில் டெல்லி சென்றார், அங்கிருந்து அமெரிக்கா சென்றார், அதன் பின் அவர் மீது கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது ஆயினும் அவரை அமெரிக்க அரசும் இந்தியாவுக்கு அனுப்பவில்லை, இந்திய அரசு அல்லது அரசுகளாலும் அவரை இங்கே கொண்டு வர முடியவில்லை. அன்றைய பிரதமர் காங்கிரஸ் கட்சியின் ராஜீவ் காந்தி. ஆண்டர்சன் நிம்மதியாக மரணமுற்றார், விச வாயுவால் பாதிக்கப்பட்ட பாதிக்கப்பட்ட, செத்து மடிந்த இந்திய மக்களின் குடும்பங்கள் நிவாரண தொகைக்காக இப்போதும் அலைந்து கொண்டே இருக்கிறார்கள். வாயுவால் பாதிக்கப்பட்டோருக்கு பிறந்த பல குழந்தைகள் இறந்தன, இப்போதும் உடலும் உள்ளமும் ஊனமுற்ற பல நூறு குழந்தைகள் அல்லது இளைஞர்களை போபாலில் பார்க்கலாம். 9 லட்சம் போபால் மக்களில் சுமார் 20000 பேர் ஒரே நாளில் செத்து மடிந்தனர், 6 லட்சம் பேர் விச வாயுவால் வாழ்நாள் நெடுக பாதிப்புக்கு உள்ளானார்கள்.

4. அதன் பின் நடந்த விசாரணையிலும் பொதுநல அமைப்புகள் மேற்கொண்ட பல்வேறு விசாரணைகளிலும் தெரிய வந்தவை மிக மிக அதிர்ச்சி அளிப்பவை. Carbaryl எனப்படும் பூச்சிக்கொல்லிதான் selvin என்ற பெயரில் அங்கே உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. இரண்டாம் உலகப்போரில் எதிரிநாட்டு மக்கள் மீது வீசப்பட்ட Phosgene என்ற ரசாயனமும் மீதைல் ஐஸோ சயனைடும் அனுமதிக்கப்பட்ட அளவுக்கும் மிக மிக அதிகமாக அங்கே இருப்பில் வைக்கப்பட்டன என்பது பல முறைகேடுகளில் ஒன்று மட்டுமே.  அமெரிக்காவில் இருந்த அதே யூனியன் கார்பைடு கம்பெனியில் கடைபிடிக்க பட்ட மிகப்பல கறாரான பாதுகாப்பு, எச்சரிக்கை அம்சங்கள், அளவீடுகள், பயிற்சிகள், ஆபத்துக்கால நடைமுறைகள், நிவாரணங்கள் எதுவுமே இங்கே போபால் உற்பத்தி சாலையில் கடைப்பிடிக்க படவில்லை என்பதே அந்த உண்மை. குறிப்பாக வாயு கசிந்தால் தானாகவே எச்சரிக்கை அடைந்து தேவையான அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுப்பதற்கு ஆன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் யாவும் அமெரிக்க தொழிற்சாலையில் தானியங்கி முறையில் computerized   இயங்கின. இங்கே அப்படி இல்லை. அதாவது மத்திய, மாநில அரசுகள் அமெரிக்க முதலாளிக்கு சாதகமாக, உள்ளூர் மக்களுக்கு விரோதமாக நடந்து கொண்டு இருந்தன. 

5. அனில் அகர்வால் என்ற முதலாளி பீகாரில் பிறந்தவர், பழைய இரும்புக்கு பேரீச்சம் பழம் விற்கும் காயலாங்கடை தொழில் செய்தவர் இங்கிலாந்து சென்றார். Vedanta Resources ltd என்கிற கார்பொரேட் நிறுவனத்தை தொடங்கினார். அம்பானி அதானி மிட்டல் போல இவரும் உழைப்பால் உயர்ந்து உத்தமர் ஆனார், எனவே இயற்கையாகவே ஆளும் உத்தமர்களுக்கும் நண்பர் ஆனார். 2017இல் அவர் சொத்து மதிப்பு 330 கோடி டாலர், அதாவது ரூபாய் மதிப்பில் சுமார் 21485 கோடி. 1992 காங்கிரஸ் நரசிம்மராவ் ஆட்சியில் மஹாராஷ்டிராவில் ரத்னகிரியில் 500 ஏக்கர் நிலத்தை வருடத்திற்கு 60000 டன் தாமிரம் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை அமைக்க அரசு கொடுத்தது. ஸ்டெர்லைட் ஆலை என்று பெயர். ஏற்பட இருக்கும் சுற்றுச்சூழல் பாதிப்பையும், கடற்கரை, கடல்சார்ந்த தம் வாழ்க்கை அழிய இருப்பதையும் உணர்ந்த உள்ளூர் மக்கள் தொடர்ந்து போராடியதால் 15.7.1993 அன்று கட்டுமான வேலைகளை நிறுத்துமாறு ஸ்டெர்லைட்டுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். 

6. ஸ்டெர்லைட் முதலாளி தமிழ்நாட்டுக்கு வந்தார். மாநிலத்தில் அதிமுக, மத்தியில் காங்கிரஸ். 1.8.1994 அன்று தமிழ்நாடு சுற்றுச்சூழல் கட்டுப்பாடு வாரியம் TNPCB , தூத்துக்குடியில் தாமிர உற்பத்தி ஆலை அமைந்தால் சாத்தியம் ஆக கூடிய விளைவுகளை ஆய்வு செய்ய தடை இல்லா சான்றிதழ் NOC வழங்கியது. 14.10.1996 அன்று ஆலை தொடங்க மாநில அரசு லைசென்ஸ் வழங்கியது. ஆட்சியில் திமுக, மத்தியில் தேவ கவுடா.

7. 2.3.1999 அன்று தூத்துக்குடி அகில இந்திய வானொலி ஊழியர்கள் வாயுகசிவினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஸ்டெர்லைட் ஆலையின் தவறு ஒன்றும் இல்லை என மாநில அரசு சான்று வழங்கியது. மாநிலத்தில் திமுக, மத்தியில் பிஜேபி வாஜ்பேயி. தவிர, உற்பத்தியை ஏறத்தாழ இரண்டு மடங்காக உயர்த்தவும் அனுமதி வழங்கினார்கள். நவம்பர், டிசம்பர் 2000த்தில் பெய்த பெருமழைக்கு பின் ஆலையில் தேங்கி இருந்த விச தன்மை வாய்ந்த கழிவுநீரை நிறுவனம் மழை நீருடன் வெளியேற்றியதாக  2.1.2001 அன்று மக்கள் அரசிடம் புகார் செய்தார்கள். மாநிலத்தில் திமுக, மத்தியில் காங்கிரஸ் அரசு.

8. ஸ்டெர்லைட் ஆலை தன் உற்பத்தியை அதிகரிக்க அனுமதிக்க கூடாது என உச்சநீதிமன்றம் நியமித்த கண்காணிப்பு குழு 21.9.2004 அன்று பரிந்துரைத்தது. தவிர, அரசின் அனுமதி இன்றி உற்பத்தியை அதிகரிக்கும் வண்ணம் ஏற்கனவே ஆலையில் கட்டுமானங்களை ஸ்டெர்லைட் ஏறத்தாழ முடித்து இருந்ததையும் கண்டுபிடித்தனர். இப்போது ஆட்சியில் அதிமுக, மத்தியில் காங்கிரஸ். ஆனால் மறுநாளே மத்திய வனங்கள், சுற்றுசூழல் அமைச்சகம், ஆலையின் விரிவாக்கத்துக்கு அனுமதி சான்று வழங்கியது.

9. 16.11.2004 அன்று TNPCB சமர்ப்பித்த அறிக்கையில், அனுமதி இல்லாத அதிக உற்பத்தி, புதிய உற்பத்தி ஆலைகள் இருப்பதை சொன்னது. ஆனால் 7.4.2005 அன்று மத்திய அமைச்சகம், உயர்த்தப்பட்ட உற்பத்திக்கு அனுமதி வழங்குமாறு மாநில அரசுக்கு பரிந்துரை செய்தது. 2008இல் (திமுக, காங்கிரஸ் ஆட்சிகள்), மேலும் உற்பத்தியை அதிகரித்தது ஸ்டெர்லைட்.

10. 1996இல் வைகோவும் பிறரும் தொடர்ந்த வழக்கில், 28.9.2010 அன்று ஆலையை மூடுமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு இட்டது. ஆட்சியில் திமுகவும் காங்கிரசும். 1.10.2010 அன்று உச்சநீதிமன்றம் உயர்நீதிமன்ற ஆணைக்கு தடை விதிக்க, லைசென்ஸ் இல்லாத உற்பத்தியை ஸ்டெர்லைட் தொடர்ந்தது! அக்ட்டோபார் 2010-ஏப்ரல் 2013 இடைக்காலத்தில் 3 தொழிலாளர்கள் விபத்தில் இறந்தார்கள், எட்டு விபத்துக்கள் நேர்ந்தன. 

11. 23.3.2013 அன்று (அதிமுக, காங்கிரஸ் அரசுகள்) சல்பர் டை ஆக்சைட் பெருமளவு கசிந்து தூத்துக்குடி மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளானார்கள். TNPCB வழக்கம்போல அமைதி காத்தது. மக்கள் போராடியதால் 29ஆம் தேதி ஆலையை மூட உத்தரவு இடப்பட்டது. கசிவு தன் ஆலையில் ஏற்பட்டது அல்ல என ஸ்டெர்லைட் வாதிட்டது. ஏப்ரல் 2 2013 அன்று உச்சநீதிமன்றம் இப்படி சொன்னது: ராணுவம், மின்சாரம், வாகன உற்பத்தி என பல தொழில்களுக்கும் தாமிரம் வேண்டும். 1300 பணியாளர்கள் வேறு வேலை செயகின்றார்கள். ... எனவே ஸ்டெர்லைட்டுக்கு 100 கோடி ரூபாய் அபராதம் விதிக்கின்றோம், ஆனால் ஆலையை மூட அவசியமில்லை. 

12. இதன் பின் 22.5.2018, மாநிலத்தில் அதிமுக, மத்தியில் பிஜேபி, அன்று தூத்துக்குடியில் போலீஸ் மக்களை நெஞ்சிலும் தலையிலும் சுட்டதில் 13 பேர் உயிர் இழந்தார்கள். 28ஆம் தேதி ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. இப்போது வேதாந்தா முதலாளி இரக்கப்பட்டு ஆக்சிஜன் தயாரித்து மக்களுக்கு தர முன் வந்துள்ளார். அவர் இரக்கத்தை பாராட்டாமல் என்ன செய்வது? ஹிட்லர் கேஸ் அறைகளில் 3150000 பேரை மட்டும்தானே கொன்றான்? அவனை விடவும் இரக்கம் உள்ளவர் வேதாந்தா முதலாளி என்பதில் என்ன சந்தேகம்?

செவ்வாய், ஏப்ரல் 27, 2021

லெனினுக்குப் பிடித்த நூல்கள்

லெனினுக்குப் பிடித்த நூல்கள்

(Ilyich's favourite books: Nadezhda Krupskaya)

(தமிழில்: மு இக்பால் அகமது)

என்னை இலியிச்சுக்கு முதல் முதலில் அறிமுகப்படுத்தி இருந்த தோழர் இப்படித்தான் சொல்லியிருந்தார்: அவர் விஞ்ஞான நூல்களை மட்டுமே வாசிப்பார், நாவல், கவிதை பக்கம் எல்லாம் அவர் போனதே இல்லை. எனக்கு வியப்பாக இருந்தது. என் இளமைப்பருவத்தில் செவ்வியல் இலக்கியங்களை முழுமையாக வாசித்திருக்கிறேன். Lermontov வின் எழுத்துக்கள் எனக்கு முற்றிலும் மனப்பாடம், Chernyshevsky, Lev Tolstoi, Uspensky ஆகியோரின் படைப்புக்களோ என் வாழ்வின் அங்கமாகவே இருந்தன. ஆனால் இப்படியான படைப்புகளைப் பற்றி ஒரு எழுத்தும் அறியாத ஒரு மனிதரும் இங்கே இருக்கின்றார் என்பது அதிசயம்தான்.

பின்னர் இலியிச்சுடன் நெருக்கமாக பணியாற்றத் தொடங்கிய பின்னர், அவர் தன் சக மனிதர்களை எவ்வாறு மதிக்கின்றார், வாழ்க்கையையும் மக்களையும் எவ்வாறு உற்றுக் கவனிக்கின்றார் என்பதை நான் உணரத்தொடங்கினேன். மக்களைப்பற்றி எழுதப்பட்ட எந்த ஒரு நூலையும் வாசித்திடாத ஒரு மனிதர் என்ற என் அபிப்பிராயத்தை உயிர்ப்புடன் துலங்கிய இலியிச் உடைத்தார். 

எங்களது அன்றாட வாழ்வின் நெருக்கடிகள் இடையே வாசிப்பு, நூல்கள் ஆகியன குறித்துப்பேச எங்களுக்கு நேரம் வாய்த்தது இல்லை. ஆனால் பிற்காலத்தில் சைபீரியாவில் நாங்கள் நாடுகடத்தப்பட்ட வாழ்க்கை வாழ்ந்தபோதுதான் நான் உணர்ந்தேன், நான் வாசித்திருந்த செவ்வியல் இலக்கியங்களை அவரும் அறிந்திருந்தார், மட்டுமின்றி துர்கனேவை அவர் மீண்டும் மீண்டும் வாசித்திருந்தார். புஷ்கின், லெர்மோண்டோவ், Nekrasov ஆகியோரின் நூல்களை நான் சைபீரியாவுக்கு கொண்டுவந்திருந்தேன். தன் படுக்கை அருகே ஹெகலின் நூல்களுடன் இந்த நூல்களையும் இலியிச் அடுக்கி வைத்தது மட்டுமின்றி நாள்தோறும் மாலை வேளைகளில் அவற்றை மீண்டும் மீண்டும் வாசித்துக்கொண்டே இருந்தார். அவருக்கு மிகவும் பிடித்தமான எழுத்தாளர் புஷ்கின். 

ஒரு எழுத்தாளரின் நடை மட்டுமே அவரைக் கவர்ந்திழுக்கும் என்று சொல்லிவிட முடியாது. உதாரணமாக, சேர்ணிசெவ்ஸ்கியின் What is to be done? என்ற நூலை அவர் ஆழ்ந்து வாசித்தார். அந்த நூலின் நடை பற்றி பெரிதாக சொல்லிட ஒன்றுமில்லை ஆனாலும் அந்த நூலின் மையமான கருத்துக்களை அவர் வாசித்து உள்வாங்கிய விதத்தை கண்டு நான் வியப்படைந்தேன். உண்மை என்னவென்றால் சேர்ணிசெவ்ஸ்கியின் எழுத்துக்களை அவர் மிகவும் நேசித்தார். சைபீரியாவில் வைத்து இருந்த அவரது புகைப்பட சேகரிப்பில் சேர்ணிசெவ்ஸ்கியின் இரண்டு புகைப்படங்களையும் இலியிச் வைத்து இருந்தார், ஒரு படத்தில் அவரது பிறந்தநாள், இறந்தநாள் இரண்டையும் குறிப்பிட்டு வைத்து இருந்தார். மட்டுமின்றி, எமிலி ஜோலா, ரஷிய எழுத்தாளர்கள் ஆன Herzen, Pisarev ஆகியோரின் படங்களும் இருந்தன.  Goethe எழுதிய Faust, Heineஇன் ஒரு கவிதைதொகுப்பு ஆகியவற்றின் ஜெர்மானிய பதிப்புகளை சைபீரியாவில் நாங்கள் வைத்திருந்தோம்.

மியூனிக்கில் அவர் இருந்தபோது வாசித்தவற்றில் Gerhardt எழுதிய Bei Mama, Polenz எழுதிய Buttnerbauer ஆகிய நூல்கள் இருந்தது எனக்கு நினைவில் உள்ளது.

பாரிசில் நாங்கள் இரண்டாவது முறை குடியேறியபோது, விக்டர் ஹியூகோவின் Chatiments ஐ அவர் விரும்பி வாசித்தார். இந்த நூல் 1848 புரட்சி குறித்தது. ஹியூகோ வெளிநாடுகளில் இருந்து எழுதுவார், நூல்கள் பிரான்சுக்குள் கடத்தப்படும். ... எழுத்தாளர் Montegusஐ அவர் மிகவும் நேசித்தார். பாரிஸ் கம்யூனின் உறுப்பினர்களில் ஒருவரின் மகனான மான்டேக், உழைப்பாளிகள் அடர்ந்த பகுதிகளில் அவர்களின் பிரியத்திற்குரிய பிரபல எழுத்தாளர் ஆக விளங்கினார். அவரது பாடல்களில் வாழ்க்கையை பற்றிப்பாடுவார், அவற்றில் தத்துவ சார்பு எதுவும் இருக்காதுதான், ஆனால் அவரது பாடல்கள் மக்களோடு நெருங்கி இருந்தன. வேலைநிறுத்தம் செய்த தொழிலாளர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த மறுத்த 17ஆவது ரெஜிமெண்ட் வீரர்களை போற்றிப்பாடும் Greeting to the 17th Regiment பாடலை இலியிச் அவ்வப்போது பாடிக்கொண்டு இருப்பார். 

எங்கள் வீட்டில் பிரெஞ்சு பெண்மணி ஒருவர் தினமும் இரண்டு மணி நேர வீட்டு வேலைகளை செய்ய வருவார்.  ஒருநாள் Alsace குறித்த ஒரு பாடலை அப்பெண்மணி பாடியதை இலியிச் கேட்டார். அப்பாடலை மீண்டும் மீண்டும் பாடுமாறு அவரைக் கேட்டுக்கொண்ட இலியிச், அப்பாடலை மனப்பாடம் செய்து தானே பாடத் தொடங்கினார். "நீங்கள் அல்சேசையும் லொரெய்னையும் கைப்பற்றி விட்டீர்கள், ஆனாலும் என்ன, நாங்கள் ப்ரெஞ்சுமக்களாகவே இருப்போம்; எங்கள் நிலங்களை ஜெர்மானியமயமாக்குவதில் நீங்கள் வெற்றி கண்டிருக்கலாம், ஆனால் எங்கள் இதயங்களை ஒருபோதும் உங்களால் அப்படி மாற்ற முடியாது" என்பது அப்பாடல்....

போர்க்காலத்தில், Barbusse எழுதிய Le Feu என்ற நூலை மிக மிக முக்கியமான நூலாக மதித்து வாசித்தார். அவரது உணர்வுகளுக்கு அந்த நூல் மிக நெருக்கமாக இருந்ததே காரணம்.

... ...

அவருடைய இறுதிக்காலத்தில், புனைவுகளை வாசிக்க சொல்லி கேட்பார், மாலை நேரங்களில் இந்த வாசிப்பு நடக்கும். Shchedrin ஐ வாசித்திருக்கின்றேன். கோர்க்கியின் My Universities ஐ வாசித்திருக்கின்றேன். கவிதைகளை கேட்பார், குறிப்பாக Demyan Bednyயின் கவிதைகள் அவருக்கு விருப்பமானவை. சில நேரங்களில், கவிதைகளை கேட்டுக்கொண்டே இருக்கும் அவர், ஜன்னலுக்கு வெளியே மறையும் சூரியனை ஆழ்ந்து நோக்குவார். 

அவர் இறப்பதற்கு இரண்டு நாட்கள் முன்பு, ஜாக் லண்டனின் Love life என்ற கதையை அவருக்கு வாசித்தேன். அந்த நூல் இப்போது அவரது அறையின் மேசை மேல் இப்போதும் இருக்கின்றது. இதுவரை யாரும் கால் பதித்திடாத பனி படர்ந்த மலை மீது ஒரு மனிதன் நடந்து செல்கின்றான், பட்டினியும் நோயும் அவனை கொன்று கொண்டிருக்க, ஆற்றின் கரையில் அமைந்த ஓடத்துறையை நோக்கி அவன் நகர்கின்றான். தன் சக்தி முழுமையாக வடிந்த பின்பு, நடக்க இயலாது பனி மேல் ஊர்ந்து தவழ்கின்றான். அவனுக்குப் பின்னால் செத்துக்கொண்டு இருக்கும் ஒரு ஓநாய் பின் தொடர்ந்து வருகின்றது, அவனையே உணவாகக்கொள்ளும் பெரும் பசியில். செத்துக்கொண்டு இருக்கும் மனிதனுக்கும் மிருகத்துக்கும் ஆன போராட்டத்தில் இறுதியில் மனிதன் வெல்கின்றான். இலியிச் உணர்ச்சிவசப்பட்டார்.

இரண்டாம் நாள் லண்டனின் மற்றொரு கதையை வாசித்தேன். கதை கேட்ட இலியிச் கதையின் இறுதியில் சிரித்தார், தன் கையை ஆட்டினார். அதுவே அவருக்காக நான் கதை வாசித்த இறுதி நாள்.

.... ..... ....

Reminiscences of Lenin by his relatives, Moscow, 1956.

Lenin and Books என்ற நூலில் இருந்து, Progress Publishers, 1971.

புதன், ஏப்ரல் 21, 2021

மாஸ்கோவில் இந்திய கம்யூனிஸ்ட்டுக்கள்: சவுகத் உஸ்மானியின் நினைவலைகள்

மாஸ்கோ 1921: ஹோட்டல் லக்ஸில் அவர்கள் கண்ட பகல்களும் இரவுகளும் 

(Moscow 1921: Days and Nights at Hotel Lux)

ஆங்கிலத்தில்: Suchetana Chattopadhyay 

தமிழில்: மு இக்பால் அகமது

1. 1920 டிசம்பர் இறுதியில், சோவியத் யூனியன் தாஸ்கென்ட்டில் நிறுவப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்கள் வேகம் அதிகம் இல்லாத ஒரு ரயிலில் மாஸ்கோ நகரை நோக்கிப் பயணித்துக்கொண்டு இருந்தார்கள். அது ஒரு சவுகரியமான பயணம் என்றுதான் சொல்ல வேண்டும். உள்நாட்டுப்போரின் விளைவாக மக்களுக்கு தட்டுப்பாடுகள் நிலவிய போதும், இந்த ரயிலில் போர்வைகள், விரிப்புக்கள், தலையணைகள், குளிரில் இருந்து தப்பிக்க வெப்ப வசதிகள் என தரப்பட்டிருந்தன. பயணத்தின்போது, சோசலிசம் குறித்தும் இந்திய அரசியல் குறித்தும் விவாதித்துக்கொண்டு சென்றார்கள். முன்னாள் முஹாஜிர் மாணவர்கள் ஆன அப்துல் மஜீத், சவுகத் உஸ்மானி, அப்துல் காதிர் கான் (இவர் உண்மையில் பிரிட்டிஷ் அரசின் ஏஜென்ட், ராய் குடும்பத்தினர்க்கு வேண்டப்பட்டவர்) ஆகியோர் மாஸ்க்கோ நகரில் Delovoi Dvor விடுதியிலும் பிற இடங்களிலும் தங்கினார்கள். பகல் பொழுதுகளை பெரும்பாலும் ஹோட்டல் லக்சில் கழித்தார்கள். ஹோட்டலின் ஒரு பொது அறையில், கம்யூனிஸ்ட் அகிலத்தின் செயற்குழு ECCI கூட்டங்களை நடத்தினார்கள். இந்த இரண்டு விடுதிகளும்தான் சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கங்களின் தலைவர்கள் கூடும் இடங்களாக இருந்தன. Sen Katayama ( ஜப்பான்), Tom Quelch (பிரிட்டன்), Kuusinen (பின்லாந்து) , Rakosi, Bela Kun (ஹங்கேரி) உள்ளிட்ட பலரும் வருவார்கள், Zinoviev, Radek இருவரும் தினமும் வருகை புரிபவர்கள்.

2. Delovoi Dvor என்ற அந்த விடுதி மிகப்பெரியது, பல அலுவலகங்கள் அங்கே இயங்கின. போருக்கு முந்தைய 1912-13 காலக்கட்டத்தில் பண்டைய கட்டிடக்கலை வடிவை மீட்கும் வகையில் ஆனால் நவ நாகரீகமாக வணிகப்பயன்பாட்டுக்கென கட்டப்பட்டது. ஆனால் கம்யூனிஸ்ட் அகிலத்தின் அரசியல் நடவடிக்கைகளின் மையம், கூட்டங்கள் கூடும் இடம் எனில் அது லக்ஸ் விடுதிதான். மாஸ்க்கோ நகரின் முக்கியமான சாலைகளில் ஒன்றான Tverskaya வீதியில் அமைந்திருந்த அந்த விடுதியானது, கம்யூனிஸ்ட் அகிலத்தின் செயல்வீரர்கள், வெளிநாடுகளில் கம்யூனிஸ்ட் இயக்கங்களில் இருந்து வரும் விருந்தினர்கள் ஆகியோருக்காகவே இருந்தது. விடுதியின் புகைப்படமே சொல்கின்றது, அதன் மிகச்சிறப்பான கட்டிடக்கலை வடிவம், இத்தாலிய மறுமலர்ச்சி கால கலை வடிவம், Baroque ஆகியவற்றின் சிறப்பான கலவை என்று.

3. லக்ஸ் விடுதியில் நடந்த கம்யூனிஸ்ட் அகிலத்தின் கூட்டங்களில் கலந்து கொண்ட சுவாரஸ்யமான தலைவர்கள் பற்றி சவுகத் உஸ்மானி இப்படிக்கூறுகின்றார்:

"ஹோட்டல் லக்சின் பொது அறையில் நடந்த ECCI கூட்டங்கள் உண்மையில் மிக மிக சுவாரஸ்யமானவை. எப்படியெனில், உலக கம்யூனிஸ்ட் இயக்கங்களின் தலைவர்களை ஒருவர் அங்கே மிக நெருக்கத்தில் பார்க்கலாம். உயரமான உருவம் கொண்ட Karl Radek, Zionviev, இறுக்கமான முகம் கொண்ட ட்ராட்ஸ்கி. குள்ளமான உருவம் கொண்ட ஆனால் தத்துவங்களும் கூர்மதியும் நகைச்சுவை உணர்வும் நிரம்பி வழியும் மூளைக்கு சொந்தக்காரர் ஆன Bukharin ஐ காணலாம். இன்னும் பல உலகத்தலைவர்கள். ஸ்டாலினின் அடர்ந்த புருவத்தைம் மீசையையும்  யார்தான் மறப்பார்கள்?

4. ஹோட்டல் லக்சில் பல சுவாரஸ்யமான நிகழ்வுகள் நடந்தது உண்டு. அவற்றுள் குரறிப்பிட்டுச் சொல்லத்தக்க ஒரு நிகழ்வு. ட்ராட்ஸ்கி ஒருநாள் வந்திருந்தார். அவரிடம் அடையாள சீட்டுகள் எதுவும் இல்லை. கட்டுரையாளர் (உஸ்மானி) விடுதியின் தலைவாசலில் நின்று கொண்டு இருந்ததால் நடந்தவற்றை கவனித்துக்கொண்டு இருந்தார். அடையாள அட்டை இல்லாத ட்ராட்ஸ்கியை, செம்படை வீரர் உள்ளே அனுமதிக்க மறுக்கவே, அவரிடம் ட்ராட்ஸ்கி வாக்குவாதம் செய்துகொண்டு இருந்தார். அவர் மறுக்க இவரோ பின்வாங்குவதாக இல்லை. "நான் ட்ராட்ஸ்கி" என்று இவர் சொல்ல, செம்படை வீரர் "Nitchevo" என்று சொல்லிக்கொண்டே இருந்தார். ட்ராட்ஸ்கியின் மிரட்டும் குரலுக்கு அவர் சற்றும் பயப்படவில்லை, மாறாக ஏதாவது அடையாள சீட்டை காட்டுங்கள் என்று மட்டும் சொல்லிக்கொண்டே இருந்தார். விடுதியின் வரவேற்பாளரோ அனைத்தையும் கவனித்துக்கொண்டு இருந்தாலும் பிரச்சினையில் தலையிடவில்லை, ஏனெனில் இது ஒழுக்கம் தொடர்பான விசயம். மட்டுமல்ல, உலகின் மிக முக்கியமான கம்யூனிஸ்ட் தலைவர்கள் விடுதியின் பொது அறையில் கூடி உலக விவகாரங்களை விவாதித்துக்கொண்டு இருந்தார்கள். இறுதியாக, மாடியில் கூட்டத்தில் இருந்த புகாரினை வரவேற்பாளர் தொலைபேசியில் அழைத்து கீழே வரச்சொல்லி ட்ராட்ஸ்கியை அடையாளம் காணச்செய்தார், இல்லையேல் பிரச்சனை முற்றி அசிங்கமாக ஆகியிருக்கும். இதுதான் செம்படை ஒழுக்கம் என்பது!"

5. சர்வதேசதலைவர்கள் வந்து போகும் லக்சும் மாஸ்க்கோவின் பிற தொழிற்சங்க அலுவலகங்களும் அவர்களுக்கு ஒரு புதிய அரசியல் பயிற்சிகளமாக விளங்கின. பொருளாதாரம், அரசியல், தொழிற்சங்க இயக்கவாதம் ஆகியவற்றை தான் படித்ததாக சவுகத் உஸ்மானி இப்போது நினைவு கூர்ந்தார். லக்ஸ் ஹோட்டலில் நிலவிய சர்வதேச உணர்வு கொண்ட சூழலும் மாஸ்க்கோவின் தொழிற்சங்க அலுவலகங்களும் அவர்களுக்கான அரசியல் பயிற்சித்தளமாக விளங்கின. பொருளாதாரம், அரசியல், தொழிற்சங்க அரசியல் ஆகியவற்றைப் பயின்றதை உஸ்மானி நினைவு கூர்ந்தார். இந்திய கம்யூனிஸ்டுகளுக்கு ரஷிய மொழி தெரியாததால் ஆங்கிலம் அறிந்த அறிஞர்கள் அவர்களுக்கு பயிற்சி அளித்தார்கள். பிரிட்டனில் இருந்து வந்திருந்த பொருளாதார வல்லுநரும் மொழிபெயர்ப்பாளரும் ஆன Fineberg அவர்களுக்கு ஆசிரியராக இருந்தார். அவர் போலந்து-யூத சமூகப்பின்னணி கொண்டவர். Borodin, Tom Quelch, Balabanov தம்பதியர், தொழிற்சங்க தலைவரும் அமெரிக்க கம்யூனிஸ்டுமான Boris Reinstein (ரஷ்ய வம்சாவளியை சேர்ந்தவர்) ஆகியோரும் பயிற்சி அளித்தார்கள். இந்த ஆசிரியர் குழாமுக்கு ஆங்கிலம் தெரியும் என்பதால் இந்திய முகாஜிர் இளைஞர் குழுவுடன் எளிதில் உரையாட முடியும் என்பதுதான் முக்கிய காரணம். மதிய நேரங்களில் ராணுவ வகுப்புகள் நடந்தன. தொழிற்சங்க தலைவர் ஆன  Reinstein எவ்வாறு தொழிலாளர்கள் இயக்கத்தை கட்டுகின்றார் என்று கற்றுக்கொள்ளும் பொருட்டு இந்திய இளைஞர்கள் அவரது அலுவலகத்துக்கும் செல்வார்கள்.

6. அவ்வப்போது பயணங்களும் ஏற்பாடு செய்யப்பட்டன. கிழக்கு, மேற்கு நாடுகளின் பிரதிநிதிகளுக்காக ஏற்பாடு செய்யப்படும் பயணங்களில் இந்திய இளைஞர்களும் இணைத்துக்கொள்ளப்பட்டனர். அது போன்ற ஒரு பயணத்தில் கிரெம்ளினில் நேரடியாகவே லெனினை சந்திக்கும் வாய்ப்பு உஸ்மானிக்கு வாய்த்தது. வெளிநாட்டுப் பிரதிநிதிகளுடன் லெனின் கைகுலுக்கியதுடன் இந்த சந்திப்பு முடிந்தது. மிகக்குறைந்த அறைகலன்கள் கொண்டது லெனினுடைய அறை. கார்ல் மார்க்சின் உருவப்படம் இருந்த தன் அலுவலக அறையின் வாசலில் அவர் நின்றுகொண்டு இருந்தார். 'ஒளிவீசும் கண்களும் ஆளை வீழ்த்தும் புன்னகையும்' கொண்ட லெனினைக் கண்டு உஸ்மானி பரவசப்பட்டார். 1921 ஏப்ரலின் நடுவே மாஸ்க்கோவில் அவர்களது தொடக்கநிலைக்கல்வி முடிந்தது. மாஸ்க்கோவில் புதிதாக தொடங்கப்பட்டு இருந்த University of the Toilers of the East இல் சேர்ந்து பயில மீண்டும் மாஸ்க்கோவுக்கு வந்தபோது கம்யூனிஸ்ட் அகிலத்தின் மூன்றாவது காங்கிரஸ் தொடங்க இருந்தது. லக்ஸ் ஹோட்டல் புரட்சியாளர் கூட்டத்தால் மீண்டும் பரபரப்பானது. இந்தியாவில் இருந்து வந்தவர்கள் கூட்டமும் இதில் அடங்கும் எனினும் தனிப்பட்ட, அரசியல் கருத்துவேறுபாடுகள் காரணமாக இவர்கள் தங்களுக்குள் பழகாமல் தள்ளி நின்றார்கள். கட்சியை கட்டுவதில் ராயுடனும் முகர்ஜியுடனும் ஏற்பட்ட கடுமையான கருத்துவேறுபாடுகள் காரணமாக கட்சியில் இருந்து நீக்கப்பட்ட Abdur Rab, மண்டயம் பி திருமலாச்சார்யா ஆகியோரும் லக்சில் தங்கியிருந்தனர். தவிர, பெர்லின் கட்சிக்குழுவின் உறுப்பினர்கள் ஆன வீரேந்திரநாத் சட்டோபாத்யாய, புபேந்திரநாத் தத்தா, Khankhoje, டாக்டர் அப்துல் வாஹித், Ghulam Ambia Khan Luhani, நம்பியார் உள்ளிட்ட 'பல குப்தாக்கள், பல தாஸ்குப்தாக்கள்' - இவர்கள் நாடுகடந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைய மறுத்தவர்கள் - ஆகியோரும் இருந்தார்கள். உஸ்மானி கடுமையான நோயால் பாதிக்கப்பட்டு குணமாகி வந்ததால் லக்சில் அவருக்கு அறை கொடுக்கப்பட்டது, மற்றவர்கள் வேறு இடங்களில் தங்கினார்கள். ஆக கம்யூனிஸ்ட் அகிலத்தின் செயற்குழு கூட்டங்களை நேரில் பார்க்கும் பெரும் வாய்ப்பு உஸ்மானிக்கு வாய்த்தது. கட்சி, இயக்கம் ஆகிய நடவடிக்கைகளை தாண்டிய அற்புதமான வாழ்க்கையை வாழ்ந்ததாக உஸ்மானியின் பதிவுகள் சொல்கின்றன. லக்ஸ் ஹோட்டலில் இருந்த போல்ஷ்விக் கட்சியின் தலைவர்கள், வெளிநாட்டு பிரதிநிதிகள், அகிலத்தின் தலைவர்கள் என அங்கு நிலவிய அரிய, காணக்கிடைக்காத சூழ்நிலையை எம் என் ராயும் பதிவு செய்துள்ளார். முதலாம் உலகப்போர், உள்நாட்டுப்போர் ஆகியவற்றின் விளைவாக மக்களுக்கு அத்தியாவசியபொருட்கள் கிடைப்பதில் சிரமங்கள் இருந்தாலும், இங்கே தோழமை உணர்வுக்கும் விவாதங்களுக்கும் அதிகாலை வரை நீளும் இசைக்கும் நடனத்துக்கும் குறைவில்லாமல் இருந்தது. 

(முற்றும்)

...... .....

Courtesy: Leftword

...

புகைப்படத்தில் லெனின், மாக்சிம் கோர்க்கி, எம் என் ராய் ஆகியோர் இருக்கின்றார்கள். இரண்டாவது அகிலத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படம். Courtesy: medium.com

... ...

சவுகத் உஸ்மானி: 1901-1978. 1920இல் சோவியத் யூனியனில் நிறுவப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் கிளையின் உறுப்பினர்களில் ஒருவர். பிற்காலத்தில் கான்பூர் சதி வழக்கு, மீரட் சதி வழக்கு போன்றவற்றில் பிரிட்டிஷ் அரசு அவருக்கு பல ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது.

சனி, பிப்ரவரி 27, 2021

சங்கரின் 'இந்தியன்', அப்துல்கலாம், அன்னா ஹசாரே, சகாயம்....

1

ஊழலின் ஊற்றுக்கண் முதலாளித்துவ சமூகமே. கார்பொரேடுகளின் நலன் பொருட்டும் சொத்து சேர்ப்பதன் பொருட்டும் ஊழலைக் கட்டிக்காப்பது ஆட்சியில் இருக்கின்ற அரசியல்வாதிகள்+துணை போகும் அதிகார வர்க்க கூட்டணிதான். சகாயம் போன்றவர்கள் தம் பதவிக்காலத்தில் லஞ்ச லாவண்யங்களுக்கு அடிபணியாமல் நேர்மையாக இருந்திருக்கலாம். 

அப்துல்கலாம் என்ற தனி மனிதர் கூட அப்படித்தான் இருந்தார், மக்கள் பணத்தில் ஊதியம் பெற்ற, நேர்மையான ஒரு அரசு அதிகாரியாக இருந்த வரை எல்லாம் சரிதான். அவருடைய அந்த க்ளீன் அடையாளத்தை மக்கள் மத்தியில் தனக்கான முதலீடாக்கி ஆர் எஸ் எஸ் கும்பல் (ஜனாதிபதி தேர்தலில்) அரசியல் சித்து விளையாட்டை நடத்த முற்பட்டதை புரிந்துகொள்ள முடியாத ஒரு மனிதராக அவர் இருந்தது எதை காட்டியது?

கனவு காண சொன்னார். 2020இல் இந்தியா வல்லரசு நாடாகும் என்றார். தம் சொந்தப்பணத்தை எடுக்கஏ டி எம் முன்னால் மணிக்கணக்கில் நின்ற மக்களை போலீஸ் அடித்து விரட்டியதையும் கொரோனா காலத்தில் 1000, 2000 கி மீ தொலைவில் உள்ள தம் கிராமங்களுக்கு செருப்பு இல்லாமல் பட்டினி வயிற்றுடன் மக்கள் நடந்து செத்ததையும்தான் இந்த தேசம் கண்டது. பெற்ற தாய் ரயில் பிளாட்பாரத்தில் செத்துகிடப்பது அறியாமல், பால் குடிக்க வேண்டி தன் தாயின் சேலையை பற்றி இழுத்துக்கொண்டு இருந்த குழந்தைக்கு தெரியாது, இந்தியாவிடம் அணுகுண்டு இருந்தது என்று. கொரோனா ஊரடங்கில் மாட்டிக்கொண்டு சொந்த ஊர் திரும்ப எண்ணியும் போக்குவரத்தும் உணவும் இன்றி நடுத்தெருவில் நின்ற தகப்பனை, தன் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு 1000 கிலோமீட்டருக்கும் மேல் பயணித்து ஊர் திரும்பிய அந்த இளம்பெண்ணுக்கும், பசியால் வாடியும் செருப்பு அறுந்து ரத்தம் வடியும் கால்களுடன் நடந்தும் வழியில் செத்த உறவினர்களை அப்படியே விட்டுவிட்டு சொந்த ஊர் திரும்பிய பல லட்சம் தொழிலாளர்களுக்கும் அணுகுண்டால், சந்திராயனால், மங்கள்யானால் மயிரளவும் பயனில்லை.

2

வெறும் தொழிநுட்ப அறிவும் புத்தக அறிவும் மட்டுமே அறிந்த ஒருவர், மாத ஊதியம் பெறும் ஒரு அரசு ஊழியராக மட்டுமே இருக்க தகுதி படைத்தவர், அவ்வளவே. ஒரு விஞ்ஞானி என்பவனுக்கு சமூகம் குறித்த அறிவும் சமூக அறிவியல், பொருளாதாரம், வர்க்க அரசியல் குறித்த தெளிவான பார்வையும் இருக்க வேண்டும், இல்லையேல் அவன் வெறும் தொழிநுட்பாளன், பொறியாளன், அவ்வளவே. சகாயத்துக்கும் இது பொருந்தும். கலாம், சகாயம் போன்றவர்கள், ஐன்ஸ்டீன் போன்ற மேதைகளின் வரலாற்றை ஊன்றிப்படிக்க வேண்டும். வாய்ப்பந்தல் வேலைக்கு உதவாது. பேரழிவை உண்டாக்க வல்ல ஒரு புதிய ஆயுதத்தை அமெரிக்கா கண்டுபிடித்து இருப்பதாக அன்றைய அமெரிக்க ஜனாதிபதி ஹாரி ட்ரூமன் சோவியத் ரஷ்யாவின் தலைவர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதுகின்றார். அது என்ன ஆயுதம் என்று வெட்ட வெளிச்சம் ஆக்க வேண்டும் என வலியுறுத்தி ஐன்ஸ்டீன், ருதர் போர்ட், டால்டன், ஃபெர்மி, வானவர் புஷ் ஆகிய மகத்தான விஞ்ஞானிகள் ட்ருமனுக்கு கடிதம் எழுதுகின்றனர். அணு ஆயுதங்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்கின்றனர். 

மாத ஊதியம் பெற்று வந்த அப்துல்கலாம், அணு ஆயுதங்களின் காதலராக மட்டுமே இருக்கும் அளவுக்குத்தான் அவர் சிந்தனை மட்டம் இருந்தது. அதற்கு மேல் சிந்திக்க வல்லமை இல்லாமல் இருந்ததால்தான், எரிந்து புகைந்து கொண்டு இருந்த, சாமானிய மக்களின் ரத்தம் ஆறாக ஓடிக்கொண்டு இருந்த குஜராத்துக்கு சென்று ஒரு வார்த்தையும் பேசாமல் விருது வாங்கிக்கொண்டு திரும்ப முடிந்தது. தேச விடுதலைக்குப் பின் மிக மோசமான மதக்கலவரங்களை குஜராத்தில் நடத்திக்கொண்டு இருந்த ஆர் எஸ் எஸ், விஷ்வ ஹிந்து பரிஷத், பி ஜே பி கும்பல், ஜனாதிபதி வேட்பாளராக அவர் பெயரை முன் வைத்தபோது, அவர் நிராகரித்து இருக்க வேண்டும், ஆனால் வெட்கம் இன்றி "எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது" என்று பகவத் கீதை வசனம் பேச வைத்தது.  வரலாறு குறித்த அறிவும் சமூக விஞ்ஞானம் பற்றிய அறிவும் இல்லாமல் போனதால்தான் காந்தியின் உருவப்படத்துக்கு நேர் எதிராக சவர்க்காரின் படத்தை திறந்து வைக்கும்போது மனதில் சிறிதும் சஞ்சலம் இல்லாமல் இருக்க முடிந்தது. இஸ்லாமிய மக்கள் மீது வெறுப்பை உமிழ்வது தவிர வேறு ஒன்றும் அறியாத மேல்சாதி பிராமணர்களுக்கும் ஆர் எஸ் எஸ் பிஜேபி வகையறாக்களுக்கும் அப்துல்கலாம் மட்டும் பிரியமான காதலராக இருப்பதை புரிந்துகொள்ள பெரிய கணக்குகளை போட்டுப்பார்க்க அவசியம் இல்லை.

வரலாறும் சமூக விஞ்ஞானமும் அறிந்து இருந்ததால்தான், சவர்க்காருக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் என்ற வாஜ்பேயியின்   பரிந்துரையை ஜனாதிபதியாக இருந்த கே  ஆர் நாராயணன் அவர்களால் குப்பையில் எறிய முடிந்தது.

3

அணுகுண்டு இருந்தாப்போதும், நாடு வல்லரசு ஆயிடும்ன்னு கலாம் சொன்னது எவ்வளவு கேலிக்கு உரியதோ அதே போல்தான் 'ஊழலுக்கு எதிராக' என்று கிளம்புவதும். இந்தியன் படத்தில் ரேஷன் கடை ஊழியர்களையும் ஆர் டி ஓ ஆபீஸ் ஏஜெண்டுகளையும் வர்மத்தில் முறுக்கி வாயை கோணலாக்கி ஸ்பெஷல் கத்தியால் குத்தி சங்கரின் சேனாபதி ஊழலை ஒழித்த கதைக்கும் அம்புலிமாமாவில் சர்க்கார் மேஜிக் கதைக்கும் கலாம், சகாயம், அன்னா ஹசாரே போன்றோர் வெறும் வாயில் சுடும் வெத்து வேட்டு வல்லரசு வடைக்கும் பெரிய வேறுபாடு ஒண்ணும் இல்லை.

அன்னா ஹசாரேயின் 'ஊழலுக்கு எதிரான' போரில் அவர் மேடையில் தேசியக்கொடியை கையில் ஏந்தி வீசிக்கொண்டு இருந்த முன்னாள் போலீஸ் அதிகாரி கிரண்பேடிக்கு கவர்னர் பதவி கொடுத்தது யார் என்பதையும், பதவிக்கு வந்த பின் மேற்படி ஜனநாயகம் அவர் கையில் சிக்கி என்ன பாடுபட்டது என்பதையும் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றனர். அன்னா ஹசாரேயை மக்கள் தேடிக்கொண்டு இருக்கின்றார்கள்.

கப்பற்படை புரட்சியும் பின்னணியும்

Untold story of 1946 Naval Mutiny என்ற நூல் ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரி Lt Cdr G D ஷர்மாஎன்பவர் எழுதியது. 1946 மாபெரும் கடற்படை புரட்சி குறித்து அடிப்படையான பல தகவல்கள் இந்நூலில் உள்ளன. அவற்றில் இருந்து சில இங்கே.

1

1942-45க்கு இடையில், பிரிட்டிஷ் இந்திய கடற்படையில் ஒன்பது கிளர்ச்சிகள் நிகழ்ந்ததாக பதிவுகள் உள்ளன. காரணங்கள் பல. மோசமான உணவு, பிரிட்டிஷ் அதிகாரிகளின் கொடூரமான நடத்தை, கேவலமான வசவுகள், மத உணர்வுகளை பாதிக்கும் இழிவான வசவுகள், சிறிய தவறுகளுக்கும் கொடுமையான தண்டனைகள் என பல காரணங்கள். 9 கிளர்ச்சிகள் எவை? 

3 மார்ச் 1942, Mechanical Training Establishment, Bombay

22  ஜூன் 1942, HMIS Konkan, Tobermory, UK

செப் 1942, HMIS Orissa, New London, South Africa

செப் 1942, HMIS Khyber, UK

27,28 ஜூன் 1944, HMIS Akbar, Bombay

30 ஜூலை 1944, HMIS Hamlawar

29-31 ஜூலை 1944, HMIS Shivaji

16 மார்ச் 1945, HMIS Himalaya, Karachi

17 ஏப்ரல் 1945, HMIS Shivaji.

1939இல், அதாவது இரண்டாம் உலகப்போரின் தொடக்கத்தில் கடற்படையின் அதிகாரிகள் எண்ணிக்கை 212, 20% இந்தியர்கள், 80% பிரிட்டிஷ் வெள்ளையர்கள். 1945இல் அதிகாரிகள் எண்ணிக்கை 2852 ஆக உயர்ந்தது. 1377 பேர் பிரிட்டிஷ் வெள்ளையர்கள், 949 இந்தியர்கள், 249 ஆங்கிலோ இந்தியர்கள், 70 பேர் பிற நாட்டவர்கள். 

அதிகாரிகள் அல்லாத வீரர்கள் 1939இல் 1475, அதுவே 1945இல் 21193. போர் நெடுகிலும் பிரிட்டிஷ் வெள்ளையர் மட்டுமே அதிகாரிகளாக இருந்தனர். 

2

கப்பலில் வாழ்க்கை எப்படி இருந்தது? இட நெருக்கடி, மோசமான உணவு, குடிநீர் பற்றாக்குறை, தொடர்ச்சியான வேலைப்பளுவால் நோய்கள், கடல் பயணத்தால் ஆன நோய்கள், மருத்துவம் இன்மை, சிறு முணுமுணுப்புக்கும் கடுமையான தண்டனைகள், குறைபாடுகளை விதிகளுக்கு உட்பட்டு தெரிவித்தாலும் கண்டுகொள்ளாமல் விடுவது மட்டும் அன்றி மனு அளித்தவருக்கு கொடுமையான தண்டனை, விடுமுறை மறுப்பு என தொடர்கின்றன.

சுபாஷ் சந்திர போஸ் தலைமையில் ஆன INA ஜப்பானுடன் சேர்ந்து பிரிட்டனை எதிர்த்துப் போராடியது. போர் முடிவில் ஐ என் ஏ வீரர்களை பிரிட்டிஷ் அரசு கைது செய்தது. டெல்லி செங்கோட்டையில் விசாரணை நடந்தது. ஜவஹர்லால் நேரு ஐ என் ஏ வீரர்களுக்கு ஆதரவாக வாதிட்டார். பிரிட்டிஷ் அரசின் போக்கை எதிர்த்து நாடெங்கும் மக்கள் கண்டனம் முழங்கினர். இந்த எதிர்ப்புணர்வு படை வீரர்கள் மத்தியிலும் பெரும் அதிருப்தியையும் குமுறலையும் உருவாக்கியது. 

மேற்கண்ட காரணங்கள் ஒருபுறம் எனில்,இரண்டாம் உலகப்போர் முடிந்த நிலையில், தங்களை படையில் இருந்து விடுவித்து ஊர்களுக்கு அனுப்ப வேண்டும் என்ற மனக்கொந்தளிப்பும் வீரர்கள் இடையே கடுமையான அதிருப்தியை உருவாக்கியது.

3

HMIS தல்வாரில் கிளர்ச்சியின் தொடக்கம்

வீரர்களுக்கு மாமிச உணவு, காய்கறி உணவு என இரண்டு வகை வழங்கப்பட்டது. பொதுவாக காலையில் எப்போதும் தரப்படும் உணவு ரொட்டி, பருப்புக்குழம்பு. மதியம் இதே குழம்பில் தண்ணீரை ஊற்றி சோறுடன் கொடுப்பார்கள். 1946 பிப்ரவரி 17 அன்று 29 வீரர்கள் காலை உணவை உண்ண மறுத்தார்கள். மிக மோசமான, நாற்றம் அடிக்கும் உணவை தங்களால் உண்ண முடியாது என மேல் அதிகாரியிடம் புகார் அளித்தார்கள். உணவு பற்றி இப்படியான புகார்கள் மிக மிக சாதாரணம் என்பதால் உயர்மட்ட அதிகாரிக்கு இந்த நிகழ்வு சொல்லப்படாமல் மறைக்கப்பட்டது.  

கமாண்டர் கிங் என்பவர் அப்போது உயர் அதிகாரி. மிக மோசமான சொற்களால் வீரர்களை வசைப்பாடும் அதிகாரி. இவரது இந்த நடத்தை குறித்து புகார் செய்த 14 வீரர்களை, மறுநாள் பிப்ரவரி 18 அன்று கிங் விசாரணைக்கு சம்மன் செய்தார். தற்செயலாக அன்று காலை உணவை மறுத்து மிகபல வீரர்கள் உணவு அறையில் இருந்து வெளியேறி முழக்கங்களை எழுப்பினர். காலை 8.45 மணிக்கு அணிவகுப்புக்கு வருமாறு அழைக்கப்பட்ட போது ஒரு வீரர் கூட வரவில்லை என்பது நிலைமை மோசம் என்பதை உணர்த்தியது. 9.15 மணிக்கு அங்கு வந்த கிங், நிலைமையை தெரிந்துகொண்டு ஒரு வார்த்தையும் பேசாமல் காலை உணவுக்கு வீட்டுக்கு சென்றார். திரும்பி வரும்போது வீரர்கள் ஜெய் ஹிந்த் முழக்கம் எழுப்பிக்கொண்டு இருந்தார்கள். 

பேச வந்த அதிகாரிகளை சத்தம்போட்டு திருப்பி அனுப்பினார்கள். சமிக்ஞை பிரிவில் signal centre இருந்த வீரர்களும் சேர்ந்துகொண்டபோது கிளர்ச்சியின் மையப்பொறி பற்ற வைக்கப்பட்டது.

இதற்கு முன்பாகவே பிப்ரவரி 1 அன்று இரவில், முகாமின் சுவரில் ஜெய் ஹிந்த், வெள்ளையனே வெளியேறு ஆகிய முழக்கங்கள் பெயின்டில் எழுதப்பட்டன. கடற்படை கொண்டாட்ட தினம் ஆன பிப்ரவரி 1 அன்று அவ்வாறு முகத்தில் அறைந்தது போல் எழுதப்பட்டு இருந்தது என்பது பெருத்த அவமானத்துக்கு உரியது. 2ஆம் நாள் நள்ளிரவில் தந்தி அனுப்பும் வீரர் Balai Chandra Dutt கைகளில் பெயிண்ட் கறைகளுடன் நடமாடியதை கண்ட உயர் அதிகாரி, தத்தை கைது செய்தான். தத்தின் லாக்கர் திறக்கப்பட்டது. பல கடிதங்களும் Speeches of Pandit Jawaharlal Nehru, The Communist answer to the Congress charges ஆகிய இரு நூல்களும் கண்டுபிடிக்கப்பட்டன.  கூடவே கண்டுபிடிக்கபட்ட ஒரு துண்டறிக்கை, இந்தியாவின் முழுமையான விடுதலையை வலியுறுத்தியது மட்டும் இன்றி வெள்ளையர்களை இந்தியாவில் இருந்து வெளியேற்ற ஒரே வழி மீண்டும் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை நடத்துவது மட்டுமே என்றும் இதற்காக ஆசாத் ஹிந்துஸ்தான் என்ற அமைப்பை உருவாக்க வேண்டும் என்றும் சொன்னது.

கிளர்ச்சியின் மூலகர்த்தாவை பிடித்துவிட்டோம் என உயர் அதிகாரிகள் கும்மாளம் போட்டனர். ஆனால் தல்வாரின் தலைமை அதிகாரி கிங்கின் காரில், பிப்ரவரி 6 நள்ளிரவில் வெள்ளையனே வெளியேறு என்று எழுதப்பட்டது மட்டும் இன்றி டயர்களில் காற்றும் வெளியேற்றப்பட்டு இருந்தது. கூடவே கிங்குக்கு மிரட்டல் கடிதங்களும் வந்தன. 8ஆம் நாள் காலையில் தல்வாரில் முன்னறிவிப்பு இன்றி பார்வையிட வந்த கிங் பெண் வீரர்கள் பகுதியில் நுழைந்தபோது, சிலர் பூனை போல ஒலியெழுப்பி அவமானப் படுத்தினர். கிங் மிக மோசமான சொற்களால் வசை பாடினான். வேசை மகன்கள், காட்டுமிராண்டிகள், கூலிகாரப்பயல்கள் போன்ற சொற்கள். 

கிங்கின் வசைபாடுதல் குறித்து புகார் செய்த 14 வீரர்களை விசாரிக்க 18 பிப்ரவரி அன்று நீதிமன்றம் கூடியது. "நான் முகாமுக்கு சென்றபோது வீரர்கள் யாரும் என்னை கண்டுகொள்ளவில்லை, எழுந்து நில்லுங்கள் என்று நான் உத்தரவு இட்டேன், அப்போதும் அவர்கள் நிற்கவில்லை" என்று விசாரணையின்போது கிங் வாக்குமூலம் அளித்துள்ளார். 

4

தல்வாரில் கிளர்ச்சியின் சங்கொலி

18 பிப்ரவரி காலை 0730: காலை உணவை வீரர்கள் புறக்கணித்தனர்.

0905: கமாண்டர் கிங் வருகை, ஒரு வார்த்தையும் பேசாமல் திரும்பி சென்றார்

0945: அணிவகுப்புக்கு உத்தரவு இடப்பட்டது, ஆனால் ஜூனியர் வீரர்கள் வர மறுப்பு

1045: நிலைமையை பாம்பேயில் இருந்த Flag Officer க்கு கிங் தெரிவிக்கின்றார். பெண் வீரர்கள் வெளியேற்றப் பட்டனர்.

1130: வெடிபொருட்கள், ஆயுதங்களை Castle Barracks க்கு வீரர்கள் எடுத்துக்கொண்டு சென்றார்கள், கிளர்ச்சி அங்கும் பரவும் என்பதை அதிகாரிகள் எதிர்பார்க்கவில்லை.

1200: Flag Officer பேச்சுவார்த்தை நடத்த வருகின்றார். அதற்கு முன் வீரர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று கட்டளை இடுகின்றார். 1220க்கு அங்கிருந்து திரும்புகின்றார்.

1700: கிங் நீக்கப்பட்டு Inigo James என்ற அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார் என்று Flag Officer அறிவித்ததுடன், 19ஆம் தேதி காலை 0930 மணிக்கு வீரர்கள் தம் புகார் மனுவை அளிக்கலாம், ஆனால் பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் வீரர்களின் பிரதிநிதிகள் பழிவாங்கப்பட மாட்டார்கள் என்றும் கூறுகிறார்.

இதன் பின் Leading Signalman கான் என்பவர் தலைமையில் 14 பேர் கொண்ட போராட்டக்குழு அமைக்கப்பட்டது. Free Press Journal  அலுவலகத்துக்கு சென்ற ஒரு வீரர், வேலை நிறுத்தம் செய்யும் செய்தியை கொடுக்கின்றார்.

... .... ...


நூலில் கம்யூனிஸ்டுகள் இப்போராட்டத்தில் எந்த வகையிலும் உதவவில்லை என்று நூலாசிரியர் ஒரு வரியில் சொல்லிவிட்டு போகின்றார். 1948இல் இந்திய கடற்படையில் சேர்ந்த அவருக்கு, கம்யூனிஸ்ட்டுக்களின் மகத்தான பங்களிப்பை பதிவிடுவதிலும், காங்கிரசின், காந்தியின் துரோக நிலையை வெளிச்சம் ஆக்குவதிலும் ஒரு ராணுவ அதிகாரி என்ற முறையில் சங்கடங்கள் இருந்து இருக்கலாம். 

நூல் வெளியீடு:Vij Books India Pvt Ltd, New Delhi

1946 பிப்ரவரி கப்பற்படை புரட்சி


1942 வெள்ளையனே வெளியேறு இயக்கத்துக்குப் பிறகு, விடுதலைபோராட்ட இயக்கம் சொல்லத்தக்க பெரிய அளவிலான மக்கள் இயக்கங்களை திட்டமிடவில்லை. அநேகமாக காங்கிரஸ் இயக்கம் முடங்கிப்போனது என்றே சொல்ல வேண்டும்.  ஆனால் 1947இல் தேச விடுதலை, இது எப்படி சாத்தியம் ஆனது?

1939இல் இரண்டாவது உலகப்போர் தொடங்கியது. ஹிட்லர் தொடங்கி வைத்த இந்தப் பேரழிவு, 1945இல் முடிவுக்கு வந்தது. 20 கோடி சோவியத் மக்களில் 2 கோடி மக்கள் இந்த உலகப்போரில் தம் உயிரை  ஈந்தனர். போரின் தொடக்க காலத்தில் அமெரிக்காவுக்கு ஒரு கனவு இருந்தது, அதாவது ஜெர்மானிய ஹிட்லர், இத்தாலிய முசோலினி, கிழக்கே ஜப்பான் ஆகியோர் இணைந்து ஒரு வேளை சோவியத் யூனியனை அழித்தால் மவுனமாக நாம் அதை அனுமதிப்போம் என்பதே அக்கனவு. 1941 ஜூன் 22 அன்று ஹிட்லர் சோவியத்தின் மீது தாக்குதல் தொடங்கினான். ஆனால் வரலாறு அமெரிக்காவின் கனவை மண்ணாக்கியது. சோவியத் படைகள் ஒருவேளை ஹிட்லரை அழித்திடாமல் இருந்திருந்தால், ஹிட்லர் அமெரிக்காவையும் அழித்திருப்பான் என்பதே உண்மை.

இங்கே இந்தியாவில் உலகப்போரின் பின்னணியில் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது என தோழர் பசவ புன்னையா பிற்காலத்தில் எழுதினார். கட்சி பாசிச யுத்த எதிர்ப்பு நிலை எடுத்தது. இந்த நிலைப்பாடு மக்களிடையே அதிருப்தியை உருவாக்கியது. நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து, இன்னும் கூட சற்று நீக்குப்போகுடன், தந்திரோபாயமாக நிலைமையை கையாண்டு இருந்திருக்கலாம் என பின்னாட்களில் கட்சி தன் விமர்சனம் செய்துகொள்ள வேண்டி இருந்தது. கட்சியின் இந்த நிலைப்பாட்டை, காங்கிரஸின் பெரும் செல்வந்தர்களும் தலைவர்களும் தம் மோசமான கம்யூனிச எதிர்ப்பு பிரச்சாரத்துக்கு பயன்படுத்திக் கொண்டார்கள். ஆனால் அதே காங்கிரஸ் கட்சிக்குள் இருந்த முற்போக்கு சிந்தனையாளர்கள், பாசிசம் தோல்வி அடைய வேண்டும் என்றே ஆசைப்பட்டார்கள். காரணம், போரின் போக்கும் போரின் முடிவும் இந்தியாவின் விடுதலையை பாதிக்கும் என்பதை அவர்களும் உணர்ந்து இருந்தார்கள். குறிப்பாக சோவியத் வெற்றி பெறுவதும் சரி, வீழ்வதும் சரி, அது சோவியத்துடன் நின்று விடப்போவதில்லை, மாறாக உலகப் பாட்டாளி வர்க்கத்தின் நலனையும், உலகெங்கும் பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தை எதிர்த்துப்போராடி வரும் மக்கள் இயக்கங்களையும் நேர்மறையாகவோ எதிர்மறையாகவோ பாதிக்கும் என்ற கம்யூனிஸ்டுகளின் நிலைப்பாட்டை அத்தகைய முற்போக்காளர்களும் அறிவுபூர்வமாக சிந்திக்கும் மக்களும் மட்டுமே அன்று புரிந்துகொண்டு இருந்தனர்.

இப்பின்னணியில்தான் 1942 வெள்ளையனே வெளியேறு இயக்கம் Quit India தொடங்கியது. ஆகஸ்ட் 9 அன்று காந்தியும் பிற தலைவர்களும் பிரிட்டிஷ் ஆட்சியால் கைது செய்யப்பட்டனர். கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் பி சி ஜோஷி, பிரிட்டிஷ் அரசின் இந்த அடக்குமுறையை கண்டித்து அறிக்கை வெளியிட்டார். கூடவே, கம்யூனிஸ்ட்டுக்கள் மீது ஏவப்பட்ட அடக்குமுறை, துப்பாக்கிச்சூடு ஆகியன குறித்தும் காந்திக்கு எழுதிய கடிதத்தில் ஜோஷி குறிப்பிட்டு, கம்யூனிஸ்டுகள் மீதான அவதூறு தவறு என்று சுட்டிகாட்ட வேண்டியிருந்தது. "...இந்த இரண்டு வருடங்களில் எங்கள் தோழர்கள் நான்கு பேர் (கேரளாவில் கையூர் தியாகிகள்) பிரிட்டிஷ் ஆட்சியால் தூக்கில் இடப்பட்டார்கள். 400 பேர் வரை இன்னும் சிறையில் உள்ளனர். 100 தோழர்கள் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகின்றனர். பிரிட்டிஷ் சர்க்கார் எங்களுக்கு செய்யும் உதவியை பார்த்தீர்களா?" என்று எழுதினார்.

பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் கிரீடத்தின் மிக உயர்ந்த ஜொலிக்கின்ற வைரம் இந்தியாவே என்று சொன்ன பிரிட்டிஷ் ஆட்சியாளர்களை, இனிமேலும் நாம் இந்தியாவில் காலம் தள்ள முடியாது என்று புலம்ப வைக்கும் அளவுக்கு அவர்களுக்கு இறுதி நெருக்கடியை கொடுத்தது 1946 கப்பற்படை புரட்சிதான். 

1942 ஆகஸ்ட் 13 அன்று உத்தர பிரதேசம் மதுபங்கா காவல் நிலையம் முற்றுகை, பிஹார், வங்கம் உள்ளிட்ட பல மாநிலங்களில் நடந்த போராட்டங்களில் ,  பல நூறு மக்களை போலீசும் ராணுவமும் சுட்டுக் கொன்றது, பெண்களை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியது. இடையில் வந்ததுதான் வங்கப்பஞ்சம், அது அன்றைய பிரிட்டிஷ் பிரதமர் சரச்சில் திட்டமிட்டு உருவாக்கிய செயற்கையான பஞ்சம். இந்தியாவில் இருந்த, இந்தியாவுக்கு பிற நாடுகளில் இருந்து வந்து கொண்டு இருந்த அனைத்து உணவுப்பொருட்களையும் பிரிட்டனுக்கு கொண்டு சென்று, இந்தியாவில் பல லட்சக்கணக்கான மக்கள் செத்து மடியக் காரணமாக இருந்தவர் சர்ச்சில்.

... ....

1946 பிப்ரவரி 18 அன்று, பம்பாயில் பிரிட்டிஷ் கப்பற்படையில் இருந்த இந்திய மாலுமிகள், HMIS தல்வார் என்னும் போர்க்கப்பலில் இருந்து பிரிட்டிஷ் யூனியன் ஜாக் கொடியை இறக்கிவிட்டு, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக் கட்சிகளின் கொடிகளை ஏற்றிப் பறக்கவிட்டனர். பிரிட்டிஷ் ராணுவ அதிகாரிகளின் மோசமான, கொடூரமான நடத்தையை கண்டித்தும்    தங்களது பிற கோரிக்கைகளை முன்வைத்தும் இந்தப் போராட்டம் தொடங்கப் பட்டாலும், பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான உணர்வே மேலோங்கி இருந்தது. தொடர்ந்து மேலும் பல கப்பல்களுக்கும் போராட்டம் பரவியது. போராட்டம் கராச்சி, சென்னை தூத்துக்குடி என இந்தியா எங்கும் பரவியது. போராடும் மாலுமிகளுக்கு ஆதரவாக, லட்சக்கணக்கான பொதுமக்கள், மாணவர்கள் வேலை நிறுத்தங்கள், ஊர்வலங்களை நடத்தினார்கள். மக்கள் தம் வீடுகளில் சப்பாத்தி, ரொட்டிகளை சுட்டு பழங்களுடன் சுமந்து சென்று போராடும் கப்பற்படை வீரர்களுக்கு அள்ளிக்கொடுத்தார்கள். ராணுவ வீரர்களை ஏவி மாலுமிகளை சுடுமாறு அதிகாரிகள் உத்தரவு இட்டார்கள், ஆனால் சகா வீரர்களை சுட மறுத்த நிகழ்வு வரலாற்றில் மிக முக்கியமானது. அதிகாரிகளின் உத்தரவை படை வீரர்கள் மீறியதை நவீன காலத்தில் அநேகமாக முதல் முறையாக அங்கேதான் பார்க்க முடிந்தது.

போராடும் வீரர்கள், தங்களுக்கு ஆதரவு அளிக்குமாறு வேண்டியபோது, காங்கிரசும் லீக்கும் ஆதரவு தர மறுத்தனர். கட்டுக்கோப்பான ராணுவ வீரர்கள் தம் உறுதிமொழிக்கு மாறாக போராட்டத்தில் இறங்கியதை தன்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றும், நாளை விடுதலை பெற்ற இந்தியாவிலும் அவர்கள் இப்படித்தான் அரசை எதிர்த்துப் போராடக்கூடும் என்றும், இதைக் காண 125 வயது வரை வாழ வேண்டுமா என்றும் வெளிப்படையாகவே பேசினார் காந்தி. கம்யூனிஸ்டுகளும் மக்களும் ஆதரிக்க, காங்கிரசும் முஸ்லிம் லீக்கும் கைவிட, மகத்தான ஒரு புரட்சி சில நாட்களில் கைவிடப்பட்டது.

... ... ....

1905இல் சோவியத் புரட்சியை தொடங்கி வைத்த பொட்டெம்கின்னும், 1917இல் ஜார் மன்னனின் குளிர்கால அரண்மனை மீது குண்டு வீசி புரட்சி தொடங்கியதை அறிவித்த அரோரா என்ற கப்பலும், பிற்காலத்தில் சோவியத் அரசால் பாதுகாக்கப் பட்டன. தல்வார் கப்பல் எங்கே?

வெள்ளி, ஜனவரி 29, 2021

மஹாத்மா காந்தியை காப்பாற்றி இருக்க முடியாதா?

நாம் இன்று என்ன செய்கின்றோமோ அதன் மீதுதான் எதிர்காலம் கட்டப்படும் - காந்தி

1

"அவர்தான் தேசப்பிரிவினைக்கு காரணமானவர்; அவர் முஸ்லிம்களை அரவணைத்தார், இந்துக்களை கை விட்டார்; அவரை வாழ அனுமதித்தோம் எனில் ஹிந்து ராஷ்டிரம் அமைய தடங்கலாய் இருந்திருப்பார்; பாகிஸ்தானுக்கு 55 கோடி ரூபாய் கொடுக்குமாறு இந்தியாவை வற்புறுத்தினார்; தேசப்பிரிவினையின் போது இந்து அகதிகளின் துயரங்களை அவர் கண்டுகொள்ளாமல் இருந்தார், ஆனால் இந்தியாவிலேயே தங்கிவிட்ட இஸ்லாமியரகளை ஆதரித்தார்; பாரத்மாதாவை காப்பாற்ற ஒரே வழி அவரை கொல்வதுதான்". கோட்சேவின் ஆதரவாளர்களும் வலதுசாரி இந்துத்வா தீவிரவாதிகளும் காந்தியை கொல்லப்போவதற்கும், கொன்றதற்கும் கடந்த 90 வருடங்களாக சொல்லிவரும் இந்தப் பொய்களை 1947க்குப் பின்னும் இரண்டு மூன்று தலைமுறைகள் நம்பி வளர்ந்துள்ளன.

உண்மை என்ன? மட்டுமின்றி, 1947க்குப் பின் அமைந்த காங்கிரஸ் அரசு உண்மையில் காந்தியின் உயிர் மீது எத்தனை அக்கறை கொண்டு இருந்தது, அவர் வாழ வேண்டும் என்று விரும்பி இருந்தால் அவரைக் காப்பாற்றி இருக்க முடியாதா என்ற கோணம் மிக முக்கியமானது, அதிகம் பேசப்படாதது, விவாதிக்கப்பட வேண்டியது. ஒட்டுமொத்தமான பழியும் அந்த இரண்டு அமைப்புகளை மட்டுமே சாருமா?

2

அவரைக்கொல்ல 5 முறைகளுக்கும் மேல் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அனைத்துமே வலதுசாரி இந்துத்வா தீவிரவாத அமைப்புகள் ஆன ஆர் எஸ் எஸ், ஹிந்து மஹா சபா அமைப்புக்களினால் நடத்தப்பட்டவை. 1934 ஜூன் 25, 1944 ஜூலை, 1944 செப்டம்பர், 1946 ஜூன் 29, 1948 ஜனவரி 20, இறுதியாக ஜனவரி 30 அன்று கொலை செய்யப்பட்டார். உண்மையில் 1934க்கு முன்பாகவே அவர் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அவை கண்டுகொள்ளாமல் விடப்பட்டன, அல்லது தாக்குதல் நடத்தியவர்களை அடையாளம் காண முடியாமல் போனது. எனவே தேதிவாரியான ஆவணங்கள் இல்லாமல் போயின.

இந்த கால வரிசையை கவனித்தால், பாகிஸ்தான், தேசப்பிரிவினை ஆகிய கருத்தாக்கங்கள் முஸ்லீம் லீக்கின் அஜெண்டாவில் இல்லாதிருந்த காலத்திலேயே அவர் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன என்பது புரியும். அவ்வாறெனில், ஆர் எஸ் எஸ், ஹிந்து மஹாசபை சொல்கின்ற, அவரது கொலையை நியாயப்படுத்த முன்வைக்கும் "தேசப்பிரிவினைக்கு அவரே காரணம்" என்ற பிரச்சாரம் எப்படி உண்மை ஆகும்?

இந்த இரண்டு அமைப்புக்களிலும் இருந்த உயர்மட்ட தலைவர்களும் காந்தியின் கொலை முயற்சிகளில் நேரடியாக ஈடுபட்டவர்களும் பெரும்பாலோர் பூனா நகரை சேர்ந்த வலதுசாரி உயர்சாதி இந்துக்கள் என்பது தற்செயலானது அல்ல. அது ஒரு இயக்கம். மூன்று முயற்சிகளில் நாதுராம் கோட்ஸேயும் நாராயண் ஆப்தேயும் பிறரும் இருந்தார்கள், இரண்டு முயற்சிகளில் கோட்ஸே பிடிபட்டான். 

நேரடியாக 1948 ஜனவரி 20க்கு வருவோம். ஹிந்து மஹாசபையின் மதன்லால் காஷ்மீரிலால் பாவா, நாதுராம் கோட்ஸே, நாராயண் ஆப்தே, விஷ்ணு கார்கரே, திகம்பர் பட்கே, கோபால் கோட்ஸே, சங்கர் கிஷ்டய்யா ஆகிய 7 பேர் கூடினார்கள். அவர்கள் திட்டம் இதுதான். டெல்லி பிர்லா மாளிகையில் மாலையில் காந்தியின் பிரார்த்தனை கூட்டத்தில் காந்தியின் மேடைக்கு அருகில் வெடிகுண்டு வீசுவது, மக்கள் கலைந்து ஓடும்போது பட்கே அல்லது கிஷ்டய்யா துப்பாக்கியால் காந்தியை சுட வேண்டும். மதன்லால் பாவா வெடிகுண்டை வீசினான். காந்தி தப்பித்தார். இந்த தாக்குதலுக்குப் பின் மதன்லால் கைது செய்யப்பட்டான். போலீசில் அவன் கொடுத்த வாக்குமூலம் தெளிவானது. காந்தியை கொல்ல பூனாவில் இருந்து வந்துள்ள கும்பலில் தானும் ஒருவன் என்று சொன்னதுடன், அவனும் கூட்டாளிகளும் தங்கியிருந்த டெல்லியில் மரினா ஹோட்டலுக்கு போலீசை அழைத்து சென்றுள்ளான். அங்கு இருந்த ஆடைகளில் NVG என்ற சலவைக்குறி இருந்ததால் அங்கே கோட்ஸேயும் இருந்ததை போலீஸ் உறுதி செய்தது. 

அப்போது பம்பாய் மாகாண காங்கிரஸ் அரசின் உள்துறை அமைச்சராக இருந்தவர் மொரார்ஜி தேசாய். பம்பாயில் Ruia College இல் இந்தி மொழி பேராசிரியர் ஆக இருந்தவர் ஜே சி ஜெயின். காந்தியை கொல்ல வந்துள்ள கும்பலில் தானும் ஒரு ஆள் என்று பாவா தன்னிடம் கூறியதாக ஜெயின் மொரார்ஜியிடம் சொல்லியிருக்கிறார். அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாத மொரார்ஜி, அப்போது மத்திய உள்துறை அமைச்சர் ஆன சர்தார் படேலிடம் சொல்லியிருக்கிறார். ஆனால் அப்படி எல்லாம் நடக்காது என்று பட்டேலும் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளார். நடந்தது என்ன? அடுத்த 10 நாட்களில் அதே கும்பல் காந்தியை அதே இடத்தில் கொன்றது.

3

ஜனவரி 20 முயற்சிக்குப் பின்னர் காங்கிரஸின் மத்திய அரசின் உள்துறை, போலீஸ் நிர்வாகங்கள் எச்சரிக்கை அடைந்து முயற்சி செய்து இருந்தால் குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்திருக்க முடியும். ஏனெனில் ஜனவரி 20 வெடிகுண்டு வீச்சுக்கு பின் கைது செய்யப்பட்ட பாவா, தன் வாக்குமூலத்தில், மராத்தி மொழிப் பத்திரிகைகள் ஆன Hindu Rashtra, Agranee ஆகியவற்றின் ஆசிரியர்கள் ஆன கோட்ஸேயும் ஆப்தேயும் தங்கள் கும்பலை சேர்ந்தவர்கள்தான் என்று சொல்லியிருக்கிறான். மீண்டும் அவன் வருவான் என்றும் சொல்லியிருக்கிறான். பாம்பே, பூனா நகர போலீஸுக்கு இந்த இரண்டு பத்திரிகைகளை நடத்தும் நபர்களை நன்றாகவே தெரியும். ஆனால் டெல்லி போலீஸ் பூனா போலீசின் உதவியை நாடவே இல்லை! இது ஒரு விசித்திரம் எனில், அப்போது டெல்லியில் இருந்த பாம்பே போலீஸ் உதவி கமிஷனர் ஒருவரிடம் பாவாவின் வாக்குமூலத்தை கொடுத்து, பாம்பே சென்று தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து அந்த அதிகாரி என்ன செய்து இருக்க வேண்டும்? பாம்பேக்கு விமானத்தில் சென்று இருக்க வேண்டும், அவரோ ரயிலில் டெல்லியில் இருந்து அலகாபாத் சென்று மீண்டும் இன்னொரு ரயிலை பிடித்து பாம்பே சென்றுள்ளார். அவர் பாம்பே செல்வதற்குள் கோட்ஸே, நாராயண் ஆப்தே, விஷ்ணு கார்கரே ஆகிய மூவரும் பாம்பேயில் இருந்து புறப்பட்டு டெல்லி வந்து சேர்ந்து விட்டார்கள், அதாவது 31ஆம் தேதி அன்று காந்தியை கொல்வதற்கு.

இத்தனை கொலை முயற்சிகளுக்குப் பின்னும் கூட, தனக்கு கூடுதல் பாதுகாப்பை காந்தி மறுத்துள்ளார், தன்னைக் காண வருவோரை பரிசோதனைக்கு உட்படுத்தக் கூடாது என்றும் உறுதியாக இருந்துள்ளார். பூனாவின் கொலைக்கும்பல் பற்றி நன்கு அறிந்து இருந்த பாம்பே, பூனா, அகமத் நகர் போலீஸ்துறையை காந்தியின் பிரார்த்தனை கூட்டங்களில் அதன் பிறகாவது நிறுத்தி இருந்தால் கோட்ஸே, ஆப்தே, கார்கரே ஆகியோரை அவர்கள் அடையாளம் கண்டு பிடித்து இருப்பார்கள். ஒருவேளை 30ஆம் தேதி காந்தி உயிருடன் இருந்திருப்பார்.

சர்தார் பட்டேலிடம் சமர்ப்பிக்கப்பட்ட ஒரு ரகசிய அறிக்கையில், "போலீஸ் அதிகாரிகளும் அரசின் உயர் அதிகாரிகளும் ஆர் எஸ் எஸ், ஹிந்து மஹாசபை அமைப்புகளில் ரகசிய உறுப்பினர்களாக இருக்கிறார்கள், தீவிரவாத இந்து அமைப்புகளின் கொள்கைகளை ஆதரிப்பதிலும் பரப்புவதிலும் தீவிரமாக ஈடுபடுகின்றனர்" என்றே பதிவுசெய்யபட்டுள்ளது. காந்தியை கொலை செய்ய முயற்சி செய்து வந்த கும்பலோ இந்த இரண்டு அமைப்புகளின் முன்னணித் தொண்டர்கள். எனில் இவர்களுக்கும் அரசு நிர்வாகத்துக்கும் திரைமறைவில் கூட்டு இருந்ததா? காந்தியை காப்பாற்றுவதற்கான போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸ் செய்யாமல் இருந்தது, காந்தி படுகொலை விசாரணை நடந்த விதம், இவை இரண்டையும் கவனித்துப்பார்க்கும் ஒருவர், இப்படித்தான் முடிவு செய்வார்: காந்தி படுகொலை விசாரணையானது, பல ரகசியங்களை அம்பலப்படுத்துவதற்குப் பதிலாக பலவற்றை மூடி மறைக்கவே நடத்தப்பட்டது.

4

ஆர் எஸ் எஸ், ஹிந்து மஹாசபை தீவிரவாதிகள், தாங்கள் அணியும் காலணியின் கீழ் காந்தி, நேரு உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களின் படங்களை ஒட்டிவைத்து இழிவுபடுத்துவார்கள். துப்பாக்கி சுடும் பயிற்சியின்போது தோட்டாவின் இலக்காக காந்தியின் படத்தை ஒட்டிவைத்து சுடுவார்கள். காந்தியின் படுகொலையை இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்துக் கொண்டாடினார்கள், காரணம், இந்து மத புராணங்களில் கதையாக சொல்லப்படும், ராட்சசர்களை தெய்வங்கள் வதம் செய்வதற்கு ஒப்பானது காந்தியின் கொலை என்பது.

ஆர் எஸ் எஸ், ஹிந்து மஹாசபை அமைப்புகளின் மேல்மட்ட தலைவர்கள், முன்னணி ஊழியர்கள் பிராமணர்கள் ஆன பேஷ்வாக்கள், சித்பவன் பிராமணர்கள். பிரிட்டிஷ் ஆட்சியில், நிர்வாகம், போலீஸ், நீதித்துறை என அதிகார மட்டத்த்தை ஆக்கிரமித்து இருந்தவர்கள் பிராமணர்களே. 1947க்கு முன், அதாவது தேச விடுதலைக்கு முன் இந்தியாவில் இருந்த ஒரே ஒரு பிராமண அரசு மஹாராஷ்டிராவில் பூனா பேஷ்வா பிராமணர்கள் ஆட்சி செய்த மராத்திய அரசுதான்.  பிரிட்டிஷார் இந்தியாவை விட்டு வெளியேறியதும் இந்தியாவின் ஆட்சி அதிகாரம் தங்கள் கைகளில் வந்து விழும் என்று பெரும் கனவுடன் இருந்த பேஷ்வா பிராமணர்களின் நம்பிக்கை, காந்தியின் இந்து-முஸ்லிம் ஒற்றுமை, ஹரிஜன மக்கள் ஆதரவு, தீண்டாமை ஒழிப்பு பிரச்சாரம், சமபந்தி உணவு, ஹரிஜன மக்களை கோவிலுக்குள் அனுமதிக்க வேண்டும் என்று சொன்னது மட்டும் இன்றி நேரடியாக களத்திலும் இறங்கியது ஆகிய நடவடிக்கைகளால் தகர்ந்தது. ஏனெனில் காந்தி மட்டும் அல்லாது, காங்கிரஸ் கட்சிக்குள் மாற்று சிந்தனை கொண்ட ஒருவர், நேரு, பிரதமர் ஆக இருந்ததும் அவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. 

ஹிந்து ராஷ்டிரக்கனவைத் தோற்றுவித்த சவர்க்காரும் ஹிந்து மஹாசபை உறுப்பினர்களும் இந்தியா எங்கும் வெறித்தனமாக  ஹிந்து மேலாதிக்கத்தை ஆதரித்தும், முஸ்லிம்களுக்கு எதிராகவும் தீவிரமாக பிரச்சாரம் செய்த காலமும் அது. சனாதன இந்துக்களும் இந்து தீவிரவாத அமைப்பினரும் காந்தி செல்கின்ற இடங்களில் மட்டுமின்றி, இந்தியா எங்கும் அவருக்கு எதிராக தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வந்தனர். இந்துத்வா கோட்பாட்டுக்கும் மேல் சாதி ஆதிக்கத்துக்கும் எதிராக விமர்சனங்களை முன் வைத்தவர்கள் மீது நாதுராம் கோட்ஸே, நாராயண் ஆப்தே கும்பல் பல இடங்களில் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தி இருந்ததாக வரலாறு சொல்கின்றது. எனவே 1934க்கு முன்பாக காந்தி மீது நடத்தப்பட்ட தாக்குதல் முயற்சிகளையும் கோட்ஸே கும்பல்தான் செய்திருக்க வேண்டும். 

தேசப்பிரிவினையின் காரணமாக ஒட்டுமொத்த முஸ்லிம்களும், குறிப்பாக வட மாநிலங்களில் இருந்து, புதிய பாகிஸ்தானுக்கு இடம்பெயர்ந்து விட வேண்டும், அதேபோல் புதிய பாகிஸ்தானில் இருந்து இந்துக்கள் எல்லை கடந்து வந்து இங்கே குடியேற வேண்டும், அதன் பின் எஞ்சியிருக்கும் முஸ்லிம்களை இந்தியாவில் இருந்து அப்புறப்படுத்துவது எளிது. அதன் பின் இந்த தேசம் நூறு விழுக்காடு இந்து நாடாகும். ஆனால் அப்படியான ஒரு மாபெரும் இடப்பெயர்ச்சியானது வன்முறை மூலமே சாத்தியம் ஆகும் என்பதை நன்கு உணர்ந்து இருந்த காந்தி தன் களச்செயற்பாடுகள் மூலம் அவ்வாறு ஒரு பெரும் கலவரம் மூளாமல் தடுத்தார். வட மேற்கு எல்லையில் நடந்த கலவரங்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர் என்பதும் உண்மையே. ஆனால் அவருடைய இருப்பும் பாத்திரமும் பாதிப்பும் இல்லாமல் போயிருந்தால் ஆர் எஸ் எஸின், ஹிந்து மஹாசபையின் பெரும் கனவுத்திட்டங்கள் ஒருவேளை பல கோடி  மக்களின் உயிரிழப்புக்குப் பின் சாத்தியம் ஆகி இருக்கக்கூடும்.

5

காங்கிரஸின் அணுகுமுறை எப்படி இருந்தது?

காங்கிரஸ் கட்சியில் மேல் மட்டத்தில் இருந்த பல தலைவர்கள் நிலப்பிரபுத்துவ, பழமைவாத, சாதிய சிந்தனையில் ஊறியவர்கள். தேசவிடுதலை இயக்கத்துக்கு காந்தியை முன்நிறுத்திய இதே தலைவர்கள், தேசம் விடுதலை ஆன பின் காந்தியின் இருப்பை வெறுப்புடன் நோக்கினார்கள். அவரது நேர்மை, எளிமையான வாழ்க்கை முறை, ஆடம்பர வெறுப்பு, ஹரிஜன மக்களுடன் வேற்றுமை இன்றி பழகியது, தீண்டாமை ஒழிப்பு ஆகியன இந்த தலைவர்களுக்கும் பின்பற்றத் தகாதவையாக இருந்தன. மிக மிக முக்கியமான புள்ளி எதுவென்றால் காங்கிரஸ் கட்சியை கலைத்து விட வேண்டும் என காந்தி சொன்னதே. அதிவேக தொழில் வளர்ச்சியை நோக்கிய இந்தியாவுக்குப் பதிலாக கிராம சமுதாய இந்தியாவை நோக்கி மெதுவாக முன்னேறினால் போதும் என்ற அவர் வாதம்; காங்கிரஸ் மந்திரிகள் கடல் போன்ற தமது அரசு பங்களாக்களில் இருந்து வெளியேற வேண்டும், வீடுகள் இல்லாத மக்களுக்கு அந்த பங்களாக்களை கொடுக்க வேண்டும் என்றெல்லாம் காந்தி பேசினார். மவுண்ட் பேட்டன் பிரபுவையும் கூட, அவரது வைசிராய் மாளிகையில் இருந்து வெளியேற வேண்டும், மாளிகையை தேசப்பிரிவினையின்போது பாதிக்கப்பட்ட அகதிகளுக்கு ஆன மருத்துவமனையாய் மாற்ற வேண்டும் என்று வேண்டினார். தேசப்பிரிவினையை திரும்பப்பெற வேண்டி, நான் பாகிஸ்தானுக்கு போவேன் என்றும் கூட பேசினார்.

இப்படிப்பட்ட ஒருவர், நடைமுறைக்கு ஒவ்வாத முதியவர், காலாவதியான ஒரு மனிதராக, இனிமேல் வேண்டப்படாத ஒருவராக, ஆர் எஸ் எஸ், ஹிந்து மஹாசபைக்கு மட்டுமின்றி, காங்கிரசில் இருந்த மேல்சாதி நிலப்பிரபுத்துவ இந்துத்வா சிந்தனை கொண்டவர்களுக்கும் ஆனார். ஆக ஒரு தரப்பு நேரடியாகவும் மறுதரப்பு மறைமுகமாகவும் அந்த முதியவரை சமூகத்தில் இருந்து அகற்றிவிடப் பாடுபட்டனர். 

6

ஆக, இஸ்லாமியருக்கான பாகிஸ்தான் என்ற நாடு உருவான பின், இந்துக்களுக்கான ஒற்றை தேசம் ஆன இந்தியா உருவாகும் என்ற தம் கனவு தகர்ந்ததை இரண்டு தீவிரவாத இந்துத்வா இயக்கங்களால் சகித்துக்கொள்ள முடியவில்லை. இதற்கு ஒரே காரணம் காந்தியே என்று நம்பினார்கள். (மேலே சொன்ன காங்கிரஸின் முக்கியமான தலைவர்களும் இதையேதான் நம்பினார்கள்!) ஆனால் மிகத் தந்திரமாக என்ன செய்தார்கள்? தமது தாய்நாடு பிளவுப்படுத்தப் பட்டதாகவும், கிழக்கு-மேற்கு பாகிஸ்தான்களில் இந்துசகோதரர்கள் படுகொலை செய்யப்படுவதாகவும், இதற்கெல்லாம் காரணம் காந்திதான் என்றும் பிரச்சாரம் செய்து தமது கோபத்திற்கான உண்மையான காரணத்தை மறைத்தார்கள். காங்கிரஸ் தலைவர்களோ, தம் தவறுகளை மறைக்கவும் பழிபோடவும் ஆர் எஸ் எஸ் , ஹிந்து மஹாசபையினரின் இந்த மதவெறி பிரச்சாரம் தமக்கு உதவுவதாக உள்ளூர மகிழ்ந்தனர். அப்புறப்படுத்த வேண்டிய மனிதரை யாரோ ஒருவர் அப்புறப்படுத்தியதை எண்ணி மகிழ்ச்சி அடைந்தார்கள், ஆனால் பழி தம் மீது விழவில்லை என்று திருப்தி அடைந்தார்கள்.

... .....

உதவிய நூல்: 'Let's kill Gandhi!', Tushar A.Gandhi, Rupa Publications.

காந்தியின் மகன் மணிலால் காந்தி, அவர் மகன் அருண் மணிலால் காந்தி, அவரது மகன் துஷார் காந்தி.

வியாழன், ஜனவரி 28, 2021

To Let - Only for Vegetarians: உணவில் சாதி

 

1

1904ஆம் ஆண்டு. ஈ வெ ராமசாமி நாயக்கர் என்பதுதான் அப்போது அவர் பெயர், கடவுள் பக்தி உண்டு. காசிக்கு செல்கின்றார். பிராமணர்

அல்லாதோர் நடத்திய உணவு விடுதியில் உணவருந்த நுழையும்போது வாயிற்காப்போன் அவரை உள்ளே விட மறுத்தார், அங்கே பிராமணர்கள் மட்டுமே சாப்பிட அனுமதிக்கப்பட்டார்கள். ஒரு பூணூலை மாட்டிக்கொண்டு நானும் பிராமணன்தான் என்று ஏமாற்றி உள்ளே நுழைய முயற்சித்த ராமசாமியின் அடர்மீசை அவர் பிராமணர் இல்லை என்று காட்டிக்கொடுத்தது, கீழே தள்ளப்பட்டார். பசியால் வாடிய அவர் எச்சில் தொட்டியில் வீசப்பட்டதை உண்டார். அங்கிருந்து திரும்பும்போது கடவுள் மீதான நம்பிக்கையை கைவிட்டவர் ஆக இருந்தார்.

பிற்காலத்தில் அவரே காங்கிரஸில் இணைந்தபோதும் காங்கிரஸ் மாநாடுகளில் பிராமணர்கள், பிராமணர்கள் அல்லாதோர் என தனித்தனியே பந்தி பரிமாறப்பட்டதையும் கண்டு கொதித்தார். காங்கிரஸ் மாநாடுகளில், 'பிராமணர்களுக்கு தனி இடம், தனி சாப்பாடு உண்டு' என்று விளம்பரமே செய்யப்பட்டது. காங்கிரஸ் கட்சி நடத்திய சேரன்மாதேவி குருகுலத்தில் சாதிப்பாகுபாடு இருந்தது. இதனை எதிர்த்து பெரியாரும் ஜீவானந்தமும் வரதராஜுலுவும் போராட்டம் நடத்த வேண்டி இருந்தது. 1901 காங்கிரஸ் மாநாட்டில், தமிழ்நாட்டில் இருந்து சென்ற பிரதிநிதிகள் வர்ண தர்மத்தின் அடிப்படையில் தீண்டாமையை பின்பற்றியதாக காந்தி தன் தன்வரலாற்றில் வேதனையுடன் இப்படிக் குறிப்பிடுகிறார்: தமிழர்களின் சமையல் கூடம், மற்றவர்களின் சமையல் கூடத்துக்கு தொலைவில் இருந்தது. தாங்கள் சாப்பிடுவதை பிறர் பார்த்தால் தோஷம் என்று தமிழ்பிரதிநிதிகள் கருதினார்கள். இது வர்ணாசிரமத்தின் சீர்கேடாகவே எனக்கு தோன்றுகிறது.

காங்கிரஸில் பெரியாரால் ஐந்து வருடங்களுக்கு மேல் ஏன் நீடிக்க முடியவில்லை என்பதை புரிந்து கொள்ள முடிகின்றது.

2

உணவு என்பது அடிப்படை மனித உரிமை என்ற நிலை மாறி, பணம் படைத்தவனுக்கு உணவு கிடைக்கும், மற்றவன் பிச்சை எடுக்கலாம் அல்லது பட்டினியால் சாகலாம் என்ற நிலைக்கு உலகம் வந்துள்ளது அல்லது உலகளாவிய கார்பொரேட்டுகளால் அவ்வாறு மாற்றப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் உலகில் 35,000 பேர் இந்த விஞ்ஞானம் முன்னேறிய நவீன காலத்தில்தான் பட்டினியால் சாகின்றார்கள். அதே நேரத்தில் உலகம் எங்கும் ஒரு நாளில் மட்டும் ராணுவங்களுக்கும் ஆயுதங்கள் வாங்குவதற்கும் அரசுகள் பல நூறு கோடி டாலர்களை செலவு செய்துகொண்டே இருக்கின்றன, அதாவது மக்களின் வரிப்பணம் கமிஷன்களுக்கு செலவு செய்யப்படுகின்றது. இந்தியாவில் மட்டும் தினமும் சுமார் 30 கோடி மக்கள் இரவில் உணவின்றி பட்டினியுடன் உறங்க செல்கின்றனர்.  சுமார் 22.5 கோடி இந்திய மக்கள் சத்துணவுக் குறைபாட்டினால் மிக மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளார்கள். மறுபுறம் உணவுப்பொருட்களின் விலையோ அரசே நிர்ணயித்துள்ள குறைந்த பட்ச ஊதியம் பெரும் மக்களாலும் வாங்க முடியாத அளவுக்கு ஏறிக்கொண்டே இருக்கின்றது. இப்போது மத்திய அரசு தன்னிச்சையாக கொண்டு வந்துள்ள மூன்று சட்டங்களும், அம்பானி, அதானி போன்ற பெரும் கார்பொரேட் நிறுவனங்கள் மட்டுமே கொழுத்து செழிக்க வழி செய்யும். விவசாயம், விவசாயிகள் நலன், விளைபொருள் விலை நிர்ணயம், மக்களுக்கு உணவுப்பொருட்கள் கிடைப்பதற்கான உத்தரவாதம் ஆகிய அடிப்படை கடமையில் இருந்து தன்னை முற்றாக விலக்கிக்கொள்வதில் மிகப் பிடிவாதமாக இருக்கும் ஒரு அரசை இந்திய மக்கள் இப்போது பார்க்கின்றனர்.

3

இந்தியா, பல பஞ்சங்களை கண்டுள்ளது, இப்பஞ்சாங்களில் உணவு கிடைக்காமல் செத்தவர்கள் பல கோடி மக்கள். 1865-67 ஒரிசா பஞ்சத்தில் 10 லட்சம் மக்கள், 1868-70 ராஜஸ்தான் பஞ்சத்தில் 15 லட்சம் மக்கள், 1876-78 சென்னைப் பஞ்சத்தில் 1.08 கோடி மக்கள்,  1896-97 இந்திய பஞ்சத்தில் 50 லட்சம் மக்கள், 1899 வங்கப் பஞ்சத்தில் 10 லட்சம் மக்கள், 1943 பஞ்சத்தில் 30 லட்சம் மக்கள் செத்து மடிந்துள்ளனர். இதில் பிரிட்டிஷ் அரசு காலத்தின் 1943 பஞ்சம், செயற்கையாக உருவாக்கப்பட்ட ஒன்று. அன்று பிரிட்டிஷ் பிரதமர் ஆக இருந்த சர்ச்சில், இரண்டாம் உலகப்போரின் பாதிப்பில் இருந்து இங்கிலாந்தை காப்பாற்றவும் ராணுவத்துக்கான இருப்பை வைக்கவும் பர்மாவில் இருந்து இந்தியாவுக்கு வழக்கமாக வந்து கொண்டு இருந்த அரிசி வரத்தை தடை செய்து இங்கிலாந்துக்கு கொண்டு சென்று இந்திய மக்களை சாகடித்தார்.

இவ்வாறான பஞ்ச காலங்களில், பொருளாதார வசதி படைத்தோர் இரக்கம் கொண்டு மக்களுக்கு கஞ்சித்தொட்டி திறந்து அரிசிக்கஞ்சியும் துவையலும் இலவசமாக கொடுத்து காப்பாற்றிய வரலாறும் இருக்கின்றது. இதுவன்றி, 1925இல், பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில், Labour Advisory Board உறுப்பினர் எம் சி ராஜா அவர்களின் பரிந்துரையின் பேரில், பெண் குழந்தைகள், ஆதிவாசிகள், தலித் மக்கள் உள்ளிட்ட சமூகத்தில் பின்தங்கிய மக்களை பள்ளிக்கூடங்களுக்கு வர வைக்கும் முயற்சியாக, சென்னை மாநகராட்சி நிர்வாகம் பள்ளிகளில் மதிய உணவுதிட்டத்தை கொண்டு வந்துள்ளது. பிரெஞ்ச் நிர்வாகத்தின் கீழ் இருந்த புதுச்சேரியில் இதே போன்ற மதிய உணவுதிட்டம் 1930இல் கொண்டுவரப்பட்டது. காமராஜர் ஆட்சியில் அவரது மதிய உணவுத்திட்டத்துக்கும், பின்னர் எம் ஜி ஆரின் காலத்தில் அவர் கொண்டு வந்த சத்துணவுத் திட்டத்துக்கும் இதுவே முன்னோடி.

ஆனால் இந்த இலவச உணவுக்குள் வெவ்வேறு வடிவங்களில் சாதி வந்தது. இப்போதும் இருக்கின்றது. பட்டியல் இன மாணவர்களுக்கு தனியே உணவு பரிமாறுவது, உணவின் அளவைக் குறைப்பது, பட்டியல் இன மாணவர்களுடன் பிற சாதி மாணவர்கள் உணவு உண்ண மறுப்பது அல்லது பிற சாதிகளை சேர்ந்த பெற்றோர் தம் குழந்தைகளை உணவு உண்ண அனுமதிக்க மறுப்பது. தலித் சமூக மாணவர்களுக்கு தனி இடம், தட்டு என பாகுபாடு காட்டுவது, பிற சாதி மாணவர்களின் தட்டுகளை எடுத்தாலோ தொட்டாலோ அடி உதைக்கு உள்ளாவது.   இன்னொரு வடிவம், தலித் சமூக சமையல் தொழிலாளர்கள் சமைக்கும் உணவை பிற சாதி மாணவர்கள் உண்ண மறுப்பது.

4

1569ஆம் ஆண்டு பேரரசர் அக்பர், சீக்கியர்களின் மூன்றாவது குருவான குரு அமர்தாஸை சந்திக்க விரும்பி பஞ்சாபுக்கு வருகின்றார். பேரரசரை மிக விமர்சையாக வரவேற்க சீக்கிய மக்கள் ஏற்பாடுகளை செய்ய முனையும்போது, குரு சொல்கின்றார், "நம் அனைவரையும் போலவே அக்பரும் ஒரு மனிதரே. குருவின் வசிப்பிடம் எல்லோருக்கும் கதவை திறந்து வைத்துள்ளது. அரசரும் அவர் குடிகளும், இந்துக்களும் இஸ்லாமியரும், ஏழைகளும் பணம் படைத்தோரும் இங்கே சமம். எனவே அக்பரை வரவேற்க தனி மரியாதை எதுவும் தேவையில்லை, எல்லோருக்கும் என்ன மரியாதையோ அதுவே அவருக்கும்."

பேரரசர் அக்பர், ஹரிப்பூர் ராஜாவுடன், கோவிந்த்வாலுக்கு வருகின்றார். குருவும் மற்றோரும் அவரை வரவேற்று எல்லா இடங்களையும் காட்டுகின்றனர். லாங்கர் எனப்படும் இலவச உணவுச்சாலையில், வழிப்போக்கர்கள், பிச்சை எடுப்போர், ஏழை, பணக்காரன் என்ற வேறுபாடுகள் இன்றி மட்டுமல்ல, சாதி மதம் கடந்து எல்லோரும் வரிசையில் அமர்ந்து ஒரே விதமான எளிமையான உணவை உண்டுகொண்டு இருப்பதை கண்டு அக்பர் வியப்படைகின்றார். பகல் இரவு என மூடப்படாமல் உணவு பரிமாறப்பட்டுக்கொண்டே இருக்கின்றது. மீதியாகும் உணவு கால்நடைகளுக்கும் பறவைகளுக்கும் இரையாகின்றது, எனவே உணவு வீணாவதில்லை. அக்பரும் ஹரிப்பூர் ராஜாவும் அதே மக்களுடன் வரிசையில் உட்கார்ந்து உணவை உண்கின்றனர். அதன் பின் நடந்த உரையாடல் மிக முக்கியமானது. 

இதன் பின்னர், குருவுக்கு மிகப்பெரிய அளவுக்கு  நிலம் தானமாக தர அக்பர் முன்வருகின்றார். குரு அமர்தாஸ் நன்றி தெரிவித்து கூறுகிறார், "அரசரே! தானமாக எதையும் நான் பெறுவதில்லை. மக்கள் உழைக்க வேண்டும், சம்பாதிக்க வேண்டும், அதில் பிறருக்கு உதவ வேண்டும், இந்த லாங்கருக்கு அவ்வாறு உதவினால் போதும்". நிலத்தை வாங்க மறுக்கின்றார். பிற்காலத்தில், குருவின் மகள் Bhaniயின் திருமணப் பரிசாக அந்த நிலத்தை அக்பர் வழங்கியதாக வரலாறு சொல்கின்றது.

5

வாடிய பயிரைக் கண்டா போதெல்லாம் நானும் வாடினேன் என்பார் ராமலிங்க வள்ளலார். முற்றும் துறந்த முனிவர்கள் என்று நாம் அறிந்தவர்கள் ஒருவர் கூட அடுத்த மனிதனின் பசி குறித்தோ பசியைப் போக்குவது குறித்தோ பேசியது இல்லை, அவர்கள் அறிந்தது எல்லாம் இறைவன் திருவடியை எப்படியாவது பற்றி சொர்க்கம் போகும் வழியை காண்பதுதான். ஆனால், பசியின் கொடுமையை வள்ளலாரைப்போல் இத்தனை நுட்பமாக சொன்னவரும் இலர், பசியை ஆற்றிக்கொண்ட ஒருவனின் உடலும் உள்ளமும் அடையும் பேரானந்தத்தையும் அவரைப்போல் விவரித்தவரும் இலர். அந்த வகையில் அவரது அணுகுமுறை ஒரு பொருள்முதல்வாதியின் அணுகுமுறை. அவர் ஏற்றி வைத்த விளக்கிலும் தீ, அவர் மூட்டிய அணையாப்பெரும் அடுப்பிலும் தீ. 1867 மே 23 வைகாசி 11 அன்று அவர் சத்திய தர்ம சாலையில் அணையா அடுப்பை ஏற்றுகின்றார், 150 வருடங்கள்! அணையாத அடுப்பு, அடுத்தவன் பசி தீர்க்கும் அடுப்பு! "உலகில் தர்மம் உள்ளமட்டும் இந்த அடுப்பு அணையாது; இந்த அடுப்பு உள்ளவரை தர்மம் அணையாது" என்று சொல்லித்தான் அவர் அந்த அடுப்பை பற்ற வைத்துள்ளார். எவரிடமும் கை நீட்டி தானமாக பெறாமல் மக்களிடம் இருந்து பெறப்படும் கொடைகளால் அங்கு வரும் மக்களுக்கு மூன்று வேளையும் உணவு அளிக்கப்படுகின்றது, ஒரே வரிசை, சாதி, மதம், இனம் பாராது ஒரே வரிசை, ஒரே உணவு.

பெண் விடுதலையை வீட்டுக்குள் இருந்து தொடங்க வேண்டும் என்று பெரியார் சொன்னதில் பொருள் உள்ளது. அதில் மிக முக்கியமானது, பெண்களை சமையல் அறையில் இருந்து விடுதலை செய்வது. அதற்கு மாற்றாக பெரியார் முன் வைப்பது சமுதாய பொது சமையலறை Community kitchen. ஆனால் இது அத்தனை எளிதல்ல! காரணம் சாதிதான்! ஆயிரம் சாதியையும் தீண்டாமையையும் தன் அஸ்திவாரமாக வைத்துள்ள இந்திய சமூகத்தில், ஒரு பொது அடுப்பில் ஒரு சாதிக்காரன் சமைக்கும் உணவை மறு சாதிக்காரன் உண்ணும் நாளில்தான் அது சாத்தியப்படும்.

6

நிற்க. பொதுவெளியில், பேருந்துகளில், ரயில்களில், ஹோட்டல்களில், பள்ளிகளில், கல்லூரிகளில் சாதி எங்கே சார் இருக்கின்றது என சிலர் கேட்கலாம். தனித்தனி சாதிகளுக்காக தனித்தனி matrimonial விளம்பரங்களில் பார்க்கின்ற பல மணமகனும் மணமகளும், பெரும் பட்டப்படிப்பு படித்துவிட்டு அமெரிக்காவிலும் லண்டனிலும் மாட்டுக்கறியின், பன்றியின் கொழுப்பு தோய்ந்த டாலர்களையும் பவுண்ட் ஸ்டெர்லிங்குகளையும் சம்பாதித்து ஸ்டேட்ஸில் இருப்பதாக இங்கிலீஸில் பீற்றிக்கொண்டு திரிந்தாலும் தன் சாதியில் வரன் தேடுவதில் மட்டும் மிக கவனமாக இருக்கின்றார்கள். இதில் சைவ சாப்பாடு என்று ஒரு வகை. கருப்பு அன்பரசன் , தன் உணவுப்பழக்கத்துக்கு தன் குடியிருப்பு பகுதியில் உள்ளவர்களால் ஏற்பட்ட மிக மோசமான சாதிய அடிப்படையில் ஆன இடைஞ்சல்களை சொல்லி இருந்தார். என் நண்பர்களில் பலர் எஸ் சி. சார், என் நண்பர்களில் பலர் முஸ்லீம் சார், கிறிஸ்டியன் சார் என்று பல்லை இளிப்பவர்களை விடவும் மோசமான சாதி வெறியர்களை நாம் பார்க்க முடியாது, இவர்கள் எப்போதும் கத்தியை மறைத்து வைத்துக்கொண்டு நம்முடன் திரியும் பேர்வழிகள். இது வெறும் உணவுப்பழக்கம் சார்ந்த விஷம்தானே, இதற்குள் சாதி எங்கே இருக்கின்றது என சிலர் கேட்கக்கூடும். உண்மையில் இது வெறும் உணவுப்பழக்கம் மட்டுமே எனில், இந்து மதத்துக்கு உள்ளேயே புலால் உணவு அருந்தாத இடை சாதியினர் இருக்கின்றார்களே, அவர்களுடன் மேல்சாதி வெஜிடேரியன்கள் திருமண உறவு உள்ளிட்ட கொடுக்கல் வாங்கல்களை வைத்துக்கொள்வார்களா என்ற நியாயமான கேள்வியை எழுப்ப வேண்டியிருக்கும். அந்தக் கேள்விக்கு மவுனமே பதில் எனில், இந்த Only for vegetariansக்குள் மறைந்து இருப்பது சாதி வெறி அன்றி வேறில்லை. Friendship  'பெருந்தன்மை'க்குள் துருத்திக்கொண்டு தெரிவது மேல்சாதி ஆணவம் அன்றி வேறென்ன?  குரு அமர் தாஸுக்கும்  வள்ளலாருக்கும் இவர்களுக்கும் ஒருபோதும் ஒட்டுமில்லை, உறவும் இல்லை. 

சமீபத்தில் பெரம்பூர் பகுதியில் ஒரு வீட்டின்  கதவில் நான் கண்டது: To Let - Vegetarians Only.  குடியிருக்கும் வீடு மட்டும்தான் வெஜிடேரியனாக இருக்க வேண்டும் என்று அவசியமா என்ன? பலப்பல வருடங்களுக்கு முன், கலைவாணர் என் எஸ் கே, நல்லதம்பி என்ற படத்தில் ரயிலை சாதியப்பார்வையில் உணர்ந்து  கிந்தன் கதை என ஒரு கதாகாலட்சேபம் செய்து இருப்பார். இப்போதும் ரயில்களில் ஒரே டாய்லெட்த்தான், வெஜிடேரியன், நான் வெஜிடேரியன் இருவருக்கும். எனவே Vegetarians only அன்பர்கள் ரயில்வே நிர்வாகத்துக்கு பிராது எழுதி, வெஜிட்டேரியன் டாய்லெட் வேண்டும் என்று கேட்கலாம்.

சனி, ஜனவரி 16, 2021

எழுத்தாளர் காஸ்யபன் என்ற சியாமளம்

14.1.2021. மூத்த தோழர் காஸ்யபன் தன் 86ஆவது வயதில் மறைந்து விட்டார். நாக்பூரில். 

அவர் கதைகளை சிறு வயதில் இருந்தே செம்மலரில் வாசித்து இருந்தேன். வித்தியாசமான மையக்கருத்து கொண்டவை, வித்தியாசமான நடையில் அமைந்தவை, அவர் பார்வை வேறு மாதிரி இருக்கும். அதனால் அவர் எழுத்துக்கள் எனக்கு பிடித்திருந்தது. தேன் கலந்த நீர் என்ற கதையை நான் எப்போதும் குறிப்பிட்டு சொல்வேன். தூரத்தில் இருந்தே அவரைப் பார்த்துக்கொண்டு இருந்தேன். தமுஎச மாநாடு சென்னை கோடம்பாக்கம் ஸ்ரீராம் அரங்கில் நடந்தபோது, மனைவி முத்துமீனாட்சி அவர்களுடன் வந்து இருந்தார். பக்கத்தில் இருந்து பார்த்துக்கொண்டு இருந்தேன், தொடர்ந்து அவருடன் தொலைபேசியில் பேசிக்கொண்டு இருந்தாலும் அவருடன் நான் என்னை அறிமுகப்படுத்திக் கொள்ளவில்லை. இப்போது வருந்துகின்றேன். 2010இல் நான் கொச்சியில் பணியில் இருந்தபோது, அவர் நாக்பூரில் இருந்து தன் வலைப்பூவை தொடங்கினார். முதல் பதிவு 2010 ஏப்ரல் 22 அன்று எழுதினார், ஹைதராபாத் சார்மினார் பற்றி எழுதினார். அவர் வலைப்பூவை வரவேற்று ஈ எம் ஜோசப் முதல் பதிவு செய்தார், நான் இரண்டாவது, எஸ் வி வேணுகோபாலன் மூன்றாவது. 

அதன் பின் அவருடன் அடிக்கடி உரையாடிக்கொண்டே இருந்தேன். என்னையா, எப்படி இருக்கீரு என்று தொடங்கி, பையனை நல்லா படிக்க வையுமய்யா என்று முடிப்பார். நான் நலம் விசாரித்தால், கெழவன் கெடக்கம்யா என்பார். அவர் மிக நுட்பமான ஞாபக சக்தி கொண்டவர். பொதுவாக நம் இலக்கிய வட்டாரங்களில் பேசப்படாத, எழுதப்படாத வரலாற்று விசயங்களை, அவை 60, 70 வருடங்களுக்கு முன்பு நடந்தவையாக இருக்கும், மிகத்துல்லியமாக இடம், நபர்கள், உரையாடல் உட்பட சரியாக பதிவு செய்வார், ஆச்சரியம் அடைவேன். சொக்கலால் பீடி, எம் பி எஸ், சுப்ரமணியசாமி, தி க சி, நெல்லை மாவட்ட நிகழ்வுகள், கம்யூனிஸ்ட் கட்சி பற்றிய நினைவுகள் உள்ளிட்ட பல பதிவுகள் நம்மை வியப்பில் ஆழ்த்துபவை, முக்கியமான வரலாற்றுப்பதிவுகள். அவர் வயதை கணக்கில் கொண்டால், மொத்தம் 1022 பதிவுகளை எழுதியுள்ளார் என்பது மிக வியப்புக்குரியது. 2014இல் 139 பதிவுகள்! தி க சி தனக்கு இலக்கியத்தை அறிமுகம் செய்து எழுத வைத்தார், கே முத்தையா தத்துவரீதியாக தனக்கு போதம் செய்து சரியான வழியில் நடத்தினார் என்று நூல்வெளி யூடியூப் சானலுக்கு அளித்த பேட்டியில் சொல்லியிருக்கிறார். அதன் லிங்கை கமென்டில் தருகின்றேன். தீக்கதிர், செம்மலர் ஆசிரியர் குழுவில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பெரும் பங்களிப்பு செய்துள்ளார்.

கட்சிப்பிளவுக்குப் பின், கலை இலக்கிய பெருமன்றத்தில் தொடர்ந்து இயங்குவதில் ஏற்பட்ட தடங்கல் கொள்கை அடிப்படையில் ஆனது. மூத்த தோழர் என் சங்கரய்யா, கே எம் ஆகியோரின் முன் முயற்சியில், மார்க்சிஸ்ட் கட்சி தன் இலக்கிய அமைப்பு ஒன்றை நிறுவதிட்டமிட்டு மதுரையில் கூடியது, 35 பேர் கொண்ட அந்தக் குழுவில் காஸ்யபனும் ஒருவர். அங்குதான் 1975இல் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நிறுவப்பட்டது. அதன் பின்னும் கூட திகசி அவர்கள் உடனான தோழமை தொடரவே செய்தது, அவரை நானும் என்னை அவரும் ஒருபோதும் விட்டுக்கொடுத்தது இல்லை என்பார் காஸ்யபன்.

சில மாதங்களுக்கு முன்புதான் அருமை மகன் சத்தியமூர்த்தியை கொரோனாவால் இழந்தார். அவரிடம் பேசுவதற்கு துணிச்சல் இல்லை என்பதால் பேசாமல் இருந்தேன். எம்பி எஸ் குறித்த பதிவில் பாரதியின் பாம்புபிடாரன் பற்றி குறிப்பிட்டு இருந்தேன். 1980 தொடக்கத்தில், கோவை தமுஎச இசை முகாமில், அவர் பாம்பு பிடாரன் குறித்து எம் பி எசுடன் நடத்திய உரையாடலை தன் வலைப்பூவில் குறிப்பிட்டு இருந்தார்.  ச தமிழ்ச்செல்வன் அந்த முகாமில் பங்கு பெற்று இருந்தார்.  நீண்ட நாட்கள் கழித்து அவரே என்னை தொலைப்பேசியில் அழைத்தார். மெதுவாக பேச்சை தொடங்கினேன். சம்பிரதாயமான "எப்படி இருக்கீங்க தோழர்?" என்ற விசாரிப்புக்கு அவர் சொன்னார், "இருக்கணும்லய்யா?". மகனை இழந்த அவரின் ஆழ்ந்த துயரம் அந்த ஒற்றை சொல்லில் வெளிப்பட்டது. பதில் சொல்ல முடியாமல், பேச்சை தொடர முடியாமல் திணறினேன். அவர்தான் அடுத்த வார்த்தை சொல்லி மவுனத்தை உடைத்தார். பேரனை மட்டும் வைத்துக்கொண்டு தன் மகனின் இறுதிசடங்கை முடித்த பெரும் துயரை சொன்னார், முகநூலில் தன் பேரனின் மனத்திடத்தை பாராட்டி பதிவு செய்து இருந்தார். 

முகாமுக்கு பிறகு, எம் பி எஸ் அவர்களை காஸ்யபன் பேட்டி கண்டார், அப்போது செம்மலரில் வெளிவந்ததை சொன்னார். ச தமிழ்ச்செல்வன் அவர்களிடம் வேண்டியுள்ளேன், அந்த நேர்காணலை மீண்டும் செம்மலரில் மறுபதிப்பு செய்ய வேண்டும் என்று.

தெலுங்கானா போராட்ட பின்னணியில் கிருஷ்ணா நதிக்கரையிலே என்று ஒரு துப்பறியும் நாவலை எழுதினார், என் சி பி எச் வெளியிட்டது. அவர் கதைகள் 80களில் நூலாக (அந்தக்கணங்கள்) அன்னம் வெளியீட்டில் வந்தன. 

அன்புத்தோழர் அவர் மனைவி முத்துமீனாட்சி அவர்கள், தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் தேர்ந்த அறிஞர். அவரும் சிறுகதைகள் எழுதியுள்ளார், பல நூல்களை பல மொழிகளிலும் ஆக்கம் செய்துள்ளார். காஸ்யபனின் கதைகளை ஜகதா என்று இந்தியில் மொழிபெயர்த்துள்ளார், சீதாராம் யச்சூரி முன்னுரை எழுதியுள்ளார். நல்லி திசையெட்டும் உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார். ராகுல் சாங்கிருத்தியாயனின் வால்கா முதல்.... நூலை தமிழில் மொழிபெயர்த்துள்ளார். மகள் ஹன்ஸா காஸ்யப் இசையில் பட்டம் பெற்று காப்புரிமை தொடர்பான தளத்தில் வழக்கறிஞராக உள்ளார். நம் வார்த்தைகள் இவர்கள் துயரை ஆற்றி விடாது, உங்கள் துயரில் பங்கு கொள்கின்றோம். தமிழக இலக்கிய உலகமும், பொதுவுடைமை இயக்கமும், கொண்ட கொள்கையில் உறுதியான மூத்த தோழரை இழந்துவிட்டன.

.... ... ...... .....

தமுஎசவும் காஸ்யபனும்

மதுரை பேருந்து நிலையத்திற்கு பின்னால் உள்ள அந்தப்பகுதிக்கு பெயர் திடீர்நகர். ..அங்கே சீமை ஓடு போட்டிருந்த ஒரு தொழிற்சங்க கட்டிடத்தில்தான் அந்தக் கூட்டம் நடந்தது. சி ஐ டி யு எனும் அகில இந்திய தொழிற்சங்க மையத்துடன் இணைக்கப்பட்டு இருந்த அந்த மின் ஊழியர் மற்றும் போக்குவரத்து ஊழியர் சங்க அலுவலகத்தில் 35 எழுத்தாளர்கள் கூடி இருந்தார்கள். அனைவரும் செம்மலர் ஏட்டில் எழுதிக்கொண்டு இருந்தவர்கள். 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இலக்கிய ஏடு செம்மலர். எனவே, இயல்பாக வே அதன் தலைவர்கள் ஆகிய ஏ பாலசுப்பிரமணியம், எம் ஆர் வெங்கட்ராமன், ஏ நல்லசிவம், என் சங்கரய்யா ஆகியோர் வருகை புரிந்து இருந்தனர். ஏட்டின் ஆசிரியர் கே முத்தையா கூட்ட ஏற்பாடுகளை கவனித்தார்.

1974, நவம்பர் 23, 24 தேதிகளில் நடந்த இந்தக் கூட்டத்தில்தான் தொழிலாளி வர்க்கத்தின் தலைவரும் சிறந்த இலக்கிய விமர்சகரும் ஆன என் சங்கரய்யா, முற்போக்கு எழுத்தாளர் சங்கம் ஒன்றை அமைக்கிற ஆலோசனையை முன்வைத்தார். ... ...அந்த மகத்தான அமைப்பை துவங்குவது என்றும், அதன் அமைப்பு மாநாட்டை மதுரையில் கூட்டுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

இன்று வேர்விட்டு விழுதுவிட்டு அடர்ந்து படர்ந்த பெரும் ஆலமரமாய் த மு எ ச திகழ்கிறது. அன்றைய அந்தக் கூட்டத்தில் பங்கு கொண்ட எழுத்தாளர்கள் இவர்களே:

1 கு சின்னப்பபாரதி 2 த ச ராசாமணி 3 டி செல்வராஜ் 4 ஐ மா பா 5எஸ் ஏ பெருமாள் 6 இரா.கதிரேசன் 7 மேலாண்மை பொன்னுச்சாமி 8தி வரதராசன் 9 பெ மணியரசன் 10 அஸ்வகோஷ் 11 காஸ்யபன் 12 ப ரத்தினம் 13 நெல்லைச்செல்வன் 14 கம்பராயன் 15 தணிகைச்செல்வன் 16 நாமக்கல் சுப்ரமணியம் 17 வேலுச்சாமி 18 வேல ராமமூர்த்தி 19 ச மாதவன் 20 ஐ பெரியசாமி 21 கோமகன் 22 ச மு சுந்தரம் 23 பாலதண்டாயுதபாணி 24 வீரமாசக்தி 25 புலவர் பாலு 26 முல்லை இளமுருகன் 27 மோகனச்சந்திரன் 28 நெடுமாறன் 29 அடியிற்கை சீனிவாசன் 30 இளங்கோவன் 31 நடராசன் 32 விளதை கலா முகிலன் 33 செல்வம் 34 யாரா 35 செங்கீரன்.

... .... ...

1975 ஜூன் 25 நள்ளிரவில் எமர்ஜென்சி அறிவிக்கப்பட்டது. 29 அன்று மிசா சட்டம் கடுமையாக்கப்பட்டது. எங்கும் இருள், மையிருட்டு இருள்.தமிழகத்தில் திமுக ஆட்சி. இங்கு மட்டும் ஜனநாயக உரிமைகள் சற்றே மூச்சு விட்டுக்கொண்டு இருந்தன. அதை பயன்படுத்தி க்கொண்டு, திட்டமிட்டபடி தமுஎசவின் அமைப்பு மாநாடு, முதல் மாநில மாநாடு, மதுரை தமுக்கம் கலையரங்கில் 1975 ஜூலை 12, 13 ஆகிய நாட்களில் மிகச்சிறப்பாக நடந்தது. பொதுச்செயலாளர் ஆக கே முத்தையா தேர்ந்தெடுக்க ப்பட்டார். காஸ்யபன் மாநிலக்குழு உறுப்பினர்களில் ஒருவர். இந்த முதல் மாநாட்டை நடத்திக்கொடுத்தவர்கள் இரா கதிரேசன், ப ரத்தினம், காஸ்யபன் தலைமையில் ஆன மதுரை மாவட்டக்குழு.

... ... ....

1977 தேர்தலில் காங்கிரசை மக்கள் தூக்கி எறிந்தனர். 1978 ஜூன் 24, 25 தேதியில் கோவையில் நடந்த இரண்டாவது மாநில மாநாட்டிலும், 1981 ஜூலை யில் சென்னையில் நடந்த மூன்றாவது மாநாட்டிலும் காஸ்யபன் மாநிலக்குழு உறுப்பினர் ஆனார். மதுரையில் 1982 மே 29 முதல் ஜூன் 2 வரை 5 நாட்கள் நடந்த இலக்கிய முகாமில் 19 தலைப்புகளில் வகுப்புகள் நடந்தன. திரைப்படக்கலை வகுப்புக்கு ஆசிரியர் ஆக இருந்தவர் காஸ்யபன். 

1984 செப்டம்பர் 22,23,24 தேதியில் சென்னையில் நடந்த நாடகவிழா வில் நாடகம் குறித்த புரிதலை ஏற்படுத்தி கருத்துரை வழங்கியவர்கள்: எஸ் வி சகஸ்ரநாமம், டி எம் வி ரமணன், இயக்குனர் கே பாலச்சந்தர், பேரா. ராமானுஜம், சு சமுத்திரம், ஞாநி, மேஜர் சுந்தரராஜன், பூரணம் விஸ்வநாதன், கே முத்தையா, அஸ்வகோஷ், காஸ்யபன், ச தமிழ்ச்செல்வன். மதுரை பீபிள்ஸ் தியேட்டரின் காஸ்யபன் கதையில், ராஜகுணசேகரன் இயக்கத்தில் வண்ணங்கள் வேற்றுமைப்பட்டால் என்ற நாடகம், அன்றே இந்து முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்தியது.

1986 செப்டம்பர் 24-28 5 நாட்கள் மதுரையில் நடந்த நாடகப்பயிற்சி முகாமை நடத்திக்கொடுத்த மதுரை மாவட்டக்குழுவில் காஸ்யபனும் இருந்தார். 1987 ஜனவரியில் திருச்சியில் நடந்த மாநில மாநாட்டில் காஸ்யபன் மாநில செயற்குழுவுக்கு தேர்ந்தெடுக்க பட்டார். தொடர்ந்து வந்த மாநாடுகளில், மாநிலக்குழு, செயற்குழு உறுப்பினர் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கோவையில் 1988 ஜனவரி 6 முதல் 10 வரை நடந்த த மு எ ச இசைபயிற்சி முகாமை நடத்திக் கொடுத்தவர்கள் எம் பி சீனிவாசன், கே ஏ குணசேகரன். 94 பேரை ஒருங்கிணைத்து இரண்டே நாள் பயிற்சி கொடுத்து, கோவை மக்கள் முன்னால் 9ஆம் தேதி பாட வைத்து சாதனை செய்தார் எம் பி எஸ். பாரதியாரின் பாம்புப்பிடாரன் பாடல் குறித்து எம் பி எஸ்க்கும் தனக்கும் நடந்த உரையாடல் பற்றி தன் வலைப்பூவில் விரிவாக எழுதியுள்ளார் காஸ்யபன். தோழர்கள் வாசிக்கலாம்.

த மு எ சவின் கொள்கை நெறிகளை வகுத்ததில் ஆகட்டும், திரைப்படம், நாடகம், சிறுகதை ஆகிய தளங்களில் ஆகட்டும், அனைத்து கலை இலக்கிய வடிவங்களிலும் தன் மேலான பங்களிப்பை செலுத்தியுள்ளார். இயக்கத்தின்  தத்துவ ஆசிரியர்களில் ஒருவர் ஆக பெரும்பணியை செய்துள்ளார். அவர் மறைவு ஏற்படுத்தியுள்ள இழப்பை சில பல சொற்களில் சொல்லி நிரப்பிட முடியாது. வயது வித்தியாசம் பாராது அவரே முன்வந்து பேசுவார். கடுமையான சொற்களால் விமர்சனங்களை முன்வைக்கின்றவர்களிடம் கூட அதே அளவு கடுமையான சொற்களை கொண்டு பதில் சொல்ல தெரியாத பெரும் பரந்த மனப்பான்மையும் அனுபவ முதிர்ச்சியும் அமைந்தவர். அவரை இழந்துவிட்டோம்.

உதவிய நூல்: இலக்கிய வானில் வெள்ளி நிலா, அருணன், 1999 மே மாதம் கோவையில் நடந்த வெள்ளிவிழா மாநாட்டில் வெளியிடப்பட்டது.

ஞாயிறு, ஜனவரி 10, 2021

இந்தியாவில் மீண்டும் உணவுப்பஞ்சம் வருமா? யாரால் வரும்?


விவசாயிகள் போராட்டத்தின் பின்னணியில் Janam Mukherjee எழுதிய Hungry Bengal என்ற நூலையும், Madhusree Mukherjee எழுதிய Churchill's secret war என்ற நூலுக்கான விமர்சனத்தையும் நான் வாசித்தபின் எழுதியது.

"பட்டினியால் செத்துக்கொண்டே இருக்கும் தம் குழந்தைகளை, ஆறுகளிலும் கிணறுகளிலும் பெற்றோர் வீசினார்கள். பலர் ஓடும் ரயில்கள் முன் பாய்ந்து தங்களை மாய்த்துக் கொண்டார்கள். வெறும் கஞ்சிக்கு தெருத்தெருவாக அலைந்தார்கள். குழந்தைகள் புல், இலை தழைகள், வேர், செடிகொடிகள், கிழங்குகளை தின்றார்கள். இறந்துபோன உறவினர்களை அடக்கம் செய்யக்கூட இயலாத படி மக்கள் இருந்தார்கள். பஞ்சத்தால் செத்து மடிந்தோரின் உடல்களை நாய்கள், கழுகுகள், நரிகள் தின்றன. ...தங்கள் குழந்தைகளின் பசி தீர்க்கும் பொருட்டு பெண்கள்  விபச்சாரத்துக்கு இசைந்தார்கள். இயலாதவர்கள் தங்கள் குழந்தைகளை கொன்றார்கள், தகப்பன்களோ தம் பெண் குழந்தைகளை விற்றார்கள்" - Madhusree Mukherjee.

... .... ...

1943 வங்கப்பஞ்சம், வறட்சியால் ஏற்பட்டது அல்ல, அது (பிரிட்டிஷ் அரசின்) தவறான கொள்கையால் உருவாக்கப்பட்டது- IIT காந்திநகர் ஆய்வாளர்கள்.

ஹிட்லர், முசோலினி ஆகியோரின் அச்சு நாடுகள் கூட்டணியில் இருந்த ஜப்பான், 1942இல் கிழக்கில் பர்மாவை கைப்பற்றியது. இந்தியாவுக்கு பெரும் அளவில் அரிசியை கொடுத்து வந்தது பர்மா. இப்போது ஜப்பானின் கைக்கு போனதும், தொடர்ந்து கிழக்கில் வங்கமும் கைப்பற்றப்படும் என்ற அச்சத்தில், பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள், மக்களிடம் இருந்த வண்டிகள், படகுகள், கார் லாரி போன்ற வாகனங்கள், யானைகள், மாடுகள் அனைத்தையும் கைப்பற்றினார்கள். முக்கியமாக மக்களிடம் இருந்த அரிசி இருப்பு அனைத்தையும் அரசின் வசம் கொண்டுவந்தார்கள்.

வணிகர்களும் முதலாளிகளும் உடனடியாக அரிசி, காய்கறி உள்ளிட்ட உணவுப்பொருட்களை பதுக்கினார்கள். சந்தையில் உணவுப்பொருட்கள் காணாமல் போயின. அரசு என்ன செய்தது? பிரிட்டிஷ் வணிகர்கள், அரசு ஊழியர்கள் ஆகியோருக்கு மட்டும் உணவுப்பொருட்களை வழங்கியது, சாமானிய மக்கள் பட்டினியில் விடப்பட்டனர். 

முக்கியமாக, இந்தியாவில் மக்கள் செதுக்கிக்கொண்டு இருக்கும்போது, இங்கே இருந்து உணவு தானியங்கள் மிகப்பெரிய அளவுக்கு பிரிட்டனுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. பஞ்ச காலமான  ஜனவரி-ஜூலை 1943 காலத்தில் மட்டும்70,000 டன் அரிசி பிரிட்டனுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. 4 லட்சம் இந்திய மக்களுக்கு ஒரு வருஷத்துக்கு போதுமான உணவு இது. 1943 இலையுதிர்காலத்தில், 4 கோடியே 70 லட்சம் பிரிட்டிஷ் மக்களுக்கு ஆன  1 கோடியே 85 லட்சம் டன் உணவுப்பொருட்கள் இருப்பை கையில் வைத்து இருந்தது பிரிட்டிஷ் அரசு.

இந்த இருப்பையும் கூட வேறு ஒரு காரணத்துக்காக வைத்து இருந்தார் அன்றைய பிரிட்டிஷ் பிரதமர் சர்ச்சில்- முசோலினியின் இத்தாலி ஒரு வேளை நேச நாடுகளிடம் வீழ்ந்தால் அங்கே அனுப்பி வைப்பதற்கு. ஆஸ்திரேலியாவும் கனடாவும் வங்க மக்களுக்கு கோதுமை தர முன் வந்தன. ஆனால் அன்று இந்தியப்பெருங்கடலில் உணவுப்பொருட்களுடன் பயணித்துக் கொண்டு இருந்த அனைத்து கப்பல்களையும் அட்லாண்டிக் கடலுக்கு திருப்புமாறு உத்தரவு இட்டார் சர்ச்சில், அதாவது அனைத்து கப்பல்களும் பிரிட்டனை நோக்கி பயணித்தன. ஏற்கனவே பிரிட்டனில் தேவைக்கு அதிகமான இருப்பு கையில் இருந்தது. அன்று அச்சு நாடுகளுக்கு ஆதரவாக இருந்த நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், தன்னால் பர்மாவில் இருந்து வங்கத்துக்கு அரிசியை பெற்றுத்தர முடியும் என்று உதவ முன்வந்த செய்தியை கூட பிரிட்டிஷ் அரசு வெளியில் வராமல் தணிக்கை செய்தது.

உண்ணாவிரதம் இருந்த காந்தி ஏன் சாகவில்லை எனில், தான் அருந்தும் நீரில் அவர் ரகசியமாக குளுக்கோஸ் கலந்து குடிப்பதால்தான் உயிரோடு இருக்கின்றார் என்று சொன்ன சர்ச்சில், "நான் இந்தியர்களை வெறுக்கின்றேன். அவர்கள் காட்டுமிராண்டித்தனமான மதத்தை பின்பற்றும் காட்டுமிராண்டித்தனமான பிறவிகள். முயல்கள் போல் பிள்ளை பெற்று தள்ளுகின்றனர், அதுவே பஞ்சத்துக்கு காரணம்" என்றும், உணவுப்பொருட்கள் இல்லையென்றால் மஹாத்மா காந்தி எப்படி உயிரோடு இருப்பார் என்றும் கேலி பேசினார்.

1757 பிளாஷி போரில் வென்ற பின் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சி சில வருடங்களிலேயே மிகப்பெரிய பஞ்சத்தை சந்திக்க நேர்ந்தது. 1770 வங்கப்பஞ்சத்தில் குறைந்தது 20 லட்சம் மக்கள் செத்து மடிந்தனர் என்று சொல்லப்பட்டாலும் உண்மையான கணக்கு தெரியவில்லை.

அதன் பின்னர் ஏற்பட்ட 1873-74, 1876, 1877, 1896-97, 1899, 1943 ஆகிய ஆறு பெரும் பஞ்சங்களில் முதல் ஐந்தும் இயற்கை சீற்றத்தால் ஏற்பட்டன என்றும் 1943 பஞ்சமோ பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால், குறிப்பாக இரண்டாம் உலகப்போரின் பின்னணியில் அன்று பிரதமர் ஆக இருந்த வின்ஸ்டன் சர்ச்சிலின் கொடுங்கோன்மை நிர்வாகத்தால் உருவாக்கப்பட்ட பஞ்சம் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த சர்ச்சிலைதான் மிகப்பெரிய ஜனநாயகவாதி, அறிவாளி என்று இந்தியாவிலும் பலர் இப்போதும் சொல்லிக்கொண்டு இருக்கின்றனர்.

... ... ....

இப்போது மத்திய அரசு சட்டமாக அறிவித்துள்ளவை, பெரிய கார்பொரேட் நிறுவனங்கள் இந்திய விவசாயத்தையும் நிலத்தையும் விவசாயிகளையும் வேளாண் பொருள் விற்பனையையும் கைப்பற்றி தங்கள் பிடியில் வைத்துக்கொள்ள வழி செய்யும் சட்டங்கள். இந்த சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும்போது, இந்திய வேளாண்மைதுறையில் மத்திய மாநில அரசுகளுக்கு இருக்கும் கட்டுப்பாடுகள் அனைத்தும் அம்பானி, அதானி, டாடா போன்ற கார்பொரேட் முதலாளிகளின் கையில் சென்றுவிடும். விளைவாக, தங்களுக்கு எங்கிருந்து அல்லது எந்த நாட்டில் விற்றால் லாபம் கிடைக்குமோ அந்த நாடுகளுக்கு இந்தியாவில் விளைந்த உணவுப்பொருட்களை ஏற்றுமதி செய்யவும் இந்திய மக்களை பட்டினி போடவும் இந்திய கார்பொரேட் வர்க்கம் தயங்காது. லாபம், மேலும் லாபம், மேலும் மேலும் லாபம் ஒன்றே உலக கார்பொரேட்களின் ஒரே கொள்கை. மத்திய அரசு கார்பொரேட்டுகளின் அப்பட்டமான ஏஜெண்ட் ஆக இருக்கிறது என்பதிலும் இந்த சட்டங்கள் ஒழிக்கப்படாவிட்டால் 130 கோடி மக்கள் கொண்ட இந்திய சமூகம் எந்த நேரத்திலும் ஒரு வங்கப்பஞ்சத்தை சந்திக்கும் என்பதிலும் ஐயமில்லை.