ரொட்டி எனப்படுவது முதலும் முடிவும்
ரொட்டி எனப்படுவது நீயும் நானும்
ரொட்டி எனப்படுவது அதிகாரத்தின் வீழ்ச்சி
- பாலைவன லாந்தர்
அவர்கள் என் பாட்டனுக்கு ரொட்டி தயாரித்தார்கள்
அவர்கள் உன் பாட்டனுக்கும் ரொட்டி தயாரித்தார்கள்
அவர்கள்என் தாய் தகப்பனுக்கு ரொட்டி தயாரித்தார்கள்
அவர்கள் உன் தாய் தகப்பனுக்கும் ரொட்டி தயாரித்தார்கள்
அவர்கள் எனக்கும் என் மனைவிக்கும் பிள்ளைக்கும்
உனக்கும் உன் மனைவி பிள்ளைக்கும் ரொட்டி தயாரிக்கின்றார்கள்
அதே செங்கதிர் மணிகளால்
- இது என் (இக்பால்) கவிதை.
விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக, பாரதி புத்தகாலயம் முனைந்து நடத்திய இணைய வழிக் கவிதை வாசிப்பு, கலப்பைப்புரட்சியாக நூல் வடிவில் வந்துள்ளது.
ரொட்டி என்ற சொல்லின் மூலம் rotie என்ற பிரெஞ்சு சொல் என்று சொல்கின்றனர். இஸ்ரேலியர்கள் எகிப்தில் இருந்து பெருங்கூட்டமாக கனானை நோக்கி இடம்பெயர்கின்றார்கள். பசியெடுக்கவே, மோசஸை நோக்கி உணவுக்கு என்ன செய்ய என்று கேட்க, மோசஸ் கடவுளை வேண்ட, கடவுள் மன்னா என்ற உணவை இறக்குகின்றார். முதல்முதலாக மன்னாவைப் பார்த்த அவர்கள் அது என்ன என்று கேட்க, உங்களுக்கு தேவையான அனைத்து சத்தும் அதில் உள்ளது என்று மோசஸ் கூறியதாக Hebrew விவிலியத்தில் உள்ளது. இதே நிகழ்ச்சி குர் ஆனில் மூசா நபி மூலம் சொல்லப்படுகிறது. அல்லா மன்னாவையும் சல்வாவையும் இறக்குகின்றான்.
வடக்கு ஜோர்டானில் கண்டுபிடிக்க ப்பட்ட ரொட்டி 14,000 வருடங்களுக்கு முந்தையது. எகிப்தில் 6,000 வருடங்களுக்கு முன்பே ரொட்டி உணவாக இருந்துள்ளது. பிரமிடுகளில் உள்ள ஓவியங்கள், இறந்தவர்கள் தம் அடுத்த கட்ட வாழ்வில் உண்பதற்காக ரொட்டிகளை கூடவே வைத்து புதைக்கப்பட்டதை குறிப்பிடுகின்றன. அரபு பிராந்தியம் என்பது, சவுதி அரேபியா, எகிப்து, ஜோர்டான், ஈரான், ஈராக், லெபனான், பாலஸ்தீனம், இஸ்ரேல், சிரியா என்று பல நாடுகளை உள்ளடக்கியது. அரபு மக்களின் பாரம்பரிய உணவு குபூஸ், குப்ஸ் என அழைக்கப்படும் ரொட்டி மொராக்கோ வரை பரவி இருந்துள்ளது. உள்ளூரில் விளைந்த தானியங்களை இடித்து மாவாக்கி தீயில் சுட்டு ரொட்டி உருவாக்கப்பட்டது. எகிப்திய அரபு மொழிப் புழக்கத்தில் அதன் பெயர் ஆய்ஸ், அதாவது உயிர், வாழ்க்கை. இந்தியாவில் ஆயுசு, ஆயுள் என்று நாம் புழங்கும் சொல்லாடல் நினைவுக்கு வருகின்றது. ஆக குப்ஸ் அல்லது குபூஸ் எனப்படும் ரொட்டியின் மகத்துவம் புரிகின்றது.
.... .....
இந்தியாவுக்கு ரொட்டி வந்த கதை
ரொட்டி செய்ய கோதுமை வேண்டும் அல்லவா? பிஹாரின் Saran மாவட்டத்தில் Chirand என்ற ஊரில் செய்யப்பட்ட அகழ்வாராய்ச்சியில், கிமு 3500 காலத்திலேயே அங்கு கோதுமை இருந்ததாக கண்டறியப்பட்டுள்ளது Vishnu-Mittre 1974. இன்றைய மத்திய பாகிஸ்தானின் பலூசிஸ்தான் பகுதியில், மொஹெஞ்சதாரோ ஹரப்பா நாகரிக காலத்துக்கும் 3000 வருடங்கள் முன்பே வேளாண்மை செய்யப்பட்டதற்கான ஆதாரமும் அதற்கான கட்டுமானங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சரியாக சொன்னால், மண்பானை தொழிலை தொடக்ககால கற்கால மனிதன் அறியாத காலத்திலேயே அங்கு வேளாண்மை நடந்துள்ளது. போலன் நதிக்கரையில் Mehrgarh என்ற பகுதியில் 200 சதுர ஹெக்டேருக்கும் அதிகமான பரப்பில் ஆறு இடங்களில் செய்யப்பட்ட அகழ்வாய்வில், அங்குள்ள வேளாண்மைக்கான கட்டுமானங்கள் கிமு 5000-2700 காலகட்டத்தில் ஆனவை என்று சொல்கின்றன. மிகப்பழமையானது 7000 வருடங்களுக்கு முந்தையது என்றும் இளமையானது 4000 வருடங்களுக்கு முந்தையது என்றும் தெரிகிறது. மண்ணால் ஆன செங்கல் கட்டுமானங்கள் கிமு 6000 காலத்தியவை Jarrige and Meadow, 1980. இங்கே மூன்று விதமான கோதுமைகள் கண்டுபிடிக்க பட்டன, அதாவது பலூசிஸ்தான் பிரதேசம் மிகப்பழமையான கோதுமை வேளாண்மை பகுதி என்பது தெரிகின்றது.
வட இந்தியாவில் பஞ்சாப், ஹரியானா, உபி, மபி, ராஜஸ்தான், பிஹார் ஆகிய மாநிலங்களில் தலையாய உணவுப்பொருள் கோதுமை. வளமான கங்கைசமவெளி இதற்கு முக்கியமான காரணம். இப்பகுதித்தான் இந்தியாவின் கோதுமைக்களஞ்சியம். மத்திய, தென் இந்தியப்பகுதிகளுக்கு கோதுமை பரவாமல் இருந்ததற்கு, விந்திய, சாத்புரா மலைகளும் காடுகளும் தடையாக இருந்துள்ளன. நீண்ட காலத்திற்கு பிறகு, கிழக்கு இந்தியாவில் இருந்துதான், அதாவது பஞ்சாப், உபி போன்ற பிரதேசங்களில் இருந்து அல்ல, மத்திய இந்தியாவுக்கும் மஹாராஷ்டிராவுக்கும் கோதுமை வந்தது, பிற்காலத்தில் தென்னிந்திய பகுதிக்குள் வந்துள்ளது Vishnu-Mittre, 1974. இது கோதுமையின் கதை.
பெர்சியா எனப்பட்ட ஈரானில் இருந்து ரொட்டி இந்தியாவுக்கு வந்திருக்கலாம் என்ற கருத்து உள்ளது. அரபு மக்கள், ரொட்டியை தெற்காசிய பகுதிக்கு ஏற்றுமதி செய்தார்கள், அதனால் ரொட்டி இங்கு அறிமுகம் ஆனது என்றும் சொல்லப்படுகிறது.
இந்தக் காலக்கட்டத்திற்கு முன்பே கற்கால மனிதன், உணவு தானியங்களை இடித்து நீர் சேர்த்து தீயில் வாட்டி உண்டான் என்ற தகவல், முறையான சமையல் அப்போதே தொடங்கிவிட்டதை சொல்கின்றது. கற்களை பயன்படுத்தி தானியங்களை இடித்துள்ளான். ஹரப்பா நாகரிக காலம் கிமு 2300-1750.
இந்தியர்களின், குறிப்பாக வட இந்தியர்களின் வாழ்வில் கோதுமை முக்கியமான இடத்தைப் பிடிக்க இரண்டு காரணங்கள்:
1. உப்பிய ரொட்டிக்குப் பதிலாக உப்பாத சப்பாத்தி நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும். அரிசி உணவு தாங்காது, கெட்டுவிடும். இப்படியான சாதகமான அம்சமும், உழைக்கும் மக்களுக்கும் இடம்விட்டு இடம் பெயர்கின்ற படைவீரர்களுக்கும் மிகவும் பொருத்தமான உணவாகவும் இருந்தது. மேலும், பார்லி விளைந்தாலும் அதில் சப்பாத்தி செய்ய முடியாது.
2. வட இந்திய பகுதிகளில் நிலவும் கடுமையான தட்பவெப்பநிலை, நெல் விளைச்சலுக்கு சாதகமாக இல்லை, ஆனால் கோதுமை அத்தகைய கடுமையை தாங்கி நின்று வளரும்.
... .... ....
இப்போது ரொட்டியை திருடுபவனின் கதைக்கு வருவோம்.2016-17, 17-18 காலத்தில் பெருமுதலாளிகளிடம் மிக அதிக நன்கொடை பெற்ற கட்சி பிஜேபி. மொத்த நன்கொடையில் 93%, அதாவது 915.59 கோடி ரூபாய் பிஜேபிக்கு கிடைத்தது. இது மத்தியில் பிஜேபி ஆட்சியில் இருந்த காலம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
2013-14 _18 காலக்கட்டத்தில், பிஜேபி ஆட்சியில் என்று வாசியுங்கள், பொதுத்துறை வங்கிகளில் நடந்த கடன் மோசடி 29200 கோடி ரூபாய், அதற்கு முன் அது 7500 கோடி ரூபாய்.
செப்டம்பர் 2019இல் பெருமுதலாளிகள் கம்பெனி மீது விதிக்கப்படும் corporate tax 35%இல் இருந்து 25%ஆக குறைப்பு, பண மதிப்பில் சொல்வது எனில் 1.45 லட்சம் கோடியை அரசு இழந்தது, அதாவது முதலாளிகள் பாக்கெட்டில் போட்டது.
2017இல் இந்த தேசம் உருவாக்கிய சொத்தில் 73% ஒரே ஒரு சதவீத பெருமுதலாளிகள் பாக்கெட்டுக்கு போனது. 2000இல் கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை 9. 2017இல் 101, இப்போது 119. இத்தேசத்தின் 77% சொத்து நாட்டின் 10% பேரிடம் உள்ளது.
அதானிக்கும் அம்பானிக்கும் சாதகமாக இந்த வேளாண்மை சட்டங்கள் இருப்பது ஏன்?
20.7.1988இல் கவுதம் அதானி தொழிலுக்கு செய்த முதலீடு வெறும் 5 லட்சம் ரூபாய். 2001இல் மோடி குஜராத்தின் முதல்வராக இருந்த போது, அதானியின் சொத்து 5000% உயர்ந்தது! முதல்வராக அவர் இருந்தவரை அதானியின் சொத்து மதிப்பு 2.6 பில்லியன் டாலர். அவரே பிரதமர் ஆன பின் 4 மடங்காக உயர்ந்தது, அதாவது 2014-19 காலத்தில் மட்டும் 11.9 பில்லியன் டாலராக உயர்வு. 2019இல் அதானி குழுமத்தின் கடன் மட்டும் 72000 கோடி தள்ளுபடி. அப்போது நாட்டின் மொத்த விவசாயிகள் கடன் 76000 கோடி மட்டுமே.
முகேஷ் அம்பானியின் ஏறுமுகமும் மோடியால்தான் சாத்தியம் ஆனது. அது Jio வில் தொடங்கியது. ஒரு நாட்டின் பிரதமர் தனியார் கம்பெனி விளம்பரத்துக்கு நடித்தார். 2014-19 பிஜேபி காலத்தில்தான் முகேஷ்அம்பானியின் சொத்து 23 பில்லியன் டாலரில் இருந்து 55 பில்லியன் டாலராக உயர்ந்தது, தன் வாழ்நாளில் திரட்ட முடியாத பணத்தை மோடி ஆட்சியில்தான் திரட்டினார். 30 கோடி மக்கள் இரவு உண்ணாமல் பட்டினியுடன் உறங்கும் இதே தேசத்தின் பிரதமர் , மும்பையில் 220 கோடி டாலர் மதிப்பில் 27 மாடிகள் கொண்ட வீட்டின் உரிமையாளர்அம்பானிக்கு உற்ற நண்பராக இருக்கின்றார்.
... .... .... .....
ரொட்டிகளை பசிக்கென திருடுபவர்கள் உலகின் மரியாதைக்கு உரியவர்கள் - பாலைவன லாந்தரின் அதே கவிதையில்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக