சனி, ஜனவரி 16, 2021

எழுத்தாளர் காஸ்யபன் என்ற சியாமளம்

14.1.2021. மூத்த தோழர் காஸ்யபன் தன் 86ஆவது வயதில் மறைந்து விட்டார். நாக்பூரில். 

அவர் கதைகளை சிறு வயதில் இருந்தே செம்மலரில் வாசித்து இருந்தேன். வித்தியாசமான மையக்கருத்து கொண்டவை, வித்தியாசமான நடையில் அமைந்தவை, அவர் பார்வை வேறு மாதிரி இருக்கும். அதனால் அவர் எழுத்துக்கள் எனக்கு பிடித்திருந்தது. தேன் கலந்த நீர் என்ற கதையை நான் எப்போதும் குறிப்பிட்டு சொல்வேன். தூரத்தில் இருந்தே அவரைப் பார்த்துக்கொண்டு இருந்தேன். தமுஎச மாநாடு சென்னை கோடம்பாக்கம் ஸ்ரீராம் அரங்கில் நடந்தபோது, மனைவி முத்துமீனாட்சி அவர்களுடன் வந்து இருந்தார். பக்கத்தில் இருந்து பார்த்துக்கொண்டு இருந்தேன், தொடர்ந்து அவருடன் தொலைபேசியில் பேசிக்கொண்டு இருந்தாலும் அவருடன் நான் என்னை அறிமுகப்படுத்திக் கொள்ளவில்லை. இப்போது வருந்துகின்றேன். 2010இல் நான் கொச்சியில் பணியில் இருந்தபோது, அவர் நாக்பூரில் இருந்து தன் வலைப்பூவை தொடங்கினார். முதல் பதிவு 2010 ஏப்ரல் 22 அன்று எழுதினார், ஹைதராபாத் சார்மினார் பற்றி எழுதினார். அவர் வலைப்பூவை வரவேற்று ஈ எம் ஜோசப் முதல் பதிவு செய்தார், நான் இரண்டாவது, எஸ் வி வேணுகோபாலன் மூன்றாவது. 

அதன் பின் அவருடன் அடிக்கடி உரையாடிக்கொண்டே இருந்தேன். என்னையா, எப்படி இருக்கீரு என்று தொடங்கி, பையனை நல்லா படிக்க வையுமய்யா என்று முடிப்பார். நான் நலம் விசாரித்தால், கெழவன் கெடக்கம்யா என்பார். அவர் மிக நுட்பமான ஞாபக சக்தி கொண்டவர். பொதுவாக நம் இலக்கிய வட்டாரங்களில் பேசப்படாத, எழுதப்படாத வரலாற்று விசயங்களை, அவை 60, 70 வருடங்களுக்கு முன்பு நடந்தவையாக இருக்கும், மிகத்துல்லியமாக இடம், நபர்கள், உரையாடல் உட்பட சரியாக பதிவு செய்வார், ஆச்சரியம் அடைவேன். சொக்கலால் பீடி, எம் பி எஸ், சுப்ரமணியசாமி, தி க சி, நெல்லை மாவட்ட நிகழ்வுகள், கம்யூனிஸ்ட் கட்சி பற்றிய நினைவுகள் உள்ளிட்ட பல பதிவுகள் நம்மை வியப்பில் ஆழ்த்துபவை, முக்கியமான வரலாற்றுப்பதிவுகள். அவர் வயதை கணக்கில் கொண்டால், மொத்தம் 1022 பதிவுகளை எழுதியுள்ளார் என்பது மிக வியப்புக்குரியது. 2014இல் 139 பதிவுகள்! தி க சி தனக்கு இலக்கியத்தை அறிமுகம் செய்து எழுத வைத்தார், கே முத்தையா தத்துவரீதியாக தனக்கு போதம் செய்து சரியான வழியில் நடத்தினார் என்று நூல்வெளி யூடியூப் சானலுக்கு அளித்த பேட்டியில் சொல்லியிருக்கிறார். அதன் லிங்கை கமென்டில் தருகின்றேன். தீக்கதிர், செம்மலர் ஆசிரியர் குழுவில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பெரும் பங்களிப்பு செய்துள்ளார்.

கட்சிப்பிளவுக்குப் பின், கலை இலக்கிய பெருமன்றத்தில் தொடர்ந்து இயங்குவதில் ஏற்பட்ட தடங்கல் கொள்கை அடிப்படையில் ஆனது. மூத்த தோழர் என் சங்கரய்யா, கே எம் ஆகியோரின் முன் முயற்சியில், மார்க்சிஸ்ட் கட்சி தன் இலக்கிய அமைப்பு ஒன்றை நிறுவதிட்டமிட்டு மதுரையில் கூடியது, 35 பேர் கொண்ட அந்தக் குழுவில் காஸ்யபனும் ஒருவர். அங்குதான் 1975இல் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நிறுவப்பட்டது. அதன் பின்னும் கூட திகசி அவர்கள் உடனான தோழமை தொடரவே செய்தது, அவரை நானும் என்னை அவரும் ஒருபோதும் விட்டுக்கொடுத்தது இல்லை என்பார் காஸ்யபன்.

சில மாதங்களுக்கு முன்புதான் அருமை மகன் சத்தியமூர்த்தியை கொரோனாவால் இழந்தார். அவரிடம் பேசுவதற்கு துணிச்சல் இல்லை என்பதால் பேசாமல் இருந்தேன். எம்பி எஸ் குறித்த பதிவில் பாரதியின் பாம்புபிடாரன் பற்றி குறிப்பிட்டு இருந்தேன். 1980 தொடக்கத்தில், கோவை தமுஎச இசை முகாமில், அவர் பாம்பு பிடாரன் குறித்து எம் பி எசுடன் நடத்திய உரையாடலை தன் வலைப்பூவில் குறிப்பிட்டு இருந்தார்.  ச தமிழ்ச்செல்வன் அந்த முகாமில் பங்கு பெற்று இருந்தார்.  நீண்ட நாட்கள் கழித்து அவரே என்னை தொலைப்பேசியில் அழைத்தார். மெதுவாக பேச்சை தொடங்கினேன். சம்பிரதாயமான "எப்படி இருக்கீங்க தோழர்?" என்ற விசாரிப்புக்கு அவர் சொன்னார், "இருக்கணும்லய்யா?". மகனை இழந்த அவரின் ஆழ்ந்த துயரம் அந்த ஒற்றை சொல்லில் வெளிப்பட்டது. பதில் சொல்ல முடியாமல், பேச்சை தொடர முடியாமல் திணறினேன். அவர்தான் அடுத்த வார்த்தை சொல்லி மவுனத்தை உடைத்தார். பேரனை மட்டும் வைத்துக்கொண்டு தன் மகனின் இறுதிசடங்கை முடித்த பெரும் துயரை சொன்னார், முகநூலில் தன் பேரனின் மனத்திடத்தை பாராட்டி பதிவு செய்து இருந்தார். 

முகாமுக்கு பிறகு, எம் பி எஸ் அவர்களை காஸ்யபன் பேட்டி கண்டார், அப்போது செம்மலரில் வெளிவந்ததை சொன்னார். ச தமிழ்ச்செல்வன் அவர்களிடம் வேண்டியுள்ளேன், அந்த நேர்காணலை மீண்டும் செம்மலரில் மறுபதிப்பு செய்ய வேண்டும் என்று.

தெலுங்கானா போராட்ட பின்னணியில் கிருஷ்ணா நதிக்கரையிலே என்று ஒரு துப்பறியும் நாவலை எழுதினார், என் சி பி எச் வெளியிட்டது. அவர் கதைகள் 80களில் நூலாக (அந்தக்கணங்கள்) அன்னம் வெளியீட்டில் வந்தன. 

அன்புத்தோழர் அவர் மனைவி முத்துமீனாட்சி அவர்கள், தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் தேர்ந்த அறிஞர். அவரும் சிறுகதைகள் எழுதியுள்ளார், பல நூல்களை பல மொழிகளிலும் ஆக்கம் செய்துள்ளார். காஸ்யபனின் கதைகளை ஜகதா என்று இந்தியில் மொழிபெயர்த்துள்ளார், சீதாராம் யச்சூரி முன்னுரை எழுதியுள்ளார். நல்லி திசையெட்டும் உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார். ராகுல் சாங்கிருத்தியாயனின் வால்கா முதல்.... நூலை தமிழில் மொழிபெயர்த்துள்ளார். மகள் ஹன்ஸா காஸ்யப் இசையில் பட்டம் பெற்று காப்புரிமை தொடர்பான தளத்தில் வழக்கறிஞராக உள்ளார். நம் வார்த்தைகள் இவர்கள் துயரை ஆற்றி விடாது, உங்கள் துயரில் பங்கு கொள்கின்றோம். தமிழக இலக்கிய உலகமும், பொதுவுடைமை இயக்கமும், கொண்ட கொள்கையில் உறுதியான மூத்த தோழரை இழந்துவிட்டன.

.... ... ...... .....

தமுஎசவும் காஸ்யபனும்

மதுரை பேருந்து நிலையத்திற்கு பின்னால் உள்ள அந்தப்பகுதிக்கு பெயர் திடீர்நகர். ..அங்கே சீமை ஓடு போட்டிருந்த ஒரு தொழிற்சங்க கட்டிடத்தில்தான் அந்தக் கூட்டம் நடந்தது. சி ஐ டி யு எனும் அகில இந்திய தொழிற்சங்க மையத்துடன் இணைக்கப்பட்டு இருந்த அந்த மின் ஊழியர் மற்றும் போக்குவரத்து ஊழியர் சங்க அலுவலகத்தில் 35 எழுத்தாளர்கள் கூடி இருந்தார்கள். அனைவரும் செம்மலர் ஏட்டில் எழுதிக்கொண்டு இருந்தவர்கள். 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இலக்கிய ஏடு செம்மலர். எனவே, இயல்பாக வே அதன் தலைவர்கள் ஆகிய ஏ பாலசுப்பிரமணியம், எம் ஆர் வெங்கட்ராமன், ஏ நல்லசிவம், என் சங்கரய்யா ஆகியோர் வருகை புரிந்து இருந்தனர். ஏட்டின் ஆசிரியர் கே முத்தையா கூட்ட ஏற்பாடுகளை கவனித்தார்.

1974, நவம்பர் 23, 24 தேதிகளில் நடந்த இந்தக் கூட்டத்தில்தான் தொழிலாளி வர்க்கத்தின் தலைவரும் சிறந்த இலக்கிய விமர்சகரும் ஆன என் சங்கரய்யா, முற்போக்கு எழுத்தாளர் சங்கம் ஒன்றை அமைக்கிற ஆலோசனையை முன்வைத்தார். ... ...அந்த மகத்தான அமைப்பை துவங்குவது என்றும், அதன் அமைப்பு மாநாட்டை மதுரையில் கூட்டுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

இன்று வேர்விட்டு விழுதுவிட்டு அடர்ந்து படர்ந்த பெரும் ஆலமரமாய் த மு எ ச திகழ்கிறது. அன்றைய அந்தக் கூட்டத்தில் பங்கு கொண்ட எழுத்தாளர்கள் இவர்களே:

1 கு சின்னப்பபாரதி 2 த ச ராசாமணி 3 டி செல்வராஜ் 4 ஐ மா பா 5எஸ் ஏ பெருமாள் 6 இரா.கதிரேசன் 7 மேலாண்மை பொன்னுச்சாமி 8தி வரதராசன் 9 பெ மணியரசன் 10 அஸ்வகோஷ் 11 காஸ்யபன் 12 ப ரத்தினம் 13 நெல்லைச்செல்வன் 14 கம்பராயன் 15 தணிகைச்செல்வன் 16 நாமக்கல் சுப்ரமணியம் 17 வேலுச்சாமி 18 வேல ராமமூர்த்தி 19 ச மாதவன் 20 ஐ பெரியசாமி 21 கோமகன் 22 ச மு சுந்தரம் 23 பாலதண்டாயுதபாணி 24 வீரமாசக்தி 25 புலவர் பாலு 26 முல்லை இளமுருகன் 27 மோகனச்சந்திரன் 28 நெடுமாறன் 29 அடியிற்கை சீனிவாசன் 30 இளங்கோவன் 31 நடராசன் 32 விளதை கலா முகிலன் 33 செல்வம் 34 யாரா 35 செங்கீரன்.

... .... ...

1975 ஜூன் 25 நள்ளிரவில் எமர்ஜென்சி அறிவிக்கப்பட்டது. 29 அன்று மிசா சட்டம் கடுமையாக்கப்பட்டது. எங்கும் இருள், மையிருட்டு இருள்.தமிழகத்தில் திமுக ஆட்சி. இங்கு மட்டும் ஜனநாயக உரிமைகள் சற்றே மூச்சு விட்டுக்கொண்டு இருந்தன. அதை பயன்படுத்தி க்கொண்டு, திட்டமிட்டபடி தமுஎசவின் அமைப்பு மாநாடு, முதல் மாநில மாநாடு, மதுரை தமுக்கம் கலையரங்கில் 1975 ஜூலை 12, 13 ஆகிய நாட்களில் மிகச்சிறப்பாக நடந்தது. பொதுச்செயலாளர் ஆக கே முத்தையா தேர்ந்தெடுக்க ப்பட்டார். காஸ்யபன் மாநிலக்குழு உறுப்பினர்களில் ஒருவர். இந்த முதல் மாநாட்டை நடத்திக்கொடுத்தவர்கள் இரா கதிரேசன், ப ரத்தினம், காஸ்யபன் தலைமையில் ஆன மதுரை மாவட்டக்குழு.

... ... ....

1977 தேர்தலில் காங்கிரசை மக்கள் தூக்கி எறிந்தனர். 1978 ஜூன் 24, 25 தேதியில் கோவையில் நடந்த இரண்டாவது மாநில மாநாட்டிலும், 1981 ஜூலை யில் சென்னையில் நடந்த மூன்றாவது மாநாட்டிலும் காஸ்யபன் மாநிலக்குழு உறுப்பினர் ஆனார். மதுரையில் 1982 மே 29 முதல் ஜூன் 2 வரை 5 நாட்கள் நடந்த இலக்கிய முகாமில் 19 தலைப்புகளில் வகுப்புகள் நடந்தன. திரைப்படக்கலை வகுப்புக்கு ஆசிரியர் ஆக இருந்தவர் காஸ்யபன். 

1984 செப்டம்பர் 22,23,24 தேதியில் சென்னையில் நடந்த நாடகவிழா வில் நாடகம் குறித்த புரிதலை ஏற்படுத்தி கருத்துரை வழங்கியவர்கள்: எஸ் வி சகஸ்ரநாமம், டி எம் வி ரமணன், இயக்குனர் கே பாலச்சந்தர், பேரா. ராமானுஜம், சு சமுத்திரம், ஞாநி, மேஜர் சுந்தரராஜன், பூரணம் விஸ்வநாதன், கே முத்தையா, அஸ்வகோஷ், காஸ்யபன், ச தமிழ்ச்செல்வன். மதுரை பீபிள்ஸ் தியேட்டரின் காஸ்யபன் கதையில், ராஜகுணசேகரன் இயக்கத்தில் வண்ணங்கள் வேற்றுமைப்பட்டால் என்ற நாடகம், அன்றே இந்து முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்தியது.

1986 செப்டம்பர் 24-28 5 நாட்கள் மதுரையில் நடந்த நாடகப்பயிற்சி முகாமை நடத்திக்கொடுத்த மதுரை மாவட்டக்குழுவில் காஸ்யபனும் இருந்தார். 1987 ஜனவரியில் திருச்சியில் நடந்த மாநில மாநாட்டில் காஸ்யபன் மாநில செயற்குழுவுக்கு தேர்ந்தெடுக்க பட்டார். தொடர்ந்து வந்த மாநாடுகளில், மாநிலக்குழு, செயற்குழு உறுப்பினர் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கோவையில் 1988 ஜனவரி 6 முதல் 10 வரை நடந்த த மு எ ச இசைபயிற்சி முகாமை நடத்திக் கொடுத்தவர்கள் எம் பி சீனிவாசன், கே ஏ குணசேகரன். 94 பேரை ஒருங்கிணைத்து இரண்டே நாள் பயிற்சி கொடுத்து, கோவை மக்கள் முன்னால் 9ஆம் தேதி பாட வைத்து சாதனை செய்தார் எம் பி எஸ். பாரதியாரின் பாம்புப்பிடாரன் பாடல் குறித்து எம் பி எஸ்க்கும் தனக்கும் நடந்த உரையாடல் பற்றி தன் வலைப்பூவில் விரிவாக எழுதியுள்ளார் காஸ்யபன். தோழர்கள் வாசிக்கலாம்.

த மு எ சவின் கொள்கை நெறிகளை வகுத்ததில் ஆகட்டும், திரைப்படம், நாடகம், சிறுகதை ஆகிய தளங்களில் ஆகட்டும், அனைத்து கலை இலக்கிய வடிவங்களிலும் தன் மேலான பங்களிப்பை செலுத்தியுள்ளார். இயக்கத்தின்  தத்துவ ஆசிரியர்களில் ஒருவர் ஆக பெரும்பணியை செய்துள்ளார். அவர் மறைவு ஏற்படுத்தியுள்ள இழப்பை சில பல சொற்களில் சொல்லி நிரப்பிட முடியாது. வயது வித்தியாசம் பாராது அவரே முன்வந்து பேசுவார். கடுமையான சொற்களால் விமர்சனங்களை முன்வைக்கின்றவர்களிடம் கூட அதே அளவு கடுமையான சொற்களை கொண்டு பதில் சொல்ல தெரியாத பெரும் பரந்த மனப்பான்மையும் அனுபவ முதிர்ச்சியும் அமைந்தவர். அவரை இழந்துவிட்டோம்.

உதவிய நூல்: இலக்கிய வானில் வெள்ளி நிலா, அருணன், 1999 மே மாதம் கோவையில் நடந்த வெள்ளிவிழா மாநாட்டில் வெளியிடப்பட்டது.

கருத்துகள் இல்லை: